Friday, 6 January 2017

விவசாய அரசியல்

சமீபகாலமாக தமிழகம் பயங்கரமான வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் தமது வயல்களில் நீரின்றி வாடும் பயிர்களைப் பார்த்து கொத்துக் கொத்தாக உயிர் துறந்துவருவதாகவும் செய்திகள் அடிபடுகின்றன. சுமார் 100 விவசாயிகளுக்கு மேல் இறந்துவிட்டதாக செயல் தலைவர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். இது தொடர்பாகப் பேசுபவர்கள் அனைவரையும் கூர்ந்து கவனித்தால் மத்திய அரசையே குறிப்பாக இன்றைய நரேந்திர மோதி அரசையே இதற்குக் காரணமாகச் சொல்வதைப் பார்க்கமுடியும். விவசாயிகள் சங்கத் தலைவர் என்ற பெயரில் தோன்றுபவர்களில் ஆரம்பித்து தொலைகாட்சிகளில் மட்டுமே நெல்வயலைப் பார்த்திருக்கும் ஊடக ஜீவிகள் வரை அனைவருமே மோதியையே சுற்றியும் வளைத்தும் நேரடியாகவும் பழித்துவருகிறார்கள். 

இரண்டு ஆண்டுகளாக ஆளும் பா.ஜ.க. அரசு காவிரி நடுவர் ஆணையம் அமைக்காததால்தான் தமிழகத்துக்கு போதிய நீர் கிடைக்கவில்லை. அதனால் இன்று தமிழகத்தில் இறக்கும் எல்லா விவசாயிகளுடைய மரணத்துக்கும் / தற்கொலைக்கும் அந்தக் கட்சியே பொறுப்பு என்பதுதான் ஊடகங்களில் திரும்பத் திரும்ப முன்வைக்கப்படுகின்றன. புதிய திட்டங்களை வரவிடாமல் தடுத்தல், ஏற்கெனவே இருந்துவரும் பிரச்னைகளுக்கும் இன்றைய மத்திய அரசையே பழித்தல் என மிகத் தெளிவான செயல் திட்டம் அமல்படுத்தப்பட்டுவருகிறது. 

உண்மை என்னவாக இருக்கும்? உண்மையிலேயே தமிழகம் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுகிறதா?

சுதந்தரம் கிடைத்ததில் இருந்து ஆராய்ந்து பார்த்தால் நமது நாடு நேரு, அம்பேத்கர் என்ற இரு தலைவர்களால் வழிநடத்தப்பட்டிருப்பதைப் புரிந்துகொள்ளமுடியும். இருவருமே கிராமப்புறங்களை கிராமப்புற வாழ்க்கையை அவரவர் சிந்தனை சார்ந்து எதிர்த்தவர்கள். நேரு தனது மேற்கத்திய நவீனக் கண்கொண்டு உலகைப் பார்த்து, தொழில்(சாலை)மயமாதலே இந்தியாவுக்கான ஒரே விடுதலைப் பாதை என்று நம்பியவர். அம்பேத்கர் கிராம்ப்புறங்களும் நில உடைமை அமைப்பும் மேல் சாதிகளின் பிடியில் இருப்பதால் நகரமயமாக்கமே தலித்களுக்கும் இந்தியாவுக்கும் விடிவுக்கான வழி என்று சொன்னார். அந்தவகையில் அவர்கள் இருவருமே கிராமப்புற வாழ்க்கையின் ஆதாரமான விவசாயத்தை இரண்டாம்பட்சமான தொழிலாகவே பார்த்தனர். 

இந்த நகர் - தொழில்மயமாதலை முழு அளவில் ஏற்றுக்கொண்ட மாநிலங்களாக மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம் போன்றவற்றைச் சொல்லலாம். உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், கேரளா, பீஹார், ஒரிஸ்ஸா, வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர் போன்றவற்றை ஒப்பிடும்போது இந்தியாவின் பிற மாநிலங்கள் எல்லாமே தொழில்மயமாதலுக்கு அதிக முக்கியத்துவம் தந்தவையே. பசுமைப்புரட்சி, இடுபொருள் மானியம், இலவச மின்சாரம் என பல சலுகைகளும் திட்டங்களும் விவசாயம் சார்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையிலும் நவீன சமூகம் விவசாயத்தில் இருந்து தன்னை விலக்கிக்கொள்ளவே விரும்பியிருக்கிறது.

இந்தியாவின் விளை நிலங்கள் சுதந்தரத்துக்குப் பின் அதிகரித்திருக்கின்றன... முன்பு நிலம் இல்லாதவர்களில் அதிக நபர்களுக்கு நிலம் கிடைத்திருக்கிறது... விவசாய உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரித்திருக்கிறது. பெரிய அணைகள் கட்டப்பட்டு நீர்ப்பாசனப் பரப்பு அதிகரித்திருக்கிறது... உரங்கள் பயன்படுத்தப்பட்டு உற்பத்தி பெருகியிருக்கிறது என்றாலும் விவசாயம் நவீன இந்தியாவின் விருப்பத்துக்குரிய தொழிலாக இல்லை. இத்தனைக்கும் இந்தியாவின் மக்கள் தொகையில் மிக அதிகம் பேர் ஈடுபடும் துறை விவசாயமே. தாங்கி நிற்பது கால் தான் என்றாலும் முகம் தானே முகவரியாகிறது. இன்று இந்தியா கணினி சேவை தேசமாக தன்னை முன்னிறுத்திக் கொண்டுவருகிறது. விவசாயம் நம் மனதில் பின்னால் போய்விட்டிருக்கிறது. அது இயல்பும்கூட.

மனிதன் முதல் முதலில் செய்த தொழில் என்ற பெருமைகொண்ட விவசாயம் பல ஆயிரம் வருடங்களாக வேறு போட்டித்துறைகள் இல்லாததால் கோலோச்சி வந்தது. இன்று நிலைமை மாறிவிட்டது. இதை முதலில் புரிந்துகொண்டு வேறு துறைகளுக்கு நகர்ந்தவர்கள் பிராமணர்கள். நேரு அமைத்துக்கொடுத்த நவீன இந்தியாவில் பிராமணர்கள் தமது புதிய ஆதிக்க வெளியை உருவாக்கிக்கொண்டுவிட்டார்கள். பிற சாதியினர் குறிப்பாக இடை, கடை நிலை சாதியினர் அரசு, தனியார் துறைகளுக்கு கணிசமாக நகர்ந்த நிலையிலும் ஏராளாமானோர் விவசாயத்திலேயும் நீடித்துவருகின்றனர். 

மழை பொய்த்துப் போதல், நதி நீர் குறைதல், மாசுபடுதல், தூர்வாறப்படாமல் போதல், தடுப்பணைகள் கட்டப்படாமல் போவது, மழை நீர் முறையாகச் சேமிக்கப்படாமல் போவது, நிலங்கள் / குளங்கள் எல்லாம் வீடுகளாக, அலுவலகங்களாக, பேருந்து நிலையங்களாக மாறுதல், மிகு உற்பத்தியினால் சந்தை மதிப்பு குறைதல், அரசுக் கொள் முதல்விலை குறைவாக இருத்தல் (மானியங்களுக்கு ஈடுகட்டும் நோக்கில்) என விவசாயத்துக்கு இன்று இருக்கும் பிரச்னைகள் எந்தவொன்றுக்கும் இன்றைய அரசியல்-அதிகார வர்க்கம் தீர்வு காண முயற்சி செய்வதில்லை. அதில் அவர்களைக் குறை சொல்லவும் முடியாது. ஏனென்றால், ஒட்டு மொத்த சமூகமே விவசாயத்தை இரண்டாம்பட்சமான தொழிலாக ஆக்கிக் கொண்டிருக்கிறது.

இடை, கடை நிலை மக்கள் அதிகமும் ஈடுபடும் விவசாயத்தைப் புறக்கணிப்பது அவர்கள் தேர்ந்தெடுக்கும் அதே பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்களே. அதிக வட்டி கேட்டு அவர்களின் கழுத்தை நெரித்து தற்கொலைக்குத் தள்ளுபவர்களில் பெரும்பாலானவர்கள் சொந்த அல்லது அண்மை அடுக்கு சாதியைச் சேர்ந்தவர்களே. ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் ஏழை விவசாயிக்ளுக்கு மட்டுமே தரவேண்டிய மத்திய மாநில அரசு மானியங்களை முழுக்கவும் அனுபவிப்பது 100-200 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் இடை சாதி நில உடமையாளர்களே. அவர்கள்தான் விவசாயிகளின் தற்கொலை பற்றி முழங்கவும் செய்கிறார்கள். இந்த ‘தற்கொலைகள்’ எபிசோட் ஆரம்பித்தபோது அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் விவசாயிகள் சங்கத்தில் இருக்கும் எல்லாரும் பெரும் பண்ணையார்கள்... வீண் அரசியல் செய்கிறர்கள் என்று சொன்னார். அடுத்த நிமிடமே அவர் வாய் மூடப்பட்டது. இப்போதைய இலக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசுதான். எனவே, மவுனமாக இருங்கள் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு முழுக்க முழுக்க எல்லா பிரச்னைகளுக்கும் நரேந்திர மோதி அரசே காரணம் என்று ஒவ்வொரு தொலைகாட்சியிலும் வெவ்வேறு காஸ்ட்யூம்களில் ஒரே குரல் ஒலித்துவருகிறது.

தமிழகம் இன்று எட்டியிருக்கும் தொழில் முன்னேற்ற, பொருளாதார வளர்ச்சி என்பது தேசமும் தமிழகமும் விவசாயத்தை இரண்டாம்பட்சமாக ஆக்கியதன் மூலமே நடந்தேறியிருக்கிறது. மேலும் இன்றைய தற்கொலைகள் - கொலைகள் எல்லாம் மிகைப்படுத்தப்பட்டவையே. ஆளுங்கட்சி என்னவிதமான கதையாடல்கள் ஊடக வெளியில் பரவ விரும்புகிறதோ அதுவே வலம் வரும். ஒருவேளை இந்த இறப்புகளுக்கெல்லாம் மாநில அரசே காரணம் என்று எதிர்கட்சியினரும் பிற பிரிவினரும் சொல்லியிருந்தால் விவசாயிகள் தற்கொலை பற்றி வேறு பல காரணங்கள் நம் முன் இதே ஊடகங்களால் பரப்பட்டிருக்கும். இன்று முந்திய தலைமை மறைந்து புதிய தலைமை கால் ஊன்றி முடித்திராத காலகட்டம் என்பதால் விவசாயிகள் பயிர் கருகியது பொறுக்காமல் கொத்து கொத்தாக ஊடகங்களில் மடிந்துகொண்டிருக்கிறார்கள். எனவே இந்த தற்கொலைகளை இந்தப் பின்னணியிலேயே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

நமது விவசாயிகள் சொட்டு நீர்ப்பாசனம், பசுமைக் குடில், ஒரே நிலத்தில் பலவகை தானியங்கள், கீரைகள் மரங்கள், ஆடு, கோழிகள் என தன்னிறைவு விவசாயம் போன்ற நவீன விவசாய வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கவேண்டும். அதோடு விவசாயிகளின் மிகப் பெரிய குறை என்னவென்றால் அவர்கள் கச்சாப் பொருளை உற்பத்தி செய்வதோடு நின்றுவிடுகிறார்கள். ஆனால், இன்றைய அதி வேக யுகத்தில் கச்சாப்பொருளைவிட இறுதிப் பயன்பாட்டுப் பொருளுக்கும் அதை விற்பனை செய்யும் அமைப்புகளுக்குமே அதிக லாபம் கிடைக்கிறது. ஒரு கிலோ அரிசிக்கு பத்து ரூபாய் மட்டுமே கிடைக்கும். அதையே மாவாக அரைத்துக்கொடுத்தால் முப்பது நாற்பது ரூபாய் கிடைக்கும். தோசையாக இட்லியாக மாற்றிக்கொடுத்தால் 50-60 ரூபாய் கிடைக்கும். அதையே பெரிய ஹோட்டலாகக் கட்டி விற்றால் 100 ரூபாய்கூடக் கிடைக்கும். 

அடிப்படை என்பது அந்த பத்து ரூபாய் அரிசிதான். அதனுடன் ஒவ்வொரு கட்ட மதிப்புச் சேர்க்கையும் நடக்கும்போது அதன் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலே செல்லச் செல்ல வேலை குறைவு... லாபம் அதிகம் என்று ஆகும். ஒரு மூட்டை நெல்லை உற்பத்தி செய்ய மூன்று மாதங்கள் கஷ்டப்படவேண்டும். அப்போதும் சொற்ப லாபமே கிடைக்கும். அதையே தோசையாக்கி விற்றால் ஒரே வாரத்தில் கொள்ளை லாபத்தைச் சம்பாதித்துவிடமுடியும்.

அதுபோல் உரிய விலை கிடைக்கவில்லையென்றால் குளிர்பதப்படுத்தியோ காயவைத்தோ வேறொன்றாக மாற்றிக்கொண்டோ நல்ல விலைக்கு விற்கக் கற்றுக்கொள்ளவேண்டும். பங்கனப் பள்ளி மாம்பழமென்றால் ஒரு சீசனில் மட்டும்தான் விற்கும். அப்போதும் அதிகம் விளைந்தால் விலை சரிந்துவிடும். அதையே மாஸாவாக பாட்டிலில் அடைத்துவிற்றால் நல்ல லாபமும் கிடைக்கும். விலையைக் குறைக்காமலேயே ஆண்டுமுழுவதும் விற்கவும் முடியும். 

இவ்வளவு ஏன் கிராமங்களில் விளையும் பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரிக்குக் கிடைக்கும் லாபம் மிக மிக அதிகம். ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய் என்றால் விவசாயிக்கு ஐந்து ரூபாய் மட்டுமே கிடைக்கும். நகரத்துக்குக் கொண்டுவர பத்து ரூபாய் செலவாகும். ஆக ஒரு வியாபாரிக்கு 15 ரூபாயில் கிடைக்கும் ஒரு பொருளை அவர் நுகர்வோரிடம் 40 ரூபாய்க்கு விற்றுவிடுவார். உட்கார்ந்த இடத்திலேயே அல்லது விவசாயியைப் போல் மதக்கணக்கில் பாடுபடவேண்டியிராமல் அவரைவிடப் பல மடங்கு லாபத்தை அவர் ஈட்டிவிடுவார். இன்று உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறியிருக்கிறது. நுகர்வோர் அதிக விலைகொடுத்துத்தான் ஒவ்வொரு உணவுப் பொருளையும் வாங்குகிறார். விவசாயிக்கு சொற்ப சதவிகிதமே கிடைக்கிறதென்றால் அதற்கு யார் காரணம். விவசாயிகள் தமக்காக ஒரு கூட்டுறவு அமைப்பை உருவாக்கி நேரடியாக வாடிக்கையாளரிடம் கொடுத்து தானும் வளர்ந்து வாடிக்கையாளரையும் வளரவைக்கலாமே. இடையில் இருக்கும் வியாபாரிகள் நிச்சயம் இதனால் பாதிக்கப்படுவார்கள்தான். ஆனால், அதற்கு என்ன செய்ய..?


மேலும் விவசாயிகள் சந்தை நிலவரத்தை யூகித்து அதற்கு ஏற்பப் பயிரிடவேண்டும். பெரும் பண்ணையார்கள் மட்டுமே விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பனைக்குக் கொண்டுவரவேண்டும். அவர்களுக்குத் தரப்படும் மானியங்கள், இலவச சலுகைகள் நிறுத்தப்படவேண்டும். இரண்டு ஏக்கர் நாலு ஏக்கர் வைத்திருப்பவர்கள் தமது குடும்பத்துக்குத் தேவையானவற்றை மட்டுமே விளைவித்துக்கொண்டால் போதும். அவர்களால் உலகச் சந்தையுடன் போட்டி போட முடியாது. எனவே அவர்கள் இப்போது செய்வதுபோலவே பிற வேலைகளில் கூடுதல் கவனத்தைச் செலுத்தவேண்டும். 

ஐந்து ஏக்கருக்குக் குறைவான நிலத்தில் பயிரிடுபவர்கள் விவசாயத்தை நிறுத்துவதால் அல்லது சந்தைக்குப் பொருட்களை அனுப்பாமல் போவதால் சந்தைக்கு எந்த இழப்பும் வராது. சந்தை இன்று பெரு நிலப் பிரபுக்களைச் சார்ந்தே இயங்குகிறது. விவசாய கார்ப்பரேட்கள் வசம் நிலங்களை ஒப்படைத்து அந்த நிலத்தில் நல்ல சம்பளம் பெறும் பணியாளராக இருக்கலாம். இதில் இந்திய கார்ப்பரேட்களுக்கு முன்னுரிமை தரவேண்டும். ஒரு கார்ப்பரேட்டுக்கு நீர்ப்பாசனத்தை உருவாக்கிக் கொள்ளவும் பாதுகாக்கவும் நன்கு தெரியும். எனவே, விவசாயத்தை நிபுணர்களிடம் விடுவதே விவசாயத்துக்கும் நல்லது. விவசாயிகளுக்கும் நல்லது.
எனவே, நமது இன்றைய முழக்கம் விவசாயிகளே... விவசாயத்தில் இருந்து வெளியேறுங்கள் என்பதல்ல... கார்ப்பரேட்களே... விவசாயத்துக்கு வாருங்கள் என்பதாகத்தான் இருக்கவேண்டும்.