Thursday, 25 August 2016

இந்துமயமாக வேண்டிய சிலுவை, சாண்டா கிளாஸ், பிறந்த நாள் வாழ்த்து.கொடிமரம், கொடியேற்றம், கோவில் மணி, தேர் பவனி, காவி உடை, நேர்ச்சை மொட்டை, பாத யாத்திரை என இந்து மத அடையளங்களை கிறிஸ்தவம் எப்படி ஏற்றுக்கொள்கிறதோ அதுபோலவே, இந்துக்களும் கிறிஸ்தவ அடையளங்களை அரவணைத்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்தவர்களைப் போலவே கல்வி, மருத்துவப் பணிகளை முன்னெடுத்தல், நிறுவனமயமாதல் என இந்து சமயம் பல நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் வேறு சில விஷயங்களையும் செய்ய வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது.  கிறிஸ்தவர்களின் பிரதான அடையாளங்கள் மூன்று. 1. சிலுவை. 2. சாண்டா கிளாஸ். 3. பிறந்த நாள் பாடல் (கொஞ்சம் மறைமுகமாக)
இந்த மூன்றையும் இந்துமயமாக்குவது எப்படி?

இந்த இந்துமயமாக்கத்தின்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் கிறிஸ்தவத்தைப்போல் இத்தாலிய போப் தலைமை எதைத் தீர்மானிக்கிறதோ அதை ஒட்டு மொத்த உலகமும் பின்பற்ற வேண்டும் என்ற ஏக ஆதிபத்தியத் திணிப்புகூடாது. பிராந்திய மாறுதல்கள், பிரந்திய அடையாளங்கள் இவற்றை மதிக்கும் இந்து ஆன்மிகப் பண்புடன் அனைத்தையும் அரவணைத்துச் செல்லும் பரந்த மனப்பான்மையுடன் இதை வடிவமைக்கவேண்டும்.
முதலாவதாக சிலுவைக் குறியின் இரண்டு பக்கங்களையும் சிறிது வளைத்தால் திரிசூலமாக மாறிவிடும். ஆனால், திரிசூலம் என்பது உக்கிர தெய்வங்களின் கையில் இருக்கும் ஆயுதமாகவும் இந்து அடிப்படைவாதத்தின் சின்னமாகவும் இருக்கிறது. எனவே அது வேண்டாம். அடுத்ததாக குத்து விளக்கு என்பது கிட்டத்தட்ட சிலுவையைப் போன்ற உருவ ஒற்றுமை கொண்டது. எனவே, சிலுவையை விளக்காக மாற்றுவதே சரியாக இருக்கும். சிலுவையின் இரண்டு கைகளில் சிறு அகல் விளக்கைப் பொருத்தவேண்டும். அதன் பிறகு தாய் தெய்வ வழிபாட்டின் அடையாளமான குங்குமத்தை நடுவில் அழகாக வைக்கவேண்டும். உருவ வழிபாட்டின் சிறப்பம்சமான மாலையை மாட்டுவதற்குத் தோதாக இரண்டு கைகளுடன் சிலுவை இருக்கிறது. கடைசியாக சிலுவையின் உச்சியில் கூம்பிய சிறு தாமரையை கூப்பிய கரங்களை அல்லது சூரிய உருவத்தைப் பொறிப்பதன் மூலம் சிலுவையின் இந்துமயமாக்கம் முழுமையடையும்.


ஆனால், இதில் நாம் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். தமிழக இந்து மற நிலையத்துறை உடனடியாக இதை அமல்படுத்துகிறேன் என்று சொல்லி அப்படியே சிலுவையை அனைத்து கோபுரங்களிலும் கொண்டு சென்று நிறுத்தும். அகல் விளக்கு, குங்குமம், மாலை மரியாதைகளை அப்பறம் செய்கிறேன் என்று சொல்லும். அப்படியே குங்குமம், சூரிய வடிவம், அகல் விளக்கு போன்றவற்றை வைத்தாலும் சிறிது நாட்கள் அவற்றில் விளக்கு எரியும். அதன் பிறகு அவற்றுக்கான மின் இணைப்பு மாயமாகத் துண்டிக்கப்பட்டுவிடும். அப்பறம் எல்லா கோவில்களிலும் சிலுவை மட்டுமே ஜெகஜ்ஜோதியாக ஒளிர ஆரம்பித்துவிடும். எனவே இந்த சிலுவையை கவனமாகத்தான் கையாளவேண்டும். இந்த சிலுவை கட்டாயமாக மூவர்ண நிறத்தில்தான் இருந்தாகவேண்டும் என்று தீர்மானிப்பது ஓரளவுக்கு உதவும்.

இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. சிலுவை என்பது ஏசுநாதர் கொல்லப்பட உதவிய பொருள். ஆதிக்க சக்தியின் கொலைக் கருவியைப் பயன்படுத்தியே அந்த ஆதிக்க சக்தியை எதிர்த்தவகையில் சிலுவை ஒரு முக்கிய அடையாளம்தான். மேலும் ஒட்டு மொத்த உலகுக்கும் அவர் சிந்திய தியாக ரத்தத்தை நினைவுபடுத்தும்வகையில் மாற்றிக்கொண்டிருப்பதிலும் சாமர்த்தியம் தென்படவே செய்கிறது. உண்மையில் ஏசு குறித்த பெருங்கதையடலில் என்னை ஏன் கைவிட்டுவிட்டீர் என்று அவர் புறக்கணிப்பின் வலி(யும்) தாங்காமல்தான் அரற்றியிருக்கிறார். ஆனால், கிறிஸ்தவ மதம் அதை தியாகத்தின் குறியீடாகச் சித்திரித்து மிகப் பெரிய பிராண்ட் ஆக மாற்றுவதில் பெரு வெற்றி கண்டிருக்கிறது.

உண்மையில் சிலுவையைவிட உலகத்தோர் அனைவரையும் அரவணைக்கும் வகையில் இரு கைகளையும் விரித்து நிற்கும் ஏசுவின் உருவம் கருணையையும் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் தரக்கூடியது. சிலுவை என்பது ஏசுவின் தோல்வியையும் வலியையும் கர்த்தரின் புறக்கணிப்பையும் நினைவுபடுத்தக்கூடிய அடையாளம். அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் தெய்வங்கள் தோற்பதில்லை. அரக்கர்களைக் கொன்று குவித்து தெய்வங்கள் வெற்றி பெறுவதே இங்கு வழக்கம். கிருஷ்ணர் எப்படிக் கொல்லப்பட்டார் என்ற கதைஉண்டென்றாலும் அவர் புல்லங்குழல் இசைத்தல், ஆவினங்களை மேய்த்தல், வெண்ணெய் எடுத்துத் தின்பது, சக்ராயுதத்தை ஏந்துவது (இஸ்கான்) என்ற வடிவுகளில் காணப்படுவாரே தவிர மான் என நினைத்து அம்பெய்து கொல்லப்பட்ட காட்சி பலருக்குத் தெரியவே செய்யாது. ராமருக்கும் சிவனுக்கும் விநாயகருக்கும் முருகருக்கும் அவ்விதமே. தெய்வங்களின் வெற்றியே நாம் வழிபட விரும்பும் அம்சம். எனவே படுகொலையை நினைவுபடுத்தும் சிலுவை இந்தியர்களுக்கு என்றுமே அந்நியமானதுதான்.


ஆனால், அது மிகப் பெரிய பிராண்டாக உருவாக்கப்பட்டுவிட்டதால் அதை நாம் நமக்கேற்ப மாற்றுவது அவசியமாகிவிட்டிருக்கிறது. தெய்வம் கொல்லப்படுவதுதான் நமக்கு ஏற்பில்லையே தவிர அரக்கர்கள் கொல்லப்படுவதை நாம் விரும்பிக் கொண்டாடவே செய்கிறோம். தீபாவளிபோல் நம் பல பண்டிகைகள் அரக்கனைக் கொன்ற நிகழ்வைக் கொண்டாடுபவையே. எனவே சிலுவையில் ஏதேனும் ஓர் அரக்கனை ஏற்றிக் கொன்று அதையும் நாம் வழிபடலாம். தீண்டாமை, அறியாமை, ஊழல், பொய்மை என நாம் கொல்லவேண்டிய பல அரக்கர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். இவர்களில் ஏதேனும் ஓர் அரக்கனை உரிய அடையாளங்களுடன் சித்திரித்து சிலுவையில் அறைந்து வணங்கலாம். அல்லது மயில் பீலி அணிந்த ஸ்ரீ கிருஷ்ணர் இரண்டு கைகளையும் விரித்து ணணி ஞடச்ஞீணூச்ச்ஏ டுணூச்tச்திணி தூச்ணt திடிண்டதிச்tச்ஏ லெட் ஆல் நோபிள் தட்ஸ் கம் ஃப்ரம் எவெரி வேயர் என்று சொல்வதாக அனைவரையும் அரவணைப்பதாகச் சித்திரிக்கலாம். ஒவ்வொரு மாநிலத்தினரும் மொழியினரும் தமக்கான சிலுவையைத் தாமே தேர்ந்தெடுக்கும் சுதந்தரத்தை நாம் தரவேண்டும்.

அடுத்ததாக, சாண்டா கிளாஸ். தாடி, சிவப்பு நிறம் மேற்கத்திய கோமாளி உடை. இந்த மூன்றையும் சிறிது மாற்றினால் போதும். திருவள்ளுவரை அடிப்படையாக வைத்து தமிழகத்துக்கு வடிவமைக்கலாம். தாடி அவருக்கு ஏற்கெனவே இருக்கிறது. சிவப்பு உடைக்கு பதிலாக மஞ்சள் நிற உடையைத் தேர்ந்தெடுக்கலாம். மேற்கத்திய கோமாளி உடைக்கு பதிலாக பழம் பெரும் புலவனின் உடையை எடுத்துகொள்ளலாம். தோளில் ஒரு மஞ்சள் நிறச் சால்வை. தார்பாய்ச்சிக் கட்டிய வெள்ளை வேட்டி. மார்பில் புரளும் தாடி... இந்த திருவள்ளுவர் தாத்தா குழதைகளுக்கு புத்தகங்களையும் பரிசாகக் கொடுப்பர் என்று சாண்டா கிளாஸை இந்திய சூழலுக்கு ஏர்ப மாற்றிக்கொள்ளலாம். திருவள்ளுவருக்கு பதிலாக வால்மீகியை சிலர் எடுத்துக்கொள்ளலாம். வேத வியாசரை எடுத்துக்கொள்ளலாம். கபீர் தாசரை எடுத்துக்கொள்ளலாம். தமிழக சால்வையில் தமிழ் எழுத்துகள். கர்நாடக சால்வையில் கர்நாடக எழுத்துகள். ஆந்திர சால்வையில் அந்திர எழுத்துகள் என ஒவ்வொரு மாநில சால்வையிலும் அந்தந்த மாநில எழுத்துகள் அச்சிடப்பட்டிருக்கும். சமஸ்கிருத எழுத்துகள் அச்சிடப்பட்ட சால்வையை அணிந்த ஞான மூப்பனை ஆதி மொழியின் பெருமையை உணர்ந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஹேப்பி பர்த் டே டு யு என்ற பாடலைக் கிறிஸ்தவ பாடல் என்று சொல்ல முடியதென்றாலும் அது மறைமுகமாக கிறிஸ்தவ அடையாளமாகவே இருக்கிறது. அதிலும் மெழுகுவர்த்தி கிறிஸ்தவ அடையாளமே. விளக்கை அணைக்கும் அமங்கலச் செயல் என்பதும் நமக்கு அந்நியமானதே. எனவே, இவற்றை அப்படியே மாற்றிக்கொள்ளலாம். கேக்குக்கு பதிலாக பால் ஸ்வீட் ஏதாவது ஒன்று. பர்பி அல்லது பால்கோவா அல்லது மைசூர் பாகு போன்ற ஏதேனும் ஒன்றை தட்டு முழுவதும் அப்படியே கொண்டுவந்து வைத்துக்கொள்ளலாம். மெழுகு வர்த்திக்கு பதிலாக அகல் விளக்கு ஏற்றி வைத்து பிறந்த நாளைக் கொண்டாடவேண்டும். ஹேப்பி பர்த் டே டு யு என்ற பாடலின் அதே மெட்டில் அசதோமா சத் கமய.. தமசோமா ஜ்யோதிர் கமய... மிருத்யோமா அமிர்தம் கமய என்ற பாடலை அப்படியே பாடிவிடலாம். இருள் நீக்கி ஒளி கொண்டு வா.... பொய் நீக்கி மெய் கொண்டு வா... மரணம் நீக்கி அமுது கொண்டுவா... அன்புச் சிறுவனின் பிறந்த நாளிலே என்று இந்தப் பாடலை தமிழிலும் பாடலாம்.

கிறிஸ்தவர்கள் இந்த மாற்றங்களை நிச்சயம் எதிர்க்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் கொடிமரம், கொடியேற்றம், கோவில் மணி, தேர் பவனி, காவி உடை, நேர்ச்சை மொட்டை, பாத யாத்திரை என இந்து அடையாளங்களை ஏற்றுக்கொள்வதில் பெருமிதம் கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். எனவே நாம் கிறிஸ்தவ அடையாளங்களை இப்படி ஏற்றுக்கொள்வதை அவர்கள் நிச்சயம் வரவேற்கவே செய்வார்கள்.