Friday 20 January 2017

போற்றிப் பாடடி பெண்ணே - 2

போற்றிப் பாடடி பெண்ணே
(தேசியமும் தெய்விகமும் இரு கண்கள் என்று சொன்ன தேவரை மட்டும்)

இந்தப் போராட்டத்தில் கல்லூரி இளைஞர்கள், ஆண் பொதுஜனம், தாய்க்குலங்கள் என முப்பெரும் பிரிவுகள் களமிறங்கியிருக்கின்றன.
தமிழகம் முழுவதும் களத்தில் இறங்கிப் போராடும் கல்லூரி மாணவர்களைப் பொறுத்தவரையில் இதுவரை திரைப்படங்களுக்கு கட் அவுட் வைத்தும் பீர் அபிஷேகம் செய்தும் ஆங்கிலப் புத்தாண்டு விழா கொண்டாடியும் தமிழ் கலாசாரத்தைக் காப்பாற்றி வந்ததில் இருந்து மாறுபட்டு ஒரு புதிய கொண்டாட்டத்துக்கான வழியாக சல்லிக்கட்டு கிடைத்திருக்கிறது.
தாங்கள் படிக்கும் கல்லூரியில் ஊழல் மலிந்திருப்பது குறித்தோ, ஆசிரியர்களின் தரம் மோசமாக இருப்பது குறித்தோ, தரமான கல்விக்கான கட்டமைப்புகள் இல்லாதது குறித்தோ, நல்ல மதிப்பெண் பெற்றுத் தேறினாலும் வேலை கிடைக்காமல் போவது குறித்தோ (போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்களில் 90%க்கு மேற்பட்டவர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காதவர்களாகவும் வேலைகொடுக்க முடியாதவர்களாகவும்தான் ஆகப்போகிறவர்கள்தான்), தனியார் கல்லூரிகளாக இருந்தால் லட்சங்களைக் கொட்டி சீட் வாங்க வேண்டியிருப்பது குறித்தோ ஒரு முனகல் கூட வெளிப்படுத்தாத ஒரு மாணவர் சமுதாயம் கேண்டீனில் சாம்பாரில் உப்பு குறைவாக இருப்பதாகச் சொல்லிப் போராடுவதைவிடக் கொஞ்சம் மேலான இலக்கு கிடைத்த சந்தோஷத்தில் ஆனால், அதே ஆர்வத்துடன் களமிறங்கியிருக்கிறார்கள்.
நடிகைகள் நகைக்கடையைத் திறக்கப்போகிறார்கள் என்ற விளம்பர வாசகங்களை வேகமாகப் படித்துப் புரிந்துகொண்டு ஆர்வத்துடன் வந்து நிற்கும் ஆண் பொதுஜனங்கள் இந்தமுறை கொள்கைக்காகப் போராடக் குவிந்திருப்பதும் ஒரு நல்ல மாற்று அனுபவத்துக்கான தேடலே. தாய்க்குலங்களைப் பொறுத்தவரையில் இதைவிடப் பெரிய லோடுகளை அரசியல்வாதிகள் குவித்துக்காட்டியிருக்கிறார்கள். இதுமாதிரியான கூட்டங்களில் இதுவரை கலந்துகொண்ட அதே இந்தத் துணை நடிகர்கள்தான் இங்கும் கூடியிருக்கிறார்கள். இதில் கூடுதலாக வசனம் பேசும் வாய்ப்பும் உண்டு. பின்ன என்ன... எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புரட்சித் தலைவராகவும் புரட்சித் தலைவியாகவும் தூக்கிக் கொண்டாடிய கூட்டத்தின் புரட்சி என்பது இப்படியாகத்தானே இருக்கவும்முடியும்.
பன்னீர் செல்வமே தில்லியில் இருந்து தமிழனா திரும்பி வா... தமிழச்சி பெத்த புள்ளையா திரும்பி வா. இல்லைன்னா வந்துடாத என்பது போன்ற முழக்கங்கள் எல்லாம் சசிகலா - பன்னீர் செல்வத்துக்கிடையிலான பனிப்போரின் தடயங்களை லேசாகக் கோடிகாட்டுவதுபோல் தெரிகிறது. சசிகலா அப்ரூவராகியிருந்தால் ஜெயலலிதா எப்போதோ ஜெயிலுக்குள் போயிருப்பார் என்று எகத்தாளம் பேசியவர்களுக்கு பன்னீர் செல்வம் அப்ரூவரானால் என்ன ஆகும் என்ற பயமும் இருக்கும் அல்லவா? அப்படிப் பார்க்கும்போது இந்த எழுச்சி கேவலம் சசிகலாவை முதல்வராக நடந்த கூத்தாகவும் இருக்கலாம். ஆனால், சசிகலா முதல்வராவது என்பது தனிப்பட்ட நிகழ்வா என்ன... அது தமிழ்த் தீவிரவாதத்தின் முதல் வெற்றியாக அல்லவா இருக்கும்.

அந்தக் கோணத்திலேயே மெள்ள மெள்ள இந்தப் போராட்டம் தமிழினம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுவருவதை எதிர்க்கும் போராட்டமாக நிறம் மாறத் தொடங்கியிருக்கிறது. மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்து சல்லிக்கட்டை நடத்தினால் போதாது என்று திமிறுகிறார்கள். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் பெரும்பாலானோருக்கு இது அதிர்ச்சியையே தரும். தொலைக்காட்சிப் பேட்டிக்கு முன்னால் வந்து நிற்கும் ஓரிரு நபர்கள் சொல்வதே ஒட்டுமொத்த கூட்டத்தின் குரலாக திரிக்கப்படுகிறது. ஏன் அங்கிள் என்னை இங்க நிக்கச் சொல்லியிருக்கீங்க என்ற அப்பாவி கேள்வியைக் கண்களில் தேக்கியபடி தொலைக்காட்சி கேமரா முன் நிறுத்தப்பட்ட இஸ்லாமியச் சிறுவனைப் பார்க்கும்போது வேதனையும் அச்சமும் ஏற்படுகிறது. திருமாவளவனின் கள்ள மவுனம் சில விஷயங்களை யூகிக்க இடம் தந்திருந்தாலும் இருளில் மறைந்திருக்கும் மிருகங்கள் மெள்ளத் தென்பட ஆரம்பிக்கின்றன. வேறென்ன... என்னதான் மறைந்திருந்தாலும் ஊரில் உலவும் மிருகங்கள்தானே மறைந்திருந்தும் தாக்கும். வேற்றுக்கிரகத்தில் இருந்தும் வேற்று யுகத்தில் இருந்துமா வரப்போகின்றன?

மத்தியில் ஆளும் பா.ஜ.க. கட்சி மீதான அதிருப்தியில் இருக்கும் கம்யூனிஸ்ட்களில் ஆரம்பித்து சிறுபான்மை மதத்தினர் வரை அனைவரும் இந்த சல்லிக்கட்டை ஆதரிப்பதை தமது அரசியல் சார்ந்து முன்னெடுக்கிறார்கள். விவசாயிகள், வியாபாரிகள், லாரி உரிமையாளர்கள், மீனவர்கள், பெட்டிக்கடைக்காரர்கள் என சமூகத்தின் பல அடுக்கினரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியாகவேண்டிய சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

திரை உலகத்தினரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்களுக்குப் படியளக்கும் தெய்வங்களான ரசிகர்களிடம் நன்மதிப்பைப் பெறக்  கிடைத்த நல்ல வாய்ப்பு என்பதாலும் இந்த அரசியல் சக்தியைப் பகைத்துக்கொண்டால் தமிழகத்தில் கலைச் சேவையாற்ற முடியாது என்ற அச்சத்தினாலும் (இதுவே முக்கிய காரணம்) ஓடோடி வந்து உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அப்படியாக சல்லிக்கட்டு ஒட்டு மொத்தத் தமிழர்களின் கலாசார அடையாளமாக வலிந்து முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

போராட்டக்காரர்கள் மீது எந்த அளவுக்குத் தவறு இருக்கிறதோ அதே அளவுக்கு மத்திய அரசின் மீதும் இருக்கிறது. ஷாபானு வழக்குபோன்ற தவறான முன்னுதாரணங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு மத்திய அரசு எதுவும் செய்ய முடியாதென்பதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், கிராம பஞ்சாயத்துகளுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சல்லிக்கட்டை நடத்த முடியும் என்பதை மத்திய அரசும் சரி... மாநில அரசும் சரி... இரண்டுமே பொருட்படுத்துவதேயில்லை. இரண்டு அதிகார அமைப்புமே தம்மிடம் அதிகாரம் குவியவேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கின்றன. தமிழகத்தின் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும் தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி சல்லிக்கட்டை நடத்துவதே சரியான, எளிய தீர்வாக இருக்கும்.

ஒட்டுமொத்தத் தமிழகமுமே போராட்டத்தில் குதித்திருந்தாலும் சொற்ப கிராமங்களில் மட்டுமே சல்லிக்கட்டு நடக்கப்போகிறது... ஏனென்றால், திமில்கள் உள்ள சல்லிக்கட்டுக்காளை என்பது சொற்ப கிராமங்களில் மட்டுமே இருந்துவருகின்றன. ஒருவேளை திமில்கள் இல்லாத வண்டிமாடுகளை அடித்து மிரட்டி, ”உன் வீரத்தைக் காட்டு அப்போதுதான் உன்னை அடக்க முடியும்’ என்று  மெரினா தமிழர்கள் கொந்தளித்தாலும் மூக்கணாங்கயிறு குத்தப்பட்டு, காயடிக்கப்பட்டு லாடம் கட்டப்பட்ட அந்தக் காளைகளுக்கு வீரம் அவ்வளவு சீக்கிரம் வந்துவிடாதே. ஆனால், உயிர் பயம் என்ற ஒன்று இருக்கும். எனவே பயந்து அலறி அடித்து ஓடும். அதைப் பாய்ந்து அடக்கி வீரத்தைக் காட்ட தமிழகத்தில் புதிய தலைமுறை உருவாகிவிட்டதால் எல்லா கிராமங்களிலும் சல்லிக்கட்டு நடந்துவிடக்கூடிய வாய்ப்பு மலர்ந்திருக்கிறது. 

இது ஒருவகையில் தவிர்க்க முடியாத கால, கலாசார பரிணாம வளர்ச்சியே. மாடு பிடி வீரனுக்குத்தான் சல்லிக்கட்டுக் காளையை அடக்க முடியும். மத்தவங்களுக்கு காளைய அடக்கணும்னு ஆசை இருக்கும். ஆனா அதோட லாங் சைஸ் கொம்பைப் பார்த்ததும் நெக்ஸ்ட் ஜென்மத்துல பாத்துக்கலாம் என்று நிச்சயம்  திரும்பிவிடுவார்கள். அவர்களுக்கு வண்டிக்காளையே உகந்தது. அப்படியாக தமிழகம் முழுவதிலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு களைகட்ட அனைத்து வாசல்களும் திறந்துவிட்டன. ஆனால், ரத்தம் பாக்காம போகமாட்டோம் என்று சூளுரைத்துக் காத்திருக்கும் கூட்டம் தமது இலக்கை நோக்கி அடிமேல் அடி எடுத்து நடக்கத்தான் செய்வார்கள். நரேந்திர மோதி இதை நாசூக்காகக் கையாள வேண்டும். ஏனென்றால் ரத்த ஊற்றை அடைத்துக்கொண்டிருக்கும் சிறு கல்லை நீக்கிவிட்டால் அதன் பிறகு அது கசிந்து கசிந்து பேராறாக ஓடத் தொடங்கிவிடும்.
*


No comments:

Post a Comment