Wednesday 28 September 2016

பிங்க்





பிங்க் திரைப்படம் உடலுறவு தொடர்பான பெண்களின் சுதந்தரம் பற்றிப் பேசுகிறது. அதை திரைப்படத்துக்குள் பேசியிருக்கும் விதம் பற்றியும் பொதுவாக அந்த விஷயம் பற்றியும் என இரண்டுவகையில் பார்க்கலாம்.

இந்திய சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்று பார்த்தால் வேறு எத்தனையோ இருக்கின்றன. காதலை மறுத்தாலே அருவாளால் வெட்டிக் கொல்கிறார்கள். அதைவிட அப்படிக் கொன்றவன் பக்கம் இருக்கும் ’நியாயங்களை’ ஊரே கூடி உயர்வாகப் பேசுகிறது. சாதி/மத மறுப்புத் திருமணம் செய்துகொள்ள முடிவதில்லை, உலகின் எல்லா இடங்களையும்போல் கலவரங்கள் நடந்தால் முதல் இலக்கு பெண்கள்தான், இரவு நேரப் பணிகள், மதுபான விடுதி, மாடலிங், திரைத்துறை, ஊடகம் போன்றவற்றில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என எத்தனையோ இருக்கின்றன. வரதட்சணை, விவாகரத்து, விதவை திருமணம், ஜோதிட சிக்கல்கள், குடும்ப வன்முறை போன்றவை இன்றும் தொடர்கின்றன என்றாலும் அவையெல்லாம் கலைகளைப் பொறுத்தவரையில் பழங்காலப் பிரச்னைகள். இன்றைய சமூகம் எதிர்கொள்வதாகக் கற்பிதம் செய்துகொண்டிருக்கும் பிரச்னையைப் பேசினால்தான் நவீன மனிதராக மதிப்பார்கள். எனவே இயக்குநர் உடலுறவுக்கு நோ சொல்லும் உரிமையை மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கிறார்.

மனைவிக்கும் அப்படிச் சொல்ல உரிமை உண்டு. விபச்சாரிக்கும் அப்படிச் சொல்ல உரிமை உண்டு. என்பதால் இந்தப் படத்தின் நாயகியரை இரண்டும் கலந்த கலவையாக சித்திரித்திருக்கிறார். மனதுக்குப் பிடித்தவருடன் படுத்துக்கொள்வார்கள். ஆனால், மனைவிகள் அல்ல; காசு வாங்கிக் கொள்ளமாட்டார்கள் அதனால் விபச்சாரிகளும் அல்ல. இவர்கள் நவ நாகரிக பெண்கள். ஆணைப் போல் நடந்துகொள்வதே விடுதலை என்று நம்புபவர்கள். அவ்வளவுதான்.

ஒரு பெண் உடலுறவுக்கு நோ என்று சொன்னால் நோ என்றுதான் அர்த்தம். அந்தப் பெண் தன் பெற்றோருடன் தங்காமல் அதே ஊரில் தோழிகளுடன் தனியாக வீடெடுத்துத் தங்கியிருக்கலாம்; உங்களுடன் டேட்டிங்குக்கு வந்திருந்து உங்களுடன் சிரித்துச் சிரித்து தொட்டு தொட்டுப் பேசியிருக்கலாம். அந்தப் பெண் செக்ஸ் ஜோக்குகள் சொல்லியிருக்கலாம். உங்களுடன் சேர்ந்து மது அருந்தியிருக்கலாம். உங்களுடன் ஒரே ஹோட்டல் அறையில் தங்கியிருக்கலாம். அந்தப் பெண் தனக்குப் பிடித்த பலருடன் திருமணத்துக்கு முன்பே உடலுறவு வைத்திருக்கலாம். ஆனால், நீங்கள் உடலுறவுக்கு அழைக்கும்போது அவள் வேண்டாம் என்று சொன்னால் வேண்டாம் என்றுதான் அர்த்தம். அந்தப் பெண் அந்த நோ-வை ஆயிரம் எஸ்-களுக்கு பிறகு சொல்லியிருந்தாலும் அந்த ஆயிரம் எஸ்கள் வேறு வேறு விஷயங்களுக்கானவை என்பதால் உடலுறவுக்குச் சொல்லும் நோ-வை நீங்கள் மதித்துத்தான் ஆகவேண்டும்.

பிங்க் திரைப்படம் முன் வைக்கும் அற்புதமான சுதந்தரப் பிரகடனம் இது.

நான் அந்த பையன்களை நம்பினேன். அவர்கள் ஜெண்டில்மேன்களாக நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன் ஏமாற்றிவிட்டார்கள். நாங்க பண்ணினது தப்பா அவங்க பண்ணினது தப்பா என்று அந்தப் பெண் கண்ணீர் மல்கக் கேட்கிறார். பெண்கள் செவ்வாய் கிரஹத்தில் இருந்து வந்தவர்கள் என்பது உண்மைதான் போலிருக்கிறது. சுதந்தரம் என்றால் என்ன என்ற புரிதல் இல்லாததால் வந்த குழப்பம் இது. வொய் ஷுட் பாய்ஸ் ஹேவ் ஆல் த ஃபன் என்ற முழக்கத்தின் அசட்டுத்தனமான வெளிப்பாடு இது.

சுதந்தரம் என்பது பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டது. சாலையில் வாகனம் ஓட்டிச் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், சாலை விதிகளை மதித்துத்தான் ஓட்டியாகவேண்டும். வெளியூருக்குச் செல்வதென்றால் வீடுகளைப் பூட்டிவிட்டுச் செல்லவேண்டும். இரவில் தூங்கும்போது வீடுகளைப் பூட்டிக்கொள்ளவேண்டும் என்பவையெல்லாம் சுதந்தரத்தைக் குறுக்கும் செயல் அல்ல. சுதந்தரத்தை சரியாகப் பயன்படுத்தும் செயல்.

.இளமை, முதுமை, மரணம் என்ற கட்டுப்பாடுகள் மனிதருக்கு உண்டு. அது இயற்கை விதித்த விதி. சமூக அளவில் வேறு பல விதிகள் உண்டு. அது சமூகத்துக்கு சமூகம் மாறுபடும். சமூகம் முன்வைத்திருக்கும் விதிகளை மீறிச் செல்கிறவர்கள் அதற்கான முன் தயாரிப்புகளை எடுத்துக்கொண்டாகவேண்டும். பின் விளைவுகளை முன் யூகித்திருக்க வேண்டும். அல்லது எது நடந்தாலும் எதிர்கொள்ளும் துணிச்சல் இருக்கவேண்டும். ஆணைப் போல் நடந்துகொள்வேன். ஆனால், பெண்ணாக என்னை மதிக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது. உதாரணமாக ஒரு ஆண் நாலைந்து பெண்களால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படுத்தப்படுகிறார் என்றால் அவர் இப்படி என்னை வன்கலவி செய்துவிட்டீர்களே என்று கண்ணீர் விடமாட்டார். அவருடைய விருப்பத்தை மீறி நடந்துவிட்டால் உடம்பைத் துடைத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார். ஒரு ஆண் பலாத்காரம் செய்துவிட்டால் கற்பு பறி போனால் கதறும் பிற்போக்கு பாரம்பரியப் பெண்களைப் போல் நவநாகரிக பெண்கள் ஏன் கண்ணீர் உகுக்கிறார்கள். ஆமாம்... என்ன என்னோட விருப்பம் இல்லாம ஒருத்தன் சோலி பாத்துட்டான். அதுக்கென்ன இப்போ என்று துணிந்து சொல்லவேண்டியதுதானே... நான் விர்ஜின் அல்ல என்று சொல்ல முடிந்த பெண்ணுக்கு என் விருப்பத்தை மீறியும் ஒருத்தன் என்னை உறவுக்கு கட்டாயப்படுத்தியிருக்கான் என்று கேஷுவலாகச் சொல்லிவிட்டுச் செல்லவேண்டியதுதானே.

நான் அவனை நம்பினேன். அவன் மோசம் செய்துவிட்டான் என்று ஏன் சொல்கிறார்கள். திருமணத்துக்கு முந்தைய மற்றும் கணவர் அல்லாத நபர்களுடனான உடலுறவை உரிமைகளாக வென்றெடுத்த நவ நாகரிகப் பெண் வலுக்கட்டாய உறவை ஒரு விபத்தாக, பிழையான கணிப்பாக, கெட்ட கனவாக நினைத்து வாழ்க்கையை பிற ஜெண்டில்மேன்களுடன் கொண்டாட வேண்டியதுதானே.

நவநாகரிகப் பெண் ஒருத்தியை ஒருவர் வல்லுறவு கொள்கிறார் என்றால் அல்லது அதற்கு முயற்சி செய்கிறார் என்றால் அங்கு நடப்பது கற்புப் பறிப்பு அல்ல. ஏனென்றால் கற்பு என்ற விஷயம் பற்றி அந்தப் பெண்ணுக்கு எந்தவொரு நல்ல அபிப்ராயமும் கிடையாது. அதை அவர் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. அங்கு நடப்பது அவருடைய சுய விருப்பத்தை மீறி நடக்கும் ஒரு செயல். அந்தப் பெண்ணின் ஆளுமையை மதிக்காமல் செய்யப்படும் ஒரு வன்முறை. இதை அவர் அப்படியான ஒரு கொடுமையாகவே எதிர்க்கவேண்டும். கற்பை உயர்வாக மதிக்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படும்போது எப்படி தார்மிகக் கோபத்தை வெளிப்படுத்துவாரோ அப்படியான கோபத்தை நவ நாகரிகப் பெண்கள் வெளிப்படுத்தக்கூடாது.

நவநாகரிக உடை அணிந்து செல்லும் பெண் அதை மனப்பூர்வமாக விரும்பித்தான் அணிந்து செல்கிறார். சுற்றி இருப்பவர்கள் உற்று உற்றுப் பார்க்கிறார்களே என்று அவர் புகார் சொல்ல முடியாது. அவர் அந்தப் பார்வைகளை புறமொதுக்கிவிட்டுத்தான் செல்லவேண்டும். ஒருவகையில் அந்தப் பெண் அந்த உடையையும் அவருடைய வனப்பான உடலையும் ஷாருக்கான் போல் அமீர்கான் போல் அழகும் உடல்கட்டும் அமெரிக்க மென் பொருள் நிறுவனப் பின்னணியும் இருக்கும் பையன்கள் பார்த்து கமெண்ட் அடித்தால் அதை அவர் விரும்பி ரசிக்கவே செய்வார். ஒருவகையில் அப்படியான உடைகளை அந்தப் பெண் அணிவதே அப்படியான உயர் வர்க்க பாராட்டுகளை எதிர்பார்த்துத்தான். ஆனால், பீடி குடித்தபடி பான்பராக் போட்டு கறையேறிய பற்களுடன் இருக்கும் கடைநிலை ஆண் ஒருவனும் அந்த பெண்ணைப் பார்த்து சில கமெண்ட்கள் அடிக்கக்கூடும். அதை அந்தப் பெண்கள் ரசிப்பதில்லை. இது உனக்கான உடல் அல்ல என்று சொல்கிறார்கள். அப்படியானால், அப்படியான நபர்கள் இருக்கும் இடத்தில் அந்த உடைகளை அணிந்து செல்லாதே என்றுதான் சொல்லவேண்டியிருக்கும். நான் அப்படித்தான் உடை அணிவேன் நீ கமெண்ட் அடிக்ககூடாது என்று சொல்வது அவ்வளவு புத்திசாலித்தனமான வாதமும் அல்ல... நியாயமான உரிமையும் அல்ல.

பாவாடை தாவணி போட்டுக்கொண்டு பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் ஒரு பெண்ணை ரோட்டோரம் நின்று கொண்டு கேலி செய்தால் அந்தப் பெண் அவனை திட்டலாம். அடிக்கக்கூடச் செய்யலாம். ஆனால், அந்தப் பெண்ணுக்கு இருக்கும் தார்மிக உரிமை நவநாகரிக உடை அணிந்து செல்லும் பெண்ணுக்குக் கிடையாது. நவநாகரிகம் என்றால் அனைத்துச் செயல்பாடுகளிலும் அது வெளிப்படவேண்டும். ஏ செண்டருக்காக எடுக்கப்படும் படம் தான் என்றாலும் பி, சி, டி, ஈ என நல்லா செண்டர்களையும் தெறிக்கவிடும் என்று பெருமிதமாகச் சொல்லிவிட்டுப் போகவேண்டும்.

புல் வெளியில் நான் பாட்டுக்கு மேய்ந்துகொண்டிருந்தேன். ஒரு சிங்கம் மறைவில் இருந்து பாய்ந்து வந்து என்னை அடித்துவிட்டது இது நியாயமா என்று கேட்கும் தார்மிக பலம் ஒரு குட்டி மான்குட்டிக்கு உண்டு. ஆனால், அதே மான்குட்டி சிங்கத்தின் குகைக்குச் சென்று தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை தட்டி எழுப்பி துள்ளிக் குதித்து விளையாட வா விளையாட வா என்று மருளும் கண்களால் மயக்கிவிட்டு, சிங்கம் ஒரே அடி அடித்துப் போட்டதும்... உன்னை நான் எவ்வளவு நம்பினேன் இப்படி செய்துட்டியே... என்று கேட்டால் அதை சுதந்தர உரிமை முழக்கமாக அல்ல... அசட்டுத்தனமாகத்தான் பார்க்கவேண்டியிருக்கும். சிங்கம் அடித்தது தவறுதான். அதைவிட சிங்கம் அடிக்கும் என்பது தெரியாமல் குகைக்குள் போய் துள்ளிக் குதித்தது மானின் மிகப் பெரிய தவறு.

இப்படி பாதிக்கப்பட்ட பெண் மீது குறை சொல்லும்போது நேரத்துக்குத் தகுந்த நிறம் காட்டும் முற்போக்காளர்களில் ஆரம்பித்து ப்யூர் பெண்ணியவாதிகள் வரை பலரும் இந்து இந்திய எதிர்ப்பு நிறமாலையின் பல வண்ணங்களைக் காட்டுவார்கள். முற்போக்கு பச்சோந்திகளை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் இந்து/ இந்திய சமூகம் அதி சுதந்தர, அதி ஜனநாயக சமூகமாக மாறியே ஆகவேண்டும் என்ற உயர் எண்ணம் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இஸ்லாமில் பர்தா என்பது ஆணின் மனதில் கெட்ட எண்ணங்களை ஏற்படுத்தாமல் தடுக்கும் உயரிய நோக்கிலேயே பயன்படுத்தப்படுகிறது... ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால் ஆணின் மனதில் அந்த எண்ணத்தை உருவாக்கிய அந்தப் பெண்ணுக்கு 100 கசையடி தரவேண்டும் என்ற இஸ்லாமிய நீதியில் நம்பிக்கை கொண்டவர்கள். உங்க கேள்விகளுக்கு அப்பறம் பதில் சொல்லறேன்.. கொஞ்சம் வெளிய போய் உட்காருங்க என்று சொல்லி அவர்களை அனுப்பிவிடலாம். ஆனால், ப்யூர் பெண்ணியவாதிகளின் கேள்விகளை நிச்சயம் அப்படி புறமொதுக்கிவிடமுடியாது. அவர்கள் நோ சொல்லும் உரிமையைக் கோரும்போது நிச்சயம் அதை மதிக்கத்தான் வேண்டும். ஆனால், அந்த நோவைக் கொஞ்சம் முன்னதாகவே சொல்லிவிடுங்கள்... பேண்ட் ஸிப்பைக் கழட்டறதுவரை காத்திருக்கவேண்டாம் என்று மட்டுமே அவர்களிடம் சொல்ல முடியும்.

அடுத்ததாக அந்தப் பெண் அங்கு போனது தவறு என்று சொன்னால், உடனே பெண்களைப் படிக்கவைக்கக்கூடாது, பெண்களை வேலைக்கு அனுப்பக்கூடாது, பெண்களை உடனே திருமணம் செய்து கொடுத்துவிடவேண்டும் என்று சொல்லும் நிலவுடமை மனநிலை கொண்ட பிற்போக்குவாதி என்று ஒரேயடியாக ஏறி மிதித்துவிடுகிறார்கள். பெண்களுடைய உணர்வுகளை ஆண்கள் மதிக்கவேண்டும் என்பது உண்மைதான். ஆனால், அப்படியான மனநிலை மாற்றம் 100 சதவிகிதம் ஏற்பட்டிராத நிலையில் பெண்கள் தற்காலிகமாக கொஞ்சம் அனுசரித்துச் செல்லலாம் என்பதில் இருக்கும் நியாயத்தை எப்படிப் புரியவைப்பது? ஒரு சாலை இருளடைந்திருந்தால் அங்கு நாய்கள் நிலவ வாய்ப்புகள் உண்டென்றால், அந்த வழியைக் கொஞ்சம் தவிர்க்கச் சொல்வதில் உங்கள் மேல் அக்கறை மட்டும்தானே இருக்கிறது. உடனே, எங்களை வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது என்று ஏன் சொல்கிறீர்கள் என்று ஏன் கூக்குரலிடவேண்டும். ஒரு பெண் படிக்கலாம். இரவுகளில் நண்பர்களுடன் வெளியே செல்லலாம். ஆண் நண்பர்களைப் பொது இடங்களில் நான்கைந்து பேர் பார்வையில் படும்படியாக மட்டுமே சந்திக்கவேண்டும் என்பதுபோன்ற விஷயங்களை சுதந்தரத்தை கட்டுப்படுத்துவதாக ஏன் பார்க்கவேண்டும். ஆண்களுக்கும் கூட திருட்டு, கொள்ளை, கலவரங்கள் என பல விஷயங்கள் தொடர்பாக பல கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

இது பிங்க் திரைப்படம் முன்வைத்த விஷயம் குறித்த பொதுவான விமர்சனம். படத்தில் இந்த விஷயங்கள் எப்படிக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன என்று பார்ப்போம்.

மிகவும் துணிச்சலான முயற்சி என்றுதான் இந்தப் படத்தைச் சொல்லவேண்டும். பாடல், ஒளிப்பதிவு, திரைக்கதை, வசனங்கள், நடிப்பு என அனைத்துமே கலை அழகுடன் மிளிருகின்றன. வில்லனை அனைத்து கெட்ட குணங்களும் கொண்டவனாகச் சித்திரித்தல் என்ற ஃபார்முலாவைத் தவிர படம் மிக அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது (ரஜினி காந்தை எனக்குப் பிடிக்கும் என்பதாலும் அவருக்கு 60க்கு மேல் வயதாகிவிட்டதாலும் தரையில் கால் ஊன்றியபடியே கதாநாயகனாக நடிப்பது எப்படி என்பதை அமிதாப்பிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். இதுதான் தலைவர் அதிரடி என்ற டகால்டிகளெல்லாம் இனிமேல் வேண்டாம் என்ற முடிவை அவர் எடுப்பதுதான் அவருக்கு நல்லது. கபாலி-2க்கு முன்னால பிங்க் படத்தின் ரீ மேக்கில் அவர் நடிக்கவேண்டும்).

படத்தின் குறைகள் என்று பார்த்தால், க்ளைமாக்ஸ் பலவீனமாக இருக்கிறது. ஒரு பெண் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்ட ஆணை பீர் பாட்டிலால் அடித்துவிடுகிறார். கொலை முயற்சி என்று வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

அந்தப் பெண் என்னுடன் படுக்க வந்தாள். காசு கேட்டாள்... இதிலெல்லாம் எனக்கு விருப்பமில்லை என்று சொன்னேன். அப்ப காசையாவது கொடுத்துட்டுப் போ என்று சொன்னாள். நான் அதுவும் முடியாது என்றதும் பாட்டிலை எடுத்து அடித்துவிட்டாள் என்று ஒரு ஆண் அந்தப் பெண் மீது புகார் கொடுக்கிறான்.

அந்த நவ நாகரிகப் பெண்ணோ நான் சும்மா ஜாலிக்காகத்தான் அவனுடைய ஹோட்டல் அறைக்குப் போனேன். செக்ஸ் ஜோக்ஸ் சொன்னேன். பீர் ஊற்றிக் கொடுத்தேன். எல்லாம் செய்தேன். ஆனா அவன் கூட படுக்க எனக்கு எண்ணம் இல்லை. அங்கு அவன் என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதும் தடுத்தேன். நான் நோ சொன்ன பிறகும் என்னை பாலியல் ரீதியாக கட்டாயப்படுத்தினான். அதனால் என்னைத் தற்காத்துக்கொள்ள அடித்தேன் என்கிறாள்.

இப்போது நீதிபதி தீர்ப்பு வழங்கியாகவேண்டும். அந்தப் பெண் சொல்வது சரியா... அந்த ஆண் சொல்வது சரியா என்பது அவருக்குத் தெரியாது. இத்தனைக்கும் அந்தப் பெண்ணுடன் வந்த தோழி காசு தருவதாக அந்த ஆண் சொன்னபோது முதலில் சரி என்று சொன்னோம். அதன் பிறகு வேண்டாம் என்று சொல்லிவிட்டோம் என்கிறார். நீதிமன்றத்தில் முதலில் காசு பற்றி நாங்கள் பேசவே இல்லை என்று சொன்னவர் கடைசியில் காசு வாங்கினோம். பிறகு திருப்பிக் கொடுத்துவிட்டோம் என்கிறாள். இப்போது நீதிபதிக்கு பெண்கள் சொல்வது சரி என்று எப்படி நம்பிக்கை வரும். ஆனால், நீதிபதியோ பெண் நோ என்று சொன்னதை ஆதாரமாக ஏற்றுக்கொண்டு அந்த ஆணுக்கு தண்டனை விதிக்கிறார்.

ஒரு வழக்கு என்ற வகையில் இப்படியான தீர்ப்பு தவறானது. குற்றம் சாட்டப்பட்டவர் சொல்லும் விஷயத்தை அப்படியே ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. உதாரணமாக ஒருவர் மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால், அவரோ அதை குற்றம் சாட்டியிருப்பவர் எனக்கு பரிசாகக் கொடுத்தார்; இப்போது பொய் சொல்கிறார் என்று சொல்லி தன் தரப்பை நிரூபித்துவிட முடியாது. பரிசாகக் கொடுத்ததற்கு வேறு வலுவான ஆதாரம் வேண்டியிருக்கும். இந்தப் பெண் நோ சொன்னது உண்மையா..? காசு வாங்கினேன் என்று சொல்லிவிட்டிருக்கும் நிலையில் அதன் பிறகு நோ சொன்னதாகச் சொல்லப்படுவதை எப்படி நம்புவது?

திரைப்படத்தில் இந்த இறுதிக் காட்சி பலவீனமாக இருக்கிறது. நீதிபதிக்கு அந்தப் பெண் மறுத்த பிறகும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்கிறான் என்பதற்கு வலுவான வீடியோ ஆதாரம் அல்லது வேறு வகை ஆதாரம் கிடைத்திருந்தால்தான் ஆணுக்கு தண்டனை தரமுடியும்.

அதிலும் அந்தப் பெண்ணின் தோழி ஆமாம். நாங்கள் அந்த ஆணுடன் படுப்பதற்கு சம்மதித்துப் பணம் வாங்கிக் கொண்டோம். பின்னர் மனதை மாற்றிக்கொண்டுவிட்டோம் என்று சொல்கிறாள். இது மிக மிக அபத்தமான காட்சி. அந்தப் பெண்கள் நடத்தை கெட்டவர்கள் என்று பொய் சொல்லித்தான் வில்லன் அவர்கள் மீது வழக்கு தொடுத்திருக்கிறான். அதை இவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டால் இந்தப் பெண்கள் தான் குற்றவாளிகள் என்று ஆகிவிடுகிறது. அப்பறம் எப்படி அந்த ஆணுக்கு தண்டனை வழங்க முடியும்.

அந்தப் பெண்ணை வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யும்போது பணத்துக்காகத்தானே அங்கு போனீர்கள் என்று அவர் திரும்பத் திரும்பக் குற்றம் சாட்டுகிறார். உடனே அந்தப் பெண் நிலைகுலைந்து ஆமாம் நாங்க காசு வாங்கினோம் என்று சொல்லிவிடுகிறாள். கேட்டால் அந்த குறுக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க அப்படிச் சொன்னாளாம். உண்மையில் அப்படியான அவதூறுகளினால் விரக்தியடையும் ஒருவர் என்ன செய்வார்.. ஆமா நான் வாங்கினேன். எங்க ஆபீஸ்ல எனக்கு சம்பளம் எதுவும் கொடுக்கலை. எனக்கு வீட்டு வாடகை, மளிகை, எல்லாத்துக்குமே நான் கண்டவன் கூட படுத்துதான் சம்பாதிக்கறேன். நான் மட்டுமில்லை. என் குடும்பமே ஏன் எங்க பெண் இனமே அப்படித்தான் செய்யறோம். போதுமா என்றுதான் எரிச்சலடைவார். ஆனால், படத்திலோ ஒரு தெளிவான கன்ஃபஷனாக உண்மைபோல் சொல்கிறார். கதாநாயகரான வக்கீல் அதை மிகவும் துணிச்சலான பதில் என்று வேறு சிலாகிக்கிறார்.

அதுபோல் படத்தில் வரும் இன்னொரு விபரீதமான வசனம் வட கிழக்கு மாநிலத்தில் இருந்து வரும் ஒரு பெண்ணை பிற இந்திய மாநிலத்தினர் கேலி செய்வதாக ஒரு காட்சி வருகிறது. இது உண்மைதான். ஆனால், இது மட்டுமே உண்மையல்ல. உலகில் எல்ல இடங்களிலுமே ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரைத் தரக்குறைவாகத்தான் நினைக்கிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் ஐரோப்பிய வம்சாவளியினர் பிற அமெரிக்கர்களை இழிவாகத்தான் பார்க்கிறார்கள். ஐரோப்பாவில் இங்கிலாந்து நாட்டினர் பிரெஞ்சுக்காரர்களை மட்டம் தட்டுவார்கள். இந்தியாவில் வட இந்தியர்கள் தென் இந்தியர்களை மட்டம் தட்டுவார்கள். தமிழர்கள் தெலுங்கர்களை கொல்டி என்று பரிகசிப்பர்கள். மலையாளிகள் தமிழர்களை பாண்டி என்று கிண்டலடிப்பார்கள். தமிழகத்தில் ஒரு சாதியினர் இன்னொரு சாதியினரை கீழானவர்களாக நினைப்பார்கள். அப்படியாக ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரை கட்டம் தட்டுவதென்பது உலக இயற்கை. இதில் வட கிழக்கு இந்தியர்கள் மட்டுமே மட்டம் தட்டப்படுவதாகச் சொல்லும் வசனம் நிச்சயம் விஷமத்தனமானதுதான். இன்னும் நுணுகிப் பார்த்தால் வட கிழக்கு மாநிலங்களுக்குள்ளேயே ஒவ்வ்வொரு மாநிலத்தைப் பற்றியும் ஒவ்வொரு பழங்குடிகளைப் பற்றியும் பிறர் கீழாகத்தான் நினைக்கிறார்கள். எனவே வடகிழக்கு மாநிலத்தினர் தாம் மட்டுமே பிற இந்தியர்களால் இழிவாகப் பார்க்கப்படுவதாகச் சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. அதுவும் வடகிழக்கு மாநிலத்தினர் இன்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வேலைபெற்று வாழ்ந்துவரும் நிலையில் ஓரங்கட்டப்படுவதாகச் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை.

அதோடு இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. இந்திய அரசும் சரி இந்து இயக்கங்களும் சரி வட கிழக்கு மாநிலங்களுக்காக எவ்வளவோ செய்து வந்திருக்கிறார்கள். வட கிழக்கு மாநிலங்களின் நலத்திட்டங்களுக்கான பெரும்பகுதி இந்திய அரசிடமிருந்துதான் தரப்படுகிறது. இந்து நிறுவனங்கள் அஸ்ஸாம், அருணாச்சலபிரதேஷ் போன்றவற்றில் மிக அதிகமாக இயங்கிவருகின்றன. நாகாலாந்து போன்ற இடங்களில் இந்திய, இந்து நிறுவனங்களை விரட்டியடிப்பதுதான் நடக்கிறதே தவிர இந்திய இந்து தரப்பில் வட கிழக்கை யாரும் ஒதுக்கிவைக்கவில்லை. விவேகானந்த கேந்திரா போன்ற நிறுவனங்கள் அவர்களுடைய தலைமையகம் இருக்கும் தமிழகத்தைவிட பத்து மடங்கு அதிக நற்பணிகளை வடகிழக்கு மாநிலங்களில்தான் செய்கிறார்கள். பொது இந்தியர் மத்தியில் மங்கோலிய வடகிழக்கினர் மாறுபட்டுப் பார்க்கப்படுவது உண்மை என்றாலும் சொல்லப்படாத வேறு பல உண்மைகளும் அதற்குப் பின்னே இருக்கத்தான் செய்கின்றன.

இந்தப் படத்தின் இயக்குநர் இஸ்லாமிய பெண்ணை பாலியல் சுதந்தரத்தை முழுவதுமாக அனுபவிக்கும் ஒருவராக துணிச்சலாக வெளிப்படையாகச் சித்திரித்திருக்கிறார். பால கங்காதரத் திலகர், ரவீந்திரநாத் தாகூர் போன்றோரின் உருவப் படங்களை சுவரில் தொங்கவிட்டிருக்கிறார். எனினும் வட கிழக்கு மக்கள் விஷயத்தில் மேலோட்டமான பொதுப்புத்தியில் இருக்கும் பிழையான அரசியல் கதையாடலையே பேசியிருக்கிறார்.

அதுபோல் படத்தில் காவல் துறையினர் பெண்கள் மீதான வழக்கை உரிய நாளில் பதிவு செய்யவில்லை. பெண்கள் முதலில் பிரச்னையை அப்படியே விட்டுவிடலாம் என்றுதான் நினைக்கிறார்கள். வம்புக்கு இழுக்கும் ஆண்கள் அவர்களுக்குத் தொடர்ந்து நெருக்கடி தரவே அதன் பிறகே பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள். அது தெரிந்த பிறகே ஆண்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி பெண்கள் மீது கொலை முயற்சி வழக்கு தொடுக்கிறார்கள். இதற்காக அந்த வழக்கை முன் தேதியிட்டுப் பதிவு செய்கிறார்கள். இதை பெண்களின் வழக்கறிஞர் உடைக்கும் விதம் சற்று சுற்றி வளைத்துச் செல்கிறது. அதாவது 13, 14, 15, 16, 17 என வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதில் 14கும் 15க்கும் இடையில் இந்த வழக்கை புகுத்துகிறார்கள். 14ம் வழக்கு முடிவடையும் பக்கத்தில் கடைசியில் இரண்டே இரண்டு வரிகள் இடம் இந்தப் படத்துக்காகவே விடப்பட்டிருக்கின்றன. அதில் 15 என நம்பரைப் போட்டு இந்த வழக்கை எழுதிவிடுகிறார்கள். உண்மையில் அடுத்த பக்கத்தில் உண்மையான 15, 16 என எண்கள் எழுதப்பட்டிருக்கும். அதை அடித்து எண்களை மாற்றியாகவேண்டியிருக்கும். அதை எடுத்துக்காட்டினாலே தில்லுமுல்லு நடந்திருப்பது தெரிந்துவிடும். அந்த அடித்தல் திருத்தலை வேறு காரணம் சொல்லி நியாயப்படுத்த முடியுமென்றால், 15 வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் வேறொரு திருமணத்துக்கு வெகு தொலைவு மண்டபத்துக்குச் சென்றிருந்த காவலர் எப்படி பத்து நிமிடத்தில் வந்து வழக்கு பதிவு செய்தார் (120 மைல் வேகத்தில் வந்திருந்தால்தான் அப்படி அந்த நேரத்தில் வழக்கு பதிவு செய்ய முடிந்திருக்கும் என்று வழக்கறிஞர் கிடுக்கிப் பிடிபோடுகிறார். நேரம் தவறாக எழுதிவிட்டேன் என்று சொல்லித் தப்பித்துவிட முடியுமே.


இதுபோன்ற குறைகள் படத்தை எந்தவகையிலும் பலவீனப்படுத்தவில்லை. படம் பேசிய அதீத சுதந்தர உரிமைதான் வெகுவாக இடிக்கிறது. நாம் காட்டுமிராண்டி இஸ்லாமிய நாடுகள்போல் இல்லை. அப்படி ஆகப்போவதும் இல்லை. வல்லாதிக்க கிறிஸ்தவ நாடுகள்போல இல்லை. அப்படி ஆகத் தேவையும் இல்லை.

Monday 26 September 2016

நாகினி - 6

பிரதமரிடம் சென்று எதிர்கட்சித் தலைவர், உள்துறை அமைச்சர் எழுதிய கட்டுரைகள், ஊடக நிறுவனம் ஒளிபரப்பிவரும் விளம்பரம் எல்லாவற்றையும் பிரதமரிடம் காட்டுகிறார். மகிழ்ச்சியடையும் பிரதமர், இடது சாரிகளைப் பற்றிக் கேட்கிறார்.

கவலைப்படாதீங்க. அவங்களையும் வழிக்குக் கொண்டுவந்தாச்சு.

அந்த நேரம் பார்த்து பிரதமரின் உதவியாளர் விரைந்து ஓடிவருகிறார்.

பிரதமர் என்ன என்று பதறுகிறார்.

இடதுசாரி கட்சித் தலைவர் ஒரு ஏரிக்கரையோரமாகப் பிணமாக கிடக்கும் செய்தி தொலைகாட்சிகளில் ஓடுவதாகச் சொல்கிறார்.

தற்கொலையா.. கொலையா என்று தெரியவில்லை என்கிறார்.

பிரதமர் இடதுசாரிக் கட்சிக்கு போன் செய்து வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறார். பிரதமர் அறையில் கனத்த மவுனம் நிலவுகிறது. இடதுசாரிகள் எப்படியும் ஆதரவை விலக்கிக் கொண்டுவிடுவார்கள் என்பது தெரிகிறது. நாகினிவின் அனைத்து முயற்சிகளும் வீணாகிப் போகும்போலிருக்கிறது. ஆட்சி போய்விட்டால் ஒப்பந்தத்தை அமல்படுத்த முடியாமல் போய்விடும்.

வேறொரு பிராந்திய கட்சியிடம் 40 இடங்கள் இருக்கின்றன. அவர்கள் ஆதரவு கொடுத்தால் ஆட்சி தப்பித்துவிடும். அவர்களை வழிக்குக் கொண்டுவரும் பொறுப்பும் நாகினியிடம் தரப்படுகிறது. கைவசம் இருக்கும் நாட்களோ பத்துதான். கட்சிக்கு ஆதரவு தந்தால் மட்டும் போதாது... அணு ஒப்பந்தத்துக்கும் அவர்கள் ஆதரவு தரவேண்டும்.

பத்து நாளில் எதுவும் செய்ய முடியாது என்று நாகினி சொல்கிறார்.

ஹனி டிராப் செட் பண்ணவே பத்து நாளுக்கு மேல எடுக்கும்.

முடியாததைச் செய்யறதுதான நாகினிக்கு வழக்கம்.

அது சரிதான்... யாராலயும் முடியாததை நாகினியால செய்ய முடியும். ஆனா நாகினியாலயும் செய்ய முடியாததுன்னு சில இருக்கத்தான செய்யும்.

நீங்க சொல்றது எதுவுமே என் காதுல விழலை.

நீங்க சொன்னதும் என் காதுல விழலை...

அப்போ நாகினிக்கும் ஒரு ஸ்கெட்ச் போட்டாகணும் போல இருக்கு.

உதவியாளர் லேசாகச் சிரிக்கிறார்.

நாகினி தன் அலுவலகம் திரும்புகிறார். அந்த பிராந்திய கட்சி தலைவரை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று யோசிக்கிறார்.

அவருடைய மாநிலத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளைப் பட்டியலிட்டுப் பார்க்கிறார்.

ஒரு சமூக சேவகர் செல் போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது கீழே விழுந்து இறந்த செய்தி தெரியவருகிறது. காவல்துறை அதை விபத்து என்று சொல்லி வழக்கை முடித்துவைத்திருந்தது. பத்து நாள் கழித்து பிரபல பத்திரிகையின் நிருபர் ஒருவர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி ஒரு மூலையில் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கிறார்.

சில மாதங்கள் கழித்து அந்த நிருபர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியான செய்தி வெளியாகியிருக்கிறது. அவர் அந்த சமூக சேவகரின் போராட்டங்களைக் குறித்து தொடர்ந்து செய்திக்கட்டுரைகள் எழுதியது பற்றி அதில் பாராட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருவருடைய மரணத்தையும் நாகினி அலசிப் பார்க்கிறார். சமூக சேவகர் பட்டப் பகலில் நூற்றுக்கணக்கானவர்கள் செல்போன் டவரைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது பிடிமானம் நழுவிக் கீழே விழுந்து இறந்திருக்கிறார். பத்திரிகை நிருபர் குடித்துவிட்டு வண்டி ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கியிருக்கிறார். இரண்டுமே தெளிவான விபத்துகள். அதிலும் பிராந்திய கட்சித் தலைவர் அவர்கள் இருவருக்கும் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். மதுவுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட அந்த நிருபர் மது அருந்தி விட்டு வண்டியோட்டி இறந்தது தனக்கு மிகுந்த வேதனையைத் தந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

நாகினிக்கு அது ஏதோவொரு சந்தேகத்தைத் தருகிறது. நிருபரைக் குறித்து விசரிக்கிறார். அந்த நிருபர் குடிப்பழக்கமே இல்லாதவர்; பெரிய பார்ட்டிகள், நண்பர்களுடனான விருந்துகள் எதிலுமே பழச்சாறு மட்டுமே அருந்துபவர் என்று தகவல் கிடைக்கிறது.

அதோடு சமூக சேவகர் இறப்பதற்கு முன்பாக என்னை என்னை... என்று ஏதோ சொல்லியிருக்கிறார். தன்னைக் காப்பாற்றிவிடும்படிக் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்பதாக அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றவர்கள் குறிப்பிட்டிருந்ததாக செய்தி வெளியாகியிருந்தது.

நாகினி ஒரு நாள் இரவில் தூங்காமல் யோசித்துக்கொண்டிருக்கையில் யாரும் பார்க்காமல் ஓடிக்கொண்டிருந்த தொலைகாட்சியில் வடிவேலுவும் சிங்க முத்துவும் வரும் காமெடி காட்சிகள் ஓடுகின்றன. அதில் ஒன்றில் என்னை... எண்ணை என்று வார்த்தை விளையாட்டை வைத்து வரும் நகைச்சுவைக் காட்சி வருகிறது. யதேச்சையாக அதைப் பார்க்கும் நாகினிக்கு ஏதோ சட்டென்று பொறி தட்டுகிறது. சமூக சேவகர் இறந்த வீடியோவைப் போட்டுப் பார்க்கிறார். சமூக சேவகர் கைப்பிடி தவறி விழுந்த காட்சி நேரடியாக பதிவாகியிருந்தது. அதில் பிடிமானம் கிடைக்காமல் வழுக்கி விடுவது தெரிகிறது. அதோடு அவருடைய கால் வைக்கப்பட்ட இரும்புத் தகடு உடைந்துதான் அவருடைய சமநிலை தவறியிருப்பது தெரிகிறது. அந்த செல்போன் டவரில் நாகினி ஏறிப்பார்க்கிறார். சோல்டரிங் செய்து அந்த தகடு உடைத்துவைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. ஆக இரண்டுபேரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. ஆனால், யார் செய்தது என்பது தெரியவில்லை.

அந்த சமூக சேவகர் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை எதிர்த்துப் போராடியவர். பல அதிகாரமையங்களை எதிர்த்தவர். எனவே, யார் கொன்றிருப்பார்கள் என்பதை யூகிக்க முடியவில்லை. நிருபருடைய மரணத்தைப் பதிவு செய்த காவலரைப் போய்ப்பார்க்கிறார். அந்த சம்பவங்கள் நடந்த ஐந்தாறு மாதத்தில் சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்பில் ஒரு புதிய வீடு ஒன்றை அந்தக் காவலர் செல்வகுமார் வாங்கியது தெரியவருகிறது. கடைநிலை காவலரான அவருக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து கிடைத்தது எந்த சந்தேகம் வருகிறது. அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கிறார். உண்மைகள் தெரியவருகின்றன. சமூக சேவகரின் மரணம் கொலைதான். செல் போன் டவர் தகடை உடைத்தும் எண்ணெய் தடவி வைத்தும் சமூக சேவகரை நிலை குலைந்து கீழே விழ வைத்திருக்கிறார்கள். அது சமூக சேவகரின் நண்பரான நிருபருக்குத் தெரிந்துவிட்டிருக்கிறது.

உண்மையில் செல்போன் டவர் போராட்டத்துக்கு முந்தின நாள் சமூக சேவகருக்கு ஒரு போன் வந்திருக்கிறது. அதில் பேசிய குரல் மறு நாள் போராட்டத்தை தள்ளிவைக்கும்படிக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அபப்டியே போராடுவதென்றாலும் செல் போன் டவரில் ஏறிப் போராடவேண்டாம் என்று சொல்லியிருக்கிறது. சமூக சேவகர் அந்தச் செய்தியை தன் நிருபர் நண்பரிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். சொன்னதுபோலவே விபரீதம் நடந்துவிடவே நிருபர் துப்பறிந்து நடந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார். நாகினி வலைவிரிக்கக் காத்திருக்கும் அதே பிராந்திய கட்சித் தலைவர்தான் அந்தக் கொலையைச் செய்தது. அந்த ஆதாரங்கள் வெளிவருவதைத் தடுக்கத்தான் நிருபரையும் மது ஊற்றிக் கொடுத்து வாகனத்தில் போய் விபத்தில் சிக்கியதுபோல் செட்டப் செய்து கொன்றுவிட்டிருக்கிறார்கள். இந்த விவரங்கள் அந்தக் காவலர் செல்வகுமாருக்கு நிருபர் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு அருகில் இருந்து கிடைத்த நிருபரின் பென் டிரைவில் இருந்து தெரியவந்திருக்கிறது. அதை வெளியில் சொல்லாமல் இருக்கக் கிடைத்த பணத்தில்தான் அவர் புது வீடு வாங்கியிருக்கிறார்.

இந்த தகவல்களை எடுத்துக்கொண்டு பிராந்திய கட்சித் தலைவரைச் சென்று நாகினி சந்திக்கிறார்.

தன்னை யார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என்கிறார்.

பிராந்திய தலைவர் தன் அலுவலகத்துக்கு வரச் சொல்கிறார்.

அந்த அறையில் அவருக்கான ஒரே ஒரு நாற்காலி மட்டுமே இருக்கிறது. இவர் வந்ததைப் பார்த்து உதவியாளர் வேறொரு நாற்காலியை எடுத்து வருகிறார். தலைவர் அது தேவையில்லை என்று முகத்துக்கு நேராக அவமானப்படுத்துகிறார். அதிகாரத் திமிரில் நாகினியை நிற்க வைத்தே பேசுகிறார்.

பிரதமருக்கு எதிரான சக்திகள் அவர் பிரதமருக்கு ஆதரவு தந்துவிடக்கூடாதுஎன்பதற்காக கணிசமான தொகை தந்திருக்கிறார்கள். அதைச் சொல்லாமல் மத்திய அரசு ஏழைகளுக்கு எதிராக இருக்கிறது. எனவே, ஆட்சிக்கு எதிராகவே வாக்களிப்பேன் என்கிறார்.

உங்களை மாதிரியான தலைவர்கள் நாட்டுக்கு ரொம்பவே தேவை... நீங்க தொடர்ந்து ஆட்சியில இருக்கணும். மக்களுக்கு நல்லது செய்யணும்.

ஆமா, மக்கள் எனக்கு ஆதரவு தர்றவரை நான் ஆட்சியில தொடருவேன். நான் அவங்களுக்கு நல்லது செய்யறதுவரை அவங்க எனக்கு ஆதரவு தருவாங்க.

அவ்வளவுதாங்க அரசியல். மரங்களை நட்டா மழைபெய்யும். மழை பெய்ஞ்சா மரங்கள் வளரும். மக்களுக்கு நல்லது செஞ்சா நம்மளைத் தேர்ந்தெடுப்பாங்க. நம்மளைத் தேர்ந்தெடுத்தா நாம மக்களுக்கு நிறைய உதவி செய்யவும் முடியும். பத்திரிகை ஆதரவோ பணமோ வேற எந்த சக்தியுமே நமக்குத் தேவையில்லை. ஆனா சில நேரங்கள்ல நமக்கு வேற சில ஆதரவும் தேவைப்படும். உதாரணமா செல்வகுமார்ங்கற கடைநிலைக் காவலர் கூட நமக்கு உதவ வேண்டியிருக்கும்.

அந்தப் பெயரைக் கேட்டதும் பிராந்தியத் தலைவர் அதிர்ச்சியடைகிறார்.

அவரை உங்களுக்கு தெரியுமா..?

அவர் சமீபத்துல 40 லட்ச ரூபாய்ல ஒரு ஃபிளாட் வாங்கினதும் தெரியும்.

பிராந்தியத் தலைவருக்கு தூக்கிவாரிப்போடுகிறது.

அந்த ஏழைக் காவலருக்கு நீங்க செஞ்ச உதவி இருக்கே யாருக்குங்க இவ்வளவு பெரிய மனசு வரும்.

பிராந்தியத் தலைவர் தலை குனிந்து அமர்ந்திருக்கிறார். நாகினி அவருக்கு அருகில் போய் நிற்கிறார். பிராந்தியத் தலைவர் உதவியாளரை அழைத்து இன்னொரு நாற்காலி கொண்டுவரச் சொல்கிறார். உதவியாளர் அதை எடுத்துக்கொண்டுவரும் வரை காத்திருக்கும் நாகினி உள்ளே வந்ததும், ஒரு நாற்காலி போதும் என்று அவரைப் பார்த்துச் சொல்கிறார்.

தலைவர், ‘இருக்கட்டும் உட்கார்ந்துக்கோங்க’ என்கிறார்.

‘எனக்கு ஒரு நாற்காலி போதுமே’ என்று சொல்லும் நாகினி உதவியாளரை நாற்காலியை எடுத்துச் செல்லச் சொல்கிறார். அவர் போனதும் பிராந்தியத் தலைவர் எழுந்து நிற்கிறார். நாகினி அதில் காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு அமர்கிறார்.

சொல்லுங்க என்ன பண்ணலாம்

நீங்கதான் சொல்லணும்.

சரி... பிரதமரோட நம்பிக்கை வாக்கெடுப்பு இன்னும் ஒரு வாரத்துல வரபோகுது. அவருக்கு உங்க கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தரணும். அணு ஒப்பந்தம் பத்தியும் ஆதரவா நீங்க பேசணும்.

எங்க கட்சியில அதுக்கு சம்மதிக்க மாட்டாங்களே...

அது பத்தி கவலைப்படவேண்டாம். சில அணு விஞ்ஞானிகள், வெளிநாட்டு தலைவர்கள் எல்லாரையும் கூப்பிட்டு பிரதமர் ஒரு கருத்தரங்கம் நடத்தபோறாரு. அதுல உங்க கட்சி ஆளுங்களோட போய் கலந்துக்குங்க. நீங்களா முடிவெடுத்ததா இல்லாம நிபுணர்களோட கருத்தைக் கேட்டு முடிவெடுத்ததுமாதிரி ஒரு ஃபிலிம் காட்டுங்க. நமக்கு ஏழைகள் நல்ல வாழணும் அதுதான லட்சியம். இந்த அணு உலை வந்தா நிறைய பேருக்கு வேலை கிடைக்கும். மின்சாரம் கிடைச்சா நிறைய தொழில் வளரும்னு சொல்லுங்க. நரம்பில்லாத நாக்குதான... என்ன வேணும்னாலும் சொல்லும். எப்படி வேணும்னாலும் வளையும் இல்லையா.

பிராந்தியத் தலைவர் நின்றபடியே தலையை அசைக்கிறார்.

*

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. பிரதமரின் ஆட்சி பிராந்தியத் தலைவருடைய கட்சியின் ஆதரவினால் பிழைத்துவிடுகிறது. ஒரு சில நாட்களில் அணு ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது. அனைவரும் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். நாகினி தன் அலுவலகத்தில் உதவியாளருடன் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது பிரதமரிடமிருந்து போன் வருகிறது.

எடுக்கிறார்.

உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என்று பிரதமர் சொல்கிறார். நாகினிக்கு தூக்கிவாரிப்போடுகிறது. அது அவருடைய மிரட்டல் வாக்கியம்.

பிரதமரை அவர் வரச்சொன்ன ஓய்வு விடுதிக்குப் பார்க்கப் போகிறார்.

வரவேற்பரையில் அமர்ந்து சிறிது நேரம் பேசிய பிறகு பின்பக்கத்தில் இருக்கும் ஒரு ரகசிய அறைக்கு நாகினியை அழைத்துச் செல்கிறார். அங்கு ஒரு கூண்டு இருக்கிறது. அதில் ஒரு மிருகம் உலவுவது தெரிகிறது. அந்த அறை மிகவும் இருட்டாக இருப்பதால் அந்த மிருகத்தின் கண்கள் மட்டும் பளபளவென மின்னுவது தெரிகிறது.

அதிக விஷயங்கள் தெரிஞ்சவர் உயிரோட இருக்கறது என்னிக்குமே ஆபத்துதான் என்று சிரித்தபடியே சொல்கிறார் பிரதமர்.

ஒரு நாட்டை ஆளணும்னா மூணு சிங்கங்கள் மட்டுமே போதாது. மறைஞ்சு திரியற இன்னொரு மிருகமும் தேவை. தேவைப்பட்டா அது கொலை கூடச் செய்யலாம் என்கிறார்.

நாகினி அதைக் கேட்டு அதிர்கிறார்.

உனக்கு நிறைய உண்மைகள் தெரிஞ்சிருக்கு நாகினி. அதோட மேலும் நிறைய தெரிஞ்சுக்கற ஆர்வமும் திறமையும் இருக்கு. அது ரொம்ப ஆபத்தானது.

நான் என் உளவுத் திறமையை நாட்டு நலனுக்காக மட்டுமே பயன்படுத்துவேன். தேச பக்தர்கள் என்னைப் பார்த்து பயப்படவேண்டிய அவசியமே கிடையாதே.

அது சரிதான். ஆனா தேசத்துக்கு எது நல்லதுன்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்ணு நினைக்கறோமே. நான் நல்லதுன்னு நினைக்கறதை நீ கெட்டதுன்னு நினைக்கலாம். நாளைக்கே என் கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்னு நீ என் வாசல்ல வந்து நின்னாலும் நிக்கலாம். இல்லையா... சரி... எனக்கு செஞ்ச உதவிக்கு ரொம்பவும் நன்றி. மீட் யூ இன் ஹெவன்... என்று சொல்லிவிட்டு பிரதமர் தன் கையில் இருக்கும் ரிமோட்டை அழுத்துகிறார். கூண்டில் இருந்து ஓநாய் ஒன்று மெள்ள பதுங்கிப் பதுங்கி வெளியே வருகிறது.

நாகினி அனிச்சையாக தன் இடுப்பில் பின் பக்கம் வைத்திருக்கும் துப்பாக்கியை எடுக்கப் போகிறார். அது இல்லைஎன்பது தெரிந்ததும் மெள்ள சுவரோரம் பதுங்குகிறார். அதைப் பார்த்து பிரதமர் புன்னகைக்கிறார்.

என்னைப் பாக்க வர்றவங்க என்னைக் கொன்னுடக்கூடாது. ஆனா என்னைப் பாக்க வர்றவங்களை நான் கொல்லலாம். தப்பில்லை என்று சொல்லி பிரதமர் அந்த சுரங்க அறையை மூடிவிட்டு வெளியே போகிறார்.

திடீரென்று உறுமலுடன் ஓநாய் பாயும் சத்தம் கேட்கிறது. சிறிது நேர சண்டைக்குப் பிறகு அமைதி திரும்புகிறது.

*

பிரதமர் தனது உணவை முடித்துவிட்டு சுரங்கத்தின் கதவைத் திறந்து விளக்குகளைப் போடுகிறார். அங்கு அவர் பார்க்கும் காட்சி அவரை அவரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. ஓநாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறது. அதன் கழுத்தில் புலியின் நகம் பதிந்த கையுறை காணப்படுகிறது. சுவரில் ரத்தத்தில் எழுதப்பட்டிருக்கிறது :

உங்க கூட கொஞ்சம் தனியாப் பேசணும். நேரமும் இடமும் சொல்லி அனுப்பறேன்.

நாகினி - 5

அடுத்ததாக நாகினி இடதுசாரித் தலைவரைப் பார்க்க மூன்றாவது மாடியில் இருக்கும் கட்சி தலைமை அலுவலகத்துக்கு தன் உதவியாளருடன் செல்கிறார். அங்கிருக்கும் தோழர் ஜன்னல் வழியாக கீழே எட்டிப் பார்த்து, ‘தோழர் உங்களைப் பார்க்க ஆள் வந்திருக்காங்க’ என்று கத்துகிறார். ‘வரச் சொல்லுங்க’ என்று பதில் வருகிறது. நாகினியும் உதவியாளரும் ஆச்சரியத்துடன் ஜன்னல் வழியாகப் பார்க்கிறார்கள். அங்கு கட்சி அலுவலகம் முன்னால் இருக்கும் சுவரில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருப்பவருக்கு ஏணியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார் தேசியத் தலைவர்!

நாகினியின் உதவியாளருக்கு அதைப் பார்த்ததும் ஒரே ஆச்சரியம். மாடிப்படிகளில் இறங்கிவரும்போது தன் ஆச்சரியத்தை உதவியாளர் வெளிப்படுத்துகிறார்.

பிற கட்சிகளின் வார்டு கவுன்சிலரே பத்து சுமோ முன்னாலயும் பின்னாலயும் வெச்சிட்டு பவனி வர்றாங்க. இங்க என்னடான்னா முக்கியமான தேசியக் கட்சியின் தலைவராக இருந்தும் இப்படி எளிமையாக இருக்கிறாரே.

பக்கத்துல எங்கயாவது வீடியோ கேமரா இருக்கான்னு பாரு.

அப்படி இல்லை சார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் நிஜமாவே எளிமையானவங்க. ரெண்டு வேட்டி, ரெண்டு சட்டை இதுதான் அவங்க சொத்தா இருக்கும். எங்க கூட்டம் நடந்தாலும் பஸ்லயும் ரயில்லயும் ஏன் தேவைப்பட்டா லாரில கூட போக ரெடியா இருப்பாங்க. கிடைச்ச இடத்துல துண்டை விரிச்சுட்டு படுத்துப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். கொள்கை மேல அவங்களுக்கு இருக்கற பிடிப்பு அப்படிப்பட்டது சார்.

தம்பி நீ இன்னும் நிறைய வளரணும்... இன்னிக்கு நாட்டுல அரசுத்துறைகள்ல இருக்கற எல்லா ஆடம்பரங்களையும் கூச்சமில்லாம அனுபவிக்கற ஒரே க்ரூப் இவங்கதான். எல்லா இடத்துலயும் உட்கார்ந்திருப்பானுங்க. தொழிற்சங்கம், அகடமிக் சர்கிள், மீடியான்னு இவங்க தான் எல்லாத்துலயும். அந்தக் காலத்துல பிராமணர்களுக்கு அரச தொடர்புகளும் சலுகைகளும் அளவுக்கு அதிகமா இருந்ததே அது மாதிரி இன்னிக்கு இடதுசாரிகள் இருக்காங்க. எங்கயுமே வேலையே செய்யாம சம்பளம் வாங்கறது.. எவ்வளவு வாங்கினாலும் பத்தாதுன்னு கொடி பிடிக்க வேண்டியது... மரத்தோட சத்து முழுவதையும் உறிஞ்சிடற ஒட்டுண்ணி வர்க்கம் இது. கேட்டா மக்களுக்காக போராடறோம்.. உரிமைக்காகப் போராடறோம்னு சொல்வாங்க. எங்கயாவது ஒரே ஒரு தொழிற்சாலையை இவங்க சொல்ற கொள்கைகளோட நடத்திக் காட்டியிருக்காங்களா... முதலாளிகிட்ட இருந்து பிடுங்கத்தான் தெரியுமே தவிர தானா எதையும் உருவாக்கிக் கொடுக்கத் தெரியாது. எளிமைனு சொல்றியே இந்த ஸ்பீஷிஸ் எல்லாம் வெளிய ஷோ காட்டத்தான். ஜுராஸிக் பார்க் பாத்திருப்பியே. சாது டைனசர் எல்லாம் வெளில இருக்கும் பின்னால இருக்கறது எல்லாம் பல தரப்பட்ட கொடூர டைனசர்கள். நீ எளிமையானவர்ன்னுசொன்னியே இவரோட வண்டவாளம் என்னன்னு அவர் கிட்ட நான் பேசும்போது நீயே தெரிஞ்சுப்ப பாரு.

இருவரும் சுவரெழுத்து எழுதப்படும் இடத்தை அடைகிறார்கள்.

லால் சலாம் காம்ரேட் என்கிறார் நாகினி கம்யூனிஸ்ட் தலைவரைப் பார்த்து.

லால் சலாம் காம்ரேட் என்று பதில் வணக்கம் சொல்கிறர் தலைவர்.

உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் காம்ரேட்.

வாங்க டீ குடிச்சிட்டே பேசுவோம்.

எனக்கு காஃபி கிடைக்குமா என்கிறார் நாகினி.

அது பூர்ஷ்வா பானமாச்சே.

அந்த காபி பயிர்களும் நம்ம பாட்டாளிகளோட வேர்வையும் குருதியும் பாய்ஞ்சுதானே பயிராகுது காம்ரேட்.

ஆமாம் ஆமாம் அது சரிதான் என்று சிரிக்கிறார் காம்ரேட்.

பானங்களைக் குடித்துவிட்டு கட்சி அலுவலகத்துக்கு அழைத்துப் போகிறார்.

என்ன விஷயம் சொல்லுங்க.

இந்த அணு ஒப்பந்தம் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க.

அது நம்ம நாட்டுக்கு அவசியமே இல்லை தோழர்.

எப்படி சொல்றீங்க. மின்சாரம் தேவைதான.

மின்சாரம் தேவைதான். இல்லைன்னு சொல்லலியே அணு மின்சாரம் தான் வேணுமா? காற்றாலை, சூரிய சக்தின்னு எவ்வளவோ எளிய வழிகள் இருக்கே.

அதுல எல்லாம் கொஞ்சம் தான தோழர் கிடைக்கும். அதுவும் கொஞ்ச மின்சாரம் கிடைக்க நிறைய ஏக்கர் நிலத்தை வளைச்சுப் போடவேண்டியிருக்கும்.

அதெல்லாம் தப்பான பார்வை. பெரிய மின் உற்பத்தி மையம் எதுக்காக தேவை. அந்தந்த மாவட்டத்துக்கான மின்சாரத்தை அங்க அங்க உருவாக்கினாலே போதுமே. ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டுபோறதுல வர்ற மின் இழப்பையும் தவிர்க முடியும். நிறைய ஏக்கர்களை வளைக்கவேண்டிய அவசியமும் இல்லை. சூரிய மின்சாரத்தோட வசதியே அதுதான். எல்லாத்துக்கும் மேல அணு மின்சாரம் மாதிரி எந்த அபாயமும் இதுல இல்லை.

அணு மின்சாரத்துல என்ன அபாயம் இருக்கு?

அணு உலை வெடிச்சா அந்த மாவட்டமே காலியாகிருமே தோழர்.

ஆனா, இந்தியால இதுவரை 22 அணு உலை இருக்கு. எதுவுமே வெடிக்கலையே... சுமார் 30 வருஷத்துக்கு மேல நல்லாத்தான இயங்கிட்டு வருது. செர்னோபில் மாதிரியான விபத்தெல்லாம் இனிமே சாத்தியமே இல்லைன்னுதான சொல்றாங்க. அதைச் செஞ்சும் காட்டியிருக்காங்களே.

அது சரிதான் தோழர். ஆனா எப்போ என்ன நடக்கும்னு சொல்ல முடியாது. ஒருவேளை அப்படி ஏதாவது நடந்தா எத்தனை உயிர் போகும் அதை நினைச்சுப் பாருங்க. அப்படி அபாயமான ஒரு தொழில்நுட்பம் நமக்கு எதுக்கு. உலகத்துல்ல பெரும்பாலான நாடுகள்ல அணு மின் சாரத்தை வேண்டாம்னுதான் சொல்றாங்க. அப்படியே அணு உலையை வெச்சிருக்கற நாடுகள் கூட அந்த உலைக்கு பத்து மைல் சுற்று வட்டாரத்துல மக்கள் யாரையும் வசிக்க விடறதில்லை. ஏதாவது பிரச்னைன்னா குறைவான இழப்போட அங்க தப்பிச்சிட முடியும். ஜப்பான்ல கூட பாருங்க... சுனாமினால அணு உலை பாதிக்கப்பட்டபோது பெரிய இழப்பு எதுவும் வரலையே... நம்ம ஊர்ல அப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் கிடையாது. அணு உலை நிறுவனத்தோட காம்பவுண்டை ஒட்டியே மக்களும் வசிக்கறாங்க. நம்ம நாடு அணு உலைக்கானது இல்லை தோழர். அதெல்லாம் மக்கள் தொகைகுறைவான ஊர்களுக்குத்தான் சரிப்பட்டு வரும்.

இது எல்லாமே சரி... ஆனா அணு ஆயுதம் அப்படிங்கறது நமக்கு இன்னிக்கு மிகவும் தேவையானதுதான.

அப்படி வாங்க தோழர்... அணு மின்சாரம் ஒரு விஷயமே இல்லை... அணு ஆயுதம் தான் நம்ம நோக்கமே. அதனாலதான் அதை எதிர்க்கவும் செய்யறோம்.

பாகிஸ்தானும் சீனாவும் நம்மளைப் பார்த்து கொஞ்சம் பயப்படணும்னா நம்ம கைல அது இருந்துதானே தீரணும். நம்ம கிட்ட அணு ஆயுதம் இருக்கா இல்லையாங்கறது கூட முக்கியமில்லை. இருக்குமோன்னு எதிரி பயப்படணும். அப்பத்தான நமக்கு பாதுகாப்பு. அப்பத்தான் நம்மகிட்ட நட்பா இருப்பான்.

அணு ஆயுதத்தைக் காட்டி வர்ற நட்பைவிட அன்பைக் காட்டி வர்ற நட்புதான் பலன் தரும்.

ஸ்கூல் கட்டுரையையெல்லாம்வெச்சு நாட்டை ஆள முடியாது தோழர். தேச நலன் என்பது கொஞ்சம் கெட்ட காரியங்களையும் செய்யச் சொல்லும் தோழர்.

அரசாங்கம் தன் செய்யற எல்லாமே நாட்டு நலனுக்காகச் செய்யறதா சொல்லும். அதை எதிர்க்கறவங்களை எல்லாமே தேச விரோதிகள்னு சொல்லும்.

அது சரிதான். ஆனா, நியாயம், உண்மை அப்படிங்கறது ஒருத்தர் பக்கம் மட்டும்தான் இருக்கும். இல்லையா..? சரி...எனக்கு ஒரு சின்ன விஷயம் சொல்லுங்க... சிக்மா ஃபார்ம் ஹவுஸுக்கு எப்படிப் போகணும்..?

தோழர் திடுக்கிட்டு பின் சட்டென்று சுதாரிக்கிறார்.

சிக்மா ஃபார்மா..? அது எங்க இருக்கு?

அட்ரஸ் தெரியும்... எப்படிப் போகணும்னுதான் கேக்கறேன்.

அவங்களுக்கு போன் போட்டு கேளுங்க காம்ரேட்.

நாகினி ஒரு போனை எடுத்து நம்பரை அழுத்துகிறார். தோழரின் செல் ஒலிக்கிறது. அவர் யாரோ என்று நினைத்து எடுத்துப் பேசுகிறார்.

முன்னால் இருந்தபடியே நாகினி, ‘ஹலோ சிக்மா ஃபார்ம் ஹவுஸா’ என்கிறார்.

தோழருக்கு லேசாக பயம் வருகிறது.

நாகினி, சிக்மா ஃபார்ம் ஹவுஸின் முகவரியைச் சொல்கிறார்.

தோழர் லேசாக நடுங்கத் தொடங்குகிறார்.

போனை அணைத்துவிட்டு பேசுகிறார். சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அந்த இடத்தோட உரிமையாளர்கிட்ட கேளுங்க தோழர் சொல்லுவாங்க.

அதான் உங்க கிட்ட கேட்கறேன் தோழர் என்கிறார் நாகினி.

நானா... அந்த ஃபார்ம் ஹவுஸுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே...

அப்படித்தான் அரசாங்க ஆவணங்கள்லயும் பதிவாகியிருக்கு. ஆனால், அதனோட உரிமையாளர் உங்களோட ஃபினாமின்னு சொல்றாங்களே...

யார் சொன்னா?

அந்த ஃபினாமியேதான்.

உங்களுக்கு தப்பான தகவல் கிடைச்சிருக்கு.

இந்த நாகினியோட குறி என்னிக்குமே தப்பாது தோழர்.

நாகினி என்ற பெயரைக் கேட்டதும் தோழருக்குத் தூக்கிவாரிப்போடுகிறது.

பிறகு சுதாரித்து, அது நீங்கதானா... உங்களைப் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். பாக்கறது இப்பத்தான் முதல் தடவை.

நாகினியைப் பத்தி நிறைய கேள்விப்படலாம். அதை நேர்ல பார்த்தா ரொம்ப ஆபத்து தோழர். அந்த ஃபினாமி என்ன சொன்னார்ன்னா, நீங்க ஒரு வருசத்துக்கு முன்னால ஒரு கார்பப்ரேட் கம்பெனியை எதிர்த்து நடத்தின வீரம் செறிந்த போராட்டம் உண்மையிலயே இன்னொரு கார்ப்பரேட் கம்பெனிக்கு உதவறதாகத்தான் செஞ்சதா சொல்றாரு உண்மையா..?

மடத்தனமான பேச்சு.

அந்த ஃபார்ம் ஹவுஸ் கூட உங்களுக்கு அதுக்கான அன்பளிப்பா கிடைச்சதுன்னும் சொன்னாரு.

பொய்யான அவதூறு.

எல்லா ஆதாரமும் எங்க கிட்ட இருக்கு காம்ரேட். நீங்க மேற்கொண்ட வேற ஒரு போராட்ட நடைபயணத்தின்போது எந்த கிராமத்துல அந்த கார்ப்பரேட் கம்பெனிக்காரங்க உங்களை வந்து சந்திச்சாங்க... என்னவெல்லாம் பேசினாங்க... ஃபார்ம் ஹவுஸ் எப்படி கை மாறினது எல்லாம் எங்க கிட்ட இருக்கு தோழர். வேற ஒண்ணும் இல்லை. எந்த கார்ப்பரேட் கம்பெனி உங்களுக்கு எல்லாம் கொடுத்துச்சோ அவங்களேதான் எல்லாத்தையும் எங்ககிட்ட கொடுத்திருக்காங்க. முதலாளிங்களை எப்படி தோழர் இப்படி நம்பினீங்க. அவங்க உங்களைக் கவுக்க போட்ட பிளான் அது.

இதை நான் நம்பமாட்டேன். நான் மட்டுமில்லை யாருமே நம்பமாட்டாங்க.

அப்படின்னு நீங்க நினைக்கறீங்க... எல்லாரும் நம்புவாங்க தோழர். அதுவும் இதுமாதிரி லட்டு நியூஸ் கிடைச்சா வெச்சு சாத்திருவாங்க காம்ரேட்.

என் கட்சி என்னைக் கைவிடாது. ஏன்னா, இது கட்சிக்குத் தெரிஞ்சு நடந்த டீல்தான்.

அதெல்லாம் விஷயம் வெளிய வராம இருக்கறவரைதான். மாட்டிக்கிட்டா கட்சி உங்களை யாருன்னே தெரியாதுன்னு சொல்லிடும். உங்களோட 40 வருஷம், மூணு மாசம், 11 நாட்கள் கட்சிக்காக நீங்க செஞ்ச எல்லா தியாகமும் ஒரு நொடில தூக்கி எறியப்பட்டுவிடும்.

தோழருக்கு வேர்த்து ஊற்றுகிறது.

இப்ப நான் என்ன செய்யணும் என்று மென்றுமுழுங்கிக் கேட்கிறார்.

வேற ஒண்ணும் செய்யவேண்டாம். அணு ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவியுங்க.

அதைக் கேட்டதும் அதிர்கிறார் தோழர்.

வாய்ப்பே இல்லை... கட்சி என்னைக் கொன்றே போட்டுவிடும்.

ஃபார்ம் ஹவுஸ் பத்தின செய்தி தெரிஞ்சா என்ன பண்ணும்?

நாகினியின் உதவியாளர், ‘அப்பயும் கொல்லத்தான் செய்யும்’ என்கிறார்.

நாகினி உதவியாளரை ஒருகணம் மேலும் கீழும் பார்க்கிறார்.

தோழர்... இவர் கொஞ்சம் போல இடதுசாரி ஆதரவு உள்ளவர். எளிய தொண்டர். இந்த கேஸ் விஷயத்தை அதனாலதான் இவர் கிட்டயே இதுவரை சொல்லலை. இவர் சொன்னா அது நிஜமாத்தான் இருக்கும்.

கம்யூனிஸ்ட் தலைவர் செய்வதறியாமல் தவிக்கிறார்.

பொதுக்குழு கூடித்தான் எந்த முடிவையும் எடுக்க முடியும்.

நல்லது. ஜனநாயகம்ங்கறது அதுதான். அப்படித்தான் இருக்கணும். நாட்டு நலன் தானே நமக்கு முக்கியம். ஆனா கட்சிக்கு கட்சிநலனும் முக்கியம். கட்சித் தலைவருக்கு அவரோட நலன் அதைவிட முக்கியம் இல்லையா.

யோசிச்சு பதில் சொல்றேன்.

இனிமே யோசிக்க இதுல என்ன இருக்கு தோழர். அதெல்லாம் ஃபார்ம் ஹவுஸை வாங்கறதுக்கு முன்னால யோசிச்சிருக்கணும். சரி... அமெரிக்கா கெட்ட நாடுதான்... அணு மின்சாரம் தப்புத்தான். ஆனாலும் இன்றைய நிலைல வேற வழியில்லை. அடுத்த கட்ட உலைகளை ரஷ்யாகிட்ட இருந்துதான் வாங்கறதா அரசுதரப்புல சொல்லியிருக்காங்கன்னு ஏதாவது சொல்லி கட்சியை சமாளிங்க. மக்கள்கிட்ட செல்வாக்கு குறைஞ்சிடுமேங்கற பயம் உங்களுக்கு தேவையே இல்லை இல்லையா...

தோழர் பெருமூச்சுவிடுகிறார்.

நாகினி விடைபெற்றுக் கொள்கிறார்.

புறப்படும்முன் லால் சலாம் என்று ஹிட்லருக்கு சல்யூட் வைப்பதுபோல் வைக்கிறார்.

தோழர் பதில் சொல்லாமல் இருக்கிறார்.

நாகினி சல்யூட் வைத்த கையை இறக்காமல் இருக்கவே, தோழர் தயங்கியபடியே, லால் சலாம் என்று பதில் வணக்கம் வைக்கிறார்.

நாகினி சிரித்தபடியே விடைபெறுகிறார்.

*

நாகினி - 4

இதனிடையில் அமெரிக்கத் தரப்பில் ஒப்பந்தத்தை சீக்கிரம் முடிக்கச் சொல்லி கெடு விதிக்கிறார்கள். ஏனென்றால், நாலைந்து மாதங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிறது. அதில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுபவர் இந்தியாவுடனான அணு வர்த்தகத்தை விரும்பவில்லை. எனவே, இந்த அதிபர் இருக்கும்போதே ஒப்பந்தத்தை முடித்தாக வேண்டும். அதற்கு ஒப்பந்தத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் கையெழுத்திட்டாகவேண்டும். பிரதமரின் உதவியாளர் நாகினியை அழைத்து வேலையைச் சீக்கிரம் முடிக்கச் சொல்கிறார். நாகினியோ உள்துறை அமைச்சரைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது சிரமமாக இருக்கிறது. இப்போது ஆளும்கட்சியாக இருப்பதால் அவரை வீழ்த்துவது கடினம். கொஞ்ச கால அவகாசம் வேண்டுமென்கிறார். உதவியாளரோ அமெரிக்க நெருக்கடியைச் சொல்லி வேலையைத் துரிதப்படுத்தச் சொல்கிறார்.

நாகினி தன் உதவியாளருடன் அமர்ந்து ஆலோசிக்கிறார். அவர் எந்தப் பொறில மாட்டியிருக்கார்ங்கறது தெரியாம நாம எதுவுமே பண்ணமுடியாதே என்று நாகினி தன் உதவியாளரிடம் சொல்கிறார்.

அப்போ நம்ம பொறில மாட்ட வைக்க வேண்டியதுதான் என்கிறார் உதவியாளர்.

நாகினி உதவியாளரை, என்ன என்பதுபோல் பார்க்கிறார்.

தி எவர் க்ரீன், எடர்னல், எவர் வின்னிங் ஹனி டிராப்.

நாகினி மெள்ளச் சிரிக்கிறார்.

அதுல நமக்கு ஒரு கிக்கே இருக்காதே ப்ரோ என்கிறார்.

அவருக்கு இருக்கும் இல்லையா... அது போதும். நமக்கு அவர் செய்யப் போற உதவிக்கு அந்த நல்லதையாவது நாம செய்யணும் இல்லையா.

அது சரி...

அதுவும் போக நமக்கு டைம் இல்லை. இருந்தா நிதானமா ஸ்கெட்ச் போடலாம்.

ஓ.கே. கோ அஹெட் என்று அனுமதி தருகிறார்.

உள்த்துறை அமைச்சருக்கு மூட்டுவலி வருகிறது. நாகினியின் ஆள் மூலமாக ஆயுர்வேத மசாஜ் செய்துகொள்ளும்படி அவருக்கு ஆலோசனை சொல்லப்படுகிறது. அவரோ இந்திய பாரம்பரிய வழிமுறைகள் மேல் வெறுப்பு கொண்டவர். எனவே மறுத்துவிடுகிறார். வெஸ்டர்ன் ஸ்பாவுக்குச் செல்ல சம்மதிக்கிறார். அமைச்சரின் காட்டு பங்களாவுக்கு நாகினி தன் ஆளை அனுப்புகிறார். அவர் மின்சாரப் பணியாளர்போல் அங்கு போய் அமைச்சரின் வீட்டில் சி.சி.டி.வி.கேமரா ஒன்றை பொருத்துகிறார். சில நாட்கள் கழித்து அமைச்சர் ஓய்வெடுக்க அங்கு செல்கிறார். நாகினி ஸ்பாவில் இருந்து ஒரு பெண்ணை அழைத்து அங்குபோகச் சொல்கிறார். நான் அழைக்கவில்லையே என்று அமைச்சர் சொல்கிறார். இத்தனை தூரம் வந்துவிட்டேனே லேசாக சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்டுப் போகிறேன் என்று அந்தப் பெண் சொல்கிறார். சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டிருக்கும் அறையில் போடப்பட்டிருக்கும் டேபிளில் படுத்துக்கொள்கிறார். அன்று மசாஜ் புதிய பரிமாணங்களில் செய்யப்படுகிறது.

அது முடிந்த சில நாட்கள் கழிந்த பிறகு அந்த அமைச்சரை ஒரு பொது விழாவில் சந்தித்து, உங்களைக் கொஞ்சம் தனியா பார்த்துப் பேசணும் என்கிறார் நாகினி.

நீங்க யாரு... என்ன விஷயமா பார்க்கணும். என் பி.ஏ.கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு ஆபீஸ்லவந்து பாருங்க என்கிறார்.

இல்லை உங்களைத் தனியா பார்க்கணும். கட்சி ஆபீஸோ அமைச்சகமோ சரிப்படாது. நான் சொல்ற இடத்துக்கு நீங்க வாங்க என்கிறார் நாகினி.

அமைச்சருக்கு லேசாகக் கோபம் வருகிறது. பொது இடம் என்பதால் கண்ணியமாக நடந்துகொள்ள முயற்சி செய்கிறார்.

ஹலோ மேடம்... நீங்க யாரு... உங்களுக்கு என்ன வேணும்?

நீங்கதான் வேணும்.

அமைச்சர் முடியாது என்று சொல்லவே, ‘சரி உங்ககூட ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா’ என்று கேட்கிறார். வேண்டாம் என்று சொன்னால் அவுட் டேட்டட் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்ந்து, அமைச்சர் சிரித்தபடியே போஸ்கொடுக்கிறார். நல்லா பதிவாகியிருக்கான்னு பாருங்க என்று நாகினி செல்லைக் காட்டுகிறார். அதில் காட்டு பங்களா மசாஜ் காட்சிகள் துல்லியமாகத் தெரிகின்றன.

அமைச்சருக்கு வேர்த்து ஊற்றுகிறது.

நாளைக்கு காலைல எட்டு மணிக்கு வீட்ல ரெடியா இருங்க. கார் அனுப்பறேன் என்கிறார் நாகினி.

அமைச்சர் பேயறைந்ததுபோல் தலையை ஆட்டுகிறார்.

மறுநாள் கார் வருகிறது. அமைச்சர் ஏறிக் கொள்கிறார்.

நான் நேரடியா விஷயத்துக்கு வர்றேன். அமெரிக்கத் தரப்புல அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகணும்னு விரும்பறாங்க... நீங்க அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது.

அது வந்து... எங்க கட்சியோட முஸ்லீம் வோட் பேங் அமெரிக்கா கூட ஒப்பந்தம் வைச்சுக்கறதை விரும்பலை...

அப்படின்னு நீங்க சொல்றீங்க...

இல்லை அது உண்மைதான்.

முஸ்லிம்களுக்கு அமெரிக்கா செய்யற அத்துமீறல்கள்தான் பிடிக்காது. அமெரிக்காவே பிடிக்காதுன்னு இல்லையே.

நான் இப்போ இதுக்கு சம்மதம் சொன்னா அவங்க முகத்துல முழிக்கவே முடியாது.

இந்த வீடியோ வெளியானா இந்த நாட்டுலயே யார் முகத்துலயும் முழிக்க முடியாது... இன்னொன்னு தெரியுமா அந்தப் பொண்ணு யாரு தெரியுமா என்று வீடியோவைக் காட்டுகிறார். அந்தப் பெண் மசாஜ் முடிந்த பிறகு பர்தாவை எடுத்து அணிந்துகொள்ளும்காட்சி அதில் இடம்பெற்றிருக்கிறது.

அந்தப் பொண்ணு முஸ்லீமா..?

யாருக்குத் தெரியும். கேமராவுக்கு முன்னால அந்த டிரெஸ்ஸைப் போட்டுக்கோம்மான்னு சொன்னேன். செஞ்சா. ரூமை விட்டு எளிய வந்ததும் ஒரே கச கசன்னு இருக்குன்னு சொல்லி கழட்டிட்டா... சரி... நல்லா யோசிங்க... ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவிச்சு இன்னும் நாலைஞ்சு நாள்ல உங்கல் பேர்ல ஒரு அறிக்கை வந்தாகணும் என்று சொல்லிவிட்டு அமைச்சரை நாடாளுமன்றத்தில் இறக்கிவிடுகிறார்.

அமைச்சர் புறப்படும்போது நாகினி காருக்குள் இருந்தபடியே, இன்ஷா அல்லாஹ் என்கிறார்.

அமைச்சர் எதுவும் சொல்லாமல் அவரையே பார்க்கிறார்.

நாகினி இரண்டாவதுமுறையாக அதைச் சொல்கிறார். இந்தமுறை அது மிரட்டலாக ஒலிக்கிறது.

அமைச்சர் பதறியபடியே மாஷா அல்லாஹ் என்கிறார்.

கார் அமைச்சரின் உடையில் கரும் புகையை உமிழ்ந்தபடி புறப்பட்டுச் செல்கிறது.

அடுத்த நாளே அணு ஒப்பந்தத்தின் அவசியம் பற்றி பிரபல செய்தித்தாளில் அமைச்சரின் பெயரில் கட்டுரை வெளியாகிறது.

***

நாகினி - 3

அடுத்ததாக, முக்கியமான தொலைகாட்சி நிறுவனத்தின் தலைவரிடம் விளம்பர ஏஜென்ஸியின் பிரதிநிதி என்று சொல்லியபடி அறிமுகப்படுத்திக்கொள்கிறார் நாகினி.

பிரதமருடைய அணு ஒப்பந்தத்தை வாழ்த்தி வரவேற்று வணங்கி விளம்பரப்படுத்தும் வாசகங்கள் அச்சிடப்பட்ட விளம்பர பிரசுரத்தைக் கொடுக்கிறார். கொடுத்துவிட்டு அந்த விளம்பரத்தின் காட்சிகள் எப்படி இருக்கவேண்டும் என்று நாகினி விவரிக்கிறார்:

மின்சார வசதி இல்லாத குக்கிராமத்தில் சிறுவர்கள் மண்ணெணெய் விளக்கில் கஷ்டப்பட்டுப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். பெரிய தொழிற்சாலைகள் பவர் ஷட்டவுனினால் ஓடாமல் மூடிக் கிடக்கின்றன. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடக்கும் நேரத்தில் மின்சாரம் போய்விடுகிறது. ஜெனரேட்டரைப் போடுங்க என்று பதறுகிறார் டாக்டர். இம்புட்டு நேரம் கரண்ட ஓடினதே ஜெனரேட்டர்லதான் என்கிறார் நர்ஸ். டாக்டர் அதிர்ச்சியில் உறைகிறார். நீர் மின்சார அணைகள் வறண்டு கிடக்கின்றன. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் சோகமாக அமர்ந்திருக்கிறார்கள் அவர்களுக்கு முன்னால் அகல் விளக்குகள் மங்கலாக இறுதிச் சொட்டை உறிஞ்சியபடி எரிந்து கொண்டிருக்கின்றன. இப்படியான நேரத்தில் பிரதமர் காலைச் சூரியனை எதிர்பார்த்து கை கூப்பி நிற்கிறார். மேகக்கூட்டம் சூரியனை மறைத்து நிற்கிறது. புரோகிதர் கணீர் குரலில் சொல்கிறார்: மேற்குப் பக்கம் திரும்புங்கோ... பிரதமர் திரும்புகிறார்.

பனி மூட்டத்தினூடே அமெரிக்க வல்லாதிக்க தேவி சிலை வானுயர உயர்ந்து நிற்கிறது. முழு காட்சியும் சாம்பல் நிற பனி மூட்டமாக இருக்க வல்லாதிக்க தேவி கையில் இருக்கும் டார்ச் மட்டும் பொன்னிறமாய் எரிகிறது. அதில் இருந்து பளிச்சென்று ஒரு மின்னல் வெட்டுகிறது. கிழக்கு திசை சூரியன் ஒளி பெறுகிறது. அதன் ஒளி பெற்று குக்கிராம குடிசையில் எல்.இ.டி. விளக்குகள் எரிகின்றன. குழந்தைகள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள். தொழிற்சாலை எந்திரங்கள் பெரும் சத்தத்துடன் ஓடத் தொடங்குகின்றன. டாக்டர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடிக்கிறார். நாடாளுமன்றம் ஒளி வீசுகிறது. சூம்பிக் கிடந்த இந்திய தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. அந்தக் கம்பத்தின் மேல் ஒரு கழுகு கம்பீரமாக வந்து அமர்கிறது என்று சொல்லிவிட்டு நாகினி கேட்கிறார். இதேப்டி இருக்கு?

தொலைகாட்சி நிறுவனர் நாகினியை மேலும் கீழும் பார்க்கிறார். நல்லா இருக்கு... எந்த டி.வி.ல ஒளிபரப்பப்போறீங்க...

சட்டென்று நாகினிவின் முகம் மாறுகிறது. பிறகு மெள்ள சமநிலைக்குத் திரும்பி லேசாகப் புன்னகைக்கிறார்... இந்தியாவின் நம்பர் ஒன் தொலைகாட்சியில்தான் என்கிறார்.

அதை நான் தான முடிவு பண்னணும்.

தேவையே இல்லை நான் சொன்னாலே போதும்.

யு நோ... ஐ ஆம் தி பாஸ் ஆஃப் திஸ் கம்பனி. எனக்கு இருக்கற செல்வாக்கை வெச்சு என் சேனல்ல மட்டுமில்லை. இந்த உலகத்துல எந்த சேனல்லயுமே இந்த விளம்பரம் வராம தடுக்க முடியும். ஏதாவது டப்ஸ்மாஷ் இல்லைன்னா யு ட்யூப்ல போட்டு பார்த்துக்கோ... பட் ஒன் திங்; நல்ல க்ரியேடிவா இருக்கு... வேணும்னா ஒண்ணு செய்யேன்... எங்களுக்கு இது மாதிரி ஏதாவது விளம்பரம் தயாரிச்சுக் கொடேன்.

உங்க பாராட்டுக்கு நன்றி. ஆனா எனக்கு உங்க சேனல்ல, பிரம் டைம்கள் எல்லாத்துலயும், எல்லா பிரைம் நிகழ்ச்சிகளுக்கு முன்னாலயும் இந்த விளம்பரம் ஒரு நாள் இல்லை... அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகற வரை ஒளிபரப்பாகணும்.

சேனல் நிர்வாகி நிதானமாக, ‘வாசல் அங்க இருக்கு’ என்று சொல்லி போனை எடுத்து இண்டர்காமில் உதவியாளரை அழைக்கப் போகிறார்.

நாகினி நிதானமாக, ‘சிலுவை ராஜை கொஞ்ச நாள் முன்னால பார்த்தேன்’ என்கிறார்.

அந்தப் பெயரைக் கேட்டதும் சேனல் நிர்வாகி சட்டென்று ஸ்தம்பிக்கிறார்.

‘ஆபரேஷன் நேவி’ என்று நிதானமாக உச்சரிக்கிறார் நாகினி.

சேனல் நிர்வாகிக்கு லேசாக வியர்க்கிறது.

பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல... அவனோட போனுக்கு ஒரு லைட்னிங் கால் போடுங்க பாஸ்...

நிர்வாகி தயங்கியபடியே நாகினியைப் பார்க்கிறார்.

போடுங்க பாஸ் போடுங்க...

நிர்வாகி அந்த எண்ணுக்கு போன் செய்கிறார்.

எதிர்முனையில் சிலுவை ராஜ் போனை எடுக்கிறான்.

பதறியபடியே சார் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. சி.பி.ஐ. க்கு விஷயம் தெரிஞ்சு போச்சுன்னு தோணுது. நானே உங்களுக்கு போன் செய்யலாம்னு நினைச்சேன். என் போனை டேப் பண்றாங்களோன்னு சந்தேகம். நேர்ல வந்து சொல்லலாம்னு தான் பேசலை.

சி.பி.ஐ.யா..?

ஆமாம் சார்... ஒத்தைக்கண்ணி ஒருத்தி. நம்ம ஆளுங்க கிட்ட இருந்து உண்மையை கறந்துட்டா.

ஒத்தைக் கண்ணியா..

நாகினி தன் கூலிங் கிளாஸைக் கழட்டுகிறர். அவருக்கு ஒரு கண் இல்லை.

நாகினி சைகையால் போனை கட் பண்ணச் சொல்கிறார்.

நிர்வாகி, சரி அப்பறம் பேசறேன் என்று சொல்லி போனை வைக்கிறார்.

சரி இப்ப சொல்லுங்க... இந்த கம்பெனிக்கு நீங்க பாஸ்... உங்களுக்கு யார் பாஸ்..?

சிலுவை உங்க கிட்ட என்ன சொன்னான்.

எல்லாத்தையும் சொன்னான்.

வாய்ப்பே இல்லை...

பாஸ்... பத்து லட்சத்துக்கு உங்களுக்காக ஒரு வேலை செய்வான்னா பதினோரு லட்சத்துக்கு எனக்காகவும் ஒரு வேலையை அவன் செய்வான் இல்லையா..?

மாட்டினா அவனும்தான் ஜெயில்ல களி திங்கணும்.

அதுதான் இல்லையே... அவனை நான் கேஸ் ஃப்ரேம்லயே கொண்டுவர மாட்டேனே...

அவனுக்கும் அதுல பங்கு இருக்குங்கறதுக்கான ஆதாரங்கள் என் கிட்ட இருக்கு.

அது எனக்குத் தேவையில்லை. உன்னைப் பத்தின நியூஸ் மொதல்ல வெளில வரும். நீ ஜெயிலுக்குப் போவ. நீ அவனையும் மாட்டிவிட்டா அவனை நாங்களே எங்க கஸ்டடிக்குக் கொண்டுவந்து காணவே இல்லைன்னு சொல்லி ராஜ வாழ்க்கை வாழ வைப்போம். அவன் ஒரு தீவு பேரெல்லாம் சொல்லியிருக்கான். அங்க கொண்டுபோய் ஜாலியா சாகறவரை பாத்துக்கறோம்னு சொல்லியிருக்கோம். அதைச் முழுசாச் செய்யப்போறதிலைன்னு வெச்சுக்கோ... அது வேற விஷயம். நம்ம மேட்டருக்கு வா. உன்னை ஜெயிலுக்கு அனுப்பறதுக்காக நான் இங்க வரலை. நான் வந்தது இந்த அணு ஒப்பந்தத்துக்கு ஆதரவா நியூஸ் போடவைக்கத்தான். வேணும்னா நடுநிலைன்னு காட்டிக்க மாற்றுக் கருத்தையும் போடு பரவாயில்லை. உண்மையில நீயாவே அதைச் செஞ்சிருக்கணும். செய்தி ஊடகம் அப்படிங்கறது செய்தியைத் தர்றதுதான். எல்லா தரப்பு செய்திகளையும் நீ கொடு. மக்கள் எது சரி எது தப்புன்னு முடிவெடுத்துக்கட்டும். நீயா ஏன் சைடு எடுக்கற. உன்னை நல்லவனா நடக்கவைக்க நான் கெட்டவளாக வேண்டியிருக்கு பாரு... வேறென்ன கலிகாலம். நல்லதுக்கும் காலமில்லை... நல்லவங்களுக்கும் காலமில்லை.

அப்போது இண்டர் காம் ஒலிக்கிறது. நிர்வாகி எடுக்கவா என்று நாகினியிடம் கேட்கிறார். நாகினி, ஸ்பீக்கர்ல போடு என்கிறார்.

அணு ஒப்பந்தம், அமெரிக்க உறவு, பிரதமர் மீதான மக்களின் மதிப்பு என கருத்துக் கணிப்பு நடத்தியிருந்திருக்கிறார்கள். அதன் ரிப்போர்ட் கொண்டுவரவா என்று ஆசிரியர் கேட்கிறார். நாகினி வரச் சொல்லும்படிச் சொல்கிறார்.

ஆசிரியர் வந்து கொடுத்துவிட்டுச் செல்கிறார். அவர் போனதும் நாகினி அதை எடுத்துப் பார்க்கிறார். இரண்டு ரிப்போர்ட்கள் இருக்கின்றன.

என்ன இரண்டு ரிப்போர்ட்கள் இருக்கின்றன என்று கேட்கிறார்.

சேனல் நிர்வாகி தயங்கியபடியே, ஒண்ணு ஒரிஜினல்... இன்னொண்ணு நாங்க ஒளிபரப்ப வேண்டியது.

நாகினி எரிச்சலுடன் பெருமூச்சுவிடுகிறார்.

உண்மையில் அணு ஒப்பந்தத்துக்கும் பிரதமருக்கும் இந்திய அமெரிக்க உறவுக்கும் ஆதரவாகவே மக்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், சேனல் ஆசிரியர் அதை அப்படியே தலைகீழாக மாற்றியிருக்கிறார்.

ஸீ... நான் உன்னை பொய் சொல்லச் சொல்லலை. உண்மையைச் சொல்லுன்னுதான் சொல்றேன். நீ கெட்டவனாகி என்னை மாதிரி நல்லவங்களையும் ஏண்டா கெட்டவங்களாக்கற. ஒரு நாட்டை ஆள்றது அரசியல்வாதிங்க இல்லை... அதிகாரவர்க்கம் இல்லை... உங்களை மாதிரியான மீடியா ஒபீனியன் மேக்கர்ஸ்தான்ங்கறது எவ்வளவு கேவலமான விஷயம். காசுக்காகவும் உங்களோட அரசியல் குறுக்கு புத்திக்காகவும் நாட்டோட சரித்திரத்தையே எழுதறவங்களா ஆகிடறீங்களே... இது எவ்வளவு பெரிய அபாயம். கடற்படைங்கறது மீனப் பெண்ணைக் கற்பழிக்குது... அப்பாவிங்களைக் கொல்லுதுன்னுதான சரித்திரம் பதிவாகியிருக்கு... திஸ் ஈஸ் வெரி வெரி அட்ராஷியஸ்.

சீனாலயும் இஸ்லாமிய நாடுகள்லயும் ஊடக சுதந்தரம் இல்லை... ஜனநாயகம் இல்லைன்னு சொல்றாங்க. உங்களை மாதிரி ஆளுங்க இந்தியா தர்ற சுதந்தரத்தையும் ஜனநாயகத்தையும் பயன்படுத்தி செய்யற அட்டூழியங்களைப் பார்க்கும்போது எதுவுமே தகுதியானவங்க கிட்ட இருந்தாதான் நல்ல பலனைத் தரும்ங்கறதுதான் உறுதியாகுது. அது சரி... அறுவை சிகிச்சை டாக்டர் கையில இருக்கற கத்தி சாவுல இருந்து மனுஷனைக் காப்பாத்தும். அதே கத்தி உன்னை மாதிரியான கிரிமினல்கள் கைல இருந்தா ஆளைக் கொல்லத்தான் செய்யும். எப்படா திருந்தப் போறீங்க நீங்க என்று நாகினி ஆத்திரப்படுகிறார்.

பின்னர் சிறிது நிதானத்துக்கு வந்து மேஜையில் இருக்கும் பிளாஸ்கில் இருந்து காபியை ஊற்றிப் பருகுகிறார். நிர்வாகியிடமும் தருகிறார்.

சூடான பானம் மன அழுத்தத்தைக் குறைக்கும். காஃபி மூளைக்கு சுறுசுறுப்பைத் தரும். நிதானமா யோசிச்சு மூளையை சரியா பயன்படுத்தி நல்ல முடிவை எடு. சரி வரட்டா பாஸ் என்று சொல்லிவிட்டுப் புறப்படுகிறார்.

நிர்வாகி உறைந்த முகத்துடன் விடை கொடுக்கிறார்.

நல்லா சிரிச்ச முகமா கை கொடுங்க பாஸ்...

நிர்வாகி சிரமப்பட்டு சிரிக்கிறார்.

இண்டர்காம்ல போன் பண்ணி, வர்றவங்க கிட்ட என்னை பாஸ்னு சொல்லி வழியனுப்பு...

நிர்வாகி தயங்குகிறார்.

நாகினி தன் செல்போனை அவர் முகத்துக்கு அருகே காட்டுகிறார். அதில் அவர்களுடைய திரைமறைவு வேலையில் ஈடுபட்ட ஒருவர் தாங்கள் செய்ததை நிறுத்தி நிதானமாக ஒப்பிக்கிறார்.

பதறியபடியே நிர்வாகி தன் உதவியாளரை அழைக்கிறார். வருபவரிடம், நாகினியைக் கை காட்டி, பாஸை நம்ம ஆபீஸ் கார்ல... (இதைக் கேட்டதும் நாகினி சட்டென்று சீறவே) வேண்டாம்...என் கார்ல வீட்டுக்குக் கொண்டுபோய் டிராப் பண்ணிட்டு வா என்கிறார். உதவியாளர் எதுவும் புரியாமல் நாகினியை மேலும் கீழும் பார்க்கிறார். நாகினி செல் போனை நிர்வாகியிடம் கொடுத்துவிட்டு, என்னோட அன்பளிப்பா இதை வெச்சுக்கோங்க என்று சொல்லிவிட்டு உதவியாளருடன் நடக்கிறார்.

உங்க பாஸுக்கு நான் பாஸ்ன்னா உனக்கு யாரு...

உதவியாளர் மிரண்டபடியே, பிக் பாஸ்...

அதான் இல்லை... உன்னோட நண்பன் நான் என்று அவருடைய தோளில் கை போட்டபடியே நடக்கிறார்.

அவர் போனதும் நிர்வாகி அந்த செல் போனை ஆன் செய்து அந்த வீடியோவைப் பார்க்கிறார். கடலோர காவல் படையில் இருந்த ஒரு அதிகாரியை அந்த கிராமத்து மீனவப் பெண் ஒருத்தி மூலமாக பொய்யான பாலியல் புகார் கொடுக்க வைத்து அவமானப்படுத்திருக்கிறார்கள். அந்த அதிகாரியை பணி நீக்கம் செய்யத்தான் இந்த சதி என்று அந்தப் பெண்ணிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்த அதிகாரியை ஊரார் முன்னால் பெண்களை விட்டு விளக்குமாறால் அடித்து அவமானப்படுத்தி அதை தொலைகாட்சியில் ஒளிபரப்பி பெரிதாக ஆக்குகிறார்கள்.

இதைப் பார்க்கும் அந்தப் பெண் அந்த அதிகாரி மீது இரக்கம் கொண்டு உண்மையை காவலர்களிடம் சென்று சொல்கிறாள். ஆனால், அந்தக் காவலரும் அந்த சதியில் உடந்தை என்பதால் வழக்கை எடுக்காமல் விட்டுவிடுகிறார். அந்தப் பெண் தொலைகாட்சி நிறுவனத்திடம் சொன்னால் அவர்கள் உண்மையை ஒளிபரப்புவார்கள் என்று நம்பி அவர்களிடம் போய் சொல்கிறார். உண்மையில் அந்த சதியைத் திட்டமிட்டதே அந்த தொலைகாட்சி நிறுவனம் தானே. பாவம் அதுதெரியாமல் அவர்களிடம் மாட்டிக்கொள்கிறாள். அந்த நிருபரோ அவள் சொல்வதை அப்படியே பதிவு செய்துவைத்துக்கொள்கிறார். பின்னால் அதை வைத்து நிர்வாகத்திடமிருந்து காசு கறக்கலாமென்று திட்டமிடுகிறார்.

இந்த விஷயம் நிர்வாகிக்குத் தெரிந்துவிடவே அந்தப் பெண்ணையும் நிருபரையும் கொன்றுவிடுகிறார். அதோடு நில்லாமல் கடற்படை அதிகாரிதான் இரண்டு பேரையும் கொன்றதாக கதையைத் திருப்பிவிடுகிறார். கடலோரக் காவல் துறை அலுவலகம் அந்த கிராமத்தினரால் சூறையாடப்படுகிறது. பதிலுக்கு கடற்படை துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடுகிறது. இதில் அப்பாவிகள் இருவர் கொல்லப்படுகிறார்கள். தேசத்தையே உலுக்கும் பெரும் போராட்டமாக அது ஆகிறது. இந்த நிகழ்வுகளையெல்லாம் நேரடியாக ஒளிபரப்பி அந்த சேனல் தன் டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகரித்துக்கொள்கிறது. அந்த நிருபர் எடுத்த வீடியோவும் இன்ன பிற ஆதாரங்களும்தான் அந்த செல்லில் பதிவாகியிருக்கின்றன.

நிர்வாகிக்கு வேர்த்து ஊற்றுகிறது. நாகினி கொடுத்த விளம்பர பிரசுரத்தை சம்பந்தப்பட்ட பணியாளரிடம் கொடுத்து ஒரே நாளில் அந்த விளம்பரத்தைத் தயாரிக்கச் சொல்கிறார்.

*

நாகினி - 2

முதலில் எதிர்கட்சித் தலைவருடைய பைல்களை நாகினி பார்க்கிறார். அந்தத் தலைவர் தெய்வ நம்பிக்கை, ஜோதிட நம்பிக்கை மிகுந்தவர் என்பது தெரிகிறது. ஆண்டுதோறும் தன் தாய் தந்தைக்கு காசி, ராமேஸ்வரத்தில் திவசம் செய்வது தெரிகிறது. அதோடு மார்ச் 12-ம் தேதியும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு திவசம் செய்கிறார் என்பதும் அவருடைய ஆஸ்தான ஜோதிடர் மூலம் தெரியவருகிறது.

பொதுவாக இந்திய காலண்டர் படி பார்த்தால் திதிகள் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாளில் வரும். ஆங்கில காலண்டர் படி கணக்கிட்டால்தான் ஒரே நாளில் ஒரு விசேஷம் நடக்கும். மார்ச் 12 என்பது அப்படி என்ன முக்கியத்துவம் வாய்ந்தது என்று நாகினி அலசுகிறார். அந்த தலைவர் பிராந்திய அளவில் இருந்தபோது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அப்போது ஒரு அணைக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார். அதன் தேதி மார்ச் 12. இந்த இரண்டுக்கும் ஏதோ தொடர்பு இருப்பது நாகினிக்கு புலப்படவே மேலும் தோண்டிப் பார்க்கிறார். எதுவும் புலப்படவில்லை.

அந்தக் கட்சித் தலைவருக்கு ஒரு கவரில் மார்ச் 12 என்று பெரிதாக அச்சிட்டு ஒரு பொதுவிழாவில் அவருடைய உதவியாளர் மூலம் கொடுக்கிறார். அதைத் திறந்து பார்ப்பவர் அந்தத் தேதியைப் பார்த்ததும் அதிர்கிறார். அதில் ஏதோ வில்லங்கம் இருப்பது நாகினிக்கு உறுதிப்படுகிறது. ஒரு சில நாட்கள் கழித்து அணை கட்டுப் பொறியாளர் அந்தத் தலைவரைப் பார்த்துவிட்டுச் செல்கிறார். சிறிது நாட்கள் கழித்து அந்த அணை கட்டப்பட்ட பகுதியைச் சேர்ந்த பழங்குடி கட்சித் தலைவர் எதிர்கட்சித் தலைவரைப் பார்த்துவிட்டுப் போகிறார். நாகினி அவர்களைப் பின் தொடர்ந்து சென்று உளவு பார்க்கிறார். அந்த அணை அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்று பார்க்கிறார்.

அந்தப் பகுதி காவல் நிலைய அறிக்கைகளை அலசிப் பார்க்கிறார். மார்ச் 15 அன்று தன் மூத்த மகன் காணவில்லை என்று ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. அவருடைய வீட்டுக்குச் சென்று நாகினி விசாரிக்கிறார். மார்ச் 12 அன்றிலிருந்தே அவனைக் காணவில்லையென்றும் ஓரிரு நாட்கள் தேடிப் பார்த்துவிட்டு அதன் பிறகே புகார் கொடுத்ததாக அவர் சொல்கிறார். மூத்த மகனுடைய பெயர் என்ன என்று கேட்கிறார். இருளன் என்று சொல்கிறார். உங்கள் பெயர் என்ன என்று கேட்கிறார்.மூப்பன் என்கிறார்.

இந்தத் தகவல்கள் எல்லாம் நாகினிவுக்கு மார்ச் 8-ம் தேதியன்று கிடைக்கிறது. மார்ச் 12 அன்று எதிர் கட்சித் தலைவரைப் பின் தொடர்கிறார். அவர் ஆளரவமற்ற கடற்கரைக்குச் சென்று சிராத்த கர்மங்களைச் செய்கிறார். புரோகிதருக்கு பதிலாக டேப் ரெக்கார்டரில் மந்திரங்களைப் பதிவு செய்து வைத்திருக்கிறார். டேப்பை ஆன் செய்தால் சத்தமே வரவில்லை. திருப்பித் திருப்பி அழுத்திப் பார்ப்பவர் சற்று நிமிர்ந்து பார்க்கவே நாகினி கையில் பேட்டரிகளுடன் நிற்கிறார்.

இதையா தேடறீங்க...

ஆமாம்...

பேட்டரி வேண்டாம் நானே மந்திரம் சொல்றேன் என்பவர் மூப்பனின் மகன் இருளனின் நினைவாகச் செய்யும் இந்த வருடாந்தர இறுதிச் சடங்கை ஏற்றுக்கொள் எம்பெருமானே

மூப்பன், இருளன் என்ற பெயர்களைக் கேட்டதும் எதிர்கட்சித் தலைவரின் முகம் அதிர்ச்சியில் உறைகிறது.

நாகினி மந்திரங்களைச் சொல்லியபடியே அவரைச் சுற்றி வருகிறார். தன்னைச் சுற்றி மாய வளையம் ஒன்று போடப்படுவதுபோல் தலைவர் ஒடுங்குகிறார்.

பூஜையை முடிச்சிட்டு வாங்க... உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும் என்கிறார் நாகினி.

தலைவர் முடித்துவிட்டு வருகிறார்.

கார் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு இருவரும் கடல் அலைகளைப் பார்த்தபடியே பேசுகிறார்கள்.

நான் வேண்டாம்னுதான் சொன்னேன். மத்தவங்கதான் கேக்கலை... பெரிய பெரிய காரியங்கள் நடக்கும்போது பலி கொடுக்கறது வழக்கம்தான். வீட்டுக்கு மூத்த பையன் ஒருத்தனை பலி கொடுக்கணும்னு சொன்னாங்க. நான் வேண்டாம்னு சொன்னேன். ஆனா அந்த அணை தொடர்பா ஏகப்பட்ட தடங்கல்கள் வந்தது. ப்ரசன்னம் போட்டுப் பார்த்தபோதுதான் நரபலி கொடுக்கணுன்னே வந்தது. என்னோட அரசியல் வெற்றிக்கு அந்த அணை முக்கியமா தேவையா இருந்தது. கடைசியா நானும் சரின்னு சொல்லிட்டேன். மனசு கேக்கலை அதான்... ஒவ்வொரு வருஷமும் வந்து திதி பண்ணிட்டு இருக்கேன்.

நாகினி அதைக் கேட்டு அதிர்கிறார். உண்மையில் அவருக்கு மார்ச் 12 அன்று இருளனுக்கு திதி செய்கிறார் என்பது மட்டுமே தெரியும். ஒருவேளை பழங்குடிப் பெண்ணுக்கும் அவருக்கும் பிறந்த மகனாக இருக்கும் என்றுதான் நினைத்தார். ஆனால், எதிர் கட்சித் தலைவர் சொல்லச் சொல்ல அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் எல்லாம் தெரிந்ததுபோல் சமாளிக்கிறார். பொறியாளரின் பெயர், பழங்குடியினத் தலைவரின் பெயர் என ஒவ்வொன்றையாக எடுத்துவிடுகிறார். நாகினிவுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று நினைத்து அவர்களுடைய பங்கு என்ன என்பதை தலைவர் பிட்டுப் பிட்டு வைக்கிறார்.

நாகினி அனைத்தையும் தன் ரகசிய கேமராவில் வீடியோ வாக்குமூலமாகவே பதிவு செய்துகொள்கிறார்.

ஒரு அறிக்கையை தலைவரிடம் கொடுக்கிறார். அனு ஒப்பந்தத்தை ஆதரித்து அந்தத் தலைவரின் பெயரில் பத்திரிகைகளுக்காக எழுதப்பட்ட கட்டுரை அது.

உங்க கட்சிக்காரங்களுக்கு இதுல இருக்கற விஷங்களை எடுத்துச் சொல்லுங்க. இன்னும் ஒரு வாரத்துல இந்த கட்டுரை உங்களோட பிரதான பிரசார பத்திரிகைலயும் நாட்டின் முன்னணி பத்திரிகைகள்லயும் வெளிவந்தாகணும். உங்க ஆளுங்களை கன்வின்ஸ் பண்ண ஒரு வாரம் டைம் போதுமில்லையா..?

எதிர்கட்சித் தலைவர் எதுவும் பேசாமல் மவுனமாக இருக்கிறார்.

நரபலிங்கறது ரொம்பத் தப்பு இல்லையா... உலக அளவுல இந்தியாவுக்குப் பெரிய தலைக்குனிவாகிடுமே. இஸ்லாமிய நாடுகள்ல ஊருக்கு மத்தியில கல்லெறிஞ்சு கொல்றதை எந்த பத்திரிகையும் தொலைகாட்சியும் வெளியிடாது. ஆனா, இந்தியால இப்படி ஒண்ணு தனி ஆளா நீங்க செஞ்சிருந்தாலும் இந்தியாவே காட்டுமிராண்டி தேசம்னு உலகமே அடி வயித்துல இருந்து கத்தும் இல்லையா... உலக நடப்புகள் உங்களுக்குத் தெரியாதா என்ன... ஒரு வாரம் அதிகம் தான் இல்லையா...

பேசிப் பார்க்கறேன். நான் சொன்னா எதிர் பேச்சு பேசமாட்டாங்க.

எனிதிங் கேன் பி ஜஸ்டிஃபைட் இன் த நேம் ஆஃப் காட் அண்ட் கண்ட்ரி இல்லையா என்கிறார் நாகினி.

தலைவர் எதுவும் பேசாமல் இருக்கிறார். சிறுது நேரம் கழித்து காரை எடுத்துக்கொண்டு புறப்படுகிறார்.

பாரத் மாதா கீ என்று முழக்கம் போல் நாகினி சொல்கிறார்.

தலைவர் தயங்கியபடியே இருக்கிறார்.

நாகினி இரண்டாவது முறை மிரட்டும் தொனியில் அதைச் சொல்கிறார்.

தலையர் பயந்து சட்டென்று ‘ஜே’ என்கிறார்.

நாகினி சிரித்தபடியே அவரை வழியனுப்புகிறார்.

*

நாகினி - 1

பொலிட்டிகல் திரில்லர்.

இந்தியப் பிரதமர் அமெரிக்காவுடன் ஓர் அணு உலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்புகிறார். ஆனால், அதற்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்புகள் வருகின்றன. பிரதமர் தனக்கு ஆதரவாக இருப்பவர்களை அழைத்துப் பேசுகிறார். அந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களை எவ்வளவோ வழிகளில் முயன்றும் பிரதமருக்கு ஆதரவாகத் திருப்பமுடியவில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். ஒவ்வொருவராக விடைபெற்றுச் செல்கிறார்கள். கடைசியாக பிரதமரும் அவருடைய உதவியாளரும் மட்டும் அந்த அறையில் உட்கார்ந்து இருக்கிறார்கள். பிரதமர் மாளிகையின் ஒவ்வொரு விளக்குகளாக அணைக்கப்படுகின்றன. பிரதமர் சோகமாகப் புறப்படுகிறார்.

அது மிகவும் முக்கியமான ஒப்பந்தம். நாட்டின் பெருகிவரும் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அணு உலைகள் மிகவும் அவசியம். ஆனால், ஒவ்வொரு கட்சித் தலைவரும் தத்தமது அரசியல் காரணங்களினால் அந்த ஒப்பந்தத்தை எதிர்க்கிறார்கள்.

பிரதமரின் கட்சியினர் தங்களுடைய இஸ்லாமிய வாக்குவங்கியைத் திருப்திப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவுடனான நட்புறவை எதிர்க்கிறார்கள். மேலும் கட்சிக்குள் இந்த விஷயத்தில் இருக்கும் கருத்துவேறுபாட்டைப் பயன்படுத்தி கட்சியின் அடுத்தகட்டத் தலைவர்கள் பிரதமரை ஓரங்கட்டப் பார்க்கிறார்கள்.

எதிர்கட்சியினர் தங்கள் ஆட்சியில்தான் அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவேண்டும் என்ற எண்ணத்தில் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

பிரதமரின் ஆட்சி இடதுசாரிகளின் கூட்டணி ஆதரவில்தான் இயங்குகிறது. அவர்கள் அமெரிக்கா என்றாலே எதிர்க்கவேண்டும் என்ற உயரிய கொள்கையை உடையவர்கள். ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் ஆதரவை விலக்கிக்கொள்வேன் என்று மிரட்டியிருக்கிறார்கள். எனவே, அவர்களையும் பகைக்க முடியவில்லை.

ஊடகங்களில் இடதுசாரி ஆதரவு பத்திரிகைகள், தொலைகாட்சிகள் எல்லாம் இந்தியா அணு வல்லமை பெறுவதை விரும்பவில்லை. எனவே, அவர்களும் பிரதமருக்கு எதிராகப் பெரும் எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால், அனைவரும் எதிர்க்கும் ஒப்பந்தத்தை பிரதமர் கொண்டுவந்தே ஆகவேண்டும் என்று விரும்புகிறார்.

காரில் ஏறுவதற்கு முன்பாக பிரதமரிடம் அவருடைய உதவியாளர் ஒரு பெயரைச் சொல்கிறார்: நாகினி!

இந்திய உளவுத்துறையின் மூத்த அதிகாரியின் பட்டப் பெயர் அது. அவர் நினைத்தால் யாரையும் வழிக்குக் கொண்டுவந்துவிடுவார். அரசியலில் இருக்கும் யாருமே நேர்மையானவர்கள் இல்லையே. அவர்கள் செய்திருக்கும் ஏதேனும் திரைமறைவுச் செயலை உளவுபார்த்து அவர்களை பிளாக் மெயில் செய்வதில் நாகினி கில்லாடி. பொதுவாக ஆட்சியாளர்கள் தமக்கு வேண்டாதவர்களையும் போட்டியாளர்களையும் அப்புறப்படுத்த உளவுத்துறையைப் பயன்படுத்திக்கொள்வதுண்டு. ஆனால், பிரதமருக்கு அப்படிச் செய்வதில் உடன்பாடு கிடையாது. அது தர்மமல்ல என்று சொல்லக்கூடியவர்.

ஒரு பெரிய நல்ல காரியத்துக்காக சிறிய தப்பைச் செய்யலாம்... ஒரு ஊரைக் காப்பாத்த ஒரு வீட்டுக்குத் தீவைக்கலாம். ஒரு நாட்டைக் காப்பாத்த ஒரு ஊருக்கே தீ வைக்கலாம். நாம அதெல்லாம் செய்யப்போறதில்லை. நமக்கும் நாட்டுக்கும் சரியான ஒண்ணைச் செய்யப்போறோம். நேர்வழிலயே இது நடக்கணும்னுதான் நாம விரும்பறோம். முடியலைன்னா என்ன செய்ய..? என்று உதவியாளர் சொல்கிறார். பிரதமர் பதில் எதுவும் சொல்லாமல் காரில் ஏறிக்கொள்கிறார். கார் சிறிது தூரம் சென்ற பிறகு நிற்கிறது. உதவியாளர் ஓடிச் செல்கிறார். ‘கால் நாகினி’ என்கிறார்.

*

மறுநாள் பிரதமருடைய அப்பாயிண்ட்மெண்ட்களில் ஒன்று ரத்து செய்யப்படுகிறது. பிரதமர் அந்த மதிய நேரத்தில் ஓய்வெடுக்கப் போவதாகக் குறிப்பிடப்படுகிறது. அந்த நேரத்தில் நாகினியை உதவியாளர் விசேஷ வழியில் அழைத்துவருகிறார். பிரதமரும் நாகினியும் சந்திக்கிறார்கள்.

பிரதமர் இப்படியான திரை மறைவு வேலைகளில் தனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை என்கிறார்.

நாட்டை ஆள காவல், நீதி, அரசாங்கம் அப்படின்னு கண்ணுக்குத் தெரியற மூணு சிங்கங்கள் மட்டுமே போதாது. நாலாவதா நாகம் மாதிரி மறைஞ்சி செயல்படற இன்னொரு விலங்கும் தேவை.

அது யாரையும் கொத்திக் கொல்றதுல எனக்கு சம்மதம் இல்லை.

அது சரிதான். நான் சீற மட்டுமே செய்வேன்.

நல்லது. அதுதான் வேணும் என்கிறார் பிரதமர்.

உதவியாளர் சரிக்கட்டவேண்டிய தலைவர்களின் பெயரை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி பிரதமரிடம் தருகிறார். பிரதமர் அதைப் பார்த்துவிட்டு நாகினியிடம் தருகிறார்.

சொந்தக் கட்சித் தலைவர், எதிர்கட்சித் தலைவர், இடதுசாரித் தலைவர், தொலைக்காட்சி ஊடக நிறுவனர் ஒருவர் என நான்கு பெயரின் பெயர்கள் அதில் இருக்கின்றன.

நாகினி அதைச் சிறிது நேரம் உற்றுப் பார்க்கிறார். பிறகு பாக்கெட்டில் இருக்கும் லைட்டரை எடுத்து அந்தத் துண்டுக் காகிதத்தை எரிக்கிறார்.

வேறொரு துண்டுச் சீட்டில் வேறு நான்கு சம்பந்தமே இல்லாத பெயர்களை எழுதச் சொல்கிறார். அதைக் கிழித்து பிரதமர் மேஜைக்குப் பக்கத்தில் இருக்கும் குப்பைக் கூடையில் போடச் சொல்கிறார். பிரதமரிடம் விடைபெற்றுச் செல்கிறார்.

மறுநாள் அந்தக் குப்பைக் கூடை பிரதமர் அலுவலகத்தில் ஒருவரால் எடுக்கப்பட்டு அந்தத் துண்டு காகிதங்கள் ஒட்டி வைத்து பெயர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அந்த நபர் செல் போனை எடுத்து அந்தப் பெயர்களை எதிர்முனையில் இருப்பவரிடம் சொல்கிறார்.

‘இந்தப் பெயர்களில் இருந்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது’ என்று எதிர்முனை கேட்கிறது.

‘வந்துட்டுப் போனது நாகினிங்கறது தெரியுது’ என்கிறார் பிரதமர் அலுவலக ஊழியர்.

‘சரி நான் பாத்துக்கறேன்’ என்று எதிர்முனை சொல்லிவிட்டு போனை வைக்கிறது

***

Thursday 22 September 2016

அதையும் தாண்டிப் புனிதமானது... (7)

அடுத்ததாக பண்ணைப்புரத்தில் பொங்கல் திருவிழா வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஊரே உற்சாகத்துடன் தயாராகிறது. அரசு தரப்பில் தடை விதிக்கிறார்கள். தடையை மீறி ஜல்லிகட்டு நடந்தே தீரும் என்று மக்கள் போராடுகிறார்கள். திட்டமிட்டபடியே ஜல்லிக்கட்டு ஆரம்பிக்கிறது. மனிதக் குரங்கு அந்த விளையாட்டைப் பற்றிக் கேட்கிறது. ஒரு காளையைக் கொம்பு சீவி அவிழ்த்துவிடுவார்கள் என்றும் அதை அடக்குபவரே வீராதி வீரன் என்று கொண்டாடப்படுவான் என்றும் சொல்கிறார்கள்.

சீறிவரும் காளையை வெறுங்கையால் அடக்குகிறார்களா... உண்மையிலேயே மனிதர்கள் வீரர்கள்தான்... அந்த அதிசயத்தை நானும் பார்க்கவேண்டும் என்று மனிதக் குரங்கு ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு ஆர்வத்துடன் வருகிறது. ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிடுகிறார்கள். மாடு பிடி வீரர்கள் கூட்டமாகப் பாய்கிறார்கள். மாட்டுத் திமில் மேல் தொங்கியபடியே செல்கிறார்கள்.

சிறிது நேரம் வேடிக்கை பார்க்கும் மனிதக் குரங்கு சரி... போட்டியை எப்போ ஆரம்பிப்பாங்க என்று கேட்கிறது.

போட்டியை ஆரம்பிக்கிறதா..? இப்ப இங்க என்ன நடந்துக்கிட்டிருக்கு?

சின்னப்பசங்க என்னமோ வேடிக்கை காட்டறாங்கன்னுல்ல நினைச்சேன்.

தம்பி... இதுதான் வீர விளையாட்டு...

நேருக்கு நேர் நின்னு அடக்கமாட்டாங்களா..?

மாட்டாங்க...

ஒரு காளையை ஒத்தையா அடக்கமாட்டீங்களா...

மாட்டாங்க... மாட்டின் மேலே யார் அதிக நேரம் தொங்குகிறாரோ அவரே வீரர்.

அப்படிப் பார்த்தா ஈயும் உன்னியும் உங்களைவிடப் பெரிய வீரனாச்சே.

கேட்டுக்கொண்டிருப்பவருக்குக் கோபம் வருகிறது.

இவ்வளவு பேசறியே நீ இறங்கி அடக்கிக் காட்டு பார்க்கலாம்.

நான் க்ரூப் போட்டோக்கெல்லாம் போஸ் கொடுக்க மாட்டேன். சிங்கம் சிங்கிளாத்தான் எதையுமே செஞ்சு பழக்கம்... பிஸ்கோத் பசங்கள்லாம் மேல ஏறுங்க. நான் ஒத்தையா இறங்கி அந்த மாட்டை அடக்கி அது மேல சவாரி செஞ்சே காட்டறேன் என்று சவால் விடுகிறது.

அதன்படியே எல்லாரும் களத்தைவிட்டுச் செல்கிறார்கள். உள்ளதிலேயே மிகவும் மூர்க்கமான காரிக் காளையைக் கொண்டுவருகிறார்கள். பத்து பேர் சேர்ந்தே அடக்க முடியாத அந்தக் காளையை மனிதக் குரங்கு தனி ஆளாக அடக்கக் களமிறங்குகிறது. வாடிவாசல் பட்டிகளுக்குப் பின்னால் காரிக் காளையின் கோரமான விழிகள் மின்னுகின்றன. அதன் மூச்சுக் காற்றுபட்டு தரையில் பெரிய குழி விழுகிறது. கூர்மையான கொம்பு மோதி தடுப்புக் கம்பிகள் உடைகின்றன. மெள்ள வாடி வாசல் கதவைத் திறக்கிறார்கள். காளை மெதுவாக அடிமேல் அடியெடுத்து வைத்து மைதானத்துக்குள் நுழைகிறது. ஒட்டுமொத்தக் கூட்டமும் மயான அமைதியில் உறைந்து கிடக்கிறது.

மைதானத்தில் தன்னந்தனியாக நிற்கும் மனிதக் குரங்கைப் பார்த்ததும் காளை சீறிப் பாய்கிறது... மனிதக் குரங்கோ சிறிதும் பயப்பட்டாமல் அப்படியே சிலை போல் நிற்கிறது. பாய்ந்து வரும் காளை இன்னும் ஒரே பாய்ச்சலில் மனிதக் குரங்கின் உடம்பைக் குத்தித் தூக்கிப் போட்டுவிடும் தூரத்தில் வருகிறது. மனிதக் குரங்கு சட்டென்று குட்டிகர்ணம் அடித்து மாட்டுக்குப் பின்னால் சென்று குதிக்கிறது. காளை தடுமாறி பிறகு மெள்ளத் திரும்புகிறது. மனிதக் குரங்கு மெள்ள வீடு கட்டுகிறது. காளையும் மனிதக் குரங்கின் கைகளையே பார்த்தபடி காலை மாற்றிவைக்கிறது.

காளை பாயப்போகும் தருணத்தில் மனிதக் குரங்கு சட்டென்று தன் முதுகுப்பக்கம் கையைக் கொண்டு செல்கிறது. எல்லாரும் அது அருவாளை எடுத்து வெட்டப்போகிறது என்று கூக்குரலிடுகிறார்கள். மனிதக் குரங்கு அவர்களை அமைதியாக இருக்கச் சொல்கிறது. சிறிது நேரத்தில் மைதானம் அதிர்ச்சியில் உறைகிறது. காரிக் காளை தன் ஆத்திரத்தைவிட்டு மனிதக் குரங்கு பின்னால் பவ்யமாக அன்ன நடை போட்டு நடக்கிறது. மனிதக் குரங்கு அதை உட்காரச் சொல்கிறது. காரிக் காளை கால்களை மடக்கி மண்டியிட்டு தலை குனிந்து அமர்கிறது. என்ன விஷயமென்றால், மனிதக் குரங்கு முதுகுப் பக்கம் ஒளித்து வைத்திருந்தது அருவாள் அல்ல... கம்மங் கதிர்! பசசைப் பசேலென்ற தோகையுடன், பார்த்தாலே பாய்ந்து மேயச் சொல்லும்வண்ணம் செழித்து வளர்ந்த கதிர் தட்டை. அதை மெள்ள வெளியே எடுத்து நீட்டுகிறது. காரிக்காளை கம்மங் கதிரைப் பார்த்ததும், "இதற்குத்தானே ஆசைப்பட்டேன் மிருககுமாரா...' என்று மனிதக் குரங்கைப் பார்த்து மண்டியிடுகிறது. மனிதக் குரங்கு காளையின் திமிலையைத் தடவியபடியே மெள்ள அதன் மேல் ஏறி உட்கார்ந்து கொள்கிறது. கையில் இருக்கும் கம்மங் கதிரைக் கொஞ்சம் கொஞ்சமாக அதன் முன்னால் போடப் போட காரிக் காளை மனிதக்குரங்கைச் சுமந்தபடி ஜல்லிக் கட்டு மைதானம் முழுவதும் அன்ன நடை போடுகிறது.

காளையை அடக்க இது போதும். அதுவும் போக ஒரு காளையை அடக்கறதுல வீரம் இல்லை. எத்தனையோ காளைகளைக் காயடிச்சு, லாடம் அடிச்சு, மூக்கணாங்கயிறு மாட்டி வண்டிமாடா ஆக்கி ஆயிரம் வருசத்துக்கு மேல ஆச்சு. ஆதிகாலத்துல காட்டுல திரிஞ்சிட்டிருந்தபோது ஒரு காளையை அடக்கறது வீரமா இருந்திருக்கலாம். இன்னிக்கு அது வீரமும் இல்லை. விவேகமும் இல்லை... போய்ப் புள்ளை குட்டிங்களைப் படிக்க வையுங்க என்கிறது.

அது எங்களுக்குத் தெரியும். ஆனா இது எங்களோட கலாசார விளையாட்டு... உலகத்துல எங்கயுமே இப்படியான வீர விளையாட்டு கிடையாது. ஸ்பெயின்ல நடக்கற விளையாட்டுல மாட்டை ஈட்டியால குத்திக் கொல்லுவான். அதை ஊரே கை தட்டி ரசிக்கும். இங்க காளைக்கு ஒரு காயமும் படாது... சங்க காலத்தில இருந்தே தமிழன் விளையாடிட்டு வர்ற விளையாட்டு... தமிழனோட அடையாளம் இது. இதைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது.

சங்க காலத்துல ஜல்லிக்கட்டு இருந்ததுன்னு சொல்லி விளையாடறீங்க... சங்க காலத்துல பரத்தையர்ன்னு இருந்திருக்காங்க. ஒவ்வொரு ஆணும் திருமணத்துக்கு முன்னாலயும் திருமணத்துக்கு அப்பறமும் பரத்தையர் வீட்டுலபோய் நாள்கணக்குல மாசக்கணக்குல இருந்திருக்காங்க... தமிழர்களின் தெய்வமான கண்ணகிகூட கோவலன் மாதவி வீட்டுலயே போய் படுத்துக் கிடந்ததை மன்னிச்சு ஏத்துக்கிட்டு வாழ்ந்தான்னு இலக்கியம் சொல்லுது. இப்போ ஒருத்தர் அப்படி இருக்க முடியுமா..? பரத்தையர் கூட படுத்து எழுந்திரிக்கறதுதான் தமிழர் கலாசாரம்னு சொல்லிட்டு திரிஞ்சா அதை ஏத்துப்பீங்களா?

கூட்டம் மவுனமாகத் தலைகுனிந்து நிற்கிறது.

சரி அதை விடுங்க... வேத காலத்தைப் போலவே சங்க காலத்துலயும் ஜாதி கிடையாது. இப்போ எதுக்கு அதைப் பிடிச்சி தொங்கிட்டிருக்கீங்க... இதுவா கலாசாரத்தைக் காப்பத்தற லட்சணம்? அதுவும் இன்னிக்கு வீரம்னா என்ன? ஆத்து மண்ணை அள்ளிக்கிட்டு போறாய்ங்களே அந்த லாரிகளை மடக்குங்க... அது வீரம்; லோடு லோடா மரத்தை வெட்டிக் கொண்டுபோறாங்களே அதைத் தடுங்க... அது வீரம்: எல்.கேஜி.யு.கேஜி படிக்க ஆயிரம் லட்சம் கொடுன்னு கேட்கறாங்களே... தாய்மொழில பாடம் எடுக்காம ஆங்கிலத்துல எடுக்கறாங்களே அந்த புள்ளை பிடி வண்டிகளைத் தடுங்க அது வீரம்; தண்ணியே வராத குழாயைத் திறந்துவைக்க ஐம்பது டாடா சுமோல வந்து போறாங்களே அந்த எம்.எல்.ஏ.க்களோட கேன்வாயைத் தடுங்க அது வீரம்... ஒரு அப்புராணி மாட்டைப் பிடிச்சு அதுவும் அதோட திமிலைப் பிடிச்சு தொங்கறதா வீரம் என்று கேட்கிறது.

அனைவரும் தலை குனிந்து நிற்கிறார்கள்.

***

அடுத்ததாக ஒரு நாள் பள்ளியில் காலையில் கொடி ஏற்றி பிரார்த்தனை செய்கிறார்கள். பக்கத்தில் இருக்கும் வார்டு கவுன்சிலரின் வீட்டில் அன்று ஏதோ பிறந்தநாள் விழா. பள்ளியில் சரியாக கொடி ஏற்றி தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நேரத்தில் கவுன்சிலரின் அல்லக்கைகள் பட்டாசு கொளுத்திப் போட்டு கொட்டமடிக்கிறார்கள். அந்தப் பக்கமாக வரும் மனிதக் குரங்கு தமிழ்த்தாய் வாழ்த்து முடிவது வரை பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக நிற்கிறது. தேசிய கீதம் முடிந்ததும் புயல் போல் கவுன்சிலரின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருப்பவர்களை அடித்து இழுத்துவந்து மீண்டும் தமிழ்த் தாய் வாழ்த்தைப் பாடச் சொல்கிறது. ஒருத்தருக்கும் அந்தப் பாட்டு தெரியவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்தே பாடத்தெரியலை நீங்களெல்லாம் தமிழருக்கு என்னத்தைச் செய்யப்போறீங்க என்று தலையில் குட்டி, அந்தப் பாட்டை கணீர் குரலில் பாடுகிறது. அல்லக்கைகள் அனைவரையும் அட்டன்ஷனில் நின்று சல்யூட் அடிக்க வைக்கிறது.

***

குரங்குகள் உலகில் ஒருமுக்கிய பிரமுகர் வீட்டில் திருமணம் நடக்கிறது. மணமகளை தமன்னா தேவதைபோல் அலங்கரிக்கிறார். மண மகளே மண மகளே வா வா பாடல் ஒலிக்க அழைத்துவருகிறார். தாலியை ஆசீர்வாதம் பண்ண சபையினர் மத்தியில் கொடுத்துவிடுகிறார்கள். திரும்பிவரும்போது வெறும் தட்டு மட்டும் இருக்கிறது. தாலியைக் காணவில்லை. மண்டபமே பதறுகிறது. தாலியை எப்படியும் மீட்டாகவேண்டும். அதே நேரம் விருந்துக்கு வந்திருக்கும் அனைவரையும் சந்தேகிக்கவும் முடியாது. என்ன செய்வதென்று தவிக்கிறார்கள். அப்போது, தமன்னா ஒரு யோசனை சொல்கிறார். அதன்படி மண்டபத்தின் வெளிக் கதவு மூடப்பட்டு வந்திருக்கும் மனிதக் குரங்குகள் அனைத்துக்கும் ஒரு மாங்கனி கொடுக்கப்படுகிறது. தாலியை எடுத்தவர்கள் தயவு செய்து அதை மாங்கனிக்குள் வைத்து கொடுத்துவிடுங்கள் என்று சொல்கிறார்.

அதன்படியே மாங்கனிகள் அனைவருக்கும் தரப்படுகிறது. பிறகு ஒரு கூடையைக் கொண்டு சென்று மாங்கனிகளைச் சேகரித்துகொண்டு வருகிறார்கள். மேடை நடுவில் அந்த மாங்கனிகளைக் கொட்டி ஒவ்வொன்றையாக சோதித்துப் பார்க்கிறார்கள். ஒரு மாங்கனிக்குள் தாலி மின்னுகிறது.

மணப்பெண் வீட்டாரும் மண்டபத்தில் இருப்பவர்களும் தமன்னாவைப் பாராட்டுகிறார்கள். (நன்றி : சோ.தர்மன்)

***

ஒரு நாள் காட்டுப்பகுதிக்கு சுற்றுலா வரும் கல்லூரி இளைஞர்கள் சாராயம் குடித்துவிட்டு பாட்டில்களை வீசிவிட்டுச் செல்கிறார்கள். உடைந்த பாட்டில் துண்டுகள் காலில் குத்தி மனிதக் குரங்குகள் அவதிப்படுகின்றன. காலில் சீழ் வைத்து ஒரு குரங்கின் காலையே எடுக்கவேண்டிவருகிறது. தமன்னா குரங்குகளுக்கு இரும்பு லாடம் அடித்தும் கனமான ஷூக்கள் தயாரித்துக் கொடுத்தும் காப்பாற்றுகிறாள்.

சில மனிதக் குரங்குகள் அடுத்த தடவை காட்டுக்கு வரும் இளைஞர்களைக் கட்டிப் பிடித்து அடித்து கொன்றுவிடுகின்றன. இதனால் குரங்கு இனத்துக்கும் மனித இனத்துக்கும் இடையில் சண்டை மூள்கிறது. அதைத் தடுக்க பஞ்சாயத்து கூடுகிறது.

நாயக மனிதக் குரங்கு மனிதர்கள் செய்ததுதான் தவறு என்று சொல்கிறது. தமன்னா மனிதர்கள் செய்தது தவறுதான் என்றாலும் அதற்காக இளைஞர்களை அடித்துக் கொன்றது அதைவிடப் பெரிய தவறு என்று சொல்கிறது. நாயகக் குரங்கு சொல்வதைக் கேட்டு மனிதர்களில் சிலர் ஆதிக்க சக்தி மனிதர்களை எதிர்த்து நிற்கிறார்கள். தமன்னா சொல்வதைக் கேட்டு மனிதக் குரங்குகள் சில அங்கிருக்கும் ஆதிக்க சக்திகளை எதிர்த்து நிற்கின்றன. இரண்டு தரப்பு எளிய சக்திகளும் நாயகன் குரங்கு மற்றும் தமன்னா தலைமையில் ஓர் அணியில் நிற்கின்றன. மனித ஆதிக்க சக்திகளும் குரங்கு ஆதிக்க சக்திகளும் ஓர் அணியில் நிற்கின்றன.

இரண்டு கோஷ்டிக்கும் இடையே கடும் சண்டை மூள்கிறது.

இதனிடையில் தமன்னாவும் மனிதக் குரங்கும் காதலிக்கிறார்கள் என்ற விஷயம் இரு தரப்புக்கும் தெரிந்துவிடுகிறது. இரு தரப்பு ஆதிக்க சக்திகளும் இந்தக் கலப்புத் திருமணத்தை நடக்கவிடமாட்டோம் என்று சூளுரைக்கிறார்கள். இரு தரப்பு எளிய மக்களும் அப்படியானால் எங்களுக்கு செய்த உதவிகள் எல்லாம் காதலில் ஜெயிப்பதற்காகச் செய்த நாடகம்தானா என்று இருவரையும் கேட்கிறார்கள்.

நாங்கள் காதலிப்பது உண்மைதான். உங்கள் மத்தியில் நல்லெண்ணம் பெற வேண்டும் என்று விரும்பியதும் உண்மைதான். ஆனால், அதன் பிறகு செய்ததெல்லாம் ஆத்மார்த்தமான முயற்சிகள்தான் என்று இருவரும் சொல்கிறார்கள். அதை யாரும் நம்பாமல் அதுவரை அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களில் மனிதக் குரங்குகள் எல்லாம் குரங்குகள் அணிக்கும் மனிதர்கள் எல்லாம் மனிதர்கள் அணிக்கும் போய்விடுகிறார்கள். மனிதக் குரங்கு நாயகனும் தமன்னாவும் மட்டும் போர்க்களத்தில் தனியாக நிற்கிறார்கள்.

சரி... எங்களுக்கு யாரும் வேண்டாம் நங்கள் தனியாகவே வாழ்க்கையைத் தொடங்கிக் கொள்கிறோம் என்று தொடுவானத்தை நோக்கி நடக்கத் தொடங்குகிறார்கள். ஆனால், "அப்படி நீங்கள் சேர்ந்துவிட முடியாது. மனிதக் குரங்கு குரங்குக் கூட்டத்துக்குப் போயாகவேண்டும். தமன்னா மனிதக் கூட்டத்துக்கு வந்தாகவேண்டும்' என்று இரண்டு தரப்பினரும் எச்சரிக்கிறார்கள். இப்போது அவர்கள் இருவரை மையமாக வைத்து இரண்டு இனங்களுக்கும் இடையே பெரும் சண்டை மூள்கிறது.

இப்படிச் சண்டை நடந்தால் இழப்பு மிகவும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சும் நாயகனும் நாயகியும் அந்த சண்டையைத் தவிர்க்க விரும்புகிறார்கள். மனிதர்கள் தரப்பில் இருந்து வீரமுள்ள மனிதர் ஒருவரும் விலங்குகள் தரப்பில் வீரமுள்ள விலங்கும் சண்டையிடுவதென்றும் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுடைய இனத்துக்கு மற்றவர் அடிமை என்று யோசனை சொல்கிறார் தமன்னா.

ஏற்கெனவே மனிதக் குரங்கு இனத்தில் அந்த நாயகக் குரங்கின் மீது ஆசைவைத்த பெண் இருப்பாள். அவளுடைய அண்ணன் தன் தங்கைக்குக் கிடைக்காதவன் உயிரோடு இருக்கக்கூடாது என்று கோபத்தில் இருப்பான். அதுபோல் தமன்னா மீது காதல் வசப்பட்ட ஒருவன் இருப்பான். அவனும் தனக்குக் கிடைக்கவில்லையென்றால் தமன்னா வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று முடிவுகட்டியிருப்பான். அவர்கள் இருவரும் மனித இனம் சார்ந்தும் மனிதக் குரங்கு இனம் சார்ந்தும் நாயகக் குரங்கும் தமன்னாவும் சண்டை போட்டு யார் வெற்றி பெறுகிறார் என்று பார்க்கலாம் என்று சொல்கிறார்கள்.

இரு இனத்தினரும் ரத்தம் சிந்தி மடிவதைத் தடுக்க அவர்கள் இருவரும் ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்குத் தயாராகிறார்கள். உணர்ச்சிமயமான மிகக் கடுமையான சண்டைக்குப் பிறகு கடைசியில் இருவரும் மற்றவர் தலையை வெட்டி வீழ்த்தி உயிர்த் தியாகம் செய்கிறார்கள். தலை துண்டான இருவருடைய உடலும் ஒன்றை ஒன்று தேடித் தவித்து அணைத்தபடியே ஒன்றாக பூமியில் விழுகின்றன.

காதலுக்காக உயிர் துறந்த காதலர்களைப் பார்த்திருப்பீர்கள்.

காதலித்தவரின் சமூகத்துக்காக உயிர் துறந்தவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?

இதோ அப்படியான ஒரு காதல் ஜோடி...

இரு சமூகத்துக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த அந்தக் காதலர்கள்

தமது மரணத்தையும் அவர்களுக்காகவே அர்ப்பணித்திருக்கிறார்கள்.

இவர்கள் வெறும் காதலர்கள் அல்ல...

ஏனென்றால், இவர்களின் காதல்

அதையும் தாண்டிப் புனிதமானது!

***

அதையும் தாண்டிப் புனிதமானது (6)


ஊரில் புதிதாக ஒரு வீடு கட்டுகிறார்கள். கூலியாட்கள் கல்லையும் மண்ணையும் சுமந்து கஷ்டப்பட்டு வீடு கட்டி முடிக்கிறார்கள். ஆனால், கிரகப்பிரவேசத்தின் போது ஒரு ஐயரை அழைத்து வருகிறார்கள். அவர் நீர்க் கலசம் ஒன்றை எடுத்துக்கொண்டு மாவிலையால் வீடு முழுவதும் தெளிக்கிறார். தீட்டு, தோஷமெல்லாம் நீங்க அப்படிச் செய்வதாகச் சொல்கிறார்கள். பசுவை அழைத்து வந்து அதற்கு அலங்காரங்கள் எல்லாம் செய்து உணவு கொடுக்கிறார்கள். கஷ்டப்பட்டு ரத்தமும் வேர்வையும் சிந்திய கூலித் தொழிலாளர்களை அந்த வீட்டுக்குள் நுழையவே விடாமல் விரட்டிவிடுகிறார்கள்.

இதைப் பார்க்கும் மனிதக் குரங்கு தனக்கென்று ஒரு வீடு கட்ட முன்வருகிறது. பொன்னும் மணியும் இழைத்து பெல்ஜியம் கண்ணாடிகள், அமெரிக்கன் சரவிளக்குகள் பொருத்தி ஒரு மாளிகையைக் கட்டி முடிக்கிறது. ஆனால், வீடு கட்டி முடித்ததும் ஐயரை அழைக்காமல் நாட்டார் தெய்வ சாமியாடி ஒருவரை அழைத்துவந்து பூஜை செய்ய வைக்கிறது. பசுவுக்கு பதிலாக எருமையை அழைத்துவந்து அலங்காரம் செய்து உணவுகொடுத்து மரியாதை செய்கிறது. வீடு கட்டிக்கொடுத்த கூலியாட்கள் அனைவரையும் வீட்டில் உட்கார வைத்து விருந்துபோட்டு வேட்டி சட்டை எடுத்துக்கொடுத்து அனுப்புகிறது. எளிய மக்கள் எல்லாரும் மனிதக் குரங்கை வாழ்த்தி வணங்குகிறார்கள்.

யாருக்காக... இது யாருக்காக...

இந்த மாளிகை வசந்த மாளிகை

கருணை ஓவியம் கலந்த மாளிகை

யாருக்காக இது யாருக்காக...

எழுதுங்கள் என் இரங்கற்பாவில் இவன் இரக்கமுள்ளவன் என்று

பாடுங்கள் என் சுடுகாட்டில் இவன் பாட்டாளித் தோழன் என்று



உரிமை எனும் முழக்கம் வந்தது

அது உழைப்பு எனும் வடிவில் வந்தது

கூடிக் கட்டிய வீடு என்பது

சிறைக் கூண்டு போல ஏன்தான் மாறணும்?

ஜன்னல்களைத் திறந்துவிடுங்கள்... புதிய காற்று வரட்டும்

திண்ணைகளைக் கட்டி வையுங்கள்... பாட்டாளிகள் படுத்துறங்கட்டும்...

-என்று பாடுகிறது.

***

அடுத்ததாக அந்த ஊரில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் எல்லாரும் வெறுமனே ஒப்புக்கு இங்குமங்கும் மண்ணையும் புல்லையும் வெட்டிவிட்டு காசு வாங்கிச் செல்வதைப் பார்க்கிறது. அரசாங்கம் குறைந்தபட்ச வேலைக்கான உத்தரவாதமாக ஒவ்வொரு நபருக்கும் 100 நாள் வேலை தருவதாகவும் அதில் பெரிய கருவிகள், டிராக்டர்கள் இவற்றையெல்லாம் பயன்படுத்தக்கூடாதென்றும் சொல்கிறார்கள். அப்படியானால், சரி கிராமத்தில் இருக்கும் எளிய கடினமான கேவலமான வேலைகளை மேம்படுத்த இதைப் பயன்படுத்திகொள்ளலாமே என்று சொல்கிறது. கிராமப்புறத்தில் எல்லாரும் திறந்தவெளிக் கழிப்பிடத்தில் மலம் கழிக்கிறார்கள். இதைப் பார்க்கும் மனிதக் குரங்கு அங்கு ஒரு பொதுக் கழிப்பிடத்தைக் கட்ட ஆலோசனை சொல்கிறது. அதுபோல் சாக்கடை தோண்டுபவருக்கு உதவும் வகையில் பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்து சாக்கடைக் கழிவுகளை அதில் கலக்கும்படியும் அந்த கால்வாயை ஊருக்கு வெளியே கொண்டுசென்று விளை நிலத்துக்கு அந்த நீரும் கழிவும் பயன்படுவதுபோலவும் செய்து தருகிறது.

முதலில் யாரும் இந்தக் கடினமான வேலையைச் செய்ய முன்வராமல் போகவே மனிதக் குரங்கு தானாகவே குழியை வெட்டி மண்ணை அள்ளிப் போட்டு வேலை செய்கிறது. மெள்ள மெள்ள நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஈடுபடும் பெண்கள் உதவி செய்ய வருகிறார்கள். அதன் பிறகு ஆண்கள் வருகிறார்கள். ஒருவழியாக அந்த கிராமத்தில் இருந்த இழிவான வேலைகள் செய்பவர்களுக்கு உதவும் வகையில் அந்த வேலைகள் செய்து முடிக்கப்படுகின்றன.

***

மனிதக் குரங்குகள் உலகத்தில் ஒரு கர்ப்பிணிக் குரங்குக்கு பிரசவத்தில் சிக்கல் வருகிறது. தமன்னா வெர்டனரி டாக்டர் என்பதால் அந்தக் குரங்குக்கு நீரில் பிரசவம் பார்த்து குழந்தையைக் காப்பாற்றிவிடுகிறார். குழந்தைக்கு தமன்னாவின் பெயரைப் பெற்றோர் சூட்ட முன்வருகிறார்கள். அவரோ மனிதக் குரங்கினரின் குல தெய்வப் பெயரைக் கேட்டு அதைச் சூட்டுகிறார்.

அடுத்ததாக, வேட்டைக்காரர்கள், குரங்குகளைப் பிடிக்க வருகிறார்கள். தமன்னா அவர்கள் முன்னால் பாய்ந்து, "என் ஆட்களைத் தொடணும்னா என்னைத் தாண்டி... தொட்டுப் பாருடா' என்று லேடி டார்ஸானாக சண்டைபோட்டு அவர்களை விரட்டியடிக்கிறார்.

தமன்னா அங்கு இருக்கும்போது ஒரு முறை மழை பொய்த்துவிடுவதால் மரங்களில் போதிய காய்கனிகள் கிடைக்காமல் போய்விடுகிறது. மனிதக் குரங்குகள் கூட்டம் கூட்டமாக வேறிடம் தேடி நகரத் தொடங்குகின்றன. இப்படி காட்டில் தானாக விளைவதை மட்டும் உண்டுவராமல் விவசாயம் செய்தால் நமக்குத் தேவையானதை எளிதில் பெறலாம் என்று சொல்லி மனிதக் குரங்குகளுக்கு விவசாயம் செய்யக் கற்றுத் தருகிறாள்.

"கடவுள் எனும் முதலாளி

கண்டெடுத்த தொழிலாளி...

விவசாயி... விவசாயி'

- என்று பாடியபடியே அந்தக் காட்டை பச்சைப் பசேலென்ற வயல் வெளியாக மாற்றிவிடுகிறார்கள்.

அருவி நீரைப் பயன்படுத்தி சக்கரத்தைச் சுழல வைத்தும் ஒவ்வொரு குகையின் மீதும் சூரிய தகடுகள் பொருத்தியும் அந்த காட்டையே மின் மிகைக் காடாக மாற்றுகிறாள். இருண்ட குகைக்குள் இருக்கும் வயதான மனிதக்குரங்கின் முகம் அந்த குகையில் எரியும் முதல் குழல் விளக்கில் பிரகாசிப்பதைப் பார்த்து குரங்கு உலகமே ஆனந்தத்தில் ஆடுகிறது.

***

மனிதர்கள் இனத்தில் சிலர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்துகிறார்கள். மனிதக் குரங்கு அது தொடர்பான பல கேள்விகளைக் கேட்கிறது.

பிராமணர்கள் எல்லாருக்குமே கருவறைக்குள்ள போகமுடியுமா?

முடியாது. அர்ச்சக பிராமணர்கள் மட்டுமே போக முடியும்.

பிராமண அர்ச்சகர்கள் ஏன் கருவறைக்குள்ள மத்தவங்க வரக்கூடாதுன்னு சொல்றாங்க.

கோவிலுக்கு அர்ச்சகர்ங்கறவர் முதலாளி மாதிரி. ஒரு அலுவலகத்துல முதலாளியோட நாற்காலில அவர் மட்டும் தான் உட்கார முடியும் இல்லையா... அந்த அலுவலகத்துக்கு வர்றவங்க எல்லாருமே நானும் முதலாளியோட நாற்காலில உட்காருவேன்னு சொன்னா சரியா இருக்குமா..?

தமிழ் நாட்டுல எத்தனை கோவில்கள்ல இது மாதிரி கருவறைக்குள நுழையக்கூடாதுன்னு சொல்றாங்க..?

பெரும்பாலும் எல்லா கோவில்கள்ளயுமே அதுதான் நிலைமை. பூசாரிக்கு கருவறை... பக்தருக்கு பிரகாரம்.

பூசாரிங்க எல்லாருமே பிராமணர்கள்தானா..?

இல்லை... முப்பது நாற்பது சதவிகிதம்பேர் பிராமணரா இருப்பாங்க. மத்ததெல்லாம் ஒவ்வொரு சாதிலயும் இருப்பாங்க.

பிராமணரல்லாத கோவில்ல கருவறைல எல்லாரும் போக முடியுமா..?

அங்கயும் அந்த பூசாரி மட்டும்தான் போக முடியும்.

இந்த மாதிரியான போராட்டங்கள் எங்கெல்லாம் நடக்குது?

பிராமணர்கள் குருக்களா இருக்கற கோவில்கள்ல மட்டும்தான்.

ஏன் அப்படி?

ஏன்னா, கருவறைக்குள்ள அர்ச்சகரைத் தவிர வேற யாரும் நுழையக்கூடாதுன்னு சொன்னது அவங்கதான்.

ஆனால், அதை எல்லாரும்தானே பின்பற்றறாங்க.

ஆமாம்.

சரி... கோவில் குருக்களுக்கு சம்பளம் எங்க இருந்து கிடைக்குது?

சில கோவில்களுக்கு தனி நிர்வாகம் இருக்கும். அவங்க சம்பளம் தருவாங்க. சில கோவில்களை அரசாங்கம் எடுத்து நடத்துது. அவங்க அந்தக் கோவில் அர்ச்சகர்களுக்கு சம்பளம் தருவாங்க. பொதுவா, அர்ச்சகர்களுக்கு தீபாரதனைத் தட்டுல பக்தர்கள் காசு போடுவாங்க. ஆனால், அரசாங்கம் எடுத்து நடத்தாத கோவில்கள்ல அர்ச்சகர்களுக்குக் கூடுதல் பணம் தீபாராதனைத் தட்டுல இருந்தே கிடைக்கும்.

அதாவது, கருவறைக்குள்ள அனுமதிக்கமாட்டேன்னு சொல்ற அர்ச்சகருக்கு பக்தர்கள் அதிக காணிக்கை தர்றாங்க இல்லையா. அப்பறம் அரசாங்கம் எடுத்து நடத்தற கோவில்கள்லயும் அர்ச்சகர் தவிர வேற யாரும் நுழைய முடியாது இல்லையா..?

ஆமாம். ஏன்னா எந்த பக்தரும் கருவறைக்குள்ள நுழையணும்னு கேட்கலை. பிராமணர்கள் ஆகம விதி முறைப்படி அர்ச்சகர்களுக்கு மட்டுமே கருவறையில் நுழைய அனுமதி உண்டுன்னு சொல்றாங்க. அதை பக்தர்கள் ஏத்துக்கறாங்க. அப்பறம் அரசாங்கம் எல்லாரையும் கருவறைக்குள்ள நுழையலாம்னு சொன்னா அப்பறம் எந்த பக்தரும் அந்தக் கோவிலுக்குப் போகமாட்டார்ங்கறதுனால அவங்களாலயும் ஒண்ணும் செய்ய முடியலை.

அப்போ போராடறவங்களுக்கு மட்டும்தான் இது பெரிய பிரச்னையா இருக்கு இல்லையா..?

ஆமாம்.

போராடறவங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?

கிடையாது.

ஒருவேளை கருவறைல எல்லாரும் நுழைய அனுமதி கிடைச்சா அப்பவாவது கோவிலுக்குப் போவாங்களா...

அதெல்லாம் மாட்டாங்க. ஒரு அநீதி நடக்கறதைப் பார்த்தா அவங்களால சும்மா இருக்க முடியாது. அதனால பொங்கறாங்க.

நல்ல விஷயம்தான். எல்லா அநீதியையும் எதிர்த்து இதே மாதிரி பொங்குவாங்களா..?

ஐ... நல்ல கதையா இருக்கே... பாதுகாப்பான, ஆதாயம் தரக்கூடிய உண்மைகளை மட்டும்தான் பேசுவாங்க. அதுக்கு மட்டும்தான் போராடுவாங்க. அவங்களுக்கும் குடும்பம் குட்டியெல்லாம் உண்டு இல்லையா.

அது சரி... காசு கொடுத்தால் பிற சாதியினரையும் பிற பிராமணர்களையும் அர்ச்சகர்கள் உள்ளே அனுமதிப்பாங்களா..?

மாட்டாங்க.

அப்போ, பிற சாதிக்காரங்களுக்கு பிராமணர்கள் சடங்கு சம்பிரதாயம் எதுவுமே செய்து தரமாட்டாங்களா.

அதெல்லாம் கிடையாது. எல்லா விசேஷங்களையும் நடத்திக்கொடுப்பாங்க. கோவிலுக்குள்ள கூட தர்ம தரிசனம், காசு தரிசனம் எல்லாம் உண்டு. ஆனா கருவறை தரிசனம் மட்டும் கிடையாது.

இந்தியா பூராவுமே இதுதான் நிலைமையா?

வட இந்தியாவிலும் தென்னிந்தியாவில் திறந்த வெளி சிறு தெய்வக் கோவில்களிலும் பக்தர்களே கருவறைக்குள் சென்று அபிஷேகமே செய்ய முடியும்.

சரி... இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? ஆக இது தீர்க்க வேண்டிய பிரச்னைதான். ஆனா போராட வேண்டிய விஷயமா எனக்குத் தோணலை. இந்தப் பிரச்னையைத் தீர்க்கப் பெருந்தெய்வக் கோவிலில் ஒரு புதிய சன்னதி கட்டி அந்த ஸ்வாமியின் கருவறைக்குள் பக்தர்கள் எல்லாரும் சென்று அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யலாமே என்று யோசனை சொல்கிறது. பூசாரி இல்லாத அந்தக் கருவறையில் அபிஷேகம் செய்யப்படும் பாலை பக்தர்கள் தாமே எடுத்துச் செல்கிறார்கள். அல்லது முன்பு வழக்கத்தில் இருந்ததுபோல் பிற பக்தர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. மெள்ள மெள்ள புதிய கருவறை தெய்வத்துக்கு பக்தர்கள் பெருகி பழைய கருவறை தெய்வத்தின் சன்னதியில் கூட்டம் குறைகிறது. பழைய குருக்கள் மங்கலான விளக்கு எரியும் கருவறையில் இருந்து நூற்றி எட்டு அகல் விலக்குகள் ஜொலிக்கும் புதிய கருவறையை ஏக்கத்துடன் பார்க்கிறார். பிறகு மெள்ள வெளியே வந்து அந்தக் கோவிலின் ஸ்தல விருட்சத்தை நோக்கி நடக்கிறார். அங்கு இருளடைந்து கிடக்கும் புற்று மண்ணுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பூசாரியைப் பார்க்கிறார். குருக்கள் வருவதைப் பார்த்ததும் பூசாரி பதறி எழுந்து நிற்கிறார். குருக்கள் பெருமூச்சுவிட்டபடியே இரு கைகளைத் தலைக்கு மேலே தூக்கி புற்றுக் கோவிலை வணங்குகிறார். பூசாரி புற்று மண் தட்டை எடுத்து குருக்களிடம் நீட்டுகிறார். அவரோ புற்றுக் கோவில் பூசாரி முன் குனிந்து தன் நெற்றியைக் காட்டுகிறார். பூசாரி நடுங்கும் விரல்களால் குருக்களுக்கு புற்று மண்ணை இட்டு விடுகிறார். இருவர் கண்களில் இருந்தும் கண்ணீர் அருவியாகக் கொட்டுகிறது.

மனிதக் குரங்கு அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அதிகக் கவனிப்பின்றிக் கிடக்கும் சரஸ்வதி சன்னதிக்குச் செல்கிறது. வலதுபக்கம் புற்றுக்கோவில் பூசாரியை அமர வைக்கிறது. இடது பக்கம் குருக்களை அமரவைக்கிறது. அவர்களுக்கு முன்னால் ஒரு புத்தகப் பலகையைக் கொண்டுவந்து வைக்கிறது. இருவரும் தமிழ் மந்திரங்களையும் சமஸ்கிருத மந்திரங்களையும் கோவிலுக்கு வரும் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறார்கள். சரஸ்வதி சன்னதியில் விளக்குகள் பிரகாசிக்கத் தொடங்குகின்றன.

***

அதையும் தாண்டிப் புனிதமானது... (5)

அடுத்ததாக பண்ணைப்புரத்தில் திருவிழா வருகிறது. விழாவுக்காக ஆடுகளை வளர்ப்பவர்களிடமிருந்து மனிதக் குரங்கும் ஓர் ஆடை வாங்கி வளர்க்க ஆரம்பித்திருந்தது. கடவுள் வந்து வாங்கிச் செல்வார் என்று சொன்னதை நம்பி ரொம்பவும் ஆசையுடன் வளர்க்கிறது. ஆடு மாடுகளைக் கூட்டமாக வைத்துக்கொண்டு பாடுகிறது:

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக

தோழா ஏழை நமக்காக

கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக

நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக



கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக

மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக

(புத்தன் இயேசு )



நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு

பகை வந்தபோது துணை ஒன்று உண்டு

இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு

எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு

உண்மை என்பது என்றும் உள்ளது

தெய்வத்தின் மொழியாகும்

நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்

(புத்தன் இயேசு )



பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை

தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை

மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்

அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்

அழுதவர் சிரித்ததும் சிரிப்பவர் அழுததும்

விதி வழி வந்ததில்லை

ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை என்று ஆடிப்பாடுகிறது.

விழா நாள் வருகிறது.

தென்னை ஓலைத் தடுப்புக்குப் பின்னால் ஒவ்வொரு ஆடாகக் கொண்டு செல்லப்பட்டு பலி கொடுக்கப்படுகின்றன. மனிதக் குரங்குக்கு ஆடுகளை வெட்டிக் கொல்கிறார்கள் என்பது தெரியாது. கடவுள் வந்து வாங்கிச் செல்கிறார் போலிருக்கிறது என்று நம்பியபடி தான் ஆசையாக வளர்த்த ஆடையும் கொண்டுவருகிறது. அங்கே உள்ளே போனதும் ரத்தம் தோய்ந்த அருவாளுடன் பூசாரி நிற்பதைப் பார்த்ததும் மனிதக்குரங்கு பதறுகிறது. என்ன செய்கிறீர்கள் என்று கேட்கிறது. ஒரு ஆடை அதன் கண் முன்னால் பலி கொடுக்கிறார்கள்.

மனிதக் குரங்கு பதறியடித்துத் தன் குழந்தை ஆடை அழைத்துக்கொண்டு வெளியே ஓடுகிறது. அனைவரும் வந்து ஆடைக் கொடு பலி கொடுக்கவேண்டும் என்கிறார்கள்.

கடவுள் அன்பானவர் என்று சொல்கிறீர்கள். இந்த உலகத்தைப் படைத்தது அவர்தான் என்றும் சொல்கிறீர்கள். கடவுளால் படைக்கப்பட்ட ஓர் உயிரை கடவுளால் படைக்கப்பட்ட இன்னோர் உயிர் கொல்வது சரியா... கடவுளுக்குப் படைப்பதாகச் சொல்லி நீங்கள்தான் சாப்பிடுகிறீர்கள். ஆக உங்களுடைய நாக்கு ருசிக்காக ஒரு உயிரைக் கொன்றுவிட்டு அதை நியாயப்படுத்திக்கொள்ள கடவுளைத் துணைக்கு அழைக்கிறீர்களா..? எல்லா உயிரிலும் கடவுள் இருக்கிறார் என்றால் நீங்கள் ஒரு கடவுளைத்தான் வெட்டிக் கொன்று சாப்பிடுகிறீர்கள்... இதை நிறுத்துங்கள் என்று சொல்கிறது.

கடவுள் அப்படி ஒண்ணும் கருணைக் கடல் கிடையாது. சிங்கம் புலிக்கு உணவா ஆடு மாட்டைப் படைச்சிருக்காரு. அது தப்பா என்ன... இயற்கை... மனுஷன் விவசாயம் கண்டுபிடிச்சு பத்தாயிரம் வருஷம்தான் ஆகியிருக்கு. அதுக்கு முன்னால உலகம் முழுவதுமே வேட்டையாடி மாமிசம்தான் சாப்பிட்டு வந்திருக்கான். அதனால மாமிச பட்சிணியான மனுஷன் மாமிசம் சாப்பிடறதுல தப்பே இல்லை என்கிறார் ஒருவர்.

மனுஷன் மாமிஷ பட்சிணின்னு யார் சொன்னாங்க... மனிதர்கள் குரங்கில இருந்து வந்தாங்கன்னுதான டார்வினே சொல்லியிருக்காரு. குரங்குங்க தாவர பட்சிணியா இருக்கும்போது மனுஷன் மட்டும் எப்படி மாமிச பட்சிணியா இருக்கமுடியும்? மனுஷனுக்கு கோரைப் பல்லோ கூர்மையான நகங்களோ கிடையாது. மாமிசத்தை வேக வைக்காம மனுஷனால சாப்பிடமுடியாது. எந்த மாமிச பட்சிணி வேக வெச்சு சாப்பிடுது. இதுல இருந்தே தெரியலையா மனுஷன் மாமிசபட்சிணி இல்லைங்கறது. உங்க நாக்கு ருசிக்காக இயற்கையை மாத்தறீங்க.

செடிகளுக்குக் கூடத்தான் உசிரு இருக்கு. அதைச் சாப்பிடறதும் அப்போ தப்புத்தான?

ஒரு செடிலருந்து ஒரு காயையோ கனியையோ பறிக்கறதுனால அந்தச் செடி செத்துப் போறதில்லை. ரத்தம் உள்ள உயிர்களுக்குத்தான் வலி இருக்கும். அதனால காய் கனிகளையும் தானியங்களையும் சாப்பிடறது தப்பே இல்லை.

மனுஷனுக்கு மூளை வளர்ச்சி அடைந்ததுக்குக் காரணமே அவன் மாமிசம் சாப்பிட ஆரம்பிச்சதுதான். இல்லைன்னா குரங்காவேதான் இருந்திருப்பான்.

மாமிசம் சாப்பிட்டா மூளை வளரும்னா சிங்கத்துக்கும் புலிக்கும் ஏன் வளரலை. நாலு கால்ல நடந்த நம்ம முன்னோர்கள்ல சிலர் நிமிர்ந்து நடக்க ஆரம்பிச்சதும் அவங்களோட முன்னங்கால் எல்லாம் கையா மாறி மனுஷனாயிட்டாங்க. மனுஷனுக்கு கைகள் கிடைச்சதுதானதால் வேலைகளை சீக்கிரமா முடிக்க முடிஞ்சது. அதனாலதான் நிறைய ஓய்வு கிடைச்சு யோசிக்க நேரம் கிடைச்சு மூளை வளர்ந்திருக்கு. மாமிச உணவு மனித மூளையை மழுங்கடிக்கத்தான் செய்யும்.

ஒருத்தர் என்ன சாப்பிடணுங்கறதைத் தீர்மானிக்கற சுதந்தரம் அந்த மனுஷருக்குத்தான் உண்டு. வேற யாருக்கும் கிடையாது.

உங்களுக்கு சாப்பிடறதுக்கே இத்தனை உரிமையும் சுதந்தரமும் உண்டுன்னா அந்த விலங்குகளுக்கு உயிர் வாழ்ற சுதந்தரமும் உரிமையும் அதைவிட அதிகமா இருக்கே. அதை நீங்க பறிக்கறது நியாயமா..? அப்படியே மாமிசம்தான் சாப்பிடணும்னா சிங்கத்தையோ புலியையோ அடிச்சி சாப்பிடவேண்டியதுதான... எதுக்காக உங்களை நம்பி வாழ்ற உங்களைவிட பலம் குறைஞ்ச மாட்டையும் கோழியையும் மாட்டையும் அடிச்சுக் கொல்றீங்க... இது நம்பிக்கைத் துரோகமும்கூட இல்லையா.

கோவில்ல மணியாட்டிக்கிட்டிருக்கற பார்ப்பான் மாதிரிப் பேசற நீ? அவன் கூடாதுன்னு சொல்றதுனாலயே நாங்க சாப்பிடுவோம்.

வள்ளுவர் கொல்லாமை குறித்துச் சொன்ன பத்து குறள்களையும் அங்கு இருக்கும் ஒவ்வொரு குழந்தையையும் மனிதக் குரங்கு ஒப்பிக்கச் சொல்கிறது. குழந்தைகள் குறளைச் சொல்ல சொல்ல மனிதக் குரங்கு அதற்கு விளக்கம் சொல்கிறது.

வள்ளுவரைப் போகச் சொல்லு... அவரு குடிக்கக்கூடாதுன்னு சொல்லுவாரு... பொய் சொல்லாதன்னு சொல்லுவாரு... அதெல்லாம் சும்மா பள்ளிக்கூடத்துல படிக்கவும் பஸ்ல எழுதிப்போடவும்தான் லாயக்கு. அதான் அவருக்கு ஊருக்கு ஒதுக்குப்புறத்துல ஒரு பெரிய சிலை வெச்சாச்சுல்ல... அவரு அங்கினயே இருக்கட்டும். ஊருக்குள்ள வந்துட்டாருன்னா கதை கந்தலாகிடும். இன்னும் சொல்லப்போனா அது அவர் எழுதினதே கிடையாது. பார்ப்பானுங்க எழுதி திருக்குறளுக்குள்ள சொருகியிருக்கானுங்க. எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்... கொன்ன பாவம் தின்னா போச்சு. அவ்வளவுதான் கதை என்று சொல்லி கோவில் வளாகத்திலேயே ஆட்டைக் கறி சமைத்து குடும்பம் குடும்பமாகத் தின்று மகிழ்கிறார்கள்.

மனிதக் குரங்கு, ஏசுநாதர் போல் தான் வளர்த்த ஆடை மார்போடு அணைத்தபடி, சோகமாக ரத்தம் தோய்ந்த வளாகத்தில், மூங்கில் முளைகளில் வெறும் கயிறுகள் மட்டும் கிடப்பதைப் பார்த்தபடியே அந்தக் கூட்டத்தின் நடுவே நடந்துசெல்கிறது.

புத்தன் இயேசு வள்ளுவர் பிறந்தது பூமியில் எதற்காக

தோழா கல்லாய் சிலையாய் கிடப்பதற்காக

கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக

மென் உயிர் கொன்று தன் உயிர் வளர்க்கும் அற்பப் பதர்களுக்காக

- பாடல் வரிகள் சோகமாகப் பின்னணியில் ஒலிக்கின்றன.

அதைக் கண்டு மனம் கலங்கும் சிறுவர்கள் ஆட்டுக்கறி உணவைக் கொண்டு குப்பையில் கொட்டிக் கைகளைக் கழுவுகிறார்கள். மனிதக் குரங்கு அவர்களைப் பார்த்து கண்ணீர் மல்க சிரிக்கிறது. குட்டி ஆடு மனிதக் குரங்கின் கைகளில் இருந்து துள்ளிக் குதித்து குழந்தைகளை நோக்கி தத்தித் தத்தி ஓடுகிறது. ஒரு குழந்தை அதை எடுத்து அணைத்து முத்தமிடுகிறது. சொடலை மாடன் சன்னதிக்கு முன்பாகக் குட்டி ஆடைக் கொண்டு செல்கிறார்கள். மாடனின் கழுத்தில் போட்டிருந்த மாலை ஒன்று கழன்று ஆட்டுக் குட்டி முன்னால் விழுகிறது. குட்டி ஆடு அதை ஆசை ஆசையாகச் சாப்பிடுகிறது. சிறுவர்களும் மனிதக் குரங்கும் மாடனைக் குலவையிட்டுக் கையெடுத்துக் கும்பிடுகிறார்கள்.



***

அதையும் தாண்டிப் புனிதமானது... (4)

அடுத்ததாக குரங்கு உலகில் பெண் மனிதக் குரங்கு ஒன்று வால் குரங்கு ஒன்றைக் காதலிக்கிறது.

மாசிலா நிலவே நம்

காதலை மகிழ்வோடு

மாநிலம் கொண்டாடுமா...

- என்று பாடியபடி அவை ஓடிப் பிடித்து விளையாடுகின்றன. அவர்கள் இப்படிக் காதலிக்கும் விஷயம் ஊருக்குத் தெரியவந்ததும் பிரச்னை உருவாகி பஞ்சாயத்து கூடுகிறது.

"அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே...

பனித்துளியைப் போல குணம் படைச்ச தென்னவனே...'

- என்று பாடல் ஒலிக்க, பதினெட்டு பட்டி குரங்குகளும் எழுந்து நின்று வணங்க, மயிலக் காளை வண்டியில் இருந்து இறங்கும் நாட்டாமை குரங்கு ஆல மரத்தடியில் விரிக்கப்பட்ட போர்வையில் சென்று அமர்கிறது. தலைக்கு மேலே ஒரு கத்தி தொங்குகிறது. தவறாகத் தீர்ப்பு வழங்கினால் கத்தி பாய்ந்து நாட்டாமை கொல்லப்பட்டுவிடுவார்.

விசாரணை ஆரம்பிக்கிறது.

வாலுள்ள குரங்கைப் பார்த்து,"நீங்க என்ன ஆளுங்க தம்பி' என்று கேட்கிறார் நாட்டாமை.

எல்லாம் குரங்கு சாதிதான் என்று அந்தக் குரங்கின் தந்தை சொல்கிறார்.

மனிதக் குரங்கின் தந்தை ஆத்திரத்தில் குறுக்கிட்டு, நீ வாலுள்ள குரங்குடா...

எனக்கு வால் இருந்தா என்ன..?

இனம் இனத்தோடதாண்டா சேரணும்.

உனக்கும் ரெண்டு கண்ணு இருக்கு... எனக்கும் ரெண்டு கண்ணு இருக்கு... உனக்கு ரெண்டு கை இருக்கு... எனக்கும் ரெண்டு கை இருக்கு...

ஒரே இனங்கறது கையைக் காலைப் பார்த்து சொல்றது இல்லைடா... வாழற விதத்தைப் பார்த்தும் கும்பிடுற சாமியைப் பார்த்தும் சொல்றது. அதுமட்டுமில்லாம நாங்கள்லாம் ஆண்ட பரம்பரைடா.

அப்போ நாங்க என்ன மோண்ட பரம்பரையா?

நாட்டாமை சத்தம் போட்டு அவர்களை அடக்குகிறார்.

ஏம்மா நீ என்னம்மா சொல்ற..?

நான் வாழ்ந்தா இவர் கூடத்தான் வாழ்வேன்...

என் பொண்ணு சின்னப் பொண்ணுய்யா.. அறியா வயசு... அந்தப் பையனும் பச்சப் புள்ளைய்யா... நாலு மரம் ஏறி இறங்கக்கூடத் தெரியாதுய்யா.

கூட்டத்தில் இருந்து ஒரு வாலுள்ள குரங்கின் குரல் : அதெல்லாம் நல்லா ஏறுவாப்புல... சந்தேகம் இருந்தா உன் பொண்ணுக்கிட்ட கேட்டுப்பாரு.

டேய்... அடங்குங்கடா டேய்.

அதெல்லாம் அந்தக் காலம்... இப்போ அடக்கணும்னு நினைச்சா அடக்கிருவோம்.

ஏய் நிறுத்துங்கப்பா... பஞ்சாயத்து எதுக்கு கூட்டியிருக்கீங்க... சண்டைதான் போடறதுன்னு முடிவு செஞ்சிட்டா இங்க எதுக்கு வந்தீங்க... நேர வெட்டிக்கிட்டுச் சாகவேண்டியதுதான.

வாலுள்ள இளம் குரங்கைப் பார்த்து நாட்டாமை... என்னப்பா இப்படிப் பண்றியே... அந்தப் பொண்ணை வளர்த்து ஆளாக்கினவங்களுக்கு மனசு எவ்வளவு கஷ்டப்படும்... அதை யோசிச்சுப் பார்த்தியா?

இதுல யோசிக்க என்ன இருக்கு? அந்தப் பொண்ணை யாருக்காவது கட்டிக் கொடுக்கத்தான போறாங்க... எனக்குக் கட்டிக்கொடுத்தா என்ன..?

பொண்ணுக்குப் பிடிச்சிருந்தா கட்டிக்கொடுக்க வேண்டியதுதான..? என்று வாலுள்ள குரங்குகளின் தலைவர் சொல்கிறார்.

மனிதக் குரங்கின் தந்தை, "கழுதை மூஞ்சிக் கொரங்குக்கு உன் வீட்டுப் பொண்ணை நீங்க கட்டிக் கொடுப்பீங்களா?' என்று கேட்கிறார்.

அப்படி ஒருத்தன் எங்ககிட்ட நடந்திருவானா... அவனை நாங்க வெட்டிப் பொலி போட்டுற மாட்டோம்?

நீங்களே அப்படி வீராப்பு பேசினா நாங்க எம்புட்டு பேச வேண்டியிருக்கும்.

பேசித்தான் பாருங்க.

பேசத்தான் போறோம் தம்பி... போறும் போறும்னு நீங்க சொல்ற அளவுக்கு பேசத்தான் போறோம். என்ன... வாய் பேசாது... கைதான் பேசும்.

அப்போ நாங்க மட்டும் அதை காதுகொடுத்து கேட்டுட்டா இருப்போம்... காவு கொடுத்துத்தான் கேப்போம்.

தலை இருக்கும்போது வாலு ஆடக்கூடாதுடா... எப்பன்னாலும் வாலுள்ளவன் கீழ தண்டா இருக்கணும்.

உன் பொண்ணுகிட்ட போய் கேளுடா... யார் மேல யார் கீழன்னு.

வாய்த் தகராறு முற்றிக் கைகலப்பாகிறது. ஒவ்வொரு குரங்கும் மரத்தையும் செடியையும் பிடிங்கி எறிந்து, கல்லை வீசித் தாக்கிக் கொள்கின்றன.

தமன்னா இதையெல்லாம் பார்த்து சண்டையைத் தடுக்க முயற்சி செய்கிறார். அவரை ஓரங்கட்டிவிட்டு அனைவரும் அடித்துக்கொள்கிறார்கள். தமன்னா மரத்தில் சாய்ந்துகொண்டு மேலே பார்க்கிறார். இலைகளினூடே தென்படும் பௌர்ணமி நிலவு பூமி முழுவதையும் தழுவியபடிப் பொழிகிறது.

மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா...

மண் குடிசை வாசலென்றால் தென்றல் வர மறுத்திடுமா...

உனக்காக ஒன்று எனக்காக ஒன்று

ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை...

கொடுத்ததெல்லாம் கொடுத்தார்

அவர் யாருக்காகக் கொடுத்தார்...

ஒருத்தருக்கா கொடுத்தார்

இல்லை ஊருக்காகக் கொடுத்தார் என்று மனம் நொந்து பாடுகிறார். கூட்டம் அதைக் கேட்டு ஸ்தம்பிக்கிறது. மெள்ள ஒவ்வொருவரும் தமது சண்டையை நிறுத்திவிட்டு வீடு திரும்புகிறர்கள்.

அனைவரும் போன பிறகு நாட்டாமை குரங்கும் தமன்னாவும் தனியாக உட்கார்ந்திருக்கிறார்கள்.

உங்களுக்கு இது தப்புன்னு தோணுதுல்ல... நீங்க சொன்னா இவங்க கேட்பாங்கள்ல...

அப்படி இல்லைம்மா... நான் சொல்றதைக் கேட்டு அவங்க நடக்கறதில்லைம்மா... நான் தான் அவங்க எதைக் கேட்டு நடப்பாங்களோ அதைச் சொல்லிட்டு என் மரியாதையைக் காப்பாத்திட்டு வர்றேன். உடம்பு இழுக்கற இழுப்புக்குத்தானம்மா தலை போயாக வேண்டியிருக்கு.

நீங்க இப்படிச் சொல்றீங்க... மத்த குரங்குகளைக் கேட்டா நீங்கதான் கலப்புத் திருமணத்தைத் தடுக்கறதா சொல்றாங்க.

இது ஒரு விசித்திரமான வளையம் அம்மா... அவங்களுக்கு அதுதான் பிடிக்கும்னு நான் இதைச் செய்யறேன். நான் இதைத்தான் சொல்றேன்னு அவங்க செய்யறாங்க... ஒருவகைல பார்த்தா யாருமே காரணமில்லை. இன்னொரு வகைல பார்த்தா எல்லாருமேதான் காரணம்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் பக்கத்துக் கிணற்றில் "பொத்' என்று ஏதோ விழும் சத்தம் கேட்கிறது. வேகமாக ஓடிப் போய் பார்க்கிறார்கள். மனிதக் குரங்கின் அப்பா! தமன்னா காட்டுக்கொடிகளைக் கயிறாக்கி கிணற்றுக்குள் குதித்து அவரைக் காப்பாற்றுகிறார்.

என்னங்க நீங்க இப்படிப் பண்ணிட்டீங்க...

இத்தனை வருஷம் பெத்து வளர்த்து ஆளாக்கின பொண்ணு இப்படி ஒரு காரியம் பண்ணிட்டாளேன்னு மனசு கேட்கலைம்மா... ஒரு புள்ளையைப் பெத்து வளக்கறதுன்னா சும்மாவா... பத்து மாசம் வயத்துல சொமந்து, தூங்காம கொள்ளாம பார்த்துகிட்டு, நடக்க கத்துக் கொடுத்து, மரமேறக் கத்துக் கொடுத்து, பத்திருவது வருஷம் பழம் காய் பறிச்சுக் கொடுத்து, நோய் நொடி வந்தா பச்சிலை அரைச்சுப் போட்டு, உயிருக்கு உயிரா பாசத்தைக் கொட்டித்தானம்மா வளக்கறோம். நான் தனி ஆளு... எனக்குப் பிடிச்சவரைக் கல்யாணம் கட்டிப்பேன்னு இன்னிக்கு வந்து சொல்றதுல என்னம்மா நியாயம் இருக்கு. பிறந்தது தனியா பொறந்துட்டியா... வளர்ந்தது தனியா வளர்ந்துட்டியா...வாழறதுதான் தனியா வாழ்ந்துடப்போறியா... ஊர் உறவு மத்தியில, சாதி சனம்கூடத்தான வாழ்ந்தாகணும். நான் தனி ஆளுன்னா என்ன அர்த்தம்? இதைத் தடுக்கத்தான் அந்தக் காலத்துல பத்து பன்னண்டு வயசுலயே கல்யாணம் பண்ணி வெச்சாங்களோ என்னவோ.

இப்போ அப்படி என்ன தப்பு பண்ணிட்டா... மனசைப் பறிகொடுத்தவர்கூட வாழப்போனது தப்பா..?

ஏம்மா அந்த பாழப்போன மனசை சொந்த சாதியில ஒருத்தனைப் பார்த்து பறிகொடுக்கக்கூடாதா. காதலிச்சதைத் தப்புன்னு சொல்லலையே... தப்பானவனை ஏன் காதலிச்சன்னுதான கேட்கறேன்.

தப்பானவன்னு எப்படிச் சொல்றீங்க?

அந்த வாலுள்ள கொரங்குக்கு ஒரு குகை உண்டா... சொந்தமா ஒரு மரம் உண்டா..? என் பொண்ணு மேல ஆசைப்பட்டுக் காதலிக்கலை. என் சொத்துக்கு ஆசைப்பட்டுத்தான் வலை வீசியிருக்கான். ரெண்டு வருஷம் கழிச்சு சொத்தைப் பிரிச்சுக் கொடுன்னு வந்து நிப்பான். தரமாட்டேன்னு சொன்னா பொண்ணை நடுத்தெருவுல விட்டுட்டுப் போயிடுவான்.

சொத்து கேட்டா கொடுக்க வேண்டியதுதான... மகளுக்குக் கொடுக்கறதை மருமகனுக்குக் கொடுக்க வேண்டியதுதான..?

மக மகளா நடந்துக்கிட்டாத்தானம்மா அவளுக்கே தரமுடியும்... இதுல மருமகனுக்கு வேற கொடுக்க முடியுமா?

அப்போ அவங்க சொத்து வேண்டாம்னு சொன்னா எக்கேடு கெட்டுப் போங்கன்னு விட்ருவீங்களா?

மகளின் தந்தை மவுனமாக இருக்கிறார். பிறகு மெள்ள குரல் உடைந்து சொல்கிறார்: இதையெல்லாம் கூடத் தாங்கிக்கலாம்மா. ஆனா எங்க போனாலும் "வால் குரங்கு சம்பந்தி... வால் குரங்கு சம்பந்தி'ன்னு எல்லாரும் கேலி செய்யறாங்க... அதைத்தான் தாங்க முடியலைம்மா.

அதைச் சொல்லுங்க... அதுதான முக்கியமான காரணம்.

ஆமாம்மா. வளத்து ஆளாக்கின பொண்ணு நம்மை மதிக்காம போனதைக்கூடப் பொறுத்துக்கலாம். சொத்து கேட்டு வர்றதைக்கூடச் சமாளிச்சிடலாம்... பொண்ணை நல்லவிதமா காப்பாத்தாம விட்டான்னா அதைக்கூட செஞ்ச தப்புக்கு கஷ்டப்படறான்னு விட்டுடலாம். ஆனா சாதிசனம் பண்ற கேலி... அதைத்தான் தாங்க முடியலை. அவன் மட்டும் வால் குரங்கா இல்லாம இருந்தா எந்தப் பிரச்னையும் இல்லையேம்மா.

அப்போ அந்த வாலுள்ள குரங்கை அந்தக் கூட்டத்துல இருந்து வெளிய வரச்சொன்னா ஏத்துப்பீங்களா.

அது எப்படி முடியும். வாலுங்கறது அவங்களுக்கு கூடவே பிறந்ததாச்சே. அதுமாதிரி எங்க இனத்துக்குள்ள வர்ணும்னா எங்க இனத்துல பிறந்தாத்தான முடியும்.

அது சரிதான். ஆனா ஒரு இனத்துல இருந்து வெளில வர்றது அவ்வளவு கஷ்டம் இல்லை. அது ஒரு அடையாளச் செயலா செஞ்சிடலாம். இப்போ உங்க இனத்துக்குன்னு ஒரு சாமி, தலைவர் இருப்பாருல்ல... அந்த தலைவரை அந்த வாலுள்ள குரங்கு விழுந்து கும்பிட்டா ஏத்துப்பீங்களா...

அது வந்து... என்ன பண்ணினாலும் வாலு கடைசிவரை இருக்கத்தான செய்யும்.

அந்த வாலைச் சுருட்டி வெச்சிக்கச் சொல்வோம். உங்க ஆளுங்ககிட்ட சொல்லுங்க... அவன் தான் உங்க தலைவரை தன்னோட தலைவரா ஏத்துக்கத் தயாராகிடுவான்ல. உங்க தலைவரை ஏத்துக்கறவரை உங்க இனமா ஏத்துக்கறதுல உங்களுக்கு என்ன கஷ்டம்? முழுசா ஏத்துக்க முடியாட்டாலும் இது ஓரளவுக்கு சரிப்பட்டு வரும். நாளைக்கு யாராவது உங்களைப் பார்த்து வால் குரங்கு சம்பந்தின்னு கேலி பண்ணினா, அவன் இப்போ வால் குரங்கு இனத்துல இல்லைப்பா... நம்ம தலைவரை தன்னோட தலைவரா ஏத்துகிட்டிருக்கான்னு சொல்லுங்க.

இதுக்கு அந்த வால் குரங்கு ஒத்துக்குமா...

கேட்டுப் பார்ப்போம். உங்க பொண்ணு மேல அவனுக்கு உண்மையான காதல் இருந்தா அவனோட இனத்தை விட்டுட்டு வரட்டும்.

தமன்னா நேராக வாலுள்ள குரங்கைச் சந்தித்து இந்த யோசனையைச் சொல்கிறார். அவன் தன் காதலிக்காக உயிரைக்கூடத் தரத் தயாராக இருப்பதாகச் சொல்கிறான். அதன்படியே மனிதக் குரங்குகளின் தலைவரின் சிலை இருக்கும் சமாதிக்குச் சென்று அவருக்கு மலர் மாலை அணிவித்து அவர் காலில் விழுந்து வணங்குகிறான். மனிதக் குரங்குக் கூட்டம் அவனைக் கட்டித் தழுவி வாழ்த்துகிறது. அடுத்த முகூர்த்த நாளில் திருமணம் செய்துவைக்கலாம் என்று மனிதக் குரங்குக் குழு தீர்மானிக்கிறது. ஆனால், வாலுள்ள குரங்குக் கூட்டத்துக்கு இது ஆத்திரத்தை கிளப்புகிறது. அதெப்படி நம்முடைய எதிரிகளின் தலைவரைப்போய் இவன் வணங்கலாம். அந்தப் பெண்ணைத்தானே நம் தலைவர் காலில் விழ வைத்திருக்கவேண்டும். இந்தக் கல்யாணத்தை நடக்கவிடமாட்டோம் என்று கொதிக்கிறார்கள்.

அந்த வால் பையனுக்கு எங்க தலைவரைக் கும்பிடத் தோணினா அதை மதிச்சு விட்றவேண்டியதுதான என்று பதிலுக்குக் கேட்கிறார்கள் மனிதக் குரங்கு குழுவினர். பிரச்னை தீராமல் இழுபறியாகிக் கொண்டேபோகிறது.

தமன்னா ஒரு யோசனை சொல்கிறார். வால் குரங்கு காதலனை லேசாக விஷம் சாப்பிட்டு மயங்கி விழச் சொல்கிறார். அவன் காதலில் இவ்வளவு தீவிரமாக இருக்கிறானென்று தெரிந்ததும் வால் குரங்குக் கூட்டம் அவனை ஏற்றுக்கொண்டுவிடும் என்று சொல்கிறார். அதன்படியே வீரியம் குறைவான விஷத்தை வால் குரங்குக்குக் கொடுக்கிறார். அந்தக் குரங்கு அதைச் சாப்பிட்டுவிட்டுக் கீழே விழுந்துவிடுகிறது. அனைவரும் இறந்துவிட்டதாக நினைக்கிறார்கள். வால் குரங்குக் கூட்டத்தினரும் மனிதக் குரங்குக் கூட்டத்தினரும் இறந்த குரங்கை நினைத்தும் அதன் தூய்மையான காதலை நினைத்தும் வருந்துகிறார்கள்.

ஆனால், இந்த நேரத்தில் இன்னொரு விபரீதம் நடக்கிறது. அவன் இறந்த செய்தி கேட்டதும் அதை உண்மையென்று நம்பிவிடும் மனிதக் குரங்குக் காதலி மரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுவிடுகிறது.

இதை எதிர்பார்க்காத தமன்னா அதிர்ச்சியில் உறைந்துவிடுகிறார். விஷத்தின் வீரியம் குறைந்ததும் மெள்ள சுய நினைவு திரும்பும் வாலுள்ள குரங்கு விஷயத்தைக் கேள்விப்பட்டதும் அந்த இடத்துக்குத் தள்ளாடித் தள்ளாடியபடியே விரைகிறது. சிறிது நேரம் ரத்தம் சிந்தி இறந்து கிடக்கும் தன் காதலியின் உடலையே பார்க்கிறது. பிறகு மெதுவாக அந்த மரத்தின் மீது ஏறிச் செல்கிறது. அனைவரும் கீழே நின்றபடி சோகமாக அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வால் குரங்குக் காதலன் மெள்ள உச்சிக் கிளைக்குச் செல்கிறது. பிறகு உச்சில் இருந்தபடி கைகளை அப்படியே விடுகிறது. வெட்டப்பட்ட மரக்கிளை கீழே விழுவதுபோல் காதலி குரங்கு இறந்து கிடக்கும் இடத்துக்கு அருகில் விழுந்து மண்டை உடைந்து இறக்கிறது. இரண்டின் உடம்பில் இருந்து வழிந்த ரத்தமும் ஒன்றாகக் கலக்கின்றன.

ரத்தக் கலப்பு கூடாதுன்னு சொன்னீங்கள்ல... அவங்க அவங்க ரத்தத்தைப் பிரிச்சி எடுத்துக்கிட்டுப் போய் எரியுங்க என்று தமன்னா அந்த ஜோடியைப் பார்த்து கதறி அழுகிறார். கூட்டம் அதிர்ச்சியில் உறைகிறது. அந்த சின்னஞ்சிறு ஜோடிகளை ஒரே சிதையில் கிடத்தி எரியூட்டுகிறார்கள்.

மாசிலா நிலவே நம்

காதலை மகிழ்வோடு

மாநிலம் கொண்டாடுமா... கண்ணே

- என்ற பாடல் சோக ராகத்தில் ஒலிக்கிறது.

***