Thursday 23 February 2017

பூசாரி மையங்களில் இருந்து கோவில் நோக்கி...



ராமகிருஷ்ணர், ஷிர்டி சாய் பாபா, புட்டப்பர்த்தி சாய் பாபா, மேல் மருவத்தூர் அம்மா என சம காலத்தில் புதிய கடவுளர்கள் பலர் தோன்றியிருக்கிறார்கள். இந்தப் புதிய கடவுளர்கள் எல்லாருக்குமே பொதுவான ஓர் அம்சம் என்னவென்றால், இந்த நபர்கள் அடிப்படையில் உருவ வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள். பாரம்பரிய தெய்வங்களான காளி, சிவ லிங்கம், அம்மன் என வழிபட்டவர்கள். ஆனால், அவருடைய சீடர்களோ அவர்களையே தெய்வமாக்கி வழிபட்டுவருகிறார்கள். அல்லது அந்த உயரிய அம்சத்தின் நீர்த்துப்போன வடிவங்களைப் பரப்புகிறார்கள் (யோகாவை அதன் ஆன்மிக இலக்குகளில் இருந்து பிடுங்கி உடல் பயிற்சி, மனப் பயிற்சி, நோய் நிவாரணி என்று சொல்வதுபோல்). இதை கவுரவமாகச் சொல்வதென்றால் சூரியனைப் பார்க்காமல் சுட்டிக்காட்டும் விரலையே பார்த்துக்கொண்டிருக்கும் அறிவீனம் போன்றது இது. கொஞ்சம் கோபத்துடன் சொல்வதென்றால் சாமிக்கு பதிலாக பூசாரியின் பிருஷ்டத்தைக் கும்பிடுவதைப் போன்றது. ராம கிருஷ்ணர் இன்று உயிருடன் வந்தால் முதல் வேலையாக தனது சிலையைத்தான் உடைத்துப் போடுவார். ராமகிருஷ்ண மடத்து சுவாமிஜிக்களின் மண்டையில் ரெண்டு போட்டால்தான் அது சாத்தியமென்றல் அவர் அதையும் செய்வார்.


இந்த புதிய கடவுளர்களை அடிப்படையாக வைத்துச் செய்யப்படும் பூசாரி மையங்களின் செயல்பாடுகள் இரண்டுவகையில் விமர்சிக்கத் தகுந்தவை. இந்தப் பூசாரி மையத்தினர் கல்வி, மருத்துவம் என சமூக சேவைகள் செய்துவருகிறர்கள். அதை எந்த அளவுக்கு நேர்த்தியாகச் செய்கிறார்கள்... கால மாற்றத்துக்கு ஏற்ப நடந்துகொள்கிறார்களா (சாதி நல்லிணக்கம், ஆக்கிரமிப்பு மத வன்முறைகளுக்கு எதிர்ப்பு, அரசாங்க ஊழல் எதிர்ப்பு என ஈடுபடுகிறார்களா) என்ற கேள்விகள் ஒருபுறம் இருந்தாலும் அவர்களின் சேவை போற்றத்தகுந்தது. முக்கியமாக யாரையும் மதம் மாற்றாமல் இந்தச் சேவைகளைச் செய்கிறார்கள் என்ற வகையில் அவர்கள் மிக முக்கியமானவர்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அதை அவர்கள் யாரை மையமாக வைத்துச்செய்கிறார்கள் என்பதில்தான் பிரச்னை... அதாவது, அவர்கள் யாரையும் மதம் மாற்றவில்லை என்று சொல்லிக்கொண்டு இந்துக்களை மதம் மாற்றிவருகிறார்கள்.


இந்தப் பூசாரி மையத்தினர் செய்யும் முதல் தவறு: கோவில் கலாசாரத்தையும் கோவிலைச் சார்ந்த இந்து வாழ்க்கை முறையையும் சிதைக்கிறார்கள்.


இந்தப் பூசாரி மையங்கள் சிவன், விஷ்ணு, விநாயகர் போன்ற பாரம்பரிய தெய்வங்களை இடம்பெயர்க்கின்றன. பாரம்பரிய விழக்களை இடம்பெயர்க்கின்றன. பாரம்பரிய உணவுப் படையல்களை நிராகரிக்கின்றன. பாரம்பரிய வழிபாட்டு முறைகள் பிறந்தாள் வழிபாடு, செவ்வாய் வெள்ளி வழிபாடு, என கடந்தகால விழாக்கள் அனைத்தையும் ஓரங்கட்டுகின்றன. குல தெய்வச் சாமியாடியில் ஆரம்பித்து பெருந்தெய்வ பிராமண பூஜாரிகள் வரை பாரம்பரியப் பூசாரிகளை இந்த நவீன பூசாரி மையங்கள் ஓரங்கட்டுகின்றன. பாரம்பரிய வழிபாட்டு மந்திரங்களை ஓரங்கட்டுகின்றன. அபிஷேகம், பூ, பழம், கற்பூர ஆரத்தி என வழிபாட்டுமுறைகளை ஓரங்கட்டுகின்றன. இப்படியாக இந்தப் பூசாரி மையத்தினர் இந்து கோவில் கலாசாரத்தின் பெரும்பாலான அம்சங்களை முற்றாகச் சிதைக்கிறார்கள்.


இந்தக் கோவில் கலாசாரம் என்பது இந்துக்களின் வாழ்க்கையில் ஆற்றிவந்த பங்கு அளப்பரியது. ஒட்டு மொத்த சமூகத்தின் மத ஆன்மிக நம்பிக்கைகளின் வடிகாலாக இருந்தது நீங்கலாக கோவிலைக் கட்டிய சிற்பிகளின் வாழ்க்கையில் ஆரம்பித்து பூசகர், பூ பழம் தேங்காய் வெற்றிலை விற்பவர் வரை ஒரு மிகப் பெரிய மக்கள் திரளின் வாழ்வாதாரத்தோடு சம்பந்தப்பட்டதாக இருந்துவந்திருக்கிறது. கோவில் நிலங்கள் சுற்றி வாழும் குடியானவர்களுக்கு குறைந்த விலையில் குத்தகைக்குத் தரப்பட்டு அவர்களின் வாழ்க்கைக்கு அச்சாணியாக இருந்திருக்கிறது. கோவிலில் சேகரமான பணமும் தங்கமும் வணிகர்களுக்குக் குறைந்த வட்டியில் கொடுக்கப்பட்டு வியாபாரத்தை அற வழியில் பெருக்க வழிகாட்டியிருக்கிறது. குளங்கள் வெட்டுதல், அன்னதானம் செய்தல், சத்திரங்கள் அமைத்து பயணங்களை ஊக்குவித்தல் என பல்வேறு சமூகச் செயல்பாடுகளுக்கு கோவில்கள் ஆதாரமாக இருந்திருக்கின்றன. கோவில் திருவிழாக்கள் கலைகளின் வெளிப்பாட்டு மையமாகவும் உற்பத்திப் பொருட்களுக்கு வியாபார மையமாகவும் இருந்து உதவியிருக்கின்றன. வெள்ளம், பஞ்சம் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் உணவு கொடுத்தும், அடைக்கலம் தந்தும் உதவியிருக்கின்றன.


நேற்றைய கோவில்களைவிட இன்றைய பூசாரி மையங்கள் கூடுதல் சமூக சேவை செய்வதாகச் சொல்வது மேலோட்டமான புரிதலே... உண்மையில் இந்த பூசாரி மையத்தினர் இப்படியான வெளிப்படையான சமூக செயல்பாடுளை நேற்றைய கோவில் கலாசாரத்தின் நீட்சியாக, நவீனப்படுத்தி விரிவுபடுத்தியிருக்கவேண்டும். ராமகிருஷ்ன மடம் நாடெங்கும் காளி கோவில்களைக் கட்டி இந்த சமூக சேவையை முன்னெடுத்திருக்கவேண்டும். சர்ச்கள் எல்லா இடங்களுக்கும் சிலுவையையும் ஏசுவையும் மரியாளையும்தான் கொண்டு செல்கின்றன... பாதிரிகளுக்குத் தேவாலயங்கள் கிடையாது. இந்தப் பூசாரி மையங்கள் இப்படிப் பாரம்பரிய தெய்வங்களை விட்டு விட்டு புதிய கடவுள்களை உருவாக்கிக்கொள்வது இந்து மதத்துக்குச் செய்யும் பெரும் துரோகமே.

உண்மையில் கிறிஸ்தவமும் இஸ்லாமும் இந்தியாவில் எதிர்பார்த்த அளவுக்குக் கால் ஊன்ற முடியாமல் இருப்பதற்கு அதிகாரக் குவிப்புக்கு எதிரான சாதிய வாழ்க்கைமுறை ஒரு முக்கிய காரணம். அதற்கு இணையாக இன்னொரு முக்கிய காரணம் இந்து மதத்தின் கடவுளர்களும் புராணங்களும் நம்பிகைகளும் வாழ்க்கை முறையும்தான். இந்தப் பூசாரி மையங்கள் இந்துக்களை அந்தப் பாரம்பரியத்தில் இருந்து பிரிப்பதன் மூலம் கிறிஸ்தவ இஸ்லாமிய சக்திகளுக்குப் பாதையமைத்துக் கொடுக்கும் பணியையே செய்கிறார்கள். இயேசுவால் சிவனை இடம்பெயர்க்க முடியாது. ஆதியோகி மூலம் சிவனையும் பாபா மூலம் விநாயகரையும் விஷ்ணுவையும் இடம்பெயர்த்துவிட்டால் அதன் பிறகு பாபாவைப் பெயர்த்துவிட்டு அந்த இடத்தில் இயேசுவை நடுவது எளிது... ஆக, இந்தப் பூசாரி மையங்களின் செயல்பாடுகள் இந்த அபாயத்தைத் தவிர்க்கும் நோக்கில் முன்னெடுக்கப்படவேண்டும். வேறொன்றும் இல்லை... இந்தப் புதிய கடவுளர்கள் எல்லாம் பாரம்பரியக் கடவுளின் பூசாரிகள் என்ற புரிதல் ஒவ்வொரு அணுவிலும் அசைவிலும் தென்படவேண்டும். அதற்குப் பழைய கோவில்களைக் கைப்பற்றி கட்டணக் க்யூவைத் தடுப்பதில் ஆரம்பித்து யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்பதுவரை அனைத்து நவீன விஷயங்களையும் கொண்டுவருவதே அவசியம்.

அடுத்ததாக, கடந்தகாலப் பெருந்தெய்வ சிறு தெய்வக் கோவில்களின் முக்கிய அம்சமான சாதியப் பார்வை இன்றைய காலகட்டத்தில் மாற வேண்டியதாகப் பார்க்கப்படுகிறது. சுதந்தரப் போராட்ட காலகட்டத்தில் பெருந்தெய்வக் கோவில்களில் அனைத்து சாதியினரும் நுழைய வழி செய்யப்பட்டுவிட்டது. சிறு தெய்வக் கோவில்களிலும் பெரும்பாலானவற்றில் இன்று அனைத்து சாதியினரும் கும்பிட வழி பிறந்துவிட்டிருக்கிறது. இது நிச்சயம் இந்து மதம் தன்னை காலத்துக்கு ஏற்ப புதுப்பித்துக்கொண்டிருப்பதன் வெளிப்பாடே. இனி வரும் காலங்களில் அந்தக் கோவில்கள் சாதி கடந்த திருமணத்தை நடத்தித் தரும் மையங்களாக சாதி நல்லிணக்கத்தை உருவாக்கும் மையங்களாக ஆகவேண்டும். இந்த இடத்தில்தான் இந்தப் பூசாரி மையங்களுக்கு பெரிய பொறுப்பு வருகிறது. உண்மையில் கடந்த கால கோவில் கலாசாரத்தில் இருந்து இன்றைய தலைமுறையைப் பிரிக்கும் இவர்கள் கடந்த கால சாதி ஏற்றத்தாழ்வு மனப்பான்மையில் இருந்து மக்களை வெளியேறச் செய்யவேண்டும். பூசாரி மையங்களுக்கு வரும் அனைவரும் சாதி கடந்த திருமணம் செய்துகொண்டாகவேண்டும் என்று நிச்சயம் சொல்ல முடியாது. ஆனால், யாரேனும் சாதி கடந்து திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அருவாளை எடுத்துக்கொண்டு போய் வெட்டாமல் இருக்கவேண்டும். கூட்டமாகப் போய் வீடுகளை எரிக்காமல் இருக்கவேண்டும் என்று ஆற்றுப்படுத்தலாம்.

அப்படியாக, இந்தப் பூசாரி மையங்கள் செய்ய வேண்டிய இரண்டு முக்கிய மாற்றங்கள் இவையே. முதலாவதாக கோவில்களின் நீட்சியாக தமது மையங்களை மறுசீரமைப்பு செய்யவேண்டும். யோகா என்பது இந்து ஆன்மிக லட்சிய வழிமுறையே... ரோக நிவாரணியோ உடல் பயிற்சியோ அல்ல என்று வெளிப்படையாகச் சொல்லவேண்டும். கல்வி, மருத்துவம் என்ற அனைத்து சமூக சேவைகளையும் பாரம்பரிய தெய்வ வழிபாட்டின் ஓர் அங்கமாகவே முன்னெடுக்கவேண்டும். முதல் வேலையாக பூசாரிகளின் சிலைகளை ஓர் ஓரமாக ஒதுக்கிவைக்கவேண்டும். அதே கையோடு சாதி ஆதிக்க வெறி பிடித்தவர்கள் மத்தியில் சென்று அந்த சாதி வெறியை ஒழிக்கும் முயற்சியை எடுக்கவேண்டும். இந்து அடையாளங்களை அதன் உள்ளார்ந்த அர்த்தத்தோடும் அழகோடும் பின்பற்றாமலும் இந்து வாழ்க்கைமுறையை காலத்துக்கு ஏற்ப மாற்றியமைக்காமலும் இருக்கும் செயல்பாடுகள் இந்து சமூகத்துக்கும் இந்திய சமூகத்துக்கும் உலகுக்கும் என்ன நன்மையைத்தான் தரமுடியும்?