Friday, 29 November 2013

ஆலமரம்

மன வளர்ச்சி குறைந்தவர்களுக்கு ஒரு காப்பகம் அமைப்பதை லட்சியமாகக் கொண்டிருக்கிறாள் கதாநாயகி. அந்தப் பயணத்தில் அவள் எதிர்கொள்ளும் அனுபவங்களே கதை.

கதாநாயகி கல்லூரியில் கோல்ட் மெடல் வாங்கி தேர்ச்சி பெறுகிறாள். அவளுக்கு நாட்டின் முன்னணி நிறுவனங்களில் இருந்து வேலைக்கு நியமன உத்தரவு வருகிறது. அவளுடைய குடும்ப நண்பர் ஒருவரின் மகன் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிந்துவருகிறான். அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ள வருகிறான். கதாநாயகிக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று நினைத்து அவளுடைய பெற்றோர் பெண் பார்க்க வரும் விஷயத்தை ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். தன் மகள் தன் பேச்சை மீற மாட்டாள். அமெரிக்க மாப்பிள்ளையை அவள் நிச்சயம் விரும்புவாள் என்ற நம்பிக்கையில் அவளுடைய பெற்றோர் அந்த பெண் பார்க்கும் படலத்தை அவளைக் கேட்காமலேயே தைரியமாக நிச்சயிக்கிறார்கள். ஆனால், அது விபரீதமாகப் போகிறது.

இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்தவர்களுக்கு கதாநாயகி மிகப் பெரும் துன்ப அதிர்ச்சியைத் தருகிறாள். வந்திருப்பவர்களுக்கு காபி கொடுத்துவிட்டு தனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்றும் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு சேவை செய்வதையே தன் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறாள்.

கதாநாயகியின் பயணம் ஆரம்பமாகிறது.

முதலில் மன நலம் குன்றியவர்களுக்கான காப்பகம் ஒன்றில் சேர்ந்துகொள்வாள். அந்தக் காப்பகத்தில் இருப்பவர்கள் மன வளர்ச்சி குறைந்தவர்களை மிகவும்  கொடுமைப்படுத்துவார்கள். அந்தக் குழந்தைகள் பெயரைச் சொல்லி நன்கொடைகளை வாங்கிவிட்டு தாங்கள் ஆடம்பரமாக வாழ்ந்துவருவார்கள். பிரச்னை செய்யும் குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைப்பது முதல் அவர்களை சங்கிலியால் கட்டிப் போடுவதுவரை பல கொடுமைகளுக்கு ஆளாக்குவார்கள். இதையெல்லாம் தட்டிக் கேட்டதும் அப்படியானால், சொந்தமாக காப்பகம் ஒன்றை நடத்தி இந்தக் குழந்தைகளை நீயே பார்த்துக்கொள் என்று திட்டிவிடுவார்கள்.

கதாநாயகி தனியாக ஒரு காப்பகம் அமைப்பதற்கான வேலைகளில் இறங்க ஆரம்பிப்பாள். தனக்கு திருமணத்துக்கு சேர்த்து வைத்திருந்த நகைகளை பெற்றோரிடம் மிகுந்த சிரமப்பட்டு வாங்கிவருவாள். அதை விற்று ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குழந்தைகளை கவனித்துவருவாள். உணவு, உடை, மருத்துவச் செலவு என பல நெருக்கடிகள் வர ஆரம்பிக்கும். பல நாட்கள் குழந்தைகளுடன் பட்டினியாகப் படுக்க நேரிடும்.

மன வளர்ச்சி குறைந்தவர்களை ஒரு விடுதியில் அடைத்து வைப்பது அவர்களை மேலும் வேதனைக்குள்ளாக்கும் என்பதால் பல இடங்களுக்கு அழைத்துச் செல்வாள். அவர்களுக்கு ஓவியம் கற்றுக் கொடுப்பாள். சமூகத்தின் பிற பிரிவினருடன் கலந்து பழக முயற்சிகள் எடுப்பாள். ஆனால், இவை பெரும்பாலும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.  காப்பகத்தை வாடகைக்குக் கொடுத்திருந்தவர் வேறொரு நிறுவனம் அந்த இடத்துக்குக் கூடுதல் வாடகை தர முன்வருவதாகச் சொல்லி இவர்களைக் காலி செய்துகொண்டு போகும்படிச் சொல்லிவிடுவார்.

காப்பகத்துக்கு சொந்தமாக ஒரு இடம்வேண்டும் என்று அந்த ஊர் எம்.எல்.ஏ.வை சந்தித்து உதவி கேட்கிறாள். அவர், இளம் பெண்ணான அவளை பாலியல் பலாத்காரம் செய்யத் தீர்மானிப்பார். ஒரு நாள் மாலை ஐந்து மணிக்கு கதாநாயகிக்கு ஒரு போன் வருகிறது. தான் இரவு எட்டு மணி விமானத்தில் டெல்லி செல்லவிருப்பதாகவும் உடனே வந்து சந்திக்கும்படியும் கேட்டுக் கொள்கிறார் எம்.எல்.ஏ. கதாநாயகியும் அவர் அனுப்பும் காரில் ஏறி செல்கிறாள். போகும்வழியில் விமானம் புறப்பட இரண்டு மணிநேரம் ஆகும் என்று தகவல் வருகிறது. நேராகத் தனது வீட்டுக்கு வரும்படிச் சொல்கிறார். நீங்கள் டெல்லியில் இருந்து திரும்பி வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கிறாள் கதாநாயகி. ஆனால், அதைக் கேட்காமல் கார் நேராக எம்.எல்.ஏ.வின் பங்களாவுக்குச் செல்கிறது. அங்கு கதாநாயகியை அவர் மானபங்கப்படுத்த முயற்சி செய்கிறார். ஆனால், அவள் தனியாக காரில் போவதைப் பார்த்து சந்தேகப்பட்டு அவளைப் பின்தொடர்ந்து வந்த கதாநாயகியின் கல்லூரி நண்பன் அவளை அவர்களிடமிருந்து காப்பாற்றி அழைத்துவருகிறான்.

அடுத்ததாக, கதாநாயகி ஒரு பெரிய பிஸினஸ்மேனைச் சந்தித்து பண உதவி கேட்கிறார். அவர் பணம் தர முன்வருகிறார். ஆனால், அவர் வருமான வரியில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கிலும், அந்த காப்பகத்தை நடத்த வெளிநாட்டில் இருந்து நிறைய நன்கொடையைப் பெற்று அதைத் தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் தீர்மானித்திருப்பது தெரியவருகிறது. கதாநாயகி அவரது உதவியை மறுத்துவிடுகிறாள்.

அடுத்ததாக, திரைப்படத் துறையினரை அணுகி ஒரு கலை நிகழ்ச்சி நடத்தித்தரும்படிக் கேட்கிறாள். அவளுடைய கல்லூரித் தோழி, மாடல் துறையில் நுழைந்து, தமிழ் திரையுலகில் புது வரவாக கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்திருக்கிறார். அவருடைய உதவியுடன் அந்த கலைநிகழ்ச்சியை நடத்த ஏற்பாடாகிறது. கதாநாயகி மன வளர்ச்சி குன்றியவர்களை மையமாக வைத்து அற்புதமான நாடகம் ஒன்றை எழுதுகிறாள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடக்கும் அந்த நாடகத்தை ஈவென்ட் மேனேஜரிடம் சொல்கிறார். அவரோ, நான்கு குத்துப் பாட்டுகள், ரெண்டு அசட்டுத்தனமான, ஆபாசமான நகைச்சுவை ஸ்கிட்கள் என்று நிகழ்ச்சியைத் திட்டமிடுகிறார். நடிகர், நடிகைகள் மற்றும் பிற திரைப்பட பிரமுகர்கள் அந்த நிகழ்ச்சியை எந்தவித சமூக அக்கறையும் இல்லாமல் அணுகுவதைப் பார்த்து மனம்  வெறுக்கும் நாயகி, அந்த கலை நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறாள்.

இப்படியே மூன்று நான்கு வருடங்கள் ஓடிவிடுகின்றன. கதாநாயகியைப் பெண் பார்க்க வந்த குடும்ப உறவினரின் மகன் அமெரிக்காவில் இருந்து திரும்பிவருகிறான். கதாநாயகி தன் லட்சியப் பயணத்தில் மிகவும் சிரமப்படுவதைக் கேள்விப்படுகிறான். அவனுக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கின்றன. அவன் கதாநாயகியை ஹோட்டல் ஒன்றுக்கு வரச் சொல்லி சந்திக்கிறான். நாயகி தனக்கு நேர்ந்த அனுபவங்களைச் சொல்கிறாள். பணம்தான் பிரச்னையாக இருக்கிறது. நீங்கள் உதவ முடியுமா என்று கேட்கிறாள். யோசித்து பதில் சொல்வதாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குச் செல்கிறான்.

மறுநாள் கதாநாயகிக்கு அவனிடமிருந்து போன் வருகிறது. நான் உதவ தயாராக இருக்கிறேன் ஆனால், ஒரு நிபந்தனை என்கிறான். நான் இரண்டு செக் தயார் செய்து வைத்திருக்கிறேன். அதில் ஒன்றில் தொகை எதுவும் குறிப்பிடாமல் வைத்திருக்கிறேன். நீ எவ்வளவு வேண்டுமானாலும் அதில் நிரப்பிக் கொள்ளலாம். அந்த அக்கவுண்டில் சுமார் ஐம்பது லட்சத்துக்கு மேல் பணம் இருக்கிறது. இன்னொரு செக்கில் பத்தாயிரம் ரூபாய் நன்கொடையாக நிரப்பி இருக்கிறேன். நீ என்னுடன், ஒரு பகலைக் கழித்தால் அந்த பத்தாயிரம் ரூபாய் செக் கிடைக்கும் என்றும்  ஒரு இரவைக் கழித்தால் அந்த பிளாங்க் செக் கிடைக்கும் என்றும் சொல்கிறான். எந்த செக் வேண்டும் என்பதை முடிவு செய்துகொண்டு மறுநாள் காலையில் ஹோட்டலில் சந்திக்கும்படிச் சொல்கிறான்.

கதாநாயகியும் காலையில் ஹோட்டலுக்கு செல்கிறாள். கறுப்பு நிற கவரில் பிளாங்க் செக் இருப்பதாகவும் வெள்ளை நிறக் கவரில் பத்தாயிரம் ரூபாய்க்கான செக் இருப்பதாகவும் சொல்கிறான். கதாநாயகி சிறிது நேரம் இரண்டு கவரையும் வெறித்துப் பார்க்கிறாள். கறுப்பா... வெள்ளையா..? இரவா... பகலா..? அவள் கடந்த நான்கு வருடங்களில் பட்ட கஷ்டங்கள் மனதுக்குள் வந்துபோகின்றன. பிறகு மனதைத் திடப்படுத்திக் கொள்கிறாள். ஒரு டம்ளர் ஐஸ் வாட்டர் வாங்கிக் குடிக்கிறாள். அவளுடைய கை மெதுவாக கறுப்பு நிறக் கவரை நோக்கிப் போகிறது.

இந்த இடத்தில் படத்தின் இடைவேளை வருகிறது.

இடைவேளை முடிந்து படம் தொடர்கிறது.

கதாநாயகி கறுப்பு கவரை எடுத்து வைத்துக் கொள்கிறாள். என்.ஆர்.ஐ. முகத்தில் லேசாக ஏமாற்றம் வந்து போகிறது. அப்போ, சாயந்திரம் ஆறு மணிக்கு வீட்டுக்கு கார் அனுப்பறேன் என்கிறான். கதாநாயகி லேசாகச் சிரித்தபடியே கறுப்பு கவரை ஹேண்ட் பேகில் எடுத்து வைத்துக் கொள்கிறாள். பிறகு ஹேண்ட்பேகில் இருந்து எதையோ எடுக்கிறாள். என்.ஆர்.ஐ. என்ன என்பதுபோல் பார்க்கிறான். அது ஒரு ராக்கி. அதை அவனுடைய கையில் கட்டிவிட்டு மெள்ள சிரிக்கிறாள் கதாநாயகி. என்.ஆர்.ஐ. சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் குதிக்கிறான். நான் இதைத்தான் உன்னிடம் எதிர்பார்த்தேன். உன்னிடம் லேசாக விளையாடலாமென்றுதான் நினைத்தேன். நீ கறுப்பு கவரைத் தேர்ந்தெடுத்ததும் ஒரு கணம் பயந்தே போய்விட்டேன் என்று சொல்லி அவளை கட்டிப் பிடிக்கிறான். ஐ லைக் யுவர் பிரசன்ஸ் ஆஃப் மைண்ட், ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்னெஸ் அண்ட் கமிட்மெண்ட் என்று பாராட்டிவிட்டு, அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்று மனைவிக்கு அறிமுகப்படுத்துகிறான். அன்றைய பகல் பொழுதை அவள் அவன் வீட்டிலேயே கழிக்கிறாள். மாலையில் ஆறு மணிக்கு அவள் புறப்படுகிறாள். வெள்ளை கவரையும் அவளிடம் கொடுத்துவிட்டு மேலும் என்ன உதவி வேண்டுமானாலும் செய்து தருவதாகச் சொல்லி  அவளுக்கு விடை கொடுக்கிறான்.

அடுத்ததாக, கதாநாயகி அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் நிலம் வாங்கப் புறப்படுகிறாள்.  நிலம் பதிவு செய்யப் போகும் இடத்தில் லஞ்சம் கேட்கிறார்கள். இது வியாபார நிறுவனம் அல்ல. மூளை வளர்ச்சி குறைந்தவர்களுக்கு உதவி செய்யப் போகிற நிறுவனம். அதனால தயவு செய்து லஞ்சம் கேட்டு கொடுமைப்படுத்தாதீர்கள் என்று கெஞ்சுகிறாள்.  மூளை வளர்ச்சி குறைந்தவங்களுக்கு உதவற மாதிரியே மூளை வளர்ச்சி அடஞ்ச எங்களுக்கும் உதவுங்கம்மா என்று நக்கலடிக்கிறார்கள். பத்திரப் பதிவு, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, கட்டட அப்ரூவல் என எந்த அலுவலகத்துக்குப் போனாலும் லஞ்சம்... லஞ்சம்... என துரத்துகிறார்கள். வேறுவழியில்லாமல் ஒவ்வொருவருக்கும் தண்டம் கொடுத்து காப்பகத்தின் வேலைகள் ஆரம்பமாகின்றன.

ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு பிரச்னைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒருவழியாக எல்லாம் முடிந்து காப்பகம் செயல்படத் தொடங்கும் நிலையில் அந்த இடத்தை ஒரு பெரிய அரசியல்வாதி விலைக்கு வாங்கி அங்கு பிளாட் கட்டி ஒரு புதிய நகர் ஒன்றைக் கட்டத் தீர்மானிக்கிறார். குடியிருப்புப் பகுதிக்கு அருகில் மனவளர்ச்சி குறைந்தவர்களின் காப்பகம் இருந்தால் பிரச்னை என்று அதை இடிக்க வருகிறார். கதாநாயகி எவ்வளவோ போராடிப் பார்க்கிறார். அரசியல்வாதி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி  அந்த இடம் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்று நிரூபித்துவிடுகிறார். அது மட்டுமல்லாமல் கதாநாயகி நடத்தை கெட்டவள். அவருடைய சமூக அக்கறை என்பது மிகவும் பொய்யானது என்று அனைவரும் நம்பும்படி அவதூறுப் பிரசாரம் செய்கிறார். நீதிமன்றம் அந்த காப்பகத்தை இடிக்க உத்தரவிடுகிறது.

கதாநாயகி இறுதி முயற்சியாக  முதலமைச்சரைச் சென்று சந்தித்து முறையிடுகிறாள். அவர் உன்னைப் பற்றி இப்படியெல்லாம் சொல்கிறார்களே... நான் எப்படி உன்னை நம்ப என்கிறார். கதாநாயகி தனது நேர்மையை அவருக்குப் புரியவைக்க தன் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை விவரிக்கிறாள். உண்மையில் கதாநாயகி சமூக அக்கறை கொண்டு மட்டுமே அந்த காப்பகத்தை நடத்த விரும்பியிருக்கவில்லை. அவர் சிறு வயதில் செய்த ஒரு தவறுக்கு பிராயச்சித்தமாக அதைச் செய்கிறார்.

அதாவது கதாநாயகிக்கு ஒரு தங்கை இருந்தாள். அவள் மன வளர்ச்சி குறைந்தவள். தனக்கு தங்கை/தம்பி பிறக்கப் போகிறது என்று சந்தோஷத்தில் இருந்த சிறுவயது கதாநாயகி மனவளர்ச்சி குறைந்த தங்கை பிறந்ததும் லேசாக வருத்தப்படுகிறாள்.  சிறு குழந்தை என்பதால் ஆரம்பத்தில் தன் தங்கையை மனதார நேசிக்கிறாள். ஆனால், அந்த மனவளர்ச்சி குறைந்த குழந்தையை சமூகத்தில் இருக்கும் அனைவரும் கேலியாகவும் வெறுப்புடனும் நடத்துவதைப் பார்த்ததும் சிறுவயது கதாநாயகிக்கும் அந்தக் குழந்தை மேல் வெறுப்பு வர ஆரம்பிக்கிறது.

ஒரு நாள் சிறுவயது கதாநாயகி பள்ளிக்கு எடுத்துச் செல்ல வைத்திருந்த ரெக்கார்டில் மனவளர்ச்சி குறைந்த தங்கை மையைக் கொட்டிவிடுகிறது. இன்னொரு நாள் ஷூவில் மலம் கழித்துவைத்துவிடுகிறது. இரவில் எங்காவது நாய் ஊளையிட்டால் இந்த மன வளர்ச்சிகுறைந்த குழந்தையும் பதிலுக்கு ஊளையிடும். இப்படியாக அதன் சேட்டைகள் சிறு வயது கதாநாயகிக்கு எரிச்சலைத் தருகின்றன. அது கொஞ்சங் கொஞ்சமாக வளர்ந்து அந்தக் குழந்தையைக் கொன்றுவிடவேண்டும் என்ற அளவுக்கு ஆகிறது.

ஒரு நாள் தங்கையை பந்து விளையாட வீட்டின் பின்புறம் அழைத்துச் செல்கிறாள். மனவளர்ச்சி குறைந்த குழந்தையும் ஆசையாகப் போகிறது. பந்தை, பூச்செடிகளுக்கு நடுவில் போடுகிறாள் சிறுவயது கதாநாயகி. தங்கை அதை எடுத்துவருகிறாள். அடுத்ததாக பந்தை வீட்டுக்குள் போடுகிறாள். மனவளர்ச்சி குறைந்த குழந்தை அதை எடுத்துவருகிறது.  அடுத்ததாக கதாநாயகி பந்தை எடுத்துக் கொண்டு கிணற்றுக்கு அருகில் செல்கிறாள். மனவளர்ச்சி குறைந்த தங்கையும் அவளைப் பின் தொடர்ந்து செல்கிறது. கதாநாயகி கிணற்றை சிறிது நேரம் உற்றுப் பார்க்கிறாள். பிறகு மெதுவாக தன் கையில் இருக்கும் பந்தை நழுவவிடுகிறாள். மனவளர்ச்சி குறைந்த குழந்தைக்கு கிணற்றுக்குள் குதித்தால் உயிர் பிழைக்க மாட்டோ ம் என்பது உள்ளுணர்வில் தெரிகிறது. ஆனால், தனது அக்காவே தன்னை வெறுத்துவிட்டாள் என்பதை உணர்ந்ததும்  மிகவும் வருத்தப்படுகிறது. துணி துவைக்க போடப்பட்டிருக்கும் கல்லில் ஏறி நிற்கிறது.

கிணற்றில் இருந்து நீர் இறைக்க வைத்திருக்கும் கயிறை எடுக்கிறது. கதாநாயகிக்கு பயம் உண்டாகிறது. எங்கே வாளியால் பந்தை எடுத்துவிடுமோ என்று பயப்படுகிறாள். மன வளர்ச்சி குறைந்த குழந்தையோ, தனக்கு அப்படி எடுக்கத் தெரியும் என்றாலும் அக்காவே இறந்து போ என்று சொல்லாமல் சொன்ன பிறகு உயிர் வாழ்வதில் அர்த்தம் இல்லை என்று முடிவு செய்துவிட்டு, தலையை லேசாக இங்கும் அங்குமாக அசைத்து, கவலைப்படாதே.. வாளியால் பந்தை எடுக்க மாட்டேன் என்று சொல்கிறது. கிணற்றில் குதிப்பதற்கு முன் கடைசியாக அக்காவை ஒரு தடவை பார்க்கிறது. அவளை  கை அசைத்துக் கூப்பிடுகிறது. அருகில் வரும் அக்காவை பாசத்தோடு கடைசியாக முத்தமிடுகிறது. பிறகு, மனதை திடப்படுத்திக் கொண்டு கிணற்றுக்குள் குதித்து இறந்துவிடுகிறது. 

இந்த சம்பவத்தை முதலமைச்சரிடம் சொல்லி கதாநாயகி அழுகிறார். தான் சிறு வயதில் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாகத்தான் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான காப்பகம் அமைக்க முன்வந்ததாகச் சொல்கிறார். கதாநாயகியின் உணர்வைப் புரிந்து கொள்ளும் முதல்வர் அந்த காப்பகத்தை இடிப்பதை நிறுத்தச் சொல்கிறார். அந்த காப்பகத்தை அவரே வந்து திறந்து வைக்கிறார்.

கதாநாயகியின் கல்லூரி நண்பனும் ஒருவன் எல்லா நிகழ்வுகளிலும் துணையாக வந்திருப்பான். அவனையும் அவளையும் இணைத்துத்தான் பல அவதூறுப் பிரசாரங்கள் முன்னர் செய்யப்பட்டிருக்கும். கடைசியில் அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாகச் சொல்லுவான். நமக்கென்று ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இந்தக் குழந்தைககள் மீதான பாசம் போய்விடும் என்று சொல்லி அவனை வேறு திருமணம் செய்து கொள்ளச் சொல்வாள். உன்னைப் போலவே நானும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துவிடுகிறேன் என்று அவன் சொல்வான். வேண்டாம்... சமூக சேவை என்ற பெயரில் அடிப்படை உணர்ச்சிகளை அடக்கிக் கொள்வது நல்லதல்ல... அது சாத்தியமானதும் அல்ல என்று சொல்கிறாள். அப்படியானால் நீ மட்டும் எப்படி இருக்க முடியும்? என்று கேட்கிறான். நீ அடிக்கடி வந்து போய்க் கொண்டிரு என்று சிரித்தபடியே சொல்கிறாள். பெருமூச்சுவிட்டபடியே கனத்த மனதுடன் அவன் பைக்கில் ஏறிச்செல்கிறான். கதாநாயகி இருண்டு கிடக்கும் காப்பகத்துக்குள் சென்று விளக்கேற்றுகிறாள்.


Tuesday, 26 November 2013

பேரழகன் (அப்கிரேடட்)

சூரியா - ஜோதிகா நடித்து வெளியான ’பேரழகன்’ படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் சில அடிப்படையான மாற்றங்கள் செய்தால் போதும்,. நல்ல படம் கிடைத்துவிடும்.

அழகில்லாத ஆண்.  கண் தெரியாத பெண். அழகில்லாததால் அந்த ஆணை யாரும் விரும்பவில்லை. கண் தெரியாததால் அந்தப் பெண்ணையும் யாரும் விரும்பவில்லை. இருவருக்கு இடையிலும் காதல் மலர்கிறது. அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை செய்தால் கண் பார்வை கிடைக்கும் என்று தெரியவருகிறது. இப்போது ஒரு பிரச்னை முளைக்கிறது.  கண் பார்வை கிடைத்து அவள் தன் அழகற்ற உருவத்தைப் பார்த்து வெறுத்துவிட்டால்..

அறுவை சிகிச்சை செய்தால் கண் பார்வை கிடைத்துவிடும் என்பது தெரிந்ததும் முதலில் சந்தோஷப்படும் பேரழகன், இந்த பயம் வந்ததும் யோசிக்கிறான். அறுவை சிகிச்சையை நடக்கவிடாமல் தடுப்பது என்று முடிவு செய்கிறான். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுபோல் அடிக்கடி எங்கெங்கோ அழைத்துச் செல்கிறான். டாக்டர் இல்லை நர்ஸ் இல்லை மருந்து இல்லை என்று சாக்குப் போக்கு சொல்லி ஏமாற்றிவருகிறான். ஒரு கட்டத்தில் தான் செய்வது தவறு என்று தெரிகிறது. பார்வை கிடைத்ததும் தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறான். அவளும் அதில் என்ன சந்தேகம்... எனக்கு வாழ்க்கை கொடுக்கும் உங்களைவிட்டு ஒரு நாளும் பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து தருகிறாள். அதை ஏற்றுக்கொண்டு தைரியமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான். ஆப்பரேஷனும் வெற்றிகரமாக முடிகிறது. அந்தப் பெண்ணும், பார்வை கிடைத்ததும் முதன் முதலில், பேரழகனைத்தான் பார்ப்பேன் என்று சொல்லி அதன்படியே செய்கிறாள். ஆனால், பேரழகனைப் பார்த்ததும் சட்டென்று முகம் கோணிவிடுகிறது. இவரா நமக்கு உதவி செய்தவர். இவரையா திருமணம் செய்துகொள்வதாக சத்தியம் செய்தோம் என்று அதிர்ச்சி அடைகிறாள். ஆனால், வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளிக்கிறாள்.

சில நாட்கள் கழித்து, அவளுடைய அண்ணனிடம் மனத்தில் இருப்பதைச் சொல்கிறாள். பேரழகன் ஆப்பரேஷனுக்கு உதவி செய்ததுதான் அவருக்குத் தெரியும். தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டது தெரியாது. அது தெரிந்ததும் அவருக்கும் கஷ்டமாகிவிடுகிறது. தங்களுக்கு உதவிய ஒருவருக்கு துரோகம் செய்ய இருவருக்குமே மனம் இல்லை. அதே நேரத்தில் அவரைத் திருமணம் செய்து கொள்ளவும் விருப்பம் இல்லை. எனவே, ஜோதிடர் சொன்னார் என்று ஆறேழு மாதத்துக்குத் திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள்.

இதனிடையில் பேரழகனின் நண்பரான கல்யாண புரோக்கர் மூலமாக ஒரு வசதியான குடும்பத்தினருக்கு அந்தப் பெண் பற்றித் தற்செயலாகத் தெரியவருகிறது. அவளது அழகைப் பார்த்து மயங்கிப் பெண் கேட்டு வருகிறார்கள். அவளுடைய அண்ணனுக்கு அந்தக் குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக் கொள்ள முழு சம்மதம். சரி என்று சொல்லிவிடுகிறார். அந்த விஷயம் பேரழகனின் காதுகளை எட்டுகிறது. ஆனால், தான் வாழ்க்கை கொடுத்த பெண் தன் மீது உயிரையே வைத்திருக்கிறாள். தன்னை விட்டுப் போகமாட்டாள் என்று சொல்கிறான்.

திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. பேரழகனின் அம்மா, அந்தப் பெண்ணின் வீட்டுக்குப் போய் நியாயம் கேட்கிறாள். அழகா இல்லாத உங்க பையனே அழகான பொண்ணுதான் வேணும்னு ஒத்தக் காலில் நிக்கும்போது, அழகான என் தங்கை அழகானவரை கல்யாணம் பண்ண ஆசைப்படறது தப்பா என்று கேட்கிறார். பேரழகனிடம் அம்மாவுக்கு அவர் சொல்வதில் இருக்கும் நியாயம் புரிகிறது. பேரழகனிடம் அதைச் சொல்லி, மனதை மாத்திக்கோ என்று சொல்கிறாள். அவனோ, அந்தப் பெண் மீது தனக்கு நம்பிக்கை இருக்கிறது. யார் என்ன சொன்னாலும் அவள் தன்னைக் கைவிட மாட்டாள் என்று சொல்கிறான். ஒன்றிரண்டு தடவை அந்தப் பெண்ணின் வீட்டுக்குப் போய் அவளைச் சந்திக்க முயற்சி செய்கிறான். அண்ணனோ, அவள் இல்லை என்று சொல்லி வாசலில் வைத்தே பேசி அனுப்பிவிடுகிறார்.

திருமண நாள் நெருங்குகிறது. பத்திரிகை அச்சடிக்கப்பட்டு எல்லாருக்கும் தரப்படுகிறது. மணமகனின் பெயரும் பிரேம் குமார். அதைப் பார்க்கும் பேரழகன் தன்னுடைய ரகசியப் பெயர் அது என்று எல்லாரிடமும் சொல்லி சந்தோஷப்படுகிறான். விடிந்தால் திருமணம். பேரழகனோ சிறிதும் மனம் கலங்காமல், அவள் எப்படியும் ஓடி வந்துவிடுவாள் என்று சொல்கிறான். இரவெல்லாம் தூங்காமல், வெளியில் சத்தம் கேட்கும் போதெல்லாம் ஜன்னலைத் திறந்து திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். அதிகாலையில் உற்சாகமாகக் குளித்து முடித்து, பட்டு வேட்டி கட்டிக் கொண்டு, கையில் தாலியுடன் திருமணம் நடக்கவிருக்கும் மலைக்கோயிலுக்கு முதல் ஆளாகப் போய் நிற்கிறான். பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் என வரிசையாக ஒவ்வொருவராக வருகிறார்கள். சீர்வரிசைகள் கொண்டு செல்லப்படுகின்றன. மேள தாளத்துடன் பெண் அழைத்து வரப்படுகிறாள். கோயில் வாசலில் பேரழகன், கையில் தாலியுடன் நிற்கிறான். வரிசையாக ஒவ்வொருவராகக் கடந்து போகிறார்கள். மணப்பெண்ணும் குனிந்த தலையுடன் வருகிறாள். மெள்ள அவனை நெருங்குகிறாள். எதுவும் பேசாமல் கடந்துபோய்விடுகிறாள். பேரழகன் அதிர்ச்சியில் உறைந்துபோய் படியில் சோர்ந்து உட்கார்ந்துவிடுகிறான். வாய் மட்டும் மெதுவாக, அவ வந்திடுவா வந்திடுவா என்று முனகுகிறது.

உள்ளே திருமண மந்திரங்கள் முழங்க ஆரம்பிக்கின்றன. மணமகன் யாக குண்டத்தில் நெய் வார்க்கிறான். தீ கொழுந்துவிட்டு எரிகிறது. மணப்பெண் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். புரோகிதர் தாலியை எடுத்து மணமகனிடம் கொடுக்கிறார். மணமகளின் கழுத்துக்கு அருகில் கொண்டு செல்லும்போது, அவள் இனியும் தாங்க முடியாது என்று தாலியைத் தட்டிவிட்டு ஆவேசத்துடன் எழுந்திருந்து வாசலை நோக்கி ஓடுகிறாள். அங்கே பேரழகன் சோகமாக கண்களை மூடியபடி அழுது கொண்டிருக்கிறான். மந்திர ஒலியும், வாத்திய இசையும் நின்றுபோய்  பெரும் அமைதி நிலவுகிறது. யதேச்சையாகக் கண்ணைத் திறந்து பார்த்தால் தன் முன்னால் மணப்பெண் மாலையும் கழுத்துமாக நின்றுகொண்டிருக்கிறாள்.

பேரழகனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. வருவா வருவான்னு சொன்னேன்ல. வந்துட்டா அவ வந்துட்டா என்று துள்ளிக் குதிக்கிறான். அவளை இழுத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்று ஒவ்வொருவரிடமும் அவ மனசுல நான் இருக்கேன் பாருடா நான் மட்டும்தான் இருக்கேன் பாருடா என்று சொல்லிக் குதூகலிக்கிறான். இது போதும்டா எனக்கு இது போதும்டா என்று சொல்லியபடியே மணமேடைக்கு அவளை அழைத்துச் செல்கிறான். அவளை உட்காரச் சொல்கிறான். மணமகன் மாலையைக் கழட்டி பேரழகனின் கழுத்தில் போட முன்வருகிறான். அதைத் திருப்பி அவர் கழுத்தில் அணிவித்து அவரையும் மணமேடையில் உட்காரச் சொல்கிறான். மணப்பெண் திகைத்துப்போய் ஏதோ சொல்ல முற்படுகிறாள். பேரழகன் அவளையும் சமாதானப்படுத்துகிறான். நமக்கு உதவி செஞ்சவங்களை கல்யாணம் பண்ணிக்காம இருக்கறத் தப்பு இல்ல. நாம உதவி செஞ்சவங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறதுதான் தப்பு. அழகே இல்லாத நானே அழகான பெண்தான் வேண்டும்னு ஆசைப்படும்போது அழகே உருவான நீ ஆசைப்படறதுல என்ன தப்பு இருக்க முடியும் என்று சொல்லி தாலியை எடுத்து மணமகனிடம் கொடுக்கிறான். அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்கிறான். அவ மனசுல எனக்கு ஒரு இடம் இருக்கு. எனக்கு அது போதும் எனக்கு அதுபோதும் என்று சொல்லியபடியே கூட்டத்தில் இருந்து விலகிப் போகிறான்.

அரசமரத்தடியில் தனியாகப் போய் அமர்கிறான். எனக்கு அது போதும் என்று சொல்லிக் கொண்டிருந்தவன் மெள்ள அழத் தொடங்குகிறான். எனக்கு அது போதாதுதான். ஆனா, எனக்கு அதுக்கு மேல கிடைக்காது என்று சொல்லி கல் பிள்ளையாரின் முன்னால்  அழுகிறான். சிறிது நேரம் கழித்து கண்ணைத் துடைத்துக்கொண்டு பிள்ளையாரைப் பார்க்கிறான். ஆளைப் பாரு யானை மாதிரி வயிற்றைப் பாரு பானை மாதிரி. உனக்கு உங்கம்மா மாதிரி அழகான பொண்ணு வேணுமா அப்போ இப்படியே பிரம்மசாரியாவே கெடக்க வேண்டியதுதான் என்று திட்டுகிறான். திட்டியபடியே அழவும் செய்கிறான். மனசை மட்டும் மாத்திக்காத அப்பறம் எனக்கு ஒரு துணை இல்லாமப் போயிடும் என்று சொல்லி அழுகிறான்.  அரச மரத்தடியின் மறு பக்கத்தில் இன்னொரு அழுகைக்குரல் லேசாகக் கேட்கிறது. யார் என்று போய்ப் போகிறான். முன்பு ஒருமுறை பெண் பார்க்கப் போய், குட்டையாக இருப்பதால் வேண்டாம் என்று சொன்ன அந்தப் பெண்  தனியாக உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறாள். அவள் அருகில் மெள்ளச் சென்று உட்காருகிறான். அவளுடைய கண்ணீரைத் துடைக்கிறான். நிதானமாக, பையில் இருக்கும் தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்டுகிறான்.

Thursday, 21 November 2013

அந்தக் கோடை வாசஸ்தலத்தில் நீங்கள் செய்தது எனக்குத் தெரியும்...!

குழந்தை மட்டும் பொறந்துடக்கூடாதுஎங்களை என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோங்க என்கிறார்கள் இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள். ஊட்டி சுற்றுலாவுக்குப் புறப்படும் மாணவர்களுக்கு சந்தோஷம் ஜிவ்வென்று ஏறுகிறது. உண்மையில் அந்த சுற்றுலாவில் தாங்கள் விரும்பும் பெண்களுக்கு பாலில் மயக்க மருந்து கொடுத்து தங்கள் ஆசையைத் தணித்துக் கொள்ள அவர்கள் ரகசிய திட்டம் தீட்டியிருந்தார்கள்.  ஆனால், அதற்கு எந்த வசியமும் ஏற்படாமல் அவர்களாகவே சம்மதம் தெரிவித்ததும் மிகுந்த சந்தோஷத்துடன் புறப்படுகிறார்கள். 

அந்தப் பெண்களைப் பொறுத்தவரையில் நாளை திருமணம் ஆகிவிட்டதென்றால், தங்களால் சுதந்திரமாக எதையும் செய்ய முடியாமல் போய்விடும். எனவே, கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது என்று தீர்மானித்திருக்கிறார்கள்.

எல்லாரும் ஊட்டிக்குச் செல்கிறார்கள். பழங்குடி சமூகம் போல் அல்லது அதி நவீன சமுகம் போல் எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம்பாலியல் சுதந்திரத்தை முழுவதுமாகத் துய்க்கிறார்கள். பத்து நாள் சுற்றுலாவை முடித்துவிட்டு பழைய வீடுகளுக்குத் திரும்புகிறார்கள்.

ஆனால், அதன் பிறகு ஆரம்பமாகிறது சங்கிலித் தொடர் கொலைகள்.

சுற்றுலாவுக்குச் சென்றவர்களில் ஒரு பெண்ணை இருவர் காதலித்திருந்தனர். அந்தப் பெண் தனக்குப் பிடித்த ஒருவனை மட்டும் தேர்ந்தெடுத்து இன்னொருவனை நிராகரித்ததில் அவனுக்கு கடுமையான கோபம். ஊட்டியில் நடந்ததை எல்லாரிடமும் சொல்லிவிடுவேன் என்று அவளைப் பயமுறுத்துகிறான்.  இதனால் நண்பர்களுக்கிடையில் சண்டை மூளுகிறது. உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று ஒருவருக்கொருவர் கூச்சலிட்டுக் கொள்கிறார்கள். அடுத்த நாள் காலையில் கல்லூரி கழிப்பறையில் சண்டையிட்டவர்களில் ஒருவன் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடக்கிறான்.  உடலில் மூன்று இடங்களில் அருகருகே கத்தியால் குத்திய தடம் தெரிகிறது. இன்னொருவனோ, நான் மிரட்டியது உண்மைதான் ஆனால் நான் கொல்லவில்லை என்கிறான்.

சில நாட்கள் கழிந்து, இறந்தவனின் காதலியும் மர்மமான முறையில் நூலகத்தில் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். அவளுடைய உடம்பிலும் அதே மூன்று கத்தி குத்திய தடம்! தன்னுடைய விருப்பத்துக்கு இணங்காததால்தான் அவளையும் அந்த நண்பன் கொன்றுவிட்டதாக அவன் மேல் எல்லாருக்கும் சந்தேகம் வருகிறது.

இதனிடையில் ஒருநாள் அவனும் பட்டப்பகல் வேளையில் கல்லூரி மேல் மாடியில் இருந்து விழுந்து இறந்துவிடுகிறான். அவனுடைய உடம்பிலும் மூன்று இடங்களில் கத்தி ஆழமாகப் பாய்ந்த தடம் இருக்கிறது! அவர்களிடையையான காதல் விவகாரம் தெரியவரவே அதுதான் அந்தக் கொலைகளுக்குக் காரணமாக இருக்கும் என்று காவல்துறை கேஸை மூடுகிறது. ஆனால், கொலைகள் தொடர்கின்றன.

சுதந்தர தினத்தன்று கொடியேற்றத்துக்காக கல்லூரி மாணவர்கள் அனைவரும் வரிசையாக நிற்கிறார்கள். வழக்கத்துக்கு மாறாக, தேசியக் கொடித்துணி சற்று பெரிய பொதியாகக் காணப்படுகிறது. நிறைய பூக்களை  வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு பிரின்சிபால் கொடியை ஏற்றுகிறார். மேலே ஏறிய கொடியின் முடிச்சு அவிழாமல் சிக்கிக் கொள்ளவே பிரின்சிபால் வேகமாகக் கயிற்றிப் பிடித்து இழுக்கிறார்.  கொடி விரிகிறது. அப்போது பூக்களுக்கு பதிலாக ரத்தம் தோய்ந்த தலை ஒன்று மேலிருந்து கீழே விழும். மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து சிதறி ஓடுவார்கள்.

இன்னொரு நாள் உடற் பயிற்சி வகுப்பு நடக்கும் நேரத்தில் ஈட்டி எறிதல் பயிற்சிக்காக மாணவர்கள் ஸ்போர்ட்ஸ் ரூமுக்குச் செல்வார்கள். அந்த நேரம் பார்த்து மின்சாரம் போய்விடும். ஈட்டியை எடுப்பவர் ஏதோ கனமாக இருக்கிறதே என்று சொல்லியபடியே அதை எடுத்துவருவார். அந்த ஈட்டியை தோளில் கிடைமட்டமாகச் சாய்த்தபடி வராண்டாவில் நடந்துவருவார். அவரைப் பார்ப்பவர்கள் எல்லாம் அதிர்ச்சியில் தலை தெறிக்க ஓடுவார்கள். என்ன விஷயமென்றால், அந்த ஈட்டியின் முனையில் ஒரு மாணவனின் தலை செருகப்பட்டிருக்கும். திரும்பிப் பார்க்கும் அந்த மாணவன் அதிர்ச்சியில் மயங்கிவிழுவார். இப்படி இறப்பவர்கள் எல்லாரும் சுற்றுலாவுக்குச் சென்று வந்தவர்களாகவே இருப்பார்கள்.

சுற்றுலாவுக்குப் போயிருந்தபோது நடந்ததை ஒரு மாணவன் செல்போனில் படமாக எடுத்து மாணவிகளை மிரட்டிக் கொண்டிருந்தான். அவன்தான் இந்தக் கொலைகளைச் செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுகிறது. அவனை எல்லாரும் கூப்பிட்டு மிரட்டுகின்றனர். தான் செல்போனில் படம் எடுத்தது உண்மைதான். ஆனால், யாரையும் கொல்லவில்லை என்கிறான். அடுத்த நாள் கல்லூரிக்கு தன் வண்டியில் வரும் வழியில் விபத்தில் சிக்கிக் கொள்கிறான். மருத்துவமனையில் சேர்க்கப்படும் அவன் மருத்துவர்களால் காப்பாற்றப்படுகிறான். ஆனால், அன்றிரவு ஒரு உருவம் மருத்துவமனைக்கு தனியாகப் போகிறது. அடிபட்டுக் கிடப்பவனின் ஆக்ஸிஜன் மாஸ்கை கழட்டிப் போடுகிறது. பிளாஸ்கில் இருந்து தேநீரை கிளாஸில் ஊற்றிக் கொண்டு படுக்கைக்கு அருகில் உட்கார்கிறது. நிதானமாக தேநீரை ரசித்துக் குடிக்கிறது. விபத்தில் அடிபட்டவன் மூச்சு முட்டி இறப்பதை வேடிக்கை பார்க்கிறது. அவன் துடிதுடித்து இறந்ததும் கண்ணை மூடிவிட்டு ஆக்ஸிஜன் மாஸ்கை மறுபடியும் பொருத்திவிட்டு அந்த உருவம் போய்விடுகிறது.

சுற்றுலா போவதற்கு முன்பாகவே இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று ஒரு மாணவன் அவர்களை எச்சரித்திருந்தான். அவன்தான் இந்தக் கொலைகளைச் செய்திருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டு அவனை விசாரிக்கிறார்கள். கொல்லும் அளவுக்கு தனக்கு அவர்கள் மீது எந்தக் கோபமும் கிடையாது என்று அம்மா மீது சத்தியம் செய்து சொல்கிறான். அதை எல்லாரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

கல்லூரியில் ஆண்டு விழா நடக்கிறது. அதில் இடம்பெறும் நாடகத்தில், முன்பே எச்சரிக்கை செய்திருந்தவனை இன்னொருவன் துப்பாக்கியால் சுடும் காட்சி இடம்பெறுகிறது. ஆனால், பொம்மைத் துப்பாக்கிக்குப் பதிலாக யாரோ உண்மைத் துப்பாக்கியை வைத்துவிடுகிறார்கள். அது தெரியாத அவன் நெஞ்சைக் குறிவைத்து சுட்டுவிடவே ரத்த வெள்ளத்தில் மிதக்கிறான் சுடப்பட்டவன். பார்வையாளர்கள் காட்சி தத்ரூபமாக இருப்பதாக கை தட்டி ஆர்ப்பரிக்கிறார்கள். சுட்டவனும் கதையின் படி ஓடி ஒளிந்து கொள்கிறான். திரைச்சீலை இறக்கப்படுகிறது. தரையில் விழுந்தவன் எழுந்திரிக்காமல் இருப்பதைப் பார்த்ததும் எல்லாரும் போய்ப் பார்க்கிறார்கள். உண்மையில் நிஜ குண்டினால் சுடப்பட்டது தெரிந்ததும் மருத்துவமனைக்கு விரைந்து எடுத்துச் செல்கிறார்கள். ஆனால், பாதி வழியிலேயே அவன் உயிர் பிரிந்துவிடுகிறது.

சுட்டவன் தலைமறைவாகிவிடுகிறான். அவனை நண்பர்கள் ரகசியமாகப் போய் சந்திக்கிறார்கள். அவன் தான் அம்மா மேல சத்தியம் செஞ்சு கொல்லைலைன்னு சொன்னானே. அவனைப் போய் எதுக்காகக் கொன்றாய் என்று கேட்கிறார்கள். நாடகத்தை நிர்வகித்த தமிழ் ஆசிரியர் துப்பாக்கியைக் கொடுக்கும்போது உண்மைத் துப்பாக்கி போலவே இருக்கிறதே என்றூ கேட்டபோது அவர் அதை தன் நெஞ்சுக்கு நேராக வைத்து சுட்டுக் காட்டியதாகவும் அப்போது அதில் குண்டு எதுவும் இல்லை என்றும் சொல்கிறான்.

விபத்தில் சிக்கியவனையும் கடைசியாகப் பார்த்துவிட்டு வந்தது தமிழாசிரியர்தான் என்ற தகவல் அவர்களுக்குக் கிடைக்கிறது. மாடியில் இருந்து விழுந்து இறந்தவனும் தமிழாசிரியரைப் பார்க்கப் போவதாகச் சொல்லிவிட்டுத்தான் போயிருந்தான். மாணவர்களுக்கு ஏதோ சந்தேகம் ஏற்படுகிறது. அவரை ரகசியமாக கண்காணிக்கிறார்கள். கல்லூரி வளாகத்தில் இருக்கும் குடியிருப்பில் தனியாகத் தங்கி இருக்கும் அவருடைய வீட்டை அவர் வகுப்பறைக்குப் போயிருக்கும்போது ஒரு பெண் போய் சோதிக்கிறார். வீட்டில் ஒரு திரிசூலம் காணப்படுகிறது! மேலும் தேடிப்பார்க்கையில், சுற்றுலாவுக்குப் போய் வந்தவர்கள் எடுத்த குரூப் புகைப்படம் ஒன்று இருக்கிறது. அதில் இறந்தவர்களின் முகத்தில் சிவப்பு மையால் பெருக்கல் குறி போடப்பட்டிருக்கிறது. புகைப்படத்தைக் கூர்ந்து கவனிக்கிறாள். அடுத்ததாக குறிவைக்கப்பட்டிருப்பது தான் தான் என்பது தெரிகிறது. பயத்தில் அலறி அடித்தபடி வாசலை நோக்கி விரைகிறாள். உள்பக்கமாக பெரிய பூட்டு போடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அறையை நோக்கி ஓடுகிறாள். அவள் ஓட ஓட ஒவ்வொரு அறையின் விளக்குகளும் தானாக அணைகின்றன. வீட்டுக்குள் இருள் பரவுகிறது. செல்போனின் டார்ச்சை போட்டுப் பார்ப்பவர் அதிர்ச்சியில் உறைகிறாள். ஒரு நாற்காலியில் தமிழ் ஆசிரியர் கையில் திரிசூலத்துடன் உட்கார்ந்திருக்கிறார்! இருவருக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் வெடிக்கிறது. ஊட்டிக்குப் போனபோது கலாசார சீரழிவு வேலையில் அவர்கள் ஈடுபட்டதால் அவர்கள் ஒவ்வொருவரையாகக் கொன்றதாக கொக்கரிக்கிறார்.

தமிழாசிரியருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் வாக்குவாதம் நடக்கிறது. உண்மையிலேயே சமூகத்தில் எத்தனையோ சீரழிவுகள் நடக்கின்றன. சாதி வெறி பிடித்தவர்களுக்கு எதிராக இந்த கொலையை நடத்த வேண்டும். காவல்துறையின் அராஜகம், கல்வித்துறையில் நடக்கும் ஊழல், மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகள், அரசியல்வாதிகளின் அட்டூழியங்கள் இதற்கு எதிராக போராட வேண்டும். அந்த அட்டூழியங்களைச் செய்பவர்களைக் கொல்ல வேண்டும். ஒழுக்கம், பண்பாடு தொடர்பான விஷயங்கள் காலத்துக்கு ஏற்ப மாறக்கூடிய ஒன்று. தனி நபர் விருப்பம் சார்ந்தது. பண்பாட்டுக் காவலர்கள் சாதி வெறி பிடித்தவர்களாகவும், ஆணாதிக்கப் போக்கு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். புதிய தலைமுறை அவை எல்லாவற்றையும் தூக்கித் தூர எறிந்துவிட்டு முன்னே செல்ல முயற்சி செய்கிறது. ஒழுக்கம் சார்ந்த விதிகளும் அதுபோல் மாற்றத்துக்கு உள்ளாக வேண்டிய ஒன்றுதான். பாலியல் சுதந்திரம் முழுமையாக அனுமதிக்கப்படும் பழங்குடி சமூகத்திலோ, அதி நவீன சமூகத்திலோ அது தொடர்பான வக்கிர சம்பவங்கள் நடப்பதில்லை. பண்பாட்டைக் கட்டிக் காப்பதாகச் சொல்லும் சமூகங்களில்தான் சாமியாரில் இருந்து சம்சாரி வரை எல்லாரும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்கள் என்று அவள் சொல்கிறாள். தமிழ் இலக்கியங்களில், பழங்கால வாழ்க்கையில் இருந்து பாலியல் சுதந்திரம் பற்றி பேசுகிறாள். பாலியல் சுதந்திரத்துக்கும் சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் இடையிலான தொடர்பை விளக்கிச் சொல்கிறாள்.

தமிழாசிரியர் நாகரிக சமூதாயத்தின் அடையாளமாக பாலியல் ஒழுக்கம் இருப்பதை எடுத்துச் சொல்கிறார். மற்ற சமூகங்கள் எப்படி இருக்கின்றன என்பது நமக்குத் தேவையில்லை. ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒவ்வொரு அடையாளங்கள் உண்டு. அதை அவர்கள் பின்பற்ற வேண்டும். உலகில் யாருமே தாலி கட்டுவதில்லைஎன்றூ நாமும் தாலியை தூக்கி எறிய வேண்டியதில்லை. பாலியல் சுதந்திரத்தை வாய் கிழியப் பேசும் சமூகங்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்பதன் தேவையை உணர்ந்து அந்த வழிக்குத் திரும்ப ஆரம்பித்திருக்கும் நிலையில் நாம் அவர்களைப் போல் செய்ய முற்படுவது தவறு என்கிறார்.

இருவருக்கும் இடையில் பெரும் சண்டை நடக்கிறது. வீட்டுக்குப் பின் பக்கத்தில் இருக்கும் தோட்டத்துக்கு தப்பி ஓடுகிறாள். துரத்தி வரும் தமிழாசிரியர் கால் தவறி அங்கு இருக்கும் கிணற்றுக்குள் விழுந்துவிடுகிறார். அவர் தலை மேல் பெரிய கல்லைப் போட்டு கொன்றுவிடுகிறாள். மறு நாள் காவல் துறையோடு வந்து அந்த உடலை எடுத்து போஸ்ட்மார்டம் செய்து புதைக்கிறார்கள்.


தன்னுடைய அறைக்குத் திரும்பும் அந்தப் பெண் குளித்துமுடித்துவிட்டு புதிய உரை அணிந்துகொண்டு வருகிறாள். கதவிடுக்கு வழியாக ஒரு கடிதம் வீசப்படுகிறது. எடுத்துப் பிரித்துப் பார்க்கிறாள்... அந்தக் கோடை வாசஸ்தலத்தில் நீங்கள் செய்தது எனக்குத் தெரியும்!என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது.  

Sunday, 17 November 2013

காதல் - 2 பாகம் 4

அங்கு ஐஸ்வர்யாவைக் காணாமல் ஒரே களேபரமாக இருக்கிறது. அந்த விஷயம் தெரிந்துதான் இவன் வந்திருக்கிறான் போலிருக்கிறது என்று அங்கிருப்பவர்கள் நினைக்கிறார்கள். பைத்தியமாக இருந்தாலும் இவ்வளவு பாசம் இருக்கிறதே என்று பேசிக்கொள்கிறார்கள். முருகன் பைத்தியம் போலவே நடித்து தனியாக இருக்கும்போது குழந்தைகளை மயக்க மருந்து கொடுத்து கடத்திக் கொண்டுவந்துவிடுகிறான்.

கண் முழித்து குழந்தைகள் கேட்கும்போதுஅம்மாதான் உங்களை அழைத்து வரச் சொன்னார்கள். இனிமேல் நாம்தான் சேர்ந்து வாழ வேண்டும் என்கிறான். குழந்தைகள் அது நிஜமா என்று அம்மாவிடம் போய் கேட்கின்றன. அம்மாவோ இல்லை என்கிறாள்.

முருகன் வாங்கிக்கொண்டு வந்த உணவை மூவரும் சாப்பிட மறுக்கிறார்கள். முருகன் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பலன் இல்லை. அன்று முழுவதும் எதுவும் சாப்பிடாமலேயே எல்லாரும் தூங்குகிறார்கள்.

நள்ளிரவில் ஒரு குழந்தைக்கு முழிப்பு வருகிறது. தூங்கிக் கொண்டிருக்கும் முருகனிடம் இருக்கும் செல்போனை நைஸாக எடுத்துக்கொண்டு வந்து ஐஸ்வர்யாவிடம் கொடுத்து அப்பாவுக்குப் போன் செய்யச் சொல்கிறது. ஐஸ்வர்யாவோ வேண்டாம். அப்படிச் செய்தால்அப்பவும் தாத்தாவும் வந்து முருகனை அடித்துக் கொன்றுவிடுவார்கள். என் மீது இருக்கும் காதலினால்தான் இப்படி எல்லாம் செய்கிறான். அவன் நல்லவன்தான் என்று சொல்கிறாள். நம்மளைக் கடத்திட்டு வந்து அடைச்சி வெச்சிருக்கானே... அவன் எப்படி நல்லவனா இருக்க முடியும் என்று குழந்தைகள் கேட்கின்றன. உனக்கு ரொம்பவும் பிடிச்ச பொம்மையை வேற யாராவது பிடுங்கிட்டா என்ன செய்வஅவங்க கூட சண்டை போடுவ இல்லையா. அப்படி சண்டை போட்டா கெட்டவன்னு சொல்ல முடியுமா. அது மாதிரித்தான் என்று சொல்லி சமாதானப்படுத்துகிறாள்.

குழந்தை அவள் சொல்வதைக் கேட்காமல் அப்பாவுக்கு போன் போடப் போகின்றன. ஐஸ்வர்யா குழந்தைகளிடம் இருந்து வாங்கி வைத்துக் கொள்கிறாள். குழந்தைகள் கோபத்தில் முரண்டு பிடிக்கவே தங்கள் காதல் கதையைச் சொல்கிறாள். முதன் முதலில் தெருவில் சந்தித்ததுமெக்கானிக் ஷெட்டுக்குப் போய் வம்பிழுக்கிழுத்ததுகாதலித்ததுவீட்டை விட்டு ஓடியது என எல்லாவற்றையும் சொல்கிறாள். என்னை உயிருக்கு உயிராக நேசிச்ச ஒரே காரணத்துக்காக அடிபட்டு பைத்தியமாகி கஷ்டப்படற முருகனை என்னால மறக்கவே முடியாது. இப்பக் கூட என் நினைவாகவே தான் இருக்கான். அதுனாலதான் இப்படியெல்லாம் செய்யறான். நீங்க மட்டும் பிறக்கலைன்னா உங்க அப்பாவைக் கூட விட்டுட்டு முருகன் கூடயே போயிருந்தாலும் போயிருப்பேன். அந்த அளவுக்கு அவனை எனக்கும் பிடிக்கும் என்று சொல்கிறாள்.

அப்ப இனிமே நாம இவன் கூடத்தான் இருக்கணுமா. வீட்டுக்குப் போகமாட்டோமா என்று குழந்தைகள் கேட்கின்றன. இல்லை என்று வேகமாக மறுக்கும் ஐஸ்வர்யா அவனை இப்ப என் அண்ணனாத்தான் பாக்கறேன். நடந்தது நடந்துபோச்சு. காதலிச்சவனை அண்ணான்னு கூப்பிட வேண்டிய நிலை இந்த உலகத்துல எந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாது. காதல் தோத்துடுச்சுன்னா மறுபடியும் அவங்க சந்திச்சுக்கவே கூடாது. அது மாதிரியான நரகம் இந்த உலகத்துல எதுவுமே கிடையாது என்று அழுகிறாள். என் கண்ணுல ஒரு துளி கண்ணீர் வந்தாலும் பொறுக்கமாட்டான். இப்ப அவனே நான் அழறதுக்குக் காரணமாகிட்டான் என்று சொல்லிக் கலங்குகிறாள். பைத்தியம் தெளிஞ்சது உனக்கு முன்னாலயே தெரியுமா என்று குழந்தைகள் கேட்கின்றன. ஆமாம் என்கிறாள். அப்பாகிட்ட அப்பவே சொல்லியிருந்தா இந்தப் பிரச்னையே வந்திருக்காதே என்கின்றன. சொல்லணும்னுதான் நினைச்சேன். ஆனால்அதைத் தாங்கிக்கற பலம் அவனுக்குக் கிடையாது. மறுபடியும் புத்தி பேதலிச்சிடும்னு டாக்டர் சொன்னாங்க. அதான் சொல்லலை என்கிறாள். அதையெல்லாம் வாசலில் இருந்து கேட்கும் முருகன் ஸ்தம்பித்துப் போகிறான். மெள்ள அவன் மனது மாறுகிறது. தன் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் ஐஸ்வர்யாவுக்குக் கெடுதல் செய்யக் கூடாது என்று நினைக்கிறான். குழந்தைகள் வேறு பட்டினியில் துடிக்கின்றன. இனியும் அவர்களைக் கஷ்டப்படுத்தக்கூடாது என்று நினைக்கிறான். திரும்பிக் கொண்டுபோய் விட்டுவிட முடிவு செய்கிறான்.

ஒரு வாடகை காரை வரச் சொல்கிறான். ஐஸ்வர்யாவிடமும் குழந்தைகளிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு காரில் ஏற்றிவிடுகிறான். எல்லாரும் ஏறியதும் கார் கதவை மூடிவிட்டு போய்வரச் சொல்கிறான். நீ வரலியா என்று ஐஸ்வர்யா கேட்கிறாள். நீங்கள் மட்டும் போங்கள். நான் வந்தால் எல்லாரும் அடித்துவிடுவார்கள் என்று சொல்கிறான். ஐஸ்வர்யாவும் குழந்தைகளும்கவலைப்படாதீர்கள். எங்கள் வீட்டுக்காரர்களை சமாதானப்படுத்தி உங்களை ஏற்றுக் கொள்ள வைக்கிறோம் என்று சொல்லி அவனை அழைத்துச் செல்கின்றனர். க்ளைமாக்ஸ் - 1

கார் நேராக ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு வருகிறது. அங்கு நிறைய பேர் கூடி நிற்கிறார்கள். ஐஸ்வர்யாவும் குழந்தைகளும் காரில் இருந்து இறங்கியதும் சந்தோஷத்துடன் ஓடிப் போய் கட்டிப் பிடிக்கிறார்கள். மெதுவாகமுருகனும் காரில் இருந்து இறங்குகிறான். ஆனால்அவனைப் பார்க்கும் ஐஸ்வர்யாவின் அப்பாவுக்குக் கோபம் தலைக்கேறுகிறது. குழந்தைகளையும் ஐஸ்வர்யாவையும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். போகும்போது தன் ஆட்களுக்குக் கண்ணைக் காட்டிவிட்டுப் போகிறார். அவர்கள் முருகனை வீட்டுக்குப் பின்பக்கம் அழைத்துச் செல்கிறார்கள்.

அங்கு போனதும் சுற்றி வளைத்து அவனை சரமாரியாக அடிக்க ஆரம்பிக்கிறார்கள். விஷயம் தெரிந்து ஐஸ்வர்யா விழுந்தடித்து ஓடி வருகிறாள். அவள் சொல்வது எதையும் கேட்காமல் அவனை வெறித்தனமாகத் தாக்குகிறார்கள். குழந்தைகளும் அடிக்காதே அடிக்காதே என்று குறுக்கே விழுந்துதடுக்கின்றன. அவர்களையும் பிடித்துத் தள்ளிவிட்டு அடிக்கிறார்கள். ஒண்ணு நீ மறுபடியும் பைத்தியமா ஆகிடணும். இல்லைன்னா செத்துப் போயிடணும். இந்த உலகத்துல சுய நினைவோட இனி ஒரு நாள் கூட நீ இருந்துடக்கூடாது என்று ஐஸ்வர்யாவின் அப்பா சொல்லிச் சொல்லி அடிக்கிறார்.

கடைசியில் ஐஸ்வர்யா தன்னைப் பிடித்திருப்பவர்களை எட்டித் தள்ளிவிட்டு முருகனை நோக்கிப் பாய்கிறாள். குற்றுயிரும் குலையியுருமாக இருக்கும் முருகனைதன் மடியில் எடுத்துப் போட்டுக் கொள்கிறாள். உன் புருஷன் கிட்ட உன்னையச் சேத்துட்டு தற்கொலை பண்ணிக்கனும்னுதான் நான் நினைச்சிருந்தேன். உங்க அப்பா சொல்றது சரிதான். காதல்ல தோத்துப் போயிட்டா பைத்தியமா அலையலாம். அப்படி இல்லைன்னா செத்துப் போயிடணும் ஐசு. காதலிச்சது நெஜமாயிருந்தாகாதல் போயிடிச்சின்னா செத்துத்தான் போகணும் ஐசு. நான் அதுக்குத் தயாராத்தான் வந்தேன். இப்ப உங்க அப்பாவோட ஆளுங்க என் வேலையை சுளுவாக்கிட்டாங்க என்று சொல்லி பக்கத்தில் இருக்கும் கத்தியை எடுத்து தன் இதயத்தில் செருகிக் கொள்கிறான். பீறீட்டுச் சிதறும் ரத்தத்தில் ஒரு துளி ஐஸ்வர்யாவின் நெற்றியில் தெறிக்கிறது. முருகன் அதைத் தன் சுட்டு விரலால் துடைத்தெறிகிறான். உன் கூட வாழற பாக்கியம் தான் எனக்குக் கிடைக்கலை. உன் மடியில சாகற பாக்கியமாவது கிடைச்சுதே என்று சொல்லித் தன் உயிரை விடுகிறான்.

அவன் உயிர் தன் மடியில் போனதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடையும் ஐஸ்வர்யாபத்து வருஷத்துக்கு முன்னால உன்னை நான் காதலிக்காம இருந்திருந்தா நீ பைத்தியமாகியிருக்க மாட்ட. ஐஞ்சு வருஷத்துக்கு முன்னால உன்னைப் பாக்காம இருந்திருந்தா பைத்தியமாவாவது இந்த உலகத்துல வாழ்ந்திட்டு இருந்திருப்பியே. நல்லது செய்யறேன்னு சொல்லி உன்னைக் கொன்னுட்டேனே. அன்னிக்கு காதலிச்சு உன்னை பைத்தியமாக்கினேன். இன்னிக்குக் குணமாக்கறேன்னு சாகடிச்சிட்டேனே என்று அரற்றுகிறாள். வேதனையும் குற்ற உணர்ச்சியும் முற்றிப் போய் அவளுக்கும் புத்தி பேதலித்துவிடுகிறது. என்னைக் காதலிச்ச உன்னைக் கொன்னுட்டேனே... என்னை மட்டும் காதலிச்ச உன்னைக் கொன்னுட்டேனே என்று அரற்றியபடியே அவன் உடலைக் கையில் ஏந்தியபடி ஆடை அவிழ்ந்ததுகூடத் தெரியாமல் தெருவில் போகிறாள். அனைவரும் உறைந்துபோய் நிற்கிறார்கள்.க்ளைமாக்ஸ் -2

கார் நேராக ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு வருகிறது. அங்கு நிறைய பேர் கூடி நிற்கிறார்கள். ஐஸ்வர்யாவும் குழந்தைகளும் காரில் இருந்து இறங்குகிறார்கள். ஆனால்வீட்டுக்குள் அவர்கள் காலெடுத்து வைத்ததும் ஐஸ்வர்யாவின் கணவர் கேட்கும் முதல் கேள்வி : எங்க வந்தஐஸ்வர்யா அதைக் கேட்டதும் நிலைகுலைந்து போகிறாள். கல்யாணத்துக்கு முன்னாலயே ஓடிப்போன... அதைப் பொறுத்துக்கிட்டேன். ரெண்டு புள்ளைங்க பொறந்தப்பறமும் ஓடிப் போயிருக்கியே. இனிமே என் முகத்துல முழிக்காதே என்று பிடித்துத் தள்ளுகிறார். ஐஸ்வர்யா நடந்ததை சொல்ல வாயெடுக்கிறாள். ஆனால்அவரோ அதைக் கேட்கத் தயாரில்லை.

இதனிடையில் ஐஸ்வர்யாவின் அம்மா கொள்ளிக்கட்டையை எடுத்துக்கொண்டு ஆவேசமாக வருகிறார். படிக்கற வயசுல அரிப்பெடுத்து ஓடின... வயசுக் கோளாறுன்னு நெனெச்சோம். இப்ப ரெண்டு புள்ளயைப் பெத்தப் பொறவும் ஓடியிருக்கியே... உனக்கு அரிப்பு அடங்கலியா என்று திட்டியபடியே கொள்ளிக்கட்டையை அடி வயிற்றில் செருகப் போகிறாள். முருகன் குறுக்கே பாய்ந்து தடுக்கிறான். கூடியிருப்பவர்கள் அனைவருமே ஐஸ்வர்யாவை புழுதி வாரி இறைக்கிறார்கள். முருகன் ஒவ்வொருவர் காலிலும் விழுந்துதன் மீதுதான் தவறு என்று கெஞ்சுகிறான். நான் செய்த தவ்றுக்கு என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். மறுபடியும் பைத்தியமாகக் கூட ஆக்கிக்கொள்ளுங்கள். அல்லது அடித்துப் போட்டுக் கொல்லுங்கள்.  ஐஸ்வர்யாவை விட்டுவிடுங்கள் என்று கதறுகிறான். ஆனால்அவர்கள் அவனை எட்டி உதைக்கிறார்கள்.

ஐஸ்வர்யாவின் கணவரிடம் கடைசியாகப் போய் முருகன் கெஞ்சுகிறான். ஐஸ்வர்யா உங்களுடைய நினைப்பாவேதான் இருக்கிறாள். அவளைச் சந்தேகப்படுவது கண்ணகியைச் சந்தேகப்படுவதற்க்கு சமம். அவளை நம்புங்கள் என்று கெஞ்சுகிறான். போடா... ரெண்டு பேரும் சேர்ந்து நாடகமா ஆடறீங்க. உனக்கு புத்தி சரியாகி ஆறு மாசம் ஆயிருக்கு. அவளுக்குத் தெரிஞ்சும் அதை என்கிட்ட மறைச்சிருக்கா. என் ரெண்டு புள்ளகளையுமே அவ எனக்குத்தான் பெத்தாளான்னு இப்ப சந்தேகமாக இருக்கிறது என்று காறி உமிழ்கிறார்.

அதைக் கேட்டதும் ஐஸ்வர்யாவுக்கு மூச்சே நின்றுவிடும்போல் ஆகிவிடுகிறது. பூமியே பிளந்ததுபோல் தலைசுற்றி விழுகிறாள். முருகன் அவருடைய காலில் விழுந்து அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். நான்தான் அவளை மிரட்டிச் சொல்லவிடாமல் தடுத்தேன். எனக்கு மறுபடியும் பைத்தியம் பிடிச்சிடும்னு பயந்துதான் அவ சொல்லலை. இப்போது கூட நான்தான் அவளையும் குழந்தைகளையும் கடத்திக்கொண்டு போனேன். அவளை நீங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கெஞ்சுகிறான். காலால் அவனை எட்டி உதைக்கிறார்.

தடுமாறிக் கீழே விழும் முருகனை ஒரு கரம் தூக்கிவிடுகிறது. அவிழ்ந்த கூந்தலை அள்ளிச் செருகியபடி ஐஸ்வர்யாகண்ணகிபோல்  நின்றுகொண்டிருக்கிறாள். நீ யார் கிட்டயும் மன்னிப்பு கேட்க வேண்டாம். உன்னை மன்னிக்கற அருகதை இங்க எந்த நாய்க்கும் கிடையாது. வா நாம போவோம். பெத்து வளர்த்த ஆத்தாவுக்கு புள்ள மேல நம்பிக்கை இல்லை. தொட்டுத் தாலி கட்டி குடும்பம் நடத்தினவனுக்கு பொண்டாட்டி மேல நம்பிக்கை இல்லை. இனி இங்க ஒரு நிமிஷம் இருந்தாலும் என் தலை வெடிச்சிடும். இவன் கூட இத்தனை நாள் வாழ்ந்ததை நினைச்சாலே என் உடம்பெல்லாம் கூசுது என்று சொல்லியபடியே தன் குழந்தைகளைப் பார்த்துஅம்மா மேல தப்பு இல்லைன்னு நீங்க நம்பறீங்க இல்லையா என்று கேட்கிறாள். குழந்தைகள் ஆம் என்று  தலையாட்டுகின்றன. வாங்க என் கூட என்று அவர்களை அழைத்துக் கொள்கிறாள். போவதற்கு முன் தன் தாலியை அறுத்து கணவனின் முகத்தில் வீசுகிறாள். முருகனைக் கையைப் பிடித்து இழுத்தபடியே குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு புறப்படுகிறாள். முருகன் திக் பிரமை பிடித்தபடியே அவள் பின்னால் போகிறான். அனைவரும் உறைந்து போய் நிற்கிறார்கள்.
  

காதல் - 2 பாகம் 3

கணவனும் புள்ளயும் இருக்கறதாலதான் அவ என் கூட வரமாட்டேங்கறா. அவளை எப்படி வழிக்குக் கொண்டுவரணும்னு எனக்குத் தெரியும் என்று கரட்டாண்டியிடம் சொல்கிறான். அப்படியெல்லாம் எதுவும் செஞ்சிடாதீங்கண்ணே என்று அறிவுரை சொல்கிறான். நீயெல்லாம் எனக்கு யோசனை சொல்ற அளவுக்கு வளர்ந்துட்டியா... இனிமே இதுமாதிரி பேசினா என்னைப் பாக்க வராதே என்று அடித்து விரட்டுகிறான்.

அதைத் தொடர்ந்து சில அசம்பவிதங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. ஐஸ்வர்யாவின் கணவர் ஓட்டிச் செல்லும் கார் ஒரு நாள் ஆக்ஸிடண்டில் சிக்குகிறது. கரட்டாண்டிக்கு முருகன் மேல் சந்தேகம் வருகிறது. ஆனால்எதுவும் சொல்லாமல் இருக்கிறான்.

சிறிது நாட்கள் கழித்து ஐஸ்வர்யாவும் குழந்தைகளும் ஒரு திருமணத்துக்குப் போகிறார்கள். கணவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்கிறார். அப்போது ஏ.சி. மிஷின் லீக் ஆகி வீட்டில் பெரும் விபத்து நடக்கிறது. கரட்டாண்டியின் சந்தேகம் அதிகரிக்கிறது. உண்மையில் முருகன்தான் சதி செய்கிறானா என்று தெரியவும் இல்லை. இருந்தாலும்வேண்டாம்னே விட்ருங்க அண்ணே என்று முருகனிடம் கெஞ்சுகிறான். அவனோ தனக்கு எதுவும் தெரியாது. சாமியா பாத்து கொடுக்கற தண்டனை என்கிறான்.

இன்னொரு நாள் ஐஸ்வர்யாவின் இரண்டு குழந்தைகளும் காணாமல் போய்விடுகிறார்கள். பக்கத்து வீடுநண்பர்கள் வீடுஉறவினர் வீடு என்று எங்கு தேடியும் காணவில்லை. கரட்டாண்டி நேராக ஐஸ்வர்யாவைச் சந்தித்து முருகன் தன்னிடம் சொன்னதைச் சொல்லிவிடுகிறான்.

கோபம் கொண்ட ஐஸ்வர்யா நேராக மருத்துவமனைக்கு விரைகிறாள். முருகனைப் போட்டு அடி அடியென்று அடிக்கிறாள். என் குழந்தைகளுக்கு மட்டும் எதுனா ஆச்சுன்னா உன்னைக் கொன்னே போடுவேன் என்கிறாள். முருகனோ துடி துடித்துப் போகிறான். நான் ஒன்ணும் செய்யலை ஐசு... என்னைப் போயி சந்தேகப்படறியே என்று கதறுகிறான். கரட்டாண்டியோ இவன்தான் செய்திருப்பான் என்று திட்டுகிறான்.

இதனிடையில் குழந்தைகள் கிடைத்துவிட்டார்கள் என்று வீட்டில் இருந்து போன் வருகிறது. உண்மையில் குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். வாட்டர் டேங்குக்குள் இருவரும் ஒளியப் போயிருக்கிறார்கள். இன்னொரு குழந்தை விளையாட்டுத்தனமாக வெளிபுறம் தாழ் போட்டுவிட்டது. உள்ளே மாட்டிக் கொண்ட குழந்தைகள் பயத்தில் மயங்கிவிட்டன. யாருக்கோ சந்தேகம் வந்து அங்கு போய் பார்த்த பிறகுதான் உண்மை தெரிந்திருக்கிறது. ஐஸ்வர்யா முருகனிடம் மன்னிப்பு கேட்கிறாள். கரட்டாண்டியும் மன்னிப்பு கேட்கிறான். எல்லாரும் போன பிறகு முருகன தனக்குள் முனகுகிறான் : இதுவரை நான் எதுவும் செய்யலை. ஆனாஇனிமே செய்வேன்.

சொன்னபடியே செய்கிறான். ஐஸ்வர்யாவைக் கடத்திக்கொண்டு போய்த் தன் நண்பனின் அறைக்குள் அடைத்து வைக்கிறான். பகலில் மருத்துவமனையில் பைத்தியம் போல் இருக்கிறான். இரவில் நைஸாக நண்பனின் ஹெஸ்ட் ஹவுஸுக்குப் போய்விடுகிறான். ஐஸ்வர்யாவின் மனத்தை மாற்ற முயற்சி செய்கிறான். அவள் முடியாது என்று மறுக்கவே கோபப்படுகிறான்.

அப்ப என்ன மயித்துக்குடி என்னைக் காப்பாத்தின. நான் பாட்டுக்கு பைத்தியமா இருந்துட்டு நிம்மதியா அநாதைப் பொணமா செத்துப் போயிருப்பேன்ல. என்ன மயித்துக்கு என்னைக் காப்பாத்தின?

என்னைக் காதலிச்ச பாவத்துக்காக நீ இப்படி பைத்தியமா அலையறதைப் பாத்த பிறகும் எப்படி என்னால போக முடியும்இரக்கப்பட்டு உன்னைக் காப்பாத்தினது தப்பா முருகா?

காப்பாத்தினது தப்பு இல்லை. காப்பாத்திட்டு காதல் இல்லைன்னு சொல்றில்ல அதுதான் தப்பு. ஊருக்காக வாழ்ந்தது போதும் ஐசு. உனக்காக வாழ ஆரம்பி. நமக்காக வாழ ஆரம்பி ஐசு.

நீயும் நானும் என காட்டுலயா வாழ்ந்திட்டு இருக்கோம். ஊருக்குள்ள நாலு பேர் மத்தியில தான வாழறோம். நாலு பேரை மதிச்சு நல்லது கெட்டதுக்குக் கட்டுப்பட்டுத்தான வாழணும்.

அது தேவையே இல்லை ஐசு. அப்படி நாம என்ன தப்புச் செஞ்சிட்டோம். காதலிக்கறது தப்பா ஐசு?

காதலிக்கறதுல தப்பே இல்லை. ஆனால்தப்பா காதலிக்கிறியே முருகா.

என் காதலை உன்னால புரிஞ்சுக்க முடியலையா ஐசு.

நீ என்னை இவ்வளவு காதலிக்காதன்னுதான உன் கிட்ட கெஞ்சிக் கேட்டுக்கறேன். என்னை விட்ரு. என் புருஷன் கிட்ட சொல்றேன். உனக்கு பொண்ணு பாத்து கட்டி வைப்பாரு. ரொம்ப நல்லவரு..

உன் புருஷன் நல்லவனாஎங்க இன்னொரு தடவை என் முகத்தைப் பார்த்துச் சொல்லு.

ஆமா. என் புருஷன் நல்லவருதான். இல்லைன்னா உன்னை கூட வெச்சுப் பாத்துக்கறேன்னு சொன்னதுக்கு சம்மதிச்சிருப்பாரா?

என்ன ஐசு இப்படிச் சொல்ற. உன்னை என் கிட்ட இருந்து பிரிச்சவன் ஐசு. அவனைப் போய் நல்லவன்னு சொல்றியே. தெரியாமத்தான் கேக்கறேன். கூட வெச்சிக் கவனிக்க சம்மதிச்சாருன்னு சொல்றியே... எனக்கு குணமானது தெரிஞ்சாகூட இருக்கவிடுவாராபைத்தியம் என்ன செஞ்சிடப் போகுது... இந்த கட்டில்சோஃபா மாதிரி அதுவும் ஒரு ஜடம்ன்னுதான பக்கத்துல வெச்சிக்க்க சம்மதிச்சிருக்கான். அவனைப் போய் நல்லவன்னு சொல்றியே. அதுவும் என் கிட்டயே...

நீ ஆயிரம்தான் சொன்னாலும் நல்ல மனசு இருந்தாத்தான் இப்படியெல்லாம் செய்ய முடியும். அவரு நல்லவருதான். உன்னை மாதிரியே நல்லவருதான்.

நல்லவன்னா என்ன செய்யணும் தெரியுமா... எனக்கு குணமாகிடிச்சுன்னு சொன்னதும் உன்னை என் கூட அனுப்பி வைக்கணும். அதைச் செய்வானா?

அது எப்படி முருகா முடியும்?

ஏன் முடியாது?. இப்ப நான் ஒரு பொருளை ஒருத்தர் கிட்ட பத்திரமா பாத்துக்குங்கன்னு கொடுத்துட்டுப் போறேன். கொஞ்ச நாள் கழிச்சு வந்து கேட்டா என்ன செய்யணும்... திருப்பித் தரணுமில்லையா. அதுதான முறை. அவன்தான நல்லவன். உன் புருஷன் நான் கேட்டா உன்னைக் கொடுப்பானாஇத்தனைக்கும் உன்னை அவன் என் கிட்ட கேட்டு எடுத்துட்டுப் போகலை. என்னை அடிச்சிப் போட்டுட்டு எடுத்துட்டுப் போயிருக்கான். உன்னால எப்படி ஐசு அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேச முடியுது. இனிமே அந்த ஆளை நல்லவன்னு என்கிட்ட எதுவும் பேசாத. அப்பறம் நான் நல்லவனா இருக்க மாட்டேன். இல்லைநான் தெரியாமத்தான் கேக்கறேன்உன்னால எப்படி ஐசு என்னை மறந்துட்டு அவன் கூட வாழ முடியுது.

அது என் தப்புத்தான். நீ எங்கயோ உசுரோட நல்லபடியா இருக்கன்னு நம்பித்தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். உனக்கு பைத்தியம் பிடிச்சிருந்தது தெரிஞ்சிருந்தா நான் கல்யாணம் பண்ணியிருக்கவே மாட்டேன்.

அது பரவாயில்ல ஐசு. தப்புச் செய்யாத மனுஷனே கிடையாது. அதே நேரம் செஞ்ச தப்பை திருத்திக்கலைன்னா அவன் மனுஷனே கிடையாது. நீ தப்பு செஞ்சதுல தப்பு இல்ல ஐசு. அதைத் திருத்திக்க மாட்டேன்னு சொல்றியில்ல அதுதான் தப்பு.

நீ என்னதான் சொன்னாலும் என்னால உன் கூட வர முடியாது. கல்யாணம் மட்டும் ஆகியிருந்தாக் கூடப் பரவாயில்லை. ரெண்டு குழந்தைங்க வேற பிறந்திடுச்சே. எப்படி விட்டுட்டு வரமுடியும்..

அதனால என்ன ஐசு. அந்தக் குழந்தைகளையும் கூட்டிட்டு வர்றேன். எப்படியிருந்தாலும் எனக்குப் பிறந்திருக்க வேண்டிய குழந்தைங்கதான. என் குழந்தை மாதிரியே அன்பா பாத்துக்கறேன். நமக்கு வேற குழந்தை பிறந்தா இந்தக் குழந்தைங்களை கைவிட்டுருவேன்னு நினைச்சா நமக்கு குழந்தைங்களே வேண்டாம் ஐசு. எனக்கு உன் சந்தோஷம் முக்கியம் ஐசு. நீ இங்கயே இரு. உண் புள்ளைகளை இங்க கூட்டிட்டு வர்ரேன் என்று சொல்லிவிட்டுப் புறப்படுகிறான். குழந்தைகளை இங்க கொண்டுவராதே. என்னை அங்க கொண்டுபோய்விடு என்று ஐஸ்வர்யா கதறுகிறாள். அவளை அறைக்குள் பூட்டிவிட்டு நேராக அவர்களுடைய வீட்டுக்குச் செல்கிறான்.

(தொடரும்)

காதல் -2 பாகம் 2


யதேச்சையாக வெளியில் அழைத்துச் செல்வதுபோல் முருகனை அவன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அம்மாவைப் பார்க்க வைக்கிறார்கள். அம்மா மீதான பாசம் எப்படியும் அவனை நடிப்பதில் இருந்து வெளியில் கொண்டுவந்துவிடும். அம்மா சொல்வதைக் கேட்டு நடக்க ஆரம்பிப்பான் என்று நினைக்கிறாள். அவனுடைய அம்மாவும் முருகனின் நிலை குறித்து வருந்தி அழுகிறார். நினைவு திரும்பி அம்மான்னு ஒரு தடவை கூப்பிடமாட்டானா என்று ஏங்குகிறார். ஆனால்
முருகனோ அம்மா முன்னாலும் பைத்தியமாகவே நடிக்கிறான்.

தோழியும் ஐஸ்வர்யாவும் அவனுடைய முறைப் பெண் வீட்டுக்குச் செல்கிறார்கள். முருகனுக்குக் குணமானால் அவனைத் திருமணம் செய்து கொள்ளத் தயாரா என்று கேட்கிறார்கள். அவள் சம்மதம் என்று சொல்கிறாள். விரைவிலேயே அவனுக்குக் குணமாகிவிடும் என்று சொல்லிவிட்டு வருகிறார்கள்.

முருகனுக்கு பைக் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் கரட்டாண்டியையும் அழைத்துக்கொண்டு நால்வருமாக ஒரு ஷோரூமுக்குப் போகிறார்கள். புதிதாக வந்திருக்கும் பைக்கைப் பார்க்கும்போது முருகனுக்கு கைகள் பரபரக்கின்றன. கரட்டாண்டியை டெஸ்ட் டிரைவுக்கு வண்டியை எடுத்துச் செல்லும்படிச் சொல்கிறாள். முருகனும் பின்னால் உட்கார்ந்து கொள்கிறான். இவர்களுடைய கண் பார்வையில் இருந்து மறைந்ததும் முருகன் வண்டியை ஓட்டிப் பார்க்கிறான். பல வருடங்கள் கழித்து முதன் முதலாக வண்டியை ஓட்டுகிறன். புது வண்டி அவன் கை பட்டதும் ஜிவ்வென்று பறக்கிறது. ஆசை தீர ஓட்டிய பிறகு எதுவும் தெரியாததுபோல் பின்னால் உட்காந்து கொண்டு ஷோரூம் திரும்புகிறான்.

ஒரு நாள் இரவு நல்ல மழை பெய்கிறது. முருகனைப் பார்க்க வந்த கரட்டாண்டி மருத்துவமனையிலேயே தங்கிவிடுகிறான். மறுநாள் காலையில் காவல்துறையினர் மருத்துவமனையில் நுழைந்து கரட்டாண்டியைக் கைது செய்கிறார்கள். முந்தின நாள் இரவு நடந்த ஒரு திருட்டைச் சொல்லி அதன் பழியை கரட்டாண்டி மேல் போடுகிறார்கள். ஆனால்அவன் அந்தத் தவறைச் செய்யவில்லை. மருத்துவமனையில்தான் இருந்திருக்கிறான். அதற்கான ஒரே சாட்சி முருகன்தான். காவல்துறையினர் கரட்டாண்டியைப் போட்டு அடிக்கிறார்கள். ஆனால்முருகனோ வாயைத் திறந்து உண்மையைச் சொன்னால்தனக்கு குணமானது எல்லாருக்கும் தெரிந்துவிடும் என்று மவுனமாக இருக்கிறான். அண்ணே நான் உங்க கூடத் தானண்ணே இருந்தேன். சொல்லுங்கண்ணே என்று கரட்டாண்டி கதறுகிறன். முருகனோ பைத்தியம்போல் தனக்கு எதுவும் தெரியாது என்று நடித்தபடியே இருக்கிறான்.கரட்டாண்டியை காவலர்கள் இழுத்துச் சென்றதும் கட்டிலில் படுத்துக் கொண்டு அழுகிறான்.

முருகனுக்குக் குணமான விஷயம் தங்களுக்குத் தெரியும் என்பதை ஐஸ்வர்யாவும் அவளுடைய தோழியும் முருகனிடம் சொல்லிவிடுவது என்று முடிவெடுக்கிறார்கள். முருகன் கட்டிலில் ஏறியும் குதித்தும் பைத்தியம் போல் நடித்துக் கொண்டிருக்கிறான். மெதுவாகத் தோழி அவனுக்கு அருகில் போய் நின்று நேருக்கு நேராக உற்றுப் பார்க்கிறாள். முருகன் அவள் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்து கொள்கிறான். பைத்தியம் போல் சைகை செய்ய முயற்சி செய்கிறான். தோழிநிதானமாக உனக்கு குணமானது எங்களுக்குத் தெரியும் என்று சொல்கிறாள். முருகன் ஸ்தம்பித்துப் போகிறான். கரட்டாண்டி எல்லாத்தையும் சொல்லிட்டான்... என்கிறாள். முருகன் தலை குனிந்தபடியே இருக்கிறான். புதியதொரு வாழ்க்கையை ஆரம்பிக்கும்படி முருகனுக்கு இருவரும் ஆலோசனை சொல்கிறார்கள். வேண்டா வெறுப்பாக அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொள்வதுபோல் மவுனமாக இருக்கிறான்.

இதனிடையில் முருகனுடைய அறை முன்பு போல் அலங்கோலமாக இருக்காமல் ஒழுங்காக சுத்தமாக இருப்பதைப் பார்த்ததும் ஐஸ்வர்யாவின் கணவருக்கு சந்தேகம் வருகிறது. ஒருநாள் அவர் ஐஸ்வர்யாவுடன் அவனைப் பார்க்க மருத்துவமனைக்கு வருகிறார். முருகன் சிகிச்சைக்காக மருத்துவருடைய அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கவே இருவரும் அவனுடைய அறையில் காத்திருக்கிறார்கள். யதார்த்தமாக தன் சந்தேகத்தை ஐஸ்வர்யாவிடம் சொல்கிறார்.

முருகனுக்கு குணமாகிடிச்சுன்னு நினைக்கறேன் ஐஸ்வர்யா.

முதலில் திடுக்கிடும் ஐஸ்வர்யா எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்கிறாள். அவனுடைய அறை முன்பு போல் இல்லாமல் சுத்தமாக இருக்கிறது. அவனுடைய நடை உடை பாவனையிலும் ஒரு மாற்றம் தெரிகிறது என்று சொல்கிறார்.

அதெல்லாம் இல்லை. நான் தான் வரும்போதெல்லாம் இந்த ரூமை சரி செய்துட்டுப் போறேன் என்று சொல்லி சமாளிக்கிறாள்.

இதை வாசலில் இருந்து கேட்கும் முருகனுக்கு சந்தோஷமாக இருக்கிறது. உண்மையில் மனநல மருத்துவரான தோழி சொன்னதன்படித்தான் அவள் உடனே விஷயத்தைச் சொல்ல வேண்டாம் என்று நினைத்தாள். ஆனால்அது தெரியாத முருகன்ஒருவேளை அவள் இன்னமும் தன்னைக் காதலிக்கிறாள் போலிருக்கிறது. அதனால்தான் கணவருக்குச் சொல்லாமல் மறைக்கிறாள் என்று நினைத்துவிடுகிறான்.

ஐஸ்வர்யாவின் தோழிக்கு அவளுடைய கணவருடன் பிரச்னை ஏற்படுகிறது. டைவர்ஸ் செய்ய முடிவு செய்கிறாள். வேறொருவரைத் திருமணம் செய்து கொள்ளவும் விரும்புகிறாள். ஐஸ்வர்யாவே அவர்களுக்குத் தேவையான எல்லா உதவியையும் செய்து தருகிறாள். அதையெல்லாம் பார்க்கும் முருகன் மனதுக்குள் சிரித்துக் கொள்கிறான்.

ஐஸ்வர்யா இப்போதெல்லாம் தனியாக வராமல்முருகனின் முறைப்பெண்ணையும் அழைத்துக்கொண்டு வருகிறாள். அவளை விட்டே முருகனுக்கான எல்லா பணிகளையும் செய்ய வைக்கிறாள். முருகனுக்கு அவர்கள் செய்யும் செயல்கள் மெள்ளப் புரிய ஆரம்பிக்கிறது. இனியும் தாமதிக்ககூடாது என்று முடிவு செய்கிறான்.

ஒருநாள் முருகன் ஐஸ்வர்யாவின் வீட்டுக்குப் போகிறான். மாடியில் துணி காயப் போட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் முகத்தைப் பார்த்தபடி பேச முயற்சி செய்கிறான். அவளோ ஒவ்வொரு ஈரத்துணிக்குப் பின்னால் தன் முகத்தை மறைத்துக் கொண்டே பதில் சொல்கிறாள்.

உன் வீட்டுல கட்டாயப்படுத்தினதுனாலதான வேறொருத்தனை வேண்டா வெறுப்பா கல்யாணம் பண்ணியிருக்க. உன் அப்பாதானே என்னை இந்த நிலைக்கு ஆளாக்கினாரு. அவங்களைப் பழி வாங்க இதுதான் நல்ல சந்தர்ப்பம். வா மீண்டும் ஓடிப் போய்விடலாம் என்கிறான் முருகன்.

பழசையெல்லாம் மறந்துடு முருகா. இப்ப நான் யாருன்னு தெரியும்ல என்று சொல்லி தன் தாலியை எடுத்துக் காட்டுகிறாள்.

முருகன் தன் நெஞ்சில் பச்சை குத்தியிருக்கும் அவள் பெயரைக் காட்டுகிறான்.

இதை ஈஸியா அழிச்சிட முடியும் முருகா.

தாலியை அதை விட ஈஸியா அறுத்துட முடியும் ஐசு.

ஐஸ்வர்யா திடுக்கிட்டு பயந்து பின்வாங்குகிறாள்.

நான் கட்டிய தாலியை ஊருக்கு முன்னால அறுத்துப் போட்டாங்கள்ல. ஊருக்கு முன்னால கட்டின தாலியை என் முன்னால அறுத்துப் போட்ரு ஐசு.

அது என்னால முடியாது முருகா. இனிமே என் மனசுல உனக்கு இடம் கிடையாது.

என்ன ஐசு. இப்படிச் சொல்ற. உன் மனசுல இடம் இல்லாமலா இத்தனை நாள் பக்கத்துல இருந்து பார்த்து குணமாக்கியிருக்க. வா ஐசு... கண் காணாத இடத்துக்குப் போயிடலாம்.

நான் உன் மேல பாசமாத்தான் இருக்கேன். ஆனா அது காதல் இல்ல. ஒரு அம்மா தன் குழந்தை மேல வெச்சிருக்கறது மாதிரியான பாசம்... ரெண்டையும் போட்டுக் குழப்பிக்காத. அன்னிக்கு நீ ஒயின் ஷாப் ஓனரோட பொண்ணை காதலிச்ச. அவ செத்துட்டா. இப்ப இருக்கறது இன்னொருத்தரோட பொண்டாட்டி.

என்னிக்குமே நீ என் காதலிதான் ஐசு. ஒருவேளை உனக்கு இந்த மாதிரி புத்தி பேதலிச்சு எனக்கு ஒரு கல்யாணம் நடந்திருந்ததுன்னு வெச்சுக்கோயேன். நாலைந்து வருஷம் கழிச்சு உன்னைப் பார்த்து வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் பாத்துக்கறேன். உனக்கு கொஞ்ச நாள்ல குணமாகிடுது. அப்ப நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதா கேட்டிருந்தா நீ மாட்டேன்னு சொல்லுவியா?

அது வேற முருகா. ஆம்பளை நீ எத்தனை கல்யாணம் வேணும்னாலும் செய்யலாம். பொம்பளை அப்படிச் செய்ய முடியாது.

என்ன புள்ள... ஆம்பளைக்கு ஒரு நியாயம் பொம்பளைக்கு ஒரு நியாயம்னு பேசிக்கிட்டு இருக்க. காலம் மாறிடிச்சு ஐசு. இன்னிக்கு ஊர் உலகத்துல டைவர்ஸ் பண்ணிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு எத்தனை பேர் சந்தோஷமா இருக்காங்க. உன் ஃப்ரண்டு கூட மனசுக்குப் பிடிக்கலைன்னதும் வேறோருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கலையாநீதான அவங்களுக்குத் தேவையான எல்லா உதவியையும் செஞ்சு கொடுத்த. தைரியமா அறுத்துப் போட்டு வா புள்ள. யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. அதுவும் இல்லாம உன்னையை இந்த ஆளு கட்டிக்கும்போது கூட நீ எனக்கு பொண்டாட்டித்தான இருந்த. அறுத்துப் போட்டு கட்டி வெக்கலியா... இவன் கூட வாழ்ந்த வாழ்க்கையை ஒரு கெட்ட கனவா நெனைச்சு மறந்துடு ஐசு. நாம சென்னைக்குப் போனோம்ல. அங்க சந்தோஷமா வாழ்ந்திட்டு இருக்கோம்னு நினைச்சுக்கோ. உங்க சித்தப்பா நம்மளை ஊருக்கு கூப்பிட்டு வந்தது... என்னை அடிச்சுப் போட்டது... உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணினது... உனக்கு குழந்தைங்க பிறந்தது எல்லாமே கெட்ட கனவு புள்ள. எல்லாத்தையும் மறந்துடு.

என்ன நீ புரியாமப் பேசற... நாம ரெண்டு பேரும் காதலிச்சது எல்லாம் கனவு... மறந்துடுன்னு சொன்னா உன்னால மறக்க முடியுமா..?

என்ன ஐசு . நம்ம காதலையும் இந்த வாழ்க்கையையும் ஒண்ணா பேசற.

அது இல்லை முருகா... கனவு வேணும்னா நடக்காமப் போகலாம். ஆனா,  நடந்தது கனவாக முடியாது முருகா. நாம பிரிஞ்சதுல நீ மட்டுமா கஷ்டப்பட்ட. நானும்தான் கஷ்டப்பட்டேன். நம்ம தலைவிதி அது. யாரால மாத்த முடியும்?

அப்படி இல்லை ஐசு. விதிமண்ணாங்கட்டின்னு எல்லாம் எதுவும் கிடையாது. நம்ம வாழ்க்கை நம்ம கையிலதான். உங்க அப்பா அம்மா உன்னை எம்புட்டு நேசிச்சாங்க. நான் கூப்பிட்ட போது அவங்களையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு நீ வரலியா. அதைவிடவா உன் புருஷன் உன்னை நேசிச்சிடப் போறான். அவனைத் தூக்கிப் போட்டுட்டு வர முடியாதா என்னஎல்லாம் நம்ம கைலதான் இருக்கு ஐஸூ.

என்ன முருகா. மறுபடியும் மறுபடியும் அதையே பேசற. அப்பா அம்மாவை விட்டுட்டு வர்றதும் கட்டின புருஷனை விட்டுட்டு வர்றதும் ஒண்ணாஊர் நம்மளைக் காறித் துப்பாதா?

ஊரு என்ன ஊரு ஐசு. சீக்குப் பிடிச்ச ஊரு. அது எப்பவுமே துப்பிக்கிட்டுத்தான் இருக்கும். இதே ஊருதான் நேத்திக்கு நாம காதலிச்சு வாழப் போனபோதும் நம்மளைப் பார்த்து துப்பிச்சு. நாம வாழத்தான ஐசு போனோம். ஆனால்ஊரு அதை எப்படிச் சொல்லிச்சு... ஓடிப்போனோமாம்! ஊரு எப்பவுமே அப்படித்தான் ஐசு சொல்லும். அதை நாம் பொருட்படுத்தவே கூடாது. வந்திரு ஐசு. உன்னை பொன்னு போல பூ போல வெச்சுப் பாத்துப்பேன் ஐசு.

வேணாம் முருகா. அப்படி ஒரு எண்ணம் உன் மனசுல இருக்கவே கூடாது. இந்த எண்ணத்தோட இனிமே நீ இங்க இருக்க வேண்டாம். என் புருஷன் கிட்ட சொல்லி இப்பவே உன்னை அனுப்பி வெச்சிடறேன் என்று சொல்லிவிட்டு காலியான பக்கெட்டை எடுத்துக்கொண்டு கீழே போக முயற்சி செய்கிறாள். முருகன் உடனே அவள் காலில் விழுந்து கெஞ்சுகிறான். வேண்டாம் புள்ள. அப்படி மட்டும் செஞ்சிடாத. நான் வாழ் நாள் பூரா உன் பக்கத்துலயே இருக்கணும்னு ஆசைப்படறேன். பைத்தியமா இருந்தாத்தான் கூட இருக்க முடியும்னா அப்படியே நடிச்சிட்டுப் போறேன். என்னை வீட்டை விட்டுத் தொரத்திடாத என்று கெஞ்சுகிறான். அவனுடைய நிலையைப் பார்த்ததும் ஐஸ்வர்யாவுக்கு மனம் இளகுகிறது. இனிமே கல்யாணப் பேச்சை எடுக்கவே கூடாது என்று எச்சரிக்கிறாள். சரி என்று தலையை ஆட்டுகிறான். ஆனால்மனதுக்குள் வேறு திட்டம் தீட்டுகிறான்.

(தொடரும்)