Tuesday 25 September 2018

விழிமின்...எழுமின்..!

1.
ஆதியில் இரண்டு உலகங்கள் இருந்தன.

வர்ண மலர்கள் பூத்துக் குலுங்கும்
அழகிய நந்தவனம் இருந்தது கிழக்குப் பக்கம்.

வன் மிருகங்கள் உலவும்
கொடுங் கானகம் இருந்தது மேற்குப் பக்கம்.

இரண்டுக்கும் இடையே ஓடிக்கொண்டிருந்தது
கடக்க முடியா ஒரு மரபணுப் பெரு நதி.

இரண்டுக்கும் இடையே எழும்பியிருந்தது
ஏற முடியா ஒரு பரிணாமப் பெரு மலை.

இரண்டுக்கும் இடையே விரிந்து கிடந்தது
கடக்க முடியா வெள்ளை நிறப் பனிப் பாலை.

அதனதன் இடத்தில்
அதனதன் தர்ம அதர்மங்களுடன்
இருந்தன இரு வேறு உலகங்கள்

சிறிய
அழகிய வர்ண மலர்த்தோட்டத்தில்
எல்லாம் சிறிதாக இருந்தன
எல்லாம் அழகாக இருந்தன.

தேவையின் தேனுறிஞ்சும் எளிய வண்ணத்துப் பூச்சிகள்
தன்னிறைவின் துகள்களைச் சுமந்தபடி பறந்து கொண்டிருந்தன
ஒரு பூவிலிருந்து மற்றொன்றுக்கு

நித்ய தர்மத்தின் பறவைகள்
வான் நோக்கி விரியும் மரக்கிளைகளில் அமர்ந்தபடி பாடிக் கொண்டிருந்தன
உலகம் முழுமைக்குமான உன்னத கீதங்களை

லட்சியக் கனவுகளின் நிலவொளியில் நனைந்த கலாசார இலைகளை
வருடிச் சென்ற மறுமலர்ச்சிகளின் அதிகாலைக் காற்று
சிறு சிறு புதுமைப் பனித்துளிகளை பருவந்தோறும் உயிர்ப்பித்தது

சீர்திருத்தப் பொன் வண்டுகள்
பாரம்பரிய மலர் செடிகளின் மகரந்தத் தூள்களை
அள்ளி அள்ளிச் சென்று தூவியிருக்கின்றன அனைத்து மலர்த் தாள்களிலும்

வட தென் திசைக் காற்றுகள்
மாறி மாறிச் சுமந்து சென்றிருக்கின்றன
மூல விதை பயிர்களுக்கான மகரந்தத் தூள்களை

சிறுகச் சிறுகச் சேர்ந்த கசப்பின் துளிகளை எல்லாம்
தீஞ்சுவைக் கனியாக மாற்றும்
வரலாற்று வேம்பும் அந்தத் தோட்டத்தில் உண்டு

சேகரமான கசப்புக்கு நேர்விகிதத்திலானது அது பிறருக்குத் தரும் தித்திப்பு

கரை உடைத்துப் பாயும் நாஸ்திகப் பெரு வெள்ளங்கள்
அவ்வப்போது மூழ்கடித்துச் செல்லும் அழகிய மலர் வனங்களை

எனினும்
வெள்ளம் கொண்டுவந்து சேர்க்கும் வண்டல் கொண்டே
மீண்டெழும் எல்லா மலர் செடிகளும்

உடையும் கரைகளில் இருந்து
உருவாகும் பழைய நதியின் கிளைத் தடங்கள்


அந்நில ஆறுகள் சேர்ந்து உருவான மகா சமுத்திரத்திலிருந்து
ஆக்ரோஷமாக எழும் புயல் காற்றில்
சரிந்து விழும் மரங்கள் உரமாகும்

வெடித்துச் சிதறும் விதைகள்
இறகு முளைத்து முடிவற்ற வானில் பறந்து சென்று
புதிய நிலம் தன்னில் மீண்டும் உருவாக்கும்
தாய் நிலத்தின் அதே இளம் செடிகளை
அதே தூய மலர்களை
அதே நறுமணத்தை
அதே நற் கனிகளை.

ஆதித் தோட்டம் அழிந்ததே இல்லை
ஒற்றை விதை போதும் ஒரு மலர் வனத்தை உயிர்ப்பிக்க!

*
2.

மறுபக்க மேற்கு திசை நிலந்தன்னில்
பெருகி ஓடிய ஒற்றை நிற ரத்த ஆற்றில் நீந்தித் திளைத்தன வன் மிருகங்கள்

சுழித்தோடிய ஒற்றைச் சுவை கண்ணீர் ஆற்றில் கும்மாளமிட்டன அம் மிருகங்கள்

முடிவற்று நீளும் பனிக் கால இரவுகளின் நிலவொளியில்
ஆனந்தமாக அவை பாடும் பாடல்கள் என்பவை அச்சமூட்டும் ஊளைகளே

இடம்பெயரும் மென்விலங்குக் கூட்டங்களை
அவை களைத்து வீழும்வரை மெள்ளப் பின் தொடர்ந்து
வேட்டையாடும் ஓநாய்களின் உலகம் அது

நீர் நிலைகளின் மேலே வான் நிற வயிறு காட்டி
சிறகசைக்காமல் மிதக்கும் ஒரு சிறு பறவை
அபாயம் எதுவும் இல்லையென நீரின் மேல்பரப்புக்கு
தன் குட்டிகளை அழைத்துவரும் தாய் மீன் கண் முன்னே பாய்ந்து
அவற்றைக் கொத்திக் கிழிக்கும்
தந்திர மீன் கொத்திகளின் உலகம் அது.

காய்ந்த புல் வெளியில் தென்படும் சிறு சலனத்தையும் கண்டு
நிழல் விழா தொலை வானில் இருந்து பாய்ந்து கொத்திக் கொல்லும்
கோர விழிகளும் கூர்மையான நகங்களும் கொண்ட கழுகுகளின் உலகம் அது

சருகுகளால் மூடப்பட்டு சாதுவாகப் படுத்து
கடந்து செல்லும் குட்டி மான் குட்டிகளை வளைத்து முறுக்கி விழுங்கும்
மலைப் பாம்புகளின் உலகம் அது

சுட்டெரிக்கும் நண்பகல்களில் தாகம் தீர்க்க
நீர்நிலை வந்து சேரும் குதிரைக் கூட்டத்தின்
இளம் குட்டிகளை
மரக்கட்டைப் போல் மிதந்து கிடந்து
அருகில் வந்ததும் பாய்ந்து கொல்லும்
முதலைகள் நிறைந்த உலகம் அது

*
3.
வர்ண மலர் வனங்களிலும் விலங்குகள் உலவும்...
ஆனால், இலைகளை மட்டுமே கொய்து உண்பவை அவை

அங்கும் பறவைகள் பறக்கும்
அவை கனிகளை உண்டு விதைகளைப் பரப்புபவை
அங்கும் நாகங்கள் ஊரும்
அவை பாலும் முட்டையும் உண்டு மாணிக்கப் பரல்களை உமிழ்பவை

ஆதித் தோட்டத்தில்
தாவரங்கள் விலங்குகளை வளர்த்தன
விலங்குகள் தாவரங்களை வளர்த்தன

ஆதிக் கானகத்தில்
ஒன்றின் உணவு இன்னொன்றின் உயிர்
ஒன்றின் வாழ்க்கை இன்னொன்றின் அழிவு

அந்த வன் மிருகங்கள் மேற்குலகில்
கால்பதித்த தீவுகளையெல்லாம்
கண்டங்களையெல்லாம்
காடுகளையெல்லாம்
கழனிகளையெல்லாம்
கபளீகரம் செய்து முடித்திருந்தன


*
4.
மேற்குக் கானகத்தின் தெய்வத்தின் பார்வை
வர்ண மலர்த்தோட்டம் பக்கம் திரும்பியது

வர்ண மலர்த்தோட்டத்தின்
கட்டற்ற சுதந்தரத்தை அவர் ஒழுங்கின்மையாகக் கண்டார்

உள்ளொடுங்கிய தேடலை வெறுமை என்று புரிந்துகொண்டார்

வெறுமையாகவும் ஒழுங்கின்மையாகவும் இருந்த அந்த உலகை
அவர் தனக்குத் தெரிந்த வகையில் மாற்ற முயன்றார்

ஒளி உண்டாகட்டும் என்றார்
பகையின் பேரொளி உதித்தது

ஆகாயம் உண்டாகட்டும் என்றார்
வெறுப்பின் மேற் கூரை வர்ண மலர்த்தோட்டம்
முழுமைக்குமாகக் கவிழ்ந்தது

கலாசார நீரும் பூர்விக நிலமும் பிரியட்டும் என்றார்
புல்லுருவிகளும் ஒட்டுண்ணிகளும் உண்டாகட்டும் என்றார்

மலை ஊற்றருகே தத்தமது ஜாதிகளின் விதைகளையுடைய
விஷக் கனி மரங்களை நட்டார்

அந்த நீர் பாய்ந்தோடிய நிலங்களில் எல்லாம் அந்த ஜாதி பிரிவினை மரங்களே முளைத்தன

ஆகாய விரிவிலே சுடர்களை உருவாக்கினார்
பகல்களில் அவை தீயாய்ச் சுட்டெரித்தன
இரவுகளில் அவை கடுங்குளிரில் வாட்டியெடுத்தன

கலங்கிய நீரில் தந்திர உயிர்களையும்
வெறுப்பின் வானில் சுய நலப் பறவைகளையும் உயிர்ப்பித்தார்
அவை பல்கிப் பெருகின

ஏகாதிபத்திய முதலைக் குட்டிகளையும்
நிற வெறி ஓநாய்க் குட்டிகளையும்
இன வெறிக் கழுகுக் குஞ்சுகளையும் படைத்தார்

பின் தன் சாயலில் ஒரு மனுஷனைப் படைத்தார்

அந்நீரில் வாழ்பவற்றையும்
அவ்வானில் பறக்கும் பறவைகளையும்
அக் கானக விலங்குகளையும் கொண்டு 
உன் ஜாதியை உலகெங்கும் பரப்பிக் கொல் என்றார்

அவர் அனுப்பிய மேற்கு திசைக் கழுகுகள் வெண் புறா வடிவில்
உலகம் முழுவதும் தியாகச் சிறகசைத்துப் பறந்து பரவின

அவற்றின் எச்சங்களில் இருந்து விழுந்த கானக மரங்களின் விஷ வித்துக்கள்
வர்ண மலர்த் தோட்டத்தின்
அதிருப்தி மதில் இடைவெளிகளில் விழுந்து முளைக்கத் தொடங்கின

அவர் அனுப்பிய ஒரே திசையையே காட்டும் காந்த ஊசிக் கப்பல்கள்
தீவுகள் அனைத்துக்கும் நகரும் பாலங்கள் அமைத்தன

தாண்ட முடியாத சுவர்களைத் தாண்டின.

வெல்ல முடியா புராணக் காவல் சூழ் சாம்ராஜ்ஜியங்களுக்கு
பிரிவினைக் கோட்பாடுகள் ஒளித்து வைக்கப்பட்ட ஆராய்ச்சிக் குதிரைகளை
விஞ்ஞான வரலாற்று மரச் சட்டங்கள் போட்டு அனுப்பிவைத்தார்

தாழ் நிலங்களில் வசித்தவர்களை
பள்ளத்தில் விழுந்து கிடக்கும் பாவிகளே என்று விளித்தன

மீட்சிக் கயிறுகளும் வீசின
ஆனால்,
அதை நம்பிப் பற்றியவர்களின்
கலாசாரத்தை
அடையாளத்தை
அறிவுகளை
வரலாற்றை
வாழ்க்கையை
ஆணிகள் அறைந்து கொல்லும் சிலுவை
கயிறின் மறு நுனியில் இருந்தது

உலகம் முழுவதுக்கும் ஒளி தரும் மூல ஆதார ஒளியையே
மறைக்கும் அளவுக்கு பிரமாண்டமானது அது.
சில காலத்துக்கு
வர்ண மலர்த் தோட்டம் மட்டும்
தொண்டையில் சிக்கிய முள்ளாக
வன் மிருகத்தின் எந்த அமிலகக் கரைசலாலும் செரிக்கப்படாததாக
அதன் காலடி மிதிபட்டு மடியாதவையாக இருந்தன

எனினும்
வர்ண மலர்த்தோட்டத்தின் நீர் உறிஞ்சி
வர்ண மலர்த் தோட்டத்தின் காற்றிலாடி
வர்ண மலர்த் தோட்டத்தின் சூரிய ஒளி பெற்று
உருவானது புதியதொரு கானகம்

ஊடுருவின வர்ண மலர்த்தோட்டத்தின் மென் விலங்குகளை
வேட்டையாடிக் கொன்று தின்னும் வன் விலங்குகள்

அப்படியாக வர்ண மலர்த்தோட்டத்தினுள் மெள்ள உருவானது
வேறு தாவரங்கள்
வேறு விலங்குகள் கொண்ட
வேறொரு உலகம்
வேறொரு கானகம்!

*
5.
போலிப் பகுத்தறிவுப் புல்லுருவிகளும்
போலி மதச் சார்பின்மை ஒட்டுண்ணிகளும்
தர்மத்தின் ஆணி வேர் உறிஞ்சும் நீர்
பூக்களையும் பிஞ்சுகளையும் சென்று சேரவிடாமல் மறிக்கத் தொடங்கின

வல்லாதிக்க விலங்குகளின் கானல் தகிக்கும் வெம்பாலைகளில்
பண்பாட்டு மழையும் கிடையாது
சுய கெளரவத்தின் நிழலும் கிடையாது

மேற்கத்திய நவீனத்தின் தூசுகளால் மூடுண்டு போகும் இலைப்பரப்பில்
ஒரு நொடியும் ஒட்டாமல் உருண்டோடுகின்றன
சுதேசி முன்னேற்றத்தின் அதிகாலைப் பனித்துளிகள்

இடதுசாரி வரலாற்று இருளின் நடுவே
அதிதொலைவில் மின்னும் தியாக நட்சத்திரங்களின் ஒளி
எந்த மீட்சியின் பச்சையத்தை உருவாக்கித் தர முடியும்
வேரறுக்கப்பட்ட அழகிய மரங்களின் கிளைகளில்

நவீனத்தின் வேதி உரங்கள் மலடாக்கும் நிலங்களில்
வெட்டி வெட்டிப் பதியனிடப்படும் சிறு செடிகளின்
புதிய வேர்கள் அடி ஆழம்வரை போய்
கண்டடையும் சிறு சொட்டுப் பாரம்பரியத்தையும்
கொடுங்கரங் கொண்டு உறிஞ்சும் வல்லாதிக்கச் சூரியன்கள்
மிக அருகில் கனலும் தேசமாகிவிட்டதே
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய நம் தேசமும்

தன்னிறைவின் இளந்தளிரிலைகளையே
முட்களாய் இறுக்கிக் கொள்ள நேரும் ஜாதி மல்லிகளை
தனிப்புதர்களாய் மேலும் ஒதுக்குகின்றன
பிரிவினை நாகங்கள் உறையும் கரையான் புற்றுகள்

எந்த நியாயத்தின் தேனியும் உறிஞ்சிச் செல்லாததால்
நெறி கட்டி நிற்கின்றன பெரும்பான்மை மலர்களின்
வரலாற்று கால, சமகாலக் கண்ணீர்த்துளிகள்

உருப்பெருக்கி கொண்டெல்லாம் பார்க்க வேண்டியிராத
கலாசார மரங்களின் அதி நுட்பமான நரம்பிழைகளில்
ஓடும் திரவத்தின் சுவை உப்பென்பதை
சுவைக்காமலே புரிந்துகொள்ள முடியும்
(தூய வெண் படுகை போல் அடர்ந்து படர்ந்து நிற்கும்
அதில் வலிகளின் வீழ் படிவுகள்)

காயங்களின் மங்காத மடல் தடங்கள் கொண்டே யூகித்துவிட முடியும்
மரபின் செடிகள் உதிர்த்துவந்த துயரத்தின் நீள் கிளைகளை

நிதானமாக உயரும் சுய சீர்திருத்த மகரந்தப் பைகளைவிட
எட்டாத உயரத்துக்கு
நெடுநெடுவென வளர்ந்துவிட்டிருக்கும் நவீனத்தின் மகரந்தத் தாள்கள்
அந்நிய நிலக் காற்று கொண்டு சேர்க்கும் தூசிகளை மகரந்தமாக்கி
களைத் தாவரங்களைப் படர விடுகின்றன காணிகளெங்கும்

கடின உழைப்பின் பலன் தேடி
வேர் ஊடுருவும் தாய் மண் நிலங்களில் எல்லாம்
இன்று முளைக்கின்றன கற்பாறைகள்

மேற்கு திசைக் காற்று அடித்துக் கொண்டுவரும்
அந்நிய மேகங்களிலிருந்து பொழியும் அமிலத் தூறல்களினால்
வர்ண மலர்த் தோட்டத்தின் பல வண்ணப்பூக்களில் இருந்து
கரைந்தோடுகின்றன ஒவ்வொரு வண்ணங்களாக

அந்த மழைகளின் இறுதி இலக்கு
தோட்டம் முழுவதும்
சவத் துணிபோல் வெளிறிய ஒற்றை வெள்ளை
அல்லது
நிரந்தர இருள் போல் அடர்ந்த காரிருள்

நீங்கள் தேர்ந்தெடுத்தாகவேண்டும்
ஒரு பக்கம் சவக்களை வெள்ளை
மறுபக்கம் அச்சம் தரும் அடர் காரிருள்

வர்ண மலர்களின் தேன் உறிஞ்சும் இளம் வண்ணத்துப்பூச்சிகளே
இருப்பது ஓர் உலகம்
இந்த உடலுடன்
கிடைப்பது ஒரு வாழ்க்கை

ஒரு நிமிடம்
வர்ணங்களற்ற உலகை மனக்கண்ணில்
கற்பனைசெய்து பாருங்கள்

மணல் கடிகாரத்தில் காலத் துளிகள் விரைந்து சரியத் தொடங்கிவிட்டன

வர்ணங்களின் புத்திரர்களே விழிமின்!

தர்மத்தின் காவலர்களே எழுமின்!

வர்ண மலர்த் தோட்டம் காக்க நில்லாது உழைமின்!