Friday 6 July 2018

துயருறு ஆன்மாவின் அரசியல் சீற்றம் (3)


அம்பேத்கர் யாருடைய அரசியல் சாசனத்தை எழுதினார்?


கல்வி, மருத்துவம் போன்றவற்றில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அமலாவதோடு, அப்படிப் படித்துப் பணியில் அமர்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கே சேவை செய்ய முன்வரவேண்டும் என்றொரு நிபந்தனையையும் அவர் முன்னெடுத்திருக்கவேண்டும். தாழ்த்தப்பட்டவர்களில் இருந்து ஒருவர் மருத்துவராக நகரத்துக்குச் சென்று மேல் ஜாதியினருக்குச் சிகிச்சை செய்வதால் தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு எந்தப் பலனும் கிடைக்காது. அந்தத் தனி நபருக்கு ஒரு பெரிய விடுதலையாக இருக்குமே தவிர அவருடைய ஜாதிக்கு அல்ல.


தனி நபர் வாதம், தொழில் சுதந்தரம் என்பவையெல்லாம் மேல் ஜாதியினருக்கு உகந்தவை. ஏனென்றால் அவர்களுடைய சமூக, பொருளாதார, அரசியல் நலன்கள் ஏற்கெனவே பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. தாழ்த்தப்பட்டவர்களுக்கு அப்படி அல்ல. எனவே அவர்களுக்கு தனி நபர் வாதத்தைவிட குழு – குல மனப்பான்மையே வெற்றியைத் தரும். சட்டம் படித்து முடித்த அம்பேத்கர் வழக்கறிஞராகத் தன்னுடைய நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும்?


பிராமணர்கள் போன்ற மேல் ஜாதியினர் இந்தியாவில் படித்துமுடித்துவிட்டு மேற்கத்தியர்களுக்கு, குறிப்பாக நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷாருக்கு, சேவை செய்ய பெரு மதில் சூழ் தூதரகங்களின் வாசலில் கால்கடுக்கக் காத்து நிற்பதை சமூக அக்கறை மட்டுமல்ல சுயமரியாதை உள்ள ஒருவர் கூட ஏற்கமுடியாது. அதுபோலவேதான் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து கல்வி பெற்று மேலே வரும் ஒருவர் மேல் ஜாதியினருக்கு சேவை செய்வதைவிட தன் சமூகத்தினருக்குக் கூடுதல் உதவிகரமாக இருக்கவேண்டும் என்பதும்.



இதைத் தியாகம் என்றோ, சேவை என்றோ கருதாமல் கடமையாகக் கருதச் செய்திருக்கவேண்டும். இன்னும் சொல்லப்போனால் உயர் கல்வி பெறுபவர்கள் அனைவருமே நமது தேசத்தில் நமது சமூகத்தில் கீழ் நிலையில் இருப்பவர்களை மேலேற்றும் வகையிலான தொழில்கள், வேலைகளையே முன்னெடுக்கவேண்டும் என்று வரையறுத்திருக்கவேண்டும். உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சிங்கப்பூர், அரபு நாடுகள் என பலவற்றில் ராணுவ சேவை கட்டாயமாக்கப்பட்டிருப்பதுபோல் சமூக சேவைக்கு குறிப்பாக கடைநிலை ஜாதியினரின் மேம்பாட்டுக்கு அனைவரும் ஓரிரு வருடங்கள் செலவிட்டாகவேண்டும் என்று சட்டமியற்றியிருக்கவேண்டும். காந்தி தன்னுடைய சீடர்களையும் ஆதரவாளர்களையும் தத்தமது வாழ்க்கையையே ஹரிஜன மேம்பாட்டுக்கு அர்ப்பணிக்கும்படிக் கேட்டுக்கொண்டார். இங்கே தனி மனித சுதந்தரம் என்பதைவிட சமூக நலனே முக்கியம். அம்பேத்கர் மேற்கத்திய தனி நபர் வாதத்தைக் கண்டு மயங்கினார். அல்லது ஏமாந்துவிட்டார் என்று கூடச் சொல்லலாம்.


ஒரு ஐரோப்பியருக்கு, அமெரிக்கருக்கு தேச பக்தி, சொந்த சமூக முன்னேற்றம் எல்லாம் அவர்களுடைய இயல்பான மேட்டிமைக் குணத்தில் இருந்து உருவாகிவிட்டிருக்கின்றன. எனவே, அவர்கள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் யாரும் சொல்லாமலேயே அவர்களுடைய தேச, சமூக நலனுக்கு உகந்த செயல்களையே செய்வார்கள். அப்படியான புரிதல் கொண்டவர்களை சுதந்தரமாக இருக்க அனுமதிப்பதில் எந்தத் தவறும் பாதிப்பும் இல்லை. தனிநபர்வாதம், தொழில் சுதந்தரம் தேவை என்று அவர்கள் (மட்டுமே) முழங்கலாம்.



ஓர் இந்தியருக்கு அப்படியான தனிநபர் வாதம் மிகவும் ஆடம்பரமானதுதான். இந்தியாவை மேம்படுத்தும் பணிக்கே அவர் முக்கியத்துவம் தரவேண்டும். அதைவிட ஒரு தாழ்த்தப்பட்டவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை முன்னேற்றுவதற்கே முன்னுரிமை தரவேண்டும். அம்பேத்கர் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதுபோல் மேற்கத்தியரைப் பார்த்துத் தனி நபர் வாதத்தை முன்னெடுத்தார்.


இந்திய ஜாதி அடையாளமும் குழு மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்டது என்பதால் அதற்கு நேர்மாறாக தனி நபர் வாதத்தை அவர் முன்வைத்தார் என்றொரு வாதம் முன்வைக்கப்படமுடியும். ஒன்றாக இருக்கும் சிங்கங்களையும் புலிகளையும் நரிகளையும் தனித்தனியாக்கினால் அவற்றை எளிதில் வீழ்த்திவிடலாம் என்பது சரிதான். ஆனால், அப்படி அவற்றைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் பலவீனமான ஆடு மாடுகளும் தனித்தனி ஆகிவிடும் என்பதை அவர் முன் யூகிக்கவில்லை.


இன்று இட ஒதுக்கீடும் அரசியல் கட்சிகளும்தான் ஜாதி அடையாளத்தைப் பெரிதும் நினைவுபடுத்துபவையாகவும் தக்கவைக்க உதவுபவையாகவும் இருக்கின்றன. இது மிகவும் பிழையான நிலை. இதனால்தான் கிராமப்புறங்களில் வாழும் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக ஆகிக்கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிநபர் வாதம், தொழில் சுதந்தரம் எல்லாம் வெகு ஆடம்பரமான கோட்பாடுகளே… எட்டாக்கனிகளே. கல்வியறிவு பெற்ற தாழ்த்தப்பட்டவரே கடைநிலையில் இருக்கும் தாழ்த்தப்பட்டவருக்கு உதவ வேண்டும். தனி நபர் வாதம் அங்கு செல்லுபடியாகாது. அரசியல்சாசனம் இதற்கான உத்தரவாதத்தை நிபந்தனையை விதித்திருக்கவேண்டும். இட ஒதுக்கீடு பெறுபவர்கள் இட ஒதுக்கீடு தேவைப்படுபவர்களுக்கே சேவைபுரியவேண்டும் என்று சொல்லியிருந்தால்கூட ஒரே சலுகையில் இருமடங்கு பலன் கிடைத்திருக்கும்.



அப்படியாக, மேற்கத்திய சிந்தனைகளின் அடிப்படையிலான அம்பேத்கரின் அரசியல் சாசனப் பங்களிப்பு அவருடைய மக்களுக்கு எந்தவகையிலும் உகந்ததாக இருந்திருக்கவில்லை.


இந்து திருமணம், தத்தெடுத்தல், பெண்களுக்கான சொத்துரிமை போன்ற விஷயங்களில் அம்பேத்கருக்கு பெரிதாக என்றுமே ஆர்வம் இருந்திருக்கவில்லை. முதலும் முடிவுமாக ஜாதி சார்ந்த சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையே அம்பேத்கரின் இலக்காக இருந்தன. எனவே இந்து சட்ட விவகாரத்தில் நேருவுடனான மனஸ்தாபத்தினால் ராஜினாமா செய்வதாகச் சொன்னது மெய்யாகவே மெய்யான காரணமாக இருந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவுதான்.

இத்தனைக்கும் அம்பேத்கர் இந்த இந்து சட்ட சீர்திருத்தங்களை அமல்படுத்த விரும்பியபோது போதிய ஆதரவு இல்லை என்று தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த நேரு அம்பேத்கர் பதவி விலகியதும் நான்கே ஆண்டுகளில் அவற்றைச் சட்டமாக்கிவிட்டார்.


அதோடு, விவாகரத்து, பெண்களுக்குச் சொத்துரிமை, தத்தெடுத்தல் போன்றவையெல்லாம் நவீன காலத்தில் இயல்பாக, சட்டம் எதுவும் இல்லாவிட்டாலும் உருவாகி வந்திருக்கவே செய்யும். சிறு வயது திருமணத் தடை, மேல் ஜாதி விதவைகளின் வேதனை நிறைந்த நிலை மாற்றம், பெண் கல்வி என எல்லாம் ஏற்கெனவே நடந்தேற ஆரம்பித்துவிட்டிருந்தன. காந்தியின் அஹிம்சை வழியிலான போராட்டம் வேறு பெண்களை சமூக முன்னேற்றத்தில் பெருமளவில் பங்குபெறவைத்திருந்தன. அந்தவகையில் இந்து சமூகம் காலத்துக்கு ஏற்ப தன்னை அழகாக வெகு விரைவிலேயே மாற்றிக்கொண்டுவிடுவதாகவே இருந்துவந்திருக்கிறது. பர்தா, முத்தலாக் போன்ற விஷயங்களில் கூட இந்துப் பெரும்பான்மை தேசத்தில் இருப்பதால் இஸ்லாமியப் பெண்களுக்கு ஒப்பீட்டளவில் சுதந்தரம் எளிதில் கிடைக்கும் வகையிலேயே இருந்துவருகிறது. எனவே, இந்து சட்ட சீர்திருத்தத்துக்காக அம்பேத்கர் அதிகம் மெனக்கெட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை.

பட்டியல் சாதியினருக்கும் பின் தங்கிய வகுப்பினருக்கும் தான் விரும்பியதைச் செய்ய முடியவில்லை என்றொரு காரணத்தையும் பதவி விலகிய நேரத்தில் சொல்லியிருக்கிறார். உண்மையில் அதுவே சரியான காரணமாக இருக்கும். அதிலும் பின் தங்கிய பிரிவினர் தமது எண்ணிக்கைபலத்தினால் தமக்கான உரிமைகளை எளிதில் பெற்றுவிடும் நிலையில்தான் இருந்தார்கள். தாழ்த்தப்பட்டவர்களுடைய நிலைதான் சிக்கலாக இருந்தது. இருக்கிறது. அம்பேத்கர் அது சார்ந்து தான் விரும்பிய எதையும் செய்ய முடிந்திருக்கவில்லை.


ஆரம்பத்திலிருந்தே தயக்கத்துடன் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்ற அம்பேத்கருக்கு உண்மையில் ராஜினாமா செய்ய காரணம் சொல்லவே வேண்டியிருந்திருக்கவில்லை. ஏன் சேர்ந்தார் என்பதற்குத்தான் காரணம் சொல்ல வேண்டியிருந்தது.


*

அம்பேத்கர் இந்து மதத்தின் கிளை மதம் போன்ற பெளத்தத்துக்கு நகர்ந்தபோது மிகவும் புரட்சிகரமானதாக அவர் கருதிய பல உறுதிமொழிகளை எடுக்கவைத்திருந்தார். இந்துக் கடவுள்களைப் பெயர் சொல்லி நிராகரிப்பதில் ஆரம்பித்து சிராத்தச் சடங்குகள் கூடச் செய்யக்கூடாது என்று நெஞ்சில் துளியும் ஈரமற்று வற்புறுத்துவதுவரை அவர் தாழ்த்தப்பட்டமக்களின் உணர்வுகளைத் துளியும் பொருட்படுத்தாமல் மேலிருந்து அனைத்தையும் தீர்மானிப்பவராகவே இருந்தார். இந்திய அரசியல் சாசனத்தில் அந்த அம்பேத்கரைத் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டியிருக்கிறது.

(பிராமண புரோகிதர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதென்றால் சிராத்த சடங்குகளை ஆண், பெண் பிக்குகளைக் கொண்டு செய்வித்தல் என்பதாகவோ இறந்தவர்களில் பெண்களுக்கான நீத்தார் சடங்கு தான தட்சணைகளை நலிவடைந்த பெண்களுக்குத் தருவதாகவோ ஆக்கியிருந்தாலே போதுமானது. அது தாழ்த்தப்பட்டவர்களுடைய உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்ததாக அவர்கள் மத்தியில் கணிசமான வரவேற்பைப் பெற்றதாக இருந்திருக்கும். காகங்களை முன்னோரின் ஆன்மாகவாக நம்பும் பூமியில் குறுக்கும் மறுக்குமாக காகங்கள் உலவிக்கொண்டிருக்கும்வரையில் முன்னோரை மறக்கச் சொல்ல முடியுமா என்ன..? இதுதான் மேற்கத்தியத் தாக்கம் பெற்ற மனதுக்கும் இந்திய சீர்திருத்த மனதுக்கும் இடையிலான வித்தியாசம்)


இந்திய அரசியல் சாசன உருவாக்கம் போன்ற அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் தன்னுடைய சொந்த (சொந்த ஜாதி) அரசியல் சார்ந்த விஷயங்களை அதில் இடம்பெறச் செய்ய முடியாதென்பது உண்மைதான். எனினும் அம்பேத்கர் போல் கலகக் குணம் கொண்ட ஒருவர் அரசியல் சாசனம் போன்ற ஒன்றை உருவாக்க ஒப்புக்கொள்வதென்பது மிகப் பெரிய சமரசமே. உண்மையில் பாபு ஜெகஜீவன் ராம், எம்.சி.ராஜா போன்ற சீர்திருத்த தலித்தியர்கள் என்ன செய்ய விரும்பினார்களோ அதையே அம்பேத்கரும் செய்தார். செய்ய முடிந்தது.



வால்மீகியைக் கொண்டு ராமாயணம் எழுதிக் கொண்டார்கள். வியாரைக் கொண்டு மகாபாரதம் படைத்துக்கொண்டார்கள். என்னை வைத்து அரசியல் சாசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று அம்பேத்கர் சொன்னதாகப் படித்த நினைவு (முந்தைய இரண்டைப் போலவே பிந்தையதும் அதனளவில் ஒரு மாபெரும் சாதனையே என்றாலும் எழுதியவர் விரும்பியது அது அல்ல. எனவே, அதை அவருடைய சாதனையாகச் சொல்வது அவருக்கு உவப்பில்லாத விஷயமே).


கொம்பால் மண்ணைக் குத்திக் கிளறி மரங்களை முட்டி வீழ்த்தி கானகத்தில் உறுமியபடி உலா வந்த காளை ஒன்று மூக்கணாங்கயிறு போடப்பட்டு லாடம் அடிக்கப்பட்டு வண்டியில் பூட்டப்பட்டதுபோலவே அவருடைய நிலை அவருக்கு இருந்தது. ஆனால், ஓர் இந்தியராக, இந்துவாக இருந்து பார்க்கும்போது அவருடைய இந்த மாற்றம் உண்மையில் பனி மலையில் இருந்து தடதடவென உருகி, வழியில் தென்பட்ட மரங்களையெல்லாம் பெயர்த்தபடிக் கீழிறங்கிய பேராறு ஒன்று சமவெளியை அடைந்து கரையோர நிலங்களையெல்லாம் செழிப்பித்ததுபோல் இருப்பதாகவே சொல்ல முடியும் (பல களைகளும் செழித்து வளர வழி செய்திருக்கும் நிலையிலும்). எனவே, அம்பேத்கர் அவருடைய இயல்புப்படி இருக்கமுடியாமல் போனது அவருடைய அரசியலுக்குச் சாபம். இந்தியாவுக்குப் பெரும் வரமே.


அம்பேத்கருக்கு, தன்னுடைய கருத்துகளில் மேற்கத்திய நகலான நேருவுடைய கருத்துகளுடன் ஒத்துப்போகிறவற்றை மட்டுமே அரசியல் சாசனத்தில் இடம்பெறச் செய்ய முடிந்தது. நேரு உண்மையில் அம்பேத்கரைப் பயன்படுத்தி காந்தியத்தை ஓரங்கட்டினார் என்பதுதான் உண்மை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், நேருவின் மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் தன் மறைமுக ஆட்சி தொடரவே வழி செய்திருக்கிறது.

(பலர் பார்க்க யுனியன் ஜாக்கை இறக்குவது பிரிட்டிஷர் மனதை வேதனைப்படுத்தும் என்று இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்ட நொடியிலிருந்தே சிந்தித்த கண்ணியமான விசுவாசி எல்லா விடைபெற்றுச் செல்லும் கொடூர ஏகாதிபத்தியங்களுக்கும் கிடைத்துவிடுவார்களா என்ன? சீனா சுதந்தரம் பெற்றதும் முதல் வேலையாக பிரிட்டிஷ் காலனிய அடையாளங்களைத் துடைத்தழித்தது. நாமோ சுட்டெரிக்கும் பூமியில்  கறுப்பு கோட் போட்டுக்கொண்டு மைலர்ட் என்று விளித்துக்கொண்டு ஜார்ஜ் கோட்டை எனப் பெயர் வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

நம்மை அடக்கி ஆண்டவர்களின் கல்லறைகளின் மெழுகுவர்த்திகள் அணையாமல் பார்த்துக்கொண்டுவருகிறோம். நம்மை அடிமைப்படுத்தியவன் செதுக்கிவைத்த கல்வெட்டுக்களை தினந்தினம் துடைத்துப் பளபளப்பாக்கிக் கொண்டுவருகிறோம்.

அவர்கள் நமதுஅடையாளம் என்று சொல்லிக்காட்டிய தாஜ்மஹாலைத் தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு ராஜராஜன் கட்டிய பெரியகோவிலைக் கீழே தள்ளிவிட்டுப் பெருமிதப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

நினைத்துப்பாருங்கள்... நாட்டு மக்கள் தொகையில் 80-85 சதவிகிதமாக இருக்கும் இந்துக்களில் பெரும்பான்மையான சைவர்களின் முதன்மைத் தெய்வமாகவும் எஞ்சிய வைஷ்ணவர்களின் முக்கிய தெய்வங்களில் ஒன்றாகவும் இருக்கும் சிவபெருமானுக்குக் கட்டப்பட்ட கோவில்தானே நம் பாரம்பரியத்தின் தேசத்தின் உன்னதமான துல்லியமான எடுத்துக்காட்டு. அழகியல் கோணத்திலும் கட்டுமானத் தொழில் நுட்பத்திலும் பிரமாண்டத்திலும் அது அல்லவா இந்தியாவிலேயே உயர்வானது. ஆனால், ஆங்கிலேயர் தாஜ்மஹாலை இந்தியாவின் அடையாளமாகச் சொல்லிவிட்டுச் சென்றிருப்பதால் நாமும் அதையே சுமந்துகொண்டு திரிகிறோம். மேற்கத்திய தாக்கம் பெற்ற அம்பேத்கரும் நேருவும் உருவாக்கியிருக்கும் இந்தியா அல்ல உண்மையான இந்தியா)


சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்திய அரசியல் சாசனம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அவர்களுடைய கலாசார, பாரம்பரிய, அடையாள மீட்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் போதிய அளவு உதவியிருக்கவில்லை. அந்தவகையில் அது அம்பேத்கரின் தோல்வியே.


இரண்டாவதாக அது நேருவியத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கிறது. அந்த மேற்கத்திய பாணி வளர்ச்சியானது சொற்ப ஆதிக்க ஜாதி, மத சக்திகளுக்குப் பொருளாதார நலனை மட்டுமே உத்தரவாதப்படுத்தியிருக்கிறது. தனி நபர்வாதம், ஒருபக்க பேச்சு சுதந்தரம், போலி மதச்சார்பின்மை, வேர்ப்பிடிப்பற்றுப் போவது என மேற்கத்திய நகலாகவே நம்மை ஆக்கிவருகிறது. அந்த வகையில் அதுவும் விரும்பத்தகுந்த வளர்ச்சி அல்ல.

தன் தந்தத்தையே ஒடித்து, கை நோக, வேக வேகமாக எழுதியது விநாயகர்தான் என்றாலும் அது வியாச பாரதமேதான் இல்லையா? அந்தவகையில் 
அம்பேத்கர் என்ற தந்தம் கொண்டு 
நேரு என்ற விநாயகர் 
(தெய்வங்கள் என்னை மன்னிக்கட்டும்!) 
கை நோக எழுதிய இந்திய அரசியல் சாசனத்தை 
உத்தரவிட்டு எழுதச் செய்த மாய வியாசரின் கழுத்தில் 
கண்ணைக் கூசவைக்கும் பளபளப்புடன் மின்னுவது 
பிரிட்டிஷ் சிலுவையே.


(தொடரும்)

துயருறு ஆன்மாவின் அரசியல் சீற்றம் (2)

அம்பேத்கர் யாருடைய அரசியல் சாசனத்தை எழுதினார்?

அடுத்ததாக, இந்து மதத்தில் இருந்து தாழ்த்தப்பட்டவர்கள் வெளியேறிவிடவேண்டும் என்பதில் அம்பேத்கர் மிகவும் தீவிரமாக இருந்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கான சலுகைகள் அவர்கள் மதம் மாறிவிட்டால் கிடையாது என்று அரசியல் சாசனத்தில் சொல்லியிருப்பது அவரளவில் அவருடைய அரசியலுக்கு எதிரான செயல்பாடே.

தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு முறை சலுகை பெற்று மேல் நிலைக்கு வந்தவர்கள் சக தாழ்த்தப்பட்டவர்களுக்கு அடுத்த வாய்ப்பை விட்டுக்கொடுக்கவேண்டும் என்பது அம்பேத்கரின் விருப்பமாக இருந்திருக்கும். அதற்கான உத்தரவாதத்தையும் அவரால் ஏற்படுத்த முடிந்திருக்கவில்லை.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசியல் சாசனத்தில் தரப்பட்டிருக்கும் பங்கீடு (ரிசர்வேஷன்) என்பது பிரிட்டிஷ் காலகட்டத்திலேயே அமலுக்கு வந்த ஒரு விஷயமே. அம்பேத்கர் அதையும் தாண்டிப் பல விஷயங்கள் செய்ய விரும்பினார். முடிந்திருக்கவில்லை.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனியாக இருப்பிடம், ஊர், நகரம் அமைக்கப்படவேண்டும் என்று விரும்பினார். இஸ்லாமியர்களுக்குத் தனி நாடு கொடுத்ததுபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி இருப்பிடம் (தற்போது இருக்கும் சேரி, காலனி போல் அல்ல; ஒருவகையில் சமத்துவபுரம் போல் தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனி ஊர், தனி நிர்வாக அமைப்புடன்). அதற்கு அரசியல் சாசனத்தில் எந்த ஏற்பாடும் இருந்திருக்கவில்லை.



பின் தங்கிய வகுப்பினரின் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள அரசியல் சாசனத்தில் எந்த அம்சமும் இல்லை என்பதையும் ராஜினாமா உரையில் அம்பேத்கரே குறிப்பிட்டிருக்கிறார். இடை நிலை ஜாதியினர் தமது பெரும்பான்மை பலத்தின் மூலம் ஒவ்வொரு அரசாங்கத்திடமும் பல கோரிக்கைகளை வைத்து தமது நலன்களைப் பாதுகாத்துக்கொண்டுவருகிறார்கள். அரசியல் சாசனம் உண்மையில் அதைச் செய்திருக்கவேண்டும்.



அடுத்ததாக, அனைவரும் சமமாக நடத்தப்படவேண்டும் என்று ஒரு விதிமுறை சொல்கிறது. இன்னொரு விதிமுறையோ நலிவடைந்த பிரிவினருக்கு சலுகைகள் தரவேண்டும் என்கிறது. இந்த இரண்டுமே ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன. அரசியல் சாசனத்தின் முதல் திருத்தம் இதை அடிப்படையாக வைத்தே உருவானது. உண்மையில் ஒருவர் வழக்கு போட்டு அதற்காக திருத்தம் கொண்டுவரப்படவேண்டிய விஷயமே அல்ல. முதலில் எழுதும்போதே இந்தக் குழப்பத்தைத் தீர்த்துவைத்திருக்கவேண்டும்.

ஒரு விஷயத்தின் அனைத்து சாத்தியங்களையும் கருத்தில் கொள்ளும் திறமையும் அதற்கேற்ப விரிவான, பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்தும் அறிவும் சமூகப் புரிதலும் கொண்ட அம்பேத்கர் மேலே சொல்லியிருக்கும் இரண்டு விஷயங்களில் எப்படிக் கோட்டைவிட்டார் என்பது ஆச்சரியத்தையே தருகிறது. அவர்தானா இதை எழுதினார் என்ற சந்தேகத்தைக் கூட உருவாக்குகிறது.

கோவில்களை மாநில அரசுகள் நிர்வகிக்கும் வழிமுறையை அவர் விரும்பியிருக்க வாய்ப்பில்லை. இன்று ஊழலிலும் நிர்வாகச் சீர்கேடுகளிலும் ஈடுபட்டு கோவில் கலாசாரத்தை முடிந்தவரை அழிக்கும் திருப்பணியில் அவர்கள் ஈடுபட்டுவருகிறார்கள் என்றாலும் ஒரு அரசு அதிகாரியோ அரசியல் கட்சி உறுப்பினரோ கோவில் நிர்வாகத்தில் ஈடுபடுவதென்பது அரசை இந்துச் சார்புடன் கொண்டுசெல்லவே வழிவகுக்கும்; கோவில் கலாசாரத்தை வளர்த்தெடுத்து இந்து மதத்தைக் காக்கும் செயலாகவே ஆகும் என்பதால் மத்திய, மாநில அரசானது கோவில் நிர்வாகத்தில் இருந்து விலகியிருக்கவே விரும்பியிருப்பார்.


ஹஜ் மானியம் போன்றவற்றையும் அவர் விரும்பியிருக்க வாய்ப்பே இல்லை. உன் கடவுளை நீ கும்பிட அரசுப் பணம் தேவையா என்று சீறியிருக்கவே வாய்ப்பு அதிகம். காஷ்மீருக்கு தனி அந்தஸ்து கேட்டபோது அதையே இப்படித்தான் அவர் எதிர்த்திருந்தார்.


யார் இந்து என்ற கேள்விக்கு இஸ்லாமியர் அல்லாத, கிறிஸ்தவர் அல்லாத பார்சி அல்லாதவர்கள் என்ற வரையறையை அம்பேத்கர் முன்வைத்திருக்க வாய்ப்பே இல்லை. அது இந்து மதத்தை பெரும் எண்ணிக்கையிலான அமைப்பாக ஆக்கிவிட்டதுஎன்பதுதான் ’போராளி’களின் குற்றச்சாட்டு. சீக்கியர், பெளத்தர், சமணர் ஆகியோரும் இந்துவே என்று அரசியல் சாசனம் சொல்கிறது. அம்பேத்கர் ஐந்தாறு வருடங்கள் கழித்து பெளத்தத்துக்கு மாறினார். பெளத்தர்களும் இந்துக்களே என்றால் அவர் உண்மையில் மதம் மாறவே இல்லை என்றுதானே ஆகிறது.

அந்த விழாவுக்குத் தலைமை தாங்கிய பெளத்த பிக்கு கூட வீட்டின் ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்குச் செல்வதுபோன்றதுதான் இது என்று சொன்னதை அம்பேத்கர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே இல்லையே. புத்தரை மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்று சொல்வதை ஏற்கவில்லை என்பதுதானே அவருடைய நிலைப்பாடு. அப்படிப்பட்டவர் எப்படி இந்த வரையறையை எழுதியிருக்க முடியும் (காஞ்சி மஹா பெரியவா வகுத்த வரையறை அது).

அதுபோல் மதச்சார்பற்ற அரசு என்ற விஷயத்தை அழுத்தமாக தேச அடையாளமாக அவர் முன்வைக்கவே விரும்பியிருப்பார். இவற்றையெல்லாம் அவரால் செய்ய முடிந்திருக்கவில்லை (1976-ல் பின்வாசல் வழியாகவே செக்குலரிஸம் இந்திய அரசியல் சாசனத்தில் புகுத்தப்பட்டிருக்கிறது).

இந்துக்களும் பெளத்தர்களும் மிகுதியாக இருக்கும் ஜம்மு மற்றும் லடாக்கை இந்தியாவுடன் இணைக்கவேண்டும். இஸ்லாமியர் மிகுதியாக இருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கை பாகிஸ்தானுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்று சொன்னார் அம்பேத்கர். பொது வாக்கெடுப்பு என்பது காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டுமே நடக்கவேண்டும். ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீருக்கும் அல்ல. இந்துக்களும் பெளத்தர்களும் மிகுதியாக இருக்கும் பகுதி இந்தியாவின் அங்கமே... அங்கு எந்த வாக்கெடுப்பும் தேவையில்லை என்று சொன்னார்.

ஒருவகையில் அம்பேத்கர் சொன்ன அந்தத் தீர்வை ஏற்றுக்கொண்டிருந்தால் காஷ்மீர் மக்கள் கூட இந்தியாவுடன் சேர சம்மதித்து பிரச்னை ஒரேயடியாகத் தீர்ந்திருக்கும் (பாகிஸ்தான் அப்போதும் ஏதேனும் வழிகளில் தன் முயற்சியை மேற்கொண்டுதான் வந்திருக்கும் என்றாலும் இப்போதுபோல் பிரச்னை செய்ய வாய்ப்பிருந்திருக்காது).

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் தீர்மானமான ஆர்ட்டிகிள் 370 –ஐ அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார். ஆனால் நேருவோ அதைப் பொருட்படுத்தாமல் கோபால ஸ்வாமி ஐய்யங்காரைக் கொண்டு அதை உருவாக்கி அரசியல் சாசனத்துக்குள் கொண்டுவந்துவிட்டார்.


இப்படி அம்பேத்கர் விருப்பத்துக்கு மாறானவற்றைச் செய்ய வேண்டியிருந்தது. விரும்பியவற்றைச் செய்ய முடிந்திருக்கவில்லை.


****

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மிகுந்த நன்மை தரும் என்று நினைத்துச் செய்த சில விஷயங்கள் அந்தப் பலனைத் தந்திருக்கவில்லை. நகர்மயமாக்கம், தொழில் மயமாக்கம் ஆகியவை மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பெரும் விடுதலையைத் தரும் என்று நம்பினார். அரசியல் சாசனத்தில் கிராமப்புற மேம்பாட்டைப் பின்னுக்குத் தள்ளினார் (உண்மையில் காந்தியத்தைப் பின்னுக்குத் தள்ள அம்பேத்கரை நேரு பயன்படுத்திக்கொண்டார் என்றே சொல்லவேண்டும்).

எந்தவொரு நாட்டிலும் அரசு வேலை என்பது அனைவருக்கும், குறிப்பாக தாழ்த்தப்பட்ட ஜாதியினரில் பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே உரிய பங்கீட்டுடன் அரசுப் பதவிகளில் சேர அவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததோடு எஞ்சும் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்டவர்களுக்கு (அவர்களில் 70-80%க்கு மேற்பட்டவர்கள்) உரிய பணிப் பாதுகாப்பு தரவேண்டும் என்பதும் அம்பேத்கரின் இலக்காக இருந்திருக்கவேண்டும்.



தனியார் நிறுவனங்கள், அயல்நாட்டுப் பணிகள் எனப் பெருகியிராத 1950களில் இந்தியாவில் ஏற்கெனவே பெரும் வேலை வாய்ப்புக்கான தொழிலாக இருந்த விவசாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை, நில உடமை அதிகரிக்கவேண்டும் என்பதுதான் அவர்களுக்கு உண்மையான மீட்சியாக இருந்திருக்கும். கிராமப்புற மேல் ஜாதி ஆதிக்கத்தை மாற்றிப்போடவும் அதுவே வழிவகுத்திருக்கும்.



ஆனால், அம்பேத்கர் அப்படியான முயற்சியை எடுக்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு நில உரிமை கிடைத்தால் கிராமங்களிலேயே அந்த நிலங்களிலேயே முடக்கிப் போடப்படுவார்கள் என்று சொன்னார். நகரமயமாக்கம், அரசு வேலைகள், பெருந்தொழில்கள் என இந்திய சமூகம் நகர்த்தப்படும்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதில் நியாயமான வசதி வாய்ப்புகள், உரிமைகள் கிடைக்கவேண்டும் என்று நினைத்தார். அது சரியான சிந்தனைதான். ஆனால் அது ஒன்றே தாழ்த்தப்பட்டவர்களுக்கு மீட்சியாக அமைந்துவிடும் என்றும் அத்தனை தாழ்த்தப்பட்டவர்களையும் ஏற்றுக்கொள்ள அங்கு இடமிருக்கிறது என்றும் மேட்டுக்குடி கனவான் போலவே இன்றைய உலக வங்கிப் பிரதிநிதி மன்மோகன் சிங் போலவே அன்றைய மேற்கத்தியப் பிரதிநிதி நேருவைப் போலவே சிந்தித்தார்.

உண்மையில் தாழ்த்தப்பட்டவர்களில் பலருக்கு நிலம் இல்லாமல் இருந்தது. எனவே, அதுதான் அவர்களுக்கு அதி அவசியத் தேவையாக இருந்தது. மஹர்களுக்கு ’வதன்’ வழிமுறை மூலம் நிலம் தரப்பட்டிருந்தது. அதைவிட்டு விட்டு அவர்கள் மேலே நகரவேண்டுமென்று விரும்பினார். ஆனால் பகுதி நேர விவசாயக் கூலித் தொழிலாளர்களாகவும் பெருமளவில் கடைநிலைப் பணிகளையும் செய்துவந்த பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நில உரிமை இருந்திருக்கவில்லை. எனவே, அவர்களுக்கு நில உடமையே பெரிய விடுதலையைத் தந்திருக்கும். ஆனால், அம்பேத்கருக்கு அந்த எண்ணம் இருந்திருக்கவில்லை. மாடு மேய்க்கறவன் மாடுதான் மேய்ச்சுக்கிடே இருக்கணுமா… சேத்துல உழல்றவன் சேத்துலயேதான் விழுந்து கிடக்கணுமா என்பதுபோல அவர் யோசித்தார் (யோசிக்கவைக்கப்பட்டிருந்தார்).



டி.ஆர்.நாகராஜ் சொன்னதுபோல் பழங்காலத்தில் கைத் தொழில்கள், தொழில்நுட்பங்கள் எல்லாம் இடை, கடைநிலை ஜாதியினரிடத்தில் இருந்தது. நவீன உலகில் தொழில்களும் தொழில்நுட்பங்களும் மேல் ஜாதியினரிடம் சென்று சேர்ந்துவிட்டன. பழங்காலத் தொழில்களில் இருந்த கடினத்தன்மை, கேவலத்தன்மை போன்றவையெல்லாம் தொழில்நுட்பத்தின் மூலம் பெருமளவில் நீங்கியதும் அவற்றை மேல் ஜாதியினர் கைப்பற்றிவிட்டனர். இது தவறு என்று டி.ஆர்.நாகராஜ் குறிப்பிடுகிறார்.


பழங்காலத் தொழில்கள் கடினமாக, இழிவானதாக இருந்ததால் அதைச் செய்தவர்களும் இழிவாகவே பார்க்கப்பட்டார்கள். அவர்களுடைய கடைநிலைக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம். எனவே அந்தத் தொழிலில் இருந்து அவர்கள் வெகு விரைவில் நகர்ந்தாகவேண்டும் என்று ஒற்றைப்படையாகவே அம்பேத்கர் போன்றவர்கள் சிந்தித்தனர்.


செருப்பு தைக்கும் தொழில் கடினமானது… ஒருவகையில் இழிவானதும் கூட என்பதை ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால், பேட்டா நிறுவனத்தில் வேலை செய்வது பேட்டா நிறுவனத்தின் அதிபராக இருப்பது நவீன சமூகத்தில் உயர்வானதுதான் என்ற புரிதல் தாழ்த்தப்பட்ட போராளிகளில் பலருக்கு இன்றும் இல்லை.


அதுபோல், நில உடமை என்பது எக்காலத்திலும் பெரிய விடுதலையையே தரும். அதுவும் சுதந்தரம் பெற்ற பிறகு இந்தியா ஏராளமான அணைகளைக் கட்டி, நீர்ப்பாசன வசதியைப் பெருக்கியிருக்கிறது. வேதி உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. சாலை வசதிகள், வாகன வசதிகள், பதப்படுத்துதல் என பல துறைகளில் மேம்பட்டிருக்கிறது. விவசாயத்தில் தன்னிறைவு மட்டுமல்ல ஏற்றுமதியிலும் பல சாதனைகள் புரிந்துவருகிறது.


இப்படியான நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருக்கும் நாலைந்து ஏக்கர் நிலம் தரப்பட்டு, கூட்டு விவசாயத்தில் முன்னுக்கு வரவும் வழி செய்து தரப்பட்டிருந்தால் அது மிகப் பெரிய விடுதலையாக இருந்திருக்கும். மேல் ஜாதியினர் பெருந்தொழில்கள், நகர்ப்புறம் என நகர்ந்திருக்க, வளமான கிராமத்தையும் அது சார்ந்த தொழில்களையும் தாழ்ந்த ஜாதியினர் கைப்பற்றியிருந்தால் இந்தியாவின் வளர்ச்சி சீரானதாக இருந்திருக்கும். நகரம் – கிராமம், மேல் கீழ் இடைவெளி இப்போது இருப்பதுபோல் ஆகியிருக்காது. பஞ்சமி நில மீட்பு, நிலச்சீர்திருத்தம் என அரசியல் சாசனத்தில் கல்வி, வேலைகளுக்கான இட ஒதுக்கீடுபோல் சில அழுத்தமான உத்தரவாதங்களையும் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தந்திருக்கவேண்டும்.

நகர்மயமாக்க, தொழில்மயமாக்க, மைய நிர்வாக ஆட்சியமைப்பில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய பங்கீடு கிடைக்க மதிப்பெண்களில் ஆரம்பித்து பல சலுகைகள் தரவேண்டியிருந்தது. விவசாயத்தில் அப்படி சுய மரியாதைக்கு நெருக்கடி தரும் எதுவும் இருந்திருக்காது. இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் எங்கள் உரிமை என்று போராளிகள் என்னதான் முழங்கினாலும் தாழ்த்தப்பட்டோருக்கு ஆழ் மனதில் இந்த சமூகம் கரிசனத்துடன் மேலிருந்து கொடுக்கும் உதவியே என்பது உறுத்திக்கொண்டேதான் இருக்கும். சுய மரியாதை இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்பே சுய மரியாதையுடன் இருந்த சமூகங்கள் அவை. எனவே போராளிகளின் அரசியல் உரிமை கோரல்களை அதே பாணியில்தான் தாழ்த்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது. அதோடு கோட்டாவில் வேலைக்குச் சேர்ந்தவன் என்று பிற ஜாதியினர் ஏளனமாகப் பார்க்கும் நிலையும் விவசாய நிலப்பங்கீட்டில் இருந்திருக்காது. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியினர் இன்னும் ஒருபடி மேலே சென்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசின் கடனுதவி பெற்று நிலங்களை காசு கொடுத்து வாங்கி நாலைந்து வருடங்களில் கடனை அடைத்து நேர்மையாக, கெளரவமாக நில உடமையாளராக ஆக்கிக்காட்டியிருந்தார்கள். அம்பேத்கர் இதைத் தனது அரசியல் சாசனத்தில் இடம்பெறச் செய்திருக்கவேண்டும்.


அம்பேத்கர் விவசாயத்தையும் கிராமத் தொழில்களையும் கிராமத்தையும் தாழ்த்தப்பட்டவர்களை முன்னேறவிடாமல் தடுக்கும் கால் விலங்காகப் பார்த்தார். நவீனத் தொழில்நுட்பம் அந்த வேலைகளின் கடினத்தன்மையையும் இழிவையும் பெருமளவில் மாற்றிவிடும்; பொருளாதரீதியில் பெரும் வெற்றியைத் தரும் என்பதையெல்லாம் புரிந்துகொள்ளும் தொலைநோக்கு அவரைப் போன்றவர்களுக்கு இருந்திருக்கவில்லை. தென்னை மரம் சிறு மரமாக இருக்கையில் அருகில் இருந்து நீர் பாய்ச்சி, உரமிட்டுக் கண் விழித்துக் கஷ்டப்பட்டுப் பாதுகாத்துவிட்டு காய்க்கத் தொடங்கியதும் வேறொருவரிடம் கொடுத்துவிட்டுப் போவதுபோன்ற செயல் இது.


நேருவுக்கு தொழில்மய சமூகத்தின் மீது பாசம் இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால் அது அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மேல் ஜாதிகளுக்கு உகந்த முன்னேற்றமே. மேற்கத்திய வளர்ச்சி என்பது இந்திய ஆன்மிக, கலாசார வீழ்ச்சியுடன் தொடர்புடையதுதான் என்றாலும் நேருவுக்கு இந்திய ஆன்மிக, கலாசார அம்சங்கள் மீது பெரிய மரியாதை கிடையாது என்பதால் மேற்கத்திய பாணி வளர்ச்சியை அவர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வரவேற்றார். அவர் தொழிற்சாலைகளே நவீன இந்தியாவின் கோவில்கள் என்று முழங்கியது தொழிற்சாலைகள் மீதான விருப்பதினால் மட்டுமல்லவே.


அதோடு, வலிமையானவருக்கும் பலவீனமானவருக்கும் ஒரே இலக்கு, ஒரே போட்டி என்று சொல்வது பலவீனமானவர்களுக்கான வெற்றி வாய்ப்பைக் குறைக்கும் செயலே. ஆங்கில வழிக் கல்விக்கு எளிதில் தகவமைத்துக்கொள்ளும் திறன், வீடுகளில் மின் விளக்கு, தனியாக அமர்ந்து படிக்கத் தோதான நிலை, கற்றுத் தரத் தெரிந்த பெற்றோர்கள், பள்ளிக்குக் குழந்தைகளைத் தினமும் அனுப்ப முடிந்த பொருளாதாரநிலை என இவை எதுவும் இல்லாத தாழ்த்தப்பட்டவர்களை அவையெல்லாம் பெற்ற மேல் ஜாதியினருடன் போட்டியிடவைத்ததில் எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை.

நவீனத் தொழில்கள், நவீன நிர்வாக அமைப்புகள், பாரம்பரியத் தொழில்களில் ஏற்பட்ட நவீன மாற்றங்கள் என அனைத்தையும் எளிதில் பெறும் நிலையில் மேல் மற்றும் இடைநிலை ஜாதியினரே இருந்தனர். தாழ்த்தப்பட்டவர்களில் சொற்ப விகிதத்தினருக்கு இந்த கதவுகள் திறந்திருந்தன என்பது உண்மைதான். ஆனால், அது தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒட்டுமொத்தமாக பலன் தருவதாக இருந்திருக்கவே இல்லை. அம்பேத்கர் கவனத்தில் கொண்டிருக்கவேண்டிய விஷயம் இது. ஒருவகையில் அம்பேத்கர் மட்டுமே கவனத்தில் கொள்ள முடிந்த விஷயமும் கூட. அவர் துரதிஷ்டவசமாக இந்திய விலங்குகளை உடைக்க மேற்கத்திய சுத்தியல்களைப் பயன்படுத்துபவராகவே இருந்துவிட்டார்.


(சிறு விளக்கம் : இந்திய - இந்து பாணி வளர்ச்சிக்கும் மேற்கத்திய பாணி வளர்ச்சிக்கும் இடையிலான வித்தியாசத்தை சிறு உதாரணம் மூலம் புரியவைக்கிறேன். இந்தியா சுதந்தரம் பெற்ற நேரத்தில் விவசாய நாடாகவே இருந்தது. மருத்துவத்துறையில் ஏற்பட்ட நவீன முன்னேற்றங்களால் குழந்தை இறப்புகளும் பிறவகை மரணங்களும் சட்டென்று குறைந்துவிட்டிருக்கவே மக்கள்தொகை தீடீரென்று அதிகரித்தது. இந்தியாவில் அப்போது பெரும் வறட்சி ஏற்பட்டதாகவும் பெரும் கதையாடல்கள் உருவாக்கப்பட்டு குட்டை வைக்கோல் புரட்சிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. வேதி உரங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டது (நீரிழிவு நோய், உடல் பருமன் உள்ளிட்ட பல நோய்களின் பெருக்கம் மற்றும் மருந்துகளையே வெகுவாகச் சார்ந்து வாழும் வாழ்க்கை போன்றவையும் அதே காலகட்டத்தில் இருந்தே அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது). அணைகள் ஏராளம் கட்டப்பட்டன.

அப்படியாக பெரும் உணவுத் தட்டுப்பாடு நிலவியதாகச் சொல்லப்பட்ட ஆண்டில் இருந்து மேற்கூறிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்த சுமார் பத்தே ஆண்டுகளில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டியதோடு ஏற்றுமதியிலும் உலக சாதனை படைக்கத் தொடங்கிவிட்டது. இது முழுக்க முழுக்க மேற்கத்திய பாணி வளர்ச்சியே. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சீரிழிவு, நிலங்களின் மண்ணின் சத்து இழப்பு, வேதி உரங்களின் பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்ச நேர்ந்தது என அதன் மோசமான பின்விளைவுகள் ஏராளம்.

இந்திய – இந்து பாணி வளர்ச்சி என்பது இப்படியான பின்விளைவுகள் இல்லாததாகவும் மிதமான வளர்ச்சியைக் கொண்டதாகவும் இருந்திருக்கும். இந்திய உணவுத் தட்டுப்பாட்டைத் தீர்க்க மேற்கத்திய தீர்வு மட்டுமே உதவியிருக்கும் என்பது உண்மையல்ல. குட்டை வைக்கோல், வேதி உரங்கள் இவற்றினால் தானிய உற்பத்தி 50% அதிகரித்தது என்றால் அணைகள் கட்டியதால் ஐம்பது சதவிகிதம் விவசாய நிலப்பரப்பு அதிகரித்து தானிய உற்பத்தி பெருகியது. இந்நிலையில் அணைகளை மட்டுமே கட்டி உணவு உற்பத்தியைப் பெருக்கி, விநியோக, பதப்படுத்தல் வழிமுறைகளை மேலும் பலப்படுத்தியிருந்தாலேயே நம் உணவுத் தட்டுப்பாடு நிச்சயம் நம் முயற்சியாலேயே தீர்ந்திருக்கும்.

குட்டை வைக்கோல், வேதி உரப் பயன்பாடு சார்ந்த பின் விளைவுகளில் இருந்து தப்பியிருக்கமுடியும். நேருவியர்களுக்கு இந்திய – இந்து பாணி வளர்ச்சியில் ஆர்வமும் நம்பிக்கையும் இருந்திருக்கவில்லை.

இதில் முக்கியமான இன்னொரு குறை என்னவென்றால், விவசாயத்தின் சமூகப் பங்களிப்பு - பங்கீடு தொடர்பான பார்வை இந்த மேற்கத்திய தீர்வில் இருந்திருக்கவில்லை. அதாவது, அதற்கு முன்பு நில உடமையில் பெரும் இடைவெளி இருந்தது. சிலரிடம் நிலம் குவிந்திருந்தது. பலர் நிலமில்லாமல் இருந்தனர். கோவில், மசூதி, சர்ச்களுக்குச் சொந்தமான வயல்களில் ஆரம்பித்து இடைநிலை ஜாதி பண்ணையார்கள் வசம் இருந்த 500-1000 ஏக்கர் நிலங்கள் வரை ஒரு நியாயமற்ற பங்கீடு இருந்தது. இந்த ஏற்றத் தாழ்வில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது தாழ்த்தப்பட்ட மக்களே.

எல்லா ஜாதியிலும் வர்க்கரீதியாக நிலமற்று இருந்தவர்கள் உண்டு என்றாலும் தாழ்த்தப்பட்டவர்களே இந்த ஏற்றத் தாழ்வில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். எனவே நிலமற்றவர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் என்பதுதான் அந்நேரத்தைய இந்தியத் தீர்வாக இருந்தது. நேருவுக்கு அதில் ஆர்வம் இருந்திருக்கவில்லை. அதற்கு அவரைக் குறைசொல்லவும் முடியாது. ஆனால், அம்பேத்கருக்கு இருந்திருக்கவேண்டும். அவருடைய சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மிகப் பெரிய பொருளாதார விடுதலையை மட்டுமல்ல சமூக அந்தஸ்தையும் அதுவே தந்திருக்கும்.

நில உடமை சமுதாயத்தில் நிலமற்று இருத்தலே பெரும் வேதனைக்குரிய விஷயம். காணி நிலத்துக்காவது சொந்தக்காரராக இருப்பதே மிகப் பெரிய கெளரவம். தாழ்த்தப்பட்டவர்களில் சுதந்தரத்துக்கு முன் ஐந்தாறு சதவிகிதத்தினரே நில உடமையாளர்களாக இருந்திருந்தார்கள் என்றால் 80-90 சதவிகிதம் பேருக்கு நிலத்தைப் பங்கிட்டுக் கொடுத்திருக்கவேண்டும்.

நிலம் துண்டு துண்டாக இருந்தால் உற்பத்தி குறையும் என்பது உண்மையல்ல. சிறு நில உடமையாளர்கள் அதுமட்டுமே அவர்களுடைய வாழ்வாதாரத்தைத் தரும் என்பதால் கூடுதல் அக்கறையுடன் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பார்கள். அதோடு, நிலம் குறைவாகவும் மக்கள் அதிகமாகவும் இருக்கும் நம் நாட்டுக்கு சமத்துவத்தைக் கொண்டுவரும் நோக்கிலும் நிலத்தைப் பங்கிட்டுக் கொடுப்பதே சிறந்த வழியாக இருந்திருக்கும். வேண்டுமென்றால் பத்து தாழ்த்தப்பட்ட நில உடமையாளர்களின் நிலத்தை ஒன்றாக்கி கூட்டுப் பண்ணை முறையில் ஐம்பது ஏக்கர்-100 ஏக்கர் என ஆக்கித் தந்திருக்கவேண்டும்.

காந்தியவாதமும் லட்சிய வேகமும் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. வினோபாவே பூதான இயக்கத்தை அவரளவில் வெற்றிகரமாக நடத்தத் தொடங்கிய காலகட்டம். இந்திய அதிகார வர்க்கம் அவருடைய முயற்சிகளைக் கைகட்டி வேடிக்கை பார்த்தது. எள்ளி நகையாடியது. துளிகூட ஆதரவு தராமல் ஒதுக்கித் தள்ளியது. கம்யூனிஸ்ட்கள் வினோபாவின் முயற்சிகள் புரட்சியைத் தள்ளிப்போடுவதாக நினைத்து கோபப்பட்டார்கள். பண்ணையார்களைத் தாக்கி நிலத்தை பாட்டாளிகளுக்குக் கொடுக்க முற்பட்டார்கள்.

அவர்களுடைய ஆட்சிகள் நடந்த கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும் நிலச் சீர்திருத்தம் ஒப்பீட்டளவில் சிறப்பாக அமல்படுத்தப்பட்டது. ஆனால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு நன்மை தருவதாக அல்லாமல் இடைநிலை ஜாதிகளுக்குப் பயன் தருவதாகவே அமைந்தது. மரிச்சபி படுகொலைகளில் ஆரம்பித்து பொலிட்பீரோவில் ஒரு தாழ்த்தப்பட்டவர்கூட இடம்பெறாமல் பார்த்துக்கொண்டுவரும் கம்யூனிஸ்ட்களை அம்பேத்கர் சரியாகவே இனம் கண்டு ஒதுக்கியிருந்தார். அவரளவுக்கு அரசியல் மேதமை இல்லாத திருமாவளவன் கூட கீழ்வெண்மணி அஞ்சலியில் ஆரம்பித்து கம்யூனிஸ்ட்களிடமிருந்து முடிந்தவரை விலகியே இருந்துவருகிறார். அல்லது மக்கள் நலக்கூட்டணி போன்ற சந்தர்ப்பவாதக் கூட்டணியில்கூட தன்னை முதல்வராக முன்னிறுத்த முன்வராத கம்யூனிஸ்ட்களை நன்கு புரிந்துகொண்டவராகவே இருக்கிறார்.

எனவே, அம்பேத்கர் நில சீர்திருத்தத்தை மாநில அரசுகளின் பொறுப்பில் விட்டது மிகப் பெரிய தவறு. தீண்டாமைக்கு எதிரான விதிமுறைகளை எப்படி தேசம் முழுமைக்குமான சட்டமாக வரையறுத்தாரோ அதுபோலவே தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிலம் கிடைப்பதை தேசம் முழுமைக்கும் உறுதிப்படுத்தியிருக்கவேண்டும்.

பொது சிவில் சட்டம் கொண்டுவரவேண்டும் என்று சொன்னவர் தாழ்த்தப்பட்டவர்களின் பொருளாதார, சமூக ரீதியிலான நலனைக் காக்க நிலசீர்திருத்தத்தை மத்திய அரசின் பொறுப்பில் எடுத்துக்கொண்டிருக்கவேண்டும். எனவே, அம்பேத்கர் விவசாயம் உள்ளிட்ட கிராமப்புறத் தொழில்களின் மேம்பாட்டுக்கும் அதில் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்கும் உடமைக்கும் தோதாகக் கூடுதலாக எதையும் அரசியல் சாசனம் மூலம் உருவாக்கியிராததால் அவரையறியாமலேயே அவர்களைக் கைவிட்டிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

(தொடரும்)

துயருறு ஆன்மாவின் அரசியல் சீற்றம் - 1

துயருறு ஆன்மாவின் அறச் அரசியல் சீற்றம்



அம்பேத்கருடைய பங்களிப்பு மூன்று வகையில் மிகவும் முக்கியமானது. முதலாவதாக, அம்பேத்கர் இந்திய சாதி அமைப்பின் வேர் சாதிகளாக இருந்த பிரிவினரின் துயரத்தின் அழுத்தமான அரசியல் குரலாக வெளிப்பட்டவர். காந்த ஊசி எந்நிலையிலும் தன் திசையை மாற்றிக்கொள்ளாமல் இருப்பதுபோல் அம்பேத்கர் தன் வாழ்வின் அனைத்துச் செயல்களிலும் அனைத்துக் கட்டங்களிலும் உறுதியாக ஒரே குறிக்கோளுடன் இயங்கினார்.


சாதி இந்துக்களால் பாதிக்கமட்டுமே பட்டதாக அவர் கருதிய கடைநிலை பிரிவினரின் நலனுக்காக (அவர் விரும்பிய பாணியிலான நலனுக்காக) முழு மூச்சாகப் பாடுபட்டார். அவர் யாருக்காகப் போராடினாரோ அவர்கள் அவருக்கு ஆதரவு தரவில்லை. அவர் எதிர்க்க வேண்டியிருந்த சக்திகள் அராஜக வலிமையுடன் இருந்தன. நேசக் கரம் நீட்டியவர்கள் எல்லாருமே தத்தமது அரசியல் கணக்குகளைக் கொண்டிருந்தனர். ஒரே மீட்பராக நம்பிய ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து எதுவுமே பேச முடிந்திருக்கவில்லை. ஜாதிரீதியான அடையாளம் மட்டுமே போதுமா... வர்க்க ரீதியான பார்வையும் அவசியமா என்ற குழப்பம் அவருக்கு இறுதி வரை இருந்திருக்கிறது. இப்படியான பல நெருக்கடிகள் இருந்த நிலையிலும் அவருடைய கொள்கையில் அவர் கொண்டிருந்த பிடிப்பு, சமரசமற்ற தன்மை போற்றுதலுக்குரியது. ஒரு தலித் அறீவுஜீவியாக அவர் வர்ண சமூகம் பற்றிய சித்திரிப்பு, ஜாதியின் தோற்றுவாய், இந்தியாவின் பூர்வகுடிகள், இந்தியாவின் சமூகவியல் வரலாறு, மத மாற்றத்தின் தீமைகள், வலுவான இந்திய தேசியத்தின் அவசியம் என பல்வேறு விஷயங்கள் பற்றி மிக விரிவான மிகவும் அழுத்தமான பார்வையை முன்வைத்திருக்கிறார். அந்தவகையில் தலித் பார்வையில் இந்தியா என்ற அறிவுத் துறையின் முன்னோடியாக விளங்குகிறார்.


இரண்டாவதாக, இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார். மையத்தில் தேவையான அளவுக்கு அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்களுக்கு தேவையான சுதந்தரத்தைக் கொடுத்து ஒரு சமநிலையிலான கூட்டாட்சிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அனைவரையும் உள்ளடக்கிய, குறிப்பாக நலிவடைந்த பிரிவினருக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இந்திய அரசியல் சாசனம் நீதியும் நேர்மையும் சமத்துவமும் நவீனப் பார்வையும் கொண்டதாக உருவானதில் அவருடைய பங்கு கணிசமானது.


மூன்றாவதாக, இந்து சமூக வேர் ஜாதி மக்களின் விடுதலைக்காக அவர் முன்வைத்த பெளத்த மத மாற்றம் என்பது அவருடைய வாழ்வின் ஆகப் பெரிய சாதனையாகத் திகழ்கிறது. இந்தியாவுக்கு குறைந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலேயே தன் மத மாற்ற முடிவு இருக்கும் என்று காந்தியடிகளுக்குக் கொடுத்த வாக்குறுதியை அவர் முழுமனதுடன் பரிபூரணமாக நிறைவேற்றியிருக்கிறார்.



இந்த மூன்று பங்களிப்புகளின் மூலம் நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகளில் முக்கியமானவராக அம்பேத்கர் இருந்திருக்கிறார். முஹம்மது அலி ஜின்னா, ஈ.வெ.ராமசாமி போன்றோரைப் போலவே இந்து விரோதம் தலை முதல் அடி வரை கொண்டவர் என்றாலும் செயல் அளவில் அம்பேத்கர் செய்திருப்பவை மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக அமுதுக்கும் விஷத்துக்கும் இடையிலான வித்தியாசமாக அம்பேத்கரை உயரத்தில் கொண்டு நிறுத்தியிருக்கின்றன.



*

யாருடைய அரசியல் சாசனத்தை அம்பேத்கர் எழுதினார்..?


சுதந்தரம் பெற்ற காலகட்டத்தில் இந்தியாவில் நான்கு சிந்தனைப் போக்குகள் பிரதானமாக இருந்தன. முதலாவதாக, காந்திய சிந்தனைகள். இரண்டாவதாக, நேருவிய அதாவது மேற்கத்திய, நவீன சிந்தனைகள். மூன்றாவதாக, இந்துத்துவ சிந்தனைகள். நான்காவதாக இந்து-இந்திய விரோத சிந்தனைகள் (ஜின்னா, ஈ.வெ.ரா. முன்னெடுத்தவை).


இந்திய அரசியல் சாசனம் இவற்றில் நான்காவதின் போக்கில் அமைய வாய்ப்பு அப்போது இருந்திருக்கவில்லை. கிராம ராஜ்ஜியம், கதர்-கைத் தொழில் பொருளாதாரம், மது விலக்கு, பசு பாதுகாப்பு போன்ற காந்திய சிந்தனைகள் வெகு அழகாக வழிகாட்டு நெறிப் பகுதிக்குக் கொண்டுசெல்லப்பட்டன. வேண்டுமானால் மாநிலங்கள் அமல்படுத்திக் கொள்ளலாம். வேண்டாமென்றால் விட்டுவிடலாம் என்று சொல்லியதோடு மத்திய நேரு அரசு இவற்றுக்கு எதிரான விஷயங்களையே தீவிரமாக அமல்படுத்தி காந்திய தாக்கத்தை ஓரங்கட்டியது.


இஸ்லாமியத் தீவிரவாதம் இந்துகளுக்கு இழைத்த கொடூரங்களின் அடிப்படையில் சிந்தித்த கோட்சேவின் செயலினால் இந்துத்துவர்களுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஏற்கெனவே சனாதன - இந்துத்துவ சிந்தனைகளுக்கு நவீன உலகில் இடமில்லாமல் போய்விட்டிருந்தது. எனவே இந்திய அரசியல் சாசனம் அவற்றையும் எளிதில் ஓரங்கட்டிவிட்டது.



அப்படியாக இந்திய அரசியல் சாசனம் நேருவிய மேற்கத்திய சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.



இப்போது அம்பேத்கருமே நேருவியத்தின் பெரும்பாலான கொள்கைகளை அப்படியே அவர் பாணியில் அவருடைய சிந்தனையின் போக்கில் கண்டடைந்தவரே. அந்தவகையில் இந்திய அரசியல் சாசனம் அம்பேத்கருடைய முத்திரையையே கொண்டிருப்பதாகச் சொல்லவும்முடியும். ஆனால்...


*


காந்தி, நேரு, படேல், ஜெகஜீவன்ராம் போன்ற சீர்திருத்த மனோபாவம் கொண்டவர்களால் நிறைந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கடும் விமர்சகராக இருந்தார் அம்பேத்கர். ஆனால், இந்தியா சுதந்தரம் பெற்றதும் ஆட்சிப் பொறுப்பில் வந்த காங்கிரஸ் கட்சி அந்த அம்பேத்கரை சட்ட அமைச்சராக ஆக்கியது. முதலில் அம்பேத்கருக்கு அந்தப் பதவி பிடித்திருக்கவில்லை.


மேல் ஜாதி ஆதிக்கம் நிறைந்த நாடாளுமன்றத்தில், தான் விரும்புவதுபோல் எதுவும் செய்யமுடியாது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. எனவே, தொழிலாளர் நலத்துறை அல்லது திட்டமிடல் துறையைத்தான் கேட்டார். ஆனால், காந்தியின் அழுத்தமான பரிந்துரையின் பேரில் அம்பேத்கர் சட்ட அமைச்சராக ஆக்கப்பட்டார். இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவின் தலைமைப் பதவியிலும் அமர்த்தப்பட்டார். முடிந்தவரை தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு நன்மை தரும் விஷயங்களைச் செய்வோம் என்ற தீர்மானத்துடன் பணியைத் தொடர்ந்தார்.


ஆனால், அவரால் அதையாவது செய்ய முடிந்தா?

ஒருபக்கம், தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று அவர் செய்ய நினைத்தவற்றில் முக்கியமானவற்றைச் செய்ய முடிந்திருக்கவில்லை. இன்னொருபக்கம், தாழ்த்தப்பட்டவர்களுடைய நலனுக்கென்று அவர் செய்தவை அந்தப் பலனைத் தந்திருக்கவில்லை. அப்படியாக இரண்டுவகையிலும் அவருக்குப் பின்னடைவே ஏற்பட்டிருக்கிறது.


தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதிகளை உருவாக்கவேண்டும். அப்போதுதான் தாழ்த்தப்பட்டவர்களின் உண்மையான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படமுடியும் என்று அவர் நம்பினார். 1930களில் பிரிட்டிஷாரிடம் அது தொடர்பான கோரிக்கையை முன்வைத்தபோது காந்தியடிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து அதைத் தடுத்தார். தாழ்த்தப்பட்ட ஜாதியினர் இந்து சமூகத்தின் ஓர் அங்கமே. தனித் தொகுதி என்பது அவர்களை இந்து சமூகத்தில் இருந்து பிரித்துவிடும். மேல் ஜாதி இந்துக்கள் தாம் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்து ஹரியின் குழந்தைகளை மேல் நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என்று காந்தி சொன்னார்.


தாழ்த்தப்பட்ட மக்களுமே திறக்க மறுத்த கோவில்களின் முன் கூப்பிய கரங்களுடன் காத்திருந்தனர். தம்முடைய இந்துக் கோவில்களில் தமக்கான விழாக்களைக் கொண்டாடி வந்தனர். அவர்கள் ஒருபோதும் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளவோ இந்து சமயத்தில் இருந்து விலக்கிக் கொள்ளவோ விரும்பவே இல்லை. இந்து சமூகத்தின் பெருமை மிகு பாரம்பரியத்தின் அங்கமாக அங்கீகரிக்கப்படவே விரும்பினார்கள்.


உண்மையில் காந்தி அப்படி விரும்பியதால் தாழ்த்தப்பட்டவர்கள் அவர் பின்னால் அணி திரண்டு அதை விரும்பினார்கள் என்று நிச்சயம் சொல்லவே முடியாது. தாழ்த்தப்பட்டவர்கள் அப்படி விரும்பியதால் காந்தி அதைத் தனது அரசியலாக முன்னெடுத்தார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பேசினார். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் விரும்பியதுபோல் பேசவில்லை. அம்பேத்கரின் கோபம் மேலிருந்து பார்த்தால் நியாயமானது. மக்களின் மத்தியில் இருந்து பார்த்தால் தவறானது.


பிரிட்டிஷார் தன்னை தாழ்த்தப்பட்ட ஜாதியினரின் அரசியல் பிரதிநிதியாக அங்கீகரித்திருக்கும் நிலையில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்று சொல்லி இப்படி உண்ணாவிரதம் இருக்கும் உரிமையை காந்திக்கு யார் கொடுத்தது... என்னுடன் வந்து சாப்பிடச் சொல்லுங்கள் அவரை என்று கடிந்துகொண்டிருக்கிறார் அம்பேத்கர்.



தாழ்த்தப்பட்ட ஜாதியினரின் இன்னொரு தலைவரான எம்.சி.ராஜா ஏற்கெனவே வேதனையில் உழலும் நம் ஜாதியினருக்கு காந்தியைக் கொன்ற பாவமும் வந்து சேர்ந்தால் மீட்சியே கிடைக்காது... நீங்கள் தனித் தொகுதி கோரிக்கையைக் கைவிடவில்லையென்றால் நான் போய் அது வேண்டாம் என்று சொல்லப் போகிறேன் என்று சொன்னதைத் தொடர்ந்து அம்பேத்கர் தனித் தொகுதி கோரிக்கையைக் கைவிட்டிருந்தார்.



தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு (ரிசர்வ்ட்) செய்யப்பட்டிருக்கும் தொகுதியில் நிறுத்தப்படும் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களில், தாழ்த்தப்பட்டவர்களின் வாக்கில் 35%க்கு மேல் பெறுபவரைத்தான் வெற்றிபெற்றவராக அறிவிக்கவேண்டும் என்ற நியாயமான கோரிக்கையைக்கூட அம்பேத்கரால் அரசியல் சாசனத்தில் இடம்பெறச் செய்யமுடியவில்லை.


மேல் ஜாதியினர் ஒன்று கூடி, தமக்குக் கை கட்டிப் பணி புரியத் தயாராக இருக்கும் தாழ்த்தப்பட்டவர் ஒருவரை வெற்றி பெற வைத்து, ரிசர்வ்ட் தொகுதி வழிமுறையை செல்லாக்காசாக்கிவிடுவார்கள் என்று பயந்தார். ஆனால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு அப்படியான தேர்தல் வழிமுறையை உருவாக்கிக் கொடுத்தால் எங்களுக்கும் அதுபோல் கொடுக்கவேண்டும் என்று முஸ்லீம் லீகினர் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.


இது 1930களில் நடந்த சம்பவம். பாகிஸ்தான் எனத் தனி நாடு கொடுத்துவிட்டிருக்கும் நிலையில், 1948, ஜனவரி 30-ல் காந்தியும் இறந்துவிட்ட நிலையில் அம்பேத்கர் தனித் தொகுதித் தீர்மானத்தையோ 35% தாழ்த்தப்பட்டவர்களின் வாக்கு என்றதையோ இந்திய அரசியல் சாசனத்தில் இடம்பெறச் செய்திருக்க முடியும். ஆனால், அதற்கு அவர் முயற்சி செய்யவில்லை. அதாவது, அதற்கு இடம் தரப்படவில்லை.


(தொடரும்)