Tuesday, 24 January 2017

சல்லிகட்டு புரட்சி - 3

சல்லிகட்டு புரட்சி - 3

தமிழ் மக்கள் இனிமேல் செய்யவேண்டியதெல்லாம் சரியான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதும் பிரச்னைகளுக்கு அவை ஆரம்பிக்கும் நிலையிலேயே தீர்வுகளைக் கண்டடைய முற்படுவதும், மத்திய மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குறைத்து அல்லது அவர்களை நம்பிக்கொண்டிருப்பதை விடுத்து பஞ்சாயத்து அலகுகளைப் பலப்படுத்துவதும்தான் மிகவும் அவசியம். இந்த சல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு அந்தந்தப் பஞ்சாயத்து அனுமதி கொடுத்தாலே போதும் என்ற அரசியல் சாசன உரிமையை எடுத்துச் சொல்ல ஒருவர்கூட இல்லாமல் போனது வேதனையிலும் வேதனையே.

அரசு இந்தப் பிரச்னையைக் கையாண்ட விதத்தைப் பார்த்தால் அப்படியொன்றும் புத்திசாலித்தனமாக எதுவும் இல்லை. மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு காளைகளை காட்சிப்படுத்தக்கூடாத விலங்கு என்ற பட்டியலில் பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியத்தின் பரிந்துரையின் பேரில் 2011-ல் சேர்த்தது. அதை பா.ஜ.க. அரசு நீக்கி சட்டம் இயற்றியது. ஆனால், விலங்குகள் நல வாரியத்தைக் கலந்தாலோசிக்காமல் அந்த சட்டத்தை இயற்றியது தவறு என்று நீதிமன்றம் 2014-ல் தீர்ப்பு வழங்கியது. மத்திய பாஜக அரசால் விலங்குகள் நல வாரியத்திடமிருந்து அனுமதி பெற முடியவில்லை. ஏனென்றால், விலங்குகள் நல வாரியத்தின் தலைவர் காங்கிரஸால் நியமிக்கப்பட்டவர். அதோடு பீட்டா அமைப்பின் செல்வாக்கு விலங்குகள் நல வாரியத்திலும் ஆழமாக உண்டு. விலங்குகள் நலவாரியம் அனுமதி கொடுக்காததைப் பாராட்டி மன்மோகன் சிங் கடிதம் எழுதியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் 2014-தேர்தல் அறிக்கைகூட சல்லிக்கட்டை நிரந்தரமாகத் தடை செய்வோம் என்றுதான் சொல்கிறது.

அந்தத் தடையை நீக்க வேண்டும் என்று போராடிய சுப்பிரமணியம் சுவாமி சல்லிக்கட்டு இந்துக்களின் பாரம்பரியப் பண்டிகை; பலம் மிகுந்த நாட்டுப் பசுக்களை உருவாக்க அந்தப் போட்டிகள் அவசியம். எனவே அதை நடத்த அனுமதிக்கவேண்டும் என்று 2016 டிசம்பரில் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார். அதுவரையில் சல்லிக்கட்டு இந்துப் பண்டிகை என்ற வாதம் யாராலும் வைக்கப்பட்டிருக்கவில்லை. எந்தவொரு மதத்தினரின் உணர்வையும் புண்படுத்தக்கூடாது என்று அரசியல் சாசனம் சொல்வதால் நீதிமன்றத்துக்கு தடையை நீக்குவதைத் தவிர வேறு வழியெதுவும் இல்லை என்ற நிலைவந்தது. ஆனால், காங்கிரஸின் செல்லப்பிள்ளையான நீதிபதி மிகவும் தந்திரமாக தீர்ப்பெதுவும் வழங்காமல் வழக்கை ஒத்திவைத்தார்.

ஆனால், உச்ச நீதிமன்றம் விதித்த தடையை மாநில அரசு ஒரு அவசரச் சட்டம் கொண்டுவந்து நீக்கிவிடமுடியும் என்று 2015லேயே நிர்மலா சீதாராமன் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார். அதை யாரும் பொருட்படுத்தவே இல்லை. இப்போது அதுதான் நடக்கவும் செய்திருக்கிறது. எனவே, தமிழக அரசு இதற்கு முன்பே செய்திருக்க வேண்டிய ஒன்றைச் செய்திருக்கிறது. அதுவும் மக்கள் இவ்வளவு பெரிதாகப் போராடிய பிறகுதான் செய்திருக்கிறது என்பதால் அதை அப்படியொன்றும் பாராட்டிவிட முடியாது.

அடுத்ததாக, இந்த மக்கள் எழுச்சியை தமிழக அரசு கையாண்ட விதம் மிகவும் மோசமாகவே இருக்கிறது. ஓரிரு நாட்களிலேயே இந்த மக்கள் எழுச்சியை மே 17, ம.க.இ.க. போன்ற தேச விரோத சக்திகள் கைப்பற்றிவிட்டன என்பது தெரிந்த நிலையிலும் ஊடகங்களில் அவர்கள் அனுமதிக்கும் நபர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது தெரிந்த நிலையிலும் அதை வேடிக்கை பார்த்தது மிகப் பெரிய தவறு. இந்திய அரசு குறித்தும் மோதி குறித்தும் பேசப்பட்ட அவதூறுகளை கை கட்டி வேடிக்கை பார்த்தது அதைவிடப் பெரிய தவறு. போராட்ட இலக்கு எதுவோ அதை மட்டுமே பேசுங்கள் என்றோ ஊடகங்களுக்கு அனைத்து தரப்பு போராட்டக்காரர்களின் குரலையும் வெளிப்படுத்த வாய்ப்பு கொடு என்றோ சொல்லி நிலைமையைச் சீர்படுத்தியிருக்கவேண்டும்.

சாதா நாட்களில் ஊடகங்களில் அறிவுஜீவிகள் கலந்துகொண்டு நடக்கும் Talk Dog show-க்களில் எப்படி வலது சாரி கருத்தாளர்களை ஓரங்கட்டுவார்களோ அதுபோலவே இந்த மக்கள் எழுச்சியிலும் உண்மையான போராளிகளின் குரலை ஓரங்கட்டிவிட்டிருக்கிறார்கள். இந்தத் தவறு போதாதென்று விஷமிகளைச் சரியாக இனங்கண்டு பிடிக்கத் தெரியாத கையாகாததனத்தோடு, தமிழக காவல்துறையினர் தாமே பல தவறுகளை அப்பட்டமாக கேமராக்கள் முன்னால் செய்தும் காட்டியிருக்கிறார்கள். பெண் காவலர் தீவைக்கும் காட்சியெல்லாம் காவலர் பக்கம் இருந்து எடுத்த கேமராவில்தான் பதிவாகியிருக்கின்றன. போராட்டக்காரர்கள் மத்தியில் ஊடுருவிய விஷமிகளைவிட காவல் துறைக்குள் ஊடுருவியிருக்கும் இந்த விஷமிகள்தான் மிகவும் ஆபத்தானவர்கள்.

உரிய காலத்தில் சட்டம் கொண்டுவரத் தவறியமை, கொண்டுவந்த சட்டத்தையும் குழப்பமாக முன்வைத்தமை, மக்கள் எழுச்சியை ஊடகங்களும் தேச விரோத சக்திகளும் திசை திருப்பியதை வேடிக்கை பார்த்தமை, காவல் துறையின் அத்துமீறல்கள் என எல்லாமே மிக அபாயமான திரைப்படத்தின் அருமையான திரைக்கதைபோல் இருக்கின்றன.

மத்திய அரசின் பிரதிநிதியாக மாறிவிட்டிருக்கும் பன்னீர் செல்வத்தை அப்புறப்படுத்த சசிகலா அன்கோ நடத்தும் திரைமறைவு நடவடிக்கைகள்தான் இவை என்று யூகங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், தேச விரோத முழக்கங்களுடன் வரத் தொடங்கியிருக்கும் புதிய புரட்சியாளர்கள் மீது நல்லெண்ணம் குவியச் செய்ய சசிகலா - பன்னீர் செல்வம் அன்கோ நடத்தும் நாடகத்தின் காட்சிகள்தான் இவை என்று நம்பவும் இடமிருக்கின்றன. பலுசிஸ்தான், ஆஸாத் காஷ்மீர் பகுதிகளில் மோதி அரசு முன்னெடுக்கும் ராஜாங்க நடவடிக்கைகளினால் இந்தியாவுக்கு ஆதரவான குரல்கள் அங்கு எழத் தொடங்கியிருக்கின்றன. இதனால் ஆத்திரமுற்றிருக்கும் இஸ்லாமிய பாகிஸ்தானிய சக்திகள் இந்தியாவில் பிரிவினை வாதங்களை வலுப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அதற்கு தமிழகம் போல் தோதான களம் வேறு எது இருக்க முடியும்? 2009-ல் இருந்தே தமிழகத்தில் பிரிவினை வாதச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டும் எந்த எழுச்சியும் இல்லாமல் முடங்கிக் கிடந்த தமிழ் தேசியவாதிகளுக்குக் கிடைத்த வயாகராவாக இந்த இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆகியிருப்பதுபோல் தெரிகிறது. சமீப இரண்டு ஆண்டுகளில் இந்து இயக்கத் தலைவர்களை கொடூரமாக வெட்டி வெட்டிக் கொன்றவையெல்லாம் பச்சைத் தமிழகத்து வீச்சருவாள்கள் என்பதை வைத்துப் பார்க்கும்போது சில கோடிட்ட இடங்கள் ரத்தத்தால் நிரம்புகின்றன.


இந்திய தேசியத்தை எதிர்த்து உருவாகியிருக்கும் இந்த தமிழ் தேசியப் புரட்சியில் மெரினா கடற்கரையில் கூடிய இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி தரப்பட்டிருக்கிறது; ஆனால், தேசியக் கொடியை ஏந்தி வந்த ஏ.பி.வி.பி.யினர் அடித்து விரட்டப்பட்டிருக்கிறார்கள். சல்லிக்கட்டுத் தெய்வங்களான மாரியம்மனும் அய்யனாரும் முருகனும் ஓரங்கட்டப்பட்டு இது வெறும் தமிழ் அடையாளமாக அதுவும் இந்து மத நீக்கம் - இஸ்லாமியத் திணிப்பு என முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து தடைகளையும் போட்ட காங்கிரஸ் - திமுகவை விட்டுவிட்டு தடைகளை நீக்கப் பெருமுயற்சி எடுத்துவரும் இந்துத்துவ பி.ஜே.பி.தான் இந்தத் தடைக்குக் காரணமென்று ஊடகங்களில் முன்வைக்கப்படுகின்றன. உருவாகப் போகும் தமிழ் தேசியம் எப்படி இருக்கும் என்பதை இவையெல்லாம் கோடிகாட்டுகின்றன. மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யோ தமிழகத்து ஃபைல்கள் எல்லாம் தன் மேஜையில்தானே என்று ”புன்னகை மன்ன’னாக அமர்ந்திருப்பதுபோலவும் தமிழ் தேசிய ஆதரவாளரான சசிகலா நடராஜனின் ஆட்சி ஏற்படுவதைத் திறம்படத் தடுத்துவருவதாகப் பெருமைப்பட்டுக்கொண்டிருப்பதுபோலவும் தெரிகிறது. ஆனால், வெற்றிக்கு வாழ்த்துச் சொல்லி சந்தன மாலை அணிவிக்க வந்தவரின் இடுப்பில்தான் பெல்ட் பாம் இருந்ததுபோல், மத்திய அரசின் வசம் இருக்கும் தமிழக பைல்களின் ஓரங்களில்தான் சயனைடு தடவப்பட்டிருக்கிறது என்று அவர்களுக்கு எப்படிச் சொல்லிப் புரியவைப்பது?