Wednesday, 30 March 2016

ஊழல் பெருச்சாளியும் வேறு சில விஷ ஜந்துக்களும்...

‘பெருச்சாளி’ என்றொரு மலையாளப் படம். செல்போனோடு லாஜிக்கையும் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டுப் படத்தைப் பாருங்கள் என்று முதலிலேயே சொல்லிவிடுகிறார்கள். ஆனால், அதற்கு அர்த்தம் சுவாரசியமான திரைக்கதையை எதிர்பார்க்காதே என்பது படத்தைப் பார்த்த பிறகே தெரியவருகிறது. அதை முதலிலேயே தெளிவாகச் சொல்லியிருந்தால் உபயோகமாக இருந்திருக்கும்.

அமெரிக்க கவர்னர் தேர்தலில் ஒரு போட்டியாளரை வெற்றி பெற வைக்க கேரளத்து ஆலோசகரை (லாலேட்டன்) அழைத்துச் செல்கிறார்கள். அந்த கேரளத்து ஆலோசகருடைய திறமையையும் ஆளுமையையும் காட்டும் ஆரம்பகட்டக் காட்சிகளைக்கூட ஓரளவுக்குப் பொறுத்துக்கொள்ளலாம். அமெரிக்காவில் அவர் செய்யும் ‘தந்திரங்கள்’ கௌரவமான மொழியில் சொல்வதென்றால், படு குழந்தைத்தனமாக இருக்கின்றன.

உண்மையில் இந்தக் கதையின் தலை கீழ் வடிவம் இதைவிட சுவாரசியம் மிகுந்தது. அதுமட்டுமல்ல அதுதான் நடைமுறையில் நடக்கவும் செய்கிறது. அதாவது, இந்தியாவின் தேர்தல்களை அமெரிக்கா (இந்திய ஊடகங்களின் வென்ச்சர் முதலீட்டார்கள், கார்ப்பரேட் முதலாளிகள், அரசியல் ஏஜெண்டுகள், சமூகத் தளங்களில் திணிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க விசுவாசிகள், ஸ்லீப்பர் செல்கள் எனப் பலவழிகளில்) தீர்மானிக்கிறது. நேர்மையானவர்களை ஹனி டிராப் மூலமாகவும் ஊழல்வாதிகளை அவர்களுடைய ஊழல் நடவடிக்கைகளை வைத்தும் பிளாக் மெயில் செய்கிறார்கள். ஒவ்வொரு கட்சியிலும் இயக்கத்திலும் மிதவாதிகளையும் பிற சக்திகளுடன் நல்லிணக்கத்தை விரும்பும் நபர்களையும் ஓரங்கட்டிவிட்டு அடிப்படைவாதிகளை முன்னுக்குக் கொண்டுவருவதன் மூலம் தன் கையைக் கொண்டே கண்ணைக் குத்திக் கொள்ளச் செய்யும் வேலையை மிக அருமையாகச் செய்துவருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தோதான அரசியல்வாதிகளை வெற்றி பெற வைப்பதன் மூலம் தனது நலன்களை எளிதில் பூர்த்திசெய்துகொள்கிறார்கள்.

இதுபோன்ற சாத்தியக்கூறுகளை கான்ஸ்பிரஸி தியரி என்ற பெயரில் ஓரங்கட்டவே நவீன மனம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. செய்தித்தாளில் வரும் செய்திகள் அல்லது ஏதேனும் அமெரிக்க ஐரோப்பிய வெள்ளைத்தோல் நிபுணர்கள் சொன்னால்தான் எதையும் நம்புவேன் என்று அடம்பிடிக்கும் அறீவுஜீவி வர்க்கம் உலக நிகழ்வுகளை தனது எஜமானர்களின் அரசியலுக்கு உகந்த கோணத்தில் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டிருப்பதால் அது அந்த வழித்தடத்தில் மட்டுமே பயணிக்கும். பொதுஜனமோ தன் முன் வைக்கப்படும் செய்தியின் பின்னால் மறைந்திருக்கும் எந்தவொரு தந்திரத்தையும் அறியாமல் கீரைக் கட்டுக்கு கழுத்தை நீட்டும் அப்பாவி ஆடு போல் மேய்ப்போன் அடைக்கும் பட்டிகளில் சென்று அடைந்துகொள்கின்றன.

சர்வ தேச சக்திகள் தமது நலன் சார்ந்து இந்தியாவில் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதற்குத் தோதாகவே இங்கு எல்லாம் நடக்கும்; நடத்தப்படும் என்ற அடிப்படையில் தமிழகத் தேர்தலில் அவை எப்படியெல்லாம் செயல்படக்கூடும் என்பதை முதலில் பார்ப்போம்.

இப்போது தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் அரசியல் செயல்பாடுகளில் மிகவும் முக்கியமானது என்ன..? ஊழல் ஒழிப்பு, மது விலக்கு, பெருந்தொழில்மயமாக்கம், தமிழ் தேசிய உருவாக்கம், சாதி அரசியல், மத அரசியல் என பல விஷயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சர்வ தேச அரசியல் சக்திகளுக்கு இந்தியா சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் மாநில ரீதியாகவும் பிரிந்து சண்டையிட்டுக் கொள்வது ஒருவகையில் மிகவும் அவசியம். இந்தியா ஒற்றை தேசமாக பலம் பெற்றூவிட்டாலோ இந்தியாவும் சீனாவும் ஒன்று சேர்ந்துவிட்டாலோ அமெரிக்க ஐரோப்பிய ஆதிக்கத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக ஆகிவிடும். 16-17-ம் நூற்றாண்டு வாக்கில் எல்லாம் சீனாவும் இந்தியாவுமே வல்லரசாக இருந்திருக்கின்றன. அதை கஷ்டப்பட்டு அமெரிக்க ஐரோப்பியப் பக்கம் திருப்பியிருக்கும் நிலையில் வரலாறு திரும்புவதை அவர்கள் விரும்பவேமாட்டார்கள். அதிலும் இந்திய சீன சந்தையை நம்பியே அமெரிக்க ஐரோப்பிய வணிகம் இருக்கும்நிலையில் இந்த இரு ஆசிய சக்திகளும் ஒன்று சேர்வதும் தன்னளவில் பலம் பெறுவதும் விரும்பத்தக்க நிகழ்வு அல்ல.

சீனாவின் கம்யூனிஸ சர்வாதிகாரம் தேச பக்தியை வலுக்கட்டாயமாகத் திணிப்பதால் அங்கு சர்வ தேச சக்திகளால் எதுவும் செய்ய முடியவில்லை ஜனநாயகம், கருத்து சுதந்தரம் என்ற பெயரில் ஊடகங்கள் மூலம் கால் பதித்து தேச விரோத உணர்வை வளர்க்க சீனாவில் வழியில்லை. ஆனால், இந்தியாவோ சத்திரத்து ஆட்டுக்கல்லாக யார் வேண்டுமானாலும் எதைப் போட்டு வேண்டுமானாலும் ஆட்டிக்கொள்ள அனுமதிக்கும் தேசமாக இருக்கிறது. எனவே, சர்வ தேசம் இங்கு தன் அனைத்து பரிசோதனைகளையும் செய்துபார்க்கிறது.

தேர்தல்களை எடுத்துக்கொண்டால் மின்னணு வாக்குப் பதிவு எந்திர மோசடியில் ஆரம்பித்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்துத் தருதல், ஊடகங்கள் மூலம் பொதுக்கருத்தை வளைத்தெடுத்தல், கட்சிகளுக்குத் தேர்தல் அறிக்கைகளை எழுதித் தருதல், கட்சிகளில் தனக்குத் தோதான ஆட்களை முன்னுக்குக் கொண்டுவருதல், சமூக வலைதளங்களில் ‘செய்தி’களைப் பரப்புதல் என அதற்கான வியூகம் விரிவாக வகுக்கப்பட்டிருக்கிறது.

தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதைத் தீர்மானிக்க மின்னணு வாக்குப் பதிவு எந்திர மோசடி ஒன்றே போதும். ஆனால், அதைமட்டுமே செய்தால் பின்னாளில் சந்தேகம் வர வாய்ப்பு உண்டு. உதாரணமாக, மக்கள் செல்வாக்கு இல்லாத ஒருவரை வெற்றி பெற வைத்தால் அவர் நமது விருப்பங்களுக்கு ஏற்ப ஆடுவார் என்று சர்வ தேச சக்தி ஒன்று தீர்மானிப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால், அதை அவர்கள் வாக்குப் பதிவு எந்திர மோசடி மூலம் மட்டுமே செய்தால் அனைவருக்கும் சந்தேகம் வரும். எனவே, அந்த மோசடியோடு கூடவே மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு ஏற்பட்டதுபோல் ஒரு மாயத்தோற்றத்தை ஊடகங்களின் மூலம் உருவாக்கிவிட்டால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது.

இன்றைய தேர்தலில் முன்னிலைக்கு வந்திருக்கும் இரண்டு அம்சங்களை எடுத்துக்கொண்டு சர்வ தேச சக்திகளுக்கும் அவற்றுக்கும் இடையிலான தொடர்பைப் பார்ப்போம். முதலாவதாக மக்கள் நலக் கூட்டணி, மன்னிக்கவும் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி. இரண்டாவது விஷயம் தமிழ் தேசிய சித்தாந்தம்.

அதிமுகவும் திமுகவுமே சர்வ தேச சக்திகளுக்கு இணக்கமாக நடக்ககூடிய கட்சிகள்தானே. பின் எதற்காக வேறொரு கட்சியை அதுவும் பலரைக் கொண்ட கூட்டணியை முன்னிலைப்படுத்த வேண்டும். இந்த இடத்தில்தான் ஒரு முக்கிய விஷயத்தைப் பார்க்க வேண்டும். அந்நிய பொருளாதார சக்திகளுக்கு ஊழலற்ற நிர்வாகம் மிகவும் அவசியம். அவர்கள் ஒரு கம்பெனியை ஆரம்பிக்க விரும்பினால் ஒரு சில மாதங்களில் அனுமதி கிடைத்து பிற அனைத்து சலுகைகள் வசதிகள் அனைத்தும் செய்துகொடுக்கப் பட்டாக வேண்டும். அதிமுக அரசில் அதன் ஊழல் மட்டுமல்ல அதன் தலைமையின் செயலற்ற நிலையினாலும் பெரிதும் எரிச்சலூட்டுவதாக ஆகிவிட்டது. திமுகவை மீண்டும் அரியணையில் ஏற்றலாம்தான்; ஆனால், அதைவிடப் பெரியதொரு இலக்கும் இருக்கிறது. அதுதான் இந்திய உடைப்பு.

உலகின் முப்பெரும் சக்திகளான அமெரிக்க ஐரோப்பிய கிறிஸ்தவ சக்திகள், உலகளாவிய இஸ்லாமிய சக்திகள், கம்யூனிஸம் ஆகிய மூன்றுமே இந்து இந்தியாவை விழுங்கக் காத்திருக்கின்றன. ஒரேயடியாக முழுங்க முடியாதென்றால் ஓரங்களில் இருந்து பிய்த்துத் தின்னு என்ற வழிமுறைக்கு ஏற்ப ஏற்கெனவே இந்தியாவின் எல்லைப் புற மாநிலங்களில் தீவிரவாதக் குழுக்களை வளர்த்தெடுத்து வந்திருக்கின்றன. காஷ்மீர் முதலான வடக்குப் பகுதிகளில் பாகிஸ்தான் மூலமாக இஸ்லாமும் வடகிழக்குப் பகுதிகளில் அமெரிக்க மிஷனரிகளும் பிஹார், ஒரிஸா, ஆந்திரா போன்ற பகுதிகளில் மாவோயிஸ சக்திகளும் அழுத்தமாகக் கத்தியைச் செருகி இந்தியாவை ரத்தம் கசிய வைத்துவருகின்றன. ஒப்பீட்டளவில் இன்றுவரை இப்படியாக தாக்குதல்களுக்கு ஆளாகாமல் தென் பகுதி தப்பி விட்டிருந்தது. ஆனால்,

இப்போது தமிழகத்திலும் இந்திய விரோத  எண்ணங்களைத் தூண்டிவிட இஸ்லாமிய, கிறிஸ்தவ, கம்யூனிஸ சக்திகள் மூன்றுமே திட்டமிட்டிருக்கின்றன. அதற்குத் தோதாக இந்தியாவின் தென் அண்டை நாடான இலங்கையின் பிரச்னை தேடாமலேயே கிடைத்த செல்வமாக வந்து சேர்ந்திருக்கிறது. ஏற்கெனவே இலங்கையின் உள்நாட்டுப் போரில் இந்தியாவைக் குற்றவாளியாக்கும் பணியை சர்வ தேசமும் இலங்கையும் கூட்டாகச் செய்து முடித்திருந்தன. இப்போது அதை இன்னும் கொஞ்சம் நீட்டித்து தமிழகத்திலும் அதிருப்தியையும் கலவரத்தையும் தூண்ட முன்வந்திருக்கின்றன.

இலங்கையில் சிங்கள அரசு முழு வெற்றி பெற்றுவிட்டிருக்கும் நிலையில் இனி ஒருநாளும் தமிழ் பிரிவினைவாதம் இலங்கையில் தலைதூக்க விடக்கூடாது என்ற தொலைதூர இலக்குடன் செயல்படத் தொடங்கியிருக்கிறது. இலங்கையில் தமிழர் சக்தி பலவீனப்பட்டால் மட்டும் போதாது. இந்தியாவில் அது வலுவாக இருந்தால் என்றைக்கு வேண்டுமென்றாலும் இந்தியா இலங்கைக்கு எதிராக தமிழர் நலன் சார்ந்து செயல்பட்டுவிடக்கூடும். அதைத் தடுக்க ஒரே வழி இந்திய மைய அரசுக்கும் தமிழக மாநில அரசுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தவேண்டும். தமிழர்களுக்கு பிரிவினைக் கோஷங்களைக் கற்றுத் தருவதென்பது தாசிக் குட்டிக்கு மயக்கக் கற்றுத் தருவதைப் போன்றது. இலங்கையில் சிங்கள அரசு முழு வலிமை பெற்றதைத் தொடர்ந்து தமிழகத்தில் இந்திய எதிர்ப்பு குரல்கள் வலுவடைவதை வைத்து ஒருவர் இரண்டுக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்ள முடியும்.

இயல்பான தமிழர் நலன் சார்ந்த இயக்கமாக இருந்திருந்தால் இந்திய கூட்டமைப்பை தமிழர் நலன் சார்ந்து வழிகாட்டி இலங்கையை வழிக்குக் கொண்டுவரத்தான் முயன்றிருக்கும். அதற்கு இந்திய மைய அரசுடன் நட்புறவை பலப்படுத்திக்கொள்வதுதான் எளிய இயல்பான வழியாக இருந்திருக்கும்.  இன்று தமிழகத்தில் ஒலிக்கும் புலி ஆதரவு-தமிழ் தேசியக் குரல்கள் இந்திய எதிர்பைப் பிரதானமாக வைத்திருப்பதில் இருந்து அவர்கள் சிங்கள எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆடும் குரங்குகளாகவே ஆகிவிட்டிருப்பது தெரிகிறது. இன்றைய தமிழ் தேசியவாதிகளின் ஆவேசக் கை உயர்த்தலுக்குப் பின்னால் ராஜ பக்சேவின் மெல்லிய புன்முறுவலே கேட்கிறது. சர்வ தேச சதியின் சாதுரியம் இதுதான். கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அப்படியே கண்டுபிடித்தாலும் மற்றவரை நம்பவைப்பது அதை விடக் கடினம்.

ஆனால், நேரடியாக இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை பெரு வெற்றி பெற வைத்து ஆட்சியைப் பிடிப்பதாகக் காட்டிவிட முடியாது. அது மிகுந்த சந்தேகத்தை உருவாக்கிவிடும். மக்கள் மத்தியில் தமிழ் தேசிய உணர்வும்  இன்னும் வரவில்லை. குறிப்பாக இந்திய விரோத உணர்வு வந்திருக்கவே இல்லை. எனவே மெள்ள மெள்ளத்தான் காய் நகர்த்த வேண்டியிருக்கும். மக்கள் நலக்கூட்டணி நல்ல இடைக்கால முயற்சி. அதில் இருக்கும் வைகோ தீவிர தமிழ் தேசியவாதி. எனவே, இந்திய எதிர்ப்பாளர். கம்யூனிஸ்ட்களும் இந்திய எதிர்ப்பு பின்னணி உடையவர்களே. தலித் அரசியல் கட்சிகள்  இத்தனை காலம் கிறிஸ்தவ பின்னூட்டம் இருந்த நிலையிலும்  வெளிப்படையாக இந்திய விரோதம் பாராட்டியதில்லை.  ஆனால், சமீப காலமாக இஸ்லாமிய அடிப்படைவாதமும் இந்திய விரோதமும் தலித் சாயம் பூசிக்கொண்டு முன்னால் வரத் தொடங்கியிருக்கின்றன. அதன் தமிழகத்து வெர்ஷனாக திருமா மக்கள் நலக்கூட்டணியில் முன்னணி இடத்தில் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

கடந்த தேர்தலைத் தொடர்ந்து திமுகவால் ஓரங்கட்டப்பட்ட தலித் கட்சியானது பாமகவாலும் கட்டம் கட்டப்பட்ட நிலையில் ஒருவித அரசியல் அநாதை நிலையில்தான் இருந்தது. இந்த நிலையில்தான் அரபு நாடுகளுக்கான திருமாவளவனின் சுற்றுப் பயணங்கள் அவரை மாற்று அணியின் தலைவராக முன்னிலைப்படுத்தியிருக்கின்றன. மக்கள் நலக் கூட்டணியில் முதலில் சேர்ந்து இருந்த முஸ்லிம் கட்சியானது மெள்ள விலகிக் கொண்டது.  நாங்கள் அந்தக் கூட்டணியில் இருந்தால் தீவிரவாதக் கட்சி என்று எளிதில் உங்களை ஓரங்கட்டிவிடுவார்கள். எனவே, நாங்கள் வெளியேறிச் செல்கிறோம். ஆனால், எங்கள் கொள்கையை நீங்கள் முன்னெடுத்துச் செல்லுங்கள் என்று பேசி முடிவெடுத்திருக்கிறார்கள்.  

இந்திய விரோத, இஸ்லாமிய அடிப்படைவாத ஆதரவு நிலையை மறைக்கும் போர்வையாகவே விஜயகாந்துடனான கூட்டு முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தேசியவாதக் கட்சியான பி.ஜே.பி.யைத் தனிமைப்படுத்தும் பணியும் நடந்தேறியிருக்கிறது.

இப்படியாகக் கொள்கை சார்ந்த நபர்களின் ஒருங்கிணைப்பு நீங்கலாக பொது அரசியல் தளத்தில் இந்தக் கருத்தாக்கத்தைக் கொண்டுசெல்லும் பணிகளும் கூடவே நடந்தாகவேண்டும். இதில்தான் ஹனி டிராப்பில் சிக்கவைக்கப்படும் அரசியல் தலைவர்களின் பங்கு வருகிறது. அப்படிப்பட்ட ஒருவரை இந்திய தேசியத்துக்கு எதிராகப் பேச வைப்பது மிகவும் எளிது. ஒரு நபரின் ஒரு இரவைக் கைப்பற்ற முடிந்தால் அவருடைய அதற்குப் பிந்தைய அத்தனை பகல்களையும் நீங்கள் வென்றுவிட முடியும். அதிலும் அந்த தலைவர் அல்லது ஊடக நிறுவனத் தலைவர் ஓரினச் சேர்க்கை போன்றவற்றில் ஆர்வம் உடையவராக இருந்தால் அவரை எந்த எல்லைக்கும் கொண்டு செல்வது எளிது. அவரைப் பொறுத்தவரையில்  ஓரினச் சேர்க்கையாளராக பொதுவெளியில் அம்பலமாவதைவிட சாதி வெறியராக அடையாளம் காணப்படுவது அதைவிட மேலானது. இந்திய தேச விரோதம் பேசுவது அதைவிட மேலானது.

அதுபோல் ஊழல் வழக்கில் சிக்கியவரையும் இதுபோல் எதை வேண்டுமானாலும் செய்யவைக்க முடியும். எனவே, தமிழ் தேசியமும் இந்திய விரோதமும் தமிழ் மக்கள் மத்தியில் வேரூன்ற வேண்டுமென்றால் ஒருபக்கம் நாம் தமிழர் போல் வீர முழக்கங்கள் போட வைக்க வேண்டும். இதே கொள்கையுடையவர்களை வேறு ஒரு போர்வையில் இணைக்கவேண்டும் (கே.ம.ந.கூ). கூடவே பிற அரசியல் தலைவர்களை ஊழல் வலையில் (அதிமுக., திமுக) சிக்கவைக்கவேண்டும். இந்த மூன்றையும் தெளிவாகச் செய்து முடித்தால் பாதி வெற்றி பெற்றதுபோல்தான்.

ஆனால், மக்கள் ஆதரவு இல்லாமல் எந்தக் கருத்தியலையும் நீண்ட நாட்களுக்கு நிலைபெற வைக்கமுடியாது. என்னதான் காவிரி விஷயத்தில் மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது... முல்லைப் பெரியாரில் மோசம் செய்கிறது... அணு உலை, கெயில் திட்டம் கொண்டுவந்து தமிழர்களைக் கொல்லப் பார்க்கிறது. அப்பாவித் தமிழர்களைத் தூக்கில் போடத் துடிக்கிறது என்றல்லாம் சொன்னாலும் மக்கள் மத்தியில் இந்திய தேச வெறுப்பாக அது உருத்திரளவே இல்லை. எனவே, அதிரடியாக ஏதாவது செய்தால்தான் முடியும். வட கிழக்கு மாநிலத்தில் பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்த பழங்குடிகள் மீது ராணுவ உடையில் வந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி அனைவரையும் கொன்றுவிட்டார்கள். அன்றிலிருந்து இந்திய ராணுவத்தின் மீதும் இந்திய அரசின் மீதும் பழங்குடிகளுக்குப் பெரும் ஆத்திரம் வெகு எளிதில் உருவாகிவிட்டது.

தமிழகத்தில் நாம் தமிழர் மூலம் வலைதளங்களிலும் சொற்ப எண்ணிக்கையில் பொதுமக்கள் மனதிலும் இந்திய வெறுப்பு உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் ஏதேனும் பிரச்னையில் மத்திய அதிரடிப் படையோ ராணுவமோ ஏதேனும் அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டாலோ அல்லது அவர்கள் ஈடுபட்டதுபோல் வேடமிட்டுச் செய்ய முடிந்தாலோ ரத்த ஊற்றின் கல் கிளர்த்தப்பட்டுவிடும். அதன் பிறகு பஞ்சாப் காலிஸ்தான்போல் சுமார் பத்திருபது வருடங்கள் தமிழகம் ரத்தக்காடாக ஆகும். இந்தியப் பொருளாதாரமும் வளர்ச்சியும் மேலும் முடக்கப்படும். தமிழ் தேசியக் கனவு கொண்டவர்களுக்கும் அவர்களைப் பின்னின்று இயக்குபவர்களைப் போலவே தனி நாடு சாத்தியமில்லை என்பது தெரியும். எனினும் முடிந்தவரை இந்தியாவின் வளார்ச்சியை முடக்கிய திருப்தி கிடைக்கும். அதுவே பெரிய வெற்றிதான் அவர்களுக்கு.

அமெரிக்காவுக்கு இந்திய சந்தை தேவை. எனவே இந்தியாவில் சண்டைகள் நடப்பதை அது விரும்பாது என்று சிலர் சொல்லக்கூடும். ஒருவகையில் அது உண்மைதான். ஆனால், அமெரிக்காவின் எந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்தியாவைப் பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை ஒருவர் யோசித்துப் பார்க்கவேண்டும். கொக்க கோலாவுக்கும் கெய்லுக்கும் சோப் கம்பெனிக்கும் கார் கம்பெனிக்கும் கொடுத்திருந்தால் அவர்கள் சுரண்டிக் கொழுக்க அமைதியான சூழல் தேவை என்பதால் விட்டுவைக்கக்கூடும். ஒருவேளை காஷ்மீர் போல் வட கிழக்கு மாநிலங்கள் போல் ஆயுத உற்பத்தி கம்பெனிக்கு இந்தியாவின் தென் பகுதியை ஒப்படைத்திருந்தால்? தமிழ் தேசிய முழக்கங்கள் எல்லாமே பிராபாகரனே எமது தலைவர் என்று முழங்கிக் கொண்டுதானே தொடங்குகின்றன. அப்படியானால், இங்கு அமைதி நிலவவா அந்நிய சக்திகள் திட்டமிட்டிருக்கும்?

இந்த அரசியல் கணக்குகளின் பின்னணியில்தான் நாம் தமிழர் எழுச்சியும் மக்கள் நலக்கூட்டணியின் முன்னிலையும் தேர்தல் கேம்பெய்னர்களால் அவர்களுடைய ஊடகங்களின் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தச் சம்பவங்களைத் திரைப்படமாக எடுக்கும்போது கூடுதல் டிராமாக்களைச் சாத்தியப்படுத்த முடியும். இந்திய தேசியக் கொடியை எரித்த நபரின் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். முதல் நாளில் அவன் மன்னிப்புக் கேட்டதாகவும் விளம்பரத்துக்காகச் செய்ததாகவும் அரசு தரப்பு செய்தி வெளியானது. அடுத்த நாளில் அவன் கையில் பெரிய கட்டுடன் காட்சியளித்தான். இந்திய வல்லாதிக்கம் அவன் கையை உடைத்ததாக அடுத்தகட்ட காட்சி எழுதப்பட்டிருந்தது. மிக நல்ல திரைக்கதை ட்விஸ்ட் அது. சென்னை வெள்ளத்தின்போது அவன் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டபோதே அந்தத் திரைக்கதை தொடங்கிவிட்டது. திரைப்படத்தில் இதை இன்னும் டிரமடைஸ் செய்யலாம்.

ஒரு தலைவர் மக்கள் கூட்டத்தில் பேராவேசத்துடன் இந்திய எதிர்ப்பு முழக்கங்கள் செய்வதாகவும் மறுநாள் அவருடைய வீட்டில் அல்லது வாகனத்தில் குண்டு வைக்கப்படுவதாகவும் காட்டலாம். இந்திய ரா-வின் கோழைத்தனமான நடவடிக்கை என்று அடுத்த கூட்டத்தில் அந்தத் தலைவர் முழங்குவதாகக் காட்டலாம். கடலோர கிராமத்தில் ஏதேனும் மத்திய காவல் படையினருடன் வம்பிழுத்து அவர் அடிப்பதை அல்லது அவர்களில் யாரேனும் அராஜகமாகச் சுட்டுக் கொல்வதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மீனம்பாக்கத்தில் ஒரு ராணுவ அதிகாரி மாங்காய் பறிக்க வந்த சிறுவனைச் சுட்டுக் கொன்றுவிட்டார். அவர் தமிழராக இருந்ததால் அப்படியே அமுக்கப்பட்டுவிட்டது. ஒருவேளை அவர் வட இந்தியராக இருந்திருந்தால் ஒரு காட்டு காட்டியிருக்கலாம். மயிலாப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் ஏராளமான குடிமகன்கள் நிழல் தேடிப் படுத்திருப்பதுண்டு. மத்திய ரயில்வே காவல்துறையைச் சேர்ந்த வட இந்திய காவலர்கள் அவர்களை அடித்து விரட்டுவதும் உண்டு. இதையே கொஞ்சம் மாற்றினால் போதும். அந்தத் தமிழ்க் குடிமகனை  இனமானப் போராளியாக ஆக்கி வட இந்தியக் காவலரை இந்திய வல்லாதிக்க ஓநாயாகச் சித்திரித்தால் 10 நிமிட விறுவிறு காட்சிகள் கிடைத்துவிடும்.  இப்படியான நிகழ்வுகளை தேர்தல் கேம்பெய்ன் ஆலோசகர்கள் உருவாக்கி அல்லது தானாக உருவாகிறவற்றை மிகைப்படுத்தி தமிழகத்தில் இந்திய விரோதத்தை காலூன்ற வைப்பதாக ஒரு படம் எடுக்கலாம். பெருச்சாளியைவிட அது விறுவிறுப்பானதாக விழிப்பு உணர்வை ஊட்டக்கூடியதாக இருக்கும்.

அப்படியாக, ஒரு அடிப்படைவாதத் தலைவர் அரியணை ஏறுவது எப்படி என்று அந்தப் படம் எழுதப்படலாம். ஆட்சியில் இருக்கும் கட்சி ஊழல் முத்திரை குத்தப்பட்டு பலவீனப்படுத்தப்படுகிறது. ஹனி டிராப்பில் சிக்க வைக்கப்பட்ட ஊடக முதலாளி அடிப்படைவாத கட்சிக்கு முழு அளவில் விளம்பரம் தருகிறார். பிற கட்சிகளில் உள்ள அடிப்படைவாத சக்திகள் அவருடைய ஊடகத்தினால் முன்னிலைப் படுத்தப்படுகிறார்கள். ஊருக்குள் ஆதிக்க சக்தியின் போர்வையில் அராஜகங்கள் நடத்தப்படுகின்றன. தனி நபர்கள் செய்யும் தவறுகள் ஆதிக்க சக்தியின் தவறாக மிகைப்படுத்தப்படுகின்றன. ஒரு இடத்தில் கொலை நடந்ததும் ஊரே  சுடுகாடாக ஆகிவிட்டதுபோல் விருது வாங்கிய எழுத்தாளர்கள் பொங்குகிறார்கள்.

அடிப்படைவாதத் தலைவர் ஒரு கூட்டத்தின் போது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்படுகிறார். அல்லது அந்தக் கட்சியின் எளிய தொண்டர் கொல்லப்படுகிறார் (கல்லூரி மாணவராக இருந்தால் கூடுதல் மைலேஜ் கிடைக்கும்). அந்தக் கட்சிக்கு அனுதாப அலை பெருகுகிறது. இவற்றோடு வாக்குப் பதிவு எந்திர மோசடியும் சேர அடிப்படைவாத தலைவரே வெற்றி பெறுகிறார். அல்லது தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சியே தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்கிறது. ஆட்சி அமைக்க அடிப்படைவாத கட்சியின் ஆதரவு தேவைப்படுகிறது. ஏற்கெனவே ஊழலில் சிக்கிய அவர் இவர்களின் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கிறார். அப்படியாக அடிப்படைவாதக் கட்சி தோற்றாலும்  அதன் கருத்தியல் வெற்றி பெறுகிறது என்பதாக அந்தப் படத்தை எடுக்கலாம்.  இந்தப் படம் ஒரு புனைவாக மட்டுமே எடுக்கப்பட வேண்டுமென்றால் உடனே எடுக்கப்பட்டாக வேண்டியிருக்கும். இல்லையென்றால் வரலாற்று ஆவணப்படமாகிவிடும் அபாயம் இருக்கிறது! 

Sunday, 20 March 2016

உங்களில் பாவம் செய்யாதவர்கள் முதலில் கல்லெறியுங்கள்


உடுமலை ஆணவக் கொலை மட்டுமல்ல, சேஷபுரத் தேர் எரிப்பு, தருமபுரி-நாயக்கன் கொட்டாய் வன்முறை என எதை எடுத்துக்கொண்டாலும் அவை எல்லாமே இரண்டு அடுக்குகளைக் கொண்டவை. இரண்டாவது அடுக்கு மிகவும் கொடூரமானது என்பதால் முதலாவதையும் சேர்த்தே எதிர்ப்பதுதான் பொதுவழக்காக இருக்கிறது. எளிதில் புரியும்படிச் சொல்வதானால், கொல்லப்படும் மானின் நியாயத்தை மட்டுமே பேசுவதால் வேட்டையாடியாகவேண்டிய புலியின் நியாயம் ஓரங்கட்டப்பட்டுவிடுகிறது. நாகரிக நவீன மனிதன் துரத்திச் சென்று வேட்டையாடுவதைத் தவறு என்று சொல்லலாம்; ஆனால், புலியின் மாமிசப் பசியே தவறு என்று சொல்லக் கூடாது. வேறன்ன, புலியின் இடத்தில் மான் இருந்திருந்தால் அதுவும் இதைத்தானே செய்திருக்கும்.
பெற்றோருக்குப் பிடிக்காதநிலையில், சாதி கடந்து காதலிப்பது தவறு என்று சொல்வதனாலேயே இந்தப் படுகொலையை ஆதரிப்பதாக ஆகிவிடாது. வேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்ற ஒரு பெண்ணை காவலர் பளார் பளார் என்று அடிப்பதாக வைத்துக்கொள்வோம். வேகமாக ஓட்டிச் சென்றது தவறுதான் என்று சொன்னால் அடித்ததை நியாயப்படுத்துவதாக ஆகாது. அடித்தது தவறு என்பதால் வேகமாக ஓட்டிச் சென்றது சரி என்றும் ஆகிவிடாது. இரண்டும் தனித்தனி அடுக்குகள்.
ஒரு பெரிய தவறும் சிறிய தவறும் நடந்திருக்கும்போது சிறிய தவறைப் பேசக்கூடாது என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. அதிலும் சிறிய தவறுதான் பெரிய தவறுக்கான காரணமாக இருக்கும் பட்சத்தில் அதைப் பேசியே ஆகவேண்டும். எனவே, இந்தக் கொலையை முன்வைத்து சில வார்த்தைகளும் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்து கொள்வது பற்றிச் சில விஷயங்களும் சொல்லவிரும்புகிறேன்.
அரசு செய்ய வேண்டியவை:
ஆணவக் கொலையாளிகளுக்கு முழு ஆயுள் தண்டனை தரவேண்டும். நன்னடத்தை, தலைவர்கள் பிறந்தநாள் என எதைக் காரணம் காட்டியும் அவர்களை விடுதலை செய்யவே கூடாது.
தொட்டில் குழந்தை திட்டத்தைப் போல் சாதி கடந்த திருமணம் செய்து கொள்பவர்களை அரசு தத்தெடுத்துக்கொள்ளவேண்டும்.
சாதி கடந்த திருமணத்தைச் செய்பவர்களுக்கு நீதிபதிகள் குடியிருப்பு, காவலர் குடியிருப்பு போன்ற இடங்களில் அடைக்கலம் தரவேண்டும். குறைந்த வாடகையில் வீடு தரவேண்டும்.
அரசு, தனியார் நிறுவனங்கள் குறிப்பாக ஊடகங்கள் அவர்களுக்கு வேலைகளில் முன்னுரிமை தரவேண்டும்.
தீவிரவாதப் பாதையில் சென்றவர்கள் தமது தவறை உணர்ந்துதிருந்தி ஆயுதங்களை ஒப்படைத்தால் வேலை கொடுத்து சன்மானம் கொடுத்து மைய நீரோட்டத்தில் கலக்க உதவுவதுபோல் சாதி கடந்து திருமணம் செய்துகொள்பவர்களை சமத்துவ சமுதாயத்தைப் படைக்க முன் வந்த போராளிகளாக மதித்து இந்த உதவிகளைச் செய்துதரவேண்டும். உதவிகள் அதேதான் என்றலும் இந்த மனோபாவம் மிகவும் அவசியம். இது மறைமுகக் கையூட்டு அல்ல. நேர்மறையான பரிசு.
*
இனிமேல் இது போன்றவை நடக்காமல் தடுக்க என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம். அதற்கு முன் இந்த இடத்தில் வன்முறை நிகழ்வைக் கண்டித்துப் பேசுபவர்கள் எந்த அடிப்படையில் அப்படிப் பேசுகிறார்கள் என்பதை எடுத்துக்கொள்கிறேன். முதலாவதாக, இந்தச் செயல் மிகவும் கொடூரமானது என்று அவர்கள் நம்புவது காரணமாக இருக்கலாம்; இரண்டாவது காரணம் இது அவர்களுடைய  சிற்றறிவுக்கு ஏற்ப பிராமண, இந்து மதத்தைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த உதவுகிறது. எனவே, வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்ற அவசரம் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஒருவர் முதலாவது காரணத்தினால் அப்படிச் சொல்கிறாரா... இரண்டாவது காரணத்தினால் அப்படிச் சொல்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள இதுபோன்ற பிற வன்முறை நிகழ்வுகளில் அவர் என்ன சொல்கிறார் என்பதையும் சேர்த்துப் பார்த்தால் போதும்.
இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழக, கேரளாவில் படுகொலை செய்யப்படும் இந்துத்துவர்கள் பற்றி அவர் என்ன சொல்கிறார்?
போபால் போன்ற பெரும் சோக நிகழ்வுகளில் அவர் பெருந்தொழில் ஆதரவாளராக இருக்கிறாரா, கொல்லப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறாரா?
அணு உலை போன்ற விஷயங்களில் பாதிக்கப்படப் போகும் மக்களுக்கு ஆதரவாகப் பேசுகிறாரா... அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகப் பேசுகிறாரா... அவர்கள் நஷ்ட ஈடுகூடத் தரமாட்டேன் என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்கிறாரா?
தருமபுரி பஸ் எரிப்பு பற்றி என்ன சொல்கிறார்? தினகரன் அலுவலக எரிப்பு பற்றி என்ன சொல்கிறார்?
என்னுடைய அமைதி மார்க்கத்தில் பிறக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காகக் கொன்று குவிக்கும் .எஸ்..எஸ். போன்ற இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்கள் குறித்து என்ன சொல்கிறார்?
இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் தேசத்தையே நிர்மூலமாக்கிய அமெரிக்க மேலாதிக்க வெறியை எப்படிப் பார்க்கிறார்?
கோத்ரா எரிப்பைத் தொடர்ந்து நடந்த வன்முறை வெறியாட்டத்தைக் குறித்து என்ன சொல்கிறார்?
பொருளாதாரச் சுரண்டல்வாதிகள், மதத் தீவிரவாதிகள், ஏகாதிபத்திய ரவுடிகள் இவர்களையெல்லாம்விட சாதியக் குண்டர்களே முதலில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்று சொல்கிறாரா?
மேலே சொல்லப்பட்டவற்றில் அவரவர் அரசியல் சார்ந்து சிலவற்றைக் கண்டிப்பார்கள். மற்றவற்றை விட்டுவிடுவார்கள். அப்படியானவர்களுடைய விமர்சனத்தை வெற்று அரசியல்   வாய்ச்சவடால் என்று புறந்தள்ளுவதே சரி. மேலும் அனைத்தையும் கண்டிக்கும் ஒருவர் அரிதாக நம் முன் வந்தால், அந்தக் கண்டிப்பை எப்படி நீட்டிக்கிறார் என்பதையும் பார்க்கவேண்டும். அதாவது, சாதிய வன்முறைக்காக இந்து வாழ்க்கை முறையின் அனைத்து பிற அம்சங்களையும் நிராகரிக்கும் ஒருவர் அமெரிக்க அத்துமீறல்களுக்காக அமெரிக்காவின் பிற அனைத்து மதிப்பீடுகளையும் நிராகரிக்கிறாரா என்று பார்க்கவேண்டும். அமெரிக்க, மேற்கத்திய விஷயங்களில் நிகழ்வுகளைத் தனித்தனியாகப் பார்க்கும் நிதானம் வாய்க்கப் பெற்றிருக்கும் ஒருவர் இந்துத்துவத்தை மட்டும் ஒரேயடியாக நிராகரிக்கிறார் என்றால் அவர் எளிய மக்களின் வேதனையைப் பார்த்து அல்ல தனது அரசியல் சார்ந்தே இந்த நிகழ்வை அணுகிறார் என்றே அர்த்தம்.
*
சாதி ஆணவக் கொலை பற்றிப் பேசும்போது அதை மட்டுமே பேசினால் போதுமே என்ற வாதம் செல்லுபடியாகாது. ஓநாய்களும் டைனசர்களும் வலம் வரும் ஊரில் எப்போதாவது சித்தம் கலங்கும் நாயின் வெறித்தனத்தைப் பற்றி மட்டுமே பேசிப் பலனில்லை. எனவே, இந்த சாதி ஆணவக் கொலையோடு சேர்த்து வேறு சில விஷயங்களையும் பார்க்கவேண்டும்.
இந்த வன்முறையில் ஈடுபடுபவர்கள், சொத்துப் பிரச்னை, நிலத் தகராறு, நண்பர்களிடையே தகராறு, பங்காளிப் பிரச்னை என பலவற்றில் சொந்த சாதியினருக்குள்ளும் இதே வன்முறையைப் பிரயோகிப்பவர்களாகவே இருக்கிறார்கள். உடுமலைப் பேட்டையில் வீசப்பட்ட அருவாளுக்கு சாதிக் கைப்பிடி இருந்தது உண்மைதான். ஆனால், அந்த அருவாளுக்கு வேறு பல கைப்பிடிகளும் உண்டு. எனவே பிரச்னை கைப்பிடியில் இல்லை. அருவாளில் இருக்கிறது. அதைப் பிடிக்கும் கையில் இருக்கிறது.
முந்தைய காலத்தில் இத்தகைய சாதி கடந்த திருமணங்களை எப்படி எதிர்கொண்டார்கள்? குழந்தைத் திருமணமும் பெண் சிசு கொலையும் கலப்புத் திருமணங்களைத் தடுப்பதற்கான அவர்களுடைய வழிமுறைகளாக இருந்தனவா? ஏனென்றால், இன்று ஆணவக் கொலைகளில் மிகுதியாக ஈடுபடும் இடைநிலைச்சாதிகள்தான்  முந்தைய காலங்களில் பெண் சிசு கொலையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என்ற நடுங்கவைக்கும் உண்மை வேறொரு விஷயத்தைச் சொல்லாமல் சொல்கிறது.
தமிழகத்தில் நடக்கும் ஆணவக்கொலைகள் .வே.ரா. மற்றும் திராவிட இயக்கங்களின் தோல்வி மட்டுமே அல்ல. நாம் தமிழர் என்ற உணர்வுகூட அவர்களைத் தடுத்திருக்கவில்லை. எனவே மொழியின் தோல்வியும்கூட. அதுபோல் இந்து மதத்தின் தோல்வியாகவும் இதைச் சொல்லமுடியும். ஆனால், அதைவிட முற்போக்கான இந்துத்துவ சக்திகளின் தோல்வியாக இதைச் சொல்ல முடியாது. ஏனென்றால், தமிழகத்தில்தான் இந்துத்துவ சக்திகளை வேரூன்ற விடவே இல்லையே. அவை வேரூன்றியிருந்தால் மத மோதல் வேண்டுமானால் நிகழ்ந்திருக்கலாமே தவிர நிச்சயம் சாதிய வன்முறை இந்த அளவுக்கு நடக்க வாய்ப்பே இல்லை. சாதி வன்முறைகள், ஒடுக்குதல் இவையெல்லாம் மறைய இந்துத்துவம் வரவேண்டும். அதே நேரம் அது மத விரோதத்தை முன்னெடுப்பதாக ஆகிவிடக்கூடாது. தமிழகத்துக்கு அப்படியான இந்துத்துவமே மிகவும் அவசியம்.  Is it  hot ice Jijis? 
அடுத்ததாக, இந்த மேலாதிக்க உணர்வு எல்லா சாதியினருக்குள்ளும் இருக்கிறது. எல்லா மதத்தினருக்குள்ளும் எல்லா நாட்டினருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது. பாகிஸ்தானில் ஷியா சன்னி பிரிவினருக்கு இடையே நடக்கும் ஆணவக் கொலைகள் இதைவிட மிக மிக அதிகம்பிற மதத்தினரை அவர்கள் பிற மதத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காகவே கொன்று குவிக்கும் இஸ்லாமிய வெறியோடு ஒப்பிட்டால் சாதி வெறி எவ்வளவோ மேல்.
இந்திய அளவில் பிராமணர்களிடமும் உலக அளவில் கிறிஸ்தவர்களிடமும் இந்த ஆணவக் கொலைகள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. ஆனால், இதை சமத்துவ மனோபாவமாக எடுத்துக்கொள்ளமுடியாது. எங்கள் வீட்டுப் பெண்கள் வேறு சாதி, மத ஆண்களைத் திருமணம் செய்துகொண்டால் நாங்கள் கொல்லவெல்லாம் மாட்டோம் என்று அவர்கள் சொல்லும் தளுக்கு வார்த்தைகளுக்குப் பின்னால் இருப்பது வெறும் தந்திரம் மட்டுமே. வீட்டை விட்டு வெளிய போனா நான் ஒண்ணுமே சொல்லமாட்டேன் என்று அவர்கள் சொல்வதற்கான காரணம் அனைத்து வாசல்களையும் பூட்டிவிட்டிருக்கிறோம் என்ற தைரியம்தான். இயல்பாகவே அவர்களுக்கும் பிறருக்கும் இடையிலான சமூக, பொருளாதார, நிற இடைவெளிகளும் அவர்களுடைய வேலையைச் சுலபமாக்கிவிட்டிருக்கின்றன. எனவே, இவர்களுடைய கருணை வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் அப்படி வேலி தாண்டிச் செல்பவர்களை ஒன்று தலை முழுகுவார்கள்; அல்லது வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொள்வார்கள். தேடிச் சென்று வெட்டுவதை விட இது மேலானதுதான். ஆனால், அது என்றைக்குமே போதுமான மாற்றம் அல்ல. எந்த விஷயத்துக்குமே அருவாளைத் தூக்காத சாதியினர் இந்த விஷயத்துக்கும் அருவாளைத் தூக்கவில்லை என்பதை அப்படியொன்றும் ஆரோக்கியமான மனநிலையாக ஏற்றுக்கொள்ளமுடியாது.
இந்தப் பிரச்னையில் மிகவும் முக்கியமான விடுபடலாக எனக்குத் தோன்றுவது ஆதிக்க சாதி மனிதரின் மேலாதிக்க உணர்வை நாம் மதிக்கத் தவறுவதுதான். புலிக்குப் பசியே இருக்கக்கூடாது என்று சொல்வதைப் போன்றது இது. துடியான சாமிகளுக்கு சுருட்டும், சாராயமும், மாமிசமும் கொடுத்து சாந்தப்படுத்துவதுபோல் மேல் சாதியினரின் ஆதிக்க உணர்வை அவ்வப்போது சாந்தப்படுத்துவதே நல்லது. தலித்கள் கல்வி பெறுவதை, வேலைகளில் முன்னுரிமை பெறுவதை, பொருளாதார வளர்ச்சி பெறுவதை எல்லாம் ஏற்றுக்கொண்டுவிட்டிருக்கும் இடைநிலை சாதியினரை  அவர்களுடைய ஆதிக்க உணர்வை மதித்து கலப்புத் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து சாந்தப்படுத்துவதே நல்லது. இதை நான் வீச்சருவாளை வீசிய முறைப்பையன் மைக்கேலின் தோளில் கைபோட்டுக்கொண்டு அல்ல; ஸ்ட்ரெச்சரில் ரத்தம் சொட்டப் படுத்துக் கிடந்தபடி, ‘ஐய்யோ தண்ணி கொடுங்க... மூச்சுமுட்டுது...’ என்று கதறிய காதலன் சங்கரின் கையைப் பிடித்தபடிதான் சொல்கிறேன்.
மேல் சாதிக்காரரின் ஆதிக்க உணர்வை ஒருவர் புரிந்துகொள்ள மறுப்பதற்கு முக்கியமான காரணம் அது இந்து மத, பிராமண கண்டுபிடிப்பு என்று முத்திரை குத்தப்பட்டிருப்பதுதான். உண்மையில் அதன் வேர்கள் இந்து மதத்திலோ பிராமண வழிகாட்டலிலோ நிச்சயம் இல்லை. இடைநிலைச் சாதிக்காரரின் ரத்தத்தில் அது ஊறியிருக்கிறது.
மேலும் முன்பே சொன்னதுபோல் அது அனைவரிடமும் இருக்கிறது. கோத்ரா எரிப்பைத் தொடர்ந்து குஜராத் வன்முறையில் ஈடுபட்ட இந்துத்துவர்களிடம் அது இருக்கிறது. இரட்டை கோபுர இடிப்பைத் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தானை நிர்மூலமாக்கிய அமெரிக்கர்கள் அனைவரிடமும் அது இருக்கிறது. இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் எந்தப் புறத்தூண்டுதலும் தேவைப்படாமலேயே வெளிப்படும்வகையில் நீக்கமற நிறைந்திருக்கிறது. எனவே, இது மனித இயல்பு என்ற புரிதல் ஒருவருக்கு வேண்டும். இந்துத்துவகிறிஸ்தவ, இஸ்லாமிய வன்முறைகளை ஒப்பிடும்போது சாதி வெறி மிதமானது. எனவே அதை, நிதானமாகவே கையாளவேண்டும்.
மேலும் மத வெறிக்குப் பின்னால் அரசியல் சக்திகள் விரிவாகத் திட்டமிட்டுச் செயல்படுகின்றன. சாதி வெறிக்குப் பின்னால் அது அந்த அளவுக்குத் தீவிரமாக இல்லை. அப்படியே இருந்தாலும் அதன் தீய விளைவுகள் ஒப்பீட்டளவில் மிதமாகவே இருக்கும்.
சாதி வெறி என்பது ரோஜாச் செடியில் இருக்கும் முட்களைப் போன்றது. மத வெறி என்பது கருவேலஞ்செடியில் இருக்கும் முள்ளைப் போன்றது. எல்லாமே முட் செடிதான் என்று ரோஜாச் செடிகளை வெட்டி வீழ்த்தத் தேவையில்லை.
மேல் சாதிக்காரரின் ஆதிக்க உணர்வை எதற்காக மதிக்க வேண்டும்? ஏனென்றால், அது எல்லாரிடமும் இருக்கத்தான் செய்கிறது. இரண்டாவதாக அது நீண்ட நெடிய பரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. எளிதில் மாற்ற முடியாதது. கீரியும் பாம்பும் சம்பந்திகளாக முடியாது. எலியும் பூனையும் சம்பந்திகளாக முடியாது. அதுபோலவே கீழ் சாதியினரும் இடைநிலை சாதியினரும் சம்பந்திகளாக முடியாது. என்னதான் இரு சாதியினரும் திருமணம் செய்து கொண்டு வாழும் சில உதாரணங்களைக் காட்டமுடியும் என்றாலும் அந்தப் பெற்றோர் அனைவருக்குள்ளும் வருத்தம் இருக்கவே செய்யும். வெளியில் காட்டவில்லையே என்பதால் அவர்கள் சமத்துவ உணர்வைப் பெற்றுவிட்டதாக அர்த்தமில்லை. மேதகு விக்டோரியா மகாராணியே டயானாவை ஏற்றுக்கொள்ளாமல்தான் இருந்திருக்கிறார் என்ற நிலையில் எளிய கிராமத்துப் பெற்றோரைப் பழிப்பதற்கு முன் மனித மனதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வது நல்லது.
மேல் ஜாதிக்காரர் தம் மகளையும் மருமகனையும் கொல்லும் அளவுக்கு ஏன் போகிறார் என்று பார்ப்போம்.
1. ஆசையாக வளர்த்த மகள் தன் சொல் பேச்சைக் கேட்காமல் வேறொருவனை மணமகனாகத் தேர்ந்தெடுப்பதை அவருடைய ஈகோ அனுமதிப்பதில்லை.
2. தன் மகள் தேர்ந்தெடுத்த நபர் தமது பரம விரோத சாதியைச் சேர்ந்தவனாக இருப்பதோடு ஏழையாகவும் இருக்கிறான். மகளின் வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டும் என்ற அக்கறையில் தான் செய்யும் ஒரு செயலை மகள் புரிந்துகொள்ள மறுக்கிறாள் என்ற கோபம்.
3. தனது சாதி சனங்கள் ஊர் முன்னால் சபை முன்னால் அவமானப்படுத்தியதால் வந்த ஆத்திரம்.
4. பரம விரோதியான சாதியைச் சேர்ந்தவர்கள் செய்யும் வெளிப்படையான மற்றும் மறைமுக கேலி கிண்டல்கள் தரும் வலி.
5. பரம விரோதியான சாதியைச் சேர்ந்த அரசியல் சக்திகள் தமது சாதியை அவமானப்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு செய்யும் ஒரு சதியில் தனது மகள் சிக்கவைக்கப்பட்டிருக்கிறாள். இது   போருக்கான தெளிவான அறைகூவல்.
6. மகள் தாழ்ந்த சாதிப் பையனுடன் ஓடிப்போனால் மானமுள்ள மறவன் என்றால் அருவாளைத் தூக்கியாகவேண்டும் என்ற போலிப் பெருமிதப் பொறிக்குள் அவர் சிக்கிக் கொண்டிருக்கிறார்.
7. சொந்த சாதிக்காரர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டுமென்றால் மகளையும் மருமகனையும் கொன்றாகவேண்டும்.
8. மிஞ்சிப் போனால் ஏழு வருட சிறைவாசம்தானே என்ற தெனாவெட்டு.
இந்தக் காரணங்களினால்தான் ஒரு மேல்சாதிக்காரர் ஆணவக் கொலையைச் செய்யத் துணிகிறார்.
இது போன்ற கொலைகள் நடக்காமல் இருக்கவேண்டுமென்றால் மேலே சொல்லியிருக்கும் விஷயங்களும் மாறவேண்டும்.
ஈகோ மோதல் என்ற முதல் விஷயத்தை எடுத்துக்கொள்வோம்ஒரு தந்தைக்குத் தன் மகளின் திருமணத்தைத் தீர்மானிக்கும் உரிமை உண்டா இல்லையா? தனிநபர் வாதத்தை முன்வைக்கும் நவீன மனம் ஒரு திருமணமானது சம்பந்தப்பட்ட ஆண் மற்றும் பெண்ணால் மட்டுமே தீர்மானிக்கப்படவேண்டும்; வேறு யாருக்கும் அதைத் தடுக்க அதிகாரம் கிடையாது என்று சொல்கிறது.
இதைச் சொல்பவர்கள் எந்த அளவுக்கு இதில் உறுதியாக இருக்கிறார்கள், இருப்பார்கள் என்பதை முதலில் நாம் பார்க்கவேண்டும். இப்படிச் சொல்பவர்களில் சிலர் குறிப்பாக பிராமணர்கள் மற்றும் பிற சாதி பணக்காரர்கள், தமது பெண் குழந்தை தாழ்ந்த சாதி ஏழையை விரும்பவே முடியாதவகையில் தந்திரமாக அனைத்து வழிகளையும் அடைத்துவைத்திருப்பார்கள். அல்லது சும்மா பேச்சுக்கு சொல்லி வைப்போமே... உயிரையே தருவேன்னு சொன்னா யாராவது உசிரைக் கொடுன்னு நாளைக்கே அருவாளை எடுத்துட்டு வந்து கேட்கவா போறாங்க என்ற நம்பிக்கையில் என் மகள் யாரை விரும்பினாலும் திருமணம் செய்துகொடுப்பேன் என்று சொல்லக்கூடும். தமிழகத்தில் சாதி கடந்த திருமணத்தை ஆதரித்துப் பேசுபவர்களின் எண்ணிக்கைக்கும் திருமண மண்டபங்களில் ஊரைக் கூட்டி நடத்தும் கலப்புத் திருமணங்களின் எண்ணிக்கைக்கும் (அப்படி எங்கேனும் நடந்திருக்கிறதா என்ன?) இடையில் இருக்கும் இடைவெளியைப் பார்த்தாலே சொல்லுவதையெல்லாம் நாம் செய்வதில்லை என்பது நன்கு புரிந்துவிடும்.
உண்மையில் கௌசல்யாவின் அப்பா முழுக் குற்றவாளி என்றால் நாம் அரைக் குற்றவாளிகள் மற்றும் முக்கால் குற்றவாளிகள். அருவாளை எடுத்துச் சென்று வெட்டமாட்டோமே தவிர நம் பெண்களை ஒரு தலித்துக்குத் திருமணம் செய்துகொடுக்கவும்மாட்டோம்நாம் உண்மையான சமத்துவ உணர்வைப் பெற்றால்தான் கௌசல்யாவின் அப்பாக்கள் தம் கையில் இருக்கும் அருவாளைக் கீழே போட்டுவிட்டு இப்போது நாம் இருப்பதுபோன்ற நிலைக்கு வந்துசேர்வார்கள். கிளையில்தான் பூ பூக்கிறது என்றாலும் அதன் நிறத்துக்கும் மணத்துக்கும் தண்டும் வேருமே முக்கிய காரணம்.
எனவே, என் மகளை ஒரு ஏழை தலித்தைக் காதலிக்கும்படி வளர்த்துக் காட்டுகிறேன் என்று சொல்வதோடு செய்து காட்டுபவர்கள் மட்டுமே இந்த விஷயத்தில் மேல் சாதி ஆதிக்கத்தை விமர்சிக்கலாம். வேறென்ன பாவம் செய்யாதவருக்கு மட்டும் தானே கல் எறியும் உரிமை உண்டு.
சரி, ஒரு வாதத்துக்காகவே திருமணமானது அந்த இளைஞர்களின்   முழு உரிமை என்றுவைத்துக் கொள்வோம். தாய்ப்பாசம், தந்தைப் பாசம், மகளின் மீதான பெற்றோரின் உரிமை இவை எல்லாமே பழமைவாத எண்ணங்களே; ஒருதனி நபருக்குத் தான் விரும்பும் எதையும் செய்யும் உரிமை உண்டு என்று பேசுபவர்களுக்கு அவர்களுடைய மொழியிலேயே சில விஷயங்கள் சொல்லவேண்டியிருக்கும்.
சாதி கடந்த திருமணத்தைச் செய்ய விரும்பும் காதலர்கள் சில உறுதிமொழிகளை எடுத்தாகவேண்டும்.
முதலாவதாக அவர்கள் இருவரும் தத்தமது சாதியை விட்டு வெளியேறுவதாக வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்.
பெற்றோரின் சொத்தில் பங்கு கேட்கமாட்டோம் என்று சொல்வதுபோல் பெற்றோரின் சாதி அடையாளத்திலும் எந்தப் பங்கையும் பெறமாட்டோம் என்று சொல்லவேண்டும் (மதம் மா(ற்)றும்போது இப்படித்தானே சொல்லாமல் சொல்லப் (வைக்கப்) படுகிறது).
அடுத்ததாக, சாதி கடந்து திருமணம் செய்து கொள்பவர்கள் தமது பெற்றோருக்கு, குறிப்பாக மேல் சாதியைச் சேர்ந்த பெற்றோருக்கு, தன்னை இதுநாள் வரை வளர்த்ததற்குரிய தொகையாக ஐந்து லட்ச ரூபாயைத் தந்த பிறகே திருமணம் செய்துகொள்ளவேண்டும் (அந்தப் பெண் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றால் தொகை மேலும் அதிகரிக்கும்).
பிள்ளையை வளர்த்ததற்கு கூலியா என்ற செண்டிமெண்ட் கேள்வியை தனிநபர் வாதத்தை முன்னெடுப்பவர் கேட்கமாட்டார்; கேட்கவும் கூடாது. அந்தப் பெண் தன்னைத் தனிநபராகப் பிரகடனம் செய்வதால் பெற்றோரின் சொத்தில் உரிமை கேட்கும் இழிவான செயலையும் செய்யமாட்டார்; கூடாது. நான் உன் மகளே இல்லை என்று சொன்ன பிறகு சொத்தை எப்படிக் கேட்கமுடியும்?
இத்தனை வருடங்கள் வளர்த்ததற்கான தொகையை அந்தப் பெண்ணால் தரமுடியாதென்றால் அவருடைய காதலர் அதைத் தரவேண்டும். அவராலும் முடியாதென்றால் சாதி கடந்த திருமணத்தை ஆதரிப்பவர்கள் அந்தப் பணத்தைத் தரவேண்டும் (பொங்குதல் யார்க்கும் எளிய அரியவாம் பொங்கியதற்குப் பொறுப்பெற்றல். அந்தப் பொங்கலில் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறீர்கள் என்பதற்கான உரைகல் அதுவே).
என் பெற்றோருக்கு நான் மகன்/ள் இல்லை.
என் உடன் பிறந்தோருக்கு நான் சகோதரர்/ரி இல்லை.
என் உறவினர்களுக்கு நான் இனி உறவு இல்லை.
என் சாதியான ..........சாதியை நான் முற்றாகத் துறக்கிறேன்.
இனிமேல் நான் தமிழன்/இந்தியன்/மனிதன் மட்டுமே என்று அந்தக் காதலர்கள் கையெழுத்திட்டுக் கொடுக்கவேண்டும்.
மதம் மாறுவதும் ஒரு நல்ல தீர்வுதான். ஆனால், காதலர்கள் பவுத்தத்துக்கு மாறலாம். கிறிஸ்தவம், இஸ்லாமுக்கு மாறுவதென்றால் காதலர்களில் ஒருவர் இஸ்லாத்துக்கு மாறவேண்டும். இன்னொருவர் கிறிஸ்தவத்துக்கு மாறவேண்டும் (இந்துக்கள் மட்டும்தானே சமத்துவ உணர்வு இல்லாதவர்கள். இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் கருணையும் சகோதரத்துவமும்  நிறைந்தவர்கள் அல்லவா).
சாதி கடந்த திருமணத்தை ஆதரிப்பவர்கள் மதம் கடந்த திருமணத்தையும் ஆதரிக்கவேண்டும்அதாவது ஒரு இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவப் பெண்ணை ஏழை இந்து ஆண் திருமணம் செய்வது சரியே என்று மசூதியிலும் சர்ச்சிலும்  முழங்கவேண்டும். தம்பதிகளில் யாரையும் மதம் மாற்றாமல் அப்படியான திருமணங்களை முன்னின்று நடத்தவும் வேண்டும்.
*
இரண்டாவது காரணமான ஏழை தலித்தைத் திருமணம் செய்துகொண்டால் மகளின் வாழ்க்கை துயரம் மிகுந்ததாக ஆகிவிடுமே என்ற அக்கறை பெற்றோருக்கு இருப்பது தவறுதான். தனிநபர்வாதம் பேசப்படும் இடத்தில் இதுபோன்ற நல்லுணர்வுகளுக்கு இடமே இல்லை. எனவே, முதலாவது காரணத்துக்குச் சொன்ன தீர்வே இதற்கும் பொருந்தும்.
அடுத்த காரணம் சாதி சனங்களின் அவமானப்படுத்தல்கள். இதை உண்மையில் மேல் சாதியினர் செய்யவே கூடாது. ‘ஓடிப்போனபெண்ணின் தந்தைக்கு ஆறுதலாகத்தான் இருக்கவேண்டும். ‘விடு கழுதைய... தலை வாழை இலை போட்டு நீ விருந்து வைக்க ஆசைப்படற... அது நரகலைத் திங்க ஆசையா ஓடுது. விட்டுத் தொலை...’ என்றுதான் சொல்லவேண்டும். மனிதர்களுக்குள் எதற்காக இப்படியான ஏற்றத் தாழ்வு என்ற சமத்துவ உணர்வு வந்திருக்காத நிலையில் தன் பெண் குறித்த நினைவுகளைத் தலை முழுகச்  சொல்லி ஆறுதல் தருவதே மிகவும் சிறந்தது.
நாமெல்லாரும் தமிழர்கள் என்ற சமத்துவ உணர்வை மேல் சாதியினரின் மனத்தில் ஏற்படுத்த தமிழ் தேசியவாத சக்திகள் அந்த கிராமத்துக்குள் காலடிஎடுத்து வைத்தால், தமிழர் ஒற்றுமை என்பது இந்திய விரோதம் என்பதாக திரிபடையாது என்ற உத்தரவாதத்தைத் தரும்படி அவர்களைக் கேட்டுக்கொண்ட பிறகே அந்த கிராமத்துக்குள் அனுமதிக்கவேண்டும். இந்து சக்திகள் நாமெல்லாரும் இந்துக்கள் என்று சொல்லி மேல் சாதியினரிடத்தில் சமத்துவ உணர்வைக் கொண்டுவர முற்பட்டால், பிற மத விரோதமாக அது திரிபடையாது என்ற உத்தரவாதத்தை அவர்களிடம் பெற்றாகவேண்டும். இந்த உத்தரவாதங்கள் தரப்படவில்லையென்றால் சாதி மோதல்கள் தொடர்வதே மேல். அந்த அதிர்ச்சிகளுக்கு நம் ரத்த நாளங்களைப் பழக்கிக் கொள்வதே நல்லது. ஏனென்றால் அருவாளை விட .கே.47களும் வெடி குண்டுகளும் அதிகப் பேரழிவை ஏற்படுத்தும்.
சாதி வெறியா... பிராந்திய மொழி வெறியா... மத வெறியா என்ற கேள்விகளே உங்கள் முன்வைக்கப்படும் என்றாலோ சாதி, மத, இந்திய தேசிய நல்லிணக்கத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மறுக்கப்படும் என்றாலோ சாதி வெறியைத் தேர்ந்தெடுப்பதே மேலானது. தமிழகம் ஈழமாகாமலும் குஜராத் ஆகாமலும் இருக்கவேண்டுமென்றால் அது உடுமலைப்பேட்டையும் மேல வளைவும் கண்டதேவியும் நாயக்கன் கொட்டாயும் கொண்டதாகவே இருந்தாகவேண்டும். சாதி வெறி அந்தவகையில் சாபமாக வரும் வரமே. இதை வேறு வழியில்லை என்ற வேதனையுடன் தான் சொல்கிறேன்.
மேற்கத்திய பாணியிலான பொருளாதார வளர்ச்சி இந்த அடிப்படைவாதங்கள் அனைத்தையும் நீர்த்துப்போகச் செய்யும் என்ற வாதம் நம்பிக்கை தருவதாக இல்லை. ஏனென்றால் உண்மையில் அப்படியான அந்நிய நாட்டு சக்திகள் இந்தியாவின் பொருளாதார வாய்ப்புகளைச் சுரண்டிச் செல்வதில் மட்டுமே குறியாக இருக்கின்றன. எனவே, அவை இந்தியாவில் பிராந்திய, மத அடிப்படைவாதங்கள் தலை தூக்குவதுதான் தமது பொருளாதாரச் சுரண்டலை அதிக எதிர்ப்பின்றித் தொடர உதவும் என்ற திட்டமிடலுடன் செயல்பட்டுவருகின்றன.
ஒருபுறம் அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்களின் செயல்பாடுகளை ரஷ்ய, சீன இடதுசாரி சக்திகள் எதிர்க்கின்றன. ரஷ்ய அணு உலை போன்றவற்றை அமெரிக்க ஐரோப்பிய சக்திகள் எதிர்க்கின்றன. அப்படியாக இந்தியா அந்நிய சக்திகளின் களிப்பாவையாக உருட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் பிராந்திய, மொழிரீதியிலான, மத ரீதியிலான அடிப்படைவாதங்கள் இந்த அந்நிய சக்திகள் இந்தியாவில் காலூன்றியதைத் தொடர்ந்தே அதிகரித்திருக்கின்றன. எனவே, மேற்கத்திய பாணி பொருளாதார வளார்ச்சி என்பது இரட்டை அபாயகரமானது.
*
தாழ்ந்த சாதி மக்களும் அரசியல் சக்திகளும் இடைநிலை ஆதிக்க சாதியை வேறு வகையில் பழிவாங்குவதே நல்லது. ஏனென்றால், இப்போதைய வழிமுறைகளில் தமது சாதி இளைஞர்களின் உயிரையும் தமது சாதி மக்களின் உடமைகளையும் பணயம் வைத்து இந்த பழிவாங்கலைச் செய்ய வேண்டியிருக்கிறது. கிடைக்கும் வெற்றியைவிட அதற்குத் தரவேண்டியிருக்கும் விலை அதிகமாக இருக்கும் என்றால் வேறு வகையில் போரிடுவதே நல்லது. போரை நிறுத்தச் சொல்லவில்லை. ஆனால் வழிமுறையை மாற்றிக்கொண்டாக வேண்டும்.
உதாரணமாக, தம்மைவிட உயர்ந்தவன் என்று மார் தட்டிக் கொள்பவரை அலட்சியப்படுத்துவதன் மூலமும் அவமானப்படுத்த முடியும். ஒருவர் நம்மை அவருடைய வீட்டு விருந்துக்கு அழைக்காமல் அவமானப்படுத்தினால் முதல் பந்தியில் போய் உட்கார்ந்து சாப்பிட்டுப் பதிலடி கொடுக்க வேண்டியதில்லை. உன் வீட்டுப் பக்கமே ஏழேழு ஜென்மத்துக்கும் தலைவைத்துப் படுக்கமாட்டேன் என்று சொல்வதே சிறந்த பதிலடியாக இருக்கும். எனவே, மேல் சாதிப் பெண்ணை காந்தர்வ விவாகம் முடிப்பது அல்ல; புறக்கணிப்பதே சரியான வழியாக இருக்கும். யாரேனும் தாழ்ந்த சாதிப் பையன் மேல் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அழைத்துவந்தால், அந்தப் பெண்ணை மேல் சாதியினரின் வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு, ‘எங்க பையனைத் திருமணம் செய்துகொள்ள இவளுக்குத் தகுதி இல்லை என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டு வந்துவிடவேண்டும். எந்தவித உயிரிழப்பும் உடமை இழப்பும் இல்லாமல் பழிவாங்க அதுவே சிறந்த வழி
அப்பறம், தாழ்ந்த சாதி அரசியல் தலைவர்கள் மேல் சாதியினரை அவமானப்படுத்திப் பேசினால் அதைக்கேட்டு ஆத்திரப்படும் மேல்சாதிக்காரர் அந்த சாதியைச் சேர்ந்த அப்பாவிகளை இப்படி வெட்டிக் கொல்லக்கூடாது. ஒரு அப்பன் ஆத்தாவுக்குப் பொறந்தவரா இருந்தா தன்னையும் தன் சாதியையும் அவமானப்படுத்திப் பேசும் அரசியல் தலைவன்களை வெட்டிச் சாய்க்கவேண்டும். வீரன் என்றால் வீரனாக நடந்துகொள்ளவேண்டும். எதிர்தரப்புக்கும் இதுவே பொருந்தும்.
நாமெல்லாரும் இந்து என்றால் நமக்குள் சாதி கடந்த திருமணத்தை ஆதரித்தே ஆகவேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. நாமெல்லாரும் இந்தியர்கள் என்றால் மதம் கடந்த திருமணத்தை ஆதரித்தே ஆகவேண்டும் என்று யாரும் சொல்வதில்லை. முஸ்லீமைக் கல்யாணம் செய்துகொள்ளாமலேயே ஒரு இந்து இந்தியாராக இருக்க முடியும்போது தேவர் பெண்ணைப் பறையர் ஆண் திருமணம் செய்து கொண்டால்தான் இருவரும் இந்து என்று ஆகுமா என்ன?
அதோடு இதில் இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். தேவர், வன்னியர், கவுண்டர் போன்ற இடைநிலை சாதியினருக்கு தமிழகத்து தலித்கள் மேல்மட்டும்தான் வரலாற்றுப் பகையுணர்வு இருக்கிறது. அவர்களுக்கு தமிழகத்துப் பிற சாதிகளுடன் இப்படியான விரோதம் கிடையாது. பிற மாநிலங்களிலும் இதுபோலவே அந்தப் பகுதி இடைநிலைச் சாதியினருக்கு அந்தப் பகுதி தலித்கள் மேல் விரோதம் இருக்கும். ஒருவேளை சுதந்திரம் கிடைத்ததும்  ஒவ்வொரு மாநிலத்து தலித்களையும் வேறொரு மாநிலத்துக்கு இடம் பெயரச் செய்திருந்தால் சமத்துவ சமூகம் எளிதில் வந்திருக்கக்கூடும்.
ஒவ்வொரு மாநிலத்து தலித்களுக்கும் வேறொரு மாநிலத்தில் கோவில்களிடமும் மன்னர்களிடமும் பெரு நிலப்பிரபுக்களிடமும் இருந்த நிலங்களில் நீர்ப்பாசன வசதிகள் மிகுந்த நிலங்களை கூட்டுப் பண்ணையாக மாற்றி, வேறு மாநிலத்து தலித்களை அதன் பங்குதாரர்களாக ஆக்கி, விவசாயத்தை நவீன முறையில் பெருந்தொழிலாக முன்னெடுத்துச் சென்றிருக்கலாம். அடுத்தகட்டமாக அங்கு நல்ல கல்வியைக் கொடுத்து அந்த மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அவர்களை நகர்த்தியிருக்கலாம்.
இதே சீர்திருத்தங்களைப் பூர்விக மாநிலத்திலேயே செய்திருக்கலாம். ஆனால், ஒரு பறையரோ பள்ளரோ வெள்ளையும் சொள்ளையுமாகப் போவதைப் பார்க்கும் ஆதிக்க சாதியினரின் மனதில் ஏற்படும் கோபம் ஒரு மகாராஷ்டிர மஹரோ பீஹாரி தலித்தோ வெள்ளையும் சொள்ளையுமாகப் போவதைப் பார்க்கும்போது ஏற்பட்டிருக்காது. தமிழகத்து இடைநிலைச் சாதியினருக்கு அவர்களுடைய கடந்த காலப் பெருமிதம் என்ற கிரீடத்தை இறக்கிவைக்கவேண்டிய தேவை இருந்தது. தமிழகத்து தலித்களுக்கு கடந்தகால அவமானம் எனும் சங்கிலியை உடைத்து மேலெழ வேண்டிய தேவை இருந்தது. தலித்களின் மாநில இடப்பெயர்ச்சி அந்த வேலையை எளிதாக்கிவிட்டிருக்கும்.
தலித்கள் மட்டும்தான் இடம் மாறியிருக்கவேண்டுமா என்ற கேள்வி நிச்சயம் எழும். வேண்டுமானால், விவசாயம் சாராத தொழிலைச் செய்துவந்த தலித்கள் விவசாய பூமிகளுக்கு இடம் பெயர்வதுபோல் விவசாயத்தில் ஈடுபட்டுவந்த இடைநிலை சாதியினர் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலங்களுக்கும் நகரங்களுக்கும் இடம்பெயர்ந்திருக்கவேண்டும். ஆடு, புலி, புல்லுக்கட்டை அக்கரைக்குக் கொண்டுசெல்ல வேண்டுமென்றால் ஆடையும் புலியையும் பக்கத்தில் இருக்கவிடாமல் பார்த்துக்கொள்ளத்தான் வேண்டும்.
இந்தியப் பிரிவினை பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சாத்தியப்படுத்தியிருக்கும் வளமான வாழ்க்கையைப் பார்த்துத்தான் இதைச் சொல்கிறேன். காந்திய, அம்பேத்கரிய, ஈ.வே.ராவிய, இந்துத்துவ இயக்கங்களின் தோல்வியைப் பார்த்த பிறகே இதைச் சொல்கிறேன். ஒருவேளை இந்த இயக்கங்கள் சரியாகத்தான் செயல்பட்டிருக்கின்றனவா..? ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்தநிலையைவிட இப்போது ஆரோக்கியமான மாற்றம் ஏற்பட்டுத்தான் இருக்கிறதா? ஒரு மனுஷனுக்கு தும்மல், காய்ச்சலே வரக்கூடாது என்று விரும்பும் அதி லட்சிய மருத்துவரைப்போல் நடந்துகொள்கிறோமா..? தெரியவில்லை.
ஆனால், நாமோ நேரு கிராமங்களை அழுகி நாறும் குட்டையாகச் சொல்லிவிட்டார்... காந்தி ஆதிக்க சாதியினர் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்... அம்பேத்கர் சமத்துவ அரசியல் சாசனத்தை தன்கைப்பட எழுதிவிட்டார். இனிமேல் எல்லாம் வழிக்கு வந்துவிடும் என்று மனப்பால் குடித்துவந்திருக்கிறோம். ஆனால், கெளசல்யாக்களின் அப்பாக்களை நாம் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டோம். அவர்களுடைய நியாயமான ஆதிக்க மனோபாவத்தை நாம் மாற்றவோ மறையவைக்கவோ எதுவுமே செய்யவில்லை. நவீன இந்திய அரசில் பெருமளவு அதிகாரத்தை கௌசல்யாக்களின் அப்பாக்களால் நிறைந்திருக்கும் இடைநிலை சாதிகள் கைவசம் சேரும்படியும் செய்துவிட்டிருக்கிறோம். அதனால்தான் சங்கர்கள் பட்டப்பகலில் நடுரோட்டில் பலர் பார்க்க வெட்டிச் சாய்க்கப்படுகிறார்கள்.
ஆனால், நமது இடதுசாரி, திராவிட இண்டலெக்சுவல்கள் மனு தான் எல்லாவற்றுக்கும் காரணம். இந்து மதம்தான் எல்லா அநீதிக்கும் காரணம் என்று வழக்கம்போல் முழங்குகிறார்கள். எலியைவைத்து நடந்த ஒரு பரிசோதனைதான் நினைவுக்கு வருகிறது. பொதுவாக உணவைப் பார்த்ததும்தான் ஜீரண ஹார்மோன்கள், ருசியுணர் ஹார்மோன்கள் போன்றவை சுரப்பது வழக்கம். ஒரு ஆய்வகத்தில் தினமும் மதியம் உணவு நேரத்துக்கு முன்பாக ஒரு மணியை ஒலிக்கச் செய்து அதன் பிறகு எலிகளுக்கு உணவைக் கொடுத்துவந்தார்கள். அடுத்த தலைமுறை எலிகளுக்கு அந்த மணி சத்தத்தைக் கேட்டதுமே உணவுச் செரிமான ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்கிவிட்டன. உணவைப் பார்க்கவேண்டிய அவசியமே அவற்றுக்கு இருந்திருக்கவில்லை. அதுபோலவேதான் நமது திராவிட, இடதுசாரி இண்டலெக்சுவல் எலிகள் முந்தைய தலைமுறை பயிற்சிக்கு ஏற்ப எது நடந்தாலும் மனுதான் காரணம் இந்துமதம் தான் காரணம் என்று முழங்குகிறார்கள். இது ஒருநாளும் பிரச்னையைத் தீர்க்க உதவாது.
இன்றைய சாதி மோதல்கள் சமத்துவத்துக்காக நடப்பவை அல்ல. உன்னை விட உயர்ந்தவன் என்று காட்டும் போர்வையில் அவை நடக்கின்றன. நேற்று நீ என்னை அடக்கினாய்... இன்று நான் உன்னை அடக்குகிறேன் பார் என்ற பழிவாங்கல் அதில் இருக்கிறது. இதனால் நேற்று உன்னை அவமானப்படுத்தியது தவறுதான். இன்று நாம் நட்புடன் இருப்போம் என்று சொல்லும் சக்திகள் கூட உன்னை நேற்று அடிமைப்படுத்தியது தவறே இல்லை... இன்று உன்னை அடிமைப்படுத்துவதும் தவறில்லை என்ற இடத்தை நோக்கி நகர்ந்துவிடுகின்றன.
இந்த அரசியலையும் ஒருவர் கணக்கில் கொள்ளவேண்டும். மேல் சாதி ஆண்களிடம் பணம் இருக்கிறது; நிறம் இருக்கிறது... செண்ட் பூசிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களிடம் சரக்கு இல்லை. அது எங்க கிட்டத்தான் இருக்கு. அதனாலதான் உங்க வீட்டுப் பெண்ணுங்க எங்க பையங்களைத் தேடி வர்றாளுங்க... அப்படி எங்க பையன் கூட பத்து மாசம் 12 மாசம் படுத்தவளை அவனை விட்டுட்டு வா... உன்னை ஏத்துக்கறோம். உன்னை வேறவனுக்கு கட்டி வைக்கிறோம் என்று சொல்கிறார்கள் இந்த மானங்கெட்ட மேல் சாதியினர். உனக்குப் பிடிக்காதவன் கூட உன் பொண்ணு போய் படுத்துட்டான்னா தூக்கு மாட்டிக்கிட்டு சாக வேண்டாமா நீ என்று திருமாவளவன் போன்றோர் தெளிவாக வன்முறையைத் தூண்டும்விதத்தில் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
மறவனை வெட்டு... மறத்தியைக் கட்டு... வன்னியனை வெட்டு... வன்னியத்தியைக் கட்டு என கூட்டம் போட்டுப் பேசிவிட்டு இவர்கள் போய்விடுகிறார்கள். திருமணம் என்பது இரண்டு நபர்களின் மற்றும் குடும்பங்களின் தனிப்பட்ட விஷயம்; மேல் சாதியினர் இதை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று சொல்லும் யாரும் தலித்கள் செய்யும் இந்த அராஜக அரசியல் பற்றி எதுவும் பேசுவதில்லை. இந்த தலித் அப்பீஸ்மெண்டும் மிகவும் தவறுதான். எளிய மனிதர்களின் வேதனையைப் பேசுகிறேன் என்ற போர்வையில் இந்த அபாய அரசியல்களை மவுனமாகக் கடக்கும் கயமையும் தவறுதான்.
இவை எதையும் பொருட்படுத்தாமல் திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் சம்பந்தப்பட்டது; அதிலும் காதல் என்பது இனம், மதம், சாதி, மொழி, வர்க்க அந்தஸ்து என எதையும் பார்க்காமல் வரக்கூடிய உணர்வு என்று சொல்லி அதை நாம் மிகவும் புனிதப்படுத்துவது மிகவும் தவறு. அப்படி ஒரு காதல் ஒரு தலித்துக்கு கிறிஸ்தவரைப் பார்த்தோ இஸ்லாமியரைப் பார்த்தோ வருவதில்லை. தம்மை விடக் கீழான சாதிப் பெண்களைப் பார்த்து வருவதில்லை. வன்னியப் பெண்ணையும் தேவர் பெண்ணையும் பார்த்து மட்டுமே வரும் என்றால் அது தூய காதலாக மட்டுமே இருக்க வாய்ப்பில்லை. தூய காதலாக மட்டுமே எல்லாராலும் பார்க்கப்படவேண்டிய அவசியமும் இல்லை. மேல் சாதிப் பெண்ணின் வயிற்றில் தலித்தின் கருவை வளரச் செய் என்பதை போர் முழக்கமாக ஒரு தலித் தலைவர் சொல்லிவரும் நிலையில் மேல் சாதியினர் எளிய மனங்களின் காதலை வெறும் காதலாக மட்டுமே பார்க்க முடியாமல் போகும் நியாயத்தையும் ஒருவர் புரிந்துகொள்ளவேண்டும். மேல் சாதியின் ஆணவத்தினால் மட்டுமே கொலைகள் நிகழ்வதில்லை. அந்த ரத்தத்தில் தலித் அரசியல் சக்திகளின் பங்கும் இருக்கத்தான் செய்கிறது. இழப்பு தலித்துக்குத்தான் என்பதால் அவர் தரப்பு பிழைகள் இல்லாமலாகிவிடாது.
எனவே, நாங்கள் தனி நபர்கள் என்ற இளங்காதலர்களின் பிரகடனம் பெற்றோரை உதாசீனம் செய்கிறது; சொந்த சாதியினரின் உணர்வுகளைப் புறக்கணிக்கிறது. எதிரணியினரின் அராஜகச் செயல்பாடுகளுக்கு ஆதரவு தருவதாக அமைகிறது. அப்படி ஒரு தனி நபருக்காக அவருடைய குடும்பத்தினரும் ஒட்டு மொத்த சாதியுமே விட்டுக் கொடுக்கவேண்டுமா? அந்த ஒரு தனி நபர் அவர்களுக்காக விட்டுக் கொடுக்கவேண்டுமா?