Friday 20 January 2017

போற்றிப் பாடடி பெண்ணே - 3

போற்றிப் பாடடி பெண்ணே
(தேசியமும் தெய்விகமும் இரு கண்கள் என்று சொன்ன தேவரை மட்டும்)

இரண்டாவதாக, தமிழர்கள் பிற கலாசார அம்சங்களில் இந்த அளவுக்குப் புரிதலுடன் இருக்கிறார்களா..? நிச்சயமாக இல்லை. தமிழர்களின் முக்கியமான அடையாளமாகச் சொல்லப்படுவவது சங்க கால வாழ்க்கை முறை. அதாவது வேத காலம் போலவே சாதிப் பிரிவுகள் அற்ற வாழ்க்கை முறை. ஆனால், இன்றும் சாதிக் கொடுமைகள் மிக அதிகமாகத் தலைவிரித்து ஆடும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. உண்மையில் சாதிச் சண்டை என்பதுதான் தமிழனின் கலாசாரமாக ஆகிவிட்டிருக்கிறது. இந்தக் களேபரத்திலும் இந்த உண்மையை உரத்துப் பேசிய ஒரே தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி மட்டுமே.
இன்று தமிழ் கலாசாரத்தைக் கட்டிக் காக்கப் புறப்பட்டிருக்கும் இளைஞர்களின் முதுகில்தான் அந்த அருவாள் இன்றும் ஒளிந்து கிடக்கிறது. இன்று கூடி நின்று கோஷம் போடும் இளைஞரின் சகோதரியும் சகோதரனும்தான் அந்த அருவாளினால் வெட்டப்பட்டிருக்கிறார்கள். இந்த சல்லிக்கட்டு இயக்கம் அந்த சாதிய மோதலை முடிவுக்குக் கொண்டுவந்துவிடுமானால் இந்த இயக்கம் வரவேற்கப்படவேண்டியதுதான். ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் துளியும் தென்படவில்லை. அருவாள்கள் இந்து இயக்கத் தலைவர்களைக் குறிவைத்துத் திருப்பப்பட்டிருக்கின்றன. இந்திய தேசியர்கள் நோக்கியும் அது வீசப்படும் காலம் வந்துவிடும். என்றாலும் அது தமிழ் சாதிகளுக்குள் வீசப்படாமல் போகும் என்று நம்ப எந்த முகாந்திரமும் இல்லை. வேண்டுமென்றால் தமிழ் ஒற்றுமைக்காக தாழ்ந்த சாதி தலைவர்கள் களமாடி, கலப்புக் காதல் அரும்பாமல் அடங்கி ஒடுங்கிப் பார்த்துக்கொள்ளக்கூடும்.

அடுத்ததாகத் தமிழர்களின் மிக முக்கியமான அடையாளம் அவர்களுடைய தனிச் சிறப்பு வாய்ந்த மொழி. அந்த மொழியைப் பாதுகாக்கும் அடிப்படை அக்கறை இந்த இளைஞர்களிடம் இருக்கிறதா..? நிச்சயம் இல்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது சகோதர சகோதரிகளை ஆங்கில வழிப் பள்ளியில்தான் சேர்த்திருக்கிறார்கள். தாய் மொழிக் கல்வியைக் கட்டாயமாக்கச் சொல்லி இவர்கள் போராடுவார்களா..? அல்லது தாய் மொழிக் கல்வி கற்றுத் தரப்படும் அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே தமது சகோதர சகோதரிகளை அனுப்புவேன் என்று சொல்வார்களா..? நிச்சயமாக மாட்டார்கள். தாய் மொழிக் கல்வியை முன்வைக்க விரும்பாதவர்கள் என்ன கலாசாரத்தை மீட்டெடுக்கப் போகிறார்கள்?

இவர்களில் தாய்மொழிக் கல்வி மட்டுமே கிடைக்கும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் நபர்களும் உண்டு. அவர்களைப் பொறுத்தவரையில் பத்தாம் வகுப்பு மாணவனுக்குக் கூட தமிழில் ஒரு பக்கம் பிழையில்லாமல் எழுதவோ எழுதியதைப் படிக்கவோ தெரியாத நிலையே இருக்கிறது. உண்மையில் போராட வேண்டியது இதை எதிர்த்துத்தான்.
தமிழர்களின் இன்றைய கலை வடிவமாக திரைப்படங்கள் இருக்கின்றன. அந்தத் திரைப்படப் படைப்பாளிகள் கேமராவுக்குப் பின்னால் ஆடைகளின்றிச் செய்யும் அதே வேலையையே கேமராவுக்கு முன்பாக சொற்ப ஆடைகளுடன் செய்துவருகிறார்கள் ஃபோர்னோ திரைப்படங்களின் மலினமான நகல் என்றும் நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் கூட்டிக்கொடுத்து இயக்குநராக இருக்க நான் தயாரில்லை என்றும் வாய்ப்புகள் இல்லாத நேரங்களில் உண்மை சொல்பவர்களால் நிறைந்ததுதான் இன்றைய திரையுலகம். அதில் இடம்பெறும் தமிழ் கதாநாயகிகள் அனைவருமே செக்கச் செவேலென்ற நிறத்தில்தான் இருப்பார்கள். முழுத்திறமையைக் காட்ட இடம் கொடுக்காத சென்சார் போர்டைப் பழித்தபடியேதான் தொடை, இடை, தொப்புள், மார்புப் பிளவு என காட்டிக் கலைச்சேவை செய்தும்வருகிறார்கள். இவர்கள்தான் தமிழ் கலாசாரத்தைக் காப்பாற்றக் களம் இறங்குகிறார்கள்.

தமிழ் திரைப்படங்களின் நகைச்சுவை என்பது அதைவிடக் கேவலமானது. அடிப்பதும் அடி வாங்குவதும்தான் தமிழர்களின் நகைச்சுவையாக இடம்பெற்றுவருகிறது. கறுப்பு நிறத்தில் இருக்கும் பெண்களை இந்த அளவுக்கு அமெரிக்க ஐரோப்பாவில் கூட நிஜத்தில் அவமானப்படுத்தியிருக்கமாட்டார்கள். தாழ்ந்த சாதிக்காரர்களை தெருத்தெருவா பிச்சை எடுக்கற நாயி என்பதில் ஆரம்பித்து விதவிதமான வசைகளை உருவாக்கித் திட்டுவதுதான் தமிழர்களின் நகைச்சுவையாக இருந்திருக்கிறது. கவுண்டமணி செந்தில் கூட்டணியில் செந்தில் அடிவாங்குவார். கவுண்டமணி அடிப்பார். அதன் அடுத்த வெர்ஷனான வடிவேலு காமடியில் வடிவேலு செந்தில் இடத்தில் இருப்பார். கவுண்டமணியின் இடத்தை கை கால் உள்ள அனைவருக்கும் கொடுத்திருப்பார்கள். அப்படி அரைபாடி வண்டியில் ஏற்றிச் சென்று மூத்திரச் சந்தில்போட்டு அடிப்பதும் அடிவாங்குவதுதான் தமிழர்களின் நகைச்சுவைக் கலாசாரம். ஈழத் தமிழர்களின் உயிர் வலியைக் கூட எல்லாம் பய மயம் என்று இழிவுபடுத்துவதே தமிழச்சி பால் குடித்தவர்களின் கலை வெளிப்பாடு. ஒருவகையில் பார்த்தால் சீரழிந்து கிடக்கும் இன்றைய தமிழ் கலாசாரத்தின் மிகச் சிறந்த தூதுவர்கள் திரையுலகத்தினர்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது (மெரினா இளைஞர்களை இயக்குபவர்கள் இந்தத் திரைப்படத்தினரை ஓரங்கட்டுவது வரவேற்கத் தகுந்ததுதான். ஆனால், அது வகாபிஸ, விடுதலைப் புலித்தன்மை மிகுந்த பாசிசத்தின் முக்கிய கொள்கையும் கூட என்பதால் மனம் நடுங்கவே செய்கிறது).     

தமிழர்களின் இன்னொரு முக்கிய கலாசாரச் சீரழிவாக இருப்பது குடி. உலகம் முழுவதுமே குடிக்கத்தான் செய்கிறது. ஆனால், குடித்துவிட்டு நடு ரோட்டில் விழுந்து கிடப்பது தமிழ் நாட்டுக்கு மட்டுமே உரிய அவலம். இந்தக் கலாசார மீட்டெடுப்புப் போராளிகளின் அப்பாக்கள்தான் அப்படிக் குடித்துவிட்டு நடுரோடுகளில் படுத்துக் கிடக்கிறார்கள். இதை விடப் பெரிய அவமானம் கோபுரத்தை குலச் சின்னமாகக் கொண்ட தமிழக அரசு தனது முக்கிய தொழிலாக சாராய விற்பனையை வைத்திருக்கிறது. கலாசாரம் பற்றிய குறைந்தபட்ச சொரணை இருந்தாலும் ஒருவர் முதன் முதலில் எதிர்க்க வேண்டியது இதைத்தான். ஆனால், அந்த சாராய மாஃபியாவின் காலில்தான் ஆட்சியை ஏற்கும்படி தமிழகம் மன்றாடிக் கொண்டிருக்கிறது.
*

No comments:

Post a Comment