Tuesday 14 March 2017

சொல் புதிது - 3



புதிய சொற்கள்

செல்ஃபி - தம்பட்டப் படம்

எஸ்கலேட்டர் - நகரும் மின் ஏணி

ராக்ஸ் ஃபோன் : ஒட்டுக் கேட்கவியலா தொலைபேசி / அதிகாரபூர்வ ரகசிய தொலைபேசி

மைக்ரோவேவ் ஓவன் : மின் அலை அடுப்பு

அயர்ன் பாக்ஸ் - ஆடைகளின் சுருக்கலை வெப்பத்தின் மூலம் நீக்கும் கருவி - வெப்பச் சுருக்கல் நீக்கி அல்லது சுருக்கல் நீக்கி

டியூப் லைட் : குழல் மின் விளக்கு

ஒயர் : மின் கயறு

பிளக் : மின் இணைப்பான்

Flask - மாறாவெப்பக் குடுவை - வெப்பமாறாக் குடுவை

Notorious - கெடு புகழ் அல்லது தீய புகழ்

sting operation - கள்ளப் பதிவு

sound proof - ஒலித் தடுப்பு

டெலி ப்ராம்டர் - முன் தூண்டல் கருவி

என்கவுண்டர் - காவல் துறை கொலை

ஹானர் கில்லிங் - வறட்டு கெளரவக் கொலை

பைபாஸ் - தாண்டிச் செல்லும் வழி (நெரிசல் மிகுந்த ஊர் பகுதியைத் தாண்டிச் செல்லும் வழி).

சிங்கிள் விண்டோ ஆப்பரேட்டர் - அனைத்துச் செயல் மையம் (ஒற்றைச் சாளர மையம் என்பதைவிட எளிதில் புரியும்)

லிஃப்ட் - மாடி ஏற்றி

அவுட் ஆஃப் பாக்ஸ் ஐடியா - வழக்கத்துக்கு மாறான சிந்தனை

பவர் பாயின்ட் பிரசண்டேஷன் - விளக்கப்பட விவரணை

டிரெட் மில் -உடற்பயிற்சி நடை எந்திரம்

அப்பாயிண்ட்மெண்ட் - சந்திப்பு நேரம்

அப் டு டேட் - நாளது வரையான

பிராண்ட் பில்டிங் : நற்பெயர் உருவாக்கம்.

டிமானிடைசேஷன் : பணத்தாள் நீக்கம்

Doctorine of lapse : வாரிசு நியமன உரிமைப் பறிப்புச் சட்டம்

ப்ரெய்ன் வாஷ் - மூளைத் திணிப்பு (மூளைச் சலவை அல்ல. சலவை என்பது கறையை நீக்குவது. இங்கு மூளைக்குள் ஒரு பக்கச் சார்பு கருத்துகள் திணிக்கப்படுகின்றன)

போஸ்டர் பாய் - முன்னணி முகம்

சொல் புதிது - 2

புதிய சொற்களை உருவாக்குவோம்.

Ice Cream : ஐஸ்க்ரீம்.

இந்தப் பொருளின் குணங்கள் என்னென்ன..? 1.அது குளிர்ச்சியானது. 2.திடப்பொருளும் அல்ல திரவப் பொருளும் அல்ல. 3. இனிப்பானது. 4. பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

தமிழகத்தில் / இந்தியாவில் ஐஸ்க்ரீம் ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகே அறிமுகமாகியிருக்கிறது. பனிக்கட்டிகள் மட்டுமே நம்மிடம் உண்டு. பாலில் இருந்து தயிர், மோர், வெண்ணெய், நெய், திரட்டிப் பால் (பால்கோவா), பாலாடை எனத் தயாரித்திருக்கிறோமே தவிர க்ரீம் என்பதை நாம் உருவாக்கியிருக்கவில்லை. எனவே, தமிழில் அதற்கான சொல் கிடையாது. க்ரீம் என்பதன் குணம் என்று பார்த்தால் அது திடமும் இல்லை திரவமும் இல்லை... அதாவது கூழ்ம நிலையில் இருக்கிறது. ஐஸ்க்ரீம் குளிர்ச்சியானது. எனவே, இந்தப் பொருளுக்கு பனிக் கூழ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால், கூழ் என்பது வேறொரு உணவுப் பொருளைக் குறிக்கும் சொல். பனி என்று முன்னொட்டு அதை வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது என்றாலும் கூழ் என்பது இந்துக் கோவில் வழிபாட்டுடனும் இந்துகளின் பாரம்பரிய அன்றாட உணவுடனும் வலுவாகப் பிணைக்கப்பட்ட பெயர். கூழ் என்றதும் கம்பு, கேழ்வரகு இவற்றால் தயாரிக்கப்படும் உணவே நினைவுக்கு வரும். பாரம்பரியக் கூழுடன் ஐஸ்க்ரீம் எந்தவகையிலும் தொடர்பில்லாதது, எனவே, பனிக் கூழ் என்பதற்கு பதிலாக பனிக் கூழ்மம் என்ற பெயரே பொருத்தமாக இருக்கும்.

இதுவும்கூட ஐஸ்க்ரீமின் முதல் இரண்டு குணங்களை மட்டுமே சுட்டுகிறது. இனிப்பானது என்ற அம்சமும் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதும் இல்லை. இந்த நான்கையும் உள்ளடக்கியதாக ஒரு பெயர் வைப்பதென்றால் இனிப்புப் பால் பனிக் கூழ்மம் என்று சொல்ல வேண்டியிருக்கும். இது மிகவும் நீளமான பெயராக இருப்பதால் மிக முக்கியமான அம்சங்களை மட்டும் உள்ளடக்கியதாக இனிப்புப் பனிக் கூழ்மம் என்றோ பால் பனிக் கூழ்மம் என்றோ பெயர் வைக்கலாம். பனி என்பதுகூட ஒருவகையில் பொருத்தமான சொல் அல்ல. ஏனென்றால் பனி என்பது நம் ஊரில் குளிர்ந்த தட்ப வெப்பநிலைக் குறிக்கும் சொல் மட்டுமே. பனிக்கட்டியை அது குறிக்காது. அதோடு ஐஸ்க்ரீம் என்பது பனிக்கட்டியும் அல்ல. எனவே, அதை குளிர்ந்த என்ற வார்த்தையால்தான் குறிப்பிடவேண்டும். குளிர் இனிப்புக் கூழ்மம், குளிர் பால் கூழ்மம் என்று சொல்லலாம். குச்சி ஐஸ் போன்றவற்றை இனிப்பு பனிக்கட்டி என்று அதிக சிரமம் இல்லாமல் சொல்லிவிடலாம்.

வாக்கியம் : நான் இன்று மாலையில் என் நண்பர்களுடன் சென்று குளிர் இனிப்புக்கூழ்மம் சாப்பிட்டேன். அது அருமையாக இருந்தது

*

வெய்ட்டர் - சர்வர் டிப்ஸ் என்ற ஒரு வார்த்தை.

இதில் வெய்ட்டர் என்பது காத்திருப்பவர் அதாவது நாம் சாப்பிட்டு முடிப்பதுவரை நம் அருகில் நமக்கு என்ன தேவை என்று காத்திருப்பவர் என்ற அர்த்தத்தில் அப்படிப் பெயரிட்டிருக்கிறார்கள். இதைவிட சர்வர் என்ற வார்த்தை மேலும் பொருத்தமானது : உணவு பரிமாறுபவர். இப்போது டிப்ஸ் என்பதன் அடிப்படை அம்சங்கள் என்னவென்று பார்த்தால் 1.உணவு பரிமாறுபவருக்குத் தரப்படும் தொகை. 2.பரிமாறுபவரின் சேவையைப் பாராட்டி அன்பினால் தரப்படும் தொகை. 3. அது மிகவும் சிறிய தொகையாகவே (சில்லறையாகவே) நாம் உணவுக்குக் கொடுக்கும் தொகையில் பத்தில் ஒரு பங்குதான் இருக்கும். இப்போது இந்த மூன்றையும் இணைத்துப் பெயர் வைத்தால் உணவு பரிமாறுபவருக்கு அன்பினால் தரும் சிறு தொகை அதாவது பரிசாரக சிறு அன்பளிப்பு. அதையே இன்னும் சுருக்கி பரிசாரக அன்பளிப்பு. இந்த பரிசாரகர் என்ற வார்த்தை பலருக்குப் புரிய வாய்ப்பு இல்லை. நம் ஏவலுக்கு ஏற்ப நடந்துகொள்பவர் என்ற வகையில் அவரை ஏவலர் என்றும் அவருக்குத் தரும் அன்புத் தொகையை அன்பளிப்பு என்று சொல்லலாம். ஏவலர் அன்பளிப்பு அல்லது பணியாளர் அன்பளிப்பு என்று சொல்லலாம். இந்த அன்பளிப்பை உணவு விடுதியில் மட்டுமல்லாமல் வேறு இடங்களிலும் சேவையைப் பாராட்டித் தருவது உண்டு என்பதால் அதை சேவை அன்பளிப்பு என்றும் சொல்லலாம். ஒருவேளை அன்பளிப்பு என்பது சற்று கனமான வார்த்தையாகத் தோன்றினால் அன்புத் தொகை என்பதே சரியாக இருக்கும்.

வாக்கியம் : அந்த உணவு விடுதியில் நாங்கள் ரூ 200க்குச் சாப்பிட்டோம். ஏவலர் அன்புத்தொகையாக (பரிசாரக அன்புத்தொகையாக) பத்து ரூபாய் கொடுத்தோம்.

*

ஷவர்

ஷவர் என்பது குளியலறையில் இருக்கும் குழாய். மழைத் தூறல் போல் நீரைச் சொரியக்கூடியது. குளியலறை தூறல் குழாய் என்பது அதன் அனைத்து அம்சங்களையும் கொண்ட பெயர். இதை எளிமைப்படுத்தி தூறல் குழாய் என்று சொல்லலாம்.

வாக்கியம் : குழந்தைகளுக்குக் குளியலறைத் தூறல் குழாயில் குளிப்பது மிகவும் பிடிக்கும்.

இண்டிகேட்டர் :

வாகனங்களில் செல்லும்போது பின்னால் வரும் வாகனங்களுக்கு நாம் வண்டியின் வேகத்தைக் குறைக்கப்போகிறோமா... வலதுபக்கம் திரும்பப் போகிறோமா இடதுபக்கம் திரும்பப் போகிறோமா என்பது போன்ற விஷயங்களைத் தெரிவிக்க வாகனங்களின் பின் பக்கம் ஒரு இண்டிகேட்டர் விளக்கு பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் பின்னால் வரும் வாகனங்களுக்கு நாம் செல்லவிருக்கும் திசையைச் ”சொல்லிக் காட்ட’ முடியும். எனவே அதை செல்திசைகாட்டி விளக்கு என்று சொல்லலாம்.

வாக்கியம் : நான் வாகனத்தில் போய்க்கொண்டிருந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை ஓட்டியவர் செல்திசைக் காட்டி விளக்கைப் பயன்படுத்தாமலேயே சட்டென்று வலது பக்கம் திரும்பிவிட்டார். நான் மெதுவாகச் சென்றதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஸ்டியரிங் :

கார், லாரி போன்ற வாகனங்களை ஓட்ட அந்த வாகனங்களின் சக்கரங்களை கட்டுப்படுத்தப் பயன்படும் வளைய வடிவிலான கருவி இது. வாகன ஓட்டி பயன்படுத்தும் வளையம் என்றவகையிலும் வாகனம் ஓட வழிசெய்யும் வளையம் என்ற வகையிலும் அதை வாகன ஓட்டி வளையம் என்று சொல்லலாம்.

வாக்கியம் : வாகன ஓட்டி வளையத்தில் புதிய தொழில் நுட்பமாக சக்கரங்களைக் கட்டுப்படுத்தும் மின் இயக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் வாகனத்தை ஓட்டுவது மிகவும் எளிதாகிவிட்டிருக்கிறது.

பிரேக் :

வாகனங்களின் வேகத்தை மட்டுப்படுத்தப் பயன்படுத்தும் பொருள். இப்போது அதை தடுப்பான் என்று சிலர் சொல்கிறார்கள். வேகத்தைத் தடுக்கும் கருவி என்ற பொருளில் அதை தடுப்பான் என்கிறார்கள். உண்மையில் அது வேகத்தைக் குறைக்கப் பயன்படுத்தும் கருவிதான். எனவே வேகக் குறைப்பான் என்பதே பொருத்தமானது.

வாக்கியம் : எங்கள் பள்ளி வாகனத்தின் குறுக்கே திடீரென்று ஒரு நாய்க்குட்டி பாய்ந்துவிட்டது. வாகன ஓட்டுநர் சட்டென்று வேகக் குறைப்பானை அழுத்தியதன் மூலம் நாய்க்குட்டி மீது மோதாமல் காப்பாற்றிவிட்டார்.

ஷாக் அப்சார்பர்

வாகனங்கள் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது அந்த அதிர்வானது பயணிப்பவர் மேல் செலுத்தும் எதிர்விசையை மட்டுப்படுத்தப் பயன்படுத்தும் கருவி. இது சுருள் வளையமாக இருக்கலாம். ரப்பர் வளையமாக இருக்கலாம். அதிர்வை உள்வாங்கிக் கொண்டு பயணியைக் காக்கும் கருவி என்பதால் இதை அதிர்வு உள் வாங்கி என்று சொல்லலாம்.

மென்சஸ் : இதை மாத விலக்கு என்று பொது வழக்கில் சொல்கிறார்கள். அந்த நாட்களில் வீட்டில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்ததால் அப்படிச் சொல்கிறார்கள். ஆனால், பழங்காலத்தில் அப்படி இருக்கச் சொன்னதன் நியாய அநியாயங்கள் , காரண காரியங்கள் இன்றைய வாழ்க்கை முறையில் தவறென்று படுகிறது. கற்பழிப்பு என்ற வார்த்தை தவறென்று சொல்வதுபோல் மாத விலக்கு என்பதையும் மாற்றியாகவேண்டும். மாத உதிரப் போக்கு நாட்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அது கண்ணியக் குறைவான சொல்லாக்கம். உண்மையில் அந்த நாட்களில் விந்தணுவை எதிர்பார்த்து உருவாக்கப்படும் கருமுட்டை கருத்தரிப்பு நிகழாமல் கரைந்து அழியும். எனவே கரு முட்டை கரையும் நாட்கள் என்று சொல்வது ஓரளவுக்கு கண்ணியமாக இருக்கும். மாத தளார்ச்சி நாட்கள் என்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

வாக்கியம் : மாத தளர்ச்சி நாட்களில் பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் கடினமான பணிகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.


ஃபுட் பாத்

நடந்து செல்லப் பயன்படுத்தப்படும் பாதை என்றவகையில் இதை இப்போது நடைபாதை என்று சொல்கிறோம். உண்மையில் இது சாலையோரத்தில் அமைந்திருக்கும் பாதை. காட்டுக்குள் இருக்கும் ஒற்றையடிப் பாதைகூட நடக்க உதவும் பாதைதான். ஃபுட் பாத் சாலை ஓரத்தில் இருக்கும் பாதையைக் குறிக்கும் என்பதால் சாலையோர நடைபாதை என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

வாக்கியம் : நான் சாலையோர நடைபாதையில் வந்து கொண்டிருந்தபோது மழை பெய்ய ஆரம்பித்தது.

பிளாட்ஃபார்ம் :

இதை நடை மேடை என்று இப்போது சொல்கிறோம். உண்மையில் இது இருப்புப்பாதை நிலையம், பேருந்து நிலையம் போன்றவற்றில் வாகனங்களில் ஏறி இறங்க பயணிகள் பயன்படுத்தும் இடம் எனவே இதை ஏறு இறங்கு தளம் என்று சொல்லலாம்.

வாக்கியம் : இருப்புப்பாதைநிலையத்தின் ஐந்தாம் ஏறு இறங்கு தளத்தில் எங்கள் வாகனம் வந்து நின்றது. (நடைமேடை என்பது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட பெயர் என்பதால் அதையே பயன்படுத்தலாம். எனினும் அவ்வப்போது இந்தப் புதிய சொல்லையும் பயன்படுத்தி பழக்கத்துக்குக் கொண்டுவரலாம்).

தட்கல் :

நீங்கள் எந்த ஊருக்குப் போவதாக இருந்தாலும் அந்த ரயில் எதுவரை செல்லுமோ அதற்கான கட்டணத்தை நீங்கள் கட்டியாகவேண்டியிருக்கும். அந்தவகையில் உங்கள் பயண தூரத்தைவிட அதிக கட்டணத்தைத் தரவேண்டியிருக்கும். எனவே அதை மிகை பயணக் கட்டணம் என்று சொல்லலாம். அதோடு இதன் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. கடைசி நேரத்தில்கூட டிக்கெட் பெற முடியும். இந்த இரண்டு அம்சங்களுமே மிக முக்கியமான அடையாளங்களே. எனவே மிகை பயணக் கட்டணம் அல்லது கடைசி நேர பயணச் சீட்டு என்ற இரண்டில் ஏதேனும் ஒன்று பொருத்தமாக இருக்கும்.

இதன் இன்னொரு அம்சம் என்னவென்றால் இது வரிசையை தவிர்த்து அல்லது வரிசையை மீறிப் பெறப்படும் பயணச் சீட்டு. பயணத்துக்கு 20 நாட்கள் முன்னதாக முன் பதிவு செய்தவர்களுக்குக் கிடைக்காத இருக்கைவசதி கடைசி நிமிடத்தில் அதிகக் கட்டணம் கட்டுபவருக்குக் கிடைத்துவிடும். எனவே இது வரிசையை மீறிப் பெறப்படும் பயணச் சீட்டு. அவசரமாகச் செல்லவேண்டிய அவசியம் இருப்பவர்களுக்காக இந்த சிறப்பு வசதியை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. எனவே இதை வரிசை மீறல் பயணச் சீட்டு என்று சொல்லாமல் அவசர பயணச் சீட்டு என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

வாக்கியம் : எனது ஊர் அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவுக்கு முன்கூட்டியே பயணச் சீட்டு பதிவு செய்ய மறந்துவிட்டேன். எனவே, அவசரப் பயணச் சீட்டு (தட்கல்) வாங்கிக்கொண்டு சென்றுவந்தேன்.


சொல் புதிது -1


ஒரு மொழி உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கான பல்வேறு அறிகுறிகளில் ஒன்று புதிய சொற்களை அது உருவாக்கும் / உள்வாங்கும் அதன் திறமை. தாய்மொழியில் வேற்று மொழிச் சொற்களுக்கு இணையான சொற்களை உருவாக்குவது, வேற்றுமொழிச் சொற்களை அப்படியே ஏற்பது என இருவகைகளில் மக்கள் சமூகம் இயங்கிவந்திருக்கிறது. கலப்பு இல்லாத மனித சமூகம் இல்லை என்பதால் கலப்பு இல்லாத மொழியும் சாத்தியமில்லை. எனினும் ஒவ்வொரு மொழியிலும் உலகில் உள்ள அனைத்தையும் சொல்ல முடியும்படியான வார்த்தைகள் இருக்கவேண்டும். அதுவே ஒரு மொழி மட்டுமே பேசுபவர்களுக்கு அந்த மொழி அறிஞர்கள் ஆற்றவேண்டிய முதல் முக்கிய பணி. தாய் மொழியின் செல்வங்களைப் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்வதும் பிற மொழியின் வளங்களை தாய் மொழிக்குக் கொண்டுவருவதும் கற்றறிந்தோர் செய்யவேண்டிய முக்கியமான பணி. புதிய சொற்களை உருவாக்குவது அதில் ஓர் அங்கம்.

சொல் உருவாக்கத்தில் பல வகைகள் இருக்கின்றன. பிற மொழிச் சொற்கள் அறவே கூடாது என்பது ஒரு வகை. சைக்கிள் என்று சொல்லக்கூடாது... ஈருருளி என்றுதான் சொல்லவேண்டும் என்பது அவர்களின் வாதம். இது மொழித் தூய்மைவாதம், அடிப்படைவாதம், பண்டிதத்தனம் மிகுந்த முயற்சி எனப் பல அடுக்குகளைக் கொண்டது. இவர்களில் அடிப்படைவாத மொழித் தூய்மைவாதிகள் அவர்களுடைய பிற இலக்குகளின் காரணமாக முற்றாக ஓரங்கட்டப்படவேண்டியவர்கள். எனவே, அவர்கள் சொல்பவையும் அவ்விதமே அணுகவும் படவேண்டும். இவர்களில் மொழி மீதான பற்று, பெருமிதம் இவற்றின் காரணமாகச் செயல்படும் பண்டித அப்பாவிகள் சொல்பவற்றை ஓரளவுக்குப் பொருட்படுத்தலாம். ஏனெனில் ஆஸ்மாசிஸ் என்பதை சவ்வூடு பரவல் என்று சொல்லும் இடத்தில் இவர்கள் கம்பீரமாக வெளிப்படுகிறார்கள். காஃபியை கொட்டை வடிநீர் என்றோ செல்போனை முந்தக்கூவி என்றோ அடம்பிடிக்கும்போது இவர்கள் மீது பரிதாபமேபடமுடியும்.

பிற மொழிச் சொற்கள் கூடாதுதான். ஆனால், சமகால எளிய தமிழ் பதங்கள் உருவாக்கப்படவேண்டும் என்றொரு வகை. சைக்கிள் என்பதை இரு சக்கர வாகனம் என்றோ மிதி வண்டி என்றோ சொல்லலாம் என்று நெகிழ்ச்சியுடன் புதிய சொற்களை உருவாக்கும் வழிமுறை.

ஏற்கெனவே புழக்கத்தில் வந்துவிட்டிருந்தால் அதை அப்படியே பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது மூன்றாவது வகை. அவர்கள் சைக்கிளை சைக்கிள் என்றே சொல்லலாம் என்பார்கள். ஆங்கிலத்தில் கட்டுமரம் என்ற தமிழ்ச் சொல் அப்படியே எடுத்தாளப்பட்டிருப்பதுபோல் செய்யலாம் என்று சொல்வார்கள்.

இந்த மூன்றில் எது சரி என்று பொதுவாகத் தீர்ப்பு எதையும் சொல்லிவிடமுடியாது. ஒரு சொல்லை மக்கள் ஏற்றுக்கொள்ளும்போது அது அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படும். இல்லையென்றால் அந்தப் புதிய சொல் வழக்குக்கு வராமல் அல்லது சொற்ப நபர்களின் எழுத்துகளில் மட்டுமே இருந்துகொண்டிருக்கும். எனவே, அறிஞர்கள் தமக்குள் ஒன்று கலந்து பேசி ஒரு சொல்லை ஏற்றுக்கொள்ளலாம். அல்லது தனித்தனியாக தமது முயற்சிகளை முன்னெடுக்கலாம். காலமும் மக்கள் திரளும் இடமும் வேண்டியதை வைத்துக்கொள்ளும். அல்லாததை ஓரங்கட்டும். பிழையாக இருந்தலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அவருமே கூட தவறுதலாக நெற்றிக் கண்ணைத் திறக்கும் குணம் கொண்டவர்தானே.

*

புதிய சொல்லை உருவாக்கும்போது முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சம் அது தூய தமிழ்ச் சொல்லாக மட்டுமே இருந்தால் போதாது. அந்தச் சொல் உருவாக்கப்படும் காலகட்டத்து மக்களுக்கு எளிதில் புரியும்படியாக பேச்சு வழக்கில் இருக்கும் சொற்களைக் கொண்டதாக இருக்கவேண்டும். பெயர் வைக்கப்படும் பொருள், விஷயம் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களை அல்லது பெரும்பாலான அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். அந்தவகையில் அந்தப் பெயர் அந்தப் பொருளுக்கான தனித்தன்மையைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கவேண்டும்.

தூய தமிழ் சொல்லாக இருந்தால் போதும். புரியாததாகவோ புதியதாகவோ இருந்தால் தொடர்ந்து பயன்படுத்தப் பயன்படுத்த அந்தச் சொல் சார்ந்த நிரடல்கள் நீங்கும் என்று சிலர் சொல்வதுண்டு. கூடுமானவரை பேச்சு வழக்கிலான தூய தமிழ் சொல்லே நமது முதல் தேர்வாக இருக்கவேண்டும். அதாவது செய்யுள் தன்மை மிகுந்த வார்த்தைகளைவிட உரைநடைத்தனமான வார்த்தைகளையே தேர்ந்தெடுக்கவேண்டும். பிரஷர் குக்கருக்கு அழுத்தக் கொப்பரை என்ற பதத்தைவிட அழுத்தக்கலன் என்பதையே தேர்ந்தெடுக்கவேண்டும். கொப்பரை என்பது அழகிய தமிழ்ச் சொல் என்ற போதிலும். இன்னும் எளிமைப்படுத்த நீராவி சமையற்கலன் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும். பெயர் சூட்டும்போது ஒற்றைப் பெயராக இருக்கவேண்டும் என்பது சரிதான். ஆனால், நாம் இப்போது இடுகுறிப் பெயர்களை அல்ல காரணப் பெயர்களையே சூட்டுகிறோம். எனவே காரணங்களை சற்று விரிவாகச் சொல்லவேண்டிய தேவையிருந்தால் அதையே தயங்காமல் செய்யலாம். ஏனெனில் அந்த சொல்லைக் கேட்ட மாத்திரத்திலேயே யாருடைய பொழிப்புரையும் உதவியும் இன்றி அனைவருக்கும் புரியவேண்டும்.

ரயில் என்பதற்கு புகைவண்டி, தொடர்வண்டி, தொடரி எனப் பல பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆரம்பகால ரயில் வண்டிகள் புகையை உமிழ்ந்தபடி (கரியால் இயங்கியவை) பயணித்தவை என்பதால் புகை வண்டி என்று பெயரிட்டார்கள். கரி அல்லது பிறவகை எரிபொருளைப் பயன்படுத்தும் எல்லா வாகனங்களுமே புகையை உமிழ்பவைதான். எனவே, புகை வண்டி என்ற பெயர் பொருந்தாது. அதோடு நவீன கால மின்சார ரயில்கள் புகையை உமிழ்வதில்லை. எனவே அந்தப் பெயர் பொருத்தமற்றுப் போய்விட்டது. தொடர்ச்சியான பெட்டிகளைக் கொண்ட வண்டி என்ற பொருளில் தொடர் வண்டி என்று பெயரிட்டார்கள். அதைச் சிலர் சமீபகாலமாக தொடரி என்று சுருக்கி அழைக்கிறார்கள். இதுகூட அவ்வளவு பொருத்தமான பெயர் அல்ல. ரயில் என்ற வாகனத்தின் ஆதாரமான அம்சம் அது ரயில் என்ற தண்டவாளத்தில் ஓடும் வண்டி என்பதுதான். எனவே, தண்டவாள வண்டி என்பதுதான் மிகவும் பொருத்தமான பெயர். தண்டவாளம் என்பது இடுகுறிப் பெயர். இரும்புப் பாதை என்பது இருப்புப் பாதை என்று மருவி பயன்படுத்தப்படுவதுண்டு. எனவே இரும்புப்பாதை வண்டி என்பதுதான் மிகவும் பொருத்தமான பெயர். தொடரி போன்ற புதிய சொற்களெல்லாம் தொடர்ந்து சில வருடங்கள் பயன்படுத்திய பிறகே மக்களுக்குப் புரிய ஆரம்பிக்கும். ஆனால், இரும்புப் பாதை வண்டி என்பது சொன்ன மறு நிமிடமே அனைவருக்கும் புரிந்துவிடும். எனவே இதுபோன்ற வார்த்தைகள் இருக்கும்போது அவற்றுக்கே முன்னுரிமை தரவேண்டும்.

செவ்வ்வியல், செய்யுள் பதங்களைப் பயன்படுத்துவதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், பழங்காலத்தில் ஒரு பொருளைத் தந்த வார்த்தை இன்றைய காலகட்டத்தில் வேறொரு பொருளைத் தரக்கூடும். உதாரணமாக, நாற்றம், வாடை என்ற வார்த்தைகள் பழங்காலத்தில் வாசனை, வட திசைக் காற்று என்ற நல்ல அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டன. ஆனால், இன்று அவை மோசமான வாசனை என்ற அர்த்தத்தைத் தருகின்றன. எனவே செண்ட் என்ற வார்த்தையை நாற்றத் திரவம் என்று சொல்லக்கூடாது. வாசனைத் திரவியம் என்றோ நறுமணத் திரவியம் என்றோதான் சொல்லவேண்டும்.

சொம்னாம்புலிஸம் - இதை துயில் நடை என்று சொல்கிறார்கள். அழகான கவித்துவமான தமிழ்ப் பெயர். ஆனால் சொம்னாம்புலிஸம் என்பது  தூக்கத்தில் நடக்கும் வியாதி. அதற்கு கவித்துவமான பெயர் வைத்தால் அந்த நோயை நாம் ரசிக்க ஆரம்பித்துவிடுவோம். எல்லாருக்கும் அது வராதா என்று ஏங்கவைத்துவிடும். நோய் என்ற அச்சமும் பயமும் எச்சரிக்கையும் அந்தப் பெயரில் இருக்கவேண்டும். தூக்க நடை வியாதி என்று சொல்லவேண்டும். துயில் என்ற அழகிய வார்த்தையை ஒரு நோய்க்கு நிச்சயம் வைக்கவே கூடாது.

எனவே, நாம் உருவாக்கும் சொல் தூய தமிழ் பெயராக இருந்தால்மட்டும் போதாது, உரை நடைத் தன்மை கொண்டதாக, இன்றைய பொருளைக் குறிப்பதாக இருக்கவேண்டும். எந்தப் பொருளுக்கு அந்தப் பெயரை வைக்கிறோமா அதன் ஆன்மாவை வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும்.

எல்லா சமூகங்களிலும் சொந்தப் பெருமிதங்கள், பாரம்பரியம் ஆகியவற்றை அளவுக்கு அதிகம் திணிக்கும் அல்லது பாதுகாக்க விரும்பும் அடிப்படைவாத இயக்கங்களும் இருக்கும். பிற அடையாளங்களுடன் நட்புறவு பாராட்டி வளர விரும்பும் சக்திகளும் இருக்கும். தாலிபானிசத்தில் ஆரம்பித்து இன்னபிற பிரிவினைவாதிகள் வரை அனைவரும் தமது அடிப்படைவாத இலக்குகளை வென்றெடுக்கும் நோக்கில் புறக் கலப்பை அறவே வெறுப்பவர்களாக இருப்பார்கள். புதிய சொல் உருவாக்கத்தில் அவர்கள் மொழித் தூய்மைவாதம் பேசுபவர்களாக இருப்பார்கள். இப்படியான சொல் உருவாக்கம் அதன் மென்மையான வடிவத்தில்கூட தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு அபாயங்களை உள்ளடக்கியவையே. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னவரும் வந்தாரை வாழவைக்கும் குணம் கொண்டவருமான தமிழரே நமது வழிகாட்டியாக இருக்கவேண்டும். அவர் பிற மொழிகளை தன்னை அழிக்க வந்த சக்தியாக நினைத்து வெருள மாட்டார். பிற அடையாளங்களை தமது எதிரியாக முத்திரை குத்தி வெறுக்கமாட்டார். அவருக்கு மொழி என்பது சக மனிதர்களுடனும் உலக மனிதர்களுடனும் நட்புறவை உருவாக்கும் பாலம் போன்றது. தன் இனம் என்று தன்னைச் சுற்றி எழுப்பும் பாசி படிந்த மதில் சுவர் அல்ல. புதிய சொற்களை உருவாக்கும்போது இந்த விஷயத்தை மனதில் கொண்டு செயல்படுவோம். நம் தாய் மொழியை மட்டுமல்லாமல் பிறரின் தாய் மொழிகளையும் நேசிப்போம்.

Monday 13 March 2017

சுவாமி அம்பேத்கர் - 9

(9)

ஏற்கெனவே மடாலயத்தை சீர்திருத்த அவர் எடுத்த நடவடிக்கைகள் பலரைக் கோபப்பட வைத்திருந்தது. இப்போது அறநிலையத்துறையையும் அரசியல்வாதிகளையும் நேரடியாகப் பகைத்துக்கொள்ளவே அவர்கள் இவரை பழிவாங்க முடிவுசெய்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் சுவாமிஜிக்களுக்கு இழைக்கப்படும் துரோகங்கள் அல்லது எதிரிகள் அவரை வீழ்த்த முன்னெடுக்கும் அவதூறுகள் என்பவை பாலியல் அவதூறுகள், கொலைப் பழி, சுற்றுச் சூழலை சீரழித்ததாகப் புகார், அந்நியச் செலாவணி மாற்றத்தில் ஊழல் போன்றவை முன்வைக்கப்படுகின்றன. சில பிழையான சுவாமிஜிக்கள் தாமே இவற்றைச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படிச் செய்யாதவர்களை அப்படிச் செய்ததாக வலையில் சிக்கவைக்கிறார்கள். ஆக நம் நாட்டில் இரண்டுவகையான சுவாமிஜிக்கள் இருக்கிறார்கள். ஒன்று: தவறு செய்பவர்கள். இன்னொன்று தவறு செய்ததாக அவதூறு செய்யப்படுபவர்கள். நிஜத்தில் இரண்டு வகை சுவாமிஜிக்களுமே தோற்றவர்களாக இருக்கின்றார்கள். நமது கதாநாயகர் அடிப்படையில் நல்லவர் மட்டுமல்ல, அவருக்கு இழைக்கப்படும் அவதூறுகளையும் தீமைகளையும் வென்றுகாட்டக்கூடியவரும் கூட.

சுவாமி அம்பேத்கர் மீதும் பாலியல் புகார் முன்வைக்கப்படுகிறது. சதிகாரர்கள் வேண்டுமென்றே ஒரு பெண்ணை சிஷ்யையாக (அருந்ததி தாய் என்பவரை) அனுப்பி சில வீடியோக்களை எடுத்துவைத்து மிரட்டுகிறார்கள். பிற மதத்தினரை இழிவுபடுத்தும்வகையில் அறிக்கைவிடும்படி பிணை மிரட்டல் விடுக்கிறார்கள். இளையவரோ மறுத்துவிடுவார். எதிரிகள் அந்த வீடியோவை வெளியிட்டு அவரை சந்தி சிரிக்கச் செய்வார்கள். ஊரே கூடி அவரைத் தூற்றும். அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும். சுவாமிஜி அமர்ந்தபடியே சாட்சி சொல்லலாம் என்று நீதிபதி அனுமதி கொடுப்பார். ஆனால், அவரோ வேண்டாம் அந்த நடைமுறையை எல்லா குற்றவாளிக்கும் நீங்கள் மாற்றி அமைத்து சட்டம் இயற்றுங்கள். இப்போதைக்கு நான் குற்றவாளிக் கூண்டில் நின்றபடியே பதில் சொல்கிறேன் என்று சொல்கிறார்.

அந்த வீடியோவில் இருப்பது அவரல்ல... அது கிராஃபிக்ஸ் செய்யப்பட்டது என்று சொல்லும்படி வழக்கறிஞர் சொல்லியிருப்பார். நீதிபதியும் அதை ஏற்றுக்கொண்டு அவரை விடுதலை செய்ய சம்மதித்திருப்பார். பக்தர்களும் அவரை ஏற்கத் தயாராக இருப்பார்கள். ஆனால், குற்றவாளிக் கூண்டில் ஏறிய சுவாமிஜி... அந்த வீடியோவில் இருப்பது நான் தான். துறவறம் மிகவும் உயர்வான லட்சியம். என்னால் அதை நிறைவேற்ற முடியவில்லை. என்னை மன்னியுங்கள். நீங்கள் என்ன தண்டனை தந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்கிறார்.

அனைவரும் அதிர்கிறார்கள். ஆனால், நீதிபதி இளையவருக்கு சாதகமாகவே தீர்ப்பை வழங்குகிறார். நீங்கள் குற்றம் செய்ததாகச் சொல்கிறீர்கள். ஆனால், அந்த வீடியோ கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டதுதான். நீங்கள் செய்த நல்ல செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களை அவமானப்படுத்த அப்படிச் செய்திருக்கிறார்கள். எனவே உங்களை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது என்று தீர்ப்பளிக்கிறார். ஆனால் இளையவரோ உங்கள் தீர்ப்பைவிட எனக்கு என் பக்தர்கள் தரும் தீர்ப்பே மிக முக்கியம். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அமல்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறார்.

பக்தர்கள் கூடிக் கலந்து பேசிவிட்டு இளையவர் குற்றவாளியே என்று தங்கள் தீர்ப்பை எழுதிக் கொடுக்கிறார்கள்.

நம்பிக்கை மோசடி, திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்ட உறவு, திருமணம் செய்துகொள்வதாகப் பொய் சொன்னது என பல குற்றங்களின் அடிப்படையில் இளையவருக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இதுபோன்ற புனிதமான இடத்தில் இருப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும் என்பதால் எந்தவித அபராதமோ, பிணை வாய்ப்புகளோ இல்லாமல் முழு ஏழாண்டும் சிறையில் இருந்தாகவேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார்.

தீர்ப்பை வழங்கிவிட்டு பக்தர்களிடம் திருப்திதானே என்கிறார். திருப்திதான். ஆனால்... எங்களிடம் இரண்டு பரிந்துரைகளும் இருக்கின்றன என்கிறார்கள்.

என்ன அவை என்கிறார் நீதிபதி.

முதலாவது: அவருடைய ஏழாண்டு சிறைத் தண்டனையை அவர் அனுபவித்து முடித்துவிட்டதாக தீர்ப்பு வழங்கவேண்டும்.

இரண்டாவதாக அவர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும். இதுவே எங்கள் தீர்ப்பு என்கிறார்கள்.

மக்களுக்கு சேவை செய்ய முன்வருபவர்களை துறவறம் என்ற சிலுவையில் இனியும் அடிக்கத்தான் வேண்டுமா... ஊருக்கு நல்லது செய்வதற்காக ஒருவர் தன் உள்ளத்துக்கும் உடலுக்கும் துன்பம் தந்துகொள்ளவேண்டுமா? இந்த நவீன யுகத்திலாவது இல்லறத்தில் இருந்தபடியே சமூக சேவை செய்ய மடாலயங்கள் அனுமதிக்கவேண்டும். மேற்கத்திய போப், பாதிரிகளில் ஆரம்பித்து கிழக்கத்திய மடாதிபதிகள் வரை பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். நம் புராணங்களில் கூட தவத்தில் ஈடுபடும் முனிவர்கள் ரம்பை, மேனகை போன்றவர்களால் சம நிலை தடுமாறியதாகப் படித்திருக்கிறோம்.

துறவறம் அடிப்படையில் இயற்கைக்கு எதிரானது... இறைவனுக்கும் எதிரானது. துறவிகள் உலகுக்குத் தேவை என்று இறைவன் கருதியிருந்தால் இனப்பெருக்க உறுப்புகள் இல்லாமல் சிலரைப் படைத்து அனுப்பியிருப்பானே... எனவே அது இறைவனுக்கு எதிரானதுதான். குடும்பம், குழந்தைகள் என்று வந்துவிட்டால் ஒருவர் சமூகத்துக்கு நன்மைகள் செய்வதில் வேகமும் ஆர்வமும் குறைந்துவிடுமென்றால் குறையட்டுமே. சமூகத்தின் நன்மைக்காக தனி ஒருவரை இந்த அளவுக்கு ஒடுக்கவேண்டுமா... அது ஒருவகையில் குழந்தைகளின் இன்பத்துக்காக விலங்குகளைக் கூண்டில் அடைத்து வைப்பதுபோன்ற கொடூரம் அல்லவா..? பொதி சுமப்பதற்காக காளையை லாடம் கட்டி காயடித்து வண்டியில் பூட்டுவதுபோன்ற அராஜகம் அல்லவா..? அது இனியும் தொடரத்தான்வேண்டுமா... நாம் லெளகிக இன்பத்தில் திளைக்க துறவிகளைக் காயடிக்கவேண்டுமா என்ன..? அவர்கள் நமக்குத் தரும் மன நிறைவுக்கும் வழிகாட்டுதலுக்கும் இன்ன பிற உதவிகளுக்கும் நாம் காட்டும் நன்றி விசுவாசம் என்பது இதுதானா..?

துறவிகளுக்கும் தென்றல் வீசும் மாலைகளையும் நிலவு பொழியும் இரவுகளையும் கடக்கத்தானே வேண்டியிருக்கிறது. பட்டாடைகளும் நறுமணத் திரவங்களும் பூசி பூவும் பொட்டுமாக வளைகள் குலுங்க கொலுசுகள் ஒலிக்க வந்துபோகும் பெண்களையெல்லாம் பார்த்த பிறகும் உணர்சியற்றுக் கிடக்கவேண்டுமென்றால் எவ்வளவு பெரிய தண்டனை அது... துறவிகளின் பகல்களை மட்டுமே நாம் பார்க்கிறோம். முடிவற்று நீளும் அவர்களுடைய தனிமை இரவுகளை நாம் யோசித்துப் பார்ப்பதே இல்லை. இது தவறு... அதிலும் ஆண் துறவிகளின் நிலைமை மிக மிக பரிதாபமானது. பெண்களுக்காவது அடிப்படையிலேயே பாலியல் சுதந்தரம் மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆண்களுக்கு அப்படியல்ல. விரும்பித் தேர்ந்தெடுத்த வாழ்க்கையென்றாலும் ஆணாகப் பிறந்தும் துறவியாக இருக்க நேர்வதென்பது மிகவும் துயரம் மிகுந்தது. சொர்க்கத்துக்குப் போயும் சோகமாக வாழ நேர்வதைப் போன்றது. எனவே துறவிகள் திருமணம் செய்துகொள்ள அனுமதிப்போம். அந்தக் காலத்தில் ரிஷியும் ரிஷி பத்தினியுமாக வாழ்ந்ததில்லையா அதுபோல் வாழ அனுமதிப்போம் என்று சொல்கிறார்கள்.

இளைய மடாதிபதி பக்தர்கள் அவர் மீதும் துறவிகள் மீதும் காட்டிய பேரன்பை நினைத்து கண்ணீர் மல்குகிறார். அவரை வீழ்த்துவதற்காக அனுப்பப்பட்டவர்தான் என்றாலும் அந்த நடிகைக்கு சுவாமிஜியின் மீது பரிதாபமே இருந்தது. அதிலும் பாலியல்ரீதியாகத் தன்னைச் சுரண்டியவர்களை மட்டுமே பார்த்துவந்த அவருக்கு சுவாமிஜியைத் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் விடுதலையாகவே உணர்கிறார்.

இளையவரின் லட்சியக் கோவிலில் திருமணம் நடக்கிறது. காவி உடை அணிந்தபடியே தாலி கட்டுகிறார்.

திருமணக் கோலத்திலேயே இளைய மடாதிபதியும் அவருடைய பத்தினியும் ரதத்தில் ஏறி அமர்கிறார்கள். கோவில்களை பக்தர்கள் வசம் ஒப்படைக்கும் புனித யாத்திரை தொடர்கிறது.

சுவாமி அம்பேத்கர் - 8

(8)

கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கால்வாய் சீரமைப்பு, ஏரி, குளங்களைத் தூர்வாருதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருத்தல் போன்ற பணிகளை வழிபாட்டின் ஓர் அங்கமாக முன்னெடுக்கிறார்கள். 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் எந்திரங்களுக்கு அனுமதி இல்லை. ஆனால், உழைப்புக் கூலி தரப்படும். இளைய மடாதிபதி எந்திரங்களுக்கான தொகையை கோவில் நிர்வாகத்திலிருந்து தருகிறார். பணியாளர்களுக்கான கூலியை 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் மூலம் தர வழி செய்கிறார். அப்படியாக ஒரு வருடத்தில் நாடுமுழுவதும் தடுப்பணைகள் கட்டப்பட்டு, ஏரி குளங்கள் தூர் வாறப்பட்டு விவசாயம் உயிர்ப்பிக்கப்படுகிறது.

*

நாத்திகர்கள் புதிதாக ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்கள். எம்மதமும் சம்மதம் என்று இந்து மதம் சொல்வதாகப் பெருமை பீற்றிக் கொள்கிறீர்களே... கோவில்களில் ஏசு கிறிஸ்துவுக்கு சன்னதி கட்டவேண்டியதுதானே என்று கேட்கிறார்கள். பக்தர்களிடம் அந்த விஷயம் கலந்தாலோசிக்கப்படுகிறது. செய்யலாம்தான். ஆனால், பதிலுக்கு சர்ச்சுகளில் சிவனுக்கு தனியாக ஒரு சன்னதி கட்ட அவர்கள் முன்வருவார்களா என்று கேட்கிறார்கள். அதைக் கேட்டதும் நாத்திகர்கள் அலறி அடித்து ஓடுகிறார்கள். ஆனால், இளைய மடாதிபதிக்கு அப்படிக் கிடைக்கும் வெற்றி போதுமானதாக இல்லை. உண்மையிலேயே கோவில் வளாகத்துக்குள் மேரியம்மன், இயேசு, சிலுவை என ஏதேனும் ஒரு உருவச் சிலை வைத்து வழிபடலாம். இந்து மதத்தில் இருந்து பிரிந்து சென்ற கிறிஸ்தவர்கள் தமது வேர்ப் பிடிப்பை இழக்காமல் இருக்கும் நோக்கில் இத்தகைய கோவில்களுக்கு வந்து வணங்கிச் செல்ல அது உதவும். இந்தக் கோவில்களில் பிற இந்து தெய்வங்களுக்கு நடப்பதுபோலவே அனைத்து அபிஷேக, ஆரத்தி சடங்குகள் எந்தவித புறக்கணிப்பும் இல்லாமல் சமத்துவமாக கிறிஸ்தவ சிலைகளுக்கும் முன்னெடுக்கலாம். ஆங்கிலப் புத்தாண்டு கிறிஸ்மஸ் போன்ற எல்லா அந்நிய விழாக்களிலும் அந்த தெய்வங்களுக்கு விமரிசையான பூஜைகள் நடத்தலாம் என்று சொல்கிறார்.

அதுபோலவே, கோவிலின் மேற்கு பக்கத்தில் இஸ்லாமிய வழிபாட்டு மண்டபம் அமைக்கப்படவேண்டும். இஸ்லாமிய மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதுபோல் அல்லாமல் இங்கு ஆண்களும் பெண்களும் தனி வரிசையில் அமர்ந்து தொழுதுகொள்ள வழிசெய்து தரப்படலாம் என்று சொல்கிறார்.

இந்துக்கள் மட்டுமல்ல... கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இளைய மடாதிபதி தன் முடிவில் உறுதியாக இருக்கிறார். சபரி மலைக்குச் செல்லும் இந்து பக்தர்கள் வாபர் மசூதிக்குச் சென்று தொழுவதில்லையா... சபரிமலைக்குக் கூட இஸ்லாமியர்கள் மாலை போட்டுகொண்டு வணங்கச் செல்கிறார்களே... இதுபோல் இங்கும் வந்து போகலாமே என்கிறார். யாரும் அவருடைய கருத்தை ஏற்காமல் போகிறார்கள்.

அனைத்து மதத்தினரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தாக வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி பாரத மாதா ஆலயம் கட்டுவதுதான். மூவர்ணக் கொடியே அந்தக் கோவிலின் மூல விக்கிரஹம் (மின் விசிறி மூலம் அது பட்டொளி வீசிப் பறந்தாகவேண்டும்). இந்திய அரசியல் சாசனமே அந்த கோவிலின் வேத புத்தகம். தேசிய கீதமே அங்கு ஒலிக்கும் ஒரே மந்திரம் என தீர்மானிக்கிறார்கள். உள்ளேயும் வெளியேயும் தேசியக் கொடி பறக்க பாரத மாதா ஆலயம் கிராமந்தோறும் உருவாகிறது.

*

மடாலயத்து மலைக் கோவில் ஒன்றில் விழா நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அந்த விழாவில் கூட்ட நெரிசல், வேலி சவுக்குக் கம்பு உடைதல், விபத்து, காயம் என நடந்துகொண்டே இருக்கும். அந்த மலைக்கோவிலுக்கு முன்னேற்பாடுகள் செய்ய இளைய மடாதிபதி செல்லுவார். மலைக் கோவிலுக்கான பாதையில் சமதளமாக இருக்கும் பகுதிகளிலும் மலை உச்சியிலும் கடைகள் போடப்படும். அவையே நடைபாதையின் பாதி இடத்தை அடைத்துக் கொள்ளும் என்பதால்தான் மக்களுக்கு பெரும் இடைஞ்சல் என்று புரிந்துகொள்கிறார். ஆனால், அந்த சிறு வியாபாரிகளை கடை போடாமல் தடுக்கவும் முடியாது. என்ன வழியென்று யோசிக்கிறார். ஒரு மீட்டர், இரண்டு மீட்டர் பாய் விரித்துப் பரப்பி வைக்கும் விற்பனைப் பொருட்களை அலமாரி போல் செய்து அடுக்கி வைத்தால் ஐம்பது மீட்டருக்குள் அடக்கிவிடமுடியும் என்று ஆலோசனை சொல்கிறார்கள். கோவில் நிர்வாகம் சார்பில் அலமாரிகள் செய்ய உத்தரவிட்டு அவற்றுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கச் சொல்கிறார். விழா விமர்சையாக நடக்கிறது. மக்கள் கூட்டம் நெரிசல் இல்லாமல் வந்துபோகிறது.

விழாவெல்லாம் முடிந்து கடைகள் எல்லாம் ஏரைக் கட்டும்போது ஏதோ தகராறு நடக்கிறது. ஆலய அலுவலகத்தில் இருக்கும் இளைய மடாதிபதி என்ன என்று விசாரிக்கச் சொல்கிறார். ஒரு சிறு வியாபாரி தரை வாடகை, அலமாரி வாடகை கட்டமுடியாமல் தவிக்கிறார். வாடகையைக் குறைத்துக்கொள்ளும்படிக் கேட்கிறாராம். உங்களைச் சந்தித்துப் பேசவிரும்புவதாகவும் சொல்கிறார். கோவில் பணியாளர்கள் அதுமுடியாதென்று தடுக்கிறார்கள் என்று உதவியாளர் சொல்கிறார். அவரை அழைத்துவா நான் பேசுகிறேன். இரண்டுக்கும் சேர்த்து 500 ரூபய்தானே நிச்சயித்திருக்கிறோம். அதுகூடவா கட்டமுடியவில்லை என்கிறார் இளைய மடாதிபதி. கோவில் பணியாளர்களே பார்த்து சரி செய்துவிடுவார்கள். நாம் இதில் தலையிடவேண்டாம் என்று உதவியாளர் சொல்கிறார். இளையவருக்கு குழப்பம் வருகிறது. என்ன விஷயம் என்று கேட்கிறார். உதவியாளர் தயங்கியபடியே உண்மையைச் சொல்கிறார். கோவில் கணக்கில் 500 ரூபாய்தான் வசூலிக்கப்படும். கோவில் பணியாளர் தன்னுடைய கணக்காக ஐந்தாயிரம் வசூலித்துக்கொள்வார் என்று சொல்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியுறும் இளையவர் சட்டென்று எழுந்து புறப்படுகிறார். உதவியாளர் அவரை சமாதானப்படுத்தி கோவில், மடாலயக் கணக்குகள் நிர்வகிக்கப்படும் விதம் பற்றி எடுத்துச் சொல்கிறார். எல்லா வருவாயும் இப்படித்தான். ஆயிரம் ரூபாய் வசூலிச்சிட்டு அம்பது ரூபாய்தான் கணக்கு காட்டுவார்கள் என்கிறார்.

இளையவர் மறு நாள் பூஜை புனஸ்காரங்கள் முடிந்ததும் நேராக மூத்த மடாதிபதியிடம் இது பற்றிப் பேசுகிறார். அவரோ நம்மால் எதுவும் செய்ய முடியாது. இதுவொரு பெரிய புதைகுழி இறங்கினால் நம்மை அழித்துவிடும். கூடுமானவரை இந்த லெளகீக கணக்கு வழக்குகளில் நாம தலையிடாம இருக்கறதுதான் நமக்கு நல்லது. நம்ம மடாலயத்தோட நிலைமை மட்டுமல்ல... எல்லா இந்துக் கோவில்களோட நிலைமையும் இதுதான் என்கிறார். இளையவருக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அரசியல்வாதிகளையும் அற நிலையத்துறை அதிகார வர்க்கத்தையும் எதிர்க்கவும் முடியாது. இந்த முறைகேடு தொடர அனுமதிக்கவும் முடியாது. என்ன செய்ய என்று யோசிக்கிறார். வணிக நிறுவனங்களைப் பொறுத்தவரையில் அரசின் கட்டுப்பாடு குறைவாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் தனியார்மயமாக்கம் நடந்தேறியிருப்பதைப் போல் ஒவ்வொரு கோவிலும் ஓர் அறக்கட்டளையாக பதிவுசெய்யப்பட்டு பக்தர்களை உறுப்பினர்களாகக் கொண்டு பக்தர்களாலேயே நிர்வகிக்கப்படுவதாக ஆக்கவேண்டும் என்று முடிவுசெய்கிறார். தனது கொள்கைக்கு ஆதரவாக மக்களை ஒருங்கிணைக்க முதலில் விவேகானந்தர் பாறையில் இருந்து தொடங்கி நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொள்ள முடிவுசெய்கிறார். கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கே என்ற முழக்கத்துடன் யாத்திரை தொடங்குகிறது. For Devotees... By Devotees... Of Devotees... பக்தர்களுக்காக பக்தர்களால் பக்தர்களின் கோவில் என்று ஒவ்வொரு கிராமத்துக்கும் அந்த ரதம் செல்கிறது. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு அறக்கட்டளைக் குழுவை அந்த இடத்திலேயே உருவாக்குகிறது.

*

(தொடரும்)

சுவாமி அம்பேத்கர் - 7

(7)

அடுத்ததாக, கோவில் என்பது அதைச் சுற்றியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக இருக்கவேண்டும். முந்தைய காலகட்டக் கோவில்கள் சுற்றுப் பகுதியில் இருந்த நிலபுலன்களை குறைந்த குத்தகைக்குக் கொடுப்பதாக இருந்திருக்கிறது.

இன்று விவசாயம் மட்டுமல்லாமல் பல தொழில்கள் வந்துவிட்டன. தொழில்புரட்சி, அச்சுத் தொழில் கண்டுபிடிப்பு, போக்குவரத்து வசதிகள் போன்றவை பெருகிவிட்டன. எனவே பாரம்பரியக் கோவில்களில் மதம் சார்ந்த கல்வி மட்டுமே தரப்பட்டுவந்த நிலை மாறி ஒவ்வொரு கோவில் முலமாகவும் இன்றைய தொழில்களுக்கான கல்வி மையம் நடத்தப்படவேண்டும். இன்றைய கல்வி மையங்கள் எல்லாமே அதிக பணம் கிடைக்கும் ஒரு வேலையைப் பெற்றுத் தருவதையே இலக்காகக்கொண்டு செயல்படுகின்றன. கோவில் சார் கல்வி மையங்கள் அந்த வேலையை தர்மத்தின் வழி நின்று செய்யக் கற்றுத் தரவேண்டும். மத நீக்கம் செய்யப்பட்ட பொதுவான பள்ளிகள் ஒருவரை அதிக பணம் சம்பாதிக்கும் மருத்துவராக ஆக்கும்போது கோவில்கள் நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் பார்க்க முன்வரும் மருத்துவர்களை உருவாக்கவேண்டும். அல்லது வாரத்துக்கு ஒரு நாள் கோவில் வளாகத்தில் இலவச வைத்தியம் பார்க்க அந்த செல்வந்த மருத்துவர்கள் முன்வரும்படிச் செய்யவேண்டும். அறிவினான் ஆவதுண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக்கடை. பிறருடைய துயரத்தைத் தனது துயரமாகப் பார்த்துத் தீர்வு சொல்ல முன்வராவிட்டால் கல்வி கற்று என்னதான் பயன் என்று இளையவர் கோவில் சார்பில் இலவச மருத்துவ மையம், இலவச அன்ன தான மையம், சிறு தொழில் பயிற்சி மையம் தொடங்குகிறார்.

கோவிலைச் சுற்றி வசிப்பவர்கள் வீட்டில் யாருக்கேனும் உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் கோவில் சார்பில் பூஜாரியும் வேறு சில பக்தர்களும் சேர்ந்து நோய்வாய்ப்பட்டவர் வீட்டுக்குச் சென்று விரைவில் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்கிறார்கள். கோவிலுக்கு அருகில் மருத்துவமனைகள் இருந்தால் அங்கும் சென்று பிரார்த்தனை செய்கிறார்கள். விபூதி, குங்குமம், சந்தனம் போன்றவை சில நோயாளிகளுக்கு அலர்ஜியைத் தந்துவிடக்கூடும் என்பதால் மருத்துவ அனுமதி பெற்ற பிறகே அவற்றை இட்டுவிடுகிறார்கள்.

கோவிலைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் நடக்கும் அநாதை விடுதிகள், முதியோர் இல்லங்கள், மறு வாழ்வு மையங்கள், மன நல விடுதிகள் ஆகியவற்றுக்குச் சென்று இளைய மடாதிபதி தலைமையில் உதவிகள் செய்கிறார்கள்.

பக்தர்கள் தாம் கொடுக்கும் பணத்தை எந்தெந்த சேவைக்கு எத்தனை சதவிகிதம் என்று ஒரு படிவத்தில் எழுதி பணத்துடன் சேர்த்து ஒரு கவரில் போட்டு உண்டியலில் போடவேண்டும். மாதம் ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை உண்டியலைத் திறந்து பணத்தை எண்ணும்போது ஆயிர ரூபாய் காணிக்கையாகக் கொடுத்த நபர் கல்விக்கு ஐம்பது சதவிகிதம், மருத்துவத்துக்கு 25 சதவிகிதம், கோவில் நிர்வாகப் பணிகளுக்கு 25 சதவிகிதம் என்று எழுதியிருந்தால் அந்த ஆயிரம் ரூபாயை அந்தவிதமாகவே பிரித்துச் செலவிடவேண்டும். இதற்கான படிவத்தையும் கவரையும் ஒவ்வொரு கோவிலிலும் கோவில் நிர்வாகம் அச்சிட்டுத் தரவேண்டும் என்று இளையவர் ஒரு விதிமுறை கொண்டுவருகிறார். கோவிலில் கல்விக்கு, மருத்துவத்துக்கு, கோவில் நிர்வாகப் பணிகளுக்கு, பிற சேவைகளுக்கு என்று நான்கு உண்டியல் வைக்கலாம் என்று பக்தர்கள் ஆலோசனை சொல்கிறார்கள். அப்படி நான்கு உண்டியல் வைத்தால் மிகப் பெரிய இடத்தை அதுவே எடுத்துக்கொள்ளும் என்பதால் ஒரே உண்டியலை நான்காகப் பிரித்து நான்கு திறப்புகளை வைத்து ஒவ்வொன்றின் மேலும் ஒவ்வொரு சேவையை எழுதி வைக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

பக்தர்கள் தமது நேர்ச்சையின் ஓர் அங்கமாக கோவில்களில் சர்க்கரைப் பொங்கல், கலந்த சாதம், பொங்கல் போன்றவற்றைத் தருவதுபோல் அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு அவரவர் வகுப்புக்கான பாட புத்தகங்கள், சிடிக்களை வாங்கித் தரலாம் என்று இளைய மடாதிபதி சொல்கிறார். ஒவ்வொரு கோவிலிலும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருக்கவேண்டும். அதில் வாரந்தோறும் உலகின் மிகச் சிறந்த அறிவியல் பாடங்கள், உலகின் மிகச் சிறந்த ஆவணப்படங்கள், சார்லி சாப்ளின் படங்கள், தாய்மொழி வழியில் உலக விஷயங்கள், மாற்றுக் கல்வி வகைகள், இந்து சமூக சேவை மையங்கள் பற்றிய ஆவணப்படங்கள், காளி பேன் ஆறு சீரமைப்பு போன்ற முன்னெடுப்புகள், புகழ் வெளிச்சம் படாத சமூக சேவகர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றைக் பார்க்கச் செய்யலாம். பூஜாரி என்பவர் இந்தக் குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தரும் ஆசிரியராகவும் இருக்கவேண்டும். அர்ச்சகர் தேர்வோடு, டிகிரி படிப்பும் முடித்தவர்களுக்கு இதில் முன்னுரிமை தரலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.

கோவிலையொட்டிய ஒரு பகுதியில் பக்தர்கள் தாம் தானமாகக் கொடுக்க விரும்பும் பொருட்களைக் கொண்டுவந்துவைக்கலாம். தேவைப்பட்டவர்கள் அதை எடுத்துக்கொள்ளலாம்.

கோவிலுக்குக் காணிக்கையாக மரக் கன்றுகளைத் தரலாம். தேவைப்பட்டவர்கள் அதை தமது வீட்டுக்குக் கொண்டு சென்று நட்டு வளர்க்கலாம். அல்லது கோவில் நிர்வாகமே கோவிலைச் சுற்றிய பகுதிகளில் அந்தக் கன்றுகளை நட்டுப் பராமரிக்கலாம்.

கோவில் ஸ்தல விருட்சத்தில் ஒவ்வொரு பக்தரும் தமது பிரார்த்தனைகளை காகிதத்தில் எழுதிக் கட்டவேண்டும். அதை கோவில் நிர்வாகிகள் படித்துப் பார்த்து அந்தத் தேவைகளை கோவில் வாசலில் ஒரு கரும் பலகையில் எழுதிவைக்கவேண்டும். உதாரணமாக ஒருவர் சிறு தொழில் தொடங்க விரும்புகிறார். அதற்கான பணம் கிடைக்கும்படி இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறாரென்றால் இன்னொரு பக்தர் அந்த தொழில் தொடங்க தன்னால் முடிந்த தொகையை கொடுக்கலாம். இப்படியான லெளகீகத் தேவைகளுக்கு என்று தனியாக ஒரு மரமும் குழந்தைவரம், நோய் தீர வேண்டிக்கொள்ளுதல் போன்ற இறைவனின் கருணையை எதிர்பார்த்துச் செய்யும் வேண்டுதல்களுக்குத் தனி மரம் என்றும் வைத்துக்கொள்ளலாம் என்று தீர்மானிக்கிறார்கள்.

கோவில் வழிபாடு என்பதோடு யோகா, தியானம் ஆகியவற்றுக்கான வசதி வாய்ப்புகளையும் கோவில் வளாகத்தில் பிரார்த்தனை அல்லாத நேரங்களில் கிடைக்கச் செய்யலாம் என்று முடிவு செய்யப்படுகிறது.

*

திருப்பதி, பழனி, சபரிமலை போன்ற பெரும் கூட்டக் கோவில்களில் பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தில் நசிவில் இருக்கும் பாரம்பரியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை அங்கு நடத்த ஏற்பாடு செய்யலாம். இப்போது திருப்பதி போன்ற இடங்களில் தொலைகாட்சிப் பெட்டிகளில் கோவில் நிகழ்வுகள் அல்லது புராண திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன. அதற்கு பதிலாக புராண நாடகங்களை, கலை நிகழ்வுகளை நேரடியாக நடத்தலாம் என்று ஆலோசனை வழங்குகிறார் இளைய மடாதிபதி.

*

கோவில்கள் என்பவை கலப்புத் திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு அடைக்கலம் தரும் பாதுகாப்பு மையமாகத் திகழவேண்டும். அப்படி ஏதேனும் காதலர்கள் அங்கு வரும்போது அக்கம்பக்கத்தில் வசிக்கும் பக்தர்கள் தமது வீடுகளில் அவர்களுக்கு அடைக்கலம் தரவேண்டும். அல்லது கோவிலில் வந்து இருந்து தங்கி அந்தக் காதலர்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டும் என்று சொல்கிறார்.

இது பெரிய பிரச்னையைக் கிளப்புகிறது. பக்தர்கள் குழுவில் இதனால் பெரும் விரிசல் விழுகிறது. என்னதான் இறை நம்பிக்கை, சமூக சேவை போன்றவற்றுக்கு ஆதரவு கிடைத்தாலும் சாதி உணர்வில் இருந்து யாரும் வெளிவரத் தயாராக இல்லை. சொந்த மதத்துள்ளான திருமணத்திலேயே இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இருப்பதுபோல் சொந்த சாதிக்குள்ளான திருமணமே இந்து மதத்தில் அனைவருடைய லட்சியமாகவும் இருக்கிறது. பிற மதங்களைப் பொறுத்தவரையில் வேற்று மதத்து மணமகனையும் மண மகளையும் தமது மதத்துக்குள் இழுத்துக்கொள்வதன் மூலம் இந்த பிரச்னையைத் தந்திரமாக, ஒருவகையில் அராஜகமாகத் தீர்த்துக்கொள்கிறார்கள். சாதி மாறுவது சாத்தியமில்லையென்பதால் இந்து சமயத்தில் இது பிரச்னையாக இருக்கிறது.

இளைய மடாதிபதி இதற்கு ஒரு யோசனை சொல்கிறார். சாதி மீறித் திருமணம் செய்துகொள்ள முன்வருபவர்கள் இருவரும் புத்த மதத்துக்கு மாறித் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று சொல்கிறார். இந்து மதத்தின் அடிப்படைவாத குழுக்கள் இந்த மத மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். இடைநிலை சாதியினரும் கடைநிலை சாதியினரும் இந்த வழிமுறையை ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படியாக, சாதி மாறித் திருமணம் செய்துகொள்பவர்களுக்கென்றே ஒரு புத்தர் சன்னதி ஒவ்வொரு கோவிலிலும் கட்டப்பட்டு அங்கு சாதி கடந்த திருமணங்கள் விமரிசையாக நடக்கின்றன.

*

(தொடரும்)

சுவாமி அம்பேத்கர் - 6


(6)

அடுத்ததாக, இப்போது கர்ப்ப கிரஹத்தில் சிலைகள் மிகவும் சிறியதாக இருக்கின்றன. கர்ப்ப கிரஹ வாசலும் மிகவும் சிறியதாக இருக்கிறது. விக்கிரகத்துக்கு நேர் எதிரில் இரு மருங்கும் நிற்கும் 30-40 பேர் மட்டுமே நல்ல முறையில் அபிஷேகம், தீபாராதனை போன்றவற்றைப் பார்க்க முடிகிறது. திருப்பதி, சபரிமலை, பழனி போன்ற பெரும் கூட்டக் கோவில்களில் இதனால் இறைவனைப் பார்க்க பத்து விநாடிகள் மட்டுமே ஒதுக்கமுடிகிறது. இப்படியான அரிதான, கிராக்கி மிகுந்த, எளிதில் கிடைக்க முடியாததாக அந்த தரிசனத்தை வைத்திருப்பது ஒருவகையில் பக்தருக்கு கூடுதல் தெய்வ அனுபவத்தைத் தரத்தான் செய்கிறது. ஒருவேளை திருப்பதி அல்லது சபரி மலை கோவிலில் அரை மணி நேரம் உட்கார்ந்து கும்பிடலாம் என்று ஏற்பாடு செய்தால் அந்த தெய்வ அனுபவத்தின் வீரியம் பக்தர் மனதில் குறைந்துவிட வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்தக் கோவில்களில் தரிசனம் சார்ந்து எந்த மாற்றமும் இப்போதைக்கு எடுக்கவேண்டாம். ஆனால், பிற அன்றாட, அருகமை வழிபாட்டு மையங்களில் இப்படி இருப்பது சரியல்ல.

பொதுவாகவே கோவில்களில் வழிபாடு ஆரம்பித்த காலகட்டத்தில் பக்தர்கள் கூட்டம் இவ்வளவு கிடையாதென்பதால் சிறிய கர்ப்பகிரஹமும் சிறிய சிலையும் போதுமானதாக இருந்தது. ஆனால், இன்று மக்கள் தொகை பெருகிவிட்டது. எனவே, ஒரே நேரத்தில் குறைந்தது 100-200 பேர் தரிசிக்க முடியும்வகையில் கர்ப்பகிரஹத்தையும் சிலையையும் மாற்றி அமைக்கவேண்டும். அதற்கு பக்தர்கள் தமது யோசனைகளைச் சொல்லலாம் என்கிறார் இளையவர்.

இன்றைய கர்ப்ப கிரஹமானது பக்தர்கள் நின்று வணங்கும் இடத்தில் இருந்து சுமார் இரண்டு மூன்றடி உயரத்தில் இருக்கிறது. பத்திருபது படி உயரத்தில் இருந்தால் ஒரே நேரத்தில் அதிகம் பேர் பார்க்க முடியும். அதுபோல் கர்ப்ப கிரஹ வாசல் கதவை அகலமாக்கி அல்லது மூல விக்கிரகத்தைப் பெரிதாக்கினால் அதிகம் பேர் பார்க்க வழி பிறக்கும் என்று ஒருவர் சொல்கிறார்.

இப்போதும் நங்க நல்லூர், சுசீந்திரம் போன்ற ஊர்களில் ஆஞ்சநேயர் உருவச் சிலை பிரமாண்டமாக இருக்கிறது. கருவறையும் கிடையாது. ஒரே நேரத்தில் 100-200 பேர் நல்ல முறையில் அனைத்து அபிஷேக ஆராதனைகளைப் பார்க்க முடியும் என்கிறார் இன்னொருவர்.

இப்போது எல்லா கோவில் தெய்வங்களும் கிழக்கு பார்த்த நிலையிலேயே இருக்கின்றன. எனவே ஒரு பக்கத்து வாசல் வழியாக மட்டுமே இறைவனைக் கும்பிட முடிகிறது. இதற்கு பதிலாக கருவறையில் நான்கு பக்கமும் பார்க்கும்படியாக நான்கு வாசல்களை வைத்து நான்கு சிலைகளையும் அதற்கேற்ப வைத்து இறைவனைக் கும்பிட வழி செய்யலாம் என்கிறார் ஒருவர்.

ஆனால், கிழக்குதான் புனிதமான திசை. வேறு திசைகளைப் பார்ப்பதுபோல் சிலைகளை அமைப்பது சரியல்ல என்கிறார் இன்னொருவர்.

கிழக்கு புனிதமான திசைதான். ஆனால், பிற திசைகள் புனிதமற்றவை என்று அர்த்தமல்ல. ஒரு துறவி கோவிலுக்கு எதிரில் இருந்த மண்டபத்தில் படுத்துக்கொண்டிருந்தார். தலையை மேற்குப் பக்கமாக வைத்து காலை கிழக்குப் பக்கமாக அதாவது கோவிலுக்கும் சாமிக்கும் நேராக வைத்துக்கொண்டு படுத்திருந்தார். பக்கத்தில் இருந்தவர் இப்படி சாமிக்கு நேராக காலை நீட்டிக் கொண்டு படுப்பது தவறு அல்லவா என்று கேட்டபோது, இறைவன் இல்லாத இடத்தைச் சொல். அந்த திசை நோக்கிக் காலை நீட்டிக் கொள்கிறேன் என்றாராம். எனவே இறைவன் எங்கும் நிறைந்திருக்கும் நிலையில் எல்லா திசைகளுமே புனிதமானவைதானே என்கிறார் இளையவர்.

பக்தர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். நான்கு திசைகளில் சிலையை வைக்கபால் அல்லது ஒரே தெய்வச் சிலையை சுழல் மேடையில் அமைத்து 360 டிகிரி சுற்றுவதுபோல் செய்தால் அனைத்து பக்கத்தில் அமரும் பக்தர்களும் ஒரே நேரத்தில் வழிபட வழி பிறக்கும் (கிரிக்கெட் மைதானத்தை சுற்றி அமர்ந்து ரசிகர்கள் பார்ப்பதுபோல்) என்று முடிவு செய்கிறார்கள்.

இது போன்ற ஆலோசனைகளை அனைத்து கோவில்களுக்கும் அனுப்பி அந்தந்த ஊரில் எப்படி விரும்புகிறார்களோ அதற்கு ஏற்ப அமைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார்.

*

பூ, பழம், அர்ச்சனை, மாலை, அபிஷேகங்கள், தீப ஆராதனை, பிரசாதம், விபூதி, குங்குமம், சடாரி, துளசி, புற்று மண் என பாரம்பரியக் கோவிலில் இருப்பவை அனைத்தும் அப்படியே தொடரலாம் என்று பக்தர்கள் சொல்கிறார்கள்.

*

அடுத்ததாக அர்ச்சனை மொழி பற்றிய கேள்வி வருகிறது.

கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்கிறார். ஆனால், சமஸ்கிருதம் கூடாது என்று சொல்லவில்லை. மடாலயக் கோவிலில் தமிழில் அர்ச்சனை முடிந்த பிறகு சமஸ்கிருதத்திலும் வேத மந்திரங்கள் முழங்கச் செய்கிறார். மொழிப்பற்றை அவர் மொழிப் பெருமிதமாகவும் மொழி உரிமையாகவும் மட்டுமே முன்னெடுக்கிறார். மொழி வெறியாக அல்ல.

அக்கம் பக்கத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடக்க வழி செய்கிறார். அதைத் தொடர்ந்து நாடுமுழுவதும் அந்த விஷயம் கவனம் பெறுகிறது. அகோபில மடம் ஜீயர் ஸ்வாமிகள் தமிழில் அர்ச்சனை கூடாது என்கிறார். முதலமைச்சரும் தமிழில் அர்ச்சனை வேண்டும் என்று கேட்பவர்கள் பண்பாடு அற்றவர்கள் என்று பொதுவெளியில் விமர்சிக்கிறார். இதைக் கண்டு மனம் வேதனையுறும் இளைய தம்புரான் 63 தமிழறிஞர்களை அழைத்துகொண்டு முதலமைச்சரைச் சென்று சந்திக்கிறார்.

அப்பர் அடிகளே வடமொழியும் தென் தமிழும் மறை நான்கும் ஆனவன் காண் என்று பாடியிருப்பதை எடுத்துச் சொல்கிறார். வைணவக் கோவில்களில் ஆழ்வார்கள் அருளிய பிரபந்தங்கள் காலகாலமாக முழங்கிவருகின்றன. தமிழ் அர்ச்சனையை ஆரம்பித்துவைத்ததே சிவனும் திருமாலும்தான். அவர்களைப் பற்றிப் பாடப்பட்டிருக்கும் பாடல்கள் எல்லாமே அர்ச்சனை மந்திரங்களே என்றெல்லாம் எடுத்துச் சொல்கிறார். அதைத் தொடர்ந்து முதல்வர் தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதலமைச்சர் உடனிருக்க இளைய தம்புரான் தலைமையில் தமிழ் மந்திரங்கள் ஓதப்படுகின்றன.

தாய்மொழி, சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளிலும் அர்ச்சனை, பிற மந்திரங்கள் சொல்லப்படவேண்டும். ஒரு நாள் தாய்மொழி, மறு நாள் சம்ஸ்கிருதம் என்றோ காலையில் தாய் மொழி, மாலையில் சமஸ்கிருதம் என்றோ ஒவ்வொரு கோவிலும் இதை தமது பக்தர்களின் விருப்பத்துக்கு ஏற்ப நடத்திக்கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.

*

இளையவர் இப்படி பக்தர்களின் விருப்பத்தைக் கேட்டு சீர்திருத்தத்தை முன்னெடுப்பதைப் பார்க்கும் பெண்ணியவாதிகள், நாத்திகர்கள் ஆகியோர் பக்தர்கள் போல் கோவில்களுக்குள் நுழைந்து தமது அரசியலை முன்னெடுக்கிறார்கள்.

பெண்கள் அர்ச்சகராக்கப்படவேண்டும், மாத தளர்ச்சி நாட்களில் கோவிலுக்கு வர அனுமதிக்கவேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைக்கிறார்கள். இளையவர் புன்முறுவலுடன் அதைப் பட்டிமன்றத் தலைப்பாக முன்வைக்கிறார். பெண்ணியவாதிகள் சொல்லும் வாதங்களுக்கு எளிய பக்தர்கள் பதில் சொல்கிறார்கள். கோவிலில் அமலாகும் ஒழுக்க விதிகள் எல்லாம் ஆதிக்க சக்திகளின் திணிப்பு அல்ல... எளிய மக்களின் விருப்பமே என்பது பெண்ணியவாதிகளுக்குப் புரிகிறது. எனினும் இளையவர் பக்தர்களிடம் சில மாற்றங்கள் கொண்டுவர முயற்சி செய்கிறார். அதன்படி பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகளும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களும் அர்ச்சகராக நியமனம் பெறலாம். மாத தளர்ச்சி நாட்களில் பக்தி உணர்வு பெருகும் பெண்களுக்கென்று தனி தரிசன நேரம் ஒதுக்கப்படலாம். கோவிலுக்குள் நுழையும் முன் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரை எடுத்து முழு உடம்பும் நனையும் வகையில் தலைவழியாக ஊற்றிக்கொண்டு ஈர உடையுடனே தெய்வத்தை அவர்கள் தொழ அனுமதிக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.

*

சில நாத்திகர்கள் கோவில்களில் ஆடு வெட்டிப் பொங்கல் வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். இடை, கடை நிலை சாதிகளின் தெய்வ சன்னதிகள் அமைக்கப்பட்டு அசைவ படையல்கள் நடத்தப்படலாம். ஆனால், அத்தகைய கோவில்களில் திருவிழா நாட்களில் நூற்றுக்கணக்கான ஆடுகள், பன்றிகள், கோழிகள் பலி கொடுக்கப்படுகின்றன. அதற்கு பதிலாக ஒரே ஒரு ஆடு கொண்டுவரப்பட்டு அதன் ஆன்மாவை ஒரு பூசணிக் காயினுள் கூடு விட்டுக் கூடு பாயச் செய்து அந்த பூசணியை சமைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் அப்பமும், மதுவும் தரப்படுவதுபோல் சிறிய அளவில் பிரசாதமாக அனைவருக்கும் தரலாம். அப்படியான ’பலி’ தரப்படும் நாட்களில் திருவள்ளுவரின் கொல்லாமை அதிகாரக் குறள்களே அந்த சன்னதிகளில் மந்திரமாக ஓங்கி ஒலிக்கப்படும். மாமிசம் சாப்பிடுவதைத் தவிர்க்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் அதை தெய்வச் சடங்காகச் சொல்லிச் சாப்பிடுவதையாவது நிறுத்தவேண்டும் என்று பக்தர்கள் முடிவெடுக்கிறார்கள்.

*

சுதந்தர தினம், குடியரசு தினம், உள்ளூர் ராணுவ வீரர்கள், சமூக சேவகர்கள், சுதந்தரப் போராட்ட வீரர்கள் நினைவு தினமன்று அவர்களுடைய நினைவாக பக்தர்கள் அனைவரும் அர்ச்சனை செய்து அவர்களின் குடும்பத்தினருக்கு முதல் மரியாதை செய்து ஆசி பெறலாம். தேச நலனுக்கான பிரார்த்தனைகள், திருவிளக்கு வழிபாடுகள் ஏற்பாடு செய்யலாம் என்று முடிவுசெய்யப்படுகிறது.

*

(தொடரும்)

சுவாமி அம்பேத்கர் - 5



(5)

கோவில் கட்டமைப்பை நவீனப்படுத்துவதை தன் லட்சியமாக எடுத்துக்கொள்கிறார் இளையவர். கருவறைக்குள் அனைத்து சாதியினரையும் அனுமதிக்கலாமா... கோவிலில் அசைவ படையல் கொடுக்கலாமா... கோவில் பணத்தை யார் நிர்வகிக்கவேண்டும் என்பதுபோல் அவர் கொண்டுவரவிரும்பும் சீர்திருத்தம் குறித்து ஒவ்வொரு மாதமும் ஒரு பக்தர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துகிறார். அந்தக் கூட்டத்துக்கு முன்பாக அந்த விஷயம் தொடர்பாக ஒரு பட்டிமன்றம் நடத்துகிறார். பக்தர்களுக்கு அந்த விஷயம் குறித்து சாதக பாதக அம்சங்கள் முழுமையாக முன்வைக்கப்படுகின்றன. பக்தர்கள் அந்த விஷயம் தொடர்பாக முன்வைக்கும் தீர்ப்பை அமல்படுத்துகிறார். அப்படியாக அந்த கோவில் என்பது பக்தர்களால் பக்தர்களுக்காக நடத்தப்படும் மையமாகச் செயல்படுகிறது.

முதல் முதலாக கோவில் கருவறைக்குள் அனைத்து சதியினரையும் அனுமதிப்பது தேவையா என்று ஒரு பட்டிமன்றத்தை நடத்துகிறார். விஞ்ஞானப் பார்வை கொண்டவர்கள், நாத்திகர்கள், பிற மத பேச்சாளர்கள் என பலரும் அந்தப் பட்டிமன்றத்துக்கு அழைக்கப்படுகிறார்கள்.

கோவில் என்பது ஏதேனும் ஒரு தெய்வத்தை மையமாகக்கொண்டு எழுப்பப்படும் கட்டுமானம்.

அது அமைந்திருக்கும் இடத்தைச் சுற்றி வாழும் மக்களின் ஆன்மிகம், பொருளாதாரம், அரசியல், அறிவு, கலை, கலாசாரம், பேரிடர் கால மேலாண்மை என ஒட்டுமொத்த, சமூக வாழ்க்கையின் ஆதாரப் புள்ளியாக அது இருக்கும்.

கோவிலில் இருந்து எவ்வளவு தொலைவில் ஒருவருடைய வசிப்பிடம் இருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து பழங்காலத்தில் அவருடைய சமூக அந்தஸ்து தீர்மானிக்கப்பட்டது. அதற்கேற்பவே அந்தப் பிரிவு மக்களின் வாழ்க்கை நிலையும் இருந்தது. கோவிலைச் சுற்றி வசித்த பிராமணர்கள் சமூக அந்தஸ்திலும் வாழ்க்கை நிலையிலும் உயர்ந்தவர்களாக இருந்தார்கள். கோவிலில் இருந்து தொலைவில் வசித்த கடைநிலை சாதியினருடைய வாழ்க்கை அந்தஸ்து கடைநிலையிலும் வாழ்க்கை வசதிகள் அதற்கேற்பவும் இருந்தன. அப்படியாக சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு கோவில் என்பது ஓர் அங்கீகாரத்தைத் தந்ததாகவும் இருந்திருக்கிறது.

கோவில் என்பது கூட்டம் குழுமும் இடமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை அந்த சமூகத்து அடையாளங்கள், மதிப்பீடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவைக்கவும் செய்கிறது.

நவீன காலக் கோவில்கள் என்பவை பாரம்பரியக் கோவில்களின் நல்ல அம்சங்களைக் கொண்டவையாகவும் அதில் இருக்கும் தீமை களைக் களைந்தவையாகவும் இருக்கவேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் நவீனக் கோவில் = பாரம்பரியக் கோவில் மைனஸ் சாதி ஏற்றத் தாழ்வு என்று இருக்கவேண்டும். எனவே கோவிலில் கருவறைக்குள் யார் வேண்டுமானாலும் நுழைய முடியவேண்டும் என்று நாத்திகர்கள் சொல்கிறார்கள்.

திருப்பதி, சபரிமலை, பழனி எனப் பெரும் கூட்டம் கூடும் கோவில்களில் ஆரம்பித்து பிராமண பூஜை நடக்கும் கிராமப்புற சிறிய கோவில்கள் வரை பெரும்பாலான கோவில்கள் இன்று சாதி சார்ந்த ஏற்றத் தாழ்வுகளில் இருந்து பெருமளவுக்கு வெளியேறிவிட்டிருக்கின்றன. இன்றும் எந்த பிராமணக் கோவிலிலும் கருவறைக்குள் பிற சாதியினர் யாரும் நுழைய அனுமதி இல்லை என்றபோதிலும் அது சாதி சார்ந்த ஒடுக்குதல் அல்ல. ஏனென்றால் பூஜை செய்யும் பிராமணர் நீங்கலாக பிற பிராமணர்களுக்குக்கூட அந்தக் கோவில்களின் கருவறைக்குள் நுழைய அனுமதி கிடையாது. நம்பூதிரிகள், ஐயர்கள், ஐயங்கார்கள், மாத்வர்கள், போத்தி என பிராமணர்களில் இருக்கும் பல்வேறு பிரிவினர் வேறொரு பிரிவைச் சேர்ந்த கோவிலுக்கு அர்ச்சகராக முடியாது. எனவே, எல்லா பிராமணரும் எல்லா பிராமண கோவில் கருவறைக்குள்ளும் நுழைய முடியாது என்ற விதியை அந்தந்தக் கோவில்களின் நிர்வாகம் சார்ந்த, ஆகம விதிகள் சார்ந்த ஒரு வழிமுறையாக மட்டுமே பார்க்கவேண்டும். இது சாதி சார்ந்த பிரச்னை அல்ல. ஒரு இஸ்லாமியர் சர்ச் ஒன்றில் ஒருநாளும் பாதிரியாக முடியாது. ஒரு கிறிஸ்தவர் ஒருநாளும் இமாம் ஆக முடியாது. இங்கு இருப்பது சமத்துவ மறுப்பு அல்ல... மாறுபட்ட வாழ்க்கைப் பார்வைகளுக்கான அங்கீகாரம் மற்றும் விலகி நிற்கும் தன்மை. இந்து மதத்தில் ஒவ்வொரு சாதிப் பிரிவுக்கும் சாதி உட்பிரிவுக்கும் அப்படியான ஒரு தனித்தன்மை இருப்பதால் அதை அனுசரித்துச் செல்வதையே மக்கள் தமது வழிமுறையாக எந்தவித உறுத்தலும் இல்லாமல் பின்பற்றிவந்திருக்கிறார்கள். நம்பூதிரி சந்தனத்தை கிட்டத்தட்ட தூக்கி எறிவதுபோல் போடுவதை அதி உயர்ந்த ஐயர்கூட பவ்யமாகப் பெற்றுக்கொள்ளவே செய்துவந்திருக்கிறார்.

நவீன கோவில் என்பது யார் வேண்டுமானாலும் எந்தக் கோவிலின் கருவறைக்குள் வேண்டுமானாலும் போகமுடியும்படியாக இருக்கவேண்டும். யார் வேண்டுமானாலும் அர்ச்சகராக முடியும்படியாக இருக்கவேண்டும் என்பது உண்மைதான். ஆனால், இந்த இடத்தில் பாரம்பரிய வழிமுறையை எந்த அளவுக்குத் தக்கவைத்துக்கொண்டு நவீனமாக முடியும் என்று பார்க்கவேண்டும் என்று இளைய மடாதிபதி சொல்கிறார்.

ஆரிய சமாஜத்தில் ஆரம்பித்து பாரதியார் வரை பிராமணரல்லாத சாதியினருக்குப் பூணூல் அணிவித்து அனைவரையும் பிராமணர் ஆக்கியிருக்கிறார்கள். ஆரிய சமாஜத்தினர் அதை இன்றும் செய்துவருகிறார்கள். அம்பேத்கர்கூடத் தன் வாழ்நாளில் அப்படியான ஒரு பூணல் வைபவத்துக்குத் தலைமை தாங்கியிருக்கிறார். ராமானுஜர் அஷ்ட அக்ஷர முக்தி மந்திரத்தை  ஊருக்குச் சொன்னால் நரகம் கிடைக்கும் என்று சொன்னபோது என் ஒருவனுக்கு நகரம் கிடைத்தால் பரவாயில்லை.... அதைக் கேட்கும் நபர்கள் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள் என்றால் அதை நான் மனமுவந்து ஏற்பேனென்று சொல்லி கோவிலின் உச்சியில் ஏறி அதை முழங்கியிருக்கிறார். அவர் திருக்குலத்து அதாவது தலித் சாதியினரை பிராமண ஜாதிக்குள் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்.

இந்து தர்மத்தின் ஆரம்ப காலகட்டமான வேத காலம் பிறப்பின் அடிப்படையிலான ஜாதிகளை ஏற்கவில்லை. குணத்தின் அடிப்படையிலான வர்ணத்தையே ஏற்கிறது. அந்தவகையில் சூத்திர ஜாதியில் பிறந்த ஒருவர் தனது நடத்தை மூலம் பிராமணராக முடியும். எனவே, நவீன கோவிலில் இந்த பிராமண வாழ்க்கை முறையை ஏற்க முன்வரும் யாரையும் அர்ச்சகராக அனுமதிக்கலாம். ஒரு பிராமணர் பிராமண வாழ்க்கை முறையில் வாழவில்லையென்றால் பிராமணர்களுக்குப் பிறந்தார் என்ற ஒரு காரணத்துக்காகவே அவருக்குத் தரப்படும் சலுகையைப் பறித்தும்விடலாம். ஆக, கருவறைக்குள் நுழையும் அதிகாரத்தை பிராமணராக வாழ உறுதியெடுக்கும் யாருக்கு வேண்டுமானாலும் தரலாம் என்று முன்வைக்கவேண்டும். இதை கோவில்களை நவீனப்படுத்தும் முயற்சி என்று சொல்ல விரும்புபவர்கள் அப்படிச் சொல்லிக் கொள்ளலாம். பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி என்று சொல்ல விரும்புபவர்கள் அப்படியும் சொல்லிக் கொள்ளலாம். ஆக பிராமண ஜாதியை பிராமண வர்ணமாக மாற்றுவதே முதலில் செய்யவேண்டிய சீர்திருத்தம் என்று ஒருவர் சொல்கிறார்.

இந்த வாத பிரதிவாதங்களைக் கேட்ட பக்தர்கள் கடைசியில் கருவறைக்குள் யார் வேண்டுமானாலும் நுழையலாம். ஆனால், அங்கு நுழையும் முன் பூணூல் போட்டுக்கொண்டுபோகவேண்டும் என்று தீர்ப்பு வழங்குகிறார்கள்.

அதன்படி கோவிலில் கருவறைக்குள் சென்று வழிபடவேண்டும் என்று விரும்புபவர்கள் முன்கூட்டியே தமது பெயரை பதிவு செய்துகொள்ளவேண்டும். அவர்களுக்கு அனுமதி கிடைக்கும் நாளில் காலையில் கோவிலுக்கு வந்து கோவில் குளத்தில் குளித்து சிறிய யாகம் செய்து சமஷ்டி பூணுல் அணிந்துகொண்டு கருவறைக்குள் நுழைந்து இறைவனைக் கும்பிடலாம். இந்த பூணூல் வைபவம் நடத்த நபர் ஒன்றுக்கு 108 ரூபாய் கட்டணம் பூசாரிக்குக் கொடுத்துவிடவேண்டும். பிராமண பூசாரிகள் இதை உற்சகத்துடன் வரவேற்கிறார்கள். நாளொன்றுக்கு பத்துபேர் இப்படி கருவறை நுழைய முன்வந்தால்கூட சுமார் ஆயிரம் ரூபாய்க்கு மேல் அவர்களுக்கு தட்சணை கிடைத்துவிடுகிறது. அனைத்து சாதி பக்தர்களுக்கும் கோவிலில் நடத்தப்படும் பூணூல் வைபவம் என்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது.




(தொடரும்)

சுவாமி அம்பேத்கர் - 4



(4)

இளைய மடாதிபதி மடங்களில் நடக்கும் நிர்வாக முறைகேடுகளைத் தட்டிக் கேட்கிறார். ஒரு முறை மடத்துக்கு சொந்தமான சமையல் பாத்திரங்கள் மிகவும் பழதாகிவிட்டதால் ஏலம் போட முடிவெடுக்கப்படுகிறது. மகா சன்னிதானத்திடம் நிர்வாக தலைவர் அனுமதி கேட்கிறார். சன்னிதானமும் சரி என்று சொல்லிவிடுகிறார். ஆனால், பழையது என்று சொல்லி ஒரு சில மாதங்களுக்கு முன்பாக வாங்கிய புதிய பாத்திரங்களை நிர்வாகி ஏலம் விட்டு தன் ஆட்களை வைத்துக் குறைந்த விலைக்கு எடுத்துச் சென்றுவிடத் திட்டமிட்டிருக்கிறார் என்பது இளைய மடாதிபதிக்குத் தெரியவருகிறது. பொதுவாக இப்படியான ஏலம் நடக்கும் இடத்துக்கு மடாதிபதிகள் வருவது கிடையாது. ஆனால், இளையவரோ முறைகேடுகள் நடந்தால் அதைத் தடுக்க சம்பிரதாயத்தை மீற வேண்டியிருந்தால் தவறில்லை என்று ஏலம் போடப்படும் இடத்துக்குச் செல்கிறார். புதிய பாத்திரங்கள் ஏலத்துக்கு எடுத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து ஏலத்தைத் தடுக்கிறார்.

இதனால், நிர்வாகிக்கு இளையவர் மேல் கோபம் வருகிறது.

அதுபோல் மடத்துக்கு சொந்தமான நிலங்களை அறங்காவலர்கள் தம்முடைய பினாமிகளுக்குக் கொடுத்து அந்த நிலத்தின் வருவாயை அவர்களே அனுபவிப்பது தெரியவருகிறது. உடனடியாக நிலங்களை அவர்களிடமிருந்து மீட்டு ஏழை விவசாயிகளுக்கு குறைந்த குத்தகையில் தானே முன்னின்று வழங்குகிறார் இளைய தம்புரான்.

இதனால் ஆத்திரமடையும் மடத்து நிர்வாகிகள் இளையவரை அங்கிருந்து துரத்தத் திட்டமிடுகிறார்கள். பொதுவாக மகா சன்னிதானங்கள் ஏதேனும் கோவில் அல்லது விழாக்களுக்கு வரும்போது கட்டளைத் தம்புரான்கள்தான் அவர்களுக்கு பூர்ண கும்ப மரியாதை செய்து கால் அலம்பி பாத பூஜை செய்யவேண்டும். ஆனால், இளையவரை ஓரங்கட்டிவிட்டு மடாலய நிர்வாகிகள் அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தனர். ஒரு முறை வைதீஸ்வரன் கோவிலுக்கு மகா சான்னிதானம் வந்தபோது இளையவர் பாத பூஜைசெய்ய முன்னால் வருகிறார். அத்தனை மக்கள் முன்னிலையில் அவரை அவமானப்படுத்திவிட்டு அறங்காவலர் நிர்வாகி தானே அந்த பாத பூஜையைச் செய்கிறார்.

குரு சிஷ்ய உறவில் ஊதியம் வாங்கும் ஊழியர் இடையில் புகுவது தவறு என்று இளையவர் மகா சன்னிதானத்திடம் சென்று முறையிடுகிறார். ஆனால், சன்னிதானம் இளையவரைக் கடிந்து கொள்கிறார். விஷயம் என்னவென்றால், மகா சன்னிதானத்தின் காலை நான் கழுவுவதா... நானும் ஒரு மடாதிபதிதானே என்று இளையவர் திமிராகப் பேசியதாக அறங்காவலர்கள் கோள்மூட்டி விட்டிருக்கிறார்கள்.

*

ஒருமுறை மகா சன்னிதானம் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். வேறொரு ஊருக்குப் போய்விட்டு நள்ளிரவில் திரும்பிய இளையவருக்கு அப்போதுதான் தகவல் தெரியவருகிறது. என்ன செய்ய என்றே தெரியவில்லை. நள்ளிரவில் தொலைவில் இருக்கும் மருத்துவ மனைக்குச் செல்ல வேறு வாகனங்களும் கிடைக்காது. மடத்து கடை நிலைப் பணியாளரிடம் இருக்கும் சைக்கிளை வாங்கிக்கொண்டு பத்து மைல் தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு விரைகிறார். அன்று பார்த்து நல்ல மழை வேறு. இருட்டும் மழையும் சேர்ந்து சதி செய்தபோதும் இளையவர் கிட்டத்தட்ட உயிரைப் பணையம் வைத்து விரைந்து நள்ளிரவில் மருத்துவமனைக்குச் செல்கிறார்.

மகா சன்னிதானம் நல்ல தூக்கத்தில் இருக்கிறார். இளையவர் வந்தது அவருக்குத் தெரியாது. சிறிது நேரம் அருகில் இருந்து பார்க்கிறவர், மருத்துவர்களிடம் நிலைமையைக் கேட்டறிந்துவிட்டு மறு நாள் மடத்து பூஜைகள் முடங்கக் கூடாதென்று இரவே மடம் திரும்புகிறார்.

ஆனால், அவர் வந்து போனதை மடத்து நிர்வாகிகள் பெரிய சன்னிதானத்திடம் சொல்லாமல் மறைத்துவிடுகிறார்கள். வேறொரு ஊரில் இருந்தவருக்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு உடனே திரும்பும்படி இரண்டு நாட்களுக்கு முன்னமே செய்தி அனுப்பி விட்டதாகவும் இளையவர் திரும்பிவராமல் இருந்ததோடு குன்றக்குடி திரும்பிய பிறகும் மருத்துவமனைக்கு வந்து பார்க்காமல் மடத்திலேயே இருப்பதாகவும் கோள் மூட்டுகிறார்கள். உண்மையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக இளையவரிடம் சொல்லவும் இல்லை.

சிகிச்சை முடிந்து மடம் திரும்பும் மகா சன்னிதானம் இளையவர் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார். இப்படியான மனஸ்தாபங்கள் போததென்று ஒருமுறை இளையவர் மடத்தைத் தானே கைப்பற்றத் திட்டமிட்டிருப்பதாகவும் மகா சன்னிதானத்தைக் கொல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் மடத்து நிர்வாகிகள் அவதூறு பரப்புகிறார்கள். இப்படியான நிலையில் இனியும் இங்கு தொடர்ந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்று புரிந்துகொண்ட இளையவர் நேராக மகா சன்னிதானத்திடம் சென்று நடந்தவற்றை முறையிடுகிறார். மகா சன்னிதானத்தின் காலில் விழுந்து விழுந்த நிலையிலேயே தன் தரப்பு நியாயங்களை சொல்லிப்புரியவைக்கிறார்.

*

மயிலாடுதுறையில் சைவ வேளாளர் சார்பில் மகேசுவர பூஜை விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் தலைமையேற்க இளையவர் அழைக்கப்படுகிறார். விழா சிறப்பாக நடக்கிறது. விழா முடிவில் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அது சமபந்தி விருந்து அல்ல. சைவ வேளாளர்களுக்குத் தனி பந்தியும் பிறருக்கு தனி பந்தியுமாக இருக்கிறது. அதைப் பார்த்ததும் இளையவருக்கு வருத்தமும் கோபமும் வருகிறது.

அனைவரையும் ஒரே இடத்தில் அமரவைக்கும்படி விழா அமைப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறார். அவர்கள் மறுத்துவிடவே, இளையவர் அந்த நிமிடமே அந்த இடத்தில் இருந்து வெளியேறிவிடுகிறார். விழா பந்தலில் தனித்தனி இடத்தில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கியவர்கள் இளையவர் தன்னந்தனியாக சுட்டெரிக்கும் வெய்யிலில் நடந்து செல்வதைப் பார்த்ததும் விழுந்தடித்து ஓடி அவரைத் திரும்பி வரச் சொல்கிறார்கள். அனைவருக்கும் ஒரே பந்தி பரிமாறப்பட்டால் வருகிறேன். இல்லையென்றால் இனி இந்த ஊருக்கே வரமாட்டேன் என்கிறார். விழா அமைப்பாளர்கள் தமது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறார்கள். இளையவர் விளம்ப அனைவரும் ஒரே பந்தியில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.

பெரிய புராணத்தில் சாதிகள் இல்லை. சுந்தர மூர்த்தி நாயனாருக்கு கலப்புத் திருமணம் செய்து வைக்கிறார் சிவபெருமான். வேடர் கண்னப்பருக்கும் சிவ ஆச்சாரியாருக்கும் இடையிலான சண்டையில் இறைவன் வேடருக்கே ஆதரவாகச் செயல்படுகிறார் என்பதையெல்லாம் பகிர்ந்துகொண்ட இளையவர் தனது பக்தர்களிடம் ஒரு தலித் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். அதோடு கோவிலைத் தழுவிய குடிகள்... குடிகளைத் தழுவிய கோவில் என்ற தன் திட்டத்தை முன்னெடுக்கிறார்.

*

ஆன்மிகம், இறை நம்பிக்கை, சமத்துவம் போன்றவற்றை வெறும் சொற்பொழிவுக்கான கருப்பொருட்களாக மட்டுமே பார்க்காமல் நடைமுறையிலும் அவற்றைக் கடைப்பிடிக்கிறார். பொதுவாக அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர், செல்வந்தர்கள் எனச் செல்வாக்கு மிகுந்தவர்கள் மடங்களுக்கு வரும்போது அவர்களுக்கு தடபுடலாக வரவேற்பு விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுவதுண்டு. அதே நேரம் தினமும் நடக்கும் அன்னதானத்துக்கு வரும் எளிய மனிதர்களை மடத்து பணியாளர்கள் சற்று அலட்சியமாகவே நடத்துவார்கள். இது தவறு என்று அவர்களுக்குப் புரியவைக்க இளையவர் விரும்பினார்.

ஒரு நாள் மன்னர் பரம்பரையில் சிலர் மடத்துக்கு வரப்போகிறர்கள் என்று பணியாளர்களிடம் சொல்கிறார். அவர்களும் தடபுடலாக விருந்து தயாரித்து விழாபோல் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். அன்று அன்னதானத்துக்கு வந்த எளிய மக்கள் யாரோ பெரிய மனிதர்கள் வரப்போகிறார்கள் போலிருக்கிறது என்று ஓரமாக நிற்கிறார்கள். உள்ளே அறைக்குள் இருந்து அவர்கள் வந்ததைப் பார்த்ததும் இளையவர் வேகமாக ஓடிவருகிறார். பணியாளர்கள் மன்னர் வந்துவிட்டார் போலிருக்கிறது என்று பூர்ண கும்பத்தை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். வாசலில் வந்து பார்த்தால் யாரையும் காணும். இளையவரோ மங்கல வாத்தியங்களை முழங்கச் சொல்கிறார். அவர்களுக்கும் ஒரே ஆச்சரியம். யாரும் வராமல் எதற்காக வாசிக்கச் சொல்கிறார் என்று குழம்புகிறார்கள்.

இளையவரோ ஓரமாக நிற்கும் எளிய மக்களை நோக்கிச் செல்கிறார். பணியாளர்களை அழைத்து பூர்ண கும்பத்தை கையில் வாங்கி எளிய மக்களை வரவேற்கிறார். இவர்கள் தான் மன்னர்கள்.... என்று கம்பீரமாக அவர்களை அழைத்துச் செல்கிறார். எல்லாரையும் சமமாக நடத்தவேண்டும் என்று வாய் வார்த்தையாகச் சொன்னால் பணியாளர்களுக்குப் புரியாதென்பதால் அதை அப்படி நாடகீயமாக நடத்திக் காட்டியிருக்கிறார். அன்றிலிருந்து மடத்துக்கு அன்னதானத்துக்கு வரும் எளிய மக்களைப் பணியாளர்கள் கண்ணியமாக நடத்த ஆரம்பிக்கின்றனர்.

*

ஒருமுறை ஒரு குக்கிராமத்தில் ஒரு புதிய ஆரம்ப சுகாதார மையம் கட்டப்படுகிறது. அங்கு மருத்துவமனை வர அனைத்து முயற்சிகளையும் செய்தது இளையவர்தான். ஆனால், அந்த ஊர் எம்.எல்.ஏ. அந்தப் பெருமையைத் தானே தட்டிக்கொண்டு செல்ல விரும்புகிறார்.

அந்த ஆரம்ப சுகாதார மையத்தின் திறப்பு விழாவுக்கு இளையவரை அழைக்காமல் எம்.எல்.ஏ.வே வந்து திறந்துவைக்க முடிவெடுக்கிறார். ஆனால், திறப்பு விழா அன்று ஒட்டு மொத்த கிராமமும் எம்.எல்.ஏ.வை எதிர்த்து நிற்கிறது. இளையவர்தான் வந்து திறக்கவேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். எம்.எல்.ஏ. அதற்கு மறுப்பு தெரிவித்ததும் ஒட்டு மொத்த கிராமத்தினரும் அந்த விழாவைப் புறக்கணிக்கின்றனர். எம்.எல்.ஏ.வுக்கு பெருத்த அவமானமாகப் போகிறது. கடைசியில் இளையவருக்குச் சொல்லி அனுப்ப வேண்டிவருகிறது. மக்கள் ஆதரவுடன் வந்து சேரும் இளையவர் தனக்குத் தரப்பட்ட பூர்ண கும்ப மரியாதையை எம்.எல்.ஏ.வுக்கும் தரச் செய்து அவரை வைத்தே சுகாதார மையத்தை திறக்கவும் செய்கிறார்.

*

இன்னொரு குக்கிராமம். அங்கு இரவில் குடிசைகள் திடீர் திடீரென்று தீப்பிடிக்கின்றன. என்ன காரணம்... யார் காரணம் என்பதைக் கண்டே பிடிக்க முடியவில்லை. மந்திர பூஜைகள் செய்தும் குடிசைகள் தீப்பிடித்து எரிவது நிற்கவில்லை. காரைக்குடியில் இருக்கும் விஞ்ஞான மையத்துக்கு எரிந்த சாம்பலைக் கொண்டு சென்று தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இரவுக் காவல் போட்டும் குடிசைகள் எரிவது நிற்கவில்லை. இளையவர் யோசிக்கிறார்.

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தேங்காயை மந்திரித்து தந்தார். தீ வைப்பவன் வீட்டில் தேங்காய் வெடிக்கும். மரணம் நிகழும் என்று சொல்லி அனைத்து வீட்டுக்கும் கொடுத்தார். என்ன ஆச்சரியம். அன்றிலிருந்து தீப்பிடித்து எரிவது நிற்கிறது!

*

(தொடரும்)

சுவாமி அம்பேத்கர் - 3



(3)

பரதேசி வாழ்க்கை முடிந்த பிறகு மடாலயம் திரும்புகிறார். அங்கு இளைய மடாதிபதியாக நியமிக்கப்படுகிறார். மடாதிபதியானதும் முதல் வேலையாக அந்த மடாலயத்தால் நிர்வகிக்கப்படும் கோவிலுக்குப் புறப்படுகிறார். சன்னதித் தெருவின் வாசலில் பல்லக்கு ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. இளைய மடாதிபதியை அதில் அமரவைத்து சுமந்து செல்வது வழக்கம். அதன்படியே நம் இளைய மடாதிபதியை அதில் ஏறச் சொல்கிறார்கள். அவரும் ஏறி அமர்ந்துகொள்கிறார்.

பல்லக்கைச் சுமந்து செல்பவர்களில் ஒரு முதியவரும் இருக்கிறார். அவரது குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாகப் பல்லக்கு தூக்கிவந்தவர்கள். மடாதிபதி மீதான பக்தியினால் அவர் அதை விருப்பத்துடன் செய்கிறார். ஆனால், உடல் ஒத்துழைக்கவில்லை. சுமையைத் தூக்கியபடி மற்றவர்களுக்கு ஈடுகொடுத்து நடக்க முடியவில்லை. சற்று கூன் விழுந்துவிட்டதால் பல்லக்கு அவர் தூக்கும் பகுதியில் சரிந்தும் இருக்கிறது. கோவில் தர்ம கர்த்தா அந்த முதியவரை சுடு சொல்லால் திட்டுகிறார். வேகமா போ... வேகமா போ என்கிறார்... அது இளைய மடாதிபதியின் காதில் சர்ப்ப சர்ப்ப என்று கேட்கிறது. இளைய மடாதிபதிக்குத் தூக்கிவாரிப்போடுகிறது. சட்டென்று பல்லக்கை நிறுத்தச் சொல்கிறார்.

என்ன விஷயம் என்று கேட்கிறார்.

ஒரு பெருசு படுத்துது என்று தர்மகர்த்தா சொல்கிறார்.

இளையவர் அவரை எச்சரித்துவிட்டு பல்லக்கில் இருந்து கீழே இறங்குகிறார். அந்த முதியவர் நடுங்கும் உடலுடன் நின்றுகொண்டிருக்கிறார். அவரைப் பார்த்ததும் இளைய மடாதிபதியின் கண்களில் நீர் கோர்த்துக்கொள்கிறது. ஐயா என்று அழைக்கிறார். கண் பார்வை மங்கி காது மந்தமாகியிருக்கும் பெரியவர் தடுமாறியபடியே தாங்கு கோலைப் பிடித்தபடி நின்றுகொண்டிருக்கிறார். இளைய மடாதிபதி மெள்ள அவரைத் தொடுகிறார். திரும்பிப் பார்க்கும் பெரியவர் பதறிப்போய் தாங்குகோலை நழுவ விடுகிறார். அது இளையவர் மேல் விழுகிறது. சுற்றியிருப்பவர்கள் திட்ட ஆரம்பிக்கவே பெரியவர் பயந்து நடுங்கியபடியே இளையவரின் காலில் விழப்போகிறார். சட்டென்று அவரைத் தூக்கிப் பிடித்து இளையவர் அவரைக் கைத் தாங்கலாக அரவணைத்துக் கொள்கிறார். தர்மகர்த்தாவும் பிற நிர்வாகிகளும் அந்த முதியவரை ஓரமாக அழைத்துச்செல்ல விரும்புகிறார்கள். இளைய மடாதிபதி அவர்களை விலகி நிற்கச் சொல்லிவிட்டு பெரியவரை பல்லக்கின் நடுப்பகுதிக்கு அழைத்துவருகிறார். பல்லக்கினுள் உள்ளே ஏறி அமரச் சொல்கிறார். பெரியவரோ பதறியபடியே மறுக்கிறார்.

இத்தனை காலம் எங்களைத் தூக்கியிருக்கீங்களே.. கொஞ்சம் நேரம் நான் தூக்கறேன் என்கிறார் இளையவர்.

பெரியவர் முடியவே முடியாதென்று மறுக்கிறார்.

இளையவர் அவரைக் கட்டாயப்படுத்தி பல்லக்கில் ஏற்றிவிடுகிறார். முன்னால் சென்று பல்லக்கின் தாங்குகோலைத் தூக்குகிறார். தர்மகர்த்தாவும் பிற பணியாளர்களும் பல்லக்கைத் தாங்களே தூக்குவதாகச் சொல்கிறார்கள். இளையவர் அவர்களை தள்ளி நிற்கச் சொல்கிறார். பிறகு மடாலயத்தின் பிற துறவிகளைப் பார்க்கிறார். ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் அவர்கள் மெள்ள நடந்துவந்து பல்லக்கின் ஒவ்வொரு கால்களையும் தூக்கிக் கொள்கிறார்கள். தர்மகர்த்தாவும் பணியாளர்களும் வேண்டாம் என்று வழியை மறிக்கவே, நாங்கள் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் இது என்று சொல்லி அவர்களை ஒதுங்கி நிற்கச் சொல்கிறார்கள்.

பல்லக்கு புறப்படுகிறது. உள்ளே இருக்கும் முதியவர் ஓம் நமச்சிவாய... ஓம் நமச்சிவாய என்று ஜெபித்தபடியே வருகிறார். வந்தியின் கூலியாளாய் பிட்டுக்கு மண் சுமந்த பெருமானின் புகழை இளையவர் பாடுகிறார். அனைவரும் அதைப் பாடியபடியே பின்னால் வருகிறார்கள். பல்லக்கு கோவிலை அடைகிறது. இதற்குள் சன்னிதானத்தில் இருக்கும் மூத்த மடாதிபதிக்கு இங்கு நடந்தவை சென்று சேர்ந்துவிட்டிருக்கிறது. அவர் கோபத்துடன் கோவில் வாசலுக்கு விரைகிறார். பல்லக்கு கோவிலுக்குள் நுழைகையில் நிறுத்து என்று உத்தரவிடுகிறார்.

இளைய மடாதிபதி பல்லக்கைச் சுமந்தபடியே அவருக்கு வணக்கம் தெரிவிக்கிறார்.

என்ன செய்கிறீர் இளைய தம்புரானே... யாரை யார் தூக்குவது..?

உங்களுக்குப் புரியும்வகையில் சொல்வதென்றால், நீங்கள் உடலைப் பார்க்கிறீர்கள். நான் ஆன்மாவைப் பார்க்கிறேன். ஆன்மாவில் உயர்வேது தாழ்வேது? என்னிலும் உங்களிலும் உறைபவனே எங்கும் உறைகிறானெனில் யாரால் யார் தூக்கப்படுகிறார் என்ற கேள்விக்கு இடமேது மூத்தவரே...

மூத்த மடாதிபதி பதில் சொல்லவியலாமல் வழிவிட்டு நிற்கிறார். பல்லக்கு கொடிமரம் அருகில் இறக்கப்படுகிறது. பெரியவர் வேக வேகமாக கீழே இறங்குகிறார். இளையவர் அவரைக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் செல்கிறார். அன்றைய தீப ஆராதனையில் கற்பூர வில்லைகள் சூரியன் போல் பிரகாசிக்கின்றன. பின்புற ஒளிவட்ட அகல் விளக்கு மூன்று முறை பிரகாசமாக எரிந்து ஒளிர்கிறது. பக்தர் கூட்டம் அதைக் கண்டு மெய்சிலிர்க்கிறது.

*

இளைய மடாதிபதி மெள்ள மெள்ள ஒவ்வொரு சீர்திருத்தமாக முன்னெடுக்கிறார். மடாலயத்தின் கீழ் வரும் கோவில்களில் பாரம்பரிய ஓவியங்கள், சிலைகள் எல்லாம் சுண்ணம் பூசப்பட்டும், மணல் வீச்சு முறையிலும் புதுப்பிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒரு கோவிலில் நடக்கும் மணல் வீச்சு சுத்திகரிப்புப் பணிகளைப் பார்க்கும் இளையவர் பதறி அடித்து உடனே நிறுத்தச் சொல்கிறார். எண்ணெய்ப் பிசுக்குகளை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் அந்தப் பணியினால் சிலைகள் மூளியாகிப் போவதைப் பார்த்து அதிர்கிறார். உடனே அனைத்து கோவில்களிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்த புனரமைப்புப் பணிகளை நிறுத்துகிறார். அந்த காண்டிராக்ட் எடுத்து கணிசமான பணம் சேர்க்க விரும்பிய அரசியல்வாதி கோபம் கொள்கிறார். இளைய மடாதிபதி எதிர்கொள்ளவிருக்கும் விஷ அம்பு மழையின் முதல் அம்பு அவன். இளையவர் சீயக்காய் மூலம் கைகளால் அந்தச் சிலைகளில் இருந்து மெதுவாக என்ணெய் பிசுக்கை நீக்க தானே முன்னின்று உழவாரப் பணிகளை ஆரம்பிக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் பக்தர் கூட்டம் அலை அலையாக வந்து அந்தப் பணியில் ஈடுபடுகின்றன.

*

மடாலயத்தின் சார்பில் பட்டிமன்றங்கள் நடப்பது வழக்கம். பொதுவாக எல்லா பட்டிமன்றங்களிலும் சிவபெருமானின் பெருமையையே பேசுவார்கள். அதிலும் இதுபோன்ற மடாதிபதிகள் சிவனுடைய பெருமைகளைப் பேசும் பக்கத்தில்தான் நின்று வாதாடுவார்கள். இளைய மடாதிபதியோ அதில் மாறுபட்டுச் செயல்படுகிறார். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று நக்கீரன் சொன்னது சரியே. வாதப் பிரதிவாதத்தில் நெற்றிக்கண்ணுக்கு என்ன வேலை. தன் தரப்பை நியாயப்படுத்த முடியாமல் சிவபெருமான் வன்முறையைக் கைக்கொண்டது மிகப் பெரிய தவறு என்று துணிந்து வாதாடுகிறார்.

அதுபோன்ற பட்டிமன்றங்களுக்கு வந்தவர்கள் எல்லாம் அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்கள். காவி உடை, நெற்றியில் திருநீற்றுப் பட்டை, கழுத்தில் உத்திராட்சமாலை எனச் சிவப்பழமாக இருக்கும் இளைய மடாதிபதி சிவனையே எதிர்த்துப் பேசுவதைப் பார்த்து அந்த நக்கீரரே உயிர் பற்று வந்துவிட்டாரோ என்று கலங்கினர். ஆனால், அதை மட்டுமே பேசி நிறுத்தியிருந்தாரென்றால், வறட்டு நாத்திகமாகிப் போயிருக்கும். எம் பெருமான் ஒருபோதும் அப்படிச் செய்திருக்கமாட்டார். அந்தக் கதையை எழுதியவர்தான், சாதாரண மனிதர் ஒருவர் சிவ பெருமானையே எதிர்த்துப் பேசுவதா என்று சினந்து பக்தி மிகுதியால் நெற்றிக் கண்ணைத் திறக்கவைத்துவிட்டார் என்று அந்த வாதத்தை நிறைவு செய்கிறார்.

*

சரஸ்வதி பூஜையன்று புத்தகங்களைப் படிக்கக்கூடாதென்று இருக்கும் நடைமுறையை மாற்றுகிறார். 364 நாட்களும் படிக்கும் பழக்கம் கொண்ட பிராமணர்கள் சரஸ்வதி பூஜையன்று தமது புத்தகங்களை இறைவனாக வைத்து வழிபடுவது சரியே... ஏட்டுக் கல்வியில் இருந்து சற்று விலகியிருந்த பிற சாதியினர் சரஸ்வதி பூஜையன்று புனித நூல்களைப் படிப்பதை தமது விழாவாக முன்னெடுக்கவேண்டும் என்று சொல்லி மடாலயத்தில் சரஸ்வதி பூஜையன்று தேவாரம் திருவாசகம் படிக்க வைக்கிறார்.

*

பொதுவாக மடாலயங்களில் கோ பூஜை செய்யப்படுவது வழக்கம். பசு புனிதமானதுதான். அதே நேரம் காளையும் எருமையும் கூடப் புனிதமானவையே... காளை உழவுக்குப் பெரும் பங்காற்றி வந்திருக்கிறது. அதோடு அது சிவனின் வாகனமும் கூட. எருமைப் பால் பசுவின் பாலைவிட மனிதர்களுக்கு பெரிதும் பயன்படுகிறது. எனவே அவையும் உயர்வானவையே என்று சொல்லி கோ பூஜையை அனைத்து ஆவினங்களுக்கும் விமர்சையாகக் கொண்டாடுகிறார்.

*

ஆன்மிக குருக்களுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாத பூஜை செய்வது வழக்கம். இளைய மடாதிபதி எல்லா தொழில்களும் உயர்வானவையே என்பதை உணர்த்தும் வகையில் சாக்கடை சுத்தம் செய்பவர்கள், துணி துவைப்பவர்கள், முடி திருத்துபவர்கள், பிணம் எரிப்பவர்கள், மலம் அள்ளுபவர்கள் என கடைநிலைப் பணிகள் செய்யும் அனைவரையும் ஒவ்வொரு நாளும் காலையில் மடத்துக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து பாத பூஜை செய்து கெளரவிக்கிறார். அதுபோல் பிறழ் பால் மனிதர்களையும் அழைத்து மரியாதை செய்கிறார். இந்தக் குறியீட்டு மரியாதையோடு நிறுத்தாமல் அந்தத் தொழில்களை விஞ்ஞானரீதியில் மேம்படுத்த ஆய்வு மையம் ஒன்றை அமைக்கிறார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்து தலைமை விஞ்ஞானியை அழைத்துவந்து அந்த மையத்தை ஆரம்பித்துவைக்கும் இளைய மடாதிபதி புதிய கிரகங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளோடு இருக்கும் கிரகத்தை மேம்படுத்தும் பணிகளும் நடக்கவேண்டும் என்று வேண்டுகோள்விடுக்கிறார்.


(தொடரும்)

சுவாமி அம்பேத்கர் - 2


(2)

துறவு மேற்கொள்ள வரும் நம் நாயகர் மடாலய விதிமுறைப்படி ஓராண்டு பரதேசியாக அலைந்து திரிகிறார். அதிலிருந்து நம் கதை தொடங்குகிறது.

அவருடைய ஆன்மிகப் பயணத்தின் முதல் கட்டத்தில் மதுரை, நெல்லை, கன்யாகுமரி எனச் சுற்றி வருகிறார். உண்மையில் அந்தந்த ஊர்களில் மடாலயத்தின் கிளைகள் இருக்கின்றன. ஒரு மடாலயத்தில் இருந்து இன்னொரு மடாலயத்துக்கு நடந்து செல்வதுதான் எல்லா துறவிகளும் செய்வது. சில நேரங்களில் மடாலய நிர்வாகிகள் உடன் வருவார்கள். அல்லது வழியில் தமக்குத் தெரிந்த நபர்களிடம் சொல்லிவைத்திருப்பார்கள். நடை பயணமாக வரும் பரதேசியை அவர்கள் ஏதேனும் கோவிலுக்கு அழைத்துச் சென்று தங்கவைப்பார்கள். இப்படியான பரதேசிப் பயணம் என்பது உண்மையான துறவு அனுபவங்களற்றது. பாதுகாப்பான வெறும் சுற்றுலா போன்றதே. நம் நாயகர் இதை விரும்பவில்லை. எனவே துணைக்கு யாரும் வரவேண்டாம். எந்த வசதிகளும் யாரும் செய்து தரவேண்டாம் என்று சொல்லிவிட்டு நிஜமான துறவுப் பயணம் மேற்கொள்கிறார்.

கோவில் குளங்களில் குளித்து துண்டைப் படிக் கல்லில் விரித்துக் காயப்போட்டபடி அருகில் அமர்ந்து தியானிப்பவரை வழக்கமான பிச்சைக்கார சன்னியாசி என்று நினைத்து மக்கள் காசு போட்டுச் செல்கிறார்கள். பரதேசி நாயகர் உள்ளுக்குள் புன்னகைத்தபடியே துண்டை உதறி காசுகளைத் தெறித்து விழச் செய்கிறார். அதைப் பார்க்கும் மூதாட்டி, காசு வேண்டாம்னா இப்படியா தூக்கி எறியறது... கை கால் இல்லாதவங்களுக்கோ வாயில்லா ஜீவன்களுக்கோ சோறு வாங்கிப் போடு சாமி என்று சொல்கிறார்.

பரதேசிக்கு அந்த அறிவுரை மனதில் ஆழமாகப் பதிகிறது. தன் தவறை உணர்ந்து அந்த மூதாட்டியின் காலில் விழுந்து எழுந்திரிக்கிறார். நிமிர்ந்து பார்த்தால் பாட்டியைக் காணவில்லை. ஔவை மூதாட்டியே வந்து ஈவது விலக்கேல் என்று சொல்லிச் சென்றதாக உள்ளம் குளிர்கிறார். துறவுக்காகக் கிடைக்கும் செல்வத்தை எளிய மக்களுக்குக் கொடுக்கும் உணர்வை அந்த சம்பவத்தில் இருந்து பெறுகிறார்.

*

பரதேசியாகத் திரிபவரைப் பார்த்து நாத்திகர் ஒருவர் உழைச்சு சாப்பிடவேண்டியதுதானே... இப்படி சோம்பேறியா உட்கார்ந்து தின்ன வெட்கமில்லையா என்று கேட்கிறார். உடல் வருந்திச் செய்தால்தான் உழைப்பா...மனதையும் மூளையையும் பயன்படுத்திச் செய்யும் உழைப்பு உழைப்பு இல்லையா..? ஞானிகளுக்கும் துறவிகளுக்கும் விஞ்ஞானிகளுக்கும் உடல் உழைப்பில் இருந்து விலக்கு கொடுத்ததன் காரணம் என்ன தெரியுமா... அப்படிக் கிடைக்கும் விடுதலையைப் பயன்படுத்தி மக்களுக்கு நலனுக்கு மூளையை உபயோகிப்பதற்குத்தான் என்கிறார்.

ஒரு விஞ்ஞானி உடல் உழைப்பில் இருந்து விடுதலை பெற்றால் மக்களுக்கு புதியவற்றைக் கண்டுபிடித்து அவர்களுடைய வேலையை எளிதாக்குகிறார். நோய் நொடிகளைத் தீர்க்க மருந்து கண்டுபிடித்துத் தருகிறார். துறவிகள் என்ன செய்கிறார்கள்.. வெறுமனே சாப்பிட்டு சாப்பிட்டுத் தூங்குவதைத்தவிர.. என்று மடக்குகிறார் அவர்.

புறத்தேவைகள் மற்றும் உடல் சார்ந்த கண்டுபிடிப்புகள் மட்டுமே முக்கியம் என்ற எண்ணத்தினால் வரும் குழப்பம் இது. மனிதனுக்கு மனம் சார்ந்த தேவைகள் எத்தனையோ இருக்கின்றன. அதோடு மனிதன் அவனுடைய விலங்கு குணங்களில் இருந்து மேலெழுந்து சமூகமாக வாழ வேண்டிய அவசியம் இருக்கிறது. மதமும் ஆன்மிகமும் இந்த விஷயங்களை கவனித்துக்கொள்கின்றன. அந்த வகையில் மதத்தின் பங்களிப்பை எடைபோடுவதென்றால் மதம் சார்ந்து சண்டைகள் நடக்கும் நாட்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு பேசக்கூடாது. எஞ்சிய நாட்களில் எந்த மோதலும் இல்லாமல் இருக்க அந்த மதமே காரணமாக இருந்திருக்கிறது என்பதையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். மதங்கள் உருவாகியிருக்க வில்லையென்றால் மனித இனம் இப்போதைவிட படு மோசமாக சண்டையிட்டு மடிந்திருக்கும் என்கிறார்.

*

ஒரு நாள் கிராமமொன்றின் அரச மரத்தடியில் ஆற்று நீரைக் குடித்துவிட்டுப் படுத்துக் கிடக்கும் பரதேசியை ஒரு விவசாயி தனது வீட்டுக்கு வந்து உணவருந்தும்படி அழைக்கிறார். பரதேசியும் செல்கிறார். வீட்டு வாசலுக்குச் சென்றவர் சற்று தயங்கியபடியே நிற்கவே... தைரியமா உள்ள வாங்க... கவுண்டன் வீடுதானென்கிறார் அந்த விவசாயி. பரதேசிக்கு அந்த ஒரு வாக்கியம் பல உண்மைகளைப் புரியவைக்கிறது. பரதேசிகள் கூட தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பிரித்துப் பார்ப்பது உண்டு போலிருக்கிறது. அதோடு பசியால் வாடுபவரைப் பார்த்ததும் மனமிளகும் இந்த விவசாயிக்கு தனது சாதி குறித்த பெருமிதமும் தாழ்த்தப்பட்ட ஜாதி குறித்து தாழ்வான பார்வையும் இருக்கிறது என்ற விஷயங்கள் புரிகின்றன.

கவுண்டன் என்ன பறையன் என்ன... கடவுள் முன்னால எல்லாரும் ஒண்ணுதான் என்கிறார் பரதேசி.

அதெப்படி ஒண்ணாக முடியும். வெள்ளாடு செம்மறியாட்டோட சேர்றதில்லை... செம்மறியாடு மலை ஆட்டோட சேர்றதில்லை... ஆடு மாடுகளுக்கே வித்தியாசம் இருக்கும்போது மனுஷனுக்குள்ள இருக்காதா என்ன..? கடவுளே ஒண்ணா இல்லை... அப்பறம் தான அவர் படைச்ச உயிர்கள் ஒண்ணா இருக்க என்றபடியே வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார் விவசாயி.

நீங்க சொல்றது தப்பு... வித்தியாசமா இருக்கறதுனாலயே வெறுக்கறது சரியில்லை... ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு பலம்... ஒவ்வொரு பலவீனம்... பறவைக்கு இறக்கைன்னா மீனுக்கு செதில்... சிங்கத்துக்குப் பிடரி... மயிலுக்குத் தோகை... இதெல்லாமே ஒண்ணுக்கொண்ணு வித்தியாசமானது அவ்வளவுதான்... இது உசந்தது அது தாழ்ந்ததுன்னு எதுவும் கிடையாது... பசி, தூக்கம், நோய் நொடி, இனப்பெருக்கம்னு எல்லா உயிர்களின் அடிப்படைகளும் ஒண்ணுதான்... ஒரு உடம்புல கை ஒரு வேலை செய்யுது... கால் ஒரு வேலை செய்யுது... வயிறு ஒரு வேலை செய்யுது வாய் ஒரு வேலை செய்யுது... கை உசந்ததா கால் உசந்ததா... வாய் உசந்ததா வயிறு உசந்ததா..? ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு வேலை... எல்லாம் சேர்ந்ததுதான் ஒரு மனுஷன். அதுமாதிரி ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு வேலை செய்யுது... எல்லாம் சேர்ந்ததுதான் ஒரு சமூகம்.

பலகைபோட்டு பரதேசியை அமரவைத்து இலையில் உணவு பரிமாறியபடியே, அது என்னமோ உண்மைதான். ஆனால், எல்லா உறுப்பையுமே எப்படி ஒண்ணா நடத்தமுடியும். முகத்துக்கு தர்ற மரியாதையை காலுக்குத் தரமுடியுமா. வாய்க்குத் தர்ற மரியாதையை வயித்துக்குத் தரமுடியுமா..? பால் தர்ற பசுவுக்கு தொழுவம்... தேர் இழுக்கற குதிரைக்கு லாயம்... வண்டி இழுக்கற மாட்டுக்கு களத்து மேடு... ஊர் மேயற கழுதைக்கு தெரு... மாட்டைக் கும்படுற சாதியும் மாட்டை வெட்டித் திங்கற சாதியும் எப்படி ஒண்ணா இருக்க முடியும்?

அது சரிதான். ஆனா ஒரு மனுஷனை நேசிக்க எதுவுமே தடையா இருக்கக்கூடாது... இப்போ நான் ஒரு பறையனா இருந்தா என்ன செய்வீங்க...

பரிமாறுபவர் சட்டென்று நிறுத்திவிட்டு, “எழுந்திரிச்சு வெளிய போடான்னு சொல்லுவேன்...’ என்கிறார்.

பரதேசிக்குத் தூக்கிவாரிப்போடுகிறது. “என்னங்க ஐயா... பசியா படுத்துக் கிடந்தவனைப் பார்த்ததுமே வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து சாப்பாடு போடணுங்கற நல்ல மனசு உள்ள உங்களுக்குள்ள இப்படி ஒரு வெறுப்பு இருக்கறதை நினைச்சே பார்க்க முடியலை... என்னை மன்னிச்சிருங்க. ஒரு பறையருக்கு உணவு தரமாட்டேன்னு சொல்றவங்க வீட்டுல சாப்பிட எனக்கு விருப்பமில்லை என்று சொன்னபடியே இலையை மூடிவிட்டு எழுந்திரிக்கிறார்.

அந்த இலையை அப்படியே எடுத்துட்டுப் போய் நாய்க்குப் போடுங்க என்று சொல்கிறார் விவசாயி.

பரதேசி புன்முறுவல் பூத்தபடியே அதை எடுத்துச் சென்று தெருவில் போடுகிறார். நேராக ஆற்றுக்குச் சென்று கை கழுவிவிட்டு மரத்தடியில் படுத்துக்கொள்கிறார். இரவின் கொடூர இருள் அக்ரஹாரத்தை மட்டுமல்லாமல் நடுத்தெருவையும் மூழ்கடித்திருப்பதைப் பெருமூச்சுவிட்டபடியே பார்க்கிறார். உயரமான கோபுரத்தில் எரியும் விளக்கொளி இருளை விரட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதைப் பார்த்தபடியே மெள்ளக் கண்களை மூடுகிறார். நள்ளிரவில் பசியின் வலி தாங்க முடியாமல் எழுந்து சென்று நீர் அருந்திவிட்டுப் படுத்துக்கொள்கிறார். அப்போது தொலைவில் ஒரு ஒளிப் புள்ளி அவரை நோக்கி வருவது தெரிகிறது. பாதி உணவில் எழுந்து போக சொன்ன விவசாயியின் மனைவி அரிகேன் விளக்கை எடுத்தபடி வருவது தெரிந்தது.

பரதேசி தூங்காமல் இருப்பதைப் பார்த்ததும் சாமி என்னை மன்னிச்சிடுங்க... என்று காலில் விழுகிறார்.

உடன் எடுத்து வந்த இலையையும் உணவுப் பாத்திரத்தையும் மேடையில் வைக்கிறார்.

சாப்பிடுங்க சாமி... நீங்க இங்க பட்டினியா இருக்கும்போது அங்க எங்களால சாப்பிட முடியலை...

பசிச்ச வயிறுக்கு சாப்பாடு போடற உங்க கணவரோட நல்ல மனசை மட்டுமே பத்திரமா பாதுகாத்து வெச்சுக்கோங்க... என்ன பண்ண... அம்மன் வசிக்கற புத்துலதான் பாம்பும் வசிக்குது என்று சொல்லியபடியே சாப்பிடுகிறார்.

*

இன்னொரு நாள் உடல் நலமின்றிப் போகிறது. ஊர் நுழைவாயிலில் இருக்கும் கலுங்கில் படுத்துக்கொள்கிறார். அப்போது அந்த வழியாகச் செல்லும் ஒரு பெண் இவருக்கு அருகில் வந்து பார்க்கிறார். உடல் அனலாகக் கொதிக்கிறது. அவரை எழுந்திரிக்கச் சொல்லி கையைப் பிடித்தபடியே தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். கஞ்சி வைத்துக் கொடுத்து மருந்து மாத்திரை கொடுத்து வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொள்ளச் சொல்கிறார். தூங்குவதற்கு முன் அவருடைய தலைமாட்டில் அமர்ந்து ஜெபிக்கிறார்கள். பரதேசி மெல்லிய புன்முறுவலுடன் அதை ஏற்றுக்கொள்கிறார். ஜெபம் முடிந்ததும் அவர் நெற்றியில் சிலுவைக் குறியிடுகிறார்கள். இரவு முழுவதும் கண் விழித்து அவரைப் பார்த்துக்கொள்கிறார்கள். மறு நாள் பொழுது விடிகிறது. பரதேசிக்கு உடல் நிலை மெள்ள தேறுகிறது. இரண்டு நாட்கள் அவர்கள் வீட்டிலேயே தங்குகிறார். உடல் நன்கு குணமானதும் ஒரு பாதிரியார் அந்த வீட்டுக்கு வருகிறார். மெள்ள பேச்சுக்கொடுப்பவர் இயேசுவில் ஐக்கியமாகிவிடுங்களேன் என்கிறார். பரதேசி புன்முறுவல் பூத்தபடியே, இயேசுவும் தெய்வங்கறதை ஏத்துக்கறேன். ஆனா இயேசுமட்டுமே தெய்வங்கறதைத்தான் ஏத்துக்க முடியலை...

சக மனுஷன் மேல வெறுப்பை உமிழச் சொல்ற உங்க தெய்வத்தைவிட அன்பை போதிக்கற எங்க தெய்வம் உசந்ததுதான..

நம்ம தெய்வம் சக மனுஷனை எங்க வெறுக்கச் சொல்லியிருக்கு... நாம செய்யற தப்புக்கு நம்ம தெய்வத்தைப் பழிக்கலாமா... நீங்க காட்டின அன்புக்கு இயேசு மேல உங்களுக்கு இருக்கற விசுவாசம்தான் காரணம்னா அந்த யேசுவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ஆனா, என் சிவனை கைவிட்டுட்டு வரணும்னு சொல்ற இயேசுவை எனக்குப் பிடிக்காது என்கிறார். அடுத்தவங்க மேல காட்டற அன்பு ஆத்மார்த்தமானதா இருக்கணும். மதம் மாத்தறதுக்காக அன்பு காட்டறதுங்கறது மதத்தை மட்டுமல்ல அன்பையுமே கொச்சைப்படுத்திடுது. அன்புங்கற மலை உச்சிக்குப் போக அல்லா, இயேசு, சிவன் அப்படின்னு எத்தனையோ பாதைகள். பாதையிலேயே படுத்துக்கொண்டுவிடக்கூடாது. பயணம் என்பது சிகரம் நோக்கி இருக்கவேண்டும் என்கிறார்.

பாதிரியார் யோசித்தபடியே விடைபெற்றுச் செல்கிறார். பரதேசி அந்தக் குடும்பத்துக்கு நன்றி தெரிவித்துவிட்டுப் புறப்படுகிறார்.

*

தமிழகத்தில் யாத்திரை முடித்த பிறகு இந்தியப் பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் காவி உடைக்கு மதிப்பும் மரியாதையும் இருப்பதை அனுபவபூர்வமாக உணர்கிறார். இந்த தேசத்தை காவி இணைக்கிறது என்று மனதுக்குள் நினைத்துக்கொள்கிறார். கயாவில் போதி மரத்தினடியில் தியானத்தில் இருக்கும்போது அம்பேத்கரின் ஆன்மா இவருக்குள் வந்து இறங்குகிறது.

(தொடரும்)

*

சுவாமி அம்பேத்கர் - 1

திரைப்படத்தின் ஆதார அம்சம் நாயகன் வில்லன் என்ற இரண்டு சக்திகளின் மோதல். நாயகன் ஒரு விஷயத்தைச் செய்ய விரும்புவான்; வில்லன் அதற்குத் தடையாக இருப்பான்; கடைசியில் நாயகன் வெல்வான். இதுதான் திரைப்படங்களின் ஆதார வடிவம். நமது இந்தக் கதையில் ஒரு சுவாமிஜி மடாலயம் (கோவில்) ஒன்றைச் சீர்திருத்த விரும்புகிறார். வில்லன் அல்லது வில்லன் குழு அவரைத் தடுக்கிறது. அவர் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதே கதை.

இப்போது அந்த சுவாமிஜியாக யாரை வடிவமைப்பது? ஏற்கெனவே ஒரு மடாயலத்தில் பல ஆண்டு துறவறம் மேற்கொண்ட ஒருவர் தனக்கு அதிகாரம் கிடைத்ததும் தான் அதுவரை நேரில் பெற்ற அனுபவங்களில் இருந்து அந்த மடாலயத்தைச் சீர்திருத்த முற்படுகிறார் என்று வைத்துக்கொள்ளலாமா..? உலகத்தை நாளைக்கே மாற்றி அமைத்துவிடவேண்டும் என்று துடிக்கும் இளம் துறவியின் துணிச்சலான சீர்திருத்தங்களாகச் சித்திரிக்கலாமா... அமிர்தானந்த மயி போன்ற பெண் துறவியின் சீர்திருத்தங்களாக வைத்துக்கொள்ளலாமா... அல்லது மேற்குலகில் இருந்து இந்திய ஆன்மிகத்தால் கவரப்பட்டு துறவறம் ஏற்கும் ஒருவர் (சகோதரி நிவேதிதா, அரவிந்த அன்னை போல்) இருக்கும் ஒருவரை மையமாக வைத்து இந்த சீர்திருத்தங்களை முன்னெடுக்கலாமா?

இதை நாம் முதலிலேயே முடிவு செய்துகொண்டால்தான் அதற்குத் தடை போட முயலும் நபர் அல்லது குழு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது தீர்மானமாக முடியும்.

இந்தியப் பெண் துறவிகளாகட்டும் அயல் நாட்டு பெண் துறவிகளாகட்டும் இந்து கோவில் பாரம்பரியத்துடன் தங்களை அவ்வளவாகப் பிணைத்துக்கொள்ளவில்லை. அரவிந்த ஆஸ்ரமத்தில் விக்ரக வழிபாடே கிடையாது. அதிலும் அரவிந்த அன்னை நெற்றியில் திலகம்கூட இட்டுக்கொண்டதில்லை. அரவிந்தரும் அப்படியான புற அடையாளங்கள், சடங்குகளில் நம்பிக்கை இல்லாதவர். அவர்களைப் போன்ற ஒருவரை வைத்து கோவில் பாரம்பரியத்தைச் சீர்திருத்துவது கொஞ்சம் அந்நியமானதாகத் தோன்றும். ஒரு திரைப்படத்துக்காக எழுதப்படும் கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்தான். எனினும் கொஞ்சம் யதார்த்தத்தோடு இணைந்ததாக இருந்தால் கூடுதல் நம்பகத் தன்மை கிடைக்கும். எனவே, கோவில் பாரம்பரியத்துடன் தொடர்புடைய வேறொரு நபரைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும்.

காஞ்சி சங்கராச்சாரியர் காமாட்சி அம்மனை வழிபடுபவர். மேல்மருவத்தூர் அடிகளார் ஆதிபராசக்தி அம்மனை வழிபடுபவர். குன்றக்குடி இளையவர் சிவ பெருமானை அடிப்படையாக வைத்தே தனது மடாலயத்தை வளர்த்தெடுத்திருக்கிறார். இந்த மூவரில் குன்றக்குடி அடிகளாரே கோவில் சார்ந்த சீர்திருத்தங்களுக்கு உகந்த நபர். காஞ்சி மடாதிபதி பழமை மீது மிகுந்த பற்று கொண்டவர். அதோடு அசட்டுத்தனமும் அராஜகமும் ஊழலும் மலிந்த ஜெயலலிதாவால் மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டவர். ஜெயலலிதாவை முற்றாக நிராகரிக்கும் ஒருவர் கூட காஞ்சி மடாதிபதி விஷயத்தில் ஜெயலலிதா செய்த அராஜகத்தை சரியென்று ஏற்கவே செய்வார். தமிழர்களில் சந்தர்ப்பவாத, போலி முற்போக்கு பாவனைகொண்ட, போலி பெருமித உணர்வுகள் கொண்ட, பிராமண வெறுப்பாளர்களின் கருத்துத் திணிப்பு அது. இத்தனைக்கும் காஞ்சி மடாலய மரபிலேயே தலித்களின் குடியிருப்புகளுக்குச் சென்றும் தலித் கல்விக்கும் மருத்துவத்துக்கும் சில சேவைகளை முன்னெடுத்த முதல் குரு அவரே. ஆனால், அவர் இன்று பிராமண, சூத்திர, தலித் சாதியினர் அனைவரும் காலகாலமாகச் செய்த சாதி வெறிச் செயல்பாடுகளுக்குக் குறியீட்டுக் காரணகர்த்தாவாக்கப்பட்டுப் பலிகடாவாக ஆக்கப்பட்டிருக்கிறார். எனவே, அவரைப் போன்ற ஒருவர் நம் திரைக்கதையின் நாயகனாக இருக்கமுடியாது என்பதை வருத்தத்துடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கும்.

மேல் மருவத்தூர் பங்காரு அடிகளாரைப் பொறுத்தவரையில் கல்வி, மருத்துவமனை என சமூக சேவைகளில் ஒப்பீட்டளவில் அவர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். ஆனால், அவர் தன்னையே ஆதி பராசக்தியாக முன்னெடுக்கவும் செய்கிறார். குருவாக வணங்கப் பெறுவதென்பது வேறு. தன்னையே கடவுளாக்கிக் கொண்டு வணங்கச் சொல்வதென்பது வேறு. இந்த வகையில் குன்றக்குடி அடிகளாரே நம் திரைக்கதைக்கு மிகவும் பொருத்தமான முன்மாதிரி. எனவே, அவரைப் போன்ற ஒருவரை நாயகனாக எடுத்துக்கொள்வோம். இன்னும் கூடுதல் அழுத்தம் கிடைக்கவேண்டி இந்திய ஆன்மிக மரபின் வேறொரு அழுத்தமான முன்னோடியையும் அவருடன் இணைப்போம். இந்து மதத்தைச் சீர்திருத்தியவர்களில் மிகவும் முக்கியமானவர் புத்தரைத் தவிர வேறு யார் இருக்கமுடியும். தன் மதத்தை ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் பரப்ப வழிகண்ட ஆன்ம ஞான குருவும் இந்திய சீர்திருத்த மரபின் ஆதி வழிகாட்டியும் அல்லவா... நவீன மனு அம்பேத்கர்கூட அந்த மரபில் வந்தவர்தானே.

மேலும் நமது நாயகர்கூட உயிர் கொலையைத் தடுப்பது, கல்விக்கு முக்கியத்துவம் தருதல், யாகங்களை எதிர்த்தல், வாத பிரதிவாதங்களில் ஈடுபாடு கொண்டிருத்தல் என இருக்கப்போகிறார். இப்படியான அம்சங்களுக்கு புத்தர்தானே ஆதி வழிகாட்டி. எனவே நம் கதாநாயகர் சைவ மடத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் காசி யாத்திரை முடித்து கயாவுக்குச் சென்று வணங்கும்போது போதி மரத்தினடியில் அமர்ந்து தியானம் செய்கையில் புத்தருடைய ஆன்மா அவருக்குள் இறங்குவதாகக் கதையை வடிவமைத்துக் கொள்ளலாம். வெளியே சைவம்... உள்ளே பவுத்தம்... வெளியே பக்தி... உள்ளே ஞானம்.. வெளியே பழமை... உள்ளே சீர்திருத்தம்.

இதை இன்னும் சமகால இந்திய சமூகத்துக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதென்றால் புத்தரின் ஆன்மாவுக்கு பதிலாக அம்பேத்கரின் ஆன்மா நாயகனின் உடலுக்குள் இறங்குவதாகக் காட்டலாம். என்னதான் புத்தர் இந்தியாவில் தோன்றிய லோக குரு என்றாலும் இன்று இந்தியாவில் அவருக்கான மதிப்பும் செல்வாக்கும் மிக மிகக் குறைவு. சிறு தெய்வ வழிபாட்டு மரபுகளை ஒறுத்தமை, பெளத்த துறவிகள் மன்னர்களைச் சார்ந்து செயல்பட்டமை, பெளத்தம் துறவுக்குக் கொடுத்த அதீத முக்கியத்துவம், இஸ்லாமிய அழித்தொழிப்பு, பெளத்த விழுமியங்களை இந்து மதம் உள்வாங்கிக்கொண்டமை போன்ற காரணங்களால் பெளத்தம் இந்தியாவில் இருந்து இடம் நகர்த்தப்பட்டுவிட்டிருக்கிறது. உலகின் மூன்றாவது பெரிய மதமாக இருந்தபோதிலும் இந்தியாவில் அரசியல் தளத்தில் இயங்கிய அம்பேத்கருக்கு இருக்கும் முக்கியத்துவம்கூட புத்தருக்கு இல்லை. எனவே, நம் நாயகரை அம்பேத்கரின் மறு பிறவியாக வைத்துக்கொள்வோம். சுவாமி அம்பேத்கர் என்ற தலைப்பு கதையின் ஆன்மாவை வழித்து இட்ட திலகமாகத் திகழும். கேட்பவரின் கவனத்தைச் சட்டென்று ஈர்க்கவும் செய்யும்.

ஆக நம் கதைக்குப் பொருத்தமான நாயகர் சைவ அம்பேத்கரே.

ஆனால், அம்பேத்கர் இந்து மதத்தை முற்றாக நிராகரித்தவர். அதன் சடங்கு ஆசாரங்கள், பக்தி, ஆன்மிகம், கலை, வாழ்க்கைப் பார்வை ஆகிய அனைத்தையும் சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வை மாற்றப் பெரிய முயற்சி எதுவும் எடுக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக நிராகரித்தவர். அவரை கோவில் கலாசார அமைப்பின் சீர்திருத்தத்துக்கு எப்படிப் பயன்படுத்த என்ற கேள்வி நிச்சயம் வரும். ஆனால், அம்பேத்கர் இந்து மதத்தைத்தான் நிராகரித்தார். இந்தியாவை மனதார நேசித்தார். இந்தியா என்ன விதிமுறைகளின்படிச் செயல்படவேண்டும் என்று அவர் உருவாக்கித் தந்திருக்கும் அரசியல் சாசனம் என்பது அவரை தலித் தலைவராகவோ இந்து மத வெறுப்பாளராகவோ அல்ல; இந்திய தேசியத்தின் ஒப்பற்ற சிற்பியாகவே வெளிக்காட்டுகிறது. அவர் உருவாக்கிய இந்திய அரசியல் சாசனத்தில் இந்து மத வெறுப்பு துளி கூட இல்லை. தலித் அப்பீஸ்மெண்ட்டும் அறவே இல்லை. இட ஒதுக்கீட்டைக் கூட பத்தாண்டுகளுக்கு ஒரு தடவை மறு பரிசீலனை செய்யச் சொல்லியிருக்கிறார். அவர் இந்திய தேசியம் ஒரு நியாயமான, கண்ணியமான, நேர்மையான அரசாக இருக்கவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் அதை வடிவமைத்திருக்கிறார்.

அவர் முன்வைத்த அதே உயரிய மதிப்பீடுகளின் அடிப்படையில் கோவில் கலாசாரத்தை மாற்றி அமைக்கும்போது அவர் பெயரில் அதை முன்னெடுப்பதென்பது தேசத்தின் சிற்பிக்குத் தரும் எளிய மரியாதையே. அவரும் கூட சாதி ஏற்றத் தாழ்வுகளில் இருந்து இந்து மதத்தை சீர்திருத்த முயன்ற இந்துத்துவர்களைத் தனது சக பயணியாகவே பார்த்திருக்கிறார். சுவாமி விவேகானந்தர் உலக அளவில் இந்தியாவையும் இந்து மதத்தையும் எப்படிப் பெருமிதப்படுத்தினாரோ இந்தியாவில் ராம கிருஷ்ண மிஷன் அமைப்பை உருவாக்கி இந்து மத மறு மலர்ச்சிக்கு வித்திட்டாரோ அதற்கு இணையான ஒரு சாதனைதான் அம்பேத்கர் இந்திய மறுமலர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பும். இன்னொருவகையில் இந்தக் கதையில் வரப்போகும் இந்து மத சீர்திருத்தம் என்பது புத்த மத வழியில் முன்னெடுக்கப்படும் ஒன்று என்பதால் சுவாமி அம்பேத்கர் என்று பெயரைச் சூட்டுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும்.
(தொடரும்)



*

Wednesday 1 March 2017

நரசிம்ம ராவ் - அரை சாணக்கியர்

அவர் மருத்துவமனையில் படுத்த படுக்கையாகக் கிடந்தபோதே ‘உடம்பை என்ன செய்யப் போறீங்க’ என்று கேட்டிருக்கிறா சோனியாவின் உதவியாளர்.

ஐம்பது வருடங்களுக்கு மேல் கட்சிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து கல்வித்துறை, உள்துறை, வெளியுறவுத்துறை, சமூக நலத்துறை எனப் பல்வேறுதுறைகளின் அமைச்சராகவும் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் ஒட்டு மொத்த தேசத்தின் தலைவராகவும் ஆனவருடைய உடலை காங்கிரஸ் தலைமையகத்தில் பார்வைக்குக்கூட வைக்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள். 

இது போதாதென்று சொந்த மாநிலத்தில் தகனம் செய்யப்பட்ட உடலை பாதி எரிந்த நிலையில் தெரு நாய்கள் இழுத்துப் போட்டு கடித்துக் குதறும்படியாக நிராதரவாக விட்டு விட்டும் போனார்கள். 

இந்தியாவின் ஜியாபிங் டெங்... இந்தியாவின் மார்கரெட் தாட்சர் என்றெல்லாம் புகழப்பட்டிருக்கவேண்டிய ஒருவருக்குக் கிடைத்த காங்கிரஸ் மரியாதை இதுதான். இதற்கான காரணம் மிக மிக எளிது : பம்முலப்பர்தி வெங்கட நரசிம்மராவ் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல (அவருடைய இந்துப் பின்னணியும்கூட ஒரு காரணமாக இருந்திருக்கும்)  அவர் நேரு வம்சத்துக்கு பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டிருக்கும் அரியணையில் ஆக்கிரமிப்பாளராக, அழையாத விருந்தாளியாக வந்து அமர்ந்துவிட்டார்.

ஆனால், இந்த உண்மைக் காரணத்தை வெளிப்படையாகச் சொல்லமுடியாதே... எனவே ராவ் குறித்து ”புதிய வரலாறு’ உருவாக்கப்பட்டது.

இந்திரா படுகொலைக்குப் பிந்தைய சீக்கியப் படுகொலைகளுக்கு அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ராவே காரணம்.

போபால் கெடுபுகழ் ஆண்டர்சன் தப்பித்துச் சென்றதற்கு உள்துறை அமைச்சராக இருந்த ராவே காரணம்.

பாபர் மசூதி இடிப்புக்கு அப்போது பிரதமராக இருந்த ராவே காரணம்...

இப்படியாக காங்கிரஸ் காலத்து அனைத்து தவறுகளுக்கும் ராவே காரணம்... ஆனால், தாராளமயமாக்கலை ஆரம்பித்துவைத்ததற்கு மட்டும் இறந்த ராஜீவும், இரண்டாம் தேர்வாக நியமிக்கப்பட்ட மன்மோகன்சிங்கும், பொருளாதார நெருக்கடியும், லைசன்ஸ்ராஜ் காலகட்டப் பின்னடைவுகளும்தான் காரணம்.

ஆக, அவர் செய்யாத கெடுதல்களுக்கு அவர் காரணம்... அவர் செய்த நன்மைகளுக்கு அவர் வெறும் கருவி மட்டுமே.

காங்கிரஸின் அடுத்த தலைமைக்கு இந்த வரலாறு மிகவும் பிடித்திருந்தது. காங்கிரஸ் கிளிகள் மேடைதோறும் இதையே முழங்கிவருகின்றன. ராவ் ஓரங்கட்டப்பட்டு ஒழிக்கவும்பட்டுவிட்டார். படுத்த படுக்கையாகக் கிடந்த நிலையில் தனது வாழ்நாள் விசுவாசமும், தியாகமும், சாதனைகளும் ஓரங்கட்டுப்பட்டுவிட்ட வலியில் பல நாட்கள் பட்டினி கிடந்து மருந்தும் உட்கொள்ள மறுத்து தன் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார். காங்கிரஸ் 1996-ல் தோற்றதும் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இறக்கப்பட்ட ராவ் ஒட்டு மொத்த கட்சியால் ஓரங்கட்டப்பட்டிருந்தார். காங்கிரஸ் அரசைத் தக்கவைக்க அனைவரும் சேர்ந்த செய்த ஒரு சதியில் அவர் மட்டுமே குற்றவாளியாக்கப்பட்டு நீதிமன்றம் ஏற வைக்கப்பட்டார். பிரதமராக இருந்து ஊழல் வழக்கில் சிக்கி நீதிமன்றப் படி ஏற நேர்ந்த முதல் அரசியல் தலைவர் அவரே... தனது வழக்குகளை நடத்தப் பணம் இல்லாமல் கிட்டத்தட்ட சொந்த வீட்டை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்... நான் என்ன தவறு செய்தேன் என்று மரணத் தருவாயில் அவர் கேட்ட கேள்விக்கு சோனியாவிடமிருந்து பெரும் மவுனமே பதிலாகக் கிடைத்திருக்கிறது.

இந்த அளவுக்கு ராவ் ஓரங்கட்டப்படவேண்டியவரா... மேலே சொல்லப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளில் எந்த அளவுக்கு உண்மைகள் இருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்கான பதிலை நரசிம்மராவ் : தாராளமயமாக்கலின் தந்தை என்ற புத்தகம் தெளிவாக, விரிவாக, அழுத்தமாக முன்வைக்கிறது. ராவை ஹீரோவாக்கிக்காட்டவேண்டும் என்ற திட்டமிடல் எல்லாம் ஆசிரியருக்கு இல்லை. சரித்திர நிகழ்வுகளை வரிசையாக முன்வைக்கிறார். அவற்றின் பின்னாலிருக்கும் பல்வேறு அம்சங்களையும் சேர்த்துப் பார்த்து நாமே ஒரு முடிவுக்கு வரும்படிச் செய்கிறார். சரித்திரத்தின் மலையுச்சி ஒன்றில் கைவிடப்பட்டு நாய்களால் கடித்துக் குதறப்பட்டு பாதி எரிந்த நிலையில் இருக்கும் உடல் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் சுடர் விளக்காக மாறுகிறது.

*

தாராளமயமாக்கலுக்கு மன்மோகன் சிங் முக்கிய காரணம்தான்... ஆனால், மன்மோகன் சிங் இல்லாவிட்டாலும் அது நடந்தேறியிருக்கும்... ஆனால் நரசிம்மராவ் இருந்திருக்கவில்லையென்றால் அது சாத்தியமாகியிருக்காது என்கிறார் ஆசிரியர். 1980களில் இந்திராவின் காலத்திலேயே உலக வங்கியிடம் கை ஏந்தும் நிலை வந்துவிட்டிருந்தது. பொருளாதார சீர்திருத்தங்களில் நம்பிக்கை கொண்டிருந்த ராஜீவ் ஊழல் வழக்குகளில் சிக்கி அந்த உத்வேகத்தை இழந்துவிட்டிருந்தார். காங்கிரஸில் வேறு யார் பிரதமராகியிருந்தாலும் இந்த அளவுக்கு தாராளமயமாக்கலை முன்னெடுத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அர்ஜுன்சிங், திவாரி போன்றவர்கள் கடைசி வரை தாராளமயமாக்கலை விமர்சித்தே வந்திருக்கிறார்கள். ப.சிதம்பரம் பிரதமர் போட்டியில் இருந்திருக்கவில்லை. மன்மோகன் சிங்கினுடைய பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை சோனியா விரும்பியிருக்கவே இல்லை. மன்மோகன் சிங் இல்லாதிருந்தாலும் தாராளமயமாக்கம் நடந்திருக்கும். ஆனால், ராவ் இல்லையென்றால் நடந்திருக்காது என்பதையே இவை சுட்டிக்காட்டுகின்றன என்கிறார் நூலாசிரியர்.

உலக வங்கி, யார் பிரதமராக இருந்திருந்தாலும் தான் நினைத்ததைச் சாதித்திருக்கும் என்று சொல்லமுடியும்தான். ஆனால், நரசிம்மராவ்தான் பிரதமராக இருந்தார். அவர்தான் தாராளமயமாக்கலை முன்னெடுத்திருக்கிறார் என்பது சரித்திரம். எனவே யூகங்களின் அடிப்படையில் நிராகரிப்பதற்கு முன் சரித்திரத்தின் அடிப்படையிலும் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

*

சீக்கியக் கலவரத்தில் ராவின் செயலின்மை பற்றிய குற்றச்சாட்டு... பெரிய மரங்கள் கீழே விழுந்தால் சிறிய அதிர்வு இருக்கத்தான் செய்யும் என்று ராவ் சொல்லவில்லை... இந்திரா கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அதன் பிந்தைய நிகழ்வுகளை ஒருங்கிணைக்க ஒற்றை அதிகார மையம் இருக்கவேண்டும் என்று ராவின் கைகள் கட்டிப்போடப்பட்டு பிரதமர் அலுவலகத்துக்கு அதிகாரம் போய்விட்டிருந்தது. ராஜீவ் கட்சித்தலைவராகப் பதவி ஏற்ற பின்னர்தான் சீக்கியப் படுகொலைக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன... ராவ் பரிதாபமான குரலில் ஒவ்வொரு காவல்துறை உயர் அதிகாரிக்கும் போன் போட்டு உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருந்திருக்கிறார்... மேலிடத்து உத்தரவு வேறுவிதமாக இருந்ததால் அவர்கள் ராவின் கெஞ்சல்களை மதிக்கவில்லை... ஆனால், அப்போது உள்துறை அமைச்சர் பம்முலப்பர்தி வெங்கட நரசிம்மராவ் தான் என்பதால் அவரே காரணம் என்று காங்கிரஸ் வரலாறு சொல்கிறது.

*

போபால் ஆண்டர்சன் இந்தியாவுக்கு வந்ததும் கைது செய்யப்பட்டார். ஆனால், உள்துறை அமைச்சகத்திடமிருந்து அதாவது ராவிடமிருந்து அவரை விடுதலை செய்யும்படி உத்தரவு வந்தது. அதனால் விடுதலை செய்தேன் என்று பிரதமர் போட்டியாளரான அர்ஜுன் சிங் குற்றம்சாட்டினார். இன்றும் காங் உள்வட்டத்தில் அதுவே நம்பவேண்டிய உண்மையாக முன்வைக்கவும்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக இந்தப் புத்தகத்தில் இடம்பெறாத வேறொரு உண்மை நினைவுக்கு வருகிறது. இதே அர்ஜுன்சிங்தான் அந்தத் தொழிற்சாலை மதிலை ஒட்டி ஏழைகளைக் குடியமர்த்தினார். சுமார் ஐந்து கி.மீக்குக் குடியிருப்பு இருக்கக்கூடாது என்று சொல்லத் தகுந்த அபாயகரமான எரிமலைக்கு அருகில் மக்களை அவர்களுடைய வாக்குகளுக்காக பட்டா போட்டுகொடுத்து வசிக்க வைத்துக் கொன்ற அர்ஜுன் சிங், நரசிம்மராவ்தான் ஆண்டர்சனைத் தப்பிக்கவிட்டுவிட்டார் என்று அறச்சீற்றம் கொண்டிருக்கிறார். பின்னே... நேரு குடும்பப் பரம்பரை எஜமானர்கள் ஏதேனும் தவறு செய்ய முடியுமா என்ன..?

*

ராவ் மீதான மிகப் பெரிய குற்றச்சாட்டு: அவர் இந்து அடிப்படைவாத இயக்கங்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு பாபர் மசூதியை இடித்துவிட்டார்... அதன் மூலம் மதச்சார்பற்ற இந்தியாவின் அடித்தளத்தையே நொறுக்கிவிட்டார்.

ராகுல் இதைத்தான், ‘எங்கள் குடும்பத்தினர் யாரேனும் ஆட்சியில் இருந்திருந்தால் நாங்கள் அதைக் கட்டி காத்திருப்போம்’ என்று முழங்கியிருக்கிறார்.

உண்மையில் ராவால் அன்று என்ன செய்திருக்கமுடியும்... அந்த விஷயத்தில் ராவ் என்னவெல்லாம் செய்தார் என்று நூலாசிரியர் மிக விரிவாக விவரித்திருக்கிறார்.

முதலவதாக உத்தரபிரதேசத்தில் அப்போது ஆட்சியில் இருந்தது பி.ஜே.பி. கல்யாண் சிங் அரசு. அவர்கள் கோவில் கட்டியே தீருவோம் என்று சொல்லித்தான் ஆட்சிக்கே வந்திருக்கிறார்கள். காவல்துறையில் ஆரம்பித்து மத்திய அதிரடிப்படை, ராணுவம் எல்லாமே மாநில முதல்வரின் அனுமதி இன்றி ஷூ லேஸைக்கூட அவிழ்த்துக்கட்டிவிட முடியாது. அதோடு பா.ஜ.க. முதல்வர் கல்யாண் சிங் பொது வெளியிலும்சரி... நீதி மன்றத்திலும் சரி.... அந்த சர்ச்சைக்குரிய கட்டுமானம் உடைக்கப்படமாட்டாது என்று உறுதிமொழி அளித்திருந்தார். அதனால்தான் ராவ் அந்தக் கட்டுமானத்தின் பாதுகாப்புப் பொறுப்பை மத்திய அரசிடம் கொடுத்துவிடும்படி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டபோது நீதிமன்றம் முடியாது என்று மறுத்துவிட்டிருந்தது.

ராவ், அடுத்ததாக காங்கிரஸ் தலைவர்களிடம் பல முறை ஆலோசனை கேட்டிருக்கிறார். நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்களோ அதையே செய்கிறேன் என்று சொல்லியிருகிறார். அந்தக் கட்ட்டுமானம் இடிக்கப்பட்டபிறகு நடந்த கூட்டத்தில்கூட பிரணாப் முகர்ஜி, காங் பொதுக்குழுவில் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட ஒரு முடிவுக்கு தனிப்பட்ட முறையில் யாரையும் குறை சொல்ல முடியாது என்றே சொல்லியிருக்கிறார். மேலும் பிரதமராக இருந்த ராவ் அது இடிக்கப்படுவதற்கு சில காலம் முன்பாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டபோது அங்கிருந்தபடியே நான் இல்லாமல் நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் சம்மதம் தருகிறேன் என்று வேறு கூறியிருக்கிறார். காங்கிரஸில் அப்போது யாருமே உ.பி. பா.ஜ.க.ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கவே இல்லை. ஆனால், அது இடிக்கப்பட்டதும் ராவ் ஏன் அந்த உத்தரபிரதேச அரசை முன்பே கலைக்கவில்லை... இந்துத்துவர்களுடன் சேர்ந்து இடித்துவிட்டார் என்று குற்றம்சாட்டிவருகிறார்கள்.

மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் கவர்னர்கூட மாநில அரசைக் கலைக்கத் தேவையில்லை என்றே பரிந்துரை அனுப்பியிருக்கிறார். ஒருவேளை ராவ் அந்தக் கட்டுமானம் இடிக்கப்படுவதற்கு முன்பே மாநில அரசைக் கவிழ்க்க முடிவு செய்திருந்தால் ஜனாதிபதி அதற்கு சம்மதம் தந்திருக்கமாட்டார் என்று நம்பவே இடம் இருக்கிறது. சங்கர் தயாள் சர்மாவுக்கும் ராவுக்கும் இடையிலான சிக்கலான நட்புறவும் அவர்களிடையேயான கடிதப் பரிமாற்ற ஆவணங்களும் அதையே சுட்டிக்காட்டுகின்றன என்கிறார் நூலாசிரியர்.

மேலும் ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டால்தான் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல் செய்ய முடியுமே தவிர, சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்ற யூகத்தின் பேரில் அதை அமல் செய்ய முடியாது. அப்படி அவர் செய்திருந்தால் பாஜக மட்டுமல்ல கம்யூனிஸ்ட்களும் மாநில கட்சிகளும் ஊடகங்களும் என ஒட்டு மொத்த தேசமும் அதை எதிர்த்திருக்கும். சிறுபான்மை செல்வாக்குடன் ஆட்சியில் இருந்த ராவுக்கு அதுவே கடைசிநாளாக இருந்திருக்கும். அவர் அப்போதுதான் பொருளாதார சீர்திருத்தங்களை ஆரம்பித்திருந்தார். உலகம் இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருந்தது. அந்த நேரத்தில் காங்கிரஸ் அரசு வீழ்ந்தால் பொருளாதார சீர்திருத்தம் அடியோடு முடங்கிப்போகும். இந்தியா அதன் பிறகு வேறு திசையில்தான் நகர்ந்திருக்கும். தனது பதவியைக் காப்பாற்றுவதற்காகவே உத்திரப் பிரதேச அரசைக் கலைக்கவில்லை என்று சொன்னாலும் தேச நலனும் அதில் இருக்கத்தான் செய்திருக்கிறது.

அந்தக் கட்டுமானம் இடிக்கப்படுவதற்கு முன்புவரையில் அவர் செய்தவை எல்லாமே அது இடிக்கப்பட்டாமல் இருந்திருந்தால் மிக மிகச் சரி என்றே மதிப்பிட்பபட்டிருக்கும். இடிக்கப்பட்டதற்கு அவர் காரணமல்ல என்பதால் அவருடைய செயல்களை வைத்து மட்டுமே அவரை மதிப்பிடவேண்டும். இதை ராவ் தனது சுய சரிதையில் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்: ‘தன் குழந்ந்தையைக் கடத்திச் சென்ற கடத்தல்காரனிடம் ஒரு தந்தை எப்படி நடந்துகொள்வாரோ அப்படித்தான் நான் நடந்துகொண்டேன்’.

அவன் குழந்தையை கொன்றால் தந்தைதான் கொன்றார் என்று சொல்ல முடியுமா..?

ராவ் அந்த விஷயத்தில் செய்த ஒரே பெரிய தவறு என்று நுலாசிரியர் சொல்வது என்னவென்றால் அவர் இந்துத்துவத் தலைவர்களிடம் ரகசியமாகப் பேசி இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணமுயன்றார். அல்லது அதன் மூலம் தீர்த்துவிட முடியும் என்று நம்பினார்.

நேருவைப்போல் இந்தியாவைக் ‘கண்டுபிடிக்க வேண்டிய’ அவசியம் இல்லாதவர் ராவ். நிஜாம் ஆட்சி செய்த ஹைதராபாத்தில் பிறந்த ராவுக்குத் தெரிந்த பல மொழிகளில் உருதும் ஒன்று. இந்திய மத நல்லிணக்க பாரம்பரியம் மீது பற்றுதல் கொண்ட ராவ் இந்துத் தலைவர்கள், சாமியார்களுடன் நட்புறவில் இருந்திருக்கிறார். மிகப் பெரிய சமஸ்கிருத பண்டிதரும்கூட. எனவே, அத்வானி, ஜோஷி ஆகியோருடன் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தி எந்த அசம்பாவிதமும் நடக்காமல் தடுத்துவிட முடியும் என்று நம்பினார். ஆனால், ஆயிரக்கணக்கான கரசேவகர்களைக் கட்டுப்படுத்தும் சக்தி அத்வானிக்கும் ஜோஷிக்கும் இருக்காது என்பதையோ அவர்கள் இருவருமே ராவை ஏமாற்றிவிடுவர்கள் என்பதையோ அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. நிச்சயம் அவர் இதை எதிர்பார்த்திருக்கவேண்டும் என்கிறார் நூலாசிரியர்.

சட்டரீதியாக எதுவும் செய்ய முடியாத நிலையில் அவர் வெறுமனே இருந்திருக்கவேண்டும். பொற்கோவில் ராணுவ அத்துமீறல், இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பியது போன்ற நிகழ்வுகளால் ஏற்பட்ட இழப்புகளைக் கண்கூடாகப் பார்த்திருந்த ராவ், அதிரடியாக எதுவும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். சட்டரீதியாக எதுவும் செய்யமுடியாத நிலை... காங் பொதுகூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதைமீற முடியாத நிலை... இப்படி எல்லாமே அந்தக் கட்டுமானத்தின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் தராத நிலையில் அவர் சாட்சிக்காரரை விட சண்டைக்கரரிடமே பேசிப் பர்ப்போம் என்றுதான் இந்து இயக்கத் தலைவர்களுடன் பேச முற்பட்டிருக்கிறார். காஷ்மீர் பிரிவினைவாதிகளில் ஆரம்பித்து எல்லா அரசாங்கங்களும் இப்படி திரைமறைவு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது உண்டு. எனவே, ராவ் இந்துத் தலைவர்களிடம் பேசி கட்டுமானத்தைக் காப்பறிவிடலாம் என்று நம்பினர். அதுதான் அவர் செய்த ஒரே ஒரு தவறு. அதுதான் அவர் இந்து இயக்கங்களின் சதியில் அங்கமாக இருந்தார் என்றும் சொல்லவைத்திருக்கிறது. உண்மையில் அவர் அந்தக் கட்டுமானத்தைக் காக்கவே முயற்சி செய்திருக்கிறார். ‘கோவிலும் கட்டப்படவேண்டும்... மசூதியும் இடிக்கப்படக்கூடாது’ என்பதுதான் ராவின் கொள்கை என்கிறார் நூலாசிரியர்.

இது சரியாக இருக்கவே வாய்ப்பு அதிகம். காவலர்களின் உதவியை நாடக்கூடாது. என்று கடத்தல்காரன் மிரட்டும்போது பாசமுள்ள தந்தை நிச்சயம் அவனுடன் தானே பேச்சுவார்த்தை நடத்துவார். அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து கடத்தல்காரன் குழந்தையைக் கொன்றால் ரகசியப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தந்தையும் சேர்ந்துதான் குழந்தையைக் கொன்றுவிட்டார் என்றா பழிக்க முடியும்?

*

இந்தப் புத்தகம் நரசிம்ம ராவின் இன்னொரு சாதனையைப் பற்றி மிக விரிவாகச் சொல்கிறது. உண்மையில் அந்த சாதனை இதுவரையிலும் யாராலும் எங்கும் சொல்லவும்பட்டிருக்கவில்லை. பா.ஜ.க. ஆட்சி காலத்தில் பொக்ரான் அணு குண்டு வெடிப்பு சாதனை நிகழ்த்தப்பட்டது என்பதுதான் பொதுவாகப் பதிவாகியிருக்கும் உண்மை. ஆனால், நரசிம்ம ராவின் ஆட்சி காலத்திலேயே அதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்துமுடிக்கப்பட்டிருந்தன என்ற உண்மையை இந்த நூலில் விரிவாக விவரிக்கிறார்.

*

ராவ் முழுக்க முழுக்க நல்லவர் என்றும் இந்தப் புத்தகம் சொல்லவில்லை. நல்லதைச் செய்ய ஒரு மன்னர் சில நேரங்களில் சில தவறுகளும் செய்யவேண்டியிருக்கும் என்ற சாணக்கிய நீதிக்கு ஏற்ப நடந்துகொண்டவர்தான் என்று உண்மைகளை உள்ளபடியே சொல்கிறார் நூலாசிரியர். ராவ் தனிப்பட்ட முறையில் லஞ்ச ஊழலில் ஈடுபட்டவர் அல்ல. பின்னாளில் தனது வீட்டை விற்று வழக்கு நடத்த வேண்டிய நிலைக்குக் கூட வந்துவிட்டிருக்கிறார். ஆட்சி கவிழாமல் இருக்க சில எம்.பி.க்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை இருந்திருக்கிறது. அதை அவர் எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றிச் செய்திருக்கிறார். எல்லா அரசியல் கட்சிகளும் செய்யும் செயல்தான் இது. ஆனால், காங்கிரஸ் கட்சி ராவை அதற்குப் பலிகடாவாக்கியது.

ராவ் அடிப்படையில் ஒர் சோஷலிஸவாதி. தெலங்கானா வாரங்கலில் பெரும் பண்ணையாரான அவர் நில சீர்திருத்த மசோதாவைக் கொண்டுவந்தபோது தன்னிடம் இருந்த 1200 ஏக்கர் நிலத்தை அந்த கிராமத்தில் இருந்த அனைவருக்கும் ஆளுக்கு 1-2 ஏக்கர் எனப் பிரித்துக் கொடுத்துவிட்டார். ராவ் இறந்தபோது எந்த காங்கிரஸ் தலைவரும் இறுதிச் சடங்குக்கு வரவில்லை. அவரால் நிலம் பெற்ற வாராங்கல் கிராம மக்களே வண்டி பிடித்து வந்து சேர்ந்திருந்தனர்.

தேர்தல் பணிகளுக்காக சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு வரவழைக்கப்படும் கார்களில் பெரும்பாலானவை கட்சிப் பிரமுகர்களால் அப்படியே எடுத்துக்கொள்ளப்படும். சென்னை நிறுவனமும் அதைக் கண்டுகொள்ளாது. ஆனால், தான் முதல்வராக இருந்தபோது அத்தனை வண்டிகளையும் அப்படியே திருப்பி அனுப்பினார் ராவ்.

ஹவாலா வழக்கில் தனது கட்சி, எதிர்க் கட்சி என்ற பேதமெல்லாம் பார்க்காமல் எதிரிகள் அனைவரையும் அதில் சிக்கவைத்தார். பொருளாதார சீர்திருத்தத்தை அதிரடியாக தீவிரமாக முன்னெடுத்தவர் அரசுத்துறைகளில் எந்தவொரு சிறு மாற்றத்தைக் கூடக் கொண்டுவர விரும்பாதவராகவே இருந்தார். அவருடைய அரசு பெரும்பான்மை பலம் இல்லாத அரசு என்றாலும் இதைவிட நிச்சயம் அவர் செய்திருக்க முடியும் செய்திருக்க வேண்டும் என்று நூலாசிரியர் சொல்கிறார்.

ஃப்ராங்கிளின் ரூஸ்வெல்ட், ரொனால்ட் ரீகன், டெங் ஜியாபிங், மார்கரெட் தாட்சர், சார்லஸ் தெ கால், நேரு போன்ற உலகத் தலைவர்களின் வரிசையில் வைத்துப் போற்றப்படவேண்டியவர்; அந்தத் தலைவர்கள்போல் மக்கள் மத்தியில் செல்வாக்கோ, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலமோ கட்சியில் அதிகாரமோ இல்லாத ராவ் இருந்த சொற்ப அதிகாரத்தை வைத்துக்கொண்டு செய்திருப்பவை உண்மையிலேயே பிரமிக்கச் செய்பவையே என்கிறார் நூலாசிரியர். முதல் வாக்கியத்தைவிட இரண்டாம் வாக்கியத்தில் உண்மை மிக மிக அதிகம்.

அரைச் சாணக்கியராக முடங்க நேர்ந்த ராவ் முழுச் சாணக்கியராக இருந்திருந்தால்..? என்ற ஏக்கம் புத்தகத்தை முடித்ததும் மனதில் எழுகிறது. அப்படி நடக்காமல் போக தமிழகமும் ஒரு காரணம் என்பதை நினைக்கும்போது ஏக்கத்தோடு கோபமும் எழுகிறது. 1996 தேர்தல் நேரத்தில் அதிமுக மீதான வெறுப்பலையை நன்கு புரிந்துகொண்டிருந்த ராவ், ராஜீவ் கொலைப் பழியில் சிக்கியிருந்த திமுகவுடன் கூட்டணி வைக்கமுடியாமல் ரஜினிகாந்தும் தனிக்கட்சி ஆரம்பிக்க முன்வர மறுத்த நிலையில் அதிமுக என்ற பாறாங்கல்லைக் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். அதன் பிறகு அவர் மேலெழவே முடியவில்லை. அந்தத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து ராவுக்கு 30 எம்.பி.க்கள் கிடைத்திருந்தால் ராவின் தலையெழுத்து மட்டுமல்ல தமிழகத்தின் தலையெழுத்தும் இந்தியாவின் தலையெழுத்துமே மாறியிருக்கும்.



நரசிம்ம ராவ்

கிழக்கு வெளியீடு

Half Lion - Vinay Sithapathi

தமிழில் - ஜெ.ராம்கி.