Friday 28 April 2017

ராமர் : புனைவா உண்மையா?

ராமர்... புனைவா உண்மையா?
டி.கே.ஹரி -டி.கே.ஹேமா ஹரி
கிழக்கு பதிப்பக வெளியீடு
விலை : 175/-

ராம ஜென்ம பூமி, ராமர் பாலம் என்ற இரண்டும் ராமர் இந்த பூமியில் பிறந்து வாழ்ந்த ஒரு மனிதர் என்பதை ஆதாரமாகக் கொண்டே சொல்லப்படுகின்றன. ராமாயணத்திலேயே கூட ராமர் மனிதராகப் பிறந்து மனிதராக வாழ்ந்ததாகத்தான் சொல்லப்படுகிறது.

ராமர் வாழ்ந்தது உண்மையென்றால் அல்லது அதை உண்மையென்று நிரூபிக்கவேண்டுமென்றால் என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதை இந்தப் புத்தகம் செய்கிறது. இன்றைய நவீன மனம் எந்த அடிப்படையில் சொன்னால் அதை நம்புமோ அப்படியாகச் சொல்கிறது. அதாவது விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து சொல்கிறது.

ஆர்க்கியோ அஸ்ட்ரானமி என்ற நவீன ஆய்வியலின் அடிப்படையில் ராமாயண காலகட்டம் பலரால் கணக்கிடப்பட்டிருக்கிறது. புஷ்கர் பட்னாகர் மூலம் கணக்கிடப்பட்ட ஆய்வை  நூலாசிரியர்கள்  இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கியிருக்கிறார்கள். ஆர்க்கியோ என்றால் தொன்மையான காலத்தைச் சேர்ந்த என்று பொருள். அஸ்ட்ரானமி என்பது வானவியல் (வானில் கோள்களை ஆராய்தல்). அதாவது, தொன்மைக்கால வானம் பற்றி ஆராயும் இயல்.

இந்த அறிவியல் ஆய்வின்படி ஒரு குறிப்பிட்ட கோள்களின் அமைப்பு கொடுக்கப்படுமாயின் அது போன்ற கிரகநிலை எதிர்காலத்தில் எப்போது நிகழும் என்பதையும் கடந்த காலத்தில் அது போன்று எப்போது நிகழ்ந்தது என்பதையும் தெரிந்துகொண்டுவிடமுடியும்.
மற்ற நாட்டு இலக்கியப் படைப்புகள் போலல்லாது இந்திய இலக்கியங்கள் பல்வேறு நிகழ்வுகளின் நாள் நட்சத்திரத் தகவல்களையும் இரவு நேர ஆகாய வர்ணனைகளையும் விரிவாக அருமை-யாகப் பதிவு செய்திருக்கின்றன. ராமாயணத்தில் பல இடங்களில் இதுபோன்ற வான, கிரஹ நிலை தொடர்பான தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவ்விவரங்களைக் கவனமாகத் தொகுத்து மென்பொருளில் செலுத்தியபோது கடந்த காலத்தில் இக்குறிப்பிட்ட கிரக நிலைகள் இருந்த உத்தேச வருடங்கள் அறியக் கிடைத்தன.

ராமர் பிறந்த நாளின் நட்சத்திர நிலை பற்றி ராமாயணத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
1.சூரியன்-மேஷம்
2.சனி-துலாம்
3.குரு-கடகம்
4.சுக்கிரன்-மீனம்
5.செவ்வாய்-மகரம்
6.சந்திர மாதம்-சித்திரை
7.அமாவாசைக்குபின் 9-ம் நாள் அதாவது நவமி திதி சுக்லபக்ஷம்
8.சந்திரன் புனர்வசு நட்சத்திரத்தின் அருகில் துருவ நட்சத்திரம் மிதுன ராசியில்
9.கடகம்-லக்னம். அதாவது கடகராசி கிழக்கில் உதயத்தில்
10.குரு-தொடுவானத்துக்கு சற்று மேலே

இக்குறிப்புகளை வானியல் மென்பொருளில் கொடுத்து ஆராய்ந்த-போது நமக்கு ராமர் பிறந்த தேதியாகக் கிடைப்பது பொது ஆண்டுக்கு முன் 5114 (பொ.ஆ.மு - ஆஇஉ), ஜனவரி மாதம், 10 வது நாள், மதியம் 12-30.
இதே போல் ராமாயணத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களுக்கான நட்சத்திர நிலையையை மென்பொருளில் உள்ளிட்டுப் பார்த்தபோது கீழ்கண்ட தேதிகள் கிடைத்திருக்கின்றன.
10 ஜனவரி 5114 பொ.ஆ.மு - ராம நவமி (பிறந்தநாள்)
11 ஜனவரி 5114 பொ.ஆ.மு - பரதன் பிறந்த நாள்
4 ஜனவரி 5089 பொ.ஆ.மு - முடிசூட்டு விழாவுக்கு முதல் நாள்
7 அக்டோபர் 5089 பொ.ஆ.மு - கரதூஷ்ணர் அத்யாயம்
3 ஏப்ரல் 5076 பொ.ஆ.மு - வாலிவதம்
12 செப்டம்பர் 5076 பொ.ஆ.மு - அனுமன் இலங்கையை அடைதல்
14 செப்டம்பர் 5076 பொ.ஆ.மு - அனுமன் இலங்கையிலிருந்து திரும்புதல்
20 செப்டம்பர் 5076 பொ.ஆ.மு - படை புறப்படுதல்
12 அக்டோபர் 5076 பொ.ஆ.மு - படைகள் ராவணனின் கோட்டையை அடைதல்
24 நவம்பர் 5076 பொ.ஆ.மு - மேகநாதன் கொல்லப்படுதல்

மென்பொருள் மூலம் பெறப்பட்ட தேதிகளும் ராமாயணக் கதையில் கூறப்பட்டுள்ள சம்பங்களின் வரிசையும் முழுவதுமாக மிகச் சரியாக ஒத்திருக்கின்றன. அதுமட்டுமல்லாது இரு சம்பவங்களுக்கு இடைப்பட்ட காலமாக நமக்குக் கிடைத்திருப்பவை வால்மீகியால் ராமாயணத்தில் இரு நிகழ்வுகளுக்கு இடையிலான காலத்தோடு அல்லது சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தின் வயதோடு ஒத்திருக்கிறது. உண்மையில் நடந்த சம்பவங்களுக்கு மட்டுமே இப்படியான துல்லியமான ஒத்திசைவு சாத்தியமாகும்.
*

அடுத்ததாக, ராமர் பாலம் என்ற பௌதிகச் சான்று. ராமாயணத்தில் அந்தப் பாலம் எப்படிக் கட்டப்பட்டது என்று விரிவான விவரணை இருக்கிறது. ராமேஸ்வரத்தில் கடலின் அடியில் இருக்கும் நீண்ட பாலம் போன்ற அமைப்பு இன்று ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. ராமாயணத்தில் என்னென்ன அடுக்குகள் என்னென்ன வரிசையில் சொல்லப்பட்டிருக்கிறதோ அதே வரிசையிலேயே இன்றும் அந்தக் கடலடிப் பாலம் அமைந்திருக்கிறது. அதாவது,
· கடலின் அடித்தளம்
· அதற்கு மேல் இயற்கையான பாறைகளால் மேடாக அமைந்த பகுதி
· அந்தப் பாறைகளால் மேடாக அமைந்த பகுதியின் மேல் வெட்டப்பட்ட மரத்தின் பகுதிகள்
· மரத்தடிகளின் மேல் அமைந்த பெரிய பாறைகள்
· அந்தப் பெரிய பாறைகளின் மேல் காணப்படும் சிறிய கற்கள்
· இந்தச் சிறிய கற்களுக்கு மேல் காணப்படும் மணல் படுகை
என அந்த பாலம் அமைந்துள்ளது. ராமாயணத்தில் குறிப்பிடப்படும் பாலம்தான் அது என்பதை உறுதிப்படுத்தும் முதல் சான்று இது.

நேஷனல் இன்ஸ்டியுட் ஆஃப் ஒசியானிக் டெக்னாலஜியின் ஆலோசகரும் முன்னால் புவியியல் துறை அதிகாரியும் சிறந்த புவியியல் ஆராய்சியாளருமான டாக்டர் எஸ். பத்ரிநாராயணன் இப்பாலத்தைப் பற்றிய விரிவான ஆய்வை நடத்தியுள்ளார். அதில் அவர் கூறுவது:

பூமியின் இயல்பு மற்றும் பௌதிகத் தன்மையை ஆராய்ந்தபோது ராமர் சேதுவில் பவளப் பாறைகளுக்குக் கீழ் இளகிய கடல் மணல் காணப்படுகிறது. பெரிய பாறைகளாகக் காணப்படும் இந்த  பவளப்பாறை அடுக்கு இயற்கையாக அமைந்தது அல்ல. அவை நிச்சயம் எவராலோ கொண்டுவந்து அங்கே போடப்பட்டிருக்க-வேண்டும். இதிலிருந்து ராமசேது வெகு பண்டைய காலத்தில் நிச்சயம் மனித முயற்சியால் கட்டப்பட்டது என்பது தெளிவாகிறது.

அதாவது, பவளப்பாறைகள் பொதுவாக கடினமான பாறைப்பகுதியின் மேலேதான் காணப்படும். கடலின் மேற்பரப்புக்கு அருகே சூரிய ஒளியைப் பெறும் வகையில் வளரும் இயல்புடையன. ராமர் சேதுவில் பவளப்பாறைகளுக்குக் கீழ் இளகிய மணற்பரப்பு காணப்படுகிறது. எனவே, இங்கு காணப்படும் பவளப்பாறைகள் இயற்கையாக வளர்ந்தவை அல்ல. எங்கிருந்தோ யார் மூலமாகவோ அங்கே கொண்டு சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்பது உறுதிப்படுகிறது.

மூன்றாவதாக, ராமாயண காவியத்தில் அந்தப் பாலமானது 100 யோஜனை நீளமும் 10 யோஜனை அகலமும் கொண்டதாகக் கட்டப்-பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. அதாவது 10:1 என்ற விகிதத்தில் கட்டுப்-பட்டதாகத் தெரிவிக்கிறது. இன்று இந்தியாவில் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலுள்ள பாதையின் நீளம் 35 கி.மீ அகலம் 3.5 கி.மீ. அதாவது ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதே 10:1 என்ற விகிதம்!
இந்த விகித ஒற்றுமை வியக்கத்தக்கதாகும். எனவே, இது ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள அதே பாலம் என்பதற்கான இன்னொரு வலுவான ஆதாரமாகிறது.

ராமேஸ்வர கோவிலின் ஆவணங்களில் பொ.ஆ. 1480 வரை இந்தப் பாலம் நடந்து செல்ல முடிந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோவில் ஆவணங்களை நம்ப நவீன விஞ்ஞான மனம் இடம் கொடுக்கதென்பதால் நூலாசிரியர் இன்னொரு சான்றையும் தருகிறார்: ஆங்கிலேயர் ஆட்சியின்போது அவர்கள் ஒவ்வொரு முக்கியமான பகுதிக்கும் ஓர் அரசாங்கக் குறிப்புப் புத்தகத்தைத் தயாரித்து வைத்திருந்தனர். அவ்வாறு மெட்ராஸ் பிரஸிடென்ஸிக்கும் சி.டி.மேக்லீன் என்பவர் 1902-ல் குறிப்புப் புத்தகம் தயாரித்தார். அதில் அவர் பொ.ஆ. 1480 வரையிலும்  இப்பாலமானது பயன்பாட்டில் இருந்ததாகவும், பிறகு வந்த பெரிய புயல் காரணமாக இதில் உடைப்பு ஏற்பட்டு இதில் நடப்பது தடை செய்யப்பட்டது எனவும் தெளிவாகக் கூறியுள்ளார்.

ஆதாம் பூமியில் ‘காலடி எடுத்து வைத்த’ இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு இந்தப் பாலம் வழியாக நடந்து வந்ததால் இந்தப் பாலத்துக்கு ஆதாம் பாலம் என்ற பெயரே சூட்டவும்பட்டிருக்கிறது. ஆக எப்படியோ அது நடக்க முடிந்த பாலமாக இருந்திருப்பதாக வேற்று மதத்தினரும் நம்பத்தான் செய்திருக்கிறார்கள். அதேநேரம்
அல்பரூனி -  பொ.ஆ. 1030
மார்க்கோ போலோ - பொ.ஆ. 1271
லுடோவிகோ தெ வர்தமா - பொ.ஆ. 1470
ஆசியாட்டிக் சொசைட்டி - பொ.ஆ. 1799
வில்லியம் ஃபோர்டைஸ் மேவர் - பொ.ஆ. 1807
சார்லஸ் ஓ’ கானர் - பொ.ஆ. 1819
ஏ.ஜே.வால்பே - பொ.ஆ. 1825
அர்னால்ட் ஹெர்மான் - பொ.ஆ. 1833
தாமஸ் ஹார்ஸ்ஃபீல்ட் - பொ.ஆ. 1851
ஜியார்ஜ் ஸ்கார்ஃப் - பொ.ஆ.1856
க்ளெமண்ட்ஸ் ராபர்ட் மர்காம் - பொ.ஆ. 1862
பெண்ட்லாண்டு பிரபு - பொ.ஆ. 1914
முதலமைச்சர் கருணாநிதி -பொ.ஆ. 1972 (ராமநாதபுர கெஜட்டியர்)
ஆகியோர் இந்தப் பாலம் ராமாயண காலத்தில் கட்டப்பட்டது என்ற இந்துக்களைன் நம்பிக்கையையே அங்கீகரித்து வந்திருக்கின்றனர்.
*

ராமர் 11,000 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. ராமர் வாழ்ந்தது நிஜமென்றால் இது எப்படி சத்தியம்? இந்தக் கேள்விக்கும் நூலாசிரியர் ஏற்கத் தகுந்த ஒரு பதிலைச் சொல்கிறார். 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் ஒரு வருடம் என்ற அடிப்படை-விதியை எடுத்துக்கொண்டு பார்த்தால் 11000 ஆண்டுகள் முப்பது வருடங்கள், ஆறு மாதங்கள்.

ராமர் காட்டுக்குப் போனது 25 வயதில். 14 ஆண்டுகள் கழித்துத் திரும்பி வந்து முடி சூட்டிக்கொண்டது 39 வயதில். முடி சூட்டிக் கொண்ட பிறகு 30 ஆண்டுகள் ஆறு மாதங்கள் ஆட்சி புரிந்தார் என்றால் 70 வயது வரை ஆண்டிருக்கிறார்.
பழங்காலத் தமிழ் இலக்கியங்களில் ஆய்வு செய்பவர்கள் சங்க காலத்திலும் இதுபோல் நாட்கணக்கை வருடமாகச் சொல்லும் காலக் குறிப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். பதிற்றுப் பத்து-வில் உள்ள செய்யுள் - 90 நாளொன்றை வருடத்துக்கு இணையாகச் சொல்வதாக வேதாந்தத்திலும் தமிழிலும் புலமை பெற்ற ஜெயஸ்ரீ சாரநாதன் குறிப்பிட்டிருக்கிறார். அஹோரவ சம்வத்சரா என்றழைக்கப்படும் கால கணக்கீடு இப்படியான கணிப்புகளைப் பற்றிச் சொல்கிறது.

நச்சினார்க்கினியார் எழுதிய தொல்காப்பிய உரையிலும் இப்படி ஆண்டையும் நாளையும் ஒப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது. பொ.ஆ. 9-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அந்த உரையில், பாண்டிய மன்னன் மாகீர்த்தி அல்லது நிலம் தரு திருவில் பாண்டியர் 24,000 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகச் சொல்கிறார். அந்த மன்னருடைய ஆட்சியிலும் ஆதரவிலும்தான் நச்சினார்கினியாரின் உரை வெளியிடப்பட்டது. வருடம் என்று சொல்லப்பட்டிருப்பதை நாள் என்று எடுத்துக்கொண்டு கணக்கிட்டுப் பார்த்தால் அந்தப் பாண்டிய மன்னர் 66 ஆண்டுகள் 8 மாதங்கள் வாழ்ந்திருக்கிறார் என்று அர்த்தம்.

வட இந்திய இலக்கியங்களான ராமாயணம், மஹாபாரதத்தில் ஆரம்பித்து தென்னிந்திய இலக்கியமான சங்ககாலப் படைப்புகள் வரை ஒரு நாள் என்பதை ஓர் ஆண்டு என்று சொல்வது வழக்கத்தில் இருந்திருக்கிறது.
சாதாரண மனிதர்கள் ஒரு ஆண்டில் செய்து முடிப்பதை இந்த மன்னர்கள் ஒரே நாளில் சாதித்துவிடுவார்கள் என்று சொல்லும் முகமாக அந்தப் படைப்பாளிகள் அப்படிச் சொன்னார்களா... அல்லது ஒரு மன்னர் எதிர்கொள்ள நேரிடும் நெருக்கடிகளை மனதில் வைத்து அப்படிச் சொன்னார்களா தெரியவில்லை. ஆனால், வருடங்கள் என்று சொன்னதை நாட்கள் என்று எடுத்துக்கொண்டு பார்த்தால் உண்மை புரியும் என்கிறார்கள் நூலாசிரியர்கள்.
இப்படி ராமர் வாழ்ந்தது உண்மையே என்பதை நவீன மனமும் ஏற்கும் வகையில் மிக அழகாகவும் ஆணித்தரமாகவும் பல்வேறு ஆய்வுத்துறைகளின் ஆய்வு முடிவுகளோடு ஒப்பிட்டு தொகுத்தளித்திருக்கிறார்கள் நூலாசிரியர்கள்.

Friday 7 April 2017

குட் பை மிஸ்டர் மணிரத்னம்...


காற்று வெளியிடை

ராவணன், கடல், ஓகே கண்மணி போன்ற காவியங்களைத் தர ஆரம்பித்த பிறகும் நம்பிக்கையுடன் வந்து குவிந்திருந்த இளைஞர் பட்டாளத்தின் தன்னம்பிக்கையைவிட (பாதிக்கு மேல் அது ரஹ்மான் கூட்டம் என்ற போதிலும்) முன்னாள் இயக்குநர் மணி ரத்னத்தின் தன்னம்பிக்கை நிச்சயம் பாராட்டப்படவேண்டியதுதான். உலக அழகி உலக கிழவியான பிறகும் சற்றும் மனம் தளராமல் ரேம்ப் வாக் செய்வதுபோல் பரத நாட்டியப் பேரொளிகள் 60 வயதிலும் மேடை குலுங்க நடனமாடுவதுபோல் கங்குலி கண் பார்வை போன பிறகும் மட்டையைத் தூக்கிக் கொண்டு களமிறங்கியதுபோல் வாராது வந்த மாமணியும் அடம்பிடிக்கிறார். இன்னும் கொஞ்சம் திறமை மிச்சமிருக்கும்போதே கெளரவமாக விடைபெறுவது பலருக்கும் தெரிந்திருப்பதில்லையே.

இன்றைய காதலர்கள் என்பவர்கள் பேசுவதற்கு எதுவும் இல்லாமலேயே மணிக்கணக்கில் அப்பறம் அப்பறமென்றபடியே பேசிக்கொண்டேயிருப்பார்கள்... காரணமில்லாமல் சண்டை போடுவார்கள்... காரணமில்லாமல் சேர்ந்துகொள்வார்கள்... ஈகோ மோதல் கனன்றுகொண்டிருக்கும்... இதுதான் இன்றைய காதல் என்று யாரோ சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் மணிரத்னம் மாமாவுக்கு. அவரும் அப்படியான ஓர் இலைஞ்ஜனாகத் தன்னைக் கருதிக்கொண்டு சுவாரசிய திரைக்கதைக்கு சிறிதும் மெனக்கெடாமல் (அல்லது மெனக்கெட்டு) இன்னொரு படமும் எடுத்துமுடித்திருக்கிறார். பைக்கை ரோட்டில் நிறுத்தி டிராஃபிக் ஜாம் செய்து, கல்லூரி மைக்கில் காதலைச் சொல்லி, மிஸ்டர் சந்திரமவுலியை காபி சாப்பிட அழைத்து சினிமாத்தனமான இளமைத் துடிப்புடன் இருந்த மவுனராக மணிரத்னம், கேஸ் ஸ்டவ்வில் சிகரெட் பற்ற வைத்து புது மனைவியைப் புகைக்க வைத்த ரோஜா மணிரத்னம், ஆர் யூ விர்ஜின் என்று மாப்பிள்ளையைக் கேட்ட உயிரே மணிரத்னம் எல்லாரும் தொடுவானத்து நட்சத்திரங்களாக நம்மைவிட்டு தூர தூர விலகிச் சென்று வெகுகாலமாகிவிட்டது. அக்னி நட்சத்திரம் போன்ற ஒளிப்பதிவு அமெச்சூர்தனங்களைத் தாண்டி அந்தக் கால மணிரத்னத்திடம் புத்துணர்ச்சியும் துடிப்பும் இருந்தது. நாயகன், தளபதியெல்லாம் தமிழின் ஆல் டைம் ஃபேவரைட்களெ. ஆனால், தேய்ந்தபின் வளர்வது நிலவுக்கு மட்டுமே சாத்திய போலும்.

முந்திய தீவிரப் படங்களில் ஊறூகாய் போல் இலையின் ஒரு ஓரமாக கடைசிவரை இருக்கும் சீரியஸ் விஷயம் கண்டதுமே தூக்கி எறியப்படும் கறிவேப்பிலையைப்போல் இந்தப் படத்தில் வெறும் கார்கில் 1999 என்ற அரை விநாடி எழுதிக் காட்டும் காட்சியாகப் போய்விட்டிருக்கிறது. ஒளிப்பதிவு, லொகேஷன், இசை என பிற கலைகள் அனைத்தும் பிரமிக்கவைக்கும் வகையில் இருந்தும் மூல ஆதாரமான கதை திரைக்கதை என்பது இவ்வளவு கேவலமாக மணிரத்னத்தின் இதற்கு முந்திய எந்தப் படத்திலும் இருந்திருக்கவில்லை. இவையெல்லாவற்றையும்விட படத்தின் மிகப் பெரிய பலவீனம் மீசை இல்லாத கார்த்தி. காதல் காட்சிகளில் அவருடைய முகம் படு அசிங்கமாக இருக்கிறது. படம் முழுவதுமே வரும் காதல் காட்சிகள் ஏற்படுத்தும் சோர்வை மீறி ஏதேனும் ஒரு காட்சியையாவது சுமாராகவாவது ரசித்துவிடுவோம் என்று கஷ்டப்பட்டு முடிவெடுத்தால் கார்த்தியின் முகம் அந்தச் சிறு சுடரையும் மண் அள்ளிப் போட்டு அணைத்துவிடுகிறது.

நாயகன் திரைப்படத்தில் பெற்றோரை இழந்து பம்பாய்க்கு ஓடிய சிறுவன் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு தாதா ஆகிறான். சத்ரியன் படத்தில் அதே சிறுவன் காவல் துறை அதிகாரியால் வளர்க்கப்பட்டு நல்ல போலீஸாகிறான். இப்படியான சுவாரசிய எதிர் நிலை கதையாக ரோஜாவில் இந்தியச் சிறையில் மாட்டிக்கொண்ட வாசிம் கானுக்கு பதிலாக பாகிஸ்தான் சிறையில் மாட்டிக்கொள்ளும் வருண் என்று கதையை ஆரம்பிக்கிறார். அந்த ஆரம்ப நிமிடங்கள் பழைய மணிரத்னம் திரும்பிவிட்டார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. ஆனால், சிறையில் வாடும் வான் படை அதிகாரியின் கடந்த காலக் காதல் என்று கிளை பிரியும் கதை தன் பிறகு கடந்த காலத்திலேயே மூழ்கித் தொலைந்துவிடுகிறது.

அந்தக் காதல்காட்சிகள்தான் கொடூரமென்றால் அவ்வப்போது வரும் நிகழ்காலச் சிறைக் காட்சிகள் கர்ண கொடூரமாக இருக்கின்றன. பாகிஸ்தான் சிறையில் குச்சியால் தோண்டி சுரங்கம் அமைக்கிறார்கள்... இரவில் தப்பிக்கிறார்கள்... மலைச் சரிவில் உருண்டு ஓடுகிறார்கள். வழியில் வரும் லாரியை மடக்கி ஏறுகிறார்கள். அதில் இருக்கும் டீசலை வைத்து பாட்டில் குண்டுகள் தயாரித்து துரத்திவரும் காவலர்களை விரட்டுகிறார்கள். செக்போஸ்டில் இருக்கும் பாகிஸ்தான் கொடியை லாரியைவிட்டு ஏற்றிச் சாய்க்கிறார்கள் (இந்தக் காட்சிக்குக் கிடைத்த கை தட்டல்கள் மெய் சிலிர்க்க வைத்தது... அதற்கான பாராட்டுகள் இயக்குநருக்கு அல்ல.. நம் தமிழ் இளைய தலைமுறைக்கு). ஆப்கானிஸ்தானுக்குச் சென்று நல்லபடியாக இந்தியா திரும்புகிறார்கள். பாகிஸ்தான் நிலப்பரப்பு மனதுக்குத் தரும் சந்தோஷம் நீங்கலாக இந்தக் காட்சிகள் எல்லாமே மிக மிக மோசமாக இருக்கின்றன.

ஷூட்டிங், போஸ்ட் ப்ரொடக்ஷன் என்ற இரண்டு கட்டப் பணிகளில் பிற கலை, தொழில்நுட்ப மேதைகளின் துணையால் சிறந்துவிளங்கும் மணிரத்னம் ப்ரீ ப்ரொடக்ஷன் காலகட்ட கலைச் செயல்படுகளில் தன்னந்தனியாக இருப்பதால் மிக மிக மோசமாக தோற்றுவருகிறார். முந்தைய படங்களில் பிற கலைஞர்களின் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு கதை, திரைக்கதையில் சோபித்த மணிரத்னம் இதில் பூரணமாகத் தோற்றிருக்கிறார். அந்த அஸ்திவாரம் பலப்படாமல் மணிரத்னம் கட்டும் எந்தக் கோட்டையும் அவர் கண் முன்னே சரிந்து விழுவதைத் தவிர்க்கவே முடியாது. பயிற்சி காலத்திலேயே கற்றுக்கொள்ளாத பாடத்தை ஓய்வு பெறும்போதா கற்றுக்கொள்ளப்போகிறார்.

Better Luck in next birth Mani Sir.