Friday 20 January 2017

போற்றிப் பாடடி பெண்ணே - 5

போற்றிப் பாடடி பெண்ணே
(தேசியமும் தெய்விகமும் இரு கண்கள் என்று சொன்ன தேவரை மட்டும்)

இந்த சல்லிக்கட்டுப் போராட்டத்தில் வெளிப்படும் பிற அரசியல் அம்சங்கள் என்னென்ன என்று பார்த்தால் தமிழகத்தில் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளையும் இந்தப் புதிய இயக்கம் ஓரங்கட்டியிருக்கிறது. இந்துக்களின் விழாவான சல்லிக்கட்டை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இயக்கத்தில் இந்து அரசியல் சக்திகளுக்கு இடமே இல்லை என்பது மிகப் பெரிய வருந்தத்தக்க நகைமுரணே. இதுகூடப் பரவாயில்லை... தமிழகம் என்பது திராவிட இயக்கத்தின் ஒரே கோட்டை என்று இறுமாந்திருந்த திராவிட முற்போக்கு கழகத்தினருக்கு இந்த சல்லிக்கட்டு இயக்கம் மிகப் பெரிய நடுவிரலை (அதுவும் காளைச் சாணியில் முக்கி) காட்டியிருக்கிறது. 

பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என ஊடகங்களில் செல்வாக்குடன் இருக்கும் கட்சிகளைக்கூட இந்த இயக்கம் புரட்டிப் போட்டுவிட்டிருக்கிறது. அல்லது குறைந்தபட்சம் இந்த போராட்ட காலகட்டத்தில் ஓரங்கட்டிவிட்டிருக்கிறது. நாம் தமிழர் கட்சி, மதிமுக போன்றவற்றின் கொள்கையையே இந்த இயக்கம் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றிருப்பதால் அந்தக் கட்சிகளை ஓரங்கட்டியிருப்பதாகச் சொல்லமுடியாது. மற்றபடி இனிமேல் தமிழகத்தில் எந்தவொரு கட்சி இயங்குவதாக இருந்தாலும் அது தமிழர் நலனை அதிலும் இந்த இயக்கத்தினர் முன்வைத்திருக்கும் விதமான கோணத்தில் முன்னெடுத்தாகவேண்டும் என்ற மிரட்டலை இந்த இயக்கம் விடுத்திருக்கிறது. பழைய கட்சிகளை ஓரங்கட்டியது தொடர்பாக நிச்சயம் பெருமிதமே கொள்ளவேண்டும். ஆனால், புதிதாக முன்வைக்கும் கோஷங்கள் கவலையைத் தருகின்றன.

ராமர் கோவில் கட்டும் இயக்கம் இதுபோலவே தேசம் முழுவதையும் கரசேவையில் ஈடுபடுத்தி ரத யாத்திரைகள் நடத்தி பெரும் இயக்கமாக வளர்ந்து இன்று மத்தியில் ஆட்சியையும் பிடித்திருக்கிறது. ஆட்சிக்கு வந்த பிறகு மிகுந்த பொறுப்புடனே அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையே அந்த இயக்கத்தினால் பலம் பெற்ற பா.ஜ.க. முன்னெடுத்துவருகிறது. அந்தவகையில் இன்று தமிழ் உணர்வை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் இந்த இயக்கம் நாளை ஆட்சிக்கு வந்து அனைவரையும் உள்ளடக்கிய  வளர்ச்சியையே முன்னெடுக்குமென்றால் இந்த ஆரம்பகட்டச் செயல்பாடுகளை ஒருவகையில் ஏற்றுக்கொண்டுவிடமுடியும். ஆனால், ராமர் கோவிலைக் கட்டும் இயக்கத்தின் நோக்கம் ஆக்கபூர்வமானதாக இருந்தது. இன்றைய இயக்கத்தின் நோக்கம் காலிஸ்தான் இயக்கம் போல் அழிவின் விதைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. 

மேலும் தொட்டடுத்த இலங்கையில் இதே போல் இன ஒடுக்கல் சார்ந்த மிகை முழக்கங்கள் எழுப்பப்பட்டு முன்னெடுக்கப்பட்ட விஷயங்களால் சிந்தப்பட்ட ரத்தமும் கண்ணீரும் இன்னும் காயவில்லை. இந்த சல்லிக்கட்டு இயக்கத்தின் பின்னால் ஈழத்தமிழ் மனம் ஏதேனும் இருக்குமென்றால் அதனிடம் மன்றாடிக் கேட்பதெல்லாம் இது ஒன்றே: ஈழ அழிவுகளுக்கு இந்தியாவே காரணம் என்று உங்கள் மனம் நம்புவது உண்மையென்றே வைத்துக்கொள்வோம்... வேதனையில் அழும் உங்களிடம் முழு உண்மையைப் பேச இப்போது விரும்பவில்லை. ஆனால், இந்தியாவை அதற்காகப் பழி தீர்க்கப் புறப்பட்டுவிடாதீர்கள். இன்னா செய்தாரை ஒறுத்தல் என்றெல்லாம் நீதி போதனை சொல்லவில்லை. வேண்டுமானால் இந்த எழுச்சியைக் காட்டி மிரட்டி இந்திய அரசை ஈழ விஷயத்தில் இனிமேல் செய்ய வேண்டியவற்றைச் செய்யவைக்கப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவருமே இளமையில் வறுமையில் வாடியவர்களாம். நான் பசியால் துடித்தபோது இந்த சமூகம் எனக்கு உதவவில்லை... நான் வெற்றிகள் பெற்ற பிறகு இந்த சமூகத்துக்கு எதற்கு நான் உதவவேண்டும் என்று சிவாஜி கேட்டாராம். எம்.ஜி.ஆரோ பசிக் கொடுமை மிக மிக மோசமானது என்பதை எனக்குப் புரியவைக்கவே இந்த சமூகம் என்னை பசியால் வாட்டியிருக்கிறது. சமூகம் எனக்குக் கற்றுக் கொடுத்த அந்தப் பாடத்தை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். நான் பட்ட அந்த துன்பத்தை இந்த சமூகத்தில் இனி யாரும் படக்கூடாது என்று வெற்றி பெற்ற பின் எம்.ஜிஆர். நடந்துகொண்டாராம். தமிழர் என்பதால் உங்களுக்கு இது நன்கு புரியும்: நீங்கள் எம்.ஜி.ஆராக இருங்கள்.
*
இந்தப் போராட்ட வடிவம் எந்த அளவுக்கு சரி..? இது முழுக்க முழுக்க மிரட்டல் தொனியையும் பிடிவாதத்தையும் அடிப்படையாகக் கொண்ட போராட்ட வடிவம். உணர்ச்சிமயமான பிளாக் மெயில் என்றுதான் இதைச் சொல்லவேண்டும். மத்திய மாநில அரசுகள் இந்த விஷயத்தில் இதுவரையும் எந்தவித அப்பீஸ்மெண்டுக்கும் இடம் கொடுக்காமல் எந்தவித ஈகோ மோதலாகவும் எடுத்துக்கொள்ளாமல் நிதானமாகவே நடந்துகொள்கின்றன. அதிகபட்சமாக வேகமாகச் சில விஷயங்களை முன்னெடுக்கிறார்கள் என்பதைத்தவிர இதில் வேறு எந்தக் குறையும் அவர்கள் பக்கம் இல்லை.


போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் எளிய மக்களைப் பொறுத்தவரையில் குழந்தைகள் தரையில் விழுந்து புரண்டு அழுவதுபோல் நடந்துகொள்கிறார்கள். அவர்களைப் பின்னின்று இயக்கும் போராட்டக்காரர்களோ ஆளைக் கடத்திச் சென்று காட்டில் ஒளித்துவைத்துக்கொண்டு இரண்டு கோடி, ஒரு கோடி என்று பேரம்பேசும் கடத்தல்காரனைப்போல் நடந்துகொள்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழகமுமே அவர்களிடம் பிணைக்கைதியாக மாட்டிக்கொண்டிருக்கிறது. பிணைக் கைதி அவர்கள் வசம் இருக்கும்வரையில்தானே பேரம் பேசமுடியும் அவர்களால். அதை அவர்கள் திறம்படச் செய்யவும் செய்கிறார்கள். 

இதற்கு முன் தமிழகத்தில் இதுபோல் ஒருவன் இருந்திருக்கிறான். அவனும் இதேபோல் தமிழ் தேசியவாதியே என்பதை வைத்துப் பார்க்கும்போது ஒருவரைச் சிறைப்பிடித்த வீரப்பனைக் கொன்றீர்கள்... ஊரைச் சிறைப்பிடித்த வீரப்பர்களை எப்படிக் கொல்வீர்கள் என்று கானகமே அதிரும் வண்ணம் அசுரச் சிரிப்பொலி கேட்பதுபோல் ஒரு பிரமை. அதிலும் தேசியமும் தெய்விகமும் இரு கண்கள் என்று சொன்னவரின் வழித்தோன்றல்களுடைய உணர்ச்சிகளை முன்வைத்து அதைச் செய்வதைப் பார்க்கும்போது மனம் லேசாக வலிக்கிறது. ராவணனைத் திருத்தாமல் அவன் தேசத்தை அதன் காவல் தெய்வங்கள் கைவிட்டதுபோல் செய்துவிடாமல் ராம நாடின் காவல் தெய்வங்கள் ராமனுக்கு இறுதிவரை நின்று வழிகாட்டிடவேண்டும்.

No comments:

Post a Comment