Monday 16 January 2017

தமிழகம் : நேற்று இன்று நாளை - 3

சல்லிக்கட்டு விஷயத்தில் மூன்று அடுக்குகள் இருக்கின்றன. ஒன்று விலங்குகள் நலன். இன்னொன்று கலாசார, சமூக நோக்கு. மூன்றாவதாக சமகால அரசியல்.

விலங்குகளின் கோணத்தில் இருந்து பார்த்தால், விலங்குகளைக் கொன்று தின்பது மிகப் பெரிய தவறு. விலங்குகளை மிருக காட்சி சாலைகளில் அடைத்து வைப்பதும் சர்கஸில் பயன்படுத்துவதும் தவறு. சல்லிக்கட்டு, ரேக்ளா போட்டி, காளைச் சண்டை என நடத்துவதும் தவறு. இந்த மூன்றில் கடைசி வகையே மிக மிக மிதமான தீமை. என்றாலும் விலங்கின் கோணத்தில் இருந்து பார்த்தால் அதுவும் தவறுதான். விலங்குகளைத் தின்னாமல் இருக்கும் நாகரிக நிலையை நோக்கிய லட்சியப் பயணத்தின் முதல் காலடி, விலங்குகளை வைத்து விளையாடுவதை நிறுத்துவதில் இருந்தே தொடங்கவேண்டியிருக்கும்.

விலங்குகளை வைத்து விளையாடுவது தவறென்றால் தின்பது மட்டும் சரியா என்று ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. ஏனென்றால், விளையாட்டு எதிராக இருப்பவர்கள் கூட மாமிச உணவுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். எனவே, வெட்டித் தின்கிறாய்... விளையாடினால் தவறா என்று அவர்களை மடக்குவது எளிது. ஆனால், தமிழர்களின் ஒப்பற்ற இலக்கியவாதியான திருவள்ளுவர் கொல்லாமையை அழுத்தமாக வலியுறுத்துகிறார். இந்து வைதிக மதத்தை எதிர்த்த புத்தர் கொல்லாமையை முன்வைத்திருக்கிறார். இந்தியப் பெருங்கருணை மதமான சமணம் கொல்லாமையை அடிப்படை நற்பண்பாக முன்வைக்கிறது. அதோடு இந்திய அறிவு வர்க்கமான பிராமண வர்க்கமும் புலால் மறுப்பையே தனது வாழ்க்கை வழிமுறையாகக் கொண்டிருக்கிறது. எனவே, வெட்டித் தின்பதும் தவறு விளையடுவதும் தவறு என்று ஒரு குரல் முன்வைக்கப்பட்டால் இவர்களில் யாருக்கும் பதில் சொல்லவே முடியாது. பிரிவினைவாதம் பேசும் திராவிட, தமிழ் தேசியத் தலைவர்களோ பிராமணர்கள் சொல்கிறார்கள் என்ற ஒற்றைக் காரணத்துக்காக கொல்லாமையை முன்வைத்த புத்தரையும் வள்ளுவரையும் ஓரங்கட்டுகிறார்கள். இங்கும் கொள்கைக்கு ஏற்ப அரசியல் அல்ல. அரசியலுக்கு ஏற்ப கொள்கையைத் திரித்துக்கொள்வதே நடக்கிறது. வள்ளுவரை மறுக்கச் சொல்லும் கலாசாரம் தமிழனுக்குத் தேவையா..?

ஜல்லிக்கட்டு தொடர்பாகச் சொல்லப்படும் வாதங்களில் முக்கியமானது காளைகளை மிகவும் நேசிக்கிறோம்; காளைகள் மீதான மரியாதை மற்றும் நன்றிக்கடனின் அடையாளமாகத்தான் சல்லிக்கட்டே நடத்துகிறோம் என்பதுதான். இது பீட்டா அமைப்பு காளைகளைத் துன்புறுத்துவதாகச் சொல்லி தடை கோரியிருப்பதால் அதை மறுக்கச் சொல்லப்படும் எதிர்வாதமே. ஊர் கூடிச் சுற்றி நின்று விரட்டுவதும் மிரட்டுவதும் பாய்ந்து அடக்க முற்படுவதும் அன்பின் வெளிப்பாடாக இருக்கமுடியாது. அன்பென்றால் கோ மாதா பூஜையின்போது மாலை அணிவித்து உணவுகொடுத்து வணங்குவதுதான். காளைகளின் கொம்புகளுக்கு வண்ணம் அடித்து சந்தனம் குங்குமம் இட்டு பொங்கல், கரும்பு கொடுத்து கும்பிடுவதுதான். அதை மக்கள் செய்யத்தான் செய்கிறார்கள். அதுவே அன்பின் நன்றிக்கடனின் வெளிப்பாடு.. அதிலும் கூட காளைகளைக் காயடித்து, மூக்கணாங்கயிறு மாட்டி 364நாட்களும் வண்டியிழுக்க வைத்துவிட்டு ஒரே ஒருநாள் இப்படி நன்றிக்கடன் செலுத்துவதை பெரிய பண்பாடு என்றெல்லாம் சொல்ல முடியாது.

சல்லிக்கட்டுக்காளைகள் மீது வண்டிக் காளைகளைவிட கூடுதல் பாசம் உண்டு என்பது உண்மையே. ஆனால், காளையின் பார்வையில் அதுவும் சுமையே. சுருக்கமாகச் சொல்வதென்றால் விலங்குகளை வைத்து நடத்தும் எந்தவொன்றையும் கலாசாரம் என்று நியாயப்படுத்தவே முடியாது. அதுபோல் கடவுளுக்கு ஆடு, கோழி, பன்றி, ஒட்டகம் வெட்டி வணங்குவதும் விலங்குகளின் பார்வையில் மிக மிகத் தவறுதான். அவற்றை நிறுத்துவதற்கான முதல் காலடி என்பது அவற்றை இறை விழாக்களில் இருந்து நீக்குவதுதான். கலாசாரம் என்பது நாகரிகத்துடன் முரண்படும்போது நாகரிகத்துக்கே முன்னுரிமை தரவேண்டும்.

அந்தவகையில் விலங்குகளின் கோணத்தில் சல்லிக்கட்டு மட்டுமல்ல இந்துச் சிறு தெய்வ பலி, இஸ்லாமிய ஈத் என அனைத்துமே தடுக்கப்படவேண்டியவையே. இந்த இடத்தில் பீட்டா போன்ற அமைப்புகளிடம் நாம் கேட்கவேண்டியதெல்லாம் விலங்குகள் மீதான அன்பினால் மட்டுமே இதைச் செய்கிறோம்; எந்த தனிப்பட்ட இனத்தையோ மதத்தையோ எதிர்க்கும் நோக்கில் செய்யவில்லை என்று தெளிவாகச் சொல்லுங்கள் என்பதுதான். தமிழர்களின் சல்லிக்கட்டை மட்டுமல்ல அமெரிக்க (கிறிஸ்தவ) சர்கஸ்களையும் இஸ்லாமிய ஒட்டக, ஆடு பலிகளையும் எதிர்க்கத்தான் செய்கிறோம் என்று ஒவ்வொரு முறையும் தெளிவாகச் சொல்லவேண்டும்.

மாமிச உணவு உலக மக்களில் பெரும்பான்மையினரால் உண்ணப்படுவதால் அதை எதிர்க்க முடியாது. இதுபோன்ற கலாசார, விளையாட்டு விஷயங்களில்மட்டும்தான் எதிர்க்கிறோம் என்று அவர்கள் சொல்லவே முடியாது. அவர்களுடைய இந்தக் கோரிக்கையும் காட்டுமிராண்டித்தனமானதே. வள்ளுவரும் புத்தரும் சமணரும் பிராமணர்களும் சொல்லும் கொல்லாமையே உயரிய நாகரிகம். எனவே பீட்டாவும் தனது காட்டுமிராண்டி நிலையில் இருந்து மேலெழ வேண்டிய தேவை இருக்கத்தான் செய்கிறது. பின் என்ன... ஃபோர்க்கால் போர்க்கைச் சாப்பிட்டபடியே யூ பிளடி டமிள்ஸ்... யூ பார்பாரிக் இண்டியன்ஸ் என்று பேச எந்த அருகதையும் அவர்களுக்குக் கிடையாது.

விலங்குக் கோணம் நீங்கலாக கலாசார, சமூக அரசியல் சார்ந்து பார்த்தால் சல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று என்பதாலும் இந்துக் கோவில் விழாக்களின் ஓர் அங்கம் என்பதாலும் அதை ஆதரிக்க வேண்டும். அதேநேரம் ஆதிக்க சாதியான தேவர்களின் அடையாளமாகவே அது இருப்பதால் அந்த கலாசார அம்சத்துக்குத் தரும் ஆதரவானது தேவர்களின் ஆதிக்க மனோபாவத்துக்கு தரும் ஆதரவுபோல் ஆகிவிடுவதால் அந்த சாதி மேலாதிக்க அம்சத்தை அதில் இருந்து நீக்கி முன்னெடுக்கவேண்டும். உதாரணமாக, சல்லிக்கட்டுப் போட்டிகளில் பள்ளர்களுக்கும் பரிவட்டம் கட்டி மரியாதை செய்துவிட்டுத்தான் தொடங்கவேண்டும் என்று சொல்லலாம். பள்ளர்கள் வளர்க்கும் காளைகளையும் போட்டில் பங்கெடுக்க வைக்கவேண்டும். அதை வெறுமனே சாமி காளை என்று தீண்டாமலேயே விட்டுவிடக்கூடாது.

அலங்கா நல்லூரில் இப்போது பெரும்பான்மையாக இருப்பது தேவர்கள் அல்ல என்று சொல்லப்படுகிறது. எது எப்படியானாலும் சல்லிக்கட்டு தேவர்களின் விளையாட்டாகவே இருந்து வந்திருக்கிறது. டாக்டர் கிருஷ்ணசாமியில் ஆரம்பித்து திருமாவளவன் வரை இந்த விஷயத்தில் எதிர்ப்பும் விலகலும் காட்டுவதில் இருந்து அந்த விஷயம் உறுதிப்படவே செய்கிறது. எனவே அதில் பள்ளர்களின் பங்களிப்பு நிச்சயம் அதிகரிக்கவேண்டும்.

மேலும் நவீனத் தமிழர்களின் பாரம்பரிய விழாவாகவும் அதை முன்னெடுக்க விரும்புவதால், சர்ச்கள், மசூதிகளுக்குள் சந்தனம் குங்குமம் இட்ட காளைகளைக் கொண்டு சென்று ஆரத்தி சூடம் காட்டி அழைத்துவந்து சல்லிக்கட்டு நடத்தவேண்டும். இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மதம் தானே மாறியிருக்கிறார்கள். தமிழ் கலாசரம் அவர்களுக்கும் உண்டு அல்லவா. எனவே அவர்களும் இந்து - தமிழ் கலாசார அம்சத்தோடு சல்லிக்கட்டை நடத்தவேண்டும். ஆட்டுக்குட்டியை அணைக்கும் ஏசுபிரான் காளையின் திமிலையும் வாஞ்சையுடன் தடவிக் கொடுக்கவேண்டும். மாட்டு ரத்ததால் நனையும் பள்ளி வாசல்கள் இனி கோமியத்தால் புனிதம் பெறவேண்டும். வேறென்ன தமிழ் காளைகள் இந்துக் கோவில்களில் மட்டும் வணங்கப்பட்டால் போதுமா என்ன?

இன்றைய சம கால அரசியல் களத்தில் அது இந்திய மத்திய அரசை எதிர்க்கும் கருவியாக்கப்பட்டிருப்பதால் அதைக் கூடுதல் கவனமாகக் கையாளவேண்டியிருக்கிறது. சல்லிக்கட்டுக்கு ஆதரவு தருவது இன்றைய பி.ஜே.பி.க்கு சாதகமாக அமைந்து இந்திய தேசியத்துக்கு வலுச் சேர்க்கும் என்றால் அதைச் செய்யலாம். தமிழ் தேசியம் என்ற போர்வையில் இந்திய தேசிய சக்திகளை எதிர்க்கும் குழுக்களை அடக்க சல்லிக்கட்டை ஒழுங்குபடுத்துவது அவசியம் என்றால் அதையே செய்யவேண்டியிருக்கும்.

இன்றைய போராட்டமானது சல்லிக்கட்டு விழாவின் இந்து அம்சங்களை பின்னுக்குத் தள்ளுவதிலேயே குறியாக இருக்கிறது. தடையை மீறி சல்லிக்கட்டு நடத்துபவர்கள் எல்லாரும் கோவிலில் இருந்து வெகு தொலைவில் பொட்டல்காட்டில் வேடிக்கை விளையாட்டாகவே அதை நடத்திக்காட்டியிருக்கிறார்கள். அந்த எளிய மக்களுக்கு எந்தவித அரசியல் உள் நோக்கங்களும் கிடையாதென்றாலும் அது இந்து அம்சத்தை நீக்கி தமிழ் அம்சம் மட்டுமே கொண்டதாக ஆக்கவிரும்புபவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் செயலாகவே இருந்திருக்கிறது.

இந்திய தேசியத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியுமே அதன் பிரதிநிதிகளாக இருந்து வந்திருக்கிறார்கள். சல்லிக்கட்டு விஷயத்தில் இரண்டுமே பரஸ்பரம் அடுத்தவர் மேல் பழிபோடுவதால் இந்திய தேசியத்தின் வலுவையே குறைக்கிறார்கள். பி.ஜே.பி. இந்த விவகாரத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும். அவர்கள் திருவள்ளுவருக்கு சிலை அமைத்தல், திருக்குறளை முன்னெடுத்தல் போன்ற செயல்களால் தமிழ் மக்களுக்கு நெருக்கமாகச் செயல்படுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதோடு ஜெயலலிதா, சசிகலா போன்றோரின் ஊழல் ஃபைல்கள் கைவசம் இருப்பதால் அவர்கள் மூலம் தமிழக அரசியலைத் தமது கைக்குள் வைத்திருப்பதாக போலிப் பெருமிதத்துடன் இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் தமிழ் தேசியப் போர்வையில் இந்திய தேசிய எதிர்ப்புச் செயல்பாடுகள் தமிழகத்தில் திரை மறைவில் வெகு தீவிரமாக நடந்துவருவதை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. கரையான்கள் அரிக்கும் மரங்கள் விழுவதற்கு முந்தின நாள்வரையிலும் வலுவுடன் இருப்பது போலத்தான் தெரியும். தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் மத்திய அரசுக்கு எதிரான செயல்பாடுகள் எல்லாமே பி.ஜே.பி.க்கு எதிரானவையோ காங்கிரஸுக்கு எதிரானவையோ அல்ல... இந்திய தேசியத்துக்கு எதிரானவை. இந்தப் புரிதல் பா.ஜ.க.வுக்கு இருந்தாகவேண்டும்.

பொதுவாகவே மோதி தலைமையில் மத்திய அரசு அமைந்ததைத் தொடர்ந்து அவர் மீது திணிக்கப்பட்ட இந்து அடிப்படைவாத முத்திரையை எதிர்க்கும் நோக்கில் இந்திய தேசியத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, மாயாவதி ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எல்லாம் இந்திய இந்து தேசியத்துக்கு எதிராகவே சமீபலாகமாகத் திரும்பிவருகின்றன. கர்நாடக காங்கிரஸ் அரசு மத்திய பி.ஜே.பி.யை எதிர்க்கும் நோக்கில் காவிரி விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்ததோடு சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகவும் அதை தீவிரப்படுத்தியது. மாட்டுக்கறி விவகாரம், விருது திருப்பிக் கொடுத்தல், சகிப்புத் தன்மையற்ற நாடு, இழிவான நாடு, மாட்டுத்தோல் உரிப்பு, வெமுலா தற்கொலை என பி.ஜே.பி.க்கு எதிரான போர்வையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் எல்லாமே இந்திய தேசியத்தையும் இந்து சக்திகளையும் அழிக்கும் நோக்கிலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. சல்லிக்கட்டுப் போராட்டம் தமிழகச் செயல்திட்டத்தின் அங்கமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.


மோதி குஜராத்தில் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து சமூக விரோதிகளால் நடத்தப்பட்ட கோத்ரா படுகொலை மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களை ஊடகங்கள் இந்து அடிப்படைவாத அபாயமாகத் தொடர்ந்து பத்து வருடங்கள் பொதுவெளிகளில் அவதூறுப் பிரசாரமாக முன்னெடுத்தன. மோதி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு நீதித்துறையும் ஊடகங்களோடு கைகோத்திருக்கின்றன. போதாதகுறையாக என்.ஜி.ஓக்கள் மீதான கெடுபிடிகள் அவர்களையும் இந்தக் கூட்டணியில் சேர வைத்திருக்கிறது. இந்த மூன்றின் ஒருங்கிணைப்பு எப்படி ஒரு பெரும்பான்மை அரசைக்கூட நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்பதற்கு சல்லிக்கட்டு நல்ல உதாரணம். எனவே, சட்டரீதியான வெற்றியைப் பெறுவதில் காட்டும் அக்கறை மட்டுமே போதாது. சில அரசியல் செயல்கள் மூலமும் நமது நல்லெண்ணத்தை பி.ஜே.பி. வெளிப்படுத்த வேண்டும். ஹெச்.ராஜா தான் வளர்க்கும் காளையுடன் சல்லிக்கட்டில் குதித்தது நல்லதொரு செயல். 

இனி வரும் நாட்களில் பி.ஜே.பி. தலைவர்கள் கண்டதேவித் தேரோட்டம், இரட்டை குவளை எதிர்ப்பு, கருவறைகளுக்குள் தமிழ் மந்திரங்கள் முழங்குதல், மாட்டுகறி எதிர்ப்பு, கோசாலை இயக்கம், துப்புரவுப் பணியாள புரோகிதர்கள் போன்ற சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும். கலாசாரம் என்ற பெயரில் எந்தவொரு பிற்போக்கு அம்சமும் நீடிக்க அனுமதிக்கக்கூடாது. நீளவிருக்கும் அலங்கா நல்லூர் இரவுகளின் முடிவில் பொன்னிறக் கதிர்களால் மெழுகுவர்த்திகளை ஒளியிழக்கச் செய்தபடி ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் அனைவருக்குமான நம் சூரியன் உதிக்கவேண்டும்.

No comments:

Post a Comment