Monday, 18 January 2016

திருநாள்கொண்டசேரியில் உதிக்கும் சித்திரை முழு நிலவு


தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்னை சாதி மோதல்கள்தான். இந்தியா முழுவதுமே அதுதான் பிரதான பிரச்னையும் கூட. சாதிப் பிரச்னை என்னென்ன வடிவங்களில், எந்தெந்த அளவுகளில், எந்தெந்த இடங்களில், எந்தெந்த சாதிகளுக்கு இடையில், எந்தெந்த காலங்களில் என்னென்ன காரணங்களுக்காக எல்லாம் வெளிப்பட்டிருக்கிறது, அதன் மூல நோக்கம் என்ன  என்று அதன் வரலாற்றை அலசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் அதைத் தீர்க்க வழி கிடைக்கும். நோய் நாடி நோய்க்கு முதல் நாடினால்தானே அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்ப செயலைச் செய்ய முடியும்.

ஆதிக்க சாதிகள் சமத்துவத்தை மறுக்கின்றன. அடங்கிக் கிடந்த சாதிகள் சமத்துவத்தை கோருகின்றன. சாதிப் பிரச்னையின் அடிப்படை அம்சம் சமத்துவ மறுப்பும் சமத்துவ கோரலும்தான்.
எங்கள் தெருக்கள் வழியாக ஊர்வலம் செல்லக்கூடாது...
செல்வோம்;
எங்கள்
குளங்களில் நீர் எடுக்கக்கூடாது...
எடுப்போம்;
எங்கள் குவளைகளில் தேநீர் அருந்தக் கூடாது...
குடிப்போம்;
எங்களைப் போல ஆடை அணியக்கூடாது.
அணிவோம்;
எங்கள்
கோவிலுக்குள் வரக்கூடாது.
வருவோம்;
எங்கள் தேரைத் தொடக்கூடாது.
தொடுவோம்;
எங்கள்
பெண்களைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.
செய்வோம்;
எங்களுக்கு
அருகில் உட்காரக்கூடாது.
 
உட்காருவோம்;
எங்களுக்கு சமமாக உட்கார்ந்து சாப்பிடக்கூடாது;
சாப்பிடுவோம்.

எங்கள் முன்னால் கை கட்டி வாய் பொத்தித்தான் நிற்க வேண்டும்.
நிற்கமாட்டோம்;
நாங்கள் சொல்லும்
வேலைகளை நாங்கள் தரும் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு செய்தாகவேண்டும்.
செய்யமாட்டோம்;
எங்களைவிடப்
பணக்காரராக ஆகக்கூடாது.
ஆவோம்.
எங்களை முந்திச்
சென்றுவிடக்கூடாது.
செல்வோம்.

இந்தியா
முழுவதுமான ஆதிக்க சாதிகள் தமக்கு அடுத்த சாதியிடம் சொல்வதும் எதிர்பார்ப்பதும் இந்த அடிபணிதலைத்தான்.
இந்தியா முழுவதிலுமான அடங்கிக் கிடந்த சாதியினர் செய்வதும் செய்ய விரும்புவதும் இதே மீறலைத்தான். மேல் சாதியினர் தமக்கு அடுத்தபடியில் இருக்கும் இடைநிலை சாதியினரின் மீறல்களை, அனுமதிப்பதுபோல் அனுமதித்து, ஆதிக்கத்தை தந்திரமாக வேறு வழிகளில் நிலைநாட்டிக் கொள்கிறார்கள். அப்படிச் செய்ய முடியாத அல்லது செய்யத் தெரியாத இடைநிலை சாதியினர் தமது  ஆதிக்கத்தை வன்முறை மூலம் நிலைநாட்ட முயற்சி செய்கிறார்கள்.
இந்திய சாதிய மோதல்களின் சாராம்சம் இதுதான்.

பொதுவாக இந்த சமத்துவ மறுப்பும் சமத்துவ உரிமை கோரலும் ஏதாவது ஒரு பிரச்னையை முன்வைத்து வெளிவரும். எங்கள் தெருவின் வழியாக உங்கள் பிணங்களைக் கொண்டு செல்லக்கூடாது என்று ஒரு ஊரில் ஆதிக்க சாதியினர்  சொல்வார்கள். அடங்கிக் கிடந்த சாதியினரின் அரசியல் சக்திகள் அப்படித்தான் போவேன் என்று சொல்வார்கள். பொதுவாக இப்படியான பிரச்னை இடை மற்றும் கடைநிலை சாதிகளுக்கு இடையில்தான் அதிகமும் ஏற்படும். இடைநிலை சாதியினர் தமக்குத் தெரிந்த ஒரே வழியான வன்முறையைக் கையில் எடுப்பார்கள்.

இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?

அடங்கிக்
கிடக்கும் சாதியினருக்கு என்று தனியாக ஒரு பாதையை சு(இ)டுகாட்டுக்குச் செல்ல அமைத்துக் கொடுக்கலாம்அவர்களுடைய குடியிருப்புக்கு அருகிலேயே ஒரு சு(இ)டுகாடு கட்டித் தரலாம்.

அல்லது
  காவல்துறையின் துணையோடு எந்தத் தெருவின் வழியாகக் கொண்டு செல்லக்கூடாது என்று சொல்கிறர்களோ அந்தத் தெருவின் வழியாக பிணத்தைக் கொண்டு செல்லலாம்.

அல்லது
அடங்கிக் கிடந்த சாதியினர் தம்மை அடக்கிய ஆதிக்க சாதியை அவமானப்படுத்தும் நோக்கில் தமது வளர்ப்புப் பிராணிகளில் நாயோ, பன்றியோ இறந்திருந்தால் அதை ஆதிக்க சாதியினரின் தெருவின் வழியாகக் கொண்டு சென்று அல்லது ஆதிக்க சாதியின் சுடுகாட்டிலேயே எரித்துக் காட்டலாம். எங்க பிணங்கள் எரிக்கப்படக்கூட உங்க சு(இ)டுகாடுக்கு அருகதை இல்லை. எங்கள் நாயும் பன்னியும் எரிக்கத்தான் அது லாயக்கு என்று காட்டலாம்.

இந்த
மூன்று வழிகளில் முதலாவது சாத்விக, காந்திய வழி.
இரண்டாவது சட்ட பூர்வமான, அம்பேத்கரிய வழி.
மூன்றாவது கலக வழி. ஒரு பேச்சுக்காக .வே.ரா.வின் வழி என்று அதைச் சொல்கிறேன். .வே.ரா. பேச்சில் காட்டிய வெறியை என்றுமே செயலில் காட்டியதில்லை. அதாவது காட்ட முடிந்திருக்கவில்லை. இந்து சமூகம் கழைகூத்தாடியின் சாகசங்களைக் கை தட்டி மகிழ்ந்துவிட்டு தமது வழக்கமான வீடுகளுக்குத் திரும்பியதைப் போல் அவருடைய பேச்சுகளை ரசித்துக் கேட்டுவிட்டு தெய்வம், ஆணாதிக்கம், சாதிப் பற்று, பிராமண மரியாதை என அனைத்தையும் அப்படியே பின்பற்றி வந்திருக்கிறது. இருந்தாலும் அதிரடியான, கலக வழி என்பதால் மூன்றாவதுவழியை .வே.ரா.வின் வழி என்று புரிதலுக்காகச் சொல்கிறேன்.

அடிப்படை பிரச்னைகள் மறுக்கப்படுவதை ஒருவிதமாகவும் பிற விஷயங்கள் மறுக்கப்படுவதை வேறுவிதமாகவும் கையாளவேண்டும். அதாவது அடிப்படை பிரச்னைகளில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை. கேட்டது கிடைத்தேயாகவேண்டும். தலித்களுக்குக் கல்வி கிடைத்தேயாகவேண்டும். தலித்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைத்தேயாகவேண்டும். தலித்களுக்கு வேலைகள் கிடைத்தேயாகவேண்டும். இதிலெல்லாம் எந்த விட்டுக்கொடுத்தலுக்கும் இடம் கிடையாது. இதை நிறைவேற்ற வன்முறையோ அரச அதிகாரப் பிரயோகமோ தேவைப்பட்டால் நிச்சயம் கைக்கொண்டாகவேண்டும். வேறு விஷயங்களிலும் கேட்டது கிடைத்தாகவேண்டும்தான். ஆனால், அதை நிதானமாகப் பெறலாம். ஆதிக்க சக்திகள் ஏதேனும் இடைநிலைத் தீர்வை முன்வைத்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். சிறிது காலம் கழித்து அடுத்தகட்ட கோரிக்கையை முன்னெடுக்கலாம்.

ஒரு தெருவின் வழியாக ஊர்வலம் செல்வது அல்லது பிணத்தை எடுத்துச் செல்வது என்பதெல்லாம் அடிப்படைத் தேவை சார்ந்தது அல்ல. மெதுவாகவே கேட்டுப் பெறலாம். அதிலும் அடிப்படை பிரச்னைகளுக்கு எந்த பங்கமோ எந்தப் பெரிய போராட்டமோ தேவைப்பட்டிருக்காத நிலையில் அடிப்படைத் தேவையல்லாதவற்றைப் பேசிக் கேட்டுப் பெறலாம். நாட்டின் பிற பகுதிகளில் அது சர்வ சாதாரண நிகழ்வாக ஆகிவிட்டிருந்தாலும் ஒரு ஊரில் அது பிரச்னையாக ஆகியிருந்தால் அங்கு முதலில் இருந்து ஆரம்பிக்கத்தான் வேண்டும். ஏனென்றால், அந்த ஊரின் கடைநிலை ஆதியினர் ஆதிக்க சாதியினரையே பெரிதும் சார்ந்திருக்கிறார்கள். அங்கு முன்னெடுக்கப்படும் எந்தவொரு அதிரடிப் போராட்டமும் கடைநிலை சாதியினரையே வெகுவாகப் பாதிக்கும். எந்த அறிவுஜீவியோ அரசியல்வாதியோ சாதிப் போராளியோ துளியும் பாதிக்கப்படமாட்டார். எனவே, இங்கும் காந்திய வழியே மிகவும் பொருத்தமானது. எதிர்ப்பு என்பதைக் காட்டப் பல வழிகள் இருக்கின்றன. காந்தி பிரிட்டிஷாருக்கு எதிராகச் சட்ட மறுப்பு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், உண்ணாவிரதம் எனப் பல வழிகளை மேற்கொண்டார். எதிர்தரப்பின் தார்மிக உணர்வுடன் மோதினார். அவர்களுடைய மனசாட்சியுடன் உரையாடினார். தலித்களும் சாதி இந்துக்களின் மனசாட்சியுடன் உறவாடவேண்டும். அந்நியரான பிரிட்டிஷாருடனே காந்தி சகோதர உணர்வை வெளிப்படுத்தினார். கீழ்சாதி இந்துக்களான தலித்கள் மேல் சாதி இந்துக்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை. பிரிட்டிஷ் மேலாதிக்கத்தை வெறு... பிரிட்டிஷாரை நேசி என்பதுதான் காந்தியின் தத்துவம். மேல் சாதி வெறியை வெறு... மேல் சாதிக்காரரை நேசி இதுதான் நம் வழிமுறையாக இருக்கவேண்டும்.

எந்தெந்த விஷயங்களில் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் மேல்சாதியினர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்களோ அதை மேலும் வலுப்படுத்தவேண்டும். உதாரணமாக, எங்கள் தெருவின் வழியாக ஊர்வலம் செல்லக்கூடாது என்று சொல்பவர்கள் சம பந்தி விருந்துக்குத் தயாராக இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த ஊரில் ஊர்வலம் போய்த்தான் தீருவேனென்ற போராட்டத்துக்குப் பதிலாக மாதந்தோறும் ஒரு சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும். அந்த ஊரின் ஆதிக்க சாதியினர் எந்தெந்த விஷயங்களில் திறந்த மனதுடன் இருக்கிறார்களோ அதை முதலில் முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஒரு விவசாயியிடம் பத்து ஏக்கர் நிலம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் ஐந்து ஏக்கருக்கு நல்ல நீர்ப்பாசன வசதி இருக்கிறதென்றால் முதலில் அதில்தான் அவர் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். இதுதான் அடிப்படையான புத்திசாலித்தனமான செயல். தரிசான நிலத்துக்கும் நீர்ப்பாசன வசதி செய்துகொண்டாகவேண்டுமென்பது அடுத்த இலக்காகவே இருக்கவேண்டும்.     

பொதுவாக, ஆதிக்க
சாதியினர் தாம் செய்வது சரி என்ற நினைப்பில்தான் இந்த ஒடுக்குதல்களைச் செய்கிறார்கள். முதலில் அவர்களுக்கு அது தவறு என்பதைப் புரியவைக்கவேண்டும். திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. மனிதர்கள் அனைவரும் சமம் என்பது சொல்லிப் புரிய வேண்டிய விஷயமா என்ன... இந்த எளிய விஷயத்தைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத ஒருவர் இருக்கமுடியுமா... உண்மையில் அது புரியாமல் எல்லாம் இல்லை. அவர்கள் அதைப் புரிந்துகொள்ள விரும்பாமல் இருக்கிறார்கள். அதாவது புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். தமது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அதற்கு ஒரு தடை வரும்போது தந்திரமாக அதை வென்றெடுப்பதற்கு பதிலாக வன்முறையாக அதை நிலைநாட்டிக்கொள்ள விரும்புகிறார்கள். இந்தப் பிரச்னை தீரவேண்டுமென்றால், ஆதிக்க சக்தியினரின் மனதில் சமத்துவ உணர்வு மலர்ந்தாக வேண்டும். இதை எப்படி அமல்படுத்துவது? நிதானமாக பொறுமையாக எடுத்துச் சொல்லிப் புரியவைக்கவேண்டுமா? கடும் தண்டனைகளைக் கொடுத்து அதிரடியாகப் புரியவைக்கவேண்டுமா?

இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கவேண்டுமென்றால், சாதிப் பிரச்னைக்கு எது அல்லது யார் காரணம் என்ற கேள்வியைக் கேட்டாகவேண்டும். ஏனென்றால், அதுதான் அமைதிவழியா, அதிரடி வழியா என்பதைத் தீர்மானிக்கும்..

சாதி என்பது இந்து மதத்தின் கண்டுபிடிப்பு. குறிப்பாக பிராமணர்களின் கண்டுபிடிப்பு. வேலைகளின் அடிப்படையில் பிரிந்து வாழ்ந்த எளிய மனிதர்களை மேல் கீழ் என்று பிரித்து பிறப்பின் அடிப்படையில் வேலைகளைத் தீர்மானித்து சாதிய அமைப்பை உருவாக்கினார்கள். புராணங்கள், ஸ்மிருதிகள் மற்றும் சடங்காசாரங்களை உருவாக்கி அந்த சாதி அமைப்புக்கு அசைக்க முடியாத மதரீதியான அங்கீகாரத்தை உருவாக்கிவிட்டார்கள். பிற சாதியினரிடம் இந்த உணர்வு இருந்தாலும் மதம் மாறிய பிறகும் இந்த உணர்வு இருந்தாலும் பிராமணர்களே சாதிச் சீர்கேட்டுக்குக் காரணம். மனு ஸ்மிருதியே சாதி அமைப்பின் ஆணிவேர்.
இதுதான் சாதி தொடர்பான முதலும் கடைசியுமான தீர்மானம். வேதாகமத்தைக் கேள்விக்கு உட்படுத்தும் கிறித்தவரைப் பார்த்திருப்பீர்கள்... குர்ரானைச் செல்லமாக விமர்சிக்கும் இஸ்லாமியரைக்கூட நீங்கள் பார்க்க முடியலாம். ஆனால், சாதி தொடர்பான இந்த மேற்கத்திய இறுதி வரிகளைக் கேள்விக்கு உட்படுத்தும் ஒருவரைக்கூட நீங்கள் பார்க்கவே முடியாது. இந்துப் பாரம்பரியம் குறித்து மிகுந்த பெருமித உணர்வுகொண்ட அதி தீவிர இந்துத்துவர்கள் கூட சாதி ஒரு சாபக்கேடு என்றுதான் சொல்வார்கள். அதை அவர்கள் மனப்பூர்வமாக நம்பிச் சொல்கிறார்களா... இஸ்லாமியரை எதிர்க்கும் போரில் இந்துக்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டுமென்றால் சாதியை விமர்சித்துத்தான் ஆகவேண்டும் என்ற அரசியல் உந்துதலினால் சொல்கிறார்களா என்பது வேறு விஷயம். ஆனால், சாதி அழியவேண்டும் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் அவர்களுக்கும் கிடையாது.

சாதி உணர்வு என்பது பழங்குடிகால உணர்வு. அகமண முறையும் சம பந்தி மறுப்பும் பழங்குடி வேர்களைக் கொண்டவை. அந்தவகையில் சாதியானது மேலடுக்கில் இருந்தவர்களால் உருவாக்கப்பட்டுக் கீழே திணிக்கப்பட்டதல்ல. கீழிருந்து மேலே கொண்டுசெல்லப்பட்டதுதான்.
இனம், நிறம், மொழி, மதம், தேசம் போன்ற பிற எல்லா குழு மனப்பான்மையைப் போன்றதுதான் சாதியும். பிறப்பின் அடிப்படையில்தான் இந்த அடையாளங்களும் தீர்மானமாகின்றன. மத மாற்றம் என்பது ஓரளவுக்கு புதிதாக ஆட்களைச் சேர்த்துக்கொள்ளும் என்றாலும் அங்கும் பழைய பாரம்பரியங்களைத் தூக்கி எறிந்துவிட்டு புதிதாகப் பிறப்பதையடுத்துத்தான் அந்தக் குழுவுக்குள்ளும் இடம்பெற முடியும். அதன் பிறகு அப்படியே அவருடைய வாரிசுகளுக்கு அது கைமாற்றித் தரப்பட்டாகவும் வேண்டும். அங்கும் அது அப்படியாகப் பிறப்பின் அடிப்படையை நோக்கி நகர்ந்துவிடத்தான் செய்கிறது.
ஆனால், சாதி என்பது கொஞ்சம் கூடுதலாக ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறது. அதாவது ஒருவர் செய்ய வேண்டிய வேலையையும் அது பிறப்புடனே பிணைத்துவிட்டது. பிற அடையாளங்களில் இந்த அம்சம் அந்த அளவுக்குக் கோட்பாட்டளவில் கறாராக இல்லை. ஆனால், நடைமுறையில் அங்கும் ஏழை கறுப்பருக்குப் பிறந்தவர் அப்பா செய்த அதே வேலையைத்தான் 19-ம் நூற்றாண்டுவரை செய்தாக வேண்டியிருந்தது. எல்லா தேசத்திலும் ஏழை விவசாயின் மகன் விவசாயக் கூலியாகவேதான் வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருப்பார். எல்லா மொழிகளிலும் மன்னருடைய மகனே அடுத்த மன்னராக ஆகியிருப்பான். என்றாலும் அங்கு அது கறாரான விதியாக இருந்திருக்கவில்லை. ஐந்தில் இருந்து பத்து சதவிகிதத்தினர் தமது குலத்தொழிலை விட்டு விலகி வேறொரு தொழிலைச் செய்துகொள்ள வழி இருந்திருக்கிறது. 100 சதவிகிதம் பேருக்கும் குலத்தொழிலை விட்டு வேறொன்றைச் செய்ய அனுமதி இருந்தது என்றாலும் சொற்ப எண்ணிக்கையிலானவர்களே அப்படி மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் நடைமுறை. ஆனால், மேலே செல்ல ஏணிகள் இருந்தது என்பதால் அந்தக் குழுவினரை இறுக்கமான சிறைக்குள் அடைக்கப்பட்டவர்களாகச் சொல்ல முடியாது. சாதியில் இந்த வாய்ப்பு மிக மிகக் குறைவு.
சங்க காலத்தைப் போலவே வேத காலத்திலும் இப்படியான தொழில் மாற்றம் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிறப்போடு தொழில் வெகு பிற்காலத்தில்தான் பிணைக்கப்பட்டது.
அப்படிப் பிணைத்ததால் இழிவான வேலைகளைச் செய்தவர்களுக்கு அதில் இருந்து மீளவே முடியாமல் போய்விட்டது. ஆனால், அதே சாதி அமைப்புதான் வேறு பல தொழில்களில் செய் நேர்த்தியை எட்டவும் உதவியிருக்கிறது. வேலைகளை மாற்றிக்கொள்ளத்தான் வழி இருந்திருக்கவில்லையே தவிர வேலைகளை எளிமைப்படுத்திக்கொள்ளவோ தொழில்நுட்பத்தைப் பெருக்கிக் கொள்ளவோ எந்தத் தடையும் இருந்திருக்கவில்லை. சாதி அடையாளத்துக்கு பிறப்பு என்பதே பிரதானமாக இருந்ததால்தான் எந்தவொரு சாதியும் பூதாகாரமாக வளர முடிந்திருக்கவில்லை. சிலுவைப்போரோ ஜிஹாதோ இந்து சமயத்தால் முன்னெடுக்கப்படவில்லை. அப்படியான கொடூரமான அதிகாரக் குவிப்பு சாதி இருந்ததால்தான் சாத்தியமாகியிருக்கவில்லை.
போர்களில் போர் சாதி மட்டுமே மடிந்தன. எல்லாரும் வாளை எடுத்துக்கொண்டு போய் இறக்க வேண்டியிருக்கவில்லை. மேல் ஜாதியினரிலும் சாதிக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் உண்டு. கீழ் சாதிகளிலும் சாதி வெறி மிகுதியாக உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக இன்று பிறப்புடன் தொழிலைப் பிணைப்பது 90 சதவிகிதத்துக்கும் மேல் குறைந்துவிட்டது. கருணாநிதியின் மகன் ஸ்டாலினே அடுத்த முதல்வர், ராஜீவின் மனைவி என்ற ஒற்றை காரணத்தினால் அவரே கட்சியின் தலைவர், அவருடைய குழந்தைகளே பிரதமர்கள் என்று சொல்வதைப்போன்று ஒரு சில இடங்களில் மட்டுமே குலத் தொழில் நீடிக்கிறது. மற்றபடி பெரும்பாலான வேலைகளில் குல வழி விதிமுறைகள் மாறிவிட்டிருக்கின்றன.

இந்த உண்மைகளில் எந்தவொன்றையுமே யாரும் பொருட்படுத்திப் பார்ப்பதே இல்லை. அப்படிச் செய்திருந்தால் சாதி பற்றிய முற்றிலும் மாறுபட்ட சித்திரம் கிடைத்திருக்கும்.

சாதிக் கட்டமைப்பை பிராமண உருவாக்கமாக மட்டுமே பார்ப்பதால் என்ன பிழை நேர்கிறதென்றால், பிற ஜாதியினர் தமது சாதி வெறியை அப்படியே பாதுகாத்துக்கொள்ள வழி பிறக்கிறது. மதம் மாறினாலும் சாதி வெறி தொடர்கிறது. தவறான இலக்கை நோக்கிக் குறிவைத்தால் இரை எப்படி விழும்? சாதி உணர்வு எல்லாரிடமும் இருக்கிறது... எல்லா தேசங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறது; அது உலகளாவிய மனித உணர்வு என்ற புரிதல் இருந்திருந்தால் அதைப் போக்குவதற்கான வழிமுறை பற்றி நிதானமாக யோசிக்க முடிந்திருக்கும்.

முதலில் சாதி உணர்வு என்பது வேறு... சாதி வெறி என்பது வேறு என்ற புரிதல் தேவை. தமிழ் பற்று என்பது வேறு... தமிழ் வெறி என்பது வேறு. இந்து மதப் பற்று என்பது வேறு... இந்து வெறி என்பது வேறு. இஸ்லாமியப் பற்று என்பது வேறு... இஸ்லாமிய வெறி என்பது வேறு. கிறிஸ்தவ விசுவாசம் என்பது வேறு. கிறிஸ்தவ வெறி என்பது வேறு. இவற்றில் முந்தையது ஆக்கபூர்வமானது. பிந்தையது அழிவுபூர்வமானது. பிற எல்லா குழு மனப்பான்மைகளிலும் ஆக்கபூர்வமானதைத் தக்கவைத்துக் கொண்டு அழிவுபூர்வமானதை வெறுக்கும் ஒருவர் சாதி சார்ந்தும் அப்படியே சிந்திக்கலாம். இன்று பிறப்பின் அடிப்படையிலான தொழில் கட்டுப்பாடுகள் ஒழிந்துவிட்டதால் ஒருவகையில் சாதி அழிந்துவிட்டது என்றுதான் அர்த்தம். பாம்பின் பல் பிடுங்கப்பட்டுவிட்டிருக்கிறது. உடம்பை முறுக்கி வாலைச் சுழட்டி அது இப்போது காட்டும் வித்தைகள் எல்லாம் எளிதில் தாண்ட முடிந்தவையே. எனவே, இன்றைய சாதி வெறியைக் கொஞ்சம் நிதானமாகவே பார்க்கலாம்.   

உண்மையில் உலகம் தழுவிய உணர்வான குழு மனப்பான்மை என்பது பிற இடங்களில் எப்படியெல்லாம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்று பார்த்து அந்த வழிமுறைமுறையை இந்தியாவிலும் பின்பற்றினால்தான் சாதி வெறி மறையும்.

ஐரோப்பாவில் ப்ரட்டஸ்டண்ட், கத்தோலிக்க சண்டைகள் பெரிதாக இருந்தன. அதுபோலவே ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, டச்சு என தேசங்கள் ஒவ்வொன்றும் மொழி அடிப்படையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அவற்றுக்கு இடையிலான சண்டைகள் அவர்களுடைய காலனிகளிலும் தொடர்ந்தன என்றாலும் மெள்ள மெள்ள அந்த வேற்றுமைகளை மறக்கத் தொடங்கிவிட்டன. காலனி தேசங்களில் இருந்து கிடைத்த செல்வமும் அதிகாரப் பெருக்கமும் அவர்களுக்கு இடையில் இருந்த சண்டைகளில் இருந்து விடுவித்துவிட்டன. அமெரிக்காவில் இருந்த நிற வெறியானது மிகப் பெரிய உள்நாட்டுப் போர் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஐரோப்பிய அமெரிக்க தேசங்களிலான சமத்துவம் என்பது அவர்களுக்கு மட்டுமே நன்மையைத் தருவதாக முடங்கிவிட்டது. அப்படியான ஒற்றுமையானது உலகுக்கு இழைத்திருக்கும் கொடுமைகளோடு ஒப்பிடுகையில் அவர்களுடைய ஒற்றுமையையும் சமத்துவத்தையும் அப்படியொன்றும் ஆரோக்கியமானதாக மதிப்பிடமுடியாது. தன் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் ஒருவன் ஊரைக் குப்பை மேடாக ஆக்குகிறான் என்றால் அவனை தூய்மை விரும்பியாகச் சொல்லவேமுடியாது. எண்ணெய்க்கசிவினால் தனது கடலில் இறக்கும் பறவைகளுக்குக் கோடிகளை நஷ்ட ஈடாகக் கேட்டுப் பெறும் ஒரு நாடு வேறொரு நாட்டில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்றுவிட்டு எந்தக் குற்ற உணர்ச்சியும் பொறுப்பும் இல்லாமல் இருக்குமென்றால் அதை வல்லரசு என்று வேண்டுமானால் தாசானு தாசர்களைக் கொண்டு முத்திரை குத்திக்கொள்ளலாம். சரித்திர தேவன் நிகழ்வுகளைப் பின்னொரு நாளில் உயிர்த்தெழச் செய்து விசாரிக்கும்போது அதைப் பாவத்தின் கணக்கில்தான் சேர்த்து தண்டிப்பார்.

மேலைநாடுகளில் இருந்த இன, நிற, மத வெறிகள் அவர்களுக்கு சுரண்டுவதற்குப் பெரும் கிழக்கு உலகம் கிடைத்ததால் மட்டுப்பட்டிருக்கின்றன. கிழக்கு நாடுகளைச் சுரண்டுவதால் கிடைக்கும் செல்வத்தை மேற்குலகின் மேல் தட்டினர் கீழ்தட்டினருக்கும் கொடுத்து போஷிக்கின்றனர். ஏற்கெனவே, பெரு நிலப்பரப்பும் குறைவான மக்கள் தொகையும் கொண்டவர்கள் என்பதால் பொருளாதாரத்தில் அங்கு அனைவருமே பெரும்பாலும் தன்னிறைவுடன் இருக்கிறார்கள். இது அங்கு நிலவும் பிறவகை ஒடுக்குதல்களை வெகுவாக மட்டுப்படுத்திவிடுகிறது.
இந்தியாவில் அப்படியான பொருளாதாரச் செழிப்பு இல்லை. இருக்கும் வளங்களும் கூட அந்நியர்கள் எடுத்துக் கொண்டதுபோக அவர்கள் கழித்துக் கட்டுபவை மட்டுமே கிடைக்கின்றன. இந்தியப் பசுவின் பால் அவர்களுக்கு; சாணியும் கோமியமும் முழுக்க முழுக்க நமக்கே. இதை வைத்துத்தான் நமது சமூகத்தை நாம் மேலெழச் செய்தாகவேண்டியிருக்கிறது. இது மாறியாகவேண்டும். இந்திய வளங்கள் இந்தியர்களுக்கே கிடைத்தாகவேண்டும். அதுதான் ஓரளவுக்கு நம் கடைநிலை சாதியினரை மேலான நிலைக்கு வர வழிவகுக்கும்.

அடுத்ததாக நம் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நமது அனுபவம்மற்றும் வரலாறு சார்ந்து புரிந்துகொள்ளவேண்டும். மேலைநாட்டினர் சொல்வதை வைத்து நம் நிலையைத் தீர்மானித்துக்கொள்ளக்கூடாது. இன்றைய சாதி வெறியானது தலித்களை அப்படியொன்றும் முடக்கிப் போடுவதாக இல்லை. சாதி வெறியை நியாயப்படுத்துவதாக இந்த வார்த்தைகள் புரிந்துகொள்ளப்படும் என்பதால் சிறு உதாரணம் சொல்கிறேன். திவ்யாக்களைத் திருமணம் செய்துகொள்ளாத இளவரசன்களால் இன்று நிம்மதியாக வாழ முடியும். நேற்றைய நிலை எப்படி என்பது தெரியவில்லை. ஆதிக்க சாதியினர் இன்று சமபந்தியில் ஆரம்பித்து அரசாங்கச் சலுகைகள் வரை தலித்களுக்குக் கிடைக்கும் பல விஷயங்களில் எந்தத் தடையும் முன்வைப்பதில்லை. இந்திய அரசியல் சாசனம் தலித்களுக்குத் தந்திருக்கும் உரிமைகள், சலுகைகள் எல்லாம் அளப்பரியவை. நேற்றை ஒப்பிடும்போது இன்று வெகுவாக முன்னேறியிருக்கிறது நிலைமை. இன்னும் செய்ய வேண்டியது பாக்கி இருக்கிறது என்றாலும் குறுகிய கால அளவில் கிடைத்திருக்கும் வெற்றிகள் கணிசமானவையே.

மேல வளைவு முருகேசன் வாழ்ந்த அதே பூமியில்தான் கே.ஆர். நாராயணனும் வாழ்ந்திருக்கிறார். தலித்களைத் தேர் இழுக்க விடாமல் தடுக்கும் கண்டதேவியும் தமிழகத்தில்தான் இருக்கிறது. தலித்களும் சேர்ந்து இழுக்கும் 100க்கணக்கான தேர்களும் தங்கத் தேர்களும்கூட அதே தமிழகத்தில்தான் ஓடுகின்றன.

இப்படி ஒருபக்கம் சமத்துவம் வந்துவிட்ட பிறகும் வேறு சில இடங்களில் வராமல் இருப்பதற்குக் காரணம் என்ன..? மேலும் இந்த மாற்றம் அழுத்தமானதாகவோ ஆத்மார்த்தமானதாகவோ இருக்கிறதா..? எப்போது வேண்டுமானாலும் விரிசல் விழும் வகையில்தான் ஒட்டுப் போடப்பட்டிருக்கிறதா? இந்த அடிப்படை உரிமைக்கே இவ்வளவு போராடத்தான் வேண்டுமா? இந்து சமூகம் இப்படிச் செயல்படுவதால் உண்மையிலேயே கொடூரமானதுதானா? அல்லது அரிதாக நிகழ்பவற்றை மிகைப்படுத்திக் கிளர்ந்தெழுகிறோமா? இந்தக் கேள்விகள் எதுவுமே கேட்கப்படுவதில்லை.

இப்போது இந்தப் பிரச்னையை இப்படிப் பார்ப்போம். ஒருவர் நான் உனக்குச் சளைத்தவன் இல்லை என்று சொல்கிறார். இன்னொருவர் நீ எனக்குக் கீழேதான் என்கிறார். இருவருமே இந்த பலப்பரீட்சையில் ஈடுபடாமலேயே வேறு வேலைகளில் ஈடுபடமுடியுமென்றால் அதைச் செய்து இணக்கமாக வாழ்வதில் என்ன தவறு இருக்க முடியும்? ஆதிக்க சாதியினர் தமது தெருவின் வழியாக ஊர்வலம் போகக்கூடாது என்று சொல்கிறார்களா? சரி... அவர்கள் மனம் திருந்தி அந்தப் பாதையைத் திறந்துவிடும்வரை நான் வேறு வழியில் போய்க்கொள்கிறேன் என்று ஒருவர் சொல்வதில் என்ன தவறு. இதை எதனால் கேட்கிறேன் என்றால், இப்படியான கலகத்தை முன்னெடுப்பது யார்? ஒரு ஊரில் இருக்கும் ஆதிக்க சாதியினர் ஒரு கட்டுப்பாட்டை விதித்தால் தலித்கள் அதை அனுசரித்து நடக்கவே விரும்புவார்கள். ஆனால், அவர்களை வைத்து அரசியல் நடத்துபவர்கள்தான் அந்த சமத்துவ உரிமை கிடைத்தே ஆகவேண்டும் என்று கச்சை கட்டிக்கொண்டு புறப்படுகிறார்கள்.

உண்மையில் எங்கள் தெருவின் வழியாகப் போகக்கூடாது என்று சொல்லும் இடைசாதி மனிதர்களை அரக்கர்கள் போலெல்லாம் சித்திரிக்கவேண்டாம். அவர்கள் வேறு பல விஷயங்களில் தலித்களின் வளர்ச்சியை ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்போது அவர்களைவிட உயர்ந்துவிட்டதாக நினைக்கிறார்களோ அப்போதுதான் அதிலும் ஏதாவது ஒரு விஷயத்தில் மட்டுமே தடுக்க நினைக்கிறார்கள். ஒருவேளை தலித்களுக்குக் கிடைத்ததுபோல் அவர்களுக்கும் உயர வழி பிறந்திருந்தால் அதாவது தலித்கள் நான்காம் படியில் இருந்து மூன்றாம் படிக்கு உயர்ந்ததுபோல் மூன்றாம் படியில் இருந்த இடைநிலை சாதியினர் இரண்டாம் படிக்கும் உயர முடிந்திருந்தால் அவர்களுடைய மேலாதிக்கம் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டிருக்கும். அவரும் கடைநிலை சாதியின் மேல்நிலையாக்கத்தை மேல் சாதிகளைப் போலவே எளிதில் ஏற்றுக்கொண்டிருப்பார். ஒடுக்குமுறைகளை கொஞ்சம் நாசூக்காக வெளிப்படுத்தத் தொடங்குவார். அக்ரஹாரத்தைவிட்டு இடம்பெயர்ந்ததில் (இடம்பெயர்க்கப்பட்டதில்) பிராமணர்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு நகரங்களில் அதைவிட வசதியான வசிப்பிடங்கள் கிடைத்துவிட்டிருக்கின்றன. அதுபோல் இடைநிலை சாதியினருக்கும் கூடுதல் வசதி வாய்ப்புகள் கிடைத்தால் கடைநிலை சாதியினரின் வளர்ச்சியைப் பதற்றமில்லாமல் எதிர்கொள்வார்கள்.

இந்த இடைநிலை சாதியினரை தமிழ் தேசியவாதிகளும் இந்து தேசியவாதிகளும் கம்யூனிஸ்ட்களும் தமது அணியில் சேர்த்துக்கொள்ளவே விரும்புகிறார்கள். அதற்காகவே அவர்களுடைய சாதிவெறியை பிராமண உருவாக்கமாக அடையாளப்படுத்துகிறார்கள். மனுவை எதிர்க்கக் கிடைத்த வாய்ப்பு என்பதால் இடைநிலை சாதிக்காரர் செய்யும் ஒரு தவறைப் பெரிதாக்குகிறார்களே தவிர இடைநிலை சாதியினர் மீது எந்தப் புகாரும் அவர்களுக்கு இல்லை. கிறிஸ்தவர்களோ ஒருபடி மேலே போய் கிறிஸ்தவரான பிறகும் அந்த சாதி மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் இடம்தருகிறார்கள். பிராமணர்களை விலக்குவதுபோல் யாரும் இவர்களை ஒதுக்குவதில்லை. அதுபோலவே, இடைநிலை சாதியினர் தலித்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளும் இடங்களையும் இவர்கள் கண்டுகொள்வதே இல்லை. கண்டதேவியில் தேர் இழுத்தே தீருவேன் என்று சொல்லும் எந்த தலித் தலைவரும் பிற ஊர்களுக்குச் சென்று தேர் இழுத்து சாதி இந்துக்களுக்கும் தலித்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை அங்கீகரித்ததில்லை. வராதே என்று சொல்லும் சபரிமலைக்குச் செல்வேன் என்று புறப்படும் எந்தப் பெண்ணியவாதியும் வா வா என்று அழைக்கும் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்றதாகச் சரித்திரம் இல்லை. ஆக விஷயம் கோவிலுக்குச் செல்வது அல்ல. இந்து, பிராமண சக்திகளை எதிர்க்கவேண்டும். அதுதான் இலக்கு. ஏனென்றால், அவர்களை எதிர்ப்பதே இலகுவானது. ஆதாயபூர்வமானது. குறிப்பாக அபாயம் இல்லாதது.

ஆனால், எளிய மக்களுக்கு அது இலக்கு அல்ல. பெண்கள் சபரி மலைக்குப் போகக்கூடாது என்று சொல்கிறீர்களா.. சரி மேல்மருவத்தூருக்குப் போய்க் கும்பிட்டுக் கொள்கிறோம். எங்களுக்கு தெய்வத்தைக் கும்பிடுவதுதான் முக்கியம். பிராமணரையோ இந்து மதத்தையோ எதிர்ப்பது அல்ல என்று சொல்வார்கள்.

இப்போது சமத்துவம் என்பது எந்த அளவுக்குத் தேவை... எந்த இடங்களில் தேவை என்ற முடிவை எடுக்கும் அதிகாரத்தை சம்பந்தப்பட்ட மக்களிடம் விட்டுவிடவேண்டும். அரசியல் சக்திகள் இதில் தலையிடக்கூடாது. அப்படியே அரசியல் சக்திகள் தினவெடுத்து நிற்கிறார்கள் என்றால், அவர்கள் சொரணையுள்ள தலித் போராளிகள் என்றால் இத்தனை ஆண்டுகாலம் திமுக கூட்டணியில் இருந்தபோது சட்டசபைக்கான தொகுதி பேரங்களில் வீரத்தைக் காட்டியிருக்கவேண்டும். தலித்கள் எஸ்.சி எஸ்.டி. மொத்தம் 20 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறோம். 234 தொகுதிகளில் சுமார் 40 மேல் எங்களுக்கு இடம் வேண்டும் என்று உரிமையை அங்கு கேட்டிருக்கவேண்டும். ஆனால், அங்கே வாயையும் பிற துவாரங்களையும் பொத்திக்கொண்டு இருந்துவிட்டு கிராமத்தில் இருக்கும் எளிய தலித்தைப் பார்த்து, மனோகரா பொறுத்தது போதும், பொங்கி எழு என்று பின்னால் இருந்து முடுக்கிவிடுவது கேவலமானது. சொரணையுடன் இருக்கவேண்டுமென்றால் முதலில் நீயல்லவா நடந்து காட்டவேண்டும். அரசியல் கட்சி நடத்த சில சமரசங்கள் தேவை என்றால் எளிய தலித் ஆதிக்க சாதியினரிடம் சில சமரசங்களைச் செய்துகொண்டு தன் வாழ்க்கையை நடத்திச் செல்வதில் மட்டும் என்ன தவறு இருக்கமுடியும்?

உண்மையில், இந்த மோதல் போக்கு மிகவும் தவறு. சட்ட வழிப் போராட்டமும் போதாது. அதேநேரம் மேல் சாதியினரை வழிக் கொண்டுவந்தாகவும் வேண்டும். அதற்கு என்ன வழி? தலித்கள் இந்த விஷயத்தில் தமக்கு சாதகமாக இருக்கும் சக்திகள் அனைவரையும் பயன்படுத்தவேண்டும். உதாரணமாக, கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இதே தலித் சாதியகளில் இருந்து மதம் மாறிச் சென்றவர்கள்தான். அவர்களை உதவிக்கு அழைக்கவேண்டும். கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும்கூட நேற்றைய சகோதரன் என்றவகையில் தலித்களின் பிரச்னையில் தாமாகவே அக்கறை காட்டவேண்டும். எங்கள் விஷயத்தில் தலையிட நீங்கள் யார் என்று எந்த இந்துவும் சொல்ல முடியாது. ஏனென்றால், ஒரு தமிழனாக, இந்தியனாக இந்த விஷயத்தில் தலையிட அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு.

அந்தவகையில் தலித்கள் மத மாற்றத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தவேண்டும். நான்கு பேர் கிறிஸ்தவராக மாறவேண்டுமென்றால் எஞ்சிய தலித்களுக்கு ஆதிக்க சாதியினரால் ஏற்படும் துன்பங்களில் நான்கினுக்கு கிறிஸ்தவர்கள் விடுதலை பெற்றுத் தரவேண்டும். நான்கு பேர் இஸ்லாமுக்கு மாறுகிறார்கள் என்றால் நாற்பது தலித்களுக்கு அரபு நாடுகளில் நல்ல வேலை வாங்கித் தந்தாகவேண்டும் என்று பேரம் பேசவேண்டும். மதம் மாறுபவருக்கு மட்டுமே நன்மைகள் செய்வேனென்று சொல்வதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. மதம் மாறுதல் என்பதைச் சுய மீட்சிக்கான வழியாக அல்லாமல் சொந்த சாதியின் மீட்சிக்கான வழியாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.  

தலித்களின் இன்னொரு நேச சக்தி காந்தியவாதிகள். மேல் சாதியினரின் மனதில் இருந்த ஆதிக்க எண்ணங்களை அறவே ஒழித்த மனிதர்கள் என்று பார்த்தால் காந்தியவாதிகளைத்தான் சொல்லவேண்டும்.
அதுபோல் சாதி விஷயத்தில் நெருப்பாக இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். இன்றுவரையிலும் சாதி உணர்வு துளியும் இல்லாமல் இருந்துவரும் ஒரு இந்து இயக்கம் என்று பார்த்தால் ஆர்.எஸ்.எஸைத்தான் சொல்லவேண்டும். இன்னும் சொல்லப்போனால், மதம் மாறப் போவதாகச் சொன்னால்தான் இந்து சக்திகள் விழுந்தடித்து ஓடிவருவார்கள். ஆதிக்க சாதிகளிடம் பேசி ஒடுக்குமுறையை மட்டுப்படுத்துவார்கள். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இயல்பாகவே தலித்களின் நேசசக்திகளே.

“வலுவான இந்தியாவே தலித்களுக்கு நன்மை தரும்; சமஸ்கிருத மொழி தேசியமொழியாக, அதிகாரபூர்வ மொழியாக ஆக்கப்படவேண்டும்; ஆரியப் படையெடுப்பு என்பது கட்டுக்கதையே. ஆரியர்கள் திராவிடர்கள் என்ற பிரிவினை முழுக்கவும் பொய்யே; மேற்கத்தியர்களின் அந்தக் கற்பனைக் கதையைக் குப்பைக் கூடையில் வீசவேண்டும். சாதி இந்துக்களுடனான போரில் இஸ்லாமியரை நட்புறவாகக் கொள்வது தலித்களுக்குப் பெரும் அபாயத்தையே கொண்டுவரும்; கம்யுனிஸ்ட்களின் மிகப் பெரிய எதிரி நான்” என கிட்டத்தட்ட ஆர்.எஸ்.எஸ்ஸின் சர்சங்கசாலக் போல் பேசும் அம்பேத்கர் சாதிப் போராட்டத்தில் வீர சாவர்க்கர் போன்றவர்களை நேச சக்தியாகவே பார்த்திருக்கிறார். அதையும் மீறி ஆர்.எஸ்.எஸ். சாதி ஒழிப்பில் காட்டும் அக்கறையில் சந்தேகம் இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸில் இருக்கும் தலித்களிடம் கேட்டுப் பார்த்துவிட்டு அல்லது அவர்களே ஆர்.எஸ்.எஸில் சிலகாலம் இருந்து பார்த்துவிட்டுச் சொல்லவேண்டும். உண்மையில் இந்து ஒற்றுமையின் பிரதான குறியீடாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இருந்துவருகிறது.

அப்படியாக தலித்கள் இஸ்லாமியரைப் பயன்படுத்தி பொருளாதாரத்தில் உயர்வை அடையவேண்டும். கிறிஸ்தவர்களைப் பயன்படுத்தி கல்வி, மருத்துவம், ஊடகம், அரசியல் என முன்னிலை பெறவேண்டும். ஆர்.எஸ்.எஸ்.ஸைப் பயன்படுத்தி இந்து சமூகத்தில் தலித் கலாசாரத்தின் முக்கியத்துவத்தையும் தலித்களின் இடத்தையும் நிலைநிறுத்திக்கொள்ளவேண்டும். இவை அனைத்தையும் காந்திய வழிமுறையில் செய்துகொண்டாகவேண்டும். உண்மையில் தலித்கள் அனைத்து சக்திகளும் தேடி ஓடிவரும் நிலையில் இருக்கிறார்கள். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். திருமா கிறிஸ்தவ இஸ்லாமிய சக்திகளிடம் போய் கை கட்டிநிற்பதுபோல் நிற்கத் தேவையில்லை. அவருடைய முன்னோர்கள் மேல் சாதி இந்துக்களிடம் அடங்கிக் கிடந்ததால் அதே ரத்தம் ஓடும் திருமா இஸ்லாமிய கிறிஸ்தவ சக்திகளிடம் கை கட்டி வாய் பொத்தி நிற்கிறார். உண்மையில் அவர் இஸ்லாமிய கிறிஸ்தவ சக்திகளைத் தனது கட்டுக்குள் வைத்துக்கொள்ளவேண்டுமே அல்லாமல் இவர் போய் அங்கு தலையைச் சொறிந்துகொண்டு துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு நிற்கக்கூடாது.

ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் இதை விளக்குகிறேன். தலித்களின் வழிபாட்டு அம்சங்கள் எல்லாம் உண்மையில் தலித்களின் கண்டுபிடிப்புகள். இந்து மதத்தின் அம்சங்கள் அல்ல. தலித்கள் இந்துக்களே அல்ல என்பதுதானே திருமாவின் வீர முழக்கம். அப்படியானால், கிறிஸ்தவத்துக்கும் இஸ்லாமுக்கும் மாறிய பிறகும் தலித் மக்கள் அதை தக்க வைத்துக்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும். இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் நீங்கள் எல்லாம் இந்துக்கள் அல்ல என்று சொல்லித்தானே மதம் மாற்றுகிறார்கள். அப்படியானால், தலித்களின் வழிபாட்டு அம்சங்களை அவர்கள் தக்க வைத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும். எனவே, நான் மதம் மாறவும் செய்வேன். சொடலைமாடனையும் மாரியாத்தாவையும் கும்பிடவும் செய்வேன் என்று இஸ்லாமிய கிறிஸ்தவ சக்திகளிடம் தெளிவாகப் பேசவேண்டும். உண்மையில் அவர்தான் அந்த நட்புறவில் மேல்நிலையில் இருக்கிறார். கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் அல்ல.   
இதுவே, தலித்களின் மீட்சிக்கான எளிய வழி. இதில் ஆதிக்க சக்திகளுக்கு எதையும் சொல்லிப் புரியவைக்க வேண்டிய அவசியமே இல்லை. மாற்றங்கள் நடந்தேற அதிக காலம் காத்திருக்கவும் தேவையில்லை. இந்த நான்கு சக்திகளையும் தலித் தலைவர் ஒருங்கிணைத்தால் எந்த ஆதிக்க சக்தியாலும் அவர்களை எதிர்க்க முடியாது.

இவற்றை நமது திரைப்படத்தில் குறியீட்டுரீதியில் காட்சிப்படுத்தலாம். நம் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவருடைய தாத்தா இறந்துவிடுவார். ஆதிக்க சாதியினர் தமது தெருவின் வழியாக எடுத்துச் செல்லக்கூடாது என்று சொல்லிவிடுவார்கள். தன்னை ஆசை ஆசையாக வளர்த்த தாத்தாவின் உடல் நடுத்தெருவில் அழுகிக் கொண்டிருப்பதை அந்த மாணவர் வகுப்பில் வேதனையுடன் சொல்வான். நமது ஆசிரியர் காந்தியவாதிகள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என தலித்களுக்கு நேச சக்திகளாக இருக்கும் அனைவரையும் சென்று சந்தித்து ஆதரவு தரும்படிக் கேட்பார். இஸ்லாமிய, கிறிஸ்தவ தலைவர்கள் இந்துக்களின் பிரச்னையில் நாங்கள் எப்படித் தலையிட என்று கேட்பார்கள். ஒரு இந்தியனாக, தமிழனாக நீங்கள் இந்தப் பிரச்னையில் நிச்சயம் தலையிடலாம் என்று சொல்லி அவர்களுடைய ஆதரவையும் பெறுவார்.

ஆனால், நம் ஆசிரியர் அவர்களைத் தனித்தனியாகச் சென்று சந்தித்ததால் கிறிஸ்தவ, இஸ்லாமிய தலைவர்கள் மதம் மாற்றுவதற்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு என்று நினைத்து உற்சாகமாகப் புறப்பட்டிருப்பார்கள். நமது ஆசிரியரும் தலித்களுடைய நேச சக்திகள் அனைவரையும் சந்தித்து அழைத்திருக்கிறேன் என்பதைச் சொல்லாமல் விட்டிருப்பார். எனவே முதிய தலித்தின் உடல் கிடத்தப்பட்டிருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததும் இஸ்லாமிய, கிறிஸ்தவ தலைவர்கள் பெரும் அதிர்ச்சியடைவார்கள். காந்தியவாதியோ ஆர்.எஸ்.எஸ். அழைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் கோபப்படுவார். ஆர்.எஸ்.எஸ்.காரரோ பிற மதத்தினரைக் குறிப்பாக இஸ்லாமியரை அழைத்ததைக் கடுமையாக எதிர்ப்பார்.

ஒவ்வொருவரும் இன்னொருவரைக் கடுமையாகத் திட்டிக்கொள்வார்கள். கிறிஸ்தவ, இஸ்லாமியத் தலைவர்கள் தம்மால் எந்த உதவியும் செய்யமுடியாது என்று சொல்லி தமது சொகுசு ஜீப்களில் ஏறிக்கொள்வார்கள். காந்தியவாதி தன் பிய்ந்த செருப்புக்கு ஊக்கு மாட்டிகொண்டபடியே முகத்தைத் திருப்பிக்கொண்டு புறப்படுவார். ஆர்.எஸ்.எஸ்.காரர் கிறிஸ்தவ, இஸ்லாமியப் பிரதிநிதிகளை முறைத்துப் பார்த்தபடியே புறப்படுவார்.

தலித் சிறுவனுக்கு வேதனை முன்பைவிட அதிகரிக்கும். ஆதிக்க சாதியினர் மட்டும்தான் ஒடுக்குவதாக நினைத்தவனுக்கு நேச சக்திகளுமே உள்நோக்கோடுதான் உதவ வருகின்றன என்பது புரிந்ததும் துவண்டுவிடுகிறான். பிற மத வாகனங்கள் உறுமியபடியே அவன் முகத்தில் கரும் புகையை உமிழ்ந்தபடி புறப்படும். தலித் சிறுவன் நடுவீதியில் தலையில் அடித்துக்கொண்டு அழத்தொடங்குவான். அப்போது அந்தத் தலைவர்களுடன் வந்த குழந்தைகள் அதைப் பார்த்ததும் நிலைகுலைந்துபோவார்கள். வண்டியில் இருந்து துள்ளிக் குதித்து அந்தச் சிறுவனை நோக்கி ஓடுவார்கள். கிறிஸ்தவ அநாதை விடுதியில் படித்த சிறுமி, இஸ்லாமிய சிறுவன், காந்திய விடுதியில் படிக்கும் சிறுவன் ஆர்.எஸ்.எஸ். சிறுவன் என நால்வரும் தலிச் சிறுவனுக்கு அருகில் சென்று அவனுடைய கண்ணீரைத் துடைப்பார்கள். தமது காப்பாளர்களைப் பார்த்து ஒரு அலட்சியப் பார்வை பார்த்துவிட்டு பாடையைத் தொட்டுத் தூக்குவார்கள். தடை செய்யப்பட்ட தெருவின் வழியாக வீர நடை போட்டு நடப்பார்கள். கைகளில் ஆயுதங்களுடன் வழி மறித்து நின்ற ஆதிக்க சாதியினர் விலகி வழிவிடுவார்கள்.

இஸ்லாமியச் சிறுவன் தொழுகைப் பாடலை கணீரென்ற குரலில் பாடுவான். அவன் பாடி முடித்ததும் கிறிஸ்தவ சிறுமி கர்த்தரின் மகிமையைப் பாடுவாள். அடுத்ததாக ஆர்.எஸ்.எஸ். சிறுவன் நமஸ்தே வத்சலே என்று கணீரென முழங்குவான். இறுதியாக காந்தியவாதியின் மகன் ரகுபதி ராகவ ராஜாராம் என்ற பாடலைப் பாடுவான்.
பாடியபடியே அவர்கள் நடக்க நடக்க ஆதிக்க சாதியினரின் கைகளில் இருந்து ஆயுதங்கள் ஒவ்வொன்றாகக் கீழே விழும். இஸ்லாமிய, கிறிஸ்தவ, காந்திய, ஆர்,எஸ்,எஸ் பிரதிநிதிகள் சிலை போய் உறைந்து நிற்பார்கள். சூரியன் மேற்கில் மறையத் தொடங்கியிருக்கும். சிறுவர்கள் தலித் முதியவரின் உடலைச் சிதையில் கிடத்தி எரியூட்டுவார்கள். அந்த தீயில் சாதித் திமிர் மட்டுமல்ல அரசியல் நோக்குகளுடன் செய்யப்படும் போலி அன்புகளும் சேர்ந்து எரியும். அந்தத் தீயின் ஜ்வாலைகள் தொட்டு எழுப்பியதுபோல் இருண்ட வானில் பவுர்ணமி நிலவு உதிக்கும். அந்தச் சித்திரை முழு நிலவு பூமியின் அனைத்து இருண்ட பகுதிகள் மீதும் தன் பொன்னொளியைப் பாய்ச்சியபடி வானில் உயரும்.

Friday, 1 January 2016

கால எந்திரத்தில் சில பயணங்கள்

டைம் மெஷின்

ஸ்பீல்பெர்கின் பேக் டு த ஃப்யூச்சரில் ஆரம்பித்து இன்று நேற்று நாளை வரை பல படங்கள் டைம் டிராவல் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்தக் கதைகளின் பெரிய பலவீனம் அப்படியொரு அற்புத கருவி கிடைத்த பிறகும் அதன் கதாநாயகர்கள் அனைவருமே தனி மனித நிகழ்வுகள், பிரச்னைகளை மட்டுமே தீர்த்து வந்திருக்கிறார்கள். கற்பக விருட்சத்தின் கீழே அமர்ந்துகொண்டு வேளா வேளைக்கு வெறும் உணவை வரவைத்துச் சாப்பிடுவதைப் போன்றது. உலகில் ஏராளமான பெரும் சோக சம்பவங்கள் நடந்துள்ளன. டைம் மிஷின் கிடைக்கும் நபர் அவற்றில் சிலவற்றை மாற்றி அமைப்பதாகத் திரைக்கதை அமைத்துக் கொண்டால் பிரமாதமாக இருக்கும். சோக நிகழ்வுகள் ஏராளம் என்பதால் படத்துக்கு மூன்று என்று வைத்துக்கொண்டு பல சீக்வல்கள்கூட எடுக்கலாம். 

ஹிட்லரை 1919-ல் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தபோதே கொன்று தீர்ப்பதில்  ஆரம்பித்து எத்தனையோ சரித்திர சோகங்களை நிகழாமல் தடுத்துவிடலாம். அப்படி தடுக்கப்பட்டிருந்தால் உலகம் எப்படி அருமையாக இருந்திருக்கும் என்பதையும் தடுக்கப்படாததால் எவ்வளவு பெரிய சோகம் நிகழ்ந்துவிட்டது என்பதையும் இடையிடையே காட்டினால் அந்த சோகத்தின் கனமும் கூடும். காலப் பயணம் என்ற கற்பனையின் வசீகரமும் அதிகரிக்கும்.

நமது சரித்திரத்தில் நடந்த மிகப் பெரும் சோகங்கள் என்று எடுத்துக்கொண்டால் இந்தியா துண்டாடப்பட்ட நிகழ்வு, காந்தியின் மரணம், குஜராத் கலவரம், கறுப்பு ஜூலை என சிலவற்றைச் சொல்லலாம். இவை எல்லாமே தனி மனிதரால் நிகழ்த்தப்பட்டவை இல்லை என்றாலும் ஏதோ ஒருவகையில் தனி மனிதரால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கமுடியும். 

கோட்சே துப்பாகியை உருவிய நேரத்தில் அருகில் இருந்தவர் அவரைப் பிடித்துத் தள்ளி துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு இரண்டு அங்குலம் மேலே பட்டிருந்தால்... காந்தி உயிர் பிழைத்திருப்பார். கோட்சேவை மன்னித்து அவருடைய மனதை மாற்றியிருப்பார். பெரும்பான்மை வன்முறையில் இறங்கிவிட்டால் சிறுபான்மை இனம் அதைத் தாங்க முடியாது. அதனால்தான் பெரும்பான்மையை அஹிம்சையிலும் அரவணைப்பிலும் கட்டிப்போடும் செயலைச் செய்துவந்தேன் என்று சொல்லிப் புரியவ்வைத்திருப்பார். காந்தியும் கோட்சேவின் செயலில் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொண்டிருக்கக்கூடும். சிறுபான்மையின் எளிய மக்கள் மீது அன்பு கொள்ளுதல் என்பதை யாரும் தவறென்று சொல்லவில்லை. அதிலும் உலகம் முழுவதிலுமான அகதிகளை இரு கரம் நீட்டி வரவேற்ற இந்து என்றுமே அப்படிச் சொல்லவும்மாட்டான். ஆனால், அதற்காக சிறுபான்மையின் தீவிரவாதச் செயல்களைக் கண்டும் காணாமலும் இருப்பது சரியே இல்லை. மைனாரிட்டி அப்பீஸ்மெண்ட் என்பது மெஜாரிட்டி உணர்வுகளைப் புண்படுத்துவதாகவோ அவர்களை முற்றாகப் புறக்கணிப்பதாகவோ இருக்கக்கூடாது என்று சொல்லிப் புரியவைத்திருப்பார். 


பசு பாதுகாப்பு, தேச பக்தி, இந்துப் பாரம்பரியம், சாதி சமத்துவம், தெய்வ நம்பிக்கை, கிராமப் பொருளாதார நலன், அந்நிய தாக்கங்களுக்கு எதிர்ப்பு என அனைத்து விஷயங்களிலும் நம் இருவருக்கும் இடையில் எந்த முரண்பாடும் கிடையாது. சிறுபான்மையினரை எப்படி நடத்துவது என்பதிலும் எந்தக் குழப்பமும் கிடையாது. சிறுபான்மைத் தீவிரவாதத்துக்கு எந்த மொழியில் பதில் சொல்வது என்ற ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே நாம் வேறுபடுகிறோம் என்று சொல்லிப் புரியவைத்திருப்பார். இருவரும் சேர்ந்து மேற்கு நோக்கி நடக்கத் தொடங்கியிருந்த இந்தியாவை கிழக்குப் பக்கம் திருப்பிப் புதிய இந்தியாவை உருவாக்கியிருக்கக்கூடும்.
*

இந்தியாவைப் பிளந்த நிகழ்வை எடுத்துக்கொண்டால், ஒரு சில பிரிட்டிஷ் அதிகாரிகளின் அலட்சியத் திமிரினாலும் எங்களை வேண்டாம் என்று சொல்லும் நீங்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்ற வஞ்சினத்தினாலும் தானே இத்தனை லட்சக்கணக்கானவர்கள் உயிரையும் உடமையையும் மானத்தையும் இழக்க நேர்ந்தது. அந்த ஒரு சில பிரிட்டிஷ் அதிகாரிகளை அல்லது அவர்களின் பிரதிநிதியான மவுண்ட்பேட்டனைச் சரிக்கட்டுவதன் மூலம் அந்த வன்முறையை இல்லாமல் செய்திருக்கமுடியும்..

இஸ்லாமிய தீவிரவாதம் அப்போது உச்சத்தில் இருந்தது என்னவோ உண்மைதான். ஜின்னா முஸ்லிகள் வசித்த பகுதிகள் அனைத்தையுமே, இந்தியாவில் இருந்து துண்டாடவேண்டும்; நிலத் தொடர்ச்சியின்மையால் பாகிஸ்தானுடன் சேராவிட்டாலும் பரவாயில்லை என்றே விரும்பினார். ஒருவேளை இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏழெட்டு சதவிகிதமாகப் பிரிந்து கிடந்த இஸ்லாமியர்கள் ஓரிரு மாநிலங்களில் மட்டும் குவிந்திருந்தால் அல்லது ஏழெட்டு மாநிலங்களில் 30-40 சதவிகிதமாகச் சேர்ந்து இருந்தால்கூட அவையெல்லாம் இந்தியாவில் இருந்து நிச்சயம் பிரிக்கப்பட்டிருக்கும். எளிய இஸ்லாமியர்கள் இந்தியாவுடன் இருக்க விரும்பினாலும் தீவிரவாத இஸ்லாமியர்களை எதிர்த்து அவர்களால் எதுவும் செய்ய முடியாது. எனவே, இந்தியா துண்டாடப்பட்ட நேரத்தில் நடந்த வன்முறைகளுக்கு பிரிட்டிஷாரை நிச்சயம் நேரடிக் காரணமாகச் சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு மறைமுகமாக முழு ஆதரவையும் தந்திருந்தனர். அவர்கள் நினைத்திருந்தால் இந்த வன்முறையை நிச்சயம் தடுத்திருக்க முடியும்.   ஏனென்றால், ஜாலியன் வாலா பாக் போல் படுகொலைகள் செய்து குவித்தபோதிலும் கோடிக்கணக்கான செல்வத்தைக் கொள்ளையடித்தும் பஞ்சத்தாலும் பட்டினியாலும் மக்களைக் கொன்றும் 200 ஆண்டுகளுக்கும் மேல் கொடுங்கோல் ஆட்சி புரிந்த நிலையிலும் அந்த ஆங்கிலேயர்களில் ஒருவருடைய உடம்பில் சிறு கீறல் கூட விழாமல்தான் அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேறினார்கள். மவுண்ட்பேட்டன் அதற்கான ஏற்பாடுகளை மிகக் கச்சிதமாகச் செய்திருந்தார். அதுபோல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு, பாகிஸ்தானில் இருந்த இந்துக்களை பத்திரமாக ராணுவ-காவல் துறையின் உதவியுடன் இந்தியாவுக்குக் கொண்டுவந்திருக்கலாம். அது நடந்திருந்தால் இந்திய முஸ்லிம்களை அதைவிடப் பத்திரமாக இந்துக்கள் வழியனுப்பி வைத்திருப்பார்கள். இரு பக்கமும் ஒரு சொட்டு ரத்தம் கூடச் சிந்தியிருக்காது.

பிணங்களைச் சுமந்து வந்த ரயில்கள் வாழைத் தோரணங்களும் வண்ணப்பூச்சுகளுமாக இரு தரப்பு மக்களை சுற்றுலாவுக்கு அழைத்து வந்ததுபோல் அழைத்து வந்திருக்கும். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் ஆரத்தழுவியபடி விடைபெற்றுச் சென்றிருப்பார்கள். அப்போதும் கண்ணீர் பெருகியிருக்கும். ஆனால், அதன் சுவை வேறாக இருந்திருக்கும். பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடுகளையும் தோட்டம் துரவுகளையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லிச் சென்றிருப்பார்கள். இஸ்லாமியர்கள் பக்ரீத்துக்கான ஆடுகளையும் இந்துக்கள் பாலுக்கான பசுக்களையும் தம்முடன் ஆசையோடு அழைத்துச் சென்றிருப்பார்கள். எல்லையோரத்தின் வழியெங்கும் இந்துக்கள் அமைத்த இளைப்பாரல் குடில்களில் இஸ்லாமியரும் இஸ்லாமியர் அமைத்த முகாம்களில் இந்துக்களும் தங்கி தூங்கியபடி தமது தேசங்களுக்கு வந்து சேர்ந்திருப்பார்கள்.

விடைபெற்றுச் சென்ற இஸ்லாமியர்களுக்கு நன்றி சொல்லும் முகமாக ஊர்களுக்கும் தெருக்களுக்கும் இஸ்லாமியப் பெயர்களை இந்துக்கள் சூட்டியிருப்பர். இஸ்லாமியரும் ஊருக்கும் தெருவுக்கும் அல்லாமல் தமது குழந்தைகளுக்கும் சேர்ந்து இந்துப் பெயர்களைச் சூட்டியிருப்பார்கள். இந்தியப் பக்க எல்லையோர மாவட்டங்களில் இருந்த மசூதிகள் வழிபாட்டுமையங்களாகவே தொடர்ந்து செயல்பட்டிருக்கும். பாகிஸ்தான் பக்கத்து மாவட்டங்களில் இருந்த கோவில்கள் இந்துக்கள் சென்று வணங்கிவிட்டுவரும் தலங்களாக நீடித்திருக்கும். பாகிஸ்தானிய புத்தகங்களில் காந்தி தேசத் தந்தையாக இடம்பெற்றிருப்பார். இந்தியப் புத்தகங்களில் ஜின்னா மாபெரும் தலைவராக இடம்பெற்றிருப்பார். இந்தியா தனது பொருளாதார நிலை வலுவிழந்து நிற்கும் நிலையிலும் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரையிலுமான இந்துக்கள் அனைவரும் தமது பாகிஸ்தானிய சகோதரர்களுக்காக நன்கொடை சேகரித்துக் கொடுத்திருப்பார்கள். எப்படி ஒரு தேசப் பிரிவினை நடக்கக்கூடாது என்பதற்கான பாடமாக இருக்கும் அந்த நிகழ்வு எப்படிப் பிரிவினை நிகழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாக இருந்திருக்கும்.
*

ஒரு காந்தியவாதி கால எந்திரத்தில் பயணித்து 2002 ஐச் சென்று சேருகிறார். கோத்ரா ரயில் எரிப்பைத் தடுக்கப் போகிறவர் வழியில் டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டுவிடவே ரயில் எரிக்கப்பட்டுவிடுகிறது. நேராக மோதி இருக்கும் இடத்துக்கு விரைகிறார். கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையைப் பயன்படுத்தி மோதியின் உடலுக்குள் புகுந்துகொள்கிறார். அதன் பிறகு புதிய மோதியின் ஆட்டம் ஆரம்பிக்கிறது.கொல்லப்பட்ட கர சேவகர்கள் 58 பேரின் உடலையும் ஊர்வலமாக எடுத்துச்சென்று சரயு நதிக்கரையில் எரியூட்டுகிறார். அவர்களுடைய அஸ்திக் கலசத்தை எடுத்துக்கொண்டு தேசம் முழுவதும் ரதங்கள் ஊர்வலம் வருகின்றன. இந்து-இஸ்லாமிய நல்லிணக்க சக்தியின் எழுச்சியாக அது மலர்கிறது. பல ஊர்களில் இஸ்லாமியர்கள் அந்த அஸ்திக் கலசத்தைத் தலையில் சுமந்து செல்கிறார்கள். தேசத்தின் 58 மூலைகளில் ராமர் கோவிலுக்கான அஸ்திவாரம் தோண்டப்பட்டு தேசம் முழுவதுமான இஸ்லாமியர்கள் செங்கல் எடுத்துக் கொடுக்க ராமருக்கான ஆலயம் எழுகின்றன. கோவிலின் பலிபீடத்தில் கரசேவகர்களின் அஸ்திக் கலசமும் அணையா விளக்கும் அமைக்கப்படுகின்றன. 

ரயிலுக்குத் தீவைத்து 58 பேரைக் கொன்றவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அந்தக் கோவில்களில் உழவாரப் பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள். இந்துத் தரப்பில் வன்முறையைக் கையிலெடுக்க முயற்சி செய்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இந்து அடிப்படைவாத இயக்கங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு அவை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்படுகின்றன. இந்துத் தரப்பு அடிப்படைவாதிகளை எளிய இந்துப் பெரும்பான்மையும் இஸ்லாமியத் தரப்பு தீவிரவாதிகளை இஸ்லாமியப் பெரும்பான்மையும் தனிமைப்படுத்துகின்றன.

கோவில்கள் கட்ட இஸ்லாமியர்கள் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மசூதி ஒன்று இந்துக்களால் அதே அயோத்தியில் சரயு நதிக்கரையில் பிரமாண்டமாகக் கட்டித் தரப்படுகிறது. கோவில்களின் உச்சியிலும் மசூதியின் உச்சியிலும் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கவிடப்படுகிறது. அயோத்தியில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட இடத்தில் பாரத மாதாவுக்கு ஓர் ஆலயம் அமைக்கப்படுகிறது. மோகன் தாஸ் கரம் சந்த் மோதி, இரண்டாம் காந்தி என்று நரேந்திர மோதியின் பெயர் சரித்திரத்தில் பொன் எழுத்துகளில் பொறிக்கப்படுகிறது.
*


1983 ஜூலையில் சிங்கள ராணுவத்தினரால் சில தமிழ் பெண்கள் அவமானப்படுத்தப்படுவதாகச் செய்தி பரவுகிறது. ராணுவத்தினர் வரும் வாகனத்தைத் தகர்க்கத் திட்டமிடுகிறார்கள் புலிகள். டைம் மெஷினில் சென்று அவர்களின் தாக்குதலைத் தடுத்து நிறுத்துகிறார்கள் நான்கு பேர். இந்தியாவில் தனியார் மயமாக்கமும் உலகமயமாக்கமும் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1990களில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாலம் கட்டப்படுகிறது. தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் இதனால் பெரும் வளர்ச்சி பெற்று பிரிவினை எண்ணங்கள் மெள்ள மெள்ள மறைகின்றன. 1983-ல் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட பிரபாகரனும் அவனுடைய ஆட்களும் நன்னடத்தை காரணமாக 1990களின் பிற்பகுதியில் விடுதலை செய்யப்படும்போது புதிய இலங்கை அவர்களை வரவேற்கிறது.


ஆனால், இந்தக் கதையில் அவ்வளவு டிராமா இல்லை. பிரச்னைகள் ஆரம்பிப்பதற்கு முன்பே தீர்க்கப்பட்டுவிடுவது அவ்வளவு சுவாரசியமாக இருக்காது. நிஜத்தில் அப்படி நடந்திருந்தால் அதுபோல் நன்மை வேறெதுவும் இருந்திருக்காது. ஆனால், கதை என்று வந்தால் இழப்பும் கண்ணீரும் போரும் வீரமும் எல்லாமும் இருக்கவேண்டும். எனவே, 2009-ல் முள்ளிவாய்க்காலுக்கு டைம் மெஷினை அனுப்புவோம்.

புலி ஆதரவாளர்களிடையே ஒரு சிலர் பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று உறுதியாக நம்பினார்கள். இப்போதும் நம்புபவர்கள் உண்டு. அவர்கள் அப்படி நம்பக் காரணம் என்னவென்றால், கடைசிக் கட்டப் போர் என்பது பிரபாகரன் வகுத்த தந்திரங்களில் மிக முக்கியமானது. அதுவரையிலும் புலிகள் மட்டுமே உலக அளவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்தனர். செப் 11க்குப் பிறகு உலக நாடுகள் அனைத்துமே பிரிவினைவாதப் போராளிகளை எல்லாம் தீவிரவாதிகளாகவே பார்க்கத் தொடங்கியிருந்தன. அந்தவகையில் புலிகளுக்கு உலக அளவில் இருந்த கெட்ட பெயரைப் போக்க பிரபாகரன் ஒரு தந்திரம் செய்தார். அதாவது, இலங்கை அரசை சர்வ தேச அளவில் கொடுங்கோல் ஆட்சியாக அம்பலப்படுத்தவேண்டும்; அதன் மூலம் புலிகளின் வன்முறைக்கு ஒரு வலுவான நியாயத்தை உருவாக்கவேண்டும் என்பதே அந்த இலக்கு. 

அதன்படி கடைசிகட்டப் போரில் அவர் எதிர்த்து அடிக்காமல் தடுத்து ஆடத் தொடங்கினார். ராணுவம் ஒரு சில வெற்றிகளைப் பெற்றதுமே மெள்ளப் பின்வாங்க ஆரம்பித்தார். அதைக் கண்டு உற்சாகப்பட்ட சிங்கள ராணுவம் மேலும் நெருக்குவதன் மூலம் புலிகளை வீழ்த்திவிடலாமென்று நினைத்தன. உண்மையில் அது அவர்களுக்கு விரித்த வலை. மக்களையும் கூட்டிக்கொண்டு புலிகள் மெள்ளப் பின்வாங்க ஆரம்பித்தனர். புலிகளைத் தாக்கும் முயற்சியில் சிங்கள ராணுவம் வீசிய குண்டுகள் அனைத்தும் அப்பாவி மக்களின் உயிரைக் காவு வாங்க ஆரம்பித்தன. புலிகள் அந்தத் தகவல்களை உலகம் முழுவதும் கொண்டு சென்று இலங்கை அரசுக்கு உலக அரங்கில் இருந்த மரியாதையையும் ஆதரவையும் அழிக்க ஆரம்பித்தனர்.

இப்படி அவர்கள் அடிக்க அடிக்க, பின்வாங்கியபடியே வந்து கடைசி கட்டத்தில் இந்திய அரசு அனுப்பும் கப்பலில் ஏறி பிரபாகரன் தப்பிச் சென்றுவிடவேண்டும். அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசின் வன்முறைச் செயல்களைக் காட்டி புலிகள் தமது ஆயுத பலத்தையும் தார்மிக பலத்தையும் பெருக்கிக்கொண்டு இலங்கையை உலக அளவில் தனிமைப்படுத்தி ஈழத்தை வென்றெடுக்கவேண்டும். இதுதான் கடைசி கட்ட தடுப்பாட்டத்தின் நோக்கம். பிரபாகரன் விரித்த வலையில் சிங்கள அரசு சிக்கியது. ஆனால், க்ளைமாக்ஸில் வேறொரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. பிரபாகரனைக் காப்பாற்றுவதாகச் சொன்ன இந்தியக் கப்பல் நந்திக்கடலோரம் வரத்தான் செய்தது. பிரபாகரன் நள்ளிரவில் சிறிய படகில் ஏறி அதை நோக்கி நம்பிக்கையுடன் போகத்தான் செய்தார். அந்த கப்பலில் இருந்து நூலேணி வீசப்பட்டது. ஆனால், அதைப் பிடித்தபடி மேலேறிய பிரபாகரனை வரவேற்ற கரங்களில் அவர் எதிர்பார்த்திராத துப்பாக்கிகள் நிலவொளியில் மின்னிக்கொண்டிருந்தன. அவர் கொல்லப்பட்டு மக்களோடு மக்களாக வீசப்பட்டார்.

இந்தியா குறுக்கு சால் ஓட்டி பிரபாகரனைக் கொன்றுவிட்டது என்பதால்தான் தமிழக ஈழ ஆதரவாளர்கள் இந்திய தேசியத்தை எதிர்த்து வருகிறார்கள். ரேடார் கொடுத்தது, ராணுவப் பயிற்சி கொடுத்தது என்ற அற்ப காரணங்களைத்தான் வெளியில் சொல்ல முடிகிறது. இந்த உண்மையைச் சொல்ல முடியவில்லை. அதனால்தான், இந்தச் சிறிய உதவிகளுக்காக இந்திய அரசை இவ்வளவு எதிர்க்க வேண்டுமா என்று மக்கள் தமிழக ஈழ ஆதரவாளர்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

இப்போது நாம் டைம் மிஷினில் ஏறிச் சென்று பிரபாகரனிடம் இந்தியக் கப்பலில் ஏறினால் வரும் ஆபத்தைச் சொல்லி அவரைக் காப்பாற்றலாம். நமது படத்தை அதில் இருந்து ஆரம்பிக்கலாம். திட்டமிட்டபடியே புலிகளின் பதுங்கல், சிங்கள ராணுவத்தின் பாய்ச்சல் என எல்லாம் நடக்கின்றன. புலி ஆதரவு சக்திகள் இலங்கை அரசின் வன்முறைப் பக்கத்தை உலகுக்கு அம்பலப்படுத்துகிறார்கள். புலிகளும் மக்களும் முள்ளிவாய்க்கால் பக்கம் ஒதுங்குகிறார்கள். பிரபாகரன் மே 17 அன்று நள்ளிரவில் தனது சிறு படகை நோக்கிப் போகிறார். டைம் மிஷினில் ஏறிய நம் நாயகன் மிகச் சரியாக அந்தக் கரையோரம் சென்று இறங்குகிறார். இந்தியப் பக்கம் போவதால் வரும் அபாயத்தை எடுத்துச் சொல்லி பிரபாகரனை வேறு பக்கம் திருப்புகிறார். பிரபாகரன் முதலில் நம்ப மறுக்கிறார். வேண்டுமானால், அந்தப் படகை வேறு பக்கம் ஓட்டிப் பாருங்கள் என்று சொல்கிறார் நம் நாயகர்.

அதன்படியே வேறு சிலர் அந்தப் படகில் ஏறி இந்தியக் கப்பலைத் தாண்டிச் செல்கிறார்கள். உடனே இந்தியக் கப்பலில் இருந்து நாலைந்து மோட்டார் படகுகள் கடலுக்குள் பாய்ந்து இறங்கி பிரபாகரன் வருவதாக இருந்த படகைச் சுற்றி வளைக்கின்றன. அந்தப் படகில் பிரபாகரன் இல்லை என்பது தெரிந்ததும் ஹெலிகாப்டர்கள் சடசடவென வானில் தோன்றி சர்ச் லைட் மூலம் கடலில் தீவிர சோதனை நடத்துகின்றன. பிரபாகரனுக்கு உண்மை புரிகிறது. மெள்ள நம் நாயகன் சொல்வதுபோல் நடந்துகொள்ள முடிவெடுக்கிறார். படகிலோ, கப்பலிலோ போய்த் தப்பிக்க முடியாது; ஹெலிகாப்டரில் போனால் இந்திய கப்பல் படை அல்லது சிங்கள வான் படையின் ஹெலிகாப்டராக இருக்கும் என்றுதான் நினைப்பார்கள் என்பதால் நேராக இந்திய ஹெலிகாப்டர் இருக்கும் இடத்துக்கு இருளில் பதுங்கியபடிச் செல்கிறார்கள். அங்கு இருக்கும் ஒரு பைலட்டை துப்பாக்கி முனையில் மிரட்டி அதை எடுத்துக்கொண்டு தப்பிக்கிறார்கள்.


இந்திய ஹெலிகாப்டர் ஒன்று தனது எல்லையைத் தாண்டி இந்தியப் பெருங்கடலில் வேறு திசையில் போவதைப் பார்த்ததும் இரு நாட்டு ராணுவங்களும் சுதாரிக்கின்றன. சுனாமி மீட்புப் பணிக்காக வந்து இலங்கைக் கடலோரத்தில் டேரா போட்டிருக்கும் அமெரிக்கக் கப்பற் படை தனது அதி நவீன ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி பிரபாகரன் தப்பிச் செல்லும் ஹெலிகாப்டரைத் தாக்கத் தொடங்குகின்றன. இனிமேல் ஹெலிகாப்டரில் செல்வது ஆபத்து என்பது புரிந்ததும் பிரபாகரனும் நம் நாயகனும் ஒரு மரப்பலகையைக் கட்டிக்கொண்டு கடலில் குதிக்கிறார்கள். அவர்கள் குதித்த அடுத்த விநாடி அமெரிக்க ஹெலிகாப்டரில் இருந்து ஒரு வெடிகுண்டு வந்து தாக்கி அந்த இந்திய ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறுகிறது. அதில் பிரபாகரனுக்கு தலையில் காயம்படுகிறது. நம் நாயகனுக்கோ அந்த வெடிகுண்டு வெடித்ததில் சிதறிய ஹெலிகாப்டரின் இரும்புக் கம்பி தாக்கி பெரும் காயம் ஏற்படுகிறது. நீரில் விழுந்து மூழ்கத் தொடங்கிய அவரைக் காப்பாற்ற பிரபாகரன் விரைகிறார். அமெரிக்க ஹெலிகாப்டர்களின் சர்ச் லைட் இருண்ட கடலைச் சலிக்கத் தொடங்குகின்றன.

நம் நாயகன், தன் உயிரைப் பற்றிக் கவலைப்படவேண்டாம்... தமிழ் இனம் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்றால், நீங்கள் எப்படியாவது தப்பித்தாகவேண்டும் போங்கள் என்று சொல்கிறார். பிரபாகரனோ, உங்களுக்கு ஒன்றும் ஆகாது... நான் உங்களை எப்படியாவது காப்பாற்றுவேன் என்று அவரைத் தோளில் சுமந்தபடி நீந்துகிறார். நம் நாயகன் அவரைப் பிடித்துத் தள்ளிவிட்டு, நான் சர்ச் லைட்களை என் பக்கம் திரும்ப வைக்கிறேன். நீங்கள் எதிர் பக்கம் நீந்தித் தப்பித்துக்கொள்ளுங்கள். உணர்சிவசப்படுவதற்கான நேரமல்ல இது. என்னைக் காப்பாற்ற நினைத்து நாம் இருவரும் மாட்டிக் கொள்வதைவிட நான் மாட்டிக்கொண்டு நீங்கள் தப்புவதே நம் முன் இருக்கும் ஒரே வழி என்று சொல்லியபடியே ஹெலிகாப்டர் சர்ச் லைட்டின் எல்லைக்குள் நீந்திச் செல்கிறார். ஹெலிகாப்டர்கள் அவரை நெருங்குகின்றன. பிரபாகரன் கண்களில் நீர் கசிய எதிர் திசையில் நீந்தித் தப்பிக்கிறார்.

பொழுது புலர்கிறது. ஏதோவொரு தீவின் கரையோரம் ஒதுங்குகிறார். கண் முழித்துப் பார்ப்பவர் தன்னைச் சுற்றிலும் நாலைந்து ஓநாய்கள் கொலை வெறியுடன் காத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். மெள்ள பலத்தையெல்லாம் திரட்டிக்கொண்டு அவற்றை அடித்து விரட்டி காட்டுக்குள் பாய்ந்து ஓடுகிறார். ஓநாய்கள் அவரை விடாமல் துரத்துகின்றன. செடி கொடிகளை விலக்கியபடி விழுந்தடித்து ஓடுபவர் ஒரு பெரும் பள்ளத்துக்குள் கால் தடுக்கிவிழுகிறார். ஓநாய்களில் ஒன்று அந்தப் பள்ளத்துக்குள் பாய்கிறது. அப்போது எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஈட்டி ஒன்று ஒநாயின் வயிற்றைத் துளைத்தபடி எதிர்பக்க சுவரோடு சேர்த்துச் செருகுகிறது. நாலைந்து ஆதிவாசிகள் பாய்ந்து வந்து ஓநாய்களை விரட்டியடிக்கிறார்கள். கொடிகளைப் பற்றியபடியே பள்ளத்துக்குள் இறங்கி பிரபாகரனைக் காப்பாற்றுகிறார்கள். பள்ளத்தில் விழுந்ததால் தலையில் காயம்பட்டவர் ஓரிரு நாட்கள் சுய நினைவு திரும்பாமல் இருக்கிறார். ஆதிவாசிகளின் பச்சிலை மூலிகைகள் வேலை செய்ய, மெள்ளக் கண் விழிக்கிறார். ஆனால், தலையில் அடிபட்டதால் அவருக்குப் பழைய நினைவுகள் எல்லாம் மறந்துவிட்டன.

சிறிது நாளில் உடல் நிலை தேறுகிறது. ஆனால், தான் யார் என்பதோ தனக்கு என்ன நடந்தது என்பதோ எதுவும் தெரியாமல் இருக்கிறார். உடல் தேறியதும் அந்தப் பக்கமாகப் போகும் கப்பலில் ஏற்றி அனுப்பிவிடலாம் என்று நினைத்த ஆதிவாசிகள் அவருடைய நிலையைக் கண்டு இரக்கப்பட்டு அவரைத் தம்முடனே வைத்துக்கொள்ள முடிவெடுக்கிறார்கள். கடின உழைப்புக்கு அஞ்சாத பிரபாகரன் அந்த ஆதிவாசிகளில் ஒருவராக வேட்டையாடியும் விவசாயம் செய்தும் அங்கேயே காலத்தை ஓட்டுகிறார். ஆதிவாசிப் பெண் ஒருத்தியை மணமுடித்து குழந்தை குட்டிகளுடன் பழைய நினைவுகள் எதுவும் இல்லாமல் வாழ்கிறார். வருடங்கள் ஓடுகின்றன.இதனிடையில் பிரபாகரனின் உடல் கிடைக்காததால் அமெரிக்கக் கடற்படையில் ஆரம்பித்து சிங்கள ராணுவம், இந்திய ராணுவம், புலிகள் என ஒவ்வொரு தரப்பும் இந்தியப் பெருங்கடலோரத் தீவுகளில் தேடுதல் வேட்டை நடத்துகின்றன. நாலைந்து வருடங்கள் கழித்து அதிர்ஷ்டவசமாக புலிகள் கண்ணில் படுகிறார் பிரபாகரன். ஆனால், அவருக்கோ இவர்களை அடையாளம் தெரியவில்லை. சோர்ந்து போகிறார்கள். எப்படியும் உயிருடன் கிடைத்தாரே அதுவே போதும் என்று மகிழ்கிறார்கள். அவரைத் தம்முடன் வரும்படி அழைக்கிறார்கள். அவரோ முடியாதென்று மறுக்கிறார்.

பழங்கால நினைவுகளோடு தமிழ் மொழியையும் அவர் மறந்துவிட்டிருக்கிறார்! தமிழினத்தலைவர் தாய்மொழியை மறந்து கிடக்கும் நிலையைப் பார்த்து வாடும் புலிகள் மெள்ள அவருக்கு ஒவ்வொன்றாக நினைவுபடுத்துகிறார்கள். அவருடைய வீடியோக்கள் அனைத்தையும் போட்டுக் காட்டுகிறார்கள். மெள்ள மொழியைக் கற்றுத் தருகிறார்கள். ஒவ்வொரு வார்த்தையாக கவனித்துக் கேட்கிறார். ஆனால், அவரால் பேசமுடியவில்லை. நாட்கள் கழிகின்றன. மெள்ள பிரபாகரனுக்கு தமிழ் மொழி பேச வருகிறது. ஆனால் அவர் பேசும் முதல் வார்த்தையைக் கேட்டு புலிகள் அதிர்ச்சியில் உறைகிறார்கள். நாம் தவறு செய்துவிட்டோம். இதுதான் அவர் பேசும் முதல் வாக்கியம்.

அமைதியாகப் போராடினோம்... விடுதலை கிடைக்கவில்லை. அதனால் அதிரடியில் இறங்கினோம் என்று நம் வன்முறையை நியாயப்படுத்துகிறோம். ஆனால், அமைதியாகப் போராடியபோதே கிடைக்கவில்லை... வன்முறையாகப் போராடினால் இருப்பதும் கைவிட்டுப் போகத்தானே செய்யும் என்றுதான் நாம் யோசித்திருக்கவேண்டும். வாருங்கள்... செய்த தவறுகளைத் திருத்துவோம் என்று சொல்கிறார். அதிர்ந்துபோன புலிகள் இலங்கை அரசு செய்த வன்முறைகள், தவறுகள் ஒவ்வொன்றையாகப் பட்டியலிடுகிறார்கள். அனைத்தையும் காந்திய கோணத்தில் மறுதலிக்கும் பிரபாகரன் சிங்களத் தரப்பு நியாயங்களையும் தமது தரப்பு பிழைகளையும் பட்டியலிடுகிறார்.

பிரிட்டிஷ் ஆட்சியில் அரசு வேலை கிடைக்க ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருந்த நாம் சிங்கள அரசில் வேலை கிடைக்க சிங்களத்தைக் கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருந்திருக்க முடியும்?

தமிழகத்தில் 3% இருந்த பிராமணர்கள் 50-60 %க்கு மேல் அரசு வேலைகளில் இருந்தார்கள். திராவிட இயக்கம் போராடி அனைத்து சாதியினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்தது. அதுபோல் இலங்கையில் 18% இருக்கும் தமிழர்கள் 40 சதவிகித அரசு வேலைகளில் இருந்தார்கள். அதைச் சரி செய்ய தமிழர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் பெற வேண்டும்; சிங்களர்களுக்கு மதிப்பெண்கள் குறைவாக இருந்தால் போதும் என்று சொன்னார்கள். இது ஒருவகையான இட ஒதுக்கீடுதானே. இதில் என்ன தவறு?

காடுகள் அழிக்கப்பட்டு அணைக்கட்டுத் திட்டங்கள் தொடங்கப்படும்போது பெரும்பான்மை மக்களுக்கு முன்னுரிமை தந்ததில் என்ன தவறு? என்று ஈழப் போராட்டத்தின் ஆணி வேரையே அசைக்கிறார். 

இந்தியத் தமிழர்கள் நம் பக்கம் இல்லை; கொழும்பு தமிழர்கள் நம் பக்கம் இல்லை; மலையகத் தமிழர்கள் நம் பக்கம் இல்லை. இஸ்லாமியத் தமிழர்கள் நம் பக்கம் இல்லை. எத்தனையோ ஈழத் தமிழர்கள் கூட புலம் பெயர்ந்து ஓடுவதிலேயே குறியாக இருந்தனர். இத்தனை தமிழர்களும் நம்மை எதிர்க்கிறார்கள் என்றால் நம் பக்கம் ஏதோ தவறு இருக்கிறது என்றுதானே அர்த்தம். அப்படியே தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமகனாக நடத்தப்பட்டது தொடர்பான வருத்தங்கள் சொரணை மிகுந்த நமக்கு இருந்தால் அதைப் பேசித்தான் தீர்த்திருக்கவேண்டும். ஒரு வன்முறை கூடுதல் வன்முறையையே கொண்டுவரும். நாம் தவறு செய்துவிட்டோம்... வாருங்கள் போய்த் திருத்துவோம் என்கிறார்.

இதனிடையில் பிரபாகரன் உயிருடன் இருக்கும் தகவல் தெரிந்து சிங்கள ராணுவம், இந்திய ராணுவம், அமெரிக்க ராணுவம் அனைத்தும் அந்தத் தீவில் வந்து இறங்குகின்றன. பிரபாகரன் ஒவ்வொரு தரப்பு கமாண்டரிடமும் கருணையின் வார்த்தைகளைப் பேசுகிறார். அவர்களும் அதிர்ச்சியில் உறைகிறார்கள். பிறகு ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். நாங்கள் தேடி வந்த பிரபாகரன் நீங்கள் இல்லை என்று சொல்லியபடியே நான்கு கமாண்டர்களும் தங்கள் படகுகளில் ஏறப் போகிறார்கள். பிரபாகரன் ஒவ்வொருவருடைய கைகளையும் பற்றிக்கொண்டு தன்னையும் உடன் அழைத்துச் செல்லும்படிக் கெஞ்சுகிறார். அவர்களோ அவரை உதறித் தள்ளியபடி தத்தமது படகுகளில் ஏறுகிறார்கள். பிரபாகரன் மண்டியிட்டு கரையில் அழுதபடியே இருக்கிறார்.

படகை நோக்கிப் போன கமாண்டர்கள் பிறகு ஏதோ யோசித்துக் கூடிக் கலந்து பேசுகிறார்கள். பிறகு நேராக பிரபாகரனை நெருங்கி தமது துப்பாக்கிகளை அவர் முன்னால் வைக்கிறார்கள். இந்த நான்கில் எந்தத் துப்பாக்கியை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு அந்த கமாண்டருடன் படகில் ஏறிச் சென்று கொள்ளுங்கள். எங்களுக்கு பிரபாகரன் வேண்டும். துப்பாக்கியை இடுப்பில் சொருகிய பிரபாகரன் வேண்டும் என்று சொல்கிறார்கள். மண்டியிட்டு அழுது கொண்டிருந்த பிரபாகரனின் முன்னால் தமிழ், சிங்கள, இந்திய, அமெரிக்க துப்பாக்கிகள் மின்னிக்கொண்டிருக்கின்றன. பிரபாகரன் அவற்றையே வெறித்துப் பார்த்தபடி இருக்கிறார்.


மெதுவாக யோசித்து ஒரு பதில் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு நான்கு கமாண்டர்களும் நிற்கிறர்கள். பிரபாகரன் அந்த நான்கு துப்பாக்கிகளையும் மெள்ளத் தடவுகிறார். கைக்கு அடக்கமான அவற்றின் வசீகரம், உலோக உடலின் கவர்ச்சி அவரை சஞ்சலப்பட வைக்கிறது. சிறிது நேரம் கண்களை மூடி மனத்திரையில் எதையோ ஓடவிடுபவர் சட்டென்று ஒரு முடிவெடுக்கிறார். நான்கு துப்பாக்கிகளையும் புறங்கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டு எழுந்து நிற்கிறார். நான்கு கமாண்டர்களும் அதிர்ச்சியில் உறைகிறார்கள். 

இது கணக்குகளை நேர் செய்யும் நேரம்... பகை மறக்கும் காலம் என்று சொல்கிறார். 
நான்கு கமாண்டர்களும் தத்தமது துப்பாக்கிகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்பவர்கள் சட்டென்று பிரபாகரனை நோக்கி துப்பாக்கியை நீட்டுகிறார்கள். துப்பாக்கியை எடுப்பவனுக்கு மட்டுமல்ல துப்பாக்கியே வேண்டாம் என்று சொல்பவனுக்கும் துப்பாக்கியால்தான் மரணம் நேரவேண்டும் என்று சொல்லி சரமாரியாகச் சுடுகிறார்கள். பிரபாகரனின் உடல் சல்லடையாகத் துளைக்கப்பட்டு வெண்மணலில் ரத்தக் கோலம் வரைந்தபடி வீழ்கிறது.