Monday 16 January 2017

தமிழகம் : நேற்று இன்று நாளை - 2

கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரால் ஆளப்பட்ட தமிழகம் இந்த மூவரின் ஆளுமை மற்றும் அரசாட்சி பண்புகளையும் மீறி இந்திய அளவில் முன்னணியில் இருந்ததற்குப் பல காரணங்கள் உண்டு.

பழங்கால இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்துக்கு தென்னிந்தியாவில் இருந்த கடற்கரை மிகப் பெரிய சாதகமாக அமைந்தது. அதனால் தென்னிந்திய நகரங்கள் ஒப்பீட்டளவில் முன்னேறியிருந்தன. மேலும் குல வழித் தொழில் தென்னிந்தியாவிலும் அழுத்தமாக நிலைபெற்றிருந்ததால் சிறு சிறு தேசங்களாக ஆட்சியாளர்கள் சண்டையிட்டு வந்த நிலையிலும் வியாபாரம் அந்த சாதி மக்களால் எந்தவித பாதிப்பும் இன்றித் தொடர்ந்து நடந்தது. அது தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களின் செல்வச் செழிப்புக்கு உறுதுணையாக இருந்தன. அதோடு, இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் தென்னிந்தியாவுக்குப் படையெடுத்து வந்த நிலையிலும் ஆட்சி அதிகாரத்தைப் பெரிதும் வடக்கோடு நிறுத்திக்கொண்டதால் தென்னிந்தியா பெரிய பாதிப்பில்லாமல் செழித்து வளர்ந்தது.

துறைமுக நகராக இருந்ததால் பிரிட்டிஷ் ஆட்சியிலும் செல்வாக்கு பெற்ற நகரங்களில் ஒன்றாக மதராஸ் சோழர்களின் தலைநகரான தஞ்சையும் பாண்டியர்களின் தலைநகரமான மதுரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணிக்கு வந்தது. தமிழகத்தின் இன்றைய நவீன வளர்ச்சிக்கான அடிக்கல் பிரிட்டிஷ் காலத்தில் போடப்பட்டது. சுதந்தரத்துக்குப் பின் தேசிய அரசியல் சக்தியான காங்கிரஸ் தமிழகத்தை ஆண்ட காலகட்டத்தில் இங்கு தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள், கட்டப்பட்ட அணைகள், கல்லூரிகள் போன்ற உள்கட்டுமானத்தின் பலனை திராவிட ஆட்சிகள் அறுவடை செய்தன. இந்துக் கடவுள் மறுப்பு, (போலி) பகுத்தறிவு, (போலி) சாதி ஒழிப்பு என திராவிட இயக்கம் கட்டி எழுப்பிய முழக்கக் கோட்டைகள் எல்லாம் அவர்கள் கண் முன்னே நீர்க்குமிழிகளாக உடைந்து நொறுங்கிப் போனவையே.

தேசியக் கட்சியான காங்கிரஸ் 67க்குப் பின் தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலையிலும் தேசிய செயல்திட்டமே தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. திமுகவும் அதிமுகவும் மத்திய அரசுகளுடன் (அதன் மூலம் இந்திய தேசியத்துடன்) தங்களை இணைத்துக்கொண்டே செயல்பட்டிருக்கிறார்கள். அந்தவகையில் தமிழகம் இந்திய மத்திய அரசுடன் கொண்டிருந்த நல்லுறவினால், தமிழக அரசியல்வாதிகளின் பிரிவினைக் கொள்கைகளையும் மீறி தமிழ்நாடு இந்திய அளவில் முன்னணி மாநிலமாக இருந்துவருகிறது. எனினும் இந்திய தேசியம் தமிழகத்தில் தேவையான அளவுக்கு வேரூன்றியிருக்கவில்லை. இதை திராவிட,தமிழ் தேசியவாதிகள் தமது பெருமையாகவும் தனித்தன்மையாகவும் சொல்லிக் கொள்வார்கள். உண்மை என்னவென்றால், சுதந்தரத்துக்குப் பின் மிகுதியான காலம் ஆட்சியில் இருந்த தேசிய கட்சியான காங்கிரஸ் பிராந்திய தலைவர்களை வளரவிடாமல் தடுத்து முழு அதிகாரத்தையும் தன்னிடம் குவித்ததுக்கொண்டதன் மூலம் தமிழகம் மட்டுமல்லாமல் எல்லா மாநிலங்களிலுமே இந்திய தேசிய உணர்வு தேவையான அளவுக்கு வேரூன்ற முடிந்திருக்கவில்லை. இந்துத்துவ கோட்டையான மும்பையில் கூட மராட்டிய உணர்வு வேரூன்றிய அளவுக்கு இந்திய உணர்வு வேரூன்றியிருக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் இந்தியா என்பது பல்வேறு பிராந்திய மொழிக் குழுமங்களின் கூட்டமைப்பாக உருவான தேசம். கலாசார, மத (இந்து) ஒற்றுமை இருக்கும் அளவுக்கு அரசியல் ஒற்றுமை உணர்வு கிடையாது.

உருவ வழிபாடு, சாதி உணர்வு, ஆங்கில மொழிப்பற்று, விஞ்ஞானப் பார்வைக் குறைவு, பக்தி, குடிமைப் பண்பு குறைவு, எந்தவொன்றுக்கும் உள்ளீடற்ற சடங்குசார் முக்கியத்துவம் எனப் பல வகைகளில் இந்தியா முழுவதுமே ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. என்றாலும் ஒவ்வொரு மாநிலமும் தனக்கென தனியான கலைகள், ஆடைகள், உணவுகள், விழாக்கள், இலக்கியங்கள், பொருளாதர அமைப்புகள் கொண்டவை. எனவே, இந்த பிராந்திய மொழித்தேசிய உணர்வு எப்போதும் இந்தியப் பெருந்தேசிய உணர்வைவிட அதிகமாகவே இருக்கும். இதை இந்திய தேசியத்தின் குறையாகப் பார்க்கத் தேவையில்லை. அது உண்மையில் ஒவ்வொரு மொழித் தேசியத்தின் தனித்தன்மையையும் மதித்து நடந்ததன் வெளிப்பாடே அது. எப்படி இந்து மதம் என்பது ஒவ்வொரு சாதிகளின் வாழ்க்கைப் பார்வை, சடங்கு ஆசாரங்களில் எந்தக் குறுக்கீடும் செய்யாமல் இருக்கிறதோ அது போலவே இந்திய தேசியமும் ஒவ்வொரு மொழித் தேசியத்தை அதன் போக்கில் வளர உதவுவதாகவே இருக்கிறது. கிறிஸ்தவமும் இஸ்லாமும் இப்படியான வேற்றுமையில் ஒற்றுமை என்ற பார்வை இல்லாதவை என்பதால் அங்கு அனைத்து பழங்குடி மரபுகளும் அழிக்கப்பட்டு ஒற்றைப் பெருமதம் உருவானதுபோலவே ஒற்றைப் பெருந் தேசியமும் உருவாகியிருக்கின்றன. இன்று இந்து இந்தியப் பெருந்தேசியம் சில பொதுத்தன்மைகளின் அடிப்படையில் அரசியல் ஒற்றுமையை மட்டுமே வலியுறுத்துகிறதே தவிர அது என்றும் பிராந்திய சாராம்சத்தை அழிக்கவே செய்யாது. அப்படியாக, இவை இரண்டுமே ஒன்றை ஒன்று செழுமைப்படுத்தக்கூடியவை என்ற புரிதல் இல்லாமல் ஆட்சியாளர்களின் தவறுகளினாலும் அந்நிய பிரிவினைவாத சக்திகளின் தூண்டுதல்களினாலும் இந்த தனித்தன்மைகள் எதிர் நிலையானவையாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இந்தப் பிரிவினைவாத கோஷங்களுக்கும் மிக நீண்ட வரலாறு உண்டு. பிரிட்டிஷாரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த பம்பாய், பஞ்சாப், கல்கத்தா, தில்லி, மதராஸ் போன்றவற்றில் வங்காளத்திலும் பஞ்சாபிலும் பிரிவினைவாதம் மிக அதிகமாக இருந்தது. இஸ்லாமியப் பெரும்பான்மை இருந்த காரணத்தால் வங்காளம் கிழக்கு பாகிஸ்தான் எனப் பிரிந்து சென்று பங்களாதேஷ் என்று தனி நாடாகவே ஆகிவிட்டிருக்கிறது. பஞ்சாப் மாகாணமும் இரண்டாகப் பிரிந்துவிட்டிருக்கிறது. மதராஸ் பிரஸிடன்ஸியில் இருந்த பிரிவினை உணர்வுகள் அதன் பூகோள அமைப்பினாலும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு அதிகம் இல்லாத காரணத்தினாலும் முனை மழுங்கிப் போயின. பிரிட்டிஷார் வெகு தொலைநோக்குப் பார்வையுடன் திராவிட ஆரிய பிரச்னையைக் கிளப்பிவிட்ட நிலையிலும் மதராஸ் பிரஸிடன்ஸியில் பிரிவினைவாதம் எதிர்பார்த்த அளவுக்கு வேரூன்றவில்லை. அதே நேரம் சுதந்தரத்துக்குப் பிந்தைய மத்திய, மாநிலத் தலைவர்களால் இந்திய தேசிய உணர்வும் வேரூன்ற முடிந்திருக்கவில்லை.

ஜெயலலிதாவின் துரதிஷ்டவசமான மறைவைத் தொடர்ந்து ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. கருணாநிதியும் அரசியல் ஓய்வு பெற்றுவிட்டிருக்கிறார் என்பதால் தேசிய - -மாநில இணக்கத்தின் உருவமாக இருந்த எம்.ஜி.ஆர் (ஜெயலலிதா)-கருணாநிதி சகாப்தம் இப்போது பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. தமிழகம் இனி எந்தப் பாதையில் செல்லும்?காமராஜர் கால காங்கிரஸ் போல் நரேந்திர மோதி தலைமையிலான தேசியக் கட்சி செல்வாக்கு பெறுமா..? அல்லது சசிகலா-பன்னீர் செல்வங்கள் மூலமாக திராவிட அரசியலின் மேம்படுத்தப்பட்ட தீமையான தமிழ் தேசியவாதம் வலுப்பெறுமா என்ற கேள்வி நம்முன் எழுந்திருக்கிறது.

முதலாவது நடக்கவேண்டும் என்று ஆசையையும் இரண்டாவது நடந்துவிடும் என்று அச்சத்தையும் சமகால நிகழ்வுகள் ஏற்படுத்திவருகின்றன.

ஜெயலலிதாவே ஏற்கத் தயங்கிய சில மத்திய அரசின் திட்டங்கள் அவர் மருத்துவமனையில் இருந்த நாட்களில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கின்றன. இறுதிச் சடங்கின்போது சசிகலா, பன்னீர் செல்வம் ஆகியோர் மோதியிடம் காட்டிய பணிவு கலந்த பாசம், இருவர் மீதும் பாய முடிந்த வழக்குகள், மத்தியில் பி.ஜே.பி.க்கு இருக்கும் பெரும்பான்மை பலம் ஆகியவையெல்லாம் பி.ஜே.பி.க்கு சாதகமான அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.

ஆனால், இலங்கைப் பிரச்னை, அணு மின் நிலையங்கள், காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை என பல விஷயங்களில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுவருவதாகப் பெருங் கதையாடல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இன்னொரு தேசிய கட்சியான சோனியா காங்கிரஸ் அரசியல் எதிரியை எதிர்க்கும் நோக்கில் மாநில பிரிவினைவாத சக்திகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் பெட்ரோலை ஊற்றி வருகிறது.

இந்நிலையில் இன்றைய தமிழகத்தின் வெற்றிடம் எதன் மூலம் நிரப்பப்படப்போகிறது? வட திசைத் தாமரைத் தடாகத்திலிருந்து கிளம்பி வரப்போகும் தேசியத் தென்றலா... தென் திசை உவர் கடலில் இருந்து கிளம்பி வரப்போகும் பிரிவினைப் புயலா..? தலைமைச் செயலர் கைது, விவசாயிகள் ’மரணம்’, சல்லிக்கட்டு தொடர்பான நடந்துவரும் போராட்டங்கள் என கொதிக்கத் தொடங்கியிருக்கும் தமிழக அரசியல்களம் தனது செல் திசையை அழுத்தமாகக் கோடிட்டுக் காட்டிவிட்டிருக்கிறது. குறிப்பாக சல்லிக்கட்டு விவகாரம் தமிழக அரசியலில் திருப்புமுனை நிகழ்வாக பேருருவம் பெற்றிருக்கிறது.

1965-ல் இதற்கு முன் நடந்த ஹிந்தி மொழி எதிர்ப்புப் போர் தமிழக அரசியலின் தலையெழுத்தைத் தீர்மானித்த முக்கிய நிகழ்வாக இருந்தது. 2017 போராட்டமும் அப்படியானதாக ஆக அனைத்து சாத்தியக்கூறுகளையும் கொண்டிருக்கிறது. அலங்கா நல்லூர் இரவுகள் மெழுகுவர்த்திகளால் ”ஒளி’ பெறத் தொடங்கியிருக்கின்றன.

1965 போராட்டமானது தமிழை அழிக்க வந்த ஹிந்தி மொழியை எதிர்க்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டாலும் உண்மையில் அது ஆங்கில ஆதரவுப் போராகவே நடந்து முடிந்திருக்கிறது. 1965 எழுச்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய திராவிட இயக்கம் ஹிந்தியை தமிழகத்தில் வேரூன்ற விடாமல் தடுத்த கையோடு ஆங்கிலத்தை பயிற்று மொழியாக ஆக்கி தமிழை முற்றாக ஓரங்கட்டியது. தமிழகத்தில் உருவான திராவிட இயக்கம் வட இந்தியாவையும் ஹிந்தியையும் பிராமணர்களையும் தனது எதிரியாக அடையாளப்படுத்திக் கொண்டிருந்தது. அதனால், அது பிராமணர்களின் மொழியாக சித்திரிக்கப்பட்ட சம்ஸ்கிருதத்தின் நெருங்கிய வாரிசான ஹிந்தியை எதிர்த்தது. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பிராமணர்கள் ஏற்கெனவே ஆட்சி மொழியும் உலக மொழியுமான ஆங்கிலத்துக்கு நகர்ந்துவிட்டிருந்தார்கள். பிராமணர்களுடைய மொழியாகிவிட்டிருந்த ஆங்கிலத்தை அவர்கள் பெருமளவில் கற்க ஹிந்தி எதிர்ப்புப் போர் மூலம் திராவிட இயக்கம் வழி செய்தும் கொடுத்தது. இது எப்படியென்றால் ஒரு நபரை எதிரியாகக் கற்பிதம் செய்துகொண்டு அவரைக் கைது செய்யப் புறப்பட்ட படைவீரர்கள் அவன் தப்பிச் சென்ற சுரங்கத்தின் மறு எல்லையில் அதி வேகக் குதிரை ஒன்றை நிறுத்தி வைத்ததுபோல் ஆகிவிட்டது.

காஷ்மீர பிராமணரான நேரு ஏற்கெனவே இந்தியாவை நவீனமயமாக்கும் பெயரில் பிராமண சமூகத்தின் புதிய மறுமலர்ச்சிக்கு மத்திய அரசில் வழியமைத்துத் தந்திருந்தார். நேருவியமும் திராவிடமும் பிராமண மேலாதிக்கத்துக்கு விரும்பி வழியமைத்துத் தந்திருக்கவில்லை என்பதும் சூழல் எப்படியாக மாறியிருந்தாலும் பிராமணர்கள் தமது மேலாதிக்கத்தைக் தக்கவைத்துக்கொண்டிருப்பார்கள் என்பதும் உண்மைதான் என்றாலும் இந்த இரண்டும் பிராமண வெற்றிகளுக்கு வழியமைத்துத் தந்திருக்கின்றன என்பதே வரலாறு. இதன் விளைவாக பிராமணியம் மேற்கத்தியமயமாக்கத்தை நோக்கி நகர்வதும் இடை, கடைநிலை சாதிகள் கூடுதல் இந்து இந்தியமயமாவதும் நடந்திருக்கின்றன. கல்விப் புலம், அதிகார மையங்கள், ஊடகங்கள் ஆகியவற்றில் இடதுசாரி சாய்வு அதிகமாக இருந்த நிலையிலும் மக்கள் திரள் அவர்களால் பெரிய பாதிப்புக்கு ஆளாகமலே இருந்திருக்கிறார்கள். குறிப்பாக மும்பை, கர்நாடகா, தமிழகம் போன்ற மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு அதுவே காரணமாகவும் இருந்திருக்கிறது.

இப்போது இரண்டாம் எழுச்சியாக இந்திய எதிர்ப்பு 2017-ல் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை இலக்கு இந்து - இந்திய அரசியல் ஆதிக்கத்தை ஓரங்கட்டுவதுதான். அந்த நோக்கில்தான் மாட்டுக்கறியை ருசித்துத் தின்னும் இஸ்லாமியக் கூட்டமும் நாட்டுக் காளைகள் மீது பெருங்கருணையுடன் களத்தில் குதித்திருக்கின்றன. மாட்டுக்கறியைத் தின்னும் இன்னொரு பிரிவான தலித் (ஒரு சில தலித் சாதிகள் நீங்கலாக) சாதிகளும் காளையைப் போற்றிப் பாடத் தொடங்கியிருக்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இந்து எதிர்ப்பு என்றால் அதற்காக அவர்கள் ஸ்டாலினைக்கூட தூக்கில் ஏற்றுவார்கள். எனவே, அவர்களும் இந்த புரட்சியில் விரைவில் ஐக்கியமாவார்கள்.

அயல்நாட்டு கிறிஸ்தவ நிறுவனங்களால் நிதியூட்டம் பெறும் பீட்டா அமைப்பு, 2011-ல் விலங்குகளை வைத்து விளையாட்டுகள், கண்காட்சிகள் நடத்தத் தடை விதித்த சோனியா அரசு, அதற்கு உறுதுணையாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம், 2014-ல் அந்த சட்டத்தை மேலும் உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், தடையை நீக்கப் போராடும் பரதிய ஜனதா அரசு என இந்த விஷயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க தமிழ் தேசியவாதிகள் தமிழ் கலாசாரத்துக்கு இழைக்கப்பட்ட அச்சுறுத்தலாக இதைச் சித்திரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இப்போதைய போராட்டங்களில் பீட்டா அமைப்பு குறித்த எதிர்ப்புகளே மிகுதியாகக் காணப்படும் நிலையிலும் இது பி.ஜே.பி. அரசுக்கும் இந்திய தேசியத்துக்கும் எதிரான முழக்கமாக விரைவில் மடைமாற்றப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன.

*

No comments:

Post a Comment