Tuesday, 24 January 2017

சல்லிகட்டு புரட்சி - 2

சல்லிகட்டு புரட்சி - 2

சல்லிக்கட்டு விஷயத்தை எடுத்துக்கொண்டால் மக்கள் திரள் முதலில் போலிக் கலாசாரப் பெருமிதத்தை முன்வைத்து ஓர் அணியில் திரண்டது. மாற்றுக் கருத்துகள் எல்லாம் படு கொடூரமாக ஒடுக்கப்பட்டன. அல்லது அவற்றுக்கு எந்தவொரு சிறு இடம் கூடத் தரப்படாமல் ஓரங்கட்டப்பட்டன. அந்த மக்கள் திரளின் கோரிக்கையை உலகுக்குத் தெரிவிக்கும் நோக்கில் அங்கு வந்த ஊடகத்தினர் முதல் ஓரிரு நாட்களுக்கு அந்த மக்களின் குரலையே உலகுக்குத் தெரிவித்தனர். அதன் பிறகு அந்தக் கூட்டத்துக்குள் பல்வேறு பொலிட் பீரோக்கள் ஊடுருவின. ஊடகங்களின் முன் யார் பேசவேண்டும்... என்ன பேசவேண்டும் என்பதை அவர்கள் கட்டுப்படுத்த ஆரம்பித்தனர். தமது அதீத வெறுப்பு மற்றும் மிகைப் பொய் கருத்தாக்கங்களினால் மக்கள் ஆதரவைப் பெற முடியாமல் தவித்து வந்த அவர்கள் மக்கள் ஒரு விஷயத்தின் கீழ் கூடியதும் அதற்குள் ஊடுருவி தமது கோரிக்கைகள்தான் மக்களின் கோரிக்கைகளும் என்ற போலித் தோற்றத்தை உருவாக்கும் நோக்கில் ஊடகங்களில் தமது கொள்கைகளைப் பேசுபவர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுத்தனர். மற்றவர்களை ஓரங்கட்டினர். இது பிரிவினைவாத இயக்கங்களும் ஊடகங்களும் இணைந்து செய்த அப்பட்டமான பாசிஸ நடவடிக்கை.

இந்தப் புரட்சியை வழக்கம்போல் அறிவுஜீவிகள் சமூகப் போராளிகள், அரசியல் விமர்சகர்கள் எல்லாரும் அவரவர் வழி நின்று பாராட்டினார்கள். தமிழகம் தொடர்ந்து மத்திய, மாநில ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்டதன் வெளிப்பாடே இந்த மக்கள் எழுச்சி என்று கனமான பனங்காயை புரட்சிக் குருவியின் தலையில் ஏற்றிவைக்கிறார்கள். உண்மையில் இந்தப் போராட்டம் இரண்டு காரணங்களினால் தவறு. முதலில் இப்படியான போராட்ட வடிவமும் அதன் தீவிரமும் தவறு. இரண்டாவது போராட்டத்துக்கான காரணங்களும் தவறு.

முதல் விஷயத்தை எடுத்துக்கொள்வோம். இன்றைய திடீர் ஆவேசம் என்பது ஒருவித மன நோயின் வெளிப்பாடு போல் இருக்கிறது. கவுரவமாகச் சொல்வதென்றால், மலை உச்சியில் சிறு ஊற்றாக ஆரம்பித்தபோது தத்தமது வயல்களுக்கு திருப்பிவிடத் தவறியவர்கள் அந்த ஊற்று நீரோடையாகி, ஆறாகி, ஆறு பல சேர்ந்து காட்டாறாகிப் பாய்ந்து பெருக்கெடுக்கும் இடத்தில் மணல் மூட்டைகள் போட்டு எங்கள் நிலங்களுக்குத் திரும்பி வா என்று சொல்வது போன்றது.

மக்களாட்சியில் பஞ்சாயத்து, வட்டம், மாவட்டம், மாநிலம், தேசம் என அதிகார அடுக்குகள் பல்வேறு அதிகாரப் பங்கீடுகளுடன் பல்வேறு செயல்களைச் செய்யும் பொறுப்புகளுடன் இருக்கின்றன. சின்னஞ்சிறு அலகுகளை சரிவரச் செயல்படச் செய்வதன் மூலம் ஒட்டு மொத்த அரசு எந்திரத்தையும் தனது நலனுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. நல்ல ஆளா என்பதைப் பார்க்காமல் நம்ம ஆளா என்று பார்த்தும் பிச்சைக் காசு வாங்கியும் ஊழல்வாதிகளையே தொடர்ந்து தேர்ந்தெடுத்தல், நல்லவர்களை ஜோகக்ர்களாக ஓரங்கட்டுதல், சுய லாபத்துக்கு ஊழல் மூலம் சட்ட திட்டங்களை வளைத்துக்கொள்ளுதல், முறையற்ற சலுகைகளை எதிர்பார்த்தல் என அனைத்து தவறுகளையும் செய்தது இதே மக்கள்தான்.

சுமார் 40-50 ஆண்டுகளாக இப்படியான தவறுகளைத் தொடர்ந்து செய்துவிட்டு ஒரு இனிய அதிகாலையில், ”உலகமே உன்னை வஞ்சிக்குது பார்’ என்று மிகைக் கூக்குரல் எழுப்பியவர்களின் பின்னால் நின்றுகொண்டு உணர்ச்சி மேலிட உரத்த குரலில் கத்தியதென்பது ஒரு தவறை அதைவிடப் பெரிய இன்னொரு தவறால் சரி செய்யப் பார்த்ததுபோல் ஆகிவிட்டது. முட்செடிகளுக்கு நீரூற்றி உரமிட்டு கண் விழித்துப் பாதுகாத்து வளர்த்துவிட்டு அறுவடை நாளில் அது ஏன் மல்லிகை மலர்களைச் சொரியவில்லை என்று தீ வைத்துக் கொளுத்தப் புறப்படுவது போன்ற முட்டாள்த்தனம் இது. அதுமட்டுமல்லாமல் காவல் துறை, நீதித்துறை, நாடாளுமன்றம் என்றெல்லாம் அதிகார அமைப்புகள் உருவாக்கப்பட்டு அவற்றின் துணையுடன் அனைத்துச் செயல்பாடுகளும் குறைகளுடனும் நிறைகளுடனும் நடந்துவரும் நிலையில் சட்டென்று ஒருநாள் அவை அனைத்தையும் ஒரேயடியாகத் தூக்கி எறிவது மிகப் பெரிய தவறு. உண்மையில் அப்படியான எந்தவிர அரசியல் புரட்சிக்கும் தயாராகாத மக்களை சில புரட்சியாளர்கள் தமது நோக்கங்களுக்குத் திருப்பிக்கொண்டுவிட முடியும் என்று நினைத்துச் செய்த கூத்துக்களே இவை.   

இரண்டாவதாக நம் போராளிகள் சொல்வதுபோல் உண்மையிலேயே நாம் பள்ளத்தில் வீழ்ந்துகிடக்கிறோமா?

யாரைக் கேட்டாலும் நமது ஆவினங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்... ஈழத்தில் வஞ்சிக்கப்பட்டோம்... அணு உலையால் வஞ்சிக்கப்பட்டோம்... மீத்தேன் வாயுத் திட்டத்தால் அழிய இருந்தோம்... காவிரி விவகாரத்தில் வஞ்சிக்கப்பட்டோம்... விவசாயிகள் கொத்து கொத்தாக இறந்துவருகிறார்கள்... மூன்று அப்பாவிகளை விடுதலை செய்ய முடியவில்லை... என வரிசையாகப் பல வஞ்சிப்புகளைப் பட்டியலிடுகிறார்கள். இவை எல்லாவற்றிலும் போராளிகள் தரப்பு நியாயமும் உண்டு. பொதுவான நியாயமும் உண்டு.

ஆவினங்களின் அழிவென்பது இரண்டு வகைகளில் நடக்கிறது. ஒன்று : டிராக்டர் பயன்பாடு அதிகரித்துவிட்டதால் காளைகளின் தேவை குறைந்துவிட்டது. எனவே, பத்திருபது வருடங்களுக்கு முன்புவரை பல லட்சமாக இருந்த காளைகள் இப்போது சில ஆயிரங்களாகக் குறைந்துவிட்டன. இது சல்லிக்கட்டுக்குத் தடை விதிப்பதற்கு முன்பே நமக்கு நாமே போட்டுக்கொண்ட சூடு. இதற்கும் சர்வதேசச் சதிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

அடுத்ததாக ஏ-1, ஏ-2 பால் பற்றிய விஞ்ஞான விளக்கங்கள். இது உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் நாட்டுமாடுகளை அழியாமல் காப்பதென்றால் சல்லிக்கட்டு நடத்தித்தான் காப்பாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. சுகுனா சிக்கன் போன்ற நிறூவனங்களும் ஈமு கோழி வளர்ப்பு நிறூவனங்களும் செய்வதுபோல் கிராமப்புற மக்களுக்கு அரசு கன்றுகளைத் தந்து புல்வெளிகளுக்கான வழியை ஏற்படுத்திக்கொடுத்து வளர்த்தெடுக்கவேண்டும். அந்த மாடுகளில் இருந்து கிடைக்கும் சாணத்தை எரிவாயுவாகவும் நிலங்களுக்கு உரமாகவும் பயன்படுத்திக்கொள்ளுதல் என விவசாயத்தைத் தன்னிறைவுச் செயல்பாடாக வளர்த்தெடுக்கவேண்டும். அவையெல்லாம் உண்மையிலேயே பிரச்னை தீரவேண்டும் என்ற அக்கறை உள்ளவர்கள் செய்யவேண்டிய வேலைகள். சல்லிக்கட்டு நடத்தித்தான் வீரியமான காளைகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற பழங்கால வழிமுறை இன்றைய விஞ்ஞான யுகத்தில் தேவையில்லை. எனவே, சல்லிக்கட்டு ஒரு பழம் பெரும் பாரம்பரியம்... அது தொடரவேண்டும் என்று சொல்வது வேறு. நாட்டு மாடுகளைக் காப்பாற்ற அது ஒன்றே வழி என்று சொல்வது வேறு. உண்மையில் நாட்டுமாடுகளை அழிப்பதற்காக சல்லிக்கட்டை சர்வ தேச சமூகம் தடை செய்ய விரும்புவதாகச் சொல்வதில் எந்த தர்க்க நியாயமும் இல்லை.

ஈழத்தை எடுத்துக்கொண்டால், சக போரட்டக்காரர்களைக் கொன்ற, இஸ்லாமியர்களை விரட்டியடித்த, கிழக்குப் பகுதி தமிழர்களால் ஓரங்கட்டப்பட்ட, பேச்சுவார்த்தைகளின் அடிப்படை விதிகளைக்கூடப் புரிந்துகொள்ளாத, மிக மிகத் தவறான வன்முறைப் பாதையை முன்னெடுத்த ஒரு தலைமையின் தவறுகளும்தான் ஈழ வீழ்ச்சிக்குக் காரணம் என்ற உண்மையை யோசித்துப் பார்ப்பவர்களுக்கு தமிழர்கள் யாரால் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பது புரியக்கூடும்.

தனது தேசத்தின் மிகப் பெரும் தலைவனைக் கொன்றதற்குத் துணை நின்ற மூன்று அப்பாவிகளின் தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்தச் சொல்லி போராட முழு சுதந்தரம் தந்திருக்கும் அரசைத்தான், அதனால்தான் நாம் எதிர்க்கிறோம் என்பதையும் புரிந்துகொள்ளக்கூடும் லட்சியத் தலைவனாக முன்வைக்கப்படும் மாவீரர் பிரபாகரர், எதிர் தரப்புக்கு சாதகமாக நடந்துகொண்டதாலோ அப்படி நடந்துகொண்டதாக சந்தேகம் வந்ததாலோ அல்லது அப்படி நடந்துகொண்டதாகப் பொய்ப்பழி சுமத்தியோ இன்ன பிற குற்றங்களைச் செய்ததாகச் சொல்லியோ மின் கம்பத்தில் அடித்துக் கொன்று தூக்கிலிட்டவர்களின் எண்ணிக்கையை ஒரு கணம் நினைத்துப் பார்த்துவிட்டு இந்திய தேசியத்தின் நீதிமன்றத்தை ஒருவர் பழிக்கவேண்டும்.

முந்தைய தலைமுறைப் பாதுகாப்பு வசதிகள்கொண்ட கல்பாக்கம் அணு மின் நிலையம் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எந்தவிதப் பெரிய விபத்தும் இன்றி செயல்பட்டு வருகிறது. கூடன் குளம் அணு மின் நிலையம் பல மடங்கு பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஓர் அமைப்பு. அதிகம் செலவானாலும் பரவாயில்லை அணு மின் நிலையத்தைவிட பாதுகாப்பான மின்சார உற்பத்தி வழிமுறைகளை நாம் முன்னெடுக்கவேண்டும் என்று போராடுவதில் நிச்சயம் நியாயம் இருக்கத்தான்செய்கிறது. ஆனால், அது தமிழினத்தை அழிக்க வட இந்தியர்கள் செய்த சதி என்ற பார்வையில் நியாயம் என்ற நான்கெழுத்துச் சொல்லில் ஒரு எழுத்துகூட இல்லை. அதோடு அதே மத்திய அரசுதான் தென்மாவட்டத்தில் உலகிலேயே மிகப் பெரிய சூரிய மின் உற்பத்தி மையத்தை ஆரம்பித்தும் வைத்திருக்கிறது. அணு உலையை எதிர்த்தவர்கள் சூரிய மின்னுலையைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவே இல்லையே ஏன்..?

காவிரி பிரச்னையை எடுத்துக்கொண்டால், காமராஜர் ஆட்சிக்குப் பிறகு பெரிய நீராதார, நீர்பாசனத் திட்டம் எதையுமே முன்னெடுக்காத திராவிட ஆட்சியாளர்களை அவர்கள் கொடுத்த 500க்கும் ஆயிரத்துக்கும் மயங்கி தேர்ந்தெடுத்துவிட்டு இப்போது வந்து புரட்சி செய்வதில் எந்த நியாயமும் இல்லை..தமிழ் புலவன் சீத்தலைச் சாத்தனார் தான்செய்த ஒவ்வொரு தவறுக்கும் தலையில் எழுத்தாணியால் குத்திக்கொள்வார் என்று சொல்வார்கள். அவருடைய ஊர் பெயரைத் தவறாகப் புரிந்துக்கொண்டு சொல்லப்படும் கட்டுக்கதைதான் என்றாலும் ஒருவேளை தமிழ் மக்கள் அதுபோல் நடந்துகொள்வதென்று முடிவெடுத்தால் ஒவ்வொருவருடைய தலையும் ரத்தக் களறியாகத்தான் இருக்கும். நாம் செய்யாத தவறை விட நம் அரசுகள் பெரிய தவறெதுவும் செய்துவிடவில்லை. தவறையும் பொறுப்பையும் உணர்வதில் இருந்து தொடங்குகிறது சீர்திருத்தத்தின் புரட்சிகள்.

உண்மையில் காவிரியின் நீளத்தை எடுத்துக்கொண்டால் அது கர்நாடகாவில் 320 கி.மீ பாய்கிறது. தமிழகத்தில் 420 கி.மீ. பாய்கிறது. பயன்பாட்டு அளவில் பார்த்தால் தமிழகம் 80% நீரைப் பயன்படுத்திக்கொள்கிறது. கர்நாடகா 20% நீரைப் பயன்படுத்திக்கொள்கிறது. ஏக்கர் கணக்கில் சொல்வதென்றால் தமிழகத்தில் பாசன வசதி பெறும் பகுதி 1000 ஏக்கர் என்றால் கர்நாடகாவில் பாசனம் பெறும் பகுதி 300-400 ஏக்கர்தான். காலகாலமாக இப்படியான நிலையே இருந்துவந்திருக்கிறது. கீழ்ப் பகுதி மக்களின் உணர்வுகளுக்கும் வாழ்வாதாரத்துக்கும் நிச்சயம் மதிப்புக் கொடுக்கத்தான் வேண்டும். ஆனால், மேல் பகுதி மக்கள் தமது விளை நிலங்களை அதிகரிக்க முடிவெடுத்தால் அதையும் கீழ்ப்பகுதி மக்கள் புரிந்துகொள்ளத்தானே வேண்டும்.

அதோடு ரியல் எஸ்டேட்டில் ஆரம்பித்து தோல் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் வரை ஆரம்பித்து விவசாயத்தை ஓரங்கட்டிவிட்டு பிற தொழில் துறைகளில் நாம் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக வளர்ந்து வெற்றியின் படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறோம். விவசாயம் நிச்சயம் வெற்றிகரமான தொழிலாக ஆக்கப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் கொடுக்கப்படும் 100 நாள் வேலைக்கான சம்பளத்தை வெறுமனே ஒப்புக்கு இரண்டு புல்லைக் கொத்திவிட்டு இத்தனை காலமும் வாங்கிச் சென்றுவிட்டு விவசாயத்தை மத்திய அரசு புறக்கணித்தது என்று சொல்ல மிகுந்த நெஞ்சுரம் வேண்டும். அந்த வேலை நேரத்தில் பத்தில் ஒரு பங்கு நேரம் ஒழுங்காக வேலை செய்திருந்தால்கூட அனைத்து நீர் நிலைகளும் தூர்வாரப்பட்டிருக்கும். சிறு சிறு குட்டைகள் வெட்டப்பட்டிருக்கும். மழை நீர் சேகரிக்கப்பட்டு விவசாயம் செழித்திருக்கும்.

இப்படித் தவறுகள் அனைத்தையும் தன் மீது வைத்துக்கொண்டுவிட்டு இந்தியாவில் இருப்பதால்தான் எல்லாமே போச்சு என்று ஒருவர் தனது சுய நலம் சார்ந்து சொல்கிறர் என்றால் அவரைப் போய் மீட்பனாக நினைப்பது போன்ற அபாயம் வேறு எதுவும் இருக்காது. இலங்கையில் இப்படித்தான் தன் பின்னால் அணி திரண்ட ஆடுகளை விஷப் புல்வெளிக்கு இட்டுச் சென்றான் ஒருவன். அவனை நாயகனாகக் கொண்டுதான் மூவர்ணக் கொடியை மறைத்தபடி புதிய கறுப்புக் கொடிகள் எழுகின்றன. அந்தக் கொடிகளின் அலைவுகளில் புலிகளின் உறுமல் கேட்கின்றன. பச்சை நட்சத்திரங்கள் மின்னி மறைகின்றன.
*