Tuesday 24 January 2017

சல்லிகட்டு புரட்சி - 1

சல்லிகட்டு புரட்சி  -1

மன்னராட்சி, பொலிட் பீரோ ஆட்சி மட்டுமல்ல மக்களாட்சியில் எளிய மக்களிடம் அதிகாரம் குவிந்தால் அதுவும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதையே சல்லிக்கட்டுப் புரட்சி நிரூபித்துள்ளது.

ஒரு மன்னரிடமோ வேறு ஏதேனும் தனி அமைப்பிடமோ அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் அவர்கள் சுய நலத்துடன் அவர்களுக்கு சாதகமான முடிவையே எடுப்பார்கள். எனவே, எந்தவொரு தீர்மானமும் அந்த மக்கள் திரளின் சம்மதத்துடனும் ஒத்துழைப்புடனும் அமலாகவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அதிகாரத்தை மக்களிடம் கொடுப்பதை மக்களாட்சி முன்வைக்கிறது. ஆனால், அந்த மக்கள் கூட்டம் பல விஷயங்களில் போதிய அறிவு முதிர்ச்சி இல்லாமலும் பொறுப்புணர்வு இல்லாமலும்தான் இருக்கும். அதோடு மக்களுக்குத் தமது எழுச்சியை வேறு நபர்கள் எளிதில் திசைதிருப்பிச் சென்றுவிடாமல் தடுத்துக்கொள்ள முடியாது என்பதாலும் மக்கள் கையில் அதிகாரம் குவிவதும் தவறு என்பதையே இந்த நிகழ்வு காட்டியுள்ளது.

முதலில் வாடி வாசல் திறந்தால்தான் வீடு வாசல் செல்வோம் என்றார்கள். அவசரச் சட்டம் கொண்டுவந்து அதற்கு வழி செய்ததும் நிரந்தரச் சட்டம் வேண்டுமென்றார்கள். அதுதான் நிரந்தரச் சட்டமாகப் போகிறது... ஆனால், அதற்கான கால அவகாசங்கள் தேவை... யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்; அனால், அதையும் மீறி சட்டம் அமலாகிவிடும் என்பதையெல்லாம் அவர்கள் புரிந்துகொள்ளவோ ஏற்கவோ தயாராக இல்லை. அவர்களுடன் போராடிய முக்கியமானவர்கள் முன்னால் வந்து இது முழு வெற்றிதான் என்று சொன்னபோது அதைச் சொல்ல நீங்கள் யார் என்று விரட்டியடித்திருக்கிறார்கள். அப்படியானால் பீட்டாவைத் தடை செய் என்று சொன்னார்கள். இது சல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமே அல்ல என்றார்கள். இப்படியாக உள்ளுக்குள் புகுந்த விஷமிகள் சொன்னதற்கு ஏற்ப தமது கோரிக்கைகளை மாற்றிக்கொண்டே சென்றார்கள்.

தாங்கள் தன்னெழுச்சியாகக் கூடிய கூட்டத்துக்குள் புகுந்த பிற பிரிவினைவாத அரசியல் சக்தியினர் தேசத்தையும் பிரதமரையும் எதிர்த்து ஆபாசமாகப் பேசியபோதும் ஊடகங்களுக்கு யார் பேச வேண்டும் என்பதை அந்த அரசியல் சக்திகளே கட்டுப்படுத்தியப்போதும் அந்த மக்கள் திரளில் ஒருவர் கூட அதை எதிர்க்கவோ உடனே கலைந்து போகவோ செய்யவில்லை. அவர்களுக்கு அந்த முழக்கங்களில் உடன்பாடு இல்லாத நிலையிலும் தம்மைப் பகடைக்காயாக வைத்து இவையெல்லாம் செய்யப்படுகின்றன என்பது தெரிந்த நிலையிலும் அதையெல்லாம் தடுக்க முடியாமல் இருந்தார்கள். அதாவது, பிள்ளை பிடிக்கும் கும்பல் கையில் சிக்கியிருக்ககிறோமென்பது கூடத் தெரியாமல் சிரிக்கும் குழந்தைகளாக இருந்தார்கள்.

அடுத்ததாக, மக்கள் சக்தியும் ஒற்றைப் பேருருவமாக ஒரே உடலாக ஒரே குரலாகத் திரளுமென்றால் அதுவும் மன்னராட்சி மற்றும் பொலிட் பீரோ ஆட்சி போலவே பாசிஸமாகவே மாறிவிடும். மாற்றுக்கருத்துகளுக்கு இடமே தராது என்பதையே இந்த எழுச்சி புரியவைத்திருக்கிறது. இவை எல்லாவற்றிலுமிருந்தும் தெரிவது என்னவென்றால், அதிகாரம் என்பது எங்குமே பெருமளவில் குவிவது எப்போதுமே நல்லதல்ல.
*

No comments:

Post a Comment