Friday 20 January 2017

போற்றிப் பாடடி பெண்ணே - 4

போற்றிப் பாடடி பெண்ணே
(தேசியமும் தெய்விகமும் இரு கண்கள் என்று சொன்ன தேவரை மட்டும்)

சல்லிக்கட்டுக்கான தடையென்பது தமிழ் கலாசாரத்தை அழிப்பதற்கான முயற்சியா..? நிச்சயமாக இல்லை. ஏனென்றால் மேலே சொன்னதுபோல் சல்லிக்கட்டு தமிழ்க் கலாசாரத்தின் மிக முக்கியமான அம்சமும் அல்ல; மேலும் பிற அனைத்து சீரழிவுகளும் நமக்கு நாமே என தமிழர்களால் தமிழர்களுக்காக முன்னெடுக்கப்பட்டுவருபவையே.
இந்திய அரசு தமிழர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும் அதன் வெளிப்பாடாகவே களமிறங்கியிருப்பதாகவும் புதிய ஏற்பாட்டு வசனம் ஒன்றை இடைச்செருகலாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
1.மும்பைக்கு அடுத்ததாக இந்தியாவின் இரண்டாவது பெரியப் பொருளாதாரத்தைக் கொண்டது தமிழகமே.
2. தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (Gross State Domestic Product - GSDP) $210 பில்லியன்.
3. மரபு சாரா மின் உற்பத்தியில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது.
4. கடந்த பத்து வருடங்களில் 9% CAGR (Compounded Annual Growth Rate) சாதித்த ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.
5. தமிழ்நாட்டின் per capita income $3,000 இந்திய யூனியனில் மூன்றாவது பெரிய தனிநபர் வருமானம்.
6. 2012-இன் Economically Free State அறிக்கையின் ஆதாரமான Economic Freedom Rankings for the States of India வில் தமிழ்நாடு தான் நம்பர் 1.
7. கல்விமருத்துவம்பொது சுகாதாரம்அடிப்படை கட்டமைப்பில் தமிழ்நாடு ஸ்காண்டிநேவிய நாடுகளோடு போட்டியிடும் அளவிற்கு வலிமையோடிருக்கிறது.
8. சேவைகள் 52% ; தொழில் உற்பத்தி 34%; விவசாயம் 21% இதை விட பரவலான நகரமயமாக்கமும்வளர்ச்சியும் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லை.

இவையெல்லாம் எங்கிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் தெரியுமா..? தனித் தமிழ் நாடு கோருபவர் ஒருவருடைய நிலைத்தகவலில் இருந்து பெறப்பட்டவை. தமிழகம் இந்தியாவில் முன்னணி மாநிலமாக இருப்பதுதான் தனியாகப் பிரிந்து செல்ல அவர் சொல்லும் முக்கிய காரணம்!
கூடன்குளம் அணு மின் நிலையத்தைக் கட்டி தமிழர்களை அழிக்க முன்னெடுக்கப்பட்ட சதி என்று கூவினார்கள். இத்தனைக்கும் கல்பாக்கம் அணுமின் நிலையம் அதைவிடக் கூடுதல் ஆண்டுகளாக ஏன் சுனாமி வந்தபோதும்கூட எந்தவித ஆபத்தும் இல்லாமல்தான் இருந்துவருகிறது. விஷயம் என்னவென்றால் இந்திய அணு உலைகளில் சர்வதேச கண்காணிப்பு அனுமதி தொடர்பான சிக்கலினால் அந்த பிரச்னை அமெரிக்க பாப்டிஸ்ட் மிஷனரிகளின் தமிழகக் கிளைகள் மூலம் தூண்டப்பட்டது. உரிய தகவல்களும் உரிய பேரங்களும் திரைமறைவில் முடிந்ததைத் தொடர்ந்து அந்தப் பிரச்னை ஊற்றி மூடப்பட்டது. ஆனால் அதில் பங்குபெற்ற அப்பாவி கூடன் குளம் மக்களுக்கு நெல்லைப் புகழ் இருட்டுக்கடை அல்வா தேவாலய வளாகத்திலேயே பரிமாறப்பட்டது. அலங்காநல்லூர்-மெரினா தமிழர்களுக்கு என்ன தயாராகிக் கொண்டிருக்கிறதோ?

அதோடு கமுதியில் உலகிலேயே மிகப் பெரிய சூரிய மின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அணு மின் நிலையத்துக்கு எதிராக நடந்த போராட்டம் உலகம் முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேல் ஓங்கி ஒலித்தது. ஆனால், இந்த சூரிய மின்சார உலக சாதனை நீரில் பிரிக்கப்படும் காற்று எழுப்பும் அளவுக்கான குமிழிகளைக்கூட எழுப்பவில்லை. இது வஞ்சிப்பின் வெளிப்பாடா...? நன்றி மறந்த செயலின் வெளிப்பாடா?

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காவிரி நடுவர் மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டிருக்கிறது. மத்திய அரசு அதை அமைக்காமல் இந்திய நதிகள் அனைத்துக்குமான வாரியம் ஒன்றைக் கூடுதல் பலத்துடன் அமைக்க விரும்புகிறது. அது அமைக்கப்பட்டால் இந்த நதிப் பிரச்னைகள் இன்னும் எளிதில் தீர்க்கப்பட வழிபிறக்கும். ஆனால், அப்படியான முயற்சியை தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகமாகச் சொல்கிறார்கள்.

அதோடு கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பை மீறியபோது வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி மத்திய அரசு கர்நாடகாவுக்கு சாதகமாக நடந்துகொண்டது. இப்போது உச்ச நீதிமன்றம் தமிழர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியிருக்கும்போதும் அதே காரணத்தைச் சொல்லி கை கழுவப் பார்க்கிறது. கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காதபோது தமிழகம் மட்டும் எதற்காக மதிக்கவேண்டும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இது என்னவோ நியாயமான ஆவேசம் போலவே தோன்றும். ஆனால், கர்நாடகாவுக்கு காவிரி நீர் எந்த அளவுக்கு முக்கியமோ தமிழகத்துக்கு சல்லிக்கட்டு அந்த அளவுக்கு முக்கியமானதல்ல. 

கர்நாடகாவில் விவசாயப் பரப்பு சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது. எனவே அதனால் அங்கு பலன் பெறுபவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். அவர்கள் ஒன்று கூடி தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் ஒரு விஷயமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறுகிறார்கள். இங்கு சல்லிக்கட்டு என்பது வெட்டிப் பெருமிதமாக முன்வைக்கப்படுகிறது. இதில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழர்களின் எந்தவொரு வாழ்வாதாரத்தையும், கலாசார பெருமையையும் பெரிதாக இழிவுபடுத்திவிடவில்லை. பலகாலங்களாகச் செய்து வந்த ஒரு விஷயத்தை விட்டுக் கொடுக்க மனமில்லாததால் வரும் சங்கடமே இது. அதுவும் போக எத்தனையோ விஷயங்களை தூக்கி எறிந்த இதே தமிழ் சமூகம் சல்லிக்கட்டை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்குவது மடத்தனமே. விபூதி என்பது முருக வழிபாட்டின் மிக முக்கியமான அம்சம். தேவர் சமூகத்தின் முக்கியமான கடவுள் பழனி முருகன். ஆனால், இன்று சல்லிக்கட்டைக் காப்பாற்றப் போராடுவதாகச் சொல்லும் ஒருவர் நெற்றியில் கூட விபூதிக் கீற்று துளிகூடக் கிடையாது. அந்த விபூதி இட்டுக்கொண்டிருக்கும் ஒரே நபர் சல்லிக்கட்டை மத்திய அரசின் அனுமதியுடன் நடத்தப் போராடும் பன்னீர் செல்வம் மட்டுமே. அவர்தான் கலாசாரத்தைப் பற்றிப் பேச தகுதி உள்ளவர்.

தமிழ் கலாசாரத்தைக் கட்டிக்காப்பதற்காக சாதி, மதம் பாராமல் அனைவரும் ஒன்றாகக் கூடிப் போராட்டம் நடத்துகிறார்களாம். கிறிஸ்தவ, இஸ்லாத்துக்கு எந்தக் கலாசாரத்தைக் கட்டிக் காக்கும் நோக்கில் மாறினார்களாம்? ஒரு கலாசாரத்தை அதைக் குழி தோண்டிப் புதைத்தவர்களுடன் கை கோத்துக்கொண்டு மீட்டெடுக்க முடியுமா? தமிழ் சமூகத்தில் இருந்த சாதிச் சச்சரவுகள்தான் மதம் மாறியதற்குக்  காரணமென்றால் பின் எதற்காக மதம் மாறிய பிறகு தமிழ் கலாசாரத்தைக் காக்க அவர்களும் போராடுகிறார்களாம். அதிலும் சல்லிக்கட்டென்பது தமிழ் சாதியக் கலாசாரத்தின் தெளிவான வலுவான ஓர் எச்சம் அல்லவா?
*   

No comments:

Post a Comment