Friday 20 January 2017

போற்றிப் பாடடி பெண்ணே - 1


போற்றிப் பாடடி பெண்ணே...
(தேசமும் தெய்விகமும் இருகண்கள் என்று சொன்ன தேவரை மட்டும்)

சல்லிக்கட்டு உண்மையிலேயே ஒட்டுமொத்தத் தமிழர்களின் மிக முக்கியமான கலாசார அடையாளமா?
தமிழர்கள் பிற கலாசார அம்சங்களில் எந்த அளவுக்குப் புரிதலுடன் இருக்கிறார்கள்?
சல்லிக்கட்டுக்கான தடையென்பது தமிழ் கலாசாரத்தை அழிப்பதற்கான முயற்சியா?
இந்த சல்லிக்கட்டுப் போராட்டத்தில் வெளிப்படும் பிற அரசியல் அம்சங்கள் என்னென்ன?
இந்தப் போராட்ட வடிவம் எந்த அளவுக்கு சரி?
இந்த விஷயங்களின் அடிப்படையில்தான் இன்றைய இளைஞர்களின் போராட்டத்தைப் பார்க்கவேண்டும்.
முதலாவதாக சல்லிக்கட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களின் அடையாளமா? நிச்சயமாக இல்லை. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள் தமிழகத்தில் பொங்கல் என்று கொண்டாடப்படுகிறது. அது எந்த அளவுக்குத் மொத்தத் தமிழர்களின் விழாவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு சல்லிக்கட்டு அனைவருக்குமான விழா அல்ல. தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் தேவர் சமூகத்தின் விழா. சில இடங்களில் பள்ளர்களும் இந்த விழாவை நடத்துவதுண்டு. என்றாலும் பெரிதும் இது தேவர்களின் விழாவே. தேவர்களின் விழா மட்டுமல்ல... பள்ளர்களைக் கலந்துகொள்ளவிடாமல் தடுக்கும் விழாவும் கூட. திராவிடர் கழகத்தில் ஆரம்பித்து இடதுசாரிகள் வரை அனைவரும் இதை சாதிக்கட்டு என்றுதான் விமர்சிக்கவும் செய்கிறார்கள். அப்படியான ஒரு விழா ஒட்டு மொத்தத் தமிழர்களின் விழாவாக முன்வைக்கப்படுவது வரலாற்றுரீதியாக புதுமையான முயற்சியே.
ஆனால், ஒரு சமூகத்தில் (உலகத்தில்) செல்வாக்கு பெற்றிருக்கும் பிரிவு தனது அடையாளத்தை ஒட்டு மொத்த சமூகத்தின் (உலகின்) மீதும் திணிப்பதென்பது பொதுவாக நடக்கும் விஷயம்தான். அந்த சமூகம் அதை ஏற்குமென்றால் அது அந்த சமூகத்தின் விழாவாக நிச்சயம் மாறத்தான் செய்யும். 

கிறிஸ்தவ, முதலாளித்துவ சக்திகள் தமது மேலாதிக்கத்தைத் தந்திரமாகத் திணிப்பார்கள். உலகம் முழுவதும் தயாரித்து அனுப்பப்படும் கார்ட்டுன் தொடர்களில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாமே ஆண்டு இறுதியில் கிறிஸ்மஸ் கொண்டாடியே தீரும் என்பதில் ஆரம்பித்து பிற நாட்டு பிராந்திய கலாசார விழாக்களை சூழலியல், விலங்கியல் காரணங்களைச் சொல்லி முடக்குவதுவரை அவர்கள் மிகவும் தந்திரமாக தமது மேலாதிக்கத்தைத் திணிப்பார்கள். ஜல்லிக்கட்டைத் தடுப்பதை எதிர்க்கும் நபர்களில் யாரேனும் ஒருவர் டோரா என்ற குழந்தைக் கதாபாத்திரம் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறது? அது இந்திய விழாவையோ தமிழ், கன்னட, மலையாள, தெலுங்கு போன்ற பிராந்திய விழாவையோ ஏன் கொண்டாடுவதில்லை என்று கேட்கவே போவதில்லை. இதுவே கிறிஸ்தவ, முதலாளித்துவ வழிமுறை.

இதற்கு நேர் மாறாக, இஸ்லாமிய கம்யூனிஸ சக்திகள் தமது மேலாதிக்கத்தை அராஜகமாகத் திணிப்பார்கள். இதற்கான உதாரணங்கள் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளின் வரலாற்றையும் செய்திகளையும் லேசாகப் புரட்டிப் பார்த்தாலே தெரிந்துவிடும்.
இன்று தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த சல்லிக்கட்டுத் திணிப்பானது கிறிஸ்தவ/முதலாளித்துவ சக்திகளின் தந்திர அணுகுமுறையையும் இஸ்லாமிய/கம்யூனிஸ சக்திகளின் அராஜக வழிமுறையையும் ஒருங்கே தன்னில் கொண்டிருக்கிறது.

தமிழ் தெய்வங்களைக் கைவிட்டுச்சென்றிருக்கும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இதைக் கொண்டாடுவதில்லை. வன்னியர்கள், படையாச்சிகள், கவுண்டர்கள் இதைக் கொண்டாடுவதில்லை. தலித் மக்களில் பெரும்பான்மையினர் இதைக் கொண்டாடுவதில்லை. மேல் சாதிகளில் பிராமணர், வேளாளர், முதலியார், செட்டியார் என யாரும் இதைக் கொண்டாடுவதில்லை. இருந்தும் இன்று ஒட்டுமொத்த தமிழகமும் இந்த விழாவைக் கொண்டாடியே ஆகவேண்டும் அல்லது இதற்கு ஆதரவு தந்தே ஆகவேண்டும் என்று ஒரு நிர்பந்தம் உருவாக்கப்பட்டுவிட்டிருக்கிறது. இதற்கு பால சந்திரன் மரணம், எழுவர் விடுதலை, கூடன் குளம் என லயோலா கல்லூரி போன்ற அமைப்புகள் பலகாலமாகப் பயின்றுவந்த பாடங்கள் கைகொடுத்திருக்கின்றன (அலங்கா நல்லூரில் முதலில் சென்று அமர்ந்தவர்களில் அந்தக் கல்லூரிகளின் மாணவர்கள், ஈழத் தமிழர்கள் எனப் பலர் உண்டு என்ற உண்மைகள் வெளியே தெரியாமல் இருக்கும்வரையில் இது சதிக்கோட்பாட்டின் அங்கமாகவே இருக்கும்).
*

No comments:

Post a Comment