Monday 16 January 2017

தமிழகம் : நேற்று, இன்று, நாளை - 1

தமிழகத்தில் ஓர் அசாதாரண சூழல் உருவாகியிருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திராவிட இயக்கங்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் துரதிஷ்டவசமான மரணம், கருணாநிதிக்கு செயலற்ற தலைவராக காலம் தந்திருக்கும் கட்டாய ஓய்வு என தமிழகம் ராகு கேதுகளிடமிருந்து விடுதலை பெற்ற சூரியனாக ஆகியிருக்கிறது. இந்தப் புதிய சூரியன் வெளிச்சத்தைத் தருமா... வெப்பத்தைக் கக்குமா?

தமிழகத்தின் கடந்த கால வரலாற்றினூடாகவும் சமகால நிகழ்வுகளினூடாகவும் பயணித்து அதன் எதிர்காலத்தைச் சிறிது அலசிப் பார்ப்போம்.

இந்தியாவின் எல்லா மாநிலங்களையும் போலவே தமிழகமும் தனக்கென தனியான பல குணங்களைக் கொண்டதே. எனினும் அந்த ’தனித்தன்மை’மிகவும் தூக்கலாகவும் இழிவாகவும் வெளிப்பட்ட இடங்கள் என்று பார்த்தால் திரையுலகமும் அரசியல் துறையும்தான்.

கலைக்கும் அரசியலுக்கும் நிச்சயம் சம்பந்தம் உண்டு. உலகில் பல படைப்பாளிகள் தமது திரைப்படங்களில் சமூகம் சார்ந்தும் சமகால அரசியல் சார்ந்தும் நுட்பமாகவும் வெளிப்படையாகவும் அரசியல் பேசி வந்ததுண்டு. ஆனால், உலகில் எந்த நாட்டிலுமே கலைஞர்கள் இத்தனை ஆரவாரத்தோடு அழுத்தமாக அரசியலுக்குள் நுழையமுடிந்திருக்கவில்லை. இதற்கு திரைப்படைப்பாளிகளின் திறமை மற்றும் சமூக அக்கறையைவிட தமிழ் மக்களின் வெகுளித்தனமே முக்கிய காரணம் என்பது வேறு விஷயம்.

திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த அண்ணாத்துரை திரை ஊடகத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டு மக்கள் மத்தியில் தனது இயக்கத்துக்கு ஆதரவைப் பெற்றுத் தந்தார். அவருடைய படையில் இரண்டு தளபதிகள் இருந்தார்கள். ஒருவர் வசனகர்த்தா கருணாநிதி; இன்னொருவர் கதாநாயகர் எம்.ஜி.ராமச்சந்திரன்.

திரையுலகச் செல்வாக்கு, பிராமண எதிர்ப்பு, இந்துக் கடவுள் மறுப்பு, ’பகுத்தறிவு, தமிழ் மொழிப் பற்று, மாநில சுய ஆட்சி என பல கொள்கைகளைக் கொண்ட திராவிட முன்னேற இயக்கம் திரையுலகை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டு ஆட்சிக்கட்டிலில் ஏறியது. துரதிஷ்டவசமாக ஆட்சியில் ஏறிய சில வருடங்களிலேயே அண்ணாத்துரை இறந்துவிட, இரண்டு தளபதிகளுக்கிடையில் மோதல் தொடங்கியது.

கட்சியும் மக்களும் தன் பக்கமே என்ற நம்பிக்கையில் கருணாநிதி, எம்.ஜி.ஆரைப் பகைத்துக்கொண்டார். அதோடு, திராவிட முன்னேறக் கழகத்தின் வெற்றிக்கு தனது மேடைப் பேச்சும் அனல் பறக்கும் வசனங்களுமே காரணம் என்று அவர் நம்பினார். மக்களோ வேறுவிதமாக நினைத்தனர்.

ஆனால், எம்.ஜி.ஆர். - கருணாநிதி என்ற இரு நபர்களுக்கிடையே கொள்கைகள், கருத்துகள் ரீதியாக மேலோட்டமான வேறுபாடு உண்டென்றாலும் இடைநிலை சாதி ஆதிக்கத்தைப் பேணிக் காத்தது, மத்திய அரசுடன் நல்லுறவு, தொழில் வளர்ச்சி, கவர்ச்சி அரசியல் போன்றவற்றில் பெரிதும் ஒற்றுமையே இருந்தது. திராவிட இயக்கமே தனி நாடுக் கொள்கையைக் கைவிட்டு, நாத்திக அணுகுமுறையை ஒதுக்கிவைத்துத்தான் ஆட்சிக்கே வந்திருந்தது. அதிகாரம் கைக்குக் கிடைத்ததும் தமது கல(ழ)க-வெறுப்பு அரசியலை மேலும் நீர்த்துக்கொண்டனர். எனவே, எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் இடையிலான மோதல் என்பது இரண்டு தனி நபர்களின் ஈகோ சார்ந்ததாக மட்டுமே இருந்தது. அரச நிர்வாகத்தில், சமூகச் செயல்பாடுகளில் எந்த நேர்மறையான மற்றும் எதிர்மறையான தாக்கத்தையும் உருவாக்கியிருக்கவில்லை. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எந்த மாற்றமும் இல்லை என்ற நிலையே இருந்தது. ஆனால் இருவரிடமும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்தது: பிராமண, இந்து மத வெறுப்பு. கருணாநிதியிடம் நடைமுறையில் அவ்வளவு இல்லையென்ற போதிலும் பேச்சளவில் இவை மிக அதிகமாக இருந்தது. எம்.ஜி.ஆரிடம் இரண்டு நிலையிலும் துளியும் இல்லை. அதுவே எம்.ஜி.ஆருக்கான வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

எந்த மதிப்பீடுகளுக்காக எம்.ஜி.ஆர். ஏற்கப்பட்டாரோ அதே மதிப்பீடுகளையே கொண்ட ஜெயலலிதாவுக்கும் மக்கள் அதே காரணத்தினால் ஆதரவுகொடுத்தனர். எம்.ஜி.ஆர். மறைந்து ஜெயலலிதாவின் கைகளில் அதிகாரம் வந்தபோது சமூகம் வேறு தளங்களுக்கு நகர்ந்திருந்தது. ஜெயலலிதா அதைப் புரிந்துகொண்டு செயல்பட்டார் என்று சொல்லமுடியாது. ஆனால், 1980கள்வரையில் தமிழகத்தில் நடந்த அடிக்கட்டுமானப் பணிகள் அடுத்த 30-----& 40 ஆண்டுகளுக்கான உந்துவிசையைத் தந்திருந்தன. சமூகம் தன்னளவில் அந்த திசையில் நடக்க ஆரம்பித்தது. பொருளாதாரம், மருத்துவம், கல்வி, பொறியியல், ஊடகம், கணினி என ஒவ்வொரு துறையிலும் தண்டவாளத்தில் ஏற்றிவைக்கப்பட்ட ரயில் பெட்டி இதமாக நகர்வதுபோல் செல்லத் தொடங்கியது.

தமிழ்நாடு என்பது ஈ.வெ.ரா.வின் மண், இந்திய தேசியத்துக்கு எதிரானது, இந்துத்துவத்துக்கு இடமில்லை என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு என்றாலும் அடிப்படையில் இடைநிலை சாதி ஆதிக்கத்தை மையமாகக்கொண்டதுதான் என்ற புரிதல் ஜெயலலிதாவுக்கு இருந்தது. எனவேதான், இடைநிலை சாதிகளுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய 69% இட ஒதுக்கீட்டை அவர் எந்தவிதத் தயக்கமும் இன்றிக் கொண்டுவந்தார். உண்மையில் இந்தியா முழுவதுமே இடைநிலைசாதிகளே ஆதிக்க சக்திகளாக இருக்கின்றன. பிற மாநிலங்களில் ஏன் இன்னும் அந்த 69% இட ஒதுக்கீடு கொண்டுவரப்படவில்லை என்பது புரியவே இல்லை. இந்த ஒன்றுதான் ஜெயலலிதாவின் ஒரே ஒரு சாதனை.

ஆனால், ஜெயலலிதாவின் ஆளுமை என்பது அவருடைய ஆட்சி காலத்தில் வேறு பல வடிவங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அதுவே அவரை கடுமையாக விமர்சிக்கப்படவேண்டியவராக ஆக்கியிருக்கிறது.

ஜெயலலிதா ஒருவகையில் பரிதாபத்துக்குரியவர். இன்னொருவகையில் கடுமையாக விமர்சிக்கப்படவேண்டியவர். இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் அவருக்கு நேர்ந்தவை அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகின்றன. அவராகச் செய்தவை (அல்லது அப்படி நம்ப முடிந்தவை) அவரை விமர்சிக்க வைக்கின்றன.

பாலியல் ஒடுக்குமுறைகள் நிறைந்த திரையுலகில் இருந்துவந்தவர் என்றவகையில் அவர் மிகவும் பரிதாபத்துக்குரியவர். ஆனால், அந்தப் புகழின் மூலம் கிடைத்த அரசியல் அதிகாரத்தை முழுவதுமாக வீணடித்தவர் என்றவகையில் கடுமையாக விமர்சிக்கப்படவேண்டியவர்.

திரையுலகில் அவர் பட்ட வேதனைகள் ஆண் வர்க்கத்தின் மீது அவருக்கு தீரா வன்மத்தை ஏற்படுத்தியது நியாயமான விஷயமே. ஆனால், அவர் அதற்கு ஆற்றிய எதிர்வினைதான் மிகவும் மலினமானதாக, சொந்தப் பழிவாங்கலாகக் குறுகிவிட்டது.

உண்மையில் அரசியல் அதிகாரம் கிடைத்ததும் அவர் திரையுலகில் பெண்களுக்கு இழைக்கப்பட்டுவரும் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி எடுத்திருக்கவேண்டும். திரையுலகம் மட்டுமல்ல பெண்கள் எங்கெல்லாம் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் அவர்களுடைய உரிமையை நிலைநாட்ட அவர் முயற்சி எடுத்திருக்கவேண்டும். ஆனால், அவரோ தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்குத் தங்கம், மாணவிகளுக்கு இலவச சைக்கிள் என மேலோட்டமான திட்டங்களோடு முடங்கிவிட்டார். இவையெல்லாம் எந்தவொரு அரசும் செய்திருக்க முடிந்த எளிய செயல்மட்டுமே. ஜெயலலிதா போன்று வாழ்க்கை அனுபவங்கள் பெற்றவர் செய்திருக்கவேண்டியவை ஏராளம்.

தனது அமைச்சரவையில் இடம்பெற்ற ஆண்களை அவமானப்படுத்துவதில் காட்டிய அக்கறையில் நூறில் ஒரு பங்கையாவது திறமை வாய்ந்த பெண்ணையவாதிகளை, பெண் நிர்வாகிகளை தனது அமைச்சரவையில் இடம்பெறச் செய்வதில் காட்டியிருக்கவில்லை. ஆணாதிக்கத்துக்கு மாற்று பெண்ணாதிக்கமல்ல... ஆண் பெண் சமத்துவம்தான். அந்தப் புரிதல் ஜெயலலிதாவுக்கு இருந்திருக்கவில்லை. குறைந்தபட்சம் பெண்களுக்கு முன்னுரிமை, பெண்களுக்கான பிரச்னைகளில் போராடுதல் என்பதையாவது அவர் செய்திருக்கலாம். ஆண் எம்.எல்.ஏ., எம்பிக்களை அவமானப்படுத்துவது, எம்.ஜி.ஆர்.விசுவாசிகளை ஓரங்கட்டுவது, ஊடகங்களை துச்சமாக மதிப்பது என அவர் நடந்துகொண்டார். பெண் வாக்காளர்களோ ஒரு பெண் எவ்வளவு கம்பீரமாக ஆண்களைப் பந்தாடுகிறாள் என்று தொடர்ந்து போலிப் பெருமிதத்தில் ஆழ்ந்து தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப் போட்டுகொண்டனர். தெருவுக்குத் தெரு திறக்கப்பட்ட சாராயக்கடைகளில் குடித்து அழிந்த தனது மகன்களையும் கணவன்களையும் தந்தைகளையும் பற்றி எந்தவொரு நினைப்பும் இன்றி அதற்குக் காரணமான ஜெயலலிதாவை பெண்கள் ஆதரித்தது படு கேவலமான செயலே. வெகுளித்தனம் என்பது முட்டாள்த்தனமாகவும் கேவலமானதாகவும் மாறிய தருணம்.

மகாமகப் படுகொலை, ஜெயேந்திரர் மீதான பொய் வழக்கு, சந்திரலேகா மீதான திராவகத் தாக்குதல், பாலு ஜுவல்லர்ஸ் அதிபர் போன்றவர்களின் கொலைகள், ஆடம்பரத் திருமணம், பூடகமான வாழ்க்கை, தாங்கமுடியாத அளவுகுத் தலைவிரித்தாடிய லஞ்ச ஊழல், கொடியங்குளம், பரமக்குடி போன்ற போலீஸ் அராஜகம், கடைசி சில வருடங்களில் முடங்கிய அரச நிர்வாகம், புயல் நேர நிர்வாகச் சீர்கேடுகள், ஈழத் தமிழர் விவகாரத்தில் ஆடிய அரசியல், கடந்த ஓராண்டாக இந்து இயக்கங்களுக்கு எதிராக நடந்து வந்த வன்முறை வெறிச்செயலை முழுமையாக ஆதரித்து நின்றமை என அராஜகங்களாலும் நிர்வாகச் சீர்கேடுகளாலும் துரோகங்களாலும் நிறைந்ததுதான் ஜெயலதாவின் ஆட்சிகாலம்.

தமிழக நீர்நிலைகளைத் தூர்வாரி, மழைநீரைச் சேகரித்து, சொட்டு நீர்ப்பாசனம் போன்றவற்றை அறிமுகப்படுத்தி, தடுப்பணைகள் கட்டி, விளைநிலங்களைப் பாதுகாத்து, விளைபொருட்களுக்கு நல்ல விலையைத் தந்து விவசாயத்தைப் பாதுகாத்திருக்கவேண்டிய தமிழக அரசுகள் அதைச் செய்யாமல் இருப்பதன் பழியில் பாதிக்கு மேல் ஜெயலலிதாவுக்கும் சேரத்தான் வேண்டும்.

எம்.ஜி.ஆர்., கருணாநிதியால் முன்னெடுக்கப்பட்ட ஆங்கில வழிக் கல்வியை மாற்றியமைக்க எதுவும் செய்திருக்கவில்லை. மற நிலையத்துறை செய்யும் முறைகேடுகளைத் தட்டிக்கேட்கவில்லை. இலவசங்கள் மூலம் எளிய மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி வாக்குகளைப்பெற்ற கயமை, உழவர் சந்தை, சமத்துவபுரம் போன்ற முயற்சிகளை முடக்கியது ஆகியவற்றில் பெரும்பங்கு தி.முகவுக்குத்தான் உண்டு என்றாலும் ஜெயலலிதாவுக்கும் கணிசமான பங்கு அதில் உண்டு.

*

No comments:

Post a Comment