Tuesday 20 September 2016

தமிழர்கள் தமிழர்களும் அல்ல..!

தமிழர்கள் இந்துக்கள் அல்ல... தமிழர்கள் இந்தியர்கள் அல்ல... இவை உண்மையென்றால் இவற்றைவிட பேருண்மை ஒன்றும் இருக்கிறது : தமிழர்கள் தமிழர்களும் அல்ல..!

ஏனென்றால் தமிழ் நாட்டில் பிராமணர்கள் உண்டு, பிள்ளைமார் உண்டு, முதலியார் உண்டு, செட்டியார் உண்டு, தேவர் உண்டு, வன்னியர் உண்டு, கவுண்டர் உண்டு, பள்லர் உண்டு, பரையர் உண்டு, வண்ணார் உண்டு, அருந்ததியர் உண்டு, சக்கிலியர் உண்டு... இன்னும் பலர் உண்டு... தமிழர் யாரும் கிடையாது இந்துக்களும் இந்தியர்களும் கிடையாது என்பதைப் போலவே.

ஒவ்வொரு சாதியும் ஒவ்வொருவிதமான வாழ்க்கைப் பார்வை, வாழ்க்கை முறை, வாழ்விடம் என அனைத்திலும் தனித்தன்மைகொண்டவர்கள் தமிழர் என்ற அடையாளத்தை அவர்கள் மேல் திணிப்பது நிச்சயம் தவறுதான் இந்து, இந்திய அடையாளத்தைத் திணிப்பது போலவே.


தமிழ் நாட்டில் ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் இன்னொரு சாதியினரைத் திருமணம் செய்துகொள்வதில்லை. சொற்ப விதி விலக்குகள் நீங்கலாக.

தமிழர்களின் பண்டிகைகளான பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு போன்றவற்றை தமிழ் நாட்டில் இருக்கும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கொண்டாடுவதில்லை. அதைவிட இஸ்லாமிய, கிறிஸ்தவர்களின் பண்டிகைகளை மதம் மாறாத தமிழர்கள் கொண்டாடுவதில்லை.

தமிழர்கள் நேற்றுவரை குறுநிலமன்னர்கள், முப்பெரும் வேந்தர்கள் என தனித்தனியாகப் பிரிந்து தமக்குள் கொன்றும் செத்தும் வாழ்ந்த மக்கள் திரளே... பிற இந்திய மொழி அரசுகளுடன் சண்டையிட்டதைவிட தமக்குள் சண்டையிட்டுக் கொண்டதே அதிகம்.

மொழி தமிழர்களை என்றுமே இணைத்திருக்கவில்லை. ஏனென்றால் அனைவர் பேசும் தமிழ் மொழியும் ஒன்று அல்ல. இன்று ஒரு வட்டார மொழியில் எழுதப்படும் எந்தவொரு கதையையவது நாவலையாவது வேறொரு வட்டாரத்தைச் சேர்ந்தவரால் அருஞ்சொற்பொருள் தராமல் வாசித்துவிட முடியாது. குமரித் தமிழில் ஆரம்பித்து நெல்லைத் தமிழ், மதுரைத் தமிழ், கொங்கு தமிழ், சென்னைத் தமிழ் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வட்டார தனித்தன்மையைக் கொண்டவை. உரை நடை பொதுத் தமிழ் என்பது முழுக்கவே வட்டார அழகுகளையும் தனித்தன்மைகளையும் அழித்து உருவாக்கப்பட்ட மொழியே.

தமிழர்களின் பாரம்பரிய இலக்கிய நூல்களில் பெரும்பாலானவை இந்து மத புராணங்களைத் தழுவி அமைந்தவையே.

தமிழர்களின் வழிபாட்டு மையங்கள் என்பவை இந்து ஆலயங்களே.

வர்க்கரீதியாகப் பார்த்தால் ஏழைத் தமிழர்கள் வேறு பணக்காரத் தமிழர்கள் வேறு. உண்மையில் இதுவே சாதி தாண்டி ஓடும் அதி உண்மையாக இருக்கிறது.

தமிழர்களின் தனித் தன்மை என்று சிலவற்றைப் பட்டியலிட்டு இந்தியாவில் இருந்தும் இந்து மதத்தில் இருந்தும் பிரிக்க முடியுமென்றால் அதே அளவுகோலைப் பயன்படுத்தினால் தமிழர் என்று ஒரு இனம் இல்லை என்ற உண்மையையும் ஒருவர் வந்தடைய முடியும். தமிழர்களை பிரிக்கும் விஷயங்களைப் புறமொதுக்கிவிட்டு ஓர் ஒற்றுமையை அவர்களிடையே ஏற்படுத்த முடியுமென்றால் அதை அடிப்படையாக வைத்து இந்து, இந்திய ஒற்றுமையையும் உருவாக்க முடியும். உருவாக்க வேண்டும்.

இந்தியாவின் இன்றைய மற்றும் எதிர்கால பலங்களில் ஒன்று அதன் இளைய தலைமுறை. அடுத்த இன்றும் சரி வரும் 25 ஆண்டுகளிலும் சரி இந்தியாவில் படித்து முடித்துவிட்டுவரும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகப் பெருமளவில் இருக்கப்போகிறது. அந்த சக்தியை உரிய கல்வித் திறமையைப் பூட்டி உரிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிப் பயன்படுத்தினால் இந்தியா உலக அரங்கில் மேலான இடத்தை அடைய முடியும். இந்தியாவில் இந்த விஷயங்களைப் புரிந்துகொண்டு ஆக்கபூர்வ முயற்சிகளை எடுப்பவர்கள் அஞ்சும் வகையில் இதே இளைஞர் திரளை அடிப்படைவாதம் நோக்கியும் வன்முறை நோக்கியும் பிரிவினை நோக்கியும் வழி நடத்தும் சக்திகள் பலம் பெறத் தொடங்கிவிட்டிருக்கின்றன.

ஜெ.என்.யு. புகழ் கன்னையா குமாரில் ஆரம்பித்து நம் திலீபன் மகேந்திரன் வரை இளைய தலைமுறை மூளைச் சலவை செய்யப்பட்டுவிட்டிருக்கின்றன. இள வயது என்பது களி மண் போன்றது. நாம் என்னவிதமாக வனைய விரும்புகிறோமோ அதன்படி அழகாக வளைந்து கொடுக்கும். மண்ணெண்ணையை ஊற்றிக்கொள்.. எப்படியும் காப்பற்றிவிடுகிறோம் என்று சொல்லி உசுப்பேற்றிவிட்டால் போதும்... சமத்தாக ஊற்றிக்கொண்டுவிடும். காப்பாற்றுவதாகச் சொன்னவர் கால் பிடறியில் பட ஓடுகிறாரே என்று சுதாரிப்பதற்குள் தீ உடலைப் பொசுக்கிவிடும்.

இலங்கையில் இப்படியான செயல்பாடுகள் அருமையாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன. அங்கே தனி நாடு கனவுகள் நிராசையானதும் இங்கே தனிநாடு கனவுகள் துளிர்விடத் தொடங்கியிருக்கின்றன. இலங்கையை எரித்து முடித்திருக்கும் நெருப்பில் இருந்து இரண்டு மெழுகுவர்த்திகள் பற்றவைக்கப்பட்டு தமிழகத்துக்கு அணையாமல் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இறையாண்மையைக் காக்கிறேன் என்ற போர்வையில் இலங்கை அரசு மேற்கொண்ட வன்முறைகளை இந்திய அரசும் முன்னெடுக்க அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. இன்று தமிழகத்தில் பற்றவைக்கப்பட்டிருக்கும் சிறு பொறி நாளை ஏதேனும் போராட்டக்காரர்களை இந்திய மத்திய அரசுக் காவல் படை சுட்டு வீழ்த்தினாலோ இந்திய ராணுவ, கடற்படை, வான் வழிப் படையை கலவரக்காரர்கள் தாக்கினாலோ அனைத்துக் கூரைகளுக்கும் பரவத்தொடங்கிவிடும். அதைத் தடுத்து நிறுத்துவது கடினம்.

ஏனென்றால், பிரச்னையை சிறிதாக இருக்கும்போதே அடக்க நினைக்கிறேன் என்ற எண்ணத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, ராணுவம் மூலம் ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் தமிழர்களை இந்தியா ஒடுக்குகிறது என்ற வாதம் மேலும் வலுப்பெறவே செய்யும். பரமக்குடியிலும் வாச்சாத்தியிலும் இன்னபிற பல இடங்களிலும் தமிழக காவல்துறை செய்த அராஜகங்களை வைத்து தமிழ் நாட்டில் / தமிழ் இனத்தில் இருந்து பிரிந்து செல்கிறேன் என்று ஒருவர் சொல்ல முடியுமே.. இந்தியர் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தாத, ஐந்தாண்டு மட்டுமே ஆட்சியில் இருக்கப் போகும் ஒரு மத்திய அரசு செய்யும் வன்முறையை வைத்து இந்தியாவில் இருந்து ஏன் பிரிந்துபோகவேண்டும் என்ற கேள்விக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போய்விடும். மூளையை உணர்ச்சி வென்றுவிடும்.

அதிலும் இன்றைய இளைய தலைமுறை காதல் நிராகரிப்புக்கே அருவாளைத் தூக்கும் அளவுக்கு மன நிலை பிறழத் தொடங்கியிருக்கும் நிலையில் போலிப் பெருமித பிராந்திய தேசிய இலக்குகள் கற்றுக்கொடுக்கப்பட்டால் விளக்கைத் தேடி ஓடி விழுந்து இறக்கும் விட்டில் பூச்சிகளாக விழுந்து தாமும் இறப்பதோடு பெரும் இருளையும் கொண்டுவந்து சேர்த்துவிடும். நம் தலைவர்களோ வீர வணக்கம் செய்யக் கைகளைத் தூக்கிக்கொண்டு துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மணல் லாரியைத் தடுத்து நிறுத்து அது வீரம்... சாராயக் கடையை அடிச்சு உடை அது வீரம்... தய் மொழிக் கல்வி கற்றுத் தராத பள்ளியை மூடு அது வீரம்... கேவலம் ரெண்டு வைக்கோலை போட்டா அடங்கிப் போகற அப்பாவி மாட்டை அடக்கறதா வீரம் என்று கேட்டால் இந்திய அரசு தமிழ் கலாசாரத்தை ஒடுக்குவதாகக் கிளர்ந்தெழுகிறார்கள். ஜல்லிக் கட்டு நடத்தப்படலாமா கூடாதா என்பது வேறு விஷயம். ஆனால் அதை நடத்தவிடாமல் தடுக்க எடுக்கும் முயற்சிகள் தமிழ் கலாசாரத்தை அழிக்க நினைக்கும் இந்திய ஏகாதிபத்திய சதியாகப் பார்ப்பதில் உண்மை இல்லை.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலுமே பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. வட கிழக்கு மாநிலங்களில் தொழில் வளர்ச்சி இல்லை. பிகார், ஒருசா ஆந்திராவில் இருந்து கூலி வேலை தேடி சாரை சாரையாக தமிழகம் வருகிறார்கள். கேரளாவினர் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து சென்றுதான் வயிற்றைக் கழுவியாக வேண்டியிருக்கிறது. ஆனால், இவர்கள் யாரும் இந்தியாவில் இருப்பதால்தான் இந்தப் பிரச்னை என்று சொல்வதில்லை. இத்தனைக்கும் அந்த மாநிலங்கள் அனைத்தையும் விட தமிழகம் முன்னணியில் இருப்பதற்கு இந்திய மத்திய அரசின் பங்களிப்பு கணிசமாக இருந்திருக்கிறது. கர்நாடகாவில் தமிழர் என்பதால் அடிக்கிறார்கள் என்று இன்று சொல்பவர்கள் அதே கர்நாடகாவில் தமிழர் என்பதால்தான் வேலை வாய்ப்பு பெற்று வாழ்வாங்கு வாழும் நபர்களைப் பற்றி பேசுவதே இல்லை.


இலங்கையும் தன் நாட்டுக்குள் தமிழர் பிரச்னை தலை தூக்காமல் இருக்கவேண்டுமென்றால் இந்தியாவில் தமிழர் பிரச்னை தலை தூக்க வேண்டும். தமிழ் தேசியவாதிகள் எல்லாரும் இதுவரை இலங்கையை மையமாகக் கொண்டு ஆட்டம் போட்டதுபோல் தமிழகத்தில் ஆடத் தொடங்கினால் நாம் நிம்மதியாக ச்ண்டை போடாதீர்கள்.. அமைதியாக இருங்கள் என்று அறிவுரை சொல்லிக் கொண்டு இருந்துவிடலாம் என்று நினைத்து தமிழகத் தமிழ் தேசியவாதிகளுக்கு தன்னுடைய இலங்கைத் தமிழ் உளவாளிகள் மூலம் பண உதவியில் இருந்து அனைத்தும் செய்துவருகிறது. பஞ்சாப், காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் போல தமிழகத்தையும் இன்னும் ஐம்பது ஆண்டுகள் பின்னிழுத்துச் செல்லும் வேலையை அது தொடர்ந்து செய்யும். புலம் பெயர்ந்த தமிழர்களும் ஈழத்தில் விட்டதை தமிழகத்தில் பிடித்துவிடும் முனைப்பில் ஜோதியில் ஐக்கியமாகக்கூடும்.

இந்திய அதிகார, அரசு வர்க்கத்துக்கு இந்த அபாயம் உறைத்திருப்பதாகத் தெரியவில்லை. வேலை வாய்ப்புகளைப் பெருக்குதல், கல்வி வசதிகளைப் பெருக்குதல் என இளைய தலைமுறையை முறையாக வழி நடத்தி இந்திய தேசிய உணர்வுடன் வளர்த்தெடுக்காவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு நம் அருகிலேயே ஒரு வரலாறு உருவாகி முடிந்திருக்கிறது.

வரலாறு திரும்பக்கூடாது... அதுவும் இத்தனை சீக்கிரமாக.

No comments:

Post a Comment