Thursday 22 September 2016

அதையும் தாண்டிப் புனிதமானது... (3)

ப்ளாஷ்பேக் முடிந்து அடுத்ததாக பண்ணைப்புர கிராமத்துக்குக் கதை நகர்கிறது. அங்கு அறுவடை காலம் வருகிறது. நாயகன் குரங்கும் அறுவடைக்குச் செல்கிறது. ஆனால், அது தாறுமாறாக வயலில் இறங்கி பயிர்களை மிதித்து அதற்குத் தெரிந்தவகையில் அறுவடை செய்கிறது. "தம்பிக்கு எந்த ஊரு' என்று கேட்டு ஒருவர் நாயகக் குரங்குக்கு அருவாள் பிடித்து கதிர் அறுக்கக் கற்றுத் தருகிறார். அன்று மாலைக்குள் கற்றுக்கொண்டு அருமையாக அறுத்துக் கட்டுகிறது. பண்ணையார் மர நிழலில் குடை பிடித்தபடி அமர்ந்துகொண்டு எல்லாரையும் வேலை வாங்குகிறார்.

நீங்க வயல்ல இறங்கி அறுவடை செய்ய வேண்டியதுதான என்று நாயகன் குரங்கு அவரைப் பார்த்துக் கேட்கிறது.

பண்ணையார் சிரித்தபடியே காலெல்லாம் சேறாகிடுமே என்று சொல்லிச் சமாளிக்கிறார்.

அறுத்து முடிச்சிட்டு எல்லாரையும்போல ஆத்துல இறங்கிக் கழுவிக்கிடவேண்டியதுதான என்று மடக்குகிறது.

அது சரிதான்... நாளைக்கு இறங்கி அறுக்கறேன் என்று விளையாட்டாகச் சொல்லி மற்றவர்களை வேலை வாங்குகிறார்.

மாலையில் கூலி கொடுக்கும் நேரம் வருகிறது. ஒவ்வொருவருக்கும் படியால் அளந்து போடுகிறார்கள். நாயகன் குரங்குக்கும் ஒரு கூடை நிறைய தானியம் கிடைக்கிறது. இது முழுசும் உனக்குத்தான் என்று பண்ணையார் சொல்கிறார். நாயகக் குரங்குக்கு ஒரே சந்தோஷம்... ஆசையாக அந்த கூடையை அணைத்துக்கொள்கிறது. அதன் பிறகு மலைபோல் குவித்து வைத்திருக்கும் நெல்லை மூட்டைகட்டி வண்டியில் ஏற்றுகிறார்கள். நாயகன் குரங்கு அதை வியப்புடன் பார்க்கிறது. அனைத்து மூட்டைகளும் ஏற்றிய பிறகு பண்ணையார் அவற்றின் மேலே ஏறி உட்கார்ந்து, யானைச் சவாரி செய்வதுபோல் கம்பீரமாகப் புறப்படுகிறார்.

நாயகன் குரங்குக்கு அநீதி நடக்கிறதென்று மூளைக்குள் விளக்கு எரிகிறது. பொங்கறதுக்கான நேரம் அது. நாலு சம்மர் சால்ட் அடித்து மரக்கிளைகளில் தொங்கியபடிச் சென்று பண்ணையார் போகும் மாட்டுவண்டியைத் தடுத்து நிறுத்துகிறது. கையில் இருக்கும் கதிர் அருவாளால் மூட்டைகளைக் கட்டிய கயிறை அவிழ்த்துவிட்டு கூலியாட்களை அழைத்து எடுத்துக்கொள்ளச் சொல்கிறது.

நாள் பூரா குனிஞ்சு நிமிர்ந்து அறுவடை செஞ்ச நமக்குக் கூடை நெல்லு.... வரப்போரம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தவருக்கு இத்தனை மூடை நெல்லா என்று கேட்கிறது.

பண்ணையாருக்குக் கோபம் வருகிறது. மனிதக் குரங்கைச் சாட்டையால் அடிக்கிறார். அந்தச் சாட்டையை அவரிடமிருந்து பிடுங்கி அவரைக் கீழே தள்ளிவிடுகிறது.

"நான் ஆணையிட்டால்

அது நடந்துவிட்டால்

இந்த உலகத்தில் ஏழைகள் இருக்கமாட்டார்...

ஒரு துன்பமில்லை ஒரு துயரமில்லை

அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்...

ஒரு வேலை என்றால்

அதைக் கூடிச் செய்தால்

அதில் கிடைப்பதை அனைவருக்கும் பிரித்தளிப்பேன்

நான் உள்ளவரை

ஒரு துன்பமில்லை

யாரும் கண்ணீர் கடலிலே விழவேண்டாம்

- என்று கிழவியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துப் பாடுகிறது.

ஆனால், பாடல் முடிந்ததும் கூலித் தொழிலாளர்கள் அனைவரும் கீழே விழுந்த நெல் மூட்டைகளை மீண்டும் பண்ணையாரின் வண்டியில் ஏற்றி அவரையும் தோள் கொடுத்து மேலேற்றிவிட்டு போகச் சொல்கிறார்கள். மனிதக் குரங்குக்கு ஒன்றுமே புரியவில்லை.

அவர்களைத் தடுத்து நிறுத்தி ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்கிறது.

அந்த நிலம் அவருக்கு சொந்தம்... அதுல விளையறது எல்லாம் அவருக்குத்தான் சொந்தம் என்று சொல்கிறார்கள்.

நிலம் எப்படி ஒருத்தருக்கு சொந்தமாக முடியும்... காத்து, தண்ணி, ஆகாயம், நெருப்பு மாதிரி நிலமும் கடவுள் கொடுத்தது... எல்லாருக்கும்தான சொந்தம்.

அப்படியில்லை... மனுஷங்களுக்கு நிலம் சொந்தமாக இருக்கும் என்று ஏழைகள் சொல்கிறார்கள்.

அப்படின்னா உங்களுக்கு சொந்தமான நிலம் எங்க இருக்கு... அதுல போய் உழைச்சு கிடைக்கறதை எடுத்துக்க வேண்டியதுதான..?

கூலித் தொழிலாளர்கள் தலை குனிந்து நிற்கிறார்கள்.

நிலம் எல்லா மனிதர்களுக்கும் சொந்தமா இருக்காது. சிலருக்கு மட்டுமே சொந்தம்... மத்தவங்களுக்கு உழைப்பு மட்டுமே சொந்தம்.

இது என்ன அநியாயமா இருக்கு என்று நாயகன் குரங்கு அதிர்ச்சியில் உறைகிறது.

நீங்க இத்தனை பேர் இருக்கீங்களே அவர் ஒருத்தர்தான இருக்காரு. அவரை அடிச்சிட்டு நீங்களே எடுத்துக்க வேண்டியதுதான.

அடிச்சுப் பிடுங்கறது விலங்கு குணம். நாங்க நாகரிகமானவங்க... அதெல்லாம் செய்யமாட்டோம்.

எது நாகரிகம்... ஒருத்தரே எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போறதும் அதை மத்தவங்க கை கட்டி வேடிக்கை பாக்கறதும்தான் நாகரிகமா?

இதெல்லாம் உனக்குச் சொன்னா புரியாது என்று சொல்லி கூலித் தொழிலாளர்கள் மனிதக் குரங்கைப் போகச் சொல்கிறார்கள்.

நாயகன் குரங்கு மவுனமாக சூரியன் மறைந்து கொண்டிருக்கும் தொடுவானத்தை நோக்கித் தனியாகத் தளர்ந்து நடந்து செல்கிறது. மெள்ள இருள் வந்து சூழ்கிறது.

இரவு தமன்னாவுக்கு போன் போட்டுப் பேசுகிறது.

கொள்ளைக்காரங்க கொள்ளையடிச்சுட்டுப் போனதைத் தடுத்தேன். எல்லாரும் என்னைத் தலைல தூக்கிவெச்சுக் கொண்டாடினாங்க... இப்போ ஒரு பண்ணையாரு கொள்ளையடிச்சிட்டுப் போறதைத் தடுத்தேன்... ஆனா எல்லாரும் என்னைத் திட்டறாங்களே.

அது அப்படித்தான்... ஒரு பண்ணையாரு பண்ணையாரா இருக்கறார்ன்னா பண்ணையாள்களோட முழு சம்மதமும் அதுக்கு இருக்கு. அத்தனை கூலித்தொழிலாளர்களுக்குமே பண்ணையாராகணும்னு ஆசை இருக்கு... அதனால பண்ணையாரா ஒருத்தர் இருக்கறதை அவங்க தப்பா நினைக்கறதில்லை. ஆனா, யாருக்குமே துப்பாக்கியைத் தூக்கிட்டு வந்து கொள்ளையடிக்கறது பிடிக்காது. அதனால அவங்களை அடிச்சுத் தொரத்தராங்க.

ஆக, ஒருத்தர் கொள்ளையடிக்கறாரா இல்லையாங்கறது பிரச்னையில்லை. எப்படிக் கொள்ளையடிக்கறார்ங்கறதுதான் முக்கியம் இல்லையா..?

ஆமாம்தான்... எல்லாரும் சேர்ந்து உருவாக்கியிருக்கும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுக் கொள்ளையடிக்கணும். அதுதான் நியாயம்... அதுதான் தர்மம்.

எங்க உலகத்துல எல்லாம் இப்படி நடக்கவே செய்யாது தெரியுமா..? எங்களை விலங்குன்னும் நாகரிகமில்லா ஜந்துன்னும் ஐந்தறிவு படைச்சவங்கன்னும் கேவலமா பேச இந்த மனுசங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு... ஐ ஜஸ்ட் ஹேட் மேன்கைண்ட்.

நானும் அந்த கூட்டத்துல ஒருத்திங்கறதை மறந்துடாத...

நீ ஒரு மனுஷக் குரங்கை காதலிக்கறவளாச்சே... அதனாலயே அவங்கள்ல இருந்து நீ வித்தியாசமானவ... உசந்தவ... உன் கிட்ட இருக்கற நல்ல மனசு அவங்க யார் கிட்டயும் இல்லை தமன்னா.

உன்னோட காதலின்னா சும்மாவா... அது சரி... அங்க நிறைய பொண்ணுங்க இப்படி அப்படின்னு திரிவாளுங்க... ஏதாவது சில்மிஷம் பண்ணின அவ்வளவுதான்.

செய்தி கிடைச்சு நீ புறப்பட்டு வர்றதுக்குள்ள அவளுக்கு நாலு புள்ளை பொறந்துடுமே..

பொறக்கும் பொறக்கும்... அதுக்குத்தான் சத்தியம் வாங்கியிருக்கேனே... வேற எந்தப் பொண்ணையாவது தப்பான எண்ணத்தோட பார்த்தா ராத்திரி தூங்கும்போது சாமி உன் கண்ணைக் குத்திடும். ஜாக்ரதை.

நான்தான் படுத்துட்டு லைட்டை அணைச்சதும் தலை மாத்திப் படுத்துப்பேனே... சாமி வந்து கண்ணுன்னு நினைச்சுக் குத்தற இடத்துல என் காலு தான இருக்கும்.

சாமிக்கு இருட்டுலயும் கண்ணு தெரியும்... நீ எப்படி திரும்பிப் படுத்தாலும் கரெக்டா கண்ணைப் பார்த்து குத்திடும். ஒழுங்கா மரியாதையா நடந்துக்கோ.

இருவரும் விடியும்வரையில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இரவு சாலையில் போக்குவரத்து மெள்ள மெள்ளக் குறைந்து முற்றிலும் நின்று பிறகு அதிகாலையில் மீண்டும் வாகனங்கள் சரசரவெனப் போக ஆரம்பிக்கும்வரை டி.வி.யில் மிட் நைட் மசாலாக்கள் முடிந்து சுப்ரபாதம் தொடங்கும் வரையில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அப்பறம்... அப்பறம்... என இருவரும் பேசப் பேச பின்னணியில் "சங்கீத ஸ்வரம்... ஏழே கணக்கா... இன்னமும் இருக்கா' என்ற பாடல் மென்மையாக ஒலிக்கிறது.



***

No comments:

Post a Comment