Thursday 22 September 2016

அதையும் தாண்டிப் புனிதமானது... (2)

தமன்னா மனிதக் குரங்குகளின் உலகுக்குச் சென்று சேர்கிறார். அங்கு அவை காட்டில் மரத்தை வெட்டித் தோளில் போட்டுத் தூக்க முடியாமல் தூக்கிச் செல்கின்றன. தமன்னா அந்த மரத்தடிகளைக் கீழே போடச் சொல்கிறார். மனிதக் குரங்குகள் அவள் சொல்வதைக் கேட்காமல் போகின்றன. தமன்னா கீழே கிடக்கும் இரண்டு மூன்று மரத்தடிகளை, காட்டுக் கொடிகளால் கட்டி அதை பக்கத்தில் ஓடும் நதியில் தள்ளுகிறார். பிறகு அதன் மேல் ஏறி நின்றுகொண்டு படகுபோல் துடுப்பால் தள்ளியபடியே வருகிறார். மரத்தடிகளைத் தூக்கியபடியே செல்லும் மனிதக் குரங்குக் கூட்டம் அதைப் பார்த்ததும் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கின்றன. பிறகு எல்லா குரங்குகளுமே தமது தோளில் இருக்கும் தடியை ஆற்றில் போட்டு அதன் மேல் ஏறி உட்கார்ந்து தமது கிராமத்தை அடைகின்றன. அங்கிருப்பவர்களுக்கு மரத்தடிகளை இத்தனை சீக்கிரமாகக் கொண்டுவந்ததைப் பார்த்ததும் ஒரே ஆச்சரியம். தமன்னாதான் அந்த யோசனையைச் சொன்னாள் என்று நாட்டாமைக் குரங்கிடம் சென்று அறிமுகப்படுத்துகிறார்கள். அவர்தான் தன் ஆசை நாயகனின் அப்பா என்பது தமன்னாவுக்குத் தெரிகிறது. காலில் விழுந்து வணங்குகிறார்.

தமன்னாவுக்கு ஒரு குகையை ஒதுக்கிக் கொடுக்கிறார்கள். தனது பெட்டி படுக்கைகளை அங்கு வைத்துவிட்டு வருகிறாள். தோழி மனிதக் குரங்குகள் கிலுகிலுவெனச் சிரித்தபடியே ஒரு அருவிக்கு அழைத்துச் செல்கின்றன. அங்கு நூல் போல் தண்ணீர் விழுந்துகொண்டிருக்கிறது. குரங்குகள் எல்லாம் அருவிக்கு முன்னால் தேங்கி நிற்கும் குட்டையில் விழுந்து குளிக்கின்றன. தமன்னா சில குரங்குகளை அழைத்துக்கொண்டு அருவியின் மேல் பகுதிக்குச் சென்று சில மரத்தடிகளையும் பாறைகளையும் போட்டு சிதறலாக விழும் நீரைத் தடுத்து ஃபோர்ஸாக விழ வைக்கிறார். கீழே இறங்கிவந்து அருவியில் குளித்துக் காட்டுகிறார்.

"சின்னச் சின்ன ஆசை...

சிறகடிக்க ஆசை...

ஜூவில் இருக்கும் குரங்குகளைத்

திறந்துவிட ஆசை' என்று பாடியபடியே ஆடுகிறார். குரங்குகளும் கூட்டு சேர்ந்துகொண்டு ஆடிப்பாடுகின்றன. குளித்து முடிந்ததும் அனைவரும் சாப்பிட்டு முடித்து தத்தமது குகைகள், மரங்களுக்குச் செல்கிறார்கள். தமன்னா தனது குகைக்குள் செல்கிறார். அந்த குகையின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கையில் வெளியே பவுர்ணமி நிலா தென்படுகிறது. ஃபிளாஷ் பேக்கில் மனிதக்குரங்குடனான காதல் காட்சிகள் விரிகின்றன.

***

இதுபோல் ஒரு பவுர்ணமி நாளில் நெடுஞ்சாலையில் ஸ்கூட்டியில் வரும்வழியில் ஒரு லாரி தமன்னாவை இடித்துத் தள்ளிவிட்டுப் போய்விடுகிறது. ரத்தம் சொட்டச் சொட்ட அவர் அந்தப் பக்கம் போகும் வாகனங்களில் உதவி கேட்க ஒருவரும் நிறுத்தாமல் போய்விடுகிறார்கள். அந்த நேரத்தில் நம் மனிதக் குரங்கு அங்கு வருகிறது. இவள் மேல் இரக்கப்பட்டு ஒன்றிரண்டு வண்டிகளை நிறுத்தி உதவி கேட்கிறது. யாரும் உதவி செய்யாமல் போய்விடவே, அடுத்ததாக வரும் காரில் இருப்பவரை அடித்து பின்னால் உட்கார வைத்துவிட்டு தமன்னாவைக் கைதாங்கலாக வண்டியில் ஏற்றிக்கொண்டு 100 கி.மீட்டர் வேகத்தில் வண்டியை ஓட்டுக்கொண்டு மருத்துவமனையில் சேர்க்கிறது. நல்ல நேரத்துல கொண்டுவந்து காப்பாத்தினீங்க... இல்லைன்னா உயிர் போயிருக்கும் என்று டாக்டர் சொல்கிறார். இரண்டு மூன்று நாட்கள் தூங்காமல் கண்முழித்து, "கண்ணே கலைமானே' பாடல் ஒலிக்க அக்கறையாகக் கவனித்துக்கொள்கிறது.

டிஸ்சார்ஜ் ஆகும் நாள் காலையில் ஃபிளாஸ்கில் காப்பி வாங்கிக் கொண்டு வரும்வழியில் ஆஸ்பத்திரி வளாகத்தில் இருக்கும் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனைசெய்துவிட்டு விபூதி, குங்குமம் வாங்கிக்கொண்டு வருகிறது. விகல்பமில்லாமல் மனிதக் குரங்கு குங்குமத்தை எடுத்து தமன்னாவுக்கு இட்டுவிடுகிறது. குங்குமம் இட்டுவிட்டதும் கோவில் மணி கணீரென்று ஒலிக்கிறது. தமன்னாவுக்கு உள்ளுக்குள் இனம் புரியாத உணர்வு பரவுகிறது. மனதின் வயல் வெளியில் வெண்புறாக்கள் சிறகடித்துப் பறக்கின்றன. அருவிகள் ஜோவெனப் பொங்கிப் பாய்கின்றன.

இப்ப நீங்க பண்ணினதுக்கு அர்த்தம் தெரியுமா?

மனிதக் குரங்கு எதுவும் புரியாமல், "என்ன' என்று கேட்கிறது.

தமன்னா வெட்கத்தால் முகம் சிவந்து தலை குனிந்து, "ஒரு பொண்ணுக்கு ஒரு ஆண் குங்குமம் இட்டுவிட்டா அவளோட கணவன்னு அர்த்தம்'.

மனிதக் குரங்கு பதறியபடியே, "அப்படியா என்னை மன்னிச்சிடுங்க... நான் மனிதர்களோட உலகத்துக்கு இப்பத்தான் வந்து சேர்ந்திருக்கேன். உங்க பழக்க வழக்கங்கள் எல்லாம் எனக்குத் தெரியாது. தெரியாம இட்டுவிட்டுட்டேன். மன்னிச்சிடுங்க' என்கிறது.

தமன்னா சிரித்தபடியே, நான் தெரிஞ்சுதான் இட்டுக்கிட்டேன்.

என்ன சொல்றீங்க...

நீங்க என்னைக் காப்பாத்தினபோது உங்க மனிதாபிமானத்தைப் புரிஞ்சிக்கிட்டேன். வண்டியில ஏத்த மறுத்தவர் கிட்ட நீங்க நடந்துகிட்டதைப் பார்த்தபோது உங்க வீரத்தைப் புரிஞ்சிக்கிட்டேன். ராத்திரியும் பகலுமா கண் முழிச்சிப் பார்த்தபோது உங்க அன்பைப் புரிஞ்சிக்கிட்டேன்... இனிமே வாழ்ந்தா உங்களோடதான் வாழ்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

தப்பு பண்றீங்க... உங்க இடத்துல உங்க பாட்டி இருந்திருந்தாலும் இதையேதான் செஞ்சிருப்பேன். வீணா மனசுல கற்பனையை வளர்த்துக்காதீங்க.

நான் எந்தக் கற்பனையையும் வளத்துக்கலை... இது ஆண்டவனா பார்த்து போட்ட முடிச்சு. நான் ஏன் அன்னிக்கு விபத்துல சிக்கணும்... நீங்க ஏன் வந்து என்னைக் காப்பாத்தணும்... குங்குமத்தை ஏன் நீங்க வெச்சுவிடணும்... அது வைக்கும்போது கோவில் மணி ஏன் அடிக்கணும்.

குங்குமத்தைத் தெரியாம வெச்சிட்டேன்... அப்போ அடிச்சது கோவில் மணி இல்லை... குல்ஃபி ஐஸ் விக்கறவன் அடிச்ச மணி...

அதெல்லாம் எனக்குத் தெரியாது... ஒரு வேலை செய்யும்போது மணி அடிச்சா கடவுளோட ஆசீர்வாதம் இருக்குன்னு அர்த்தம். உங்களுக்கு நான்... எனக்கு நீங்க... இதை யாராலயும் மாத்த முடியாது.

உங்களுக்கு வந்திருக்கறது காதல் இல்லை... இன்ஃபாச்சுவேஷன். உங்களுக்கு என்னைப் பத்தி என்ன தெரியும்... நாம சந்திச்சு முழுசா மூணு நாள் கூட ஆகலை. மனசை அலைபாயவிடாதீங்க. அப்பா அம்மா பாத்து வைக்கற பையனை கல்யாணம் பண்ணிக்குங்க.

உங்களோட இந்த நிதானமும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு என்கிறார் தமன்னா வெட்கப்பட்டபடியே.

எனக்கென்னமோ உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னுதான் தோணுது. அடிபட்டதுல மூளைல ஏதோ நரம்பு பிசகி பைத்தியம் பிடிச்சிருக்குன்னு நினைக்கறேன்.

ஆமாம் எனக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கு... உங்க மேல பைத்தியம் பிடிச்சிருக்கு.

ஐய்யோ... என்னை விடுங்க... இது தெரிஞ்சுதான் ஒருத்தரும் காப்பாத்தாம போனாங்க போல இருக்கு.

இதைக் கேட்டதும் தமன்னாவின் முகம் வாடுகிறது. என் அன்பை நீங்க புரிஞ்சுக்கலைல்ல... உங்களை எப்படி வழிக்குக் கொண்டுவர்றதுன்னு எனக்குத் தெரியும் என்று சொல்கிறார்.

அது நடக்காது.

நடத்திக்காட்டறேன் என்று சவால்விடுகிறார் தமன்னா.

***

சில நாட்கள் கழித்து மனிதக் குரங்கு பஸ்ஸில் போகும்போது திடீரென்று டிராஃபிக் ஜாம் ஆகிறது. என்ன என்று எல்லாரும் எட்டிப் பார்க்கிறார்கள். அப்போது தமன்னா, மனிதக் குரங்கின் பக்கத்து சீட்டில் வந்து உட்காருகிறார்.

ஹாய்...

ஹாய்..!

என் கூட காஃபி சாப்பிட வா.

எனக்கு வேற வேலை இருக்கு.

ஆனா எனக்கு வேற வேலை இல்லையே.

அதுக்கு நான் என்ன பண்ண..? வேலையை நாமதான் தேடிக்கணும். அது நம்மளைத் தேடிவராது.

நீங்க உங்க வேலையைப் பாக்கணும்னா இந்த வண்டி புறப்பட்டாத்தான முடியும்.

ஆமாம். டிராஃபிக் சரியானதும் வண்டி புறப்படப்போகுது.

ஆனா, நீங்க காபி குடிக்க என் கூட வரலைன்னா டிராஃபிக் இன்னிக்கு சரியாகாதே.

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

சம்பந்தம் தானா உருவாகாது. நாமளா ஏற்படுத்திக்கணும்.

என்ன சொல்றீங்க?

நீங்க காபி குடிக்க வந்தாத்தான முன்னால டிராஃபிக் ஜாமை ஏற்படுத்திட்டிருக்கற என் வண்டியை நான் எடுக்கமுடியும். அப்பத்தான உங்க வேலைக்கு நீங்க போகமுடியும்.

சிறிது நேரம்மனிதக் குரங்கு பேசாமல் உட்கார்ந்திருக்கிறது. டிராஃபிக் நெரிசலாகி பைக், கார் ஹார்ன்கள் காதைத் துளைக்கின்றன.

அடுத்த காட்சி : இரண்டு பேரும் உட்லண்ட்ஸ் காஃபி ஷாப்பில் அமர்ந்திருக்கிறார்கள்.

இங்க பாருங்க...

பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்.

காதலுக்கு கண் இல்லைன்னு சொல்லிக் கேட்டுருக்கேன். இப்பத்தான் பாக்கறேன். உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கமுடியாது.

ஏன் உங்களுக்கு உலகத்துல யாராலும் தீர்க்க முடியாத வியாதி இருக்கா..?

அதெல்லாம் இல்லை.

கரையேத்த வேண்டிய அக்கா, தங்கைங்க, சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பொண்ணுங்க நிறைய இருக்காங்களா?

அதுவும் இல்லை.

உங்களுக்கு இடுப்புல தாலியைக் கட்டிட்டுச் சுத்திவர்ற முறைப்பொண்ணு இருக்கா?

இல்லை.

லிவ்-இன் டுகெதர் ரிலேஷன்ஷிப்தான் உங்களுக்கு பிடிக்குமா?

இல்லை...

சற்று குரலைத் தனித்து, ஆர் யு அ கை..?

ஐய்யோ...

அப்பாடா... அப்பறம் என்னதான் பிரச்னை?

ஏன்னா எனக்கு கல்யாணம் ஆகியிருச்சு.

சோ வாட்?

சோ வாட்டா?

அவங்களை டைவர்ஸ் பண்ணுங்க.

ஏங்க... நீங்க என்னதாங்க நினைச்சிட்டிருக்கீங்க..?

ஆமாம். சரியாச் சொன்னீங்க உங்களைத்தான் நினைச்சிட்டிருக்கேன்.

காதல்ங்கறது ரொம்ப விசேஷமானதுங்க... சிலர் அதைப் புனிதமானதுன்னு சொல்றாங்க... சிலர் அதைக் கத்திரிக்காய்ன்னு சொல்றாங்க... என்னைப் பொறுத்தவரை அது ஒரு புனிதமான கத்திரிக்காய்!

எனக்கும் அப்படித்தான் தோணுதுங்க...

ஒருத்தரை ஒரு நிமிஷம் பார்த்ததுமே அவங்க கூடவே ஓராயிரம் வருஷம் வாழணும்னு தோணனும்... ஓராயிரம் வருஷம் வாழ்ந்த மாதிரியும் தோணனும்.

சரியாச் சொன்னீங்க. எனக்கு உங்களைப் பார்த்ததும் அப்படித்தான் தோணிச்சுது.

ஒருத்தருக்கு மட்டும் அப்படித் தோணினாப் போதாது. ரெண்டுபேருக்குமே தோணனும். உங்களைப் பார்த்ததும் எனக்கு அப்படி எதுவும் தோணலைங்க.

தோணும்... போகப் போகத் தோணும்.

சரி... உங்க கிட்டப் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை. நான் வர்றேன் என்று சொல்லிவிட்டு மனிதக் குரங்கு புறப்படுகிறது. சிறிது தூரம் போனதும் சட்டென்று ஓடி வந்து தமன்னா முன்னால் உட்கார்ந்துகொள்கிறது.

தமன்னா ஆச்சரியத்துடன், "என்ன' என்று கேட்கிறார்.

ஐய்யோ கொஞ்ச நேரம் பேசாம இருங்க.

ஏன்...

எங்க அப்பா...

அப்பாவா... எங்க?

அதோ போறாரே...

அவரோட பேர் என்ன..?

அனுமந்த ராவ்.

தமன்னா உற்சாகமாக, ராவ்ஜி... அனுமந்த ராவ்ஜி...

அனுமந்தராவ் தன்னைக் கூப்பிடுவது யார் என்று புரியாமல் 'என்னம்மா' என்கிறார்.

இங்க வாங்கஜி... ஒரு கப் காஃபி சாப்டுட்டுப்போங்க.

இப்பத்தான்மா ஒரு ரவா தோசை, ஒரு மசால் தோசை சாப்பிட்டு முடிச்சு, ரெண்டு ஃபில்டர் காபி குடிச்சு முடிச்சேம்மா.

பரவாயில்லைஜி... உங்களைப் பார்த்தா இன்னும் ரெண்டு செட்தோசை, நாலுபூரி செட் சாப்பிட்டு இன்னும் ரெண்டு ஃபில்டர் காபி குடிக்கறவர் மாதிரி இருக்கீங்க... வாங்கஜி. இன்னொரு ரவுண்ட் ஆரம்பியுங்க.

அனுமந்தராவ் உற்சாகமாக வருகிறார். நாயகன் குரங்கு பதறியபடியே டேபிளுக்குக் கீழே போய் பதுங்கிக்கொள்கிறது.

காஃபி வருகிறது. தமன்னாவும் அனுமந்தராவும் சிரித்துப் பேசுகிறார்கள். நாயகன் டேபிளுக்கு அடியில் இருந்தபடி, 'ப்ளீஸ் காட்டிக்கொடுத்துடாத' என்று கெஞ்சுகிறது.

உங்களுக்கு குழந்தைங்க இருக்காங்களாஜி...

இருக்காங்கம்மா....

ஒரு பையன்... ஒரு பொண்ணு.

உங்களுக்கு பையன் இருக்காரா... ஒரே ஒரு பையனா... என்ன பண்றாங்கஜி.

காலேஜ்ல ஃப்ரஃபசரா இருக்கான்.

அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

இல்லையேம்மா.

கீழே குனிந்து, பொய்தான் சொல்லியிருக்கியா..? அப்போ என் ரூட் க்ளியர்தானா..?

யார் கிட்டம்மா பேசற.

கீழே குனிந்து, 'சொல்லட்டுமா'.

மனிதக் குரங்கு அஞ்சிநடுங்கி "வேணாம்' என்று கெஞ்சுகிறது.

அப்போ, ஐ லவ் யூ சொல்லு...

ஐ லவ் யூவா?

ஆமா... ஐ... லவ்... யூ..!

சொல்ல முடியாது...

முடியாதா... (மேலே நிமிர்ந்து) உங்க பையன் இப்போ எங்க இருப்பார்ன்னு சொல்ல முடியுமாஜி..?

அவன் காலேஜ்ல கிளாஸ் எடுத்திட்டு இருப்பான்.

அதான் இல்லை... அவனோட காதலிகூட ஏதாவது காஃபி ஷாப்ல உட்கார்ந்து கடலை போட்டிருப்பார். நீங்க வர்றதைப் பார்த்து டேபிளுக்குக் கீழ கூட ஒளிஞ்சிருக்கலாம்.

என் பையனா... ச்சேச்சே... அவன் அப்படியெல்லாம் செய்யவேமாட்டான். நாங்க அவன அப்படி வளக்கலையேம்மா...

இந்தக் காலத்துல பசங்கள்லாம் தானா வளர்ந்திருதுங்கஜி.

என் பையன் அப்படியில்லைம்மா...

அப்படியா பையா... உங்க அப்பா உன்னை நல்லா வளர்த்திருக்காங்களாமே... இப்படி காதலிகூட காஃபி ஷாப்ல கடலை போடலாமா பையா...

நான் எங்க உன்னைக் காதலிச்சேன். கடலைபோட்டேன்?

காதலிக்காமலா கிளாஸுக்குப் போகாம காஃபி ஷாப்புக்கு வந்திருக்க?

நீ தான என்னை மிரட்டி வரவெச்ச?

அது உங்க அப்பாக்குத் தெரியாதே.. நீ என்னைக் காதலிக்க இங்க வந்திருக்கறதாதான் அவர் நினைக்கப் போறாரு...

ப்ளீஸ் வேண்டாம்.

அப்போ ஐ லவ் யூ சொல்லு...

சொன்னா விட்ருவியா...

அங்க யார் கூடம்மா பேசற...

சொல்லட்டுமா...

ப்ளீஸ் வேண்டாம்..

அப்போ ஐ லவ் யூ சொல்லு...

சரீ சொல்றேன்... சொல்லித் தொலைக்கறேன்...

சொல்லு சொல்லு...

ஐ...

அப்பறம்.... அப்பறம்...

லவ்...

சொல்லு சொல்லு...

god

god ஆ?

and... you are my god now.

ஓ... ப்ரொஃபசர் கெத்தைக் காட்டறியா..? இந்தக் கதையெல்லாம் வேலைக்காகாது. நேரா, தெளிவா ஐ லவ் யூன்னு சொல்லு. இல்லைன்னா... ஜி... உங்க பையன் இப்போ எங்க இருக்கார் தெரியுமா... அவரோட செல்லுக்கு போன் போடுங்க.

"அய்யோ' என்றபடியே மனிதக் குரங்கு தன் செல் போனைத் தேடுகிறது. அது தமன்னாவின் கையில் இருக்கிறது.

நம்பர் ஞாபகம் இருக்கு இல்லைஜி...

மனிதக் குரங்கு பதறியபடியே... "சொல்றேன் சொல்றேன்... ஐ லவ் யு' (படுவேகமாகச் சொல்கிறது).

இப்படியெல்லாம் சொல்லக்கூடாது... ரொமாண்டிக்கா, பொயட்டிக்கா அழகாச் சொல்லணும்... ஐ வாண்ட் மோர் எமோஷன்...

மனிதக் குரங்கு வேறு வழியின்றி "ஐ லவ் யூ...' சொல்கிறது.

அதைக் கேட்டதும் டூயட் ஆரம்பிக்கிறது...

வாழ வைக்கும் காதலுக்கு ஜே...

வாலிபத்தின் பாடலுக்கு ஜே...

தூதுவிட்ட கண்களுக்கு ஜே...

அம்புவிட்ட காமனுக்கும் ஜே..!

***

கல்லூரியில் மரத்தடியில் மனிதக் குரங்கு இறுக்கமான முகத்துடன் நின்றுகொண்டிருக்கிறது.

தமன்னா கைகளைக் கட்டிக்கொண்டு சோகமாக நிற்கிறார்.

இங்க பாரு... படிக்கற வயசு... மொதல்ல படிச்சு முடி. உண்மைலயே உனக்கு என் மேல காதல் இருந்தா கோல்ட் மெடல் வாங்கிக் காட்டு. அதுக்குப் பிறகு உன் காதலை ஏத்துக்கறேன்.

சரி... இனிமே நான் பாடத்துல கவனம் செலுத்தறேன். உங்க மேல எனக்கு இருக்கற காதலை கோல்ட் மெடல் வாங்கித்தான் நிரூபிக்க முடியும்னா அதையே செய்யறேன்.

நீ மட்டும் அதைச் செஞ்சிட்டேன்னா உன் காதலை ஏத்துக்கறேன். அதோ தெரியுது பார் அந்த மலைக்கோவில்ல ஒரு விளக்கு ஏத்தி வெச்சி என் காதலை உனக்குச் சொல்றேன்.

சரி... கோல்ட் மெடலோட வர்றேன். ரிசல்ட் வந்த அன்னிக்கு அந்த மலைக்கோவில்ல விளக்கு எரியலைன்னா நான் அந்த மலைல இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிப்பேன். இது என் மேல சத்தியம். என் காதல் மேல சத்தியம்.

ஓகே... போ... இப்ப போய் படி.

தமன்னா அதன் பிறகு படிப்பில் முழு கவனமும் செலுத்துகிறார். மற்ற மாணவர்கள் எல்லாம் சினிமா, விளையாட்டு என்று போகும்போது இவர்மட்டும் புத்தகம் புத்தகம் என்று இருக்கிறார். மனிதக் குரங்கு பேராசிரியர் அங்குமிங்கும் வந்துபோகும்போதும் அவரை ஏறெடுத்தும் பார்க்காமல் படிப்பிலேயே தீவிரமாக ஈடுபடுகிறார். தேர்வுகள் வருகின்றன. சிறப்பாக எழுதுகிறார். ரிசல்ட் நாள் நெருங்குகிறது. ரிசல்ட்டும் அறிவிக்கப்படுகிறது. தமன்னா ஒரு மார்க் வித்தியாசத்தில் கோல்ட் மெடலை இழக்கிறார். மனம் வெறுத்து மலைக்கோவிலுக்கு தற்கொலை எண்ணத்துடன் செல்கிறார். இருண்ட மலைக்கோவிலின் ஒவ்வொரு படியாக ஏறுகிறார். ஆனால், அங்கு மனிதக் குரங்கு பேராசிரியர் கோவில் முற்றம் முழுவதும் விளக்கு ஏற்றி வைத்துக் காத்திருக்கிறார்.

அப்போது பார்த்து எங்கிருந்தோ வீசுகிறது புயல் காற்று. உண்மைக் காதலை யார்தான் வாழ விட்டிருக்கிறார்கள்? மனிதக் குரங்கு காற்றைப் பார்த்ததும் பதறுகிறது. நாயகி ஒவ்வொரு படியாக ஏற ஏற ஒவ்வொரு விளக்காக அணைகிறது. மனிதக் குரங்கு ஓடி ஓடி ஒவ்வொரு விளக்கையாக அணையவிடாமல் தடுக்கிறது. ஒரு விளக்கைத் தடுத்தால் இன்னொரு விளக்கு அணைகிறது. அதைத் தடுக்கப் போனால் வேறொன்று அணைகிறது. நாயகி மலை உச்சியை அடைகிறார். அவர் வரவும் கடைசி விளக்கும் காற்றில் அணைகிறது. இருண்ட மலைக்கோவிலில் மனிதக் குரங்கு நிற்பது அவருக்குத் தெரியவில்லை. தான் கோல்ட் மெடல் வாங்காததால் தன் காதலை ஏற்கவில்லை போலிருக்கிறது என்று நினைத்து விரக்தியில் மலையில் இருந்து குதிக்கப்போகிறார்.

மனிதக் குரங்கு நாயகன் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறது. அப்போது மேற்கு வானம் பொன்னிறமாக ஜொலிக்கத் தொடங்குகிறது.

அணையும் அகல் விளக்கை ஏற்றி வைக்கச் சொன்ன ஆருயிரே

அழியா நம் காதலை தெரிவிக்க ஏற்றிவைக்கிறேன்

அணையா ஆனிப்பொன் விளக்கை...

என்று பாடிய படியே கை காட்டுகிறது... அங்கே பவுர்ணமி நிலா மெள்ள மேகத்தைக் கிழித்தபடி மேலெழுகிறது... மலையில் இருந்து குதிக்கப்போன நாயகி திரும்பிப் பாக்கிறார். பவுர்ணமி நிலவொளியில் அவளது காதலன் கைகளை அகல விரித்து காதல் மீதுற நிற்பது தெரிகிறது... ஓடிச் சென்று கட்டிப் பிடித்து முத்த மழை பொழிகிறார்.

மலைக் கோவில் வானத்தில்

பௌர்ணமி தீபம் மின்னுதே

விளக்கேற்றும் வேளையில்

ஆனந்த ராகம் ஒலிக்குதே...

***

No comments:

Post a Comment