Thursday, 22 September 2016

அதையும் தாண்டிப் புனிதமானது... (4)

அடுத்ததாக குரங்கு உலகில் பெண் மனிதக் குரங்கு ஒன்று வால் குரங்கு ஒன்றைக் காதலிக்கிறது.

மாசிலா நிலவே நம்

காதலை மகிழ்வோடு

மாநிலம் கொண்டாடுமா...

- என்று பாடியபடி அவை ஓடிப் பிடித்து விளையாடுகின்றன. அவர்கள் இப்படிக் காதலிக்கும் விஷயம் ஊருக்குத் தெரியவந்ததும் பிரச்னை உருவாகி பஞ்சாயத்து கூடுகிறது.

"அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே...

பனித்துளியைப் போல குணம் படைச்ச தென்னவனே...'

- என்று பாடல் ஒலிக்க, பதினெட்டு பட்டி குரங்குகளும் எழுந்து நின்று வணங்க, மயிலக் காளை வண்டியில் இருந்து இறங்கும் நாட்டாமை குரங்கு ஆல மரத்தடியில் விரிக்கப்பட்ட போர்வையில் சென்று அமர்கிறது. தலைக்கு மேலே ஒரு கத்தி தொங்குகிறது. தவறாகத் தீர்ப்பு வழங்கினால் கத்தி பாய்ந்து நாட்டாமை கொல்லப்பட்டுவிடுவார்.

விசாரணை ஆரம்பிக்கிறது.

வாலுள்ள குரங்கைப் பார்த்து,"நீங்க என்ன ஆளுங்க தம்பி' என்று கேட்கிறார் நாட்டாமை.

எல்லாம் குரங்கு சாதிதான் என்று அந்தக் குரங்கின் தந்தை சொல்கிறார்.

மனிதக் குரங்கின் தந்தை ஆத்திரத்தில் குறுக்கிட்டு, நீ வாலுள்ள குரங்குடா...

எனக்கு வால் இருந்தா என்ன..?

இனம் இனத்தோடதாண்டா சேரணும்.

உனக்கும் ரெண்டு கண்ணு இருக்கு... எனக்கும் ரெண்டு கண்ணு இருக்கு... உனக்கு ரெண்டு கை இருக்கு... எனக்கும் ரெண்டு கை இருக்கு...

ஒரே இனங்கறது கையைக் காலைப் பார்த்து சொல்றது இல்லைடா... வாழற விதத்தைப் பார்த்தும் கும்பிடுற சாமியைப் பார்த்தும் சொல்றது. அதுமட்டுமில்லாம நாங்கள்லாம் ஆண்ட பரம்பரைடா.

அப்போ நாங்க என்ன மோண்ட பரம்பரையா?

நாட்டாமை சத்தம் போட்டு அவர்களை அடக்குகிறார்.

ஏம்மா நீ என்னம்மா சொல்ற..?

நான் வாழ்ந்தா இவர் கூடத்தான் வாழ்வேன்...

என் பொண்ணு சின்னப் பொண்ணுய்யா.. அறியா வயசு... அந்தப் பையனும் பச்சப் புள்ளைய்யா... நாலு மரம் ஏறி இறங்கக்கூடத் தெரியாதுய்யா.

கூட்டத்தில் இருந்து ஒரு வாலுள்ள குரங்கின் குரல் : அதெல்லாம் நல்லா ஏறுவாப்புல... சந்தேகம் இருந்தா உன் பொண்ணுக்கிட்ட கேட்டுப்பாரு.

டேய்... அடங்குங்கடா டேய்.

அதெல்லாம் அந்தக் காலம்... இப்போ அடக்கணும்னு நினைச்சா அடக்கிருவோம்.

ஏய் நிறுத்துங்கப்பா... பஞ்சாயத்து எதுக்கு கூட்டியிருக்கீங்க... சண்டைதான் போடறதுன்னு முடிவு செஞ்சிட்டா இங்க எதுக்கு வந்தீங்க... நேர வெட்டிக்கிட்டுச் சாகவேண்டியதுதான.

வாலுள்ள இளம் குரங்கைப் பார்த்து நாட்டாமை... என்னப்பா இப்படிப் பண்றியே... அந்தப் பொண்ணை வளர்த்து ஆளாக்கினவங்களுக்கு மனசு எவ்வளவு கஷ்டப்படும்... அதை யோசிச்சுப் பார்த்தியா?

இதுல யோசிக்க என்ன இருக்கு? அந்தப் பொண்ணை யாருக்காவது கட்டிக் கொடுக்கத்தான போறாங்க... எனக்குக் கட்டிக்கொடுத்தா என்ன..?

பொண்ணுக்குப் பிடிச்சிருந்தா கட்டிக்கொடுக்க வேண்டியதுதான..? என்று வாலுள்ள குரங்குகளின் தலைவர் சொல்கிறார்.

மனிதக் குரங்கின் தந்தை, "கழுதை மூஞ்சிக் கொரங்குக்கு உன் வீட்டுப் பொண்ணை நீங்க கட்டிக் கொடுப்பீங்களா?' என்று கேட்கிறார்.

அப்படி ஒருத்தன் எங்ககிட்ட நடந்திருவானா... அவனை நாங்க வெட்டிப் பொலி போட்டுற மாட்டோம்?

நீங்களே அப்படி வீராப்பு பேசினா நாங்க எம்புட்டு பேச வேண்டியிருக்கும்.

பேசித்தான் பாருங்க.

பேசத்தான் போறோம் தம்பி... போறும் போறும்னு நீங்க சொல்ற அளவுக்கு பேசத்தான் போறோம். என்ன... வாய் பேசாது... கைதான் பேசும்.

அப்போ நாங்க மட்டும் அதை காதுகொடுத்து கேட்டுட்டா இருப்போம்... காவு கொடுத்துத்தான் கேப்போம்.

தலை இருக்கும்போது வாலு ஆடக்கூடாதுடா... எப்பன்னாலும் வாலுள்ளவன் கீழ தண்டா இருக்கணும்.

உன் பொண்ணுகிட்ட போய் கேளுடா... யார் மேல யார் கீழன்னு.

வாய்த் தகராறு முற்றிக் கைகலப்பாகிறது. ஒவ்வொரு குரங்கும் மரத்தையும் செடியையும் பிடிங்கி எறிந்து, கல்லை வீசித் தாக்கிக் கொள்கின்றன.

தமன்னா இதையெல்லாம் பார்த்து சண்டையைத் தடுக்க முயற்சி செய்கிறார். அவரை ஓரங்கட்டிவிட்டு அனைவரும் அடித்துக்கொள்கிறார்கள். தமன்னா மரத்தில் சாய்ந்துகொண்டு மேலே பார்க்கிறார். இலைகளினூடே தென்படும் பௌர்ணமி நிலவு பூமி முழுவதையும் தழுவியபடிப் பொழிகிறது.

மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா...

மண் குடிசை வாசலென்றால் தென்றல் வர மறுத்திடுமா...

உனக்காக ஒன்று எனக்காக ஒன்று

ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை...

கொடுத்ததெல்லாம் கொடுத்தார்

அவர் யாருக்காகக் கொடுத்தார்...

ஒருத்தருக்கா கொடுத்தார்

இல்லை ஊருக்காகக் கொடுத்தார் என்று மனம் நொந்து பாடுகிறார். கூட்டம் அதைக் கேட்டு ஸ்தம்பிக்கிறது. மெள்ள ஒவ்வொருவரும் தமது சண்டையை நிறுத்திவிட்டு வீடு திரும்புகிறர்கள்.

அனைவரும் போன பிறகு நாட்டாமை குரங்கும் தமன்னாவும் தனியாக உட்கார்ந்திருக்கிறார்கள்.

உங்களுக்கு இது தப்புன்னு தோணுதுல்ல... நீங்க சொன்னா இவங்க கேட்பாங்கள்ல...

அப்படி இல்லைம்மா... நான் சொல்றதைக் கேட்டு அவங்க நடக்கறதில்லைம்மா... நான் தான் அவங்க எதைக் கேட்டு நடப்பாங்களோ அதைச் சொல்லிட்டு என் மரியாதையைக் காப்பாத்திட்டு வர்றேன். உடம்பு இழுக்கற இழுப்புக்குத்தானம்மா தலை போயாக வேண்டியிருக்கு.

நீங்க இப்படிச் சொல்றீங்க... மத்த குரங்குகளைக் கேட்டா நீங்கதான் கலப்புத் திருமணத்தைத் தடுக்கறதா சொல்றாங்க.

இது ஒரு விசித்திரமான வளையம் அம்மா... அவங்களுக்கு அதுதான் பிடிக்கும்னு நான் இதைச் செய்யறேன். நான் இதைத்தான் சொல்றேன்னு அவங்க செய்யறாங்க... ஒருவகைல பார்த்தா யாருமே காரணமில்லை. இன்னொரு வகைல பார்த்தா எல்லாருமேதான் காரணம்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் பக்கத்துக் கிணற்றில் "பொத்' என்று ஏதோ விழும் சத்தம் கேட்கிறது. வேகமாக ஓடிப் போய் பார்க்கிறார்கள். மனிதக் குரங்கின் அப்பா! தமன்னா காட்டுக்கொடிகளைக் கயிறாக்கி கிணற்றுக்குள் குதித்து அவரைக் காப்பாற்றுகிறார்.

என்னங்க நீங்க இப்படிப் பண்ணிட்டீங்க...

இத்தனை வருஷம் பெத்து வளர்த்து ஆளாக்கின பொண்ணு இப்படி ஒரு காரியம் பண்ணிட்டாளேன்னு மனசு கேட்கலைம்மா... ஒரு புள்ளையைப் பெத்து வளக்கறதுன்னா சும்மாவா... பத்து மாசம் வயத்துல சொமந்து, தூங்காம கொள்ளாம பார்த்துகிட்டு, நடக்க கத்துக் கொடுத்து, மரமேறக் கத்துக் கொடுத்து, பத்திருவது வருஷம் பழம் காய் பறிச்சுக் கொடுத்து, நோய் நொடி வந்தா பச்சிலை அரைச்சுப் போட்டு, உயிருக்கு உயிரா பாசத்தைக் கொட்டித்தானம்மா வளக்கறோம். நான் தனி ஆளு... எனக்குப் பிடிச்சவரைக் கல்யாணம் கட்டிப்பேன்னு இன்னிக்கு வந்து சொல்றதுல என்னம்மா நியாயம் இருக்கு. பிறந்தது தனியா பொறந்துட்டியா... வளர்ந்தது தனியா வளர்ந்துட்டியா...வாழறதுதான் தனியா வாழ்ந்துடப்போறியா... ஊர் உறவு மத்தியில, சாதி சனம்கூடத்தான வாழ்ந்தாகணும். நான் தனி ஆளுன்னா என்ன அர்த்தம்? இதைத் தடுக்கத்தான் அந்தக் காலத்துல பத்து பன்னண்டு வயசுலயே கல்யாணம் பண்ணி வெச்சாங்களோ என்னவோ.

இப்போ அப்படி என்ன தப்பு பண்ணிட்டா... மனசைப் பறிகொடுத்தவர்கூட வாழப்போனது தப்பா..?

ஏம்மா அந்த பாழப்போன மனசை சொந்த சாதியில ஒருத்தனைப் பார்த்து பறிகொடுக்கக்கூடாதா. காதலிச்சதைத் தப்புன்னு சொல்லலையே... தப்பானவனை ஏன் காதலிச்சன்னுதான கேட்கறேன்.

தப்பானவன்னு எப்படிச் சொல்றீங்க?

அந்த வாலுள்ள கொரங்குக்கு ஒரு குகை உண்டா... சொந்தமா ஒரு மரம் உண்டா..? என் பொண்ணு மேல ஆசைப்பட்டுக் காதலிக்கலை. என் சொத்துக்கு ஆசைப்பட்டுத்தான் வலை வீசியிருக்கான். ரெண்டு வருஷம் கழிச்சு சொத்தைப் பிரிச்சுக் கொடுன்னு வந்து நிப்பான். தரமாட்டேன்னு சொன்னா பொண்ணை நடுத்தெருவுல விட்டுட்டுப் போயிடுவான்.

சொத்து கேட்டா கொடுக்க வேண்டியதுதான... மகளுக்குக் கொடுக்கறதை மருமகனுக்குக் கொடுக்க வேண்டியதுதான..?

மக மகளா நடந்துக்கிட்டாத்தானம்மா அவளுக்கே தரமுடியும்... இதுல மருமகனுக்கு வேற கொடுக்க முடியுமா?

அப்போ அவங்க சொத்து வேண்டாம்னு சொன்னா எக்கேடு கெட்டுப் போங்கன்னு விட்ருவீங்களா?

மகளின் தந்தை மவுனமாக இருக்கிறார். பிறகு மெள்ள குரல் உடைந்து சொல்கிறார்: இதையெல்லாம் கூடத் தாங்கிக்கலாம்மா. ஆனா எங்க போனாலும் "வால் குரங்கு சம்பந்தி... வால் குரங்கு சம்பந்தி'ன்னு எல்லாரும் கேலி செய்யறாங்க... அதைத்தான் தாங்க முடியலைம்மா.

அதைச் சொல்லுங்க... அதுதான முக்கியமான காரணம்.

ஆமாம்மா. வளத்து ஆளாக்கின பொண்ணு நம்மை மதிக்காம போனதைக்கூடப் பொறுத்துக்கலாம். சொத்து கேட்டு வர்றதைக்கூடச் சமாளிச்சிடலாம்... பொண்ணை நல்லவிதமா காப்பாத்தாம விட்டான்னா அதைக்கூட செஞ்ச தப்புக்கு கஷ்டப்படறான்னு விட்டுடலாம். ஆனா சாதிசனம் பண்ற கேலி... அதைத்தான் தாங்க முடியலை. அவன் மட்டும் வால் குரங்கா இல்லாம இருந்தா எந்தப் பிரச்னையும் இல்லையேம்மா.

அப்போ அந்த வாலுள்ள குரங்கை அந்தக் கூட்டத்துல இருந்து வெளிய வரச்சொன்னா ஏத்துப்பீங்களா.

அது எப்படி முடியும். வாலுங்கறது அவங்களுக்கு கூடவே பிறந்ததாச்சே. அதுமாதிரி எங்க இனத்துக்குள்ள வர்ணும்னா எங்க இனத்துல பிறந்தாத்தான முடியும்.

அது சரிதான். ஆனா ஒரு இனத்துல இருந்து வெளில வர்றது அவ்வளவு கஷ்டம் இல்லை. அது ஒரு அடையாளச் செயலா செஞ்சிடலாம். இப்போ உங்க இனத்துக்குன்னு ஒரு சாமி, தலைவர் இருப்பாருல்ல... அந்த தலைவரை அந்த வாலுள்ள குரங்கு விழுந்து கும்பிட்டா ஏத்துப்பீங்களா...

அது வந்து... என்ன பண்ணினாலும் வாலு கடைசிவரை இருக்கத்தான செய்யும்.

அந்த வாலைச் சுருட்டி வெச்சிக்கச் சொல்வோம். உங்க ஆளுங்ககிட்ட சொல்லுங்க... அவன் தான் உங்க தலைவரை தன்னோட தலைவரா ஏத்துக்கத் தயாராகிடுவான்ல. உங்க தலைவரை ஏத்துக்கறவரை உங்க இனமா ஏத்துக்கறதுல உங்களுக்கு என்ன கஷ்டம்? முழுசா ஏத்துக்க முடியாட்டாலும் இது ஓரளவுக்கு சரிப்பட்டு வரும். நாளைக்கு யாராவது உங்களைப் பார்த்து வால் குரங்கு சம்பந்தின்னு கேலி பண்ணினா, அவன் இப்போ வால் குரங்கு இனத்துல இல்லைப்பா... நம்ம தலைவரை தன்னோட தலைவரா ஏத்துகிட்டிருக்கான்னு சொல்லுங்க.

இதுக்கு அந்த வால் குரங்கு ஒத்துக்குமா...

கேட்டுப் பார்ப்போம். உங்க பொண்ணு மேல அவனுக்கு உண்மையான காதல் இருந்தா அவனோட இனத்தை விட்டுட்டு வரட்டும்.

தமன்னா நேராக வாலுள்ள குரங்கைச் சந்தித்து இந்த யோசனையைச் சொல்கிறார். அவன் தன் காதலிக்காக உயிரைக்கூடத் தரத் தயாராக இருப்பதாகச் சொல்கிறான். அதன்படியே மனிதக் குரங்குகளின் தலைவரின் சிலை இருக்கும் சமாதிக்குச் சென்று அவருக்கு மலர் மாலை அணிவித்து அவர் காலில் விழுந்து வணங்குகிறான். மனிதக் குரங்குக் கூட்டம் அவனைக் கட்டித் தழுவி வாழ்த்துகிறது. அடுத்த முகூர்த்த நாளில் திருமணம் செய்துவைக்கலாம் என்று மனிதக் குரங்குக் குழு தீர்மானிக்கிறது. ஆனால், வாலுள்ள குரங்குக் கூட்டத்துக்கு இது ஆத்திரத்தை கிளப்புகிறது. அதெப்படி நம்முடைய எதிரிகளின் தலைவரைப்போய் இவன் வணங்கலாம். அந்தப் பெண்ணைத்தானே நம் தலைவர் காலில் விழ வைத்திருக்கவேண்டும். இந்தக் கல்யாணத்தை நடக்கவிடமாட்டோம் என்று கொதிக்கிறார்கள்.

அந்த வால் பையனுக்கு எங்க தலைவரைக் கும்பிடத் தோணினா அதை மதிச்சு விட்றவேண்டியதுதான என்று பதிலுக்குக் கேட்கிறார்கள் மனிதக் குரங்கு குழுவினர். பிரச்னை தீராமல் இழுபறியாகிக் கொண்டேபோகிறது.

தமன்னா ஒரு யோசனை சொல்கிறார். வால் குரங்கு காதலனை லேசாக விஷம் சாப்பிட்டு மயங்கி விழச் சொல்கிறார். அவன் காதலில் இவ்வளவு தீவிரமாக இருக்கிறானென்று தெரிந்ததும் வால் குரங்குக் கூட்டம் அவனை ஏற்றுக்கொண்டுவிடும் என்று சொல்கிறார். அதன்படியே வீரியம் குறைவான விஷத்தை வால் குரங்குக்குக் கொடுக்கிறார். அந்தக் குரங்கு அதைச் சாப்பிட்டுவிட்டுக் கீழே விழுந்துவிடுகிறது. அனைவரும் இறந்துவிட்டதாக நினைக்கிறார்கள். வால் குரங்குக் கூட்டத்தினரும் மனிதக் குரங்குக் கூட்டத்தினரும் இறந்த குரங்கை நினைத்தும் அதன் தூய்மையான காதலை நினைத்தும் வருந்துகிறார்கள்.

ஆனால், இந்த நேரத்தில் இன்னொரு விபரீதம் நடக்கிறது. அவன் இறந்த செய்தி கேட்டதும் அதை உண்மையென்று நம்பிவிடும் மனிதக் குரங்குக் காதலி மரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுவிடுகிறது.

இதை எதிர்பார்க்காத தமன்னா அதிர்ச்சியில் உறைந்துவிடுகிறார். விஷத்தின் வீரியம் குறைந்ததும் மெள்ள சுய நினைவு திரும்பும் வாலுள்ள குரங்கு விஷயத்தைக் கேள்விப்பட்டதும் அந்த இடத்துக்குத் தள்ளாடித் தள்ளாடியபடியே விரைகிறது. சிறிது நேரம் ரத்தம் சிந்தி இறந்து கிடக்கும் தன் காதலியின் உடலையே பார்க்கிறது. பிறகு மெதுவாக அந்த மரத்தின் மீது ஏறிச் செல்கிறது. அனைவரும் கீழே நின்றபடி சோகமாக அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வால் குரங்குக் காதலன் மெள்ள உச்சிக் கிளைக்குச் செல்கிறது. பிறகு உச்சில் இருந்தபடி கைகளை அப்படியே விடுகிறது. வெட்டப்பட்ட மரக்கிளை கீழே விழுவதுபோல் காதலி குரங்கு இறந்து கிடக்கும் இடத்துக்கு அருகில் விழுந்து மண்டை உடைந்து இறக்கிறது. இரண்டின் உடம்பில் இருந்து வழிந்த ரத்தமும் ஒன்றாகக் கலக்கின்றன.

ரத்தக் கலப்பு கூடாதுன்னு சொன்னீங்கள்ல... அவங்க அவங்க ரத்தத்தைப் பிரிச்சி எடுத்துக்கிட்டுப் போய் எரியுங்க என்று தமன்னா அந்த ஜோடியைப் பார்த்து கதறி அழுகிறார். கூட்டம் அதிர்ச்சியில் உறைகிறது. அந்த சின்னஞ்சிறு ஜோடிகளை ஒரே சிதையில் கிடத்தி எரியூட்டுகிறார்கள்.

மாசிலா நிலவே நம்

காதலை மகிழ்வோடு

மாநிலம் கொண்டாடுமா... கண்ணே

- என்ற பாடல் சோக ராகத்தில் ஒலிக்கிறது.

***