Thursday 22 September 2016

அதையும் தாண்டிப் புனிதமானது... (1)

மனிதக் குரங்குக்கும் தமன்னாவுக்கும் இடையில் தெய்விகக் காதல்!

இருவரும் வெவ்வேறு சாதி (?!) என்பதால் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. ஒருமுறை எங்கள் வாழ்க்கைத் துணைவராக வரப்போகிறவரை பார்த்துப் பேசுங்கள்... அதன் பிறகு முடிவு செய்யுங்கள் என்று காதலர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் உன் காதலன் நாட்டுக்கே அதிபராக இருந்தாலும் வேறு சாதி என்றால் வேண்டவே வேண்டாம்; உன் காதலி ரம்பை ஊர்வசியாக இருந்தாலும் வேறு சாதி என்றால் பார்க்கவே தேவையில்லை என்று இரு குடும்பத்துப் பெற்றோரும் செய்தி கேட்ட மாத்திரத்திலேயே கலப்புக் காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காதல் ஜோடிகள் உண்ணாவிரதம், ஒத்துழையாமை இயக்கம் என வீட்டில் என்னவெல்லாமோ போராடிப் பார்த்தும் முடியாமல் போகவே கடைசியில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். அதற்கு முன்னால் கணவன் மனைவியாக ஒரு நாள் வாழ்ந்துவிட முடிவெடுக்கிறார்கள்.

"என்ன சத்தம் இந்த நேரம்...' பாடல் பின்னணியில் ஒலிக்க இருவரும் தமது வாழ்க்கையின் கடைசி நிமிடங்களை, வேதனையையெல்லாம் உள்ளே மறைத்துக்கொண்டு, பசுமை மாறாக் காடொன்றில் ஆடிப்பாடுகிறார்கள். தமன்னாவுக்கு நாயகன் குரங்கு பவுடர் போட்டு, பொட்டு வைத்து பூச்சூடி அலங்கரிக்கிறது. காட்டு மலர்களையும் இலைகளையும் மாலையாகக் கட்டி திருமணம் செய்துகொள்கிறார்கள். மனிதக் குரங்குகள் உடலுறவு முடிந்த ஒரு சில நிமிடங்களிலேயே மீண்டும் தயாராகிவிடுமென்பதால் அந்தக் கடைசி நாளில் கிட்டத்தட்ட பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை வாழ்க்கையை எஞ்சாய் பண்ணுகிறார்கள் (நாயகிக்கு நாயகனைப் பிடித்ததற்கான முக்கியமான காரணங்களில் அதுவும் ஒன்று).

"மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல... அதையும் தாண்டிப் புனிதமானது' என்று "குணா' குகையில் இருந்துகொண்டு மனிதக் குரங்கு உலகம் முழுவதும் எதிரொலிக்கக் கத்துகிறது. கடைசியாக மலை உச்சியில் கைகளைப் பிடித்தபடி குதிப்பதற்குத் தயாராக நிற்கிறார்கள்... சாகறதுக்கு முன்னால உன்னோட சிரிச்ச முகத்தைப் பாக்கணும் என்று தமன்னா சொல்கிறார். மனிதக் குரங்கு சிரிக்க முயற்சி செய்கிறது. முடியவில்லை. பிறகு தன் ஆருயிர் காதலிக்காக அழுகையை மறைத்துக்கொண்டு சிரிக்கிறது. பிறகு ஒன்... டூ... என்று சொல்கிறது. த்ரீ என்று சொல்வதற்கு முன்பாக தமன்னாவுக்கு ஒரு டீப் கிஸ் அடிக்கிறது... தமன்னா மனிதக் குரங்கை இறுக்கிக் கட்டிப்பிடித்து அழுகிறாள். இருவரும் கட்டிப்பிடித்தபடியே குதிக்கிறார்கள்... ஆனால், என்ன ஆச்சரியம்... மரங்களின் வழியாக கீழே விழுகையில் ஒவ்வொரு கிளையாக அனிச்சையாகப் பற்றிக்கொண்டு ஏதோ மாடிப்படியில் வேகமாக கீழே இறங்கி வருவதுபோல் தரையை வந்து அடைகிறார்கள்! தமன்னா கண் முழித்துப் பார்த்தால் இருவருமே தரையில் ஜம்மென்று நிற்கிறார்கள். என்ன நடந்தது என்று அவர்களுக்கு சிறிது நேரம் கழித்தே புரிகிறது. அசட்டுத் தற்கொலை எல்லாம் முட்டாள் மனிதக் காதலர்களுக்குத்தான். இவர்களுடைய காதலோ அதையும் தாண்டிப் புனிதமானது அல்லவா.

இனி ஆகவேண்டியது என்ன என்று மனிதக் குரங்கின் மடியில் தமன்னா படுத்துக்கொண்டு எதிர்காலத்தைப்பற்றி தீவிரமாக யோசிக்கிறார். நாம் சாகப் பிறந்தவர்கள் அல்ல... வாழப் பிறந்தவர்கள். இந்த உலகுக்கு நம் மூலம் ஏதோ ஒரு செய்தி சொல்லப்பட வேண்டியிருக்கிறது. அதனால்தான் கடவுள் நம்மைக் காப்பாற்றியிருக்கிறார் என்று சொல்லும் மனிதக் குரங்கு ஒரு யோசனை சொல்கிறது: அதாவது அது தமன்னாவின் வீட்டுக்குச் சென்று அவர்கள் குடும்பத்தினரின் மனதில் இடம் பிடிப்பது என்றும் அதுபோல் தமன்னா மனிதக் குரங்குகளின் உலகுக்குச் சென்று அவருடைய குடும்பத்தினரிடையே நல்ல மதிப்பைப் பெறுவது என்றும் சொல்கிறது.

தமன்னா சிறிது நேரம் யோசிக்கிறார். உண்மையில் நம் பெற்றோர் எதிர்ப்பதற்கு அவர்கள் காரணமல்ல. இரண்டுபேரும் வெவ்வேறு இனம் (சாதி) என்பதால் அந்த இரண்டு சமூக மக்களின் நெருக்கடிக்கு பயந்துதான் அப்படிச் சொல்கிறார்கள். முதலில் அந்த இரண்டு சாதியினரைச் சம்மதிக்க வைக்கவேண்டும். அதற்கு இவர்கள் இருவரும் அந்த இரண்டு சமூகத்தினரிடையே நன் மதிப்பைப் பெறவேண்டும்; குடும்பத்தினரை மட்டும் சமாளித்தால் போதாது என்று சொல்கிறார்.

மனித இனத்தினரிடையே நன் மதிப்பு பெற என்ன செய்யவேண்டும் என்று மனிதக் குரங்கு கேட்கிறது. அதற்கு தமன்னா, "அநீதியைக் கண்டு பொங்கணும்... அப்பத்தான் எங்க இனத்தில நல்ல பேர் எடுக்கமுடியும்' என்கிறார்.

"சரி... இதுவரை நான் உண்டு என் வேலை உண்டுன்னு சுயநலமா இருந்துட்டேன். இனிமே நான் அநீதியைக் கண்டு பொங்கறேன்' என்று கம்பீரமாக எழுந்து நிற்கிறது (பின்னணியில் பரித்ரானாய சாதூனாம் விநாசாய துஷ்க்ருதாம்... தர்ம ஸ்தம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே... அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் நான் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டுவேன் என்ற பாடல் ஒலிக்கிறது).

உங்க இனத்துல இருக்கறவங்ககிட்ட நல்ல பேரு எடுக்க என்ன செய்யணுமென்று தமன்னா கேட்கிறாள். "எங்க ஆளுங்க குரங்காவே இருக்காங்க... மனுஷரா மாத்திக்காட்டு' என்று சொல்கிறது.

இருவரும் தத்தமது லட்சியத்தை நிறைவேற்றப் புறப்படுகிறார்கள். சிறிது தூரம் சென்றதும் தமன்னா ஓடிவந்து தன் ஆசைக் காதலனுக்கு அழுத்தமாக ஒரு முத்தம் கொடுக்கிறார். இரண்டு பேரும் தயங்கித் தயங்கி விடைபெறுகிறார்கள். க்ளோசப்பில் இருவருடைய கைகளும் மெள்ளப் பிரிகின்றன.

***

மனிதக் குரங்கு தமன்னாவின் பண்ணைப்புர கிராமத்துக்குப் போய்ச்சேருகிறது. அப்போது அந்த கிராமமே களேபரமாக இருக்கிறது. அந்த கிராமத்துக்கு அடிக்கடி "ஷோலே' கப்பார் சிங்கின் ஆட்கள் வந்து கொள்ளையடித்துச் செல்வார்கள். அவர்களில் ஒருவன் ஒரு கறுப்புப் போர்வையை ஊரின் மைதானத்தில் விரித்துவைத்துவிட்டு ஒரு தீப்பந்தத்தை நட்டுவிட்டுப் போவான். ஊரில் உள்ளவர்கள் அந்தத் தீப்பந்தம் அணையாமல் பார்த்துக்கொள்வதோடு தமது நகைகள், பணம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி அந்தப் போர்வையில் போட்டுவிடவேண்டும். ஒவ்வொரு வீட்டுக்காரரும் மூட்டையில் தமது பேர் எழுதிப் போட்டிருக்கவேண்டும். ஏதாவது வீட்டில் இருந்து மூட்டை சிறியதாக இருந்தால் அந்த வீட்டு ஆண்களை குதிரைக்குப் பின்னால் கட்டி இழுத்துச் சென்று கொன்றுவிடுவார்கள்.

மனிதக்குரங்கு போய்ச் சேர்ந்த நேரத்தில் கறுப்புப் போர்வை ஊர் நடுவில் விரிக்கப்பட்டிருக்கும். தீப்பந்தம் அணையாமல் இருக்க சிலர் அருகில் எண்ணெய் கொப்பரையுடன் நின்றுகொண்டிருப்பார்கள். ஒவ்வொரு வீட்டினரும் தமது வீட்டில் இருக்கும் நகைகள், பணம் அனைத்தையும் கட்டி போர்வையில் வைத்திருப்பார்கள். சிறிது நேரத்தில் புழுதி பறக்க குதிரையில் வாள், துப்பாக்கிகளைச் சுழட்டியபடியே கொள்ளையர்கள் வந்து சேருவார்கள். கறுப்புப் போர்வையில் நகைகளும் பணமும் குவிந்துகிடக்கும். கொள்ளையர்கள் குதிரையில் அதைச் சுற்றிச்சுற்றி வந்து வெறிச்சிரிப்பு சிரிப்பார்கள். கிராமத்தார்களில் ஒருவன் போர்வையை மூட்டையாகக் கட்டுவான். மிகப் பெரிய முடிச்சு ஒன்றைப் போட்டு, கப்பார் சிங்கைப் பார்த்து மண்டியிட்டு வணங்கி நிற்பான். கப்பர் சிங் சிரித்தபடியே அதை எடுத்து குதிரைமேல் வைக்கச் சொல்வான். கிராமத்தான் மூட்டையை எடுக்கப்போகும்போது எங்கிருந்தோ ஒரு ஈட்டி பாய்ந்து வந்து மூட்டை முன்னால் குத்தி நிற்கும். கிராமத்தான் பயந்து பின் வாங்குவான். கப்பர் சிங்குக்கு அதைப் பார்த்ததும் ஆத்திரம் தலைக்கு ஏறும். ஈட்டி வந்த திசையைப் பார்ப்பான். ஒரு வீட்டுக்கூரையில் வான் முழுவதுமாக விஸ்வரூபமெடுத்தபடி மனிதக் குரங்கு நின்றுகொண்டிருக்கும்.

கப்பர் சிங் துப்பாக்கியை எடுத்துச் சுடுவான். சீறிப் பாய்ந்து வரும் புல்லட்டிலிருந்து மேட்ரிக்ஸ் ஹீரோபோல் உடம்பை வில்லாக வளைத்து தப்பிக்கும் மனிதக் குரங்கு, ஒலிம்பிக் கோல்ட் மெடலிஸ்ட் போல் ஏகப்பட்ட கர்ணங்கள் அடித்து நேராக கறுப்பு மூட்டைக்கு அருகில் வந்து குதிக்கும்.

மனிதக் குரங்கைப் பார்த்ததும் குதிரை மிரண்டு காலைத் தூக்கியபடி கனைக்கவே கப்பர் சிங் தலை குப்புறக் கீழே விழுந்துவிடுவான். மனிதக் குரங்கு சட்டென்று மூட்டையை எடுத்துக்கொண்டு குதிரைமேல் பாய்ந்து ஏறும். மனிதக் குரங்கைப் பார்த்து எல்லா குதிரையும் மிரண்டுவிடவே கப்பர் சிங்கின் ஆட்களும் நிலை தடுமாறி துப்பாக்கி கை நழுவிக் கீழே விழுந்துவிடுவார்கள். அவர்கள் சுதாரித்து எழுவதற்குள் மனிதக் குரங்கு பண மூட்டையுடன் ஒற்றையடிப்பாதையில் சிட்டாய்ப் பறந்துவிடும்.

கப்பார் சிங் உடனே வேறொரு குதிரையில் ஏறி மனிதக் குரங்கைத் துரத்துவான். அவனுடைய ஆட்களும் பின்னாலேயே பாய்ந்து செல்வார்கள். ஒரு தெறி சேஸுக்குப் பிறகு மனிதக் குரங்கு நேராக ஒரு குகைக்குள் போய்விடும். கப்பர் சிங்கும் அவனுடைய ஆட்களும் "வசமா மாட்டிக்கிட்டியா...' என்று எகத்தாளமிட்டபடியே குகைக்குள் வெறித்தனமாக நுழைவார்கள். உள்ளே போன மனிதக் குரங்கு பயந்தபடியே பின்வாங்கிச் செல்லும்.

"இப்படித் தனியா வந்து மாட்டிக்கிட்டியே...' என்று கப்பர் சிங் கொக்கரிப்பான்.

"கண்ணா... பன்னிங்கதான் கூட்டமா வரும்... சிங்கம் சிங்கிளாத்தான் வரும்' என்று கர்ஜித்தபடியே பின்பக்கம் திரும்பி ஓடிச் சுவரில் காலை ஊன்றி பேக் சம்மர் சால்ட் அடித்து கப்பர் சிங்கின் ஆட்களுக்குப் பின்னால் பாய்ந்து நிற்கும். அவர்கள் திரும்பியபடி துரத்தவே வாசலை நோக்கி மனிதக் குரங்கு வேகமாக ஓடும். வாசலை அடைந்ததும் சட்டென்று துள்ளி வாசலில் இருக்கும் ஷட்டரை இழுத்து மூடும்.

"மாட்டிக்கிட்டது நான் இல்லைடா... நீங்கதாண்டா... ஸ்கெட்ச் போட்டது உங்களுக்குத்தான் கப்பாரு. ஊருக்குள்ள சண்டை போட்டா நீ துப்பாக்கியால சுடும்போது ஊர்க்காரங்க மேலயும் பட்ரும்... நான் அடிக்கும்போது சில அடி மக்கள் மேல பட்ரும். இங்கன்னா செய்கூலியும் கிடையாது... சேதாரமும் கிடையாது. மொத்த அடியும் வட்டியும் அசலுமா உங்களுக்கே உங்களுக்குத்தான்' என்று கர்ஜித்தபடியே துரத்தி வந்தவனை ஒரே அடியில் வீழ்த்திவிட்டு வெறிச் சிரிப்பு சிரிக்கும். அதன் பிறகு பறந்து பறந்து அடித்து கப்பர் சிங்கையும் அவன் ஆட்களையும் துவம்சம் செய்து ஒரு கயிற்றில் கட்டி இழுத்துக்கொண்டு ஊரார் முன்னால் வந்து மண்டியிடவைக்கும். அதுவரை கொள்ளையடித்துச் சென்ற பணத்தையும் மீட்டு கிராமத்தினருக்குக் கொடுக்கும். தன் வேலை முடிந்தது என்று அது கம்பீரமாக நடந்து செல்கையில் அதன் காலடி மண்ணை எடுத்து நெற்றியில் இட்டபடி "எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில பொட்டு வைப்போம்... உங்களத்தான் நம்புதிந்த பூமி எங்களுக்கு நல்ல வழி காமி...' என்று கிராமத்தினர் ஆடிப்பாடி அவரைத் தமது எஜமானாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஒரு பட்டு வேட்டி சட்டையையும் துண்டையும் கொடுக்கிறார்கள். வேட்டியைக் கட்டிக்கொண்டு துண்டை ரஜினி ஸ்டைலில் தோளில் போட்டுகொண்டு கண்ணடிக்கும்.


***

No comments:

Post a Comment