Thursday, 22 September 2016

அதையும் தாண்டிப் புனிதமானது... (5)

அடுத்ததாக பண்ணைப்புரத்தில் திருவிழா வருகிறது. விழாவுக்காக ஆடுகளை வளர்ப்பவர்களிடமிருந்து மனிதக் குரங்கும் ஓர் ஆடை வாங்கி வளர்க்க ஆரம்பித்திருந்தது. கடவுள் வந்து வாங்கிச் செல்வார் என்று சொன்னதை நம்பி ரொம்பவும் ஆசையுடன் வளர்க்கிறது. ஆடு மாடுகளைக் கூட்டமாக வைத்துக்கொண்டு பாடுகிறது:

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக

தோழா ஏழை நமக்காக

கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக

நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காககேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக

மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக

(புத்தன் இயேசு )நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு

பகை வந்தபோது துணை ஒன்று உண்டு

இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு

எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு

உண்மை என்பது என்றும் உள்ளது

தெய்வத்தின் மொழியாகும்

நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்

(புத்தன் இயேசு )பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை

தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை

மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்

அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்

அழுதவர் சிரித்ததும் சிரிப்பவர் அழுததும்

விதி வழி வந்ததில்லை

ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை என்று ஆடிப்பாடுகிறது.

விழா நாள் வருகிறது.

தென்னை ஓலைத் தடுப்புக்குப் பின்னால் ஒவ்வொரு ஆடாகக் கொண்டு செல்லப்பட்டு பலி கொடுக்கப்படுகின்றன. மனிதக் குரங்குக்கு ஆடுகளை வெட்டிக் கொல்கிறார்கள் என்பது தெரியாது. கடவுள் வந்து வாங்கிச் செல்கிறார் போலிருக்கிறது என்று நம்பியபடி தான் ஆசையாக வளர்த்த ஆடையும் கொண்டுவருகிறது. அங்கே உள்ளே போனதும் ரத்தம் தோய்ந்த அருவாளுடன் பூசாரி நிற்பதைப் பார்த்ததும் மனிதக்குரங்கு பதறுகிறது. என்ன செய்கிறீர்கள் என்று கேட்கிறது. ஒரு ஆடை அதன் கண் முன்னால் பலி கொடுக்கிறார்கள்.

மனிதக் குரங்கு பதறியடித்துத் தன் குழந்தை ஆடை அழைத்துக்கொண்டு வெளியே ஓடுகிறது. அனைவரும் வந்து ஆடைக் கொடு பலி கொடுக்கவேண்டும் என்கிறார்கள்.

கடவுள் அன்பானவர் என்று சொல்கிறீர்கள். இந்த உலகத்தைப் படைத்தது அவர்தான் என்றும் சொல்கிறீர்கள். கடவுளால் படைக்கப்பட்ட ஓர் உயிரை கடவுளால் படைக்கப்பட்ட இன்னோர் உயிர் கொல்வது சரியா... கடவுளுக்குப் படைப்பதாகச் சொல்லி நீங்கள்தான் சாப்பிடுகிறீர்கள். ஆக உங்களுடைய நாக்கு ருசிக்காக ஒரு உயிரைக் கொன்றுவிட்டு அதை நியாயப்படுத்திக்கொள்ள கடவுளைத் துணைக்கு அழைக்கிறீர்களா..? எல்லா உயிரிலும் கடவுள் இருக்கிறார் என்றால் நீங்கள் ஒரு கடவுளைத்தான் வெட்டிக் கொன்று சாப்பிடுகிறீர்கள்... இதை நிறுத்துங்கள் என்று சொல்கிறது.

கடவுள் அப்படி ஒண்ணும் கருணைக் கடல் கிடையாது. சிங்கம் புலிக்கு உணவா ஆடு மாட்டைப் படைச்சிருக்காரு. அது தப்பா என்ன... இயற்கை... மனுஷன் விவசாயம் கண்டுபிடிச்சு பத்தாயிரம் வருஷம்தான் ஆகியிருக்கு. அதுக்கு முன்னால உலகம் முழுவதுமே வேட்டையாடி மாமிசம்தான் சாப்பிட்டு வந்திருக்கான். அதனால மாமிச பட்சிணியான மனுஷன் மாமிசம் சாப்பிடறதுல தப்பே இல்லை என்கிறார் ஒருவர்.

மனுஷன் மாமிஷ பட்சிணின்னு யார் சொன்னாங்க... மனிதர்கள் குரங்கில இருந்து வந்தாங்கன்னுதான டார்வினே சொல்லியிருக்காரு. குரங்குங்க தாவர பட்சிணியா இருக்கும்போது மனுஷன் மட்டும் எப்படி மாமிச பட்சிணியா இருக்கமுடியும்? மனுஷனுக்கு கோரைப் பல்லோ கூர்மையான நகங்களோ கிடையாது. மாமிசத்தை வேக வைக்காம மனுஷனால சாப்பிடமுடியாது. எந்த மாமிச பட்சிணி வேக வெச்சு சாப்பிடுது. இதுல இருந்தே தெரியலையா மனுஷன் மாமிசபட்சிணி இல்லைங்கறது. உங்க நாக்கு ருசிக்காக இயற்கையை மாத்தறீங்க.

செடிகளுக்குக் கூடத்தான் உசிரு இருக்கு. அதைச் சாப்பிடறதும் அப்போ தப்புத்தான?

ஒரு செடிலருந்து ஒரு காயையோ கனியையோ பறிக்கறதுனால அந்தச் செடி செத்துப் போறதில்லை. ரத்தம் உள்ள உயிர்களுக்குத்தான் வலி இருக்கும். அதனால காய் கனிகளையும் தானியங்களையும் சாப்பிடறது தப்பே இல்லை.

மனுஷனுக்கு மூளை வளர்ச்சி அடைந்ததுக்குக் காரணமே அவன் மாமிசம் சாப்பிட ஆரம்பிச்சதுதான். இல்லைன்னா குரங்காவேதான் இருந்திருப்பான்.

மாமிசம் சாப்பிட்டா மூளை வளரும்னா சிங்கத்துக்கும் புலிக்கும் ஏன் வளரலை. நாலு கால்ல நடந்த நம்ம முன்னோர்கள்ல சிலர் நிமிர்ந்து நடக்க ஆரம்பிச்சதும் அவங்களோட முன்னங்கால் எல்லாம் கையா மாறி மனுஷனாயிட்டாங்க. மனுஷனுக்கு கைகள் கிடைச்சதுதானதால் வேலைகளை சீக்கிரமா முடிக்க முடிஞ்சது. அதனாலதான் நிறைய ஓய்வு கிடைச்சு யோசிக்க நேரம் கிடைச்சு மூளை வளர்ந்திருக்கு. மாமிச உணவு மனித மூளையை மழுங்கடிக்கத்தான் செய்யும்.

ஒருத்தர் என்ன சாப்பிடணுங்கறதைத் தீர்மானிக்கற சுதந்தரம் அந்த மனுஷருக்குத்தான் உண்டு. வேற யாருக்கும் கிடையாது.

உங்களுக்கு சாப்பிடறதுக்கே இத்தனை உரிமையும் சுதந்தரமும் உண்டுன்னா அந்த விலங்குகளுக்கு உயிர் வாழ்ற சுதந்தரமும் உரிமையும் அதைவிட அதிகமா இருக்கே. அதை நீங்க பறிக்கறது நியாயமா..? அப்படியே மாமிசம்தான் சாப்பிடணும்னா சிங்கத்தையோ புலியையோ அடிச்சி சாப்பிடவேண்டியதுதான... எதுக்காக உங்களை நம்பி வாழ்ற உங்களைவிட பலம் குறைஞ்ச மாட்டையும் கோழியையும் மாட்டையும் அடிச்சுக் கொல்றீங்க... இது நம்பிக்கைத் துரோகமும்கூட இல்லையா.

கோவில்ல மணியாட்டிக்கிட்டிருக்கற பார்ப்பான் மாதிரிப் பேசற நீ? அவன் கூடாதுன்னு சொல்றதுனாலயே நாங்க சாப்பிடுவோம்.

வள்ளுவர் கொல்லாமை குறித்துச் சொன்ன பத்து குறள்களையும் அங்கு இருக்கும் ஒவ்வொரு குழந்தையையும் மனிதக் குரங்கு ஒப்பிக்கச் சொல்கிறது. குழந்தைகள் குறளைச் சொல்ல சொல்ல மனிதக் குரங்கு அதற்கு விளக்கம் சொல்கிறது.

வள்ளுவரைப் போகச் சொல்லு... அவரு குடிக்கக்கூடாதுன்னு சொல்லுவாரு... பொய் சொல்லாதன்னு சொல்லுவாரு... அதெல்லாம் சும்மா பள்ளிக்கூடத்துல படிக்கவும் பஸ்ல எழுதிப்போடவும்தான் லாயக்கு. அதான் அவருக்கு ஊருக்கு ஒதுக்குப்புறத்துல ஒரு பெரிய சிலை வெச்சாச்சுல்ல... அவரு அங்கினயே இருக்கட்டும். ஊருக்குள்ள வந்துட்டாருன்னா கதை கந்தலாகிடும். இன்னும் சொல்லப்போனா அது அவர் எழுதினதே கிடையாது. பார்ப்பானுங்க எழுதி திருக்குறளுக்குள்ள சொருகியிருக்கானுங்க. எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்... கொன்ன பாவம் தின்னா போச்சு. அவ்வளவுதான் கதை என்று சொல்லி கோவில் வளாகத்திலேயே ஆட்டைக் கறி சமைத்து குடும்பம் குடும்பமாகத் தின்று மகிழ்கிறார்கள்.

மனிதக் குரங்கு, ஏசுநாதர் போல் தான் வளர்த்த ஆடை மார்போடு அணைத்தபடி, சோகமாக ரத்தம் தோய்ந்த வளாகத்தில், மூங்கில் முளைகளில் வெறும் கயிறுகள் மட்டும் கிடப்பதைப் பார்த்தபடியே அந்தக் கூட்டத்தின் நடுவே நடந்துசெல்கிறது.

புத்தன் இயேசு வள்ளுவர் பிறந்தது பூமியில் எதற்காக

தோழா கல்லாய் சிலையாய் கிடப்பதற்காக

கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக

மென் உயிர் கொன்று தன் உயிர் வளர்க்கும் அற்பப் பதர்களுக்காக

- பாடல் வரிகள் சோகமாகப் பின்னணியில் ஒலிக்கின்றன.

அதைக் கண்டு மனம் கலங்கும் சிறுவர்கள் ஆட்டுக்கறி உணவைக் கொண்டு குப்பையில் கொட்டிக் கைகளைக் கழுவுகிறார்கள். மனிதக் குரங்கு அவர்களைப் பார்த்து கண்ணீர் மல்க சிரிக்கிறது. குட்டி ஆடு மனிதக் குரங்கின் கைகளில் இருந்து துள்ளிக் குதித்து குழந்தைகளை நோக்கி தத்தித் தத்தி ஓடுகிறது. ஒரு குழந்தை அதை எடுத்து அணைத்து முத்தமிடுகிறது. சொடலை மாடன் சன்னதிக்கு முன்பாகக் குட்டி ஆடைக் கொண்டு செல்கிறார்கள். மாடனின் கழுத்தில் போட்டிருந்த மாலை ஒன்று கழன்று ஆட்டுக் குட்டி முன்னால் விழுகிறது. குட்டி ஆடு அதை ஆசை ஆசையாகச் சாப்பிடுகிறது. சிறுவர்களும் மனிதக் குரங்கும் மாடனைக் குலவையிட்டுக் கையெடுத்துக் கும்பிடுகிறார்கள்.***