Friday, 29 November 2013

ஆலமரம்

மன வளர்ச்சி குறைந்தவர்களுக்கு ஒரு காப்பகம் அமைப்பதை லட்சியமாகக் கொண்டிருக்கிறாள் கதாநாயகி. அந்தப் பயணத்தில் அவள் எதிர்கொள்ளும் அனுபவங்களே கதை.

கதாநாயகி கல்லூரியில் கோல்ட் மெடல் வாங்கி தேர்ச்சி பெறுகிறாள். அவளுக்கு நாட்டின் முன்னணி நிறுவனங்களில் இருந்து வேலைக்கு நியமன உத்தரவு வருகிறது. அவளுடைய குடும்ப நண்பர் ஒருவரின் மகன் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிந்துவருகிறான். அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ள வருகிறான். கதாநாயகிக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று நினைத்து அவளுடைய பெற்றோர் பெண் பார்க்க வரும் விஷயத்தை ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். தன் மகள் தன் பேச்சை மீற மாட்டாள். அமெரிக்க மாப்பிள்ளையை அவள் நிச்சயம் விரும்புவாள் என்ற நம்பிக்கையில் அவளுடைய பெற்றோர் அந்த பெண் பார்க்கும் படலத்தை அவளைக் கேட்காமலேயே தைரியமாக நிச்சயிக்கிறார்கள். ஆனால், அது விபரீதமாகப் போகிறது.

இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்தவர்களுக்கு கதாநாயகி மிகப் பெரும் துன்ப அதிர்ச்சியைத் தருகிறாள். வந்திருப்பவர்களுக்கு காபி கொடுத்துவிட்டு தனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்றும் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு சேவை செய்வதையே தன் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறாள்.

கதாநாயகியின் பயணம் ஆரம்பமாகிறது.

முதலில் மன நலம் குன்றியவர்களுக்கான காப்பகம் ஒன்றில் சேர்ந்துகொள்வாள். அந்தக் காப்பகத்தில் இருப்பவர்கள் மன வளர்ச்சி குறைந்தவர்களை மிகவும்  கொடுமைப்படுத்துவார்கள். அந்தக் குழந்தைகள் பெயரைச் சொல்லி நன்கொடைகளை வாங்கிவிட்டு தாங்கள் ஆடம்பரமாக வாழ்ந்துவருவார்கள். பிரச்னை செய்யும் குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைப்பது முதல் அவர்களை சங்கிலியால் கட்டிப் போடுவதுவரை பல கொடுமைகளுக்கு ஆளாக்குவார்கள். இதையெல்லாம் தட்டிக் கேட்டதும் அப்படியானால், சொந்தமாக காப்பகம் ஒன்றை நடத்தி இந்தக் குழந்தைகளை நீயே பார்த்துக்கொள் என்று திட்டிவிடுவார்கள்.

கதாநாயகி தனியாக ஒரு காப்பகம் அமைப்பதற்கான வேலைகளில் இறங்க ஆரம்பிப்பாள். தனக்கு திருமணத்துக்கு சேர்த்து வைத்திருந்த நகைகளை பெற்றோரிடம் மிகுந்த சிரமப்பட்டு வாங்கிவருவாள். அதை விற்று ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குழந்தைகளை கவனித்துவருவாள். உணவு, உடை, மருத்துவச் செலவு என பல நெருக்கடிகள் வர ஆரம்பிக்கும். பல நாட்கள் குழந்தைகளுடன் பட்டினியாகப் படுக்க நேரிடும்.

மன வளர்ச்சி குறைந்தவர்களை ஒரு விடுதியில் அடைத்து வைப்பது அவர்களை மேலும் வேதனைக்குள்ளாக்கும் என்பதால் பல இடங்களுக்கு அழைத்துச் செல்வாள். அவர்களுக்கு ஓவியம் கற்றுக் கொடுப்பாள். சமூகத்தின் பிற பிரிவினருடன் கலந்து பழக முயற்சிகள் எடுப்பாள். ஆனால், இவை பெரும்பாலும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.  காப்பகத்தை வாடகைக்குக் கொடுத்திருந்தவர் வேறொரு நிறுவனம் அந்த இடத்துக்குக் கூடுதல் வாடகை தர முன்வருவதாகச் சொல்லி இவர்களைக் காலி செய்துகொண்டு போகும்படிச் சொல்லிவிடுவார்.

காப்பகத்துக்கு சொந்தமாக ஒரு இடம்வேண்டும் என்று அந்த ஊர் எம்.எல்.ஏ.வை சந்தித்து உதவி கேட்கிறாள். அவர், இளம் பெண்ணான அவளை பாலியல் பலாத்காரம் செய்யத் தீர்மானிப்பார். ஒரு நாள் மாலை ஐந்து மணிக்கு கதாநாயகிக்கு ஒரு போன் வருகிறது. தான் இரவு எட்டு மணி விமானத்தில் டெல்லி செல்லவிருப்பதாகவும் உடனே வந்து சந்திக்கும்படியும் கேட்டுக் கொள்கிறார் எம்.எல்.ஏ. கதாநாயகியும் அவர் அனுப்பும் காரில் ஏறி செல்கிறாள். போகும்வழியில் விமானம் புறப்பட இரண்டு மணிநேரம் ஆகும் என்று தகவல் வருகிறது. நேராகத் தனது வீட்டுக்கு வரும்படிச் சொல்கிறார். நீங்கள் டெல்லியில் இருந்து திரும்பி வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கிறாள் கதாநாயகி. ஆனால், அதைக் கேட்காமல் கார் நேராக எம்.எல்.ஏ.வின் பங்களாவுக்குச் செல்கிறது. அங்கு கதாநாயகியை அவர் மானபங்கப்படுத்த முயற்சி செய்கிறார். ஆனால், அவள் தனியாக காரில் போவதைப் பார்த்து சந்தேகப்பட்டு அவளைப் பின்தொடர்ந்து வந்த கதாநாயகியின் கல்லூரி நண்பன் அவளை அவர்களிடமிருந்து காப்பாற்றி அழைத்துவருகிறான்.

அடுத்ததாக, கதாநாயகி ஒரு பெரிய பிஸினஸ்மேனைச் சந்தித்து பண உதவி கேட்கிறார். அவர் பணம் தர முன்வருகிறார். ஆனால், அவர் வருமான வரியில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கிலும், அந்த காப்பகத்தை நடத்த வெளிநாட்டில் இருந்து நிறைய நன்கொடையைப் பெற்று அதைத் தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் தீர்மானித்திருப்பது தெரியவருகிறது. கதாநாயகி அவரது உதவியை மறுத்துவிடுகிறாள்.

அடுத்ததாக, திரைப்படத் துறையினரை அணுகி ஒரு கலை நிகழ்ச்சி நடத்தித்தரும்படிக் கேட்கிறாள். அவளுடைய கல்லூரித் தோழி, மாடல் துறையில் நுழைந்து, தமிழ் திரையுலகில் புது வரவாக கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்திருக்கிறார். அவருடைய உதவியுடன் அந்த கலைநிகழ்ச்சியை நடத்த ஏற்பாடாகிறது. கதாநாயகி மன வளர்ச்சி குன்றியவர்களை மையமாக வைத்து அற்புதமான நாடகம் ஒன்றை எழுதுகிறாள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடக்கும் அந்த நாடகத்தை ஈவென்ட் மேனேஜரிடம் சொல்கிறார். அவரோ, நான்கு குத்துப் பாட்டுகள், ரெண்டு அசட்டுத்தனமான, ஆபாசமான நகைச்சுவை ஸ்கிட்கள் என்று நிகழ்ச்சியைத் திட்டமிடுகிறார். நடிகர், நடிகைகள் மற்றும் பிற திரைப்பட பிரமுகர்கள் அந்த நிகழ்ச்சியை எந்தவித சமூக அக்கறையும் இல்லாமல் அணுகுவதைப் பார்த்து மனம்  வெறுக்கும் நாயகி, அந்த கலை நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறாள்.

இப்படியே மூன்று நான்கு வருடங்கள் ஓடிவிடுகின்றன. கதாநாயகியைப் பெண் பார்க்க வந்த குடும்ப உறவினரின் மகன் அமெரிக்காவில் இருந்து திரும்பிவருகிறான். கதாநாயகி தன் லட்சியப் பயணத்தில் மிகவும் சிரமப்படுவதைக் கேள்விப்படுகிறான். அவனுக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கின்றன. அவன் கதாநாயகியை ஹோட்டல் ஒன்றுக்கு வரச் சொல்லி சந்திக்கிறான். நாயகி தனக்கு நேர்ந்த அனுபவங்களைச் சொல்கிறாள். பணம்தான் பிரச்னையாக இருக்கிறது. நீங்கள் உதவ முடியுமா என்று கேட்கிறாள். யோசித்து பதில் சொல்வதாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குச் செல்கிறான்.

மறுநாள் கதாநாயகிக்கு அவனிடமிருந்து போன் வருகிறது. நான் உதவ தயாராக இருக்கிறேன் ஆனால், ஒரு நிபந்தனை என்கிறான். நான் இரண்டு செக் தயார் செய்து வைத்திருக்கிறேன். அதில் ஒன்றில் தொகை எதுவும் குறிப்பிடாமல் வைத்திருக்கிறேன். நீ எவ்வளவு வேண்டுமானாலும் அதில் நிரப்பிக் கொள்ளலாம். அந்த அக்கவுண்டில் சுமார் ஐம்பது லட்சத்துக்கு மேல் பணம் இருக்கிறது. இன்னொரு செக்கில் பத்தாயிரம் ரூபாய் நன்கொடையாக நிரப்பி இருக்கிறேன். நீ என்னுடன், ஒரு பகலைக் கழித்தால் அந்த பத்தாயிரம் ரூபாய் செக் கிடைக்கும் என்றும்  ஒரு இரவைக் கழித்தால் அந்த பிளாங்க் செக் கிடைக்கும் என்றும் சொல்கிறான். எந்த செக் வேண்டும் என்பதை முடிவு செய்துகொண்டு மறுநாள் காலையில் ஹோட்டலில் சந்திக்கும்படிச் சொல்கிறான்.

கதாநாயகியும் காலையில் ஹோட்டலுக்கு செல்கிறாள். கறுப்பு நிற கவரில் பிளாங்க் செக் இருப்பதாகவும் வெள்ளை நிறக் கவரில் பத்தாயிரம் ரூபாய்க்கான செக் இருப்பதாகவும் சொல்கிறான். கதாநாயகி சிறிது நேரம் இரண்டு கவரையும் வெறித்துப் பார்க்கிறாள். கறுப்பா... வெள்ளையா..? இரவா... பகலா..? அவள் கடந்த நான்கு வருடங்களில் பட்ட கஷ்டங்கள் மனதுக்குள் வந்துபோகின்றன. பிறகு மனதைத் திடப்படுத்திக் கொள்கிறாள். ஒரு டம்ளர் ஐஸ் வாட்டர் வாங்கிக் குடிக்கிறாள். அவளுடைய கை மெதுவாக கறுப்பு நிறக் கவரை நோக்கிப் போகிறது.

இந்த இடத்தில் படத்தின் இடைவேளை வருகிறது.

இடைவேளை முடிந்து படம் தொடர்கிறது.

கதாநாயகி கறுப்பு கவரை எடுத்து வைத்துக் கொள்கிறாள். என்.ஆர்.ஐ. முகத்தில் லேசாக ஏமாற்றம் வந்து போகிறது. அப்போ, சாயந்திரம் ஆறு மணிக்கு வீட்டுக்கு கார் அனுப்பறேன் என்கிறான். கதாநாயகி லேசாகச் சிரித்தபடியே கறுப்பு கவரை ஹேண்ட் பேகில் எடுத்து வைத்துக் கொள்கிறாள். பிறகு ஹேண்ட்பேகில் இருந்து எதையோ எடுக்கிறாள். என்.ஆர்.ஐ. என்ன என்பதுபோல் பார்க்கிறான். அது ஒரு ராக்கி. அதை அவனுடைய கையில் கட்டிவிட்டு மெள்ள சிரிக்கிறாள் கதாநாயகி. என்.ஆர்.ஐ. சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் குதிக்கிறான். நான் இதைத்தான் உன்னிடம் எதிர்பார்த்தேன். உன்னிடம் லேசாக விளையாடலாமென்றுதான் நினைத்தேன். நீ கறுப்பு கவரைத் தேர்ந்தெடுத்ததும் ஒரு கணம் பயந்தே போய்விட்டேன் என்று சொல்லி அவளை கட்டிப் பிடிக்கிறான். ஐ லைக் யுவர் பிரசன்ஸ் ஆஃப் மைண்ட், ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்னெஸ் அண்ட் கமிட்மெண்ட் என்று பாராட்டிவிட்டு, அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்று மனைவிக்கு அறிமுகப்படுத்துகிறான். அன்றைய பகல் பொழுதை அவள் அவன் வீட்டிலேயே கழிக்கிறாள். மாலையில் ஆறு மணிக்கு அவள் புறப்படுகிறாள். வெள்ளை கவரையும் அவளிடம் கொடுத்துவிட்டு மேலும் என்ன உதவி வேண்டுமானாலும் செய்து தருவதாகச் சொல்லி  அவளுக்கு விடை கொடுக்கிறான்.

அடுத்ததாக, கதாநாயகி அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் நிலம் வாங்கப் புறப்படுகிறாள்.  நிலம் பதிவு செய்யப் போகும் இடத்தில் லஞ்சம் கேட்கிறார்கள். இது வியாபார நிறுவனம் அல்ல. மூளை வளர்ச்சி குறைந்தவர்களுக்கு உதவி செய்யப் போகிற நிறுவனம். அதனால தயவு செய்து லஞ்சம் கேட்டு கொடுமைப்படுத்தாதீர்கள் என்று கெஞ்சுகிறாள்.  மூளை வளர்ச்சி குறைந்தவங்களுக்கு உதவற மாதிரியே மூளை வளர்ச்சி அடஞ்ச எங்களுக்கும் உதவுங்கம்மா என்று நக்கலடிக்கிறார்கள். பத்திரப் பதிவு, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, கட்டட அப்ரூவல் என எந்த அலுவலகத்துக்குப் போனாலும் லஞ்சம்... லஞ்சம்... என துரத்துகிறார்கள். வேறுவழியில்லாமல் ஒவ்வொருவருக்கும் தண்டம் கொடுத்து காப்பகத்தின் வேலைகள் ஆரம்பமாகின்றன.

ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு பிரச்னைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒருவழியாக எல்லாம் முடிந்து காப்பகம் செயல்படத் தொடங்கும் நிலையில் அந்த இடத்தை ஒரு பெரிய அரசியல்வாதி விலைக்கு வாங்கி அங்கு பிளாட் கட்டி ஒரு புதிய நகர் ஒன்றைக் கட்டத் தீர்மானிக்கிறார். குடியிருப்புப் பகுதிக்கு அருகில் மனவளர்ச்சி குறைந்தவர்களின் காப்பகம் இருந்தால் பிரச்னை என்று அதை இடிக்க வருகிறார். கதாநாயகி எவ்வளவோ போராடிப் பார்க்கிறார். அரசியல்வாதி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி  அந்த இடம் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்று நிரூபித்துவிடுகிறார். அது மட்டுமல்லாமல் கதாநாயகி நடத்தை கெட்டவள். அவருடைய சமூக அக்கறை என்பது மிகவும் பொய்யானது என்று அனைவரும் நம்பும்படி அவதூறுப் பிரசாரம் செய்கிறார். நீதிமன்றம் அந்த காப்பகத்தை இடிக்க உத்தரவிடுகிறது.

கதாநாயகி இறுதி முயற்சியாக  முதலமைச்சரைச் சென்று சந்தித்து முறையிடுகிறாள். அவர் உன்னைப் பற்றி இப்படியெல்லாம் சொல்கிறார்களே... நான் எப்படி உன்னை நம்ப என்கிறார். கதாநாயகி தனது நேர்மையை அவருக்குப் புரியவைக்க தன் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை விவரிக்கிறாள். உண்மையில் கதாநாயகி சமூக அக்கறை கொண்டு மட்டுமே அந்த காப்பகத்தை நடத்த விரும்பியிருக்கவில்லை. அவர் சிறு வயதில் செய்த ஒரு தவறுக்கு பிராயச்சித்தமாக அதைச் செய்கிறார்.

அதாவது கதாநாயகிக்கு ஒரு தங்கை இருந்தாள். அவள் மன வளர்ச்சி குறைந்தவள். தனக்கு தங்கை/தம்பி பிறக்கப் போகிறது என்று சந்தோஷத்தில் இருந்த சிறுவயது கதாநாயகி மனவளர்ச்சி குறைந்த தங்கை பிறந்ததும் லேசாக வருத்தப்படுகிறாள்.  சிறு குழந்தை என்பதால் ஆரம்பத்தில் தன் தங்கையை மனதார நேசிக்கிறாள். ஆனால், அந்த மனவளர்ச்சி குறைந்த குழந்தையை சமூகத்தில் இருக்கும் அனைவரும் கேலியாகவும் வெறுப்புடனும் நடத்துவதைப் பார்த்ததும் சிறுவயது கதாநாயகிக்கும் அந்தக் குழந்தை மேல் வெறுப்பு வர ஆரம்பிக்கிறது.

ஒரு நாள் சிறுவயது கதாநாயகி பள்ளிக்கு எடுத்துச் செல்ல வைத்திருந்த ரெக்கார்டில் மனவளர்ச்சி குறைந்த தங்கை மையைக் கொட்டிவிடுகிறது. இன்னொரு நாள் ஷூவில் மலம் கழித்துவைத்துவிடுகிறது. இரவில் எங்காவது நாய் ஊளையிட்டால் இந்த மன வளர்ச்சிகுறைந்த குழந்தையும் பதிலுக்கு ஊளையிடும். இப்படியாக அதன் சேட்டைகள் சிறு வயது கதாநாயகிக்கு எரிச்சலைத் தருகின்றன. அது கொஞ்சங் கொஞ்சமாக வளர்ந்து அந்தக் குழந்தையைக் கொன்றுவிடவேண்டும் என்ற அளவுக்கு ஆகிறது.

ஒரு நாள் தங்கையை பந்து விளையாட வீட்டின் பின்புறம் அழைத்துச் செல்கிறாள். மனவளர்ச்சி குறைந்த குழந்தையும் ஆசையாகப் போகிறது. பந்தை, பூச்செடிகளுக்கு நடுவில் போடுகிறாள் சிறுவயது கதாநாயகி. தங்கை அதை எடுத்துவருகிறாள். அடுத்ததாக பந்தை வீட்டுக்குள் போடுகிறாள். மனவளர்ச்சி குறைந்த குழந்தை அதை எடுத்துவருகிறது.  அடுத்ததாக கதாநாயகி பந்தை எடுத்துக் கொண்டு கிணற்றுக்கு அருகில் செல்கிறாள். மனவளர்ச்சி குறைந்த தங்கையும் அவளைப் பின் தொடர்ந்து செல்கிறது. கதாநாயகி கிணற்றை சிறிது நேரம் உற்றுப் பார்க்கிறாள். பிறகு மெதுவாக தன் கையில் இருக்கும் பந்தை நழுவவிடுகிறாள். மனவளர்ச்சி குறைந்த குழந்தைக்கு கிணற்றுக்குள் குதித்தால் உயிர் பிழைக்க மாட்டோ ம் என்பது உள்ளுணர்வில் தெரிகிறது. ஆனால், தனது அக்காவே தன்னை வெறுத்துவிட்டாள் என்பதை உணர்ந்ததும்  மிகவும் வருத்தப்படுகிறது. துணி துவைக்க போடப்பட்டிருக்கும் கல்லில் ஏறி நிற்கிறது.

கிணற்றில் இருந்து நீர் இறைக்க வைத்திருக்கும் கயிறை எடுக்கிறது. கதாநாயகிக்கு பயம் உண்டாகிறது. எங்கே வாளியால் பந்தை எடுத்துவிடுமோ என்று பயப்படுகிறாள். மன வளர்ச்சி குறைந்த குழந்தையோ, தனக்கு அப்படி எடுக்கத் தெரியும் என்றாலும் அக்காவே இறந்து போ என்று சொல்லாமல் சொன்ன பிறகு உயிர் வாழ்வதில் அர்த்தம் இல்லை என்று முடிவு செய்துவிட்டு, தலையை லேசாக இங்கும் அங்குமாக அசைத்து, கவலைப்படாதே.. வாளியால் பந்தை எடுக்க மாட்டேன் என்று சொல்கிறது. கிணற்றில் குதிப்பதற்கு முன் கடைசியாக அக்காவை ஒரு தடவை பார்க்கிறது. அவளை  கை அசைத்துக் கூப்பிடுகிறது. அருகில் வரும் அக்காவை பாசத்தோடு கடைசியாக முத்தமிடுகிறது. பிறகு, மனதை திடப்படுத்திக் கொண்டு கிணற்றுக்குள் குதித்து இறந்துவிடுகிறது. 

இந்த சம்பவத்தை முதலமைச்சரிடம் சொல்லி கதாநாயகி அழுகிறார். தான் சிறு வயதில் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாகத்தான் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான காப்பகம் அமைக்க முன்வந்ததாகச் சொல்கிறார். கதாநாயகியின் உணர்வைப் புரிந்து கொள்ளும் முதல்வர் அந்த காப்பகத்தை இடிப்பதை நிறுத்தச் சொல்கிறார். அந்த காப்பகத்தை அவரே வந்து திறந்து வைக்கிறார்.

கதாநாயகியின் கல்லூரி நண்பனும் ஒருவன் எல்லா நிகழ்வுகளிலும் துணையாக வந்திருப்பான். அவனையும் அவளையும் இணைத்துத்தான் பல அவதூறுப் பிரசாரங்கள் முன்னர் செய்யப்பட்டிருக்கும். கடைசியில் அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாகச் சொல்லுவான். நமக்கென்று ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இந்தக் குழந்தைககள் மீதான பாசம் போய்விடும் என்று சொல்லி அவனை வேறு திருமணம் செய்து கொள்ளச் சொல்வாள். உன்னைப் போலவே நானும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துவிடுகிறேன் என்று அவன் சொல்வான். வேண்டாம்... சமூக சேவை என்ற பெயரில் அடிப்படை உணர்ச்சிகளை அடக்கிக் கொள்வது நல்லதல்ல... அது சாத்தியமானதும் அல்ல என்று சொல்கிறாள். அப்படியானால் நீ மட்டும் எப்படி இருக்க முடியும்? என்று கேட்கிறான். நீ அடிக்கடி வந்து போய்க் கொண்டிரு என்று சிரித்தபடியே சொல்கிறாள். பெருமூச்சுவிட்டபடியே கனத்த மனதுடன் அவன் பைக்கில் ஏறிச்செல்கிறான். கதாநாயகி இருண்டு கிடக்கும் காப்பகத்துக்குள் சென்று விளக்கேற்றுகிறாள்.