Sunday 17 November 2013

காதல் - 2 பாகம் 4

அங்கு ஐஸ்வர்யாவைக் காணாமல் ஒரே களேபரமாக இருக்கிறது. அந்த விஷயம் தெரிந்துதான் இவன் வந்திருக்கிறான் போலிருக்கிறது என்று அங்கிருப்பவர்கள் நினைக்கிறார்கள். பைத்தியமாக இருந்தாலும் இவ்வளவு பாசம் இருக்கிறதே என்று பேசிக்கொள்கிறார்கள். முருகன் பைத்தியம் போலவே நடித்து தனியாக இருக்கும்போது குழந்தைகளை மயக்க மருந்து கொடுத்து கடத்திக் கொண்டுவந்துவிடுகிறான்.

கண் முழித்து குழந்தைகள் கேட்கும்போதுஅம்மாதான் உங்களை அழைத்து வரச் சொன்னார்கள். இனிமேல் நாம்தான் சேர்ந்து வாழ வேண்டும் என்கிறான். குழந்தைகள் அது நிஜமா என்று அம்மாவிடம் போய் கேட்கின்றன. அம்மாவோ இல்லை என்கிறாள்.

முருகன் வாங்கிக்கொண்டு வந்த உணவை மூவரும் சாப்பிட மறுக்கிறார்கள். முருகன் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பலன் இல்லை. அன்று முழுவதும் எதுவும் சாப்பிடாமலேயே எல்லாரும் தூங்குகிறார்கள்.

நள்ளிரவில் ஒரு குழந்தைக்கு முழிப்பு வருகிறது. தூங்கிக் கொண்டிருக்கும் முருகனிடம் இருக்கும் செல்போனை நைஸாக எடுத்துக்கொண்டு வந்து ஐஸ்வர்யாவிடம் கொடுத்து அப்பாவுக்குப் போன் செய்யச் சொல்கிறது. ஐஸ்வர்யாவோ வேண்டாம். அப்படிச் செய்தால்அப்பவும் தாத்தாவும் வந்து முருகனை அடித்துக் கொன்றுவிடுவார்கள். என் மீது இருக்கும் காதலினால்தான் இப்படி எல்லாம் செய்கிறான். அவன் நல்லவன்தான் என்று சொல்கிறாள். நம்மளைக் கடத்திட்டு வந்து அடைச்சி வெச்சிருக்கானே... அவன் எப்படி நல்லவனா இருக்க முடியும் என்று குழந்தைகள் கேட்கின்றன. உனக்கு ரொம்பவும் பிடிச்ச பொம்மையை வேற யாராவது பிடுங்கிட்டா என்ன செய்வஅவங்க கூட சண்டை போடுவ இல்லையா. அப்படி சண்டை போட்டா கெட்டவன்னு சொல்ல முடியுமா. அது மாதிரித்தான் என்று சொல்லி சமாதானப்படுத்துகிறாள்.

குழந்தை அவள் சொல்வதைக் கேட்காமல் அப்பாவுக்கு போன் போடப் போகின்றன. ஐஸ்வர்யா குழந்தைகளிடம் இருந்து வாங்கி வைத்துக் கொள்கிறாள். குழந்தைகள் கோபத்தில் முரண்டு பிடிக்கவே தங்கள் காதல் கதையைச் சொல்கிறாள். முதன் முதலில் தெருவில் சந்தித்ததுமெக்கானிக் ஷெட்டுக்குப் போய் வம்பிழுக்கிழுத்ததுகாதலித்ததுவீட்டை விட்டு ஓடியது என எல்லாவற்றையும் சொல்கிறாள். என்னை உயிருக்கு உயிராக நேசிச்ச ஒரே காரணத்துக்காக அடிபட்டு பைத்தியமாகி கஷ்டப்படற முருகனை என்னால மறக்கவே முடியாது. இப்பக் கூட என் நினைவாகவே தான் இருக்கான். அதுனாலதான் இப்படியெல்லாம் செய்யறான். நீங்க மட்டும் பிறக்கலைன்னா உங்க அப்பாவைக் கூட விட்டுட்டு முருகன் கூடயே போயிருந்தாலும் போயிருப்பேன். அந்த அளவுக்கு அவனை எனக்கும் பிடிக்கும் என்று சொல்கிறாள்.

அப்ப இனிமே நாம இவன் கூடத்தான் இருக்கணுமா. வீட்டுக்குப் போகமாட்டோமா என்று குழந்தைகள் கேட்கின்றன. இல்லை என்று வேகமாக மறுக்கும் ஐஸ்வர்யா அவனை இப்ப என் அண்ணனாத்தான் பாக்கறேன். நடந்தது நடந்துபோச்சு. காதலிச்சவனை அண்ணான்னு கூப்பிட வேண்டிய நிலை இந்த உலகத்துல எந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாது. காதல் தோத்துடுச்சுன்னா மறுபடியும் அவங்க சந்திச்சுக்கவே கூடாது. அது மாதிரியான நரகம் இந்த உலகத்துல எதுவுமே கிடையாது என்று அழுகிறாள். என் கண்ணுல ஒரு துளி கண்ணீர் வந்தாலும் பொறுக்கமாட்டான். இப்ப அவனே நான் அழறதுக்குக் காரணமாகிட்டான் என்று சொல்லிக் கலங்குகிறாள். பைத்தியம் தெளிஞ்சது உனக்கு முன்னாலயே தெரியுமா என்று குழந்தைகள் கேட்கின்றன. ஆமாம் என்கிறாள். அப்பாகிட்ட அப்பவே சொல்லியிருந்தா இந்தப் பிரச்னையே வந்திருக்காதே என்கின்றன. சொல்லணும்னுதான் நினைச்சேன். ஆனால்அதைத் தாங்கிக்கற பலம் அவனுக்குக் கிடையாது. மறுபடியும் புத்தி பேதலிச்சிடும்னு டாக்டர் சொன்னாங்க. அதான் சொல்லலை என்கிறாள். அதையெல்லாம் வாசலில் இருந்து கேட்கும் முருகன் ஸ்தம்பித்துப் போகிறான். மெள்ள அவன் மனது மாறுகிறது. தன் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் ஐஸ்வர்யாவுக்குக் கெடுதல் செய்யக் கூடாது என்று நினைக்கிறான். குழந்தைகள் வேறு பட்டினியில் துடிக்கின்றன. இனியும் அவர்களைக் கஷ்டப்படுத்தக்கூடாது என்று நினைக்கிறான். திரும்பிக் கொண்டுபோய் விட்டுவிட முடிவு செய்கிறான்.

ஒரு வாடகை காரை வரச் சொல்கிறான். ஐஸ்வர்யாவிடமும் குழந்தைகளிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு காரில் ஏற்றிவிடுகிறான். எல்லாரும் ஏறியதும் கார் கதவை மூடிவிட்டு போய்வரச் சொல்கிறான். நீ வரலியா என்று ஐஸ்வர்யா கேட்கிறாள். நீங்கள் மட்டும் போங்கள். நான் வந்தால் எல்லாரும் அடித்துவிடுவார்கள் என்று சொல்கிறான். ஐஸ்வர்யாவும் குழந்தைகளும்கவலைப்படாதீர்கள். எங்கள் வீட்டுக்காரர்களை சமாதானப்படுத்தி உங்களை ஏற்றுக் கொள்ள வைக்கிறோம் என்று சொல்லி அவனை அழைத்துச் செல்கின்றனர்.



 க்ளைமாக்ஸ் - 1

கார் நேராக ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு வருகிறது. அங்கு நிறைய பேர் கூடி நிற்கிறார்கள். ஐஸ்வர்யாவும் குழந்தைகளும் காரில் இருந்து இறங்கியதும் சந்தோஷத்துடன் ஓடிப் போய் கட்டிப் பிடிக்கிறார்கள். மெதுவாகமுருகனும் காரில் இருந்து இறங்குகிறான். ஆனால்அவனைப் பார்க்கும் ஐஸ்வர்யாவின் அப்பாவுக்குக் கோபம் தலைக்கேறுகிறது. குழந்தைகளையும் ஐஸ்வர்யாவையும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். போகும்போது தன் ஆட்களுக்குக் கண்ணைக் காட்டிவிட்டுப் போகிறார். அவர்கள் முருகனை வீட்டுக்குப் பின்பக்கம் அழைத்துச் செல்கிறார்கள்.

அங்கு போனதும் சுற்றி வளைத்து அவனை சரமாரியாக அடிக்க ஆரம்பிக்கிறார்கள். விஷயம் தெரிந்து ஐஸ்வர்யா விழுந்தடித்து ஓடி வருகிறாள். அவள் சொல்வது எதையும் கேட்காமல் அவனை வெறித்தனமாகத் தாக்குகிறார்கள். குழந்தைகளும் அடிக்காதே அடிக்காதே என்று குறுக்கே விழுந்துதடுக்கின்றன. அவர்களையும் பிடித்துத் தள்ளிவிட்டு அடிக்கிறார்கள். ஒண்ணு நீ மறுபடியும் பைத்தியமா ஆகிடணும். இல்லைன்னா செத்துப் போயிடணும். இந்த உலகத்துல சுய நினைவோட இனி ஒரு நாள் கூட நீ இருந்துடக்கூடாது என்று ஐஸ்வர்யாவின் அப்பா சொல்லிச் சொல்லி அடிக்கிறார்.

கடைசியில் ஐஸ்வர்யா தன்னைப் பிடித்திருப்பவர்களை எட்டித் தள்ளிவிட்டு முருகனை நோக்கிப் பாய்கிறாள். குற்றுயிரும் குலையியுருமாக இருக்கும் முருகனைதன் மடியில் எடுத்துப் போட்டுக் கொள்கிறாள். உன் புருஷன் கிட்ட உன்னையச் சேத்துட்டு தற்கொலை பண்ணிக்கனும்னுதான் நான் நினைச்சிருந்தேன். உங்க அப்பா சொல்றது சரிதான். காதல்ல தோத்துப் போயிட்டா பைத்தியமா அலையலாம். அப்படி இல்லைன்னா செத்துப் போயிடணும் ஐசு. காதலிச்சது நெஜமாயிருந்தாகாதல் போயிடிச்சின்னா செத்துத்தான் போகணும் ஐசு. நான் அதுக்குத் தயாராத்தான் வந்தேன். இப்ப உங்க அப்பாவோட ஆளுங்க என் வேலையை சுளுவாக்கிட்டாங்க என்று சொல்லி பக்கத்தில் இருக்கும் கத்தியை எடுத்து தன் இதயத்தில் செருகிக் கொள்கிறான். பீறீட்டுச் சிதறும் ரத்தத்தில் ஒரு துளி ஐஸ்வர்யாவின் நெற்றியில் தெறிக்கிறது. முருகன் அதைத் தன் சுட்டு விரலால் துடைத்தெறிகிறான். உன் கூட வாழற பாக்கியம் தான் எனக்குக் கிடைக்கலை. உன் மடியில சாகற பாக்கியமாவது கிடைச்சுதே என்று சொல்லித் தன் உயிரை விடுகிறான்.

அவன் உயிர் தன் மடியில் போனதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடையும் ஐஸ்வர்யாபத்து வருஷத்துக்கு முன்னால உன்னை நான் காதலிக்காம இருந்திருந்தா நீ பைத்தியமாகியிருக்க மாட்ட. ஐஞ்சு வருஷத்துக்கு முன்னால உன்னைப் பாக்காம இருந்திருந்தா பைத்தியமாவாவது இந்த உலகத்துல வாழ்ந்திட்டு இருந்திருப்பியே. நல்லது செய்யறேன்னு சொல்லி உன்னைக் கொன்னுட்டேனே. அன்னிக்கு காதலிச்சு உன்னை பைத்தியமாக்கினேன். இன்னிக்குக் குணமாக்கறேன்னு சாகடிச்சிட்டேனே என்று அரற்றுகிறாள். வேதனையும் குற்ற உணர்ச்சியும் முற்றிப் போய் அவளுக்கும் புத்தி பேதலித்துவிடுகிறது. என்னைக் காதலிச்ச உன்னைக் கொன்னுட்டேனே... என்னை மட்டும் காதலிச்ச உன்னைக் கொன்னுட்டேனே என்று அரற்றியபடியே அவன் உடலைக் கையில் ஏந்தியபடி ஆடை அவிழ்ந்ததுகூடத் தெரியாமல் தெருவில் போகிறாள். அனைவரும் உறைந்துபோய் நிற்கிறார்கள்.



க்ளைமாக்ஸ் -2

கார் நேராக ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு வருகிறது. அங்கு நிறைய பேர் கூடி நிற்கிறார்கள். ஐஸ்வர்யாவும் குழந்தைகளும் காரில் இருந்து இறங்குகிறார்கள். ஆனால்வீட்டுக்குள் அவர்கள் காலெடுத்து வைத்ததும் ஐஸ்வர்யாவின் கணவர் கேட்கும் முதல் கேள்வி : எங்க வந்தஐஸ்வர்யா அதைக் கேட்டதும் நிலைகுலைந்து போகிறாள். கல்யாணத்துக்கு முன்னாலயே ஓடிப்போன... அதைப் பொறுத்துக்கிட்டேன். ரெண்டு புள்ளைங்க பொறந்தப்பறமும் ஓடிப் போயிருக்கியே. இனிமே என் முகத்துல முழிக்காதே என்று பிடித்துத் தள்ளுகிறார். ஐஸ்வர்யா நடந்ததை சொல்ல வாயெடுக்கிறாள். ஆனால்அவரோ அதைக் கேட்கத் தயாரில்லை.

இதனிடையில் ஐஸ்வர்யாவின் அம்மா கொள்ளிக்கட்டையை எடுத்துக்கொண்டு ஆவேசமாக வருகிறார். படிக்கற வயசுல அரிப்பெடுத்து ஓடின... வயசுக் கோளாறுன்னு நெனெச்சோம். இப்ப ரெண்டு புள்ளயைப் பெத்தப் பொறவும் ஓடியிருக்கியே... உனக்கு அரிப்பு அடங்கலியா என்று திட்டியபடியே கொள்ளிக்கட்டையை அடி வயிற்றில் செருகப் போகிறாள். முருகன் குறுக்கே பாய்ந்து தடுக்கிறான். கூடியிருப்பவர்கள் அனைவருமே ஐஸ்வர்யாவை புழுதி வாரி இறைக்கிறார்கள். முருகன் ஒவ்வொருவர் காலிலும் விழுந்துதன் மீதுதான் தவறு என்று கெஞ்சுகிறான். நான் செய்த தவ்றுக்கு என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். மறுபடியும் பைத்தியமாகக் கூட ஆக்கிக்கொள்ளுங்கள். அல்லது அடித்துப் போட்டுக் கொல்லுங்கள்.  ஐஸ்வர்யாவை விட்டுவிடுங்கள் என்று கதறுகிறான். ஆனால்அவர்கள் அவனை எட்டி உதைக்கிறார்கள்.

ஐஸ்வர்யாவின் கணவரிடம் கடைசியாகப் போய் முருகன் கெஞ்சுகிறான். ஐஸ்வர்யா உங்களுடைய நினைப்பாவேதான் இருக்கிறாள். அவளைச் சந்தேகப்படுவது கண்ணகியைச் சந்தேகப்படுவதற்க்கு சமம். அவளை நம்புங்கள் என்று கெஞ்சுகிறான். போடா... ரெண்டு பேரும் சேர்ந்து நாடகமா ஆடறீங்க. உனக்கு புத்தி சரியாகி ஆறு மாசம் ஆயிருக்கு. அவளுக்குத் தெரிஞ்சும் அதை என்கிட்ட மறைச்சிருக்கா. என் ரெண்டு புள்ளகளையுமே அவ எனக்குத்தான் பெத்தாளான்னு இப்ப சந்தேகமாக இருக்கிறது என்று காறி உமிழ்கிறார்.

அதைக் கேட்டதும் ஐஸ்வர்யாவுக்கு மூச்சே நின்றுவிடும்போல் ஆகிவிடுகிறது. பூமியே பிளந்ததுபோல் தலைசுற்றி விழுகிறாள். முருகன் அவருடைய காலில் விழுந்து அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். நான்தான் அவளை மிரட்டிச் சொல்லவிடாமல் தடுத்தேன். எனக்கு மறுபடியும் பைத்தியம் பிடிச்சிடும்னு பயந்துதான் அவ சொல்லலை. இப்போது கூட நான்தான் அவளையும் குழந்தைகளையும் கடத்திக்கொண்டு போனேன். அவளை நீங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கெஞ்சுகிறான். காலால் அவனை எட்டி உதைக்கிறார்.

தடுமாறிக் கீழே விழும் முருகனை ஒரு கரம் தூக்கிவிடுகிறது. அவிழ்ந்த கூந்தலை அள்ளிச் செருகியபடி ஐஸ்வர்யாகண்ணகிபோல்  நின்றுகொண்டிருக்கிறாள். நீ யார் கிட்டயும் மன்னிப்பு கேட்க வேண்டாம். உன்னை மன்னிக்கற அருகதை இங்க எந்த நாய்க்கும் கிடையாது. வா நாம போவோம். பெத்து வளர்த்த ஆத்தாவுக்கு புள்ள மேல நம்பிக்கை இல்லை. தொட்டுத் தாலி கட்டி குடும்பம் நடத்தினவனுக்கு பொண்டாட்டி மேல நம்பிக்கை இல்லை. இனி இங்க ஒரு நிமிஷம் இருந்தாலும் என் தலை வெடிச்சிடும். இவன் கூட இத்தனை நாள் வாழ்ந்ததை நினைச்சாலே என் உடம்பெல்லாம் கூசுது என்று சொல்லியபடியே தன் குழந்தைகளைப் பார்த்துஅம்மா மேல தப்பு இல்லைன்னு நீங்க நம்பறீங்க இல்லையா என்று கேட்கிறாள். குழந்தைகள் ஆம் என்று  தலையாட்டுகின்றன. வாங்க என் கூட என்று அவர்களை அழைத்துக் கொள்கிறாள். போவதற்கு முன் தன் தாலியை அறுத்து கணவனின் முகத்தில் வீசுகிறாள். முருகனைக் கையைப் பிடித்து இழுத்தபடியே குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு புறப்படுகிறாள். முருகன் திக் பிரமை பிடித்தபடியே அவள் பின்னால் போகிறான். அனைவரும் உறைந்து போய் நிற்கிறார்கள்.
  

No comments:

Post a Comment