Thursday, 14 November 2013

வட்டச் செயலாளர் வண்டு முருகன் : பாகம் - 3

மத்திய அரசு இரு மாநில முதல்வர்களையும் பேசி பிரச்னையைத் தீர்க்கும்படி கேட்டுக்கொள்ளும்.

இரு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், நீர் மேலாண்மை நிபுணர்கள், அரசியல் நோக்கர்கள் எல்லாரும் கலந்துகொண்டு தங்கள் தரப்பு வாதங்களை முன்வைப்பார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் தான் காவிரி நதி உற்பத்தி ஆகிறது. அதில் இருந்து கிடைக்கும் தண்ணீரை ஆந்திரா, கர்நாடகா, தமிழ் நாடு என மூன்று மாநிலங்கள் பங்குபோட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதியில் இதைவிட அதிக மழை பெய்கிறது. அந்த வெள்ளமெல்லாம் வீணாக அரபிக் கடலில் சென்று கலக்கிறது. அந்த மேற்குப் பகுதி நீரை கிழக்குப் பகுதிக்கு திசை திருப்பிவிட்டால், மூன்று மாநிலங்களின் தண்ணீர் பிரச்னை அடியோடு நீங்கிவிடும் என்று காந்தியவாதி ஒருவர் ஒரு திட்டத்தை முன்வைப்பார். இந்தத் திட்டம் உலக வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டிருக்கிறது. ஆனால், நிதி ஒதுக்கிடுதான் கிடைக்கவில்லை. அவர்களிடமிருந்து பணம் பெறுவது எப்படி என்று தெரியவில்லை என்று சொல்வார்.

வண்டு முருகன், உலக வங்கி பிரமுகர்களைச் சென்று சந்திக்க ஏற்பாடு செய்யலாம் என்பான். உடனே எம்.ஜி.ஆர். நமது தேவையை நாமேதான் பார்த்துக்கொள்ள வேண்டும். என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில். ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில் என்று சொல்வார். அதன்படியே தமிழக, கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இருக்கும் பண முதலைகள், பெரிய நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து வேண்டிய பணம் சேகரித்துக்கொள்ள என்று முடிவெடுக்கப்படும்.

மறு நாள் வண்டு முருகன் எழுந்து வீட்டின் பால்கனியில் வந்து நிற்பவன் வீட்டின் முன்னால் தாய்க்குலங்களும் பாட்டாளிகளும் கூட்டம் கூட்டமாகக் குழுமி நிற்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துவிடுவான். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பணத்தை வண்டு முருகனிடம் கொடுப்பார்கள். ஐஞ்சும் பத்துமாகக் கசங்கிய ரூபாய்கள், சில்லரைக்காசுகள் என ஏழைகள் தங்கள் பங்கைக் கொடுக்க வந்திருப்பார்கள். வண்டு முருகன் அவர்களுடைய நல்ல மனசைப் பார்த்து கண்ணீர் விடுவான்.

ஒரு பாட்டி, திருப்பதிக்குப் போறதுக்காக உண்டியல்ல போட்டு வெச்சிருந்த பணத்தை அவர் முன்னாலேயே உடைத்து அவரிடம் கொடுப்பாள். அப்போது எம்.ஜி.ஆர். வண்டு முருகன் காதில் ஏதோ சொல்வார் (ஓரிரு காட்சிகள் கழித்து அந்தப் பாட்டி திருப்பதியில் லகு தரிசனத்தில் பெருமாளின் முன் தாரை தாரையாகக் கண்ணீர் கசிய நிற்பது காட்டப்படும்)

அப்படியாக, தேவைக்கு அதிகமாகவே பணம் வந்து சேர்ந்துவிடவே, வெள்ளத்தைத் திருப்பி அனுப்பும் பணிகள் நடக்க ஆரம்பிக்கும். மலையில் வசிக்கும் மக்களும் நாட்டுக்கு நன்மை பயக்கும் இந்தத் திட்டத்துக்காக தங்கள் வசிப்பிடங்களை மாற்றிக்கொள்ள மனப்பூர்வமாக சம்மதிப்பார்கள். அப்படியாக, காவிரி பிரச்னை ஒரேயடியாகத் தீர்த்துவைக்கப்படும்.

அடுத்ததாகப் பள்ளிகளில் ஆங்கில வழியில் வகுப்புகள் எடுப்பதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று தமிழார்வலர்கள் மனு கொடுப்பார்கள். வண்டு முருகன் எம்.ஜி.ஆரிடம் இது தொடர்பான ஆலோசனை கேட்பார். எம்.ஜி.ஆரும் ஒன்றாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்புவரை அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் சி.டி.களாக தயாரித்து மாணவர்களுக்குத் தந்துவிடவேண்டும். யாருக்கு எது வசதியாக இருக்கிறதோ அதைப் படித்துக்கொள்ளலாம். இந்த பாடங்களை சுவாரசியமாக, பாடல்கள், சம்பந்தப்பட்ட வீடியோக்கள் என திரைத்துறையினரை விட்டு சுவாரசியமாகத் தயாரித்துத் தரும்படி கேட்டுக்கொள்வார். அதன்படியே ஆறு மாதத்தில் மிக அருமையான முறையில் அந்த சி.டி.கள் தயாரிக்கப்பட்டுவிடும். நிலா பற்றிய பாடத்தின்போது ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த காட்சிகள் இடம்பெறும். சித்தன்ன வாசல் ஓவியங்கள் என்ற பாடத்தின்போது அது தொடர்பான வீடியோக்கள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு மாணவரும் தமிழில் பார்த்துப் புரிந்துகொண்டு அதன் பிறகு ஆங்கில அறிவு வளர்வதற்காக அதை ஆங்கிலத்திலும் பார்த்துக்கொள்ள வழி செய்துதரப்படும்.

கூடவே, எந்தவொரு விஷயம் பற்றியும் அது தொடர்பான நிபுணர்களிடம் வீடியோ கான்ஃப்ரன்ஸிங் மூலம் கேள்விகள் கேட்டுத் தெரிந்துகொள்ளவும் வழி செய்து தரப்படும். சன் டி.வி.யில் ஆரம்பித்து சத்யம் டி.வி வரை அனைத்து சேனல்களும் கல்விக்கு என்று தனியாக ஒரு சேனலை ஆரம்பித்து தினமும் பாடம் சம்பந்தமாகவும் பொது அறிவு சம்பந்தமாகவும் தரமான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படும். கூடவே பத்மா சேஷாத்ரி, டான் பாஸ்கொ போன்ற முன்னணி பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் எடுப்பது நேரடி ஒளிபரப்பாக தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்படும். இதனால், தமிழகத்தின் குக்கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்குக்கூட நாட்டின் அதி உயர்ந்த பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களிடமிருந்து கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும். இதை மாணவர்கள் நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது ஆசிரியர்கள் இந்த வகுப்புகளைப் பார்த்து தங்களை மேம்படுத்திக்கொண்டு மாணவர்களுக்குக் கற்றுத் தரலாம் என்று சொல்லப்படும். அப்படியாக, தரமான கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்க வழி செய்துதரப்பட்டுவிடும். 

இதுபோன்ற செயல்களால் வண்டு முருகனின் செல்வாக்கு வெகுவாக அதிகரித்து கறுப்பு எம்.ஜி.ஆர். என்று மக்களால் கொண்டாடப்படுவான் (அப்பாடா... ஒருவழியா டைட்டிலைக் கொண்டுவந்து நுழைச்சாச்சு!).

நம்பிராஜனுக்கு நிலைமை கை மீறிப் போவது தெரிந்துவிடும். தனக்கு நெஞ்சு வலி என்று சொல்லி ஜாமீன் கேட்டு விண்ணப்பிப்பான். வெளியேவந்ததும் நேராக, வண்டு முருகனை வந்து பார்த்து ஒரு சி.டி.யைக் கொடுப்பான். அதில் வண்டு முருகன் குடித்துவிட்டுக் கும்மாளம் போட்ட காட்சிகள் இருக்கும். வண்டு முருகன் அதைப் பார்த்ததும் அதிர்ந்துவிடுவான். உனக்கு ஒரு மாசம் டயம் கொடுக்கறேன். என் மேல போட்டிருக்கற கேஸ்ல நான் நிரபராதின்னு தீர்ப்பு வரவை. அதோட நீ செஞ்ச நல்ல காரியமெல்லாம் நான் சொல்லித்தான் செஞ்சேன்னு சொல்லி ஆட்சியை என் கிட்ட ஒப்படைச்சிட்டு ஓடிடு. இல்லைன்னா இந்த கேஸட்டை ஊருக்கே போட்டுக்காட்டி உன்னை நாறடிச்சிடுவேன். நீ பொன் முட்டை போடற வாத்து. உன்னை நான் ஒரேயடியா அறுக்கமாட்டேன். ஆனா, போடற பொன் முட்டையை எல்லாம் எனக்குக் கொடுத்துடு என்று சொல்லி மிரட்டிவிட்டுச் செல்வார்.

வண்டு முருகன் வசமாக மாட்டிக்கொண்டுவிட்டதைப் புரிந்துகொள்வான். ஆனால், எம்.ஜி.ஆரோ இதுக்கெல்லாம் கவலைப்படாதே. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்வார். ஒரு மாத காலம் முடியும். வண்டு முருகன் தான் சொன்னதை செய்யவில்லை என்றதும் நம்பிராஜன், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சியினர் என அனைவரையும் அழைத்து கேஸட்டை வெளியிடுவான். அன்றைய தினம்கூட வண்டு முருகனை டீலுக்கு ஒப்புக்கொள்ள வைக்க தொலைபேசியில் பேசிக்கொண்டே இருப்பான். வண்டு முருகனோ உன்னால் முடிந்ததைச் செய்துகொள். மக்களை எப்படிச் சமாளிக்க என்பது எனக்குத் தெரியும் என்று எம்.ஜி.ஆர். தந்த தைரியத்தில் தெனாவெட்டாகச் சொல்லிவிடுவான்.

வேறு வழியில்லாமல் நம்பிராஜன் ஆத்திரத்தில் அந்த கேஸட்டை ஊடகத்தினர் முன்னால் போட்டுக்காட்டுவார். ஆனால், அந்த கேஸட்டில் வண்டு முருகனுடைய லீலைகளுக்குப் பதிலாக நம்பிராஜனின் லீலைகள் இடம்பெற்றிருக்கும். நெஞ்சு வலிக்கு சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற அவர் அங்கு குடித்து, பெண்களுடன் கும்மாளம் போட்ட காட்சிகள் அந்த கேஸட்டில் இடம்பெற்றிருக்கும். எம்.ஜி.ஆர். நம்பிராஜனின் அசிஸ்டெண்டுக்கும் காட்சி தந்து இந்த வீடியோவை எடுக்க வைத்திருப்பார். அதைப் பார்த்ததும் நம்பி ராஜன் வெலவெலத்துப் போய்விடுவார். ஊடங்களுக்கு அந்த சி.டியின் காப்பியை அவசரப்பட்டு தந்திருப்பார். ஒரு வார காலத்துக்கு ஊடகங்கள் நம்பிராஜனைப் போட்டு நாறடித்துவிடுவார்கள். இவையெல்லாம் கிராபிக்ஸில் செய்தவை நான் இல்லை என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்ப்பான். அவன் போகும் இடங்களில் எல்லாம் தாய்மார்கள், செருப்பாலும் விளக்கமாத்தாலும் அவனை அடித்து விரட்டுவார்கள்.

வண்டு முருகனைக் கொல்வதைத்தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு நம்பிராஜன் வருவார். வண்டு முருகன் சென்னை மியூசியத்தில் நவீன வசதிகளை அறிமுகப்படுத்தியிருப்பான். ஒரு நாள் இரவில் அதைச் சென்று பார்த்துவிட்டுவர விரும்புவான். தன்னுடைய பூனைப்படையுடன் அங்கு செல்வான். அவன் அப்படி அங்கு செல்லப் போவதைத் தெரிந்துகொள்ளும் நம்பிராஜன், தனது அடியாட்களை அதே உடையில் சென்று அவனைக் கொன்றுவிடச் சொல்லி அனுப்பிவைப்பான். நம்பி ராஜனின் ஆட்கள், உண்மையான பூனைப்படையினரை ஒவ்வொருவராக அடித்து வீழ்த்திவிட்டு வண்டு முருகனைச் சுற்றி வளைப்பார்கள். வண்டு முருகன் அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடுவான். போலிப் பூனைப் படையினர் மியூசியத்தின் வெளியே செல்லும் வாசலில் இருக்கும் ஷட்டரை இழுத்து மூடப்போவார்கள். அப்போது சட்டென்று மின்சாரம் போய்விடும். எனினும் அவர்கள் கைவசம் டார்ச்கள் உண்டு என்பதால், அதை எரியவிட்டபடியே ஷட்டரை மூடப் போவார்கள். அப்போது ஒரு அதிசயம் நடக்கும். பள பள வென வண்ண விளக்குகள் அணைந்து அணைந்து பிரகாசிக்க, வண்டு முருகன் மதுரைமீட்ட சுந்தரபாண்டிய உடையில் சரவிளக்கைப் பிடித்துத் தொங்கியபடி பாய்ந்து வருவார். 

மாதவனுக்கு ஷட்டர் போடலாம். மன்னனுக்கு ஷட்டர் போடலாம். இந்த மன்னாதி மன்னனுக்குப் போட முடியுமாடா..? என்று கர்ஜித்தபடியே ஒரு கேடயத்தை எடுத்து வீசுவார். அது ஷட்டர் மூடப்போகும் தருணத்தில் மிகச் சரியாக அதனடியில் பாய்ந்து சொருகி அதைத் தடுக்கும். போலி பூனைப்படையினர் கைக்குக் கிடைத்த வாள்களை எடுத்தபடி வண்டு முருகனை நோக்கிப் பாய்வார்கள். அவனுடைய உடம்புக்குள் புகுந்திருக்கும் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைவரையும் சுழன்று சுழன்று பந்தாடுவார். 

அடுத்ததாக, அடி மட்டத் தொண்டனாக இருந்து மாநிலத்தின் முதல் அமைச்சராக உயர்ந்த வண்டு முருகனின் வாழ்க்கை வரலாற்றை எழுத முன்னணி பத்திரிகை முன்வருகிறது. அந்தப் பத்திரிகையில் இருந்து பார்வதி என்ற பெண் நிருபர் அந்தப் பணிக்கு நியமிக்கப்படுகிறார். வண்டு முருகன் தன் வாழ்க்கையில் நடந்த சொந்தக் கதை சோகக்கதைகளை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்வான்.

அவனுடைய தாய் தந்தையர் சிறுவயதிலேயே இறந்துவிட அக்காதான் அவனை எடுத்து வளர்த்திருப்பார். தன் பிள்ளைகளுக்கு சாப்பாடு இல்லாம இருந்தாக்கூட அவ பொறுத்துக்குவா. ஆனா, நான் ஒருவேளை பட்டினி கிடந்தாலும் அவ மனசு தாங்காது. இட்லி சுட்டு வித்து அதுல கெடைச்ச காசை வெச்சு குடும்பத்தைக் கரையேத்தினா. படிப்பு ஏறாம கட்சி, அரசியல்ன்னு திரிஞ்சப்ப எல்லாம் ஆதரவா இருந்தது அவதான். எனக்கு அவ அக்கா இல்ல. அம்மா என்று சொல்வான்.

அதன் பிறகு இள வயதில் நடந்த பல விஷயங்களை நினைவுகூர்வான். எம்.ஜி.ஆர். படத்தைப் பார்க்க காசு இல்லாமல் போகவே ரத்த தானம் செய்து அதில் கிடைத்த பணத்தை வைத்துப் படம் பார்த்த கதையைச் சொல்வான். தனது நண்பர் ஒருவர் அடிமைப் பெண் படம் பார்க்க காசு இல்லை என்றதும் குடும்பக் கட்டுப்பாடு செய்தால் பணம் கிடைக்கும் என்று சொல்லி குடும்பக் கட்டுப்பாடே செய்துகொண்டதைச் சொல்வான்.

எம்.ஜி.ஆர். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர். கையில் இருக்கும் வாள் கீழே விழுந்துவிடும்; கொலைவெறியுடன் நம்பியார் அவரைக் கொல்லப் பாய்வார். இதைப் பார்த்ததும் பதறிப் போகும் வண்டு முருகன் தன் இடையில் செருகியிருந்த கத்தியை எடுத்து ஸ்கீரீனைப் பார்த்து வீசி, வாத்யாரே இதை வெச்சு அந்த நம்பியார் தாயோளியை கொன்னு போடு என்று கூவியிருக்கிறார். வண்டு முருகன் வீசிய கத்தி திரையில் பட்டு திரை கிழிந்ததோடு நில்லாமல் தீப் பிடித்து எரிந்துபோய்விட்டதாம்.

கட்சிப் பணிகள், அரசுப் பணிகள் இவற்றுக்கு இடையே வாழ்க்கை வரலாறை எழுத போதிய நேரம் கிடைக்காது என்பதால், காரில், விமானத்தில் போகும் நேரங்களில் பேட்டி எடுப்பாள் பார்வதி. ஒருமுறை வண்டு முருகனுடன் நெடுஞ்சாலையில் காரில் போய்க்கொண்டிருக்கையில்  கிழவி ஒருத்தி காலில் செருப்பு இல்லாமல் தார் ரோட்டில் நடந்துசென்றுகொண்டிருப்பாள். அதைப் பார்த்துவிடும் எம்.ஜி.ஆர். வண்டுமுருகனிடம் காரை நிறுத்தி அந்தப் பாட்டிக்கு ஒரு ஜோடி செருப்பைக் கொடுக்கும்படிச் சொல்வார். அதன்படியே வண்டு முருகன் வண்டியை நிறுத்தி ரிவர்ஸில் வந்து அந்தப் பாட்டிக்கு பார்வதியின் செருப்பை வாங்கிக் கொடுப்பான். கூடவே பத்து ரூபாய் கட்டு ஒன்றையும் எடுத்துக்கொடுத்து அந்தப் பாட்டியைத் தன் காரிலேயே அவருடைய கிராமத்தில் இறக்கிவிடுவான் வண்டுமுருகன்.

இன்னொரு ஊரில் எம்.ஜி.ஆர். இறந்தது தெரியாமல் அவருடைய வருகைக்காக காத்திருக்கும் ஒரு பாட்டி பற்றி செய்தி தெரியவரும். அதைக் கேட்டதும் எம்.ஜி.ஆருக்கே கண் கலங்கிவிடும். நேராக அந்தப் பாட்டியின் வீட்டுக்குச் செல்வார்கள். உண்மையில் எம்.ஜி.ஆர். அந்தப் பாட்டியின் வீட்டுக்கு தேர்தல் நேரத்தில் மதிய நேரத்தில் ஒருமுறை போயிருப்பார். எப்படியும் தன் வீட்டுல சாப்பிட்டுத்தான் போகணும் என்று அந்தப் பாட்டி எம்.ஜி.ஆரிடம் பிடிவாதம் பிடித்திருப்பார். எம்.ஜி.ஆரும் இன்னொரு நாள் கட்டாயம் வந்து உன் கையால சாப்பாடு வாங்கிச் சாப்பிடறேன். இப்போ எனக்கு நிறைய இடங்களுக்குப் போகவேண்டியிருக்கு என்று சொல்லியிருப்பார்.

ஆனால், அதன் பிறகு உடல் நிலை மோசமாகி அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பியவர் இந்தப் பாட்டியை மறந்தேவிட்டிருப்பார். ஆனால், அந்தப் பாட்டியோ, எம்.ஜி.ஆரு கொடுத்த வாக்கைக் காப்பாத்தாம இருக்கமாட்டாரு. எப்படியும் என் வீட்டுக்கு வருவாரு. என் கையால ஒரு வாய் சாப்பிடாம போகமாட்டாரு என்று தினமும் அவருக்காக சாப்பாடு தயார் பண்ணி வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பார். எம்.ஜி.ஆர். இறந்துவிட்டதாக யார் சொன்னாலும் அதை நம்பாமல், அவருக்காக காத்துக்கொண்டிருப்பார். இந்த விஷயங்களைக் கேட்ட எம்.ஜி.ஆர். குழந்தைபோல் அழுவார். நேராக அந்தப் பாட்டியின் ஊருக்குச் செல்வார். பாட்டிக்கு கண் பார்வை மங்கிவிட்டது. ஆனால், எம்.ஜி.ஆரின் குரலைக் கேட்டதும் அந்தப் பாட்டி இனம் கண்டுகொண்டுவிடுவார். பாட்டிக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. வீட்டில் சமைத்து வைத்த உணவை ஆசை ஆசையாகப் பரிமாறுவார். என் ராசா... இந்தப் பாவியோட வீட்டைத் தேடி வர உனக்கு இவ்வளவு நாளாகிடிச்சா... எல்லாரும் நீ போயிட்டன்னு சொல்லி என்னை எம்புட்டு அழவெச்சாங்கன்னு தெரியுமா? எனக்குத் தெரியும். நீ சொன்ன சொல் தவறமாட்ட. நீ யாரு... நினைச்சதை முடிக்கறவனாச்சே. மன்னாதி மன்னனாச்சே என்று அவருக்கு உணவு பரிமாறுவாள். எம்.ஜி.ஆருக்கு பதிலாக வண்டு முருகன் அந்தப் பாட்டி பரிமாறும் உணவை கண்களில் நீர் வழிய சாப்பிட்டு முடிப்பான்.

இதுபோன்ற விஷயங்களையெல்லாம் பார்க்கும் பார்வதிக்கு வண்டு முருகன் மீது இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது. வண்டு முருகனுக்கும் அந்தப் பெண் மீது அதே இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. ஆனால், இருவருக்கும் வாயைத் திறந்து ஐ லவ் யூ என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது. அதனால், வண்டுமுருகன் பார்வதியைப் பார்த்து தட்டுத்தடுமாறி ஒரு விஷயத்தைச் சொல்கிறான். உன் வீட்டு மொட்டை மாடியில் வரும் வெள்ளிக்கிழமை அன்று மாலையில் ஒரு அகல் விளக்கை ஏற்றி வை. அப்படிச் செய்தால் உனக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்று புரிந்துகொள்வேன் என்று சொல்வான். பார்வதியும் எப்போதுடா வெள்ளிக்கிழமை வரும் என்று காத்திருந்து மாலை நேரம் வந்ததும் மொட்டை மாடி முழுவதும் நூற்றுக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றி வைத்து ஆவலுடன் காத்திருப்பாள். ஆனால், காதலர்களை அப்படி எளிதில் ஒன்று சேரவிட்டுவிடுமா என்ன இந்தப் பொல்லாத உலகம். இந்த முறை வண்டு முருகன் பார்வதி காதலுக்கு இடையே இயற்கை சதி செய்கிறது. மாலை ஐந்து மணிவரை அமைதியாக இருந்த வானில் திடீரென்று புயல் காற்று வீச ஆரம்பிக்கிறது. பார்வதி ஏற்றி வைத்த ஆசை விளக்குகள் ஒவ்வொன்றாக அணைய ஆரம்பிக்கிறது. பார்வது இங்குமங்கும் ஓடி ஓடி அவற்றைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார். ஆனால், மானுட சக்தியைவிட இயற்கை வலியது அல்லவா... பெரும்பாலான விளக்குகள் அணைந்துவிடுகின்றன.

வண்டுமுருகன் வரும் நேரம் வருகிறது. தூரத்தில் அவனுடைய முகம் தெரிகிறது. சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறும் உற்சாகத்தில் வருகிறான் . பார்வதி அவனுக்காக ஒற்றை விளக்கை அணையாமல் தடுத்து பாதுகாத்து வருகிறாள். தெருமுனைக்கு வண்டு முருகன் வருகிறான். அவனைப் பார்த்த உற்சாகத்தில் பார்வதி எழுந்து கைகாட்டுகிறாள். அந்தோ பரிதாபம். அந்த ஒரு நொடியில் புயல் காற்று கடைசி விளக்கையும் அணைத்துவிடுகிறது. வண்டுமுருகன் வந்து பார்க்கையில் மொட்டை மாடி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சோகமாக சிறிது நேரம் மொட்டை மாடியையே வெறித்துப் பார்ப்பவன் நடை தளர்ந்து திரும்புகிறான். அப்போது, ஒரு குரல் ஏக்கமும் உற்சாகமும் கலந்து ஓங்கி ஒலிக்கிறது... அன்பான என் காதலைச் சொல்ல அகல் விளக்கை ஏற்றச் சொன்ன மன்னவரே... அழியாத நம் காதலுக்கு அணையாத விளக்கு ஒண்ணை ஏற்றி வெச்சேன் சின்னவரே என்று சொல்லி கைகாட்டுகிறாள். இருண்ட வானில் பௌர்ணமி நிலா ஜகஜ்ஜோதியாய் பிரகாசித்தபடி  மேலே எழுகிறது. வண்டு முருகனின் உடம்பெங்கும் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறப்பதுபோல் சிலிர்க்கிறது. லட்சம் சந்திரோதயங்களின் ஒளி அவன் முகத்தில் மலர்கிறது. மாடியில் இருந்து படிகளில் தடதடவென ஓடி வருகிறாள் பார்வதி. வண்டு முருகனும் காற்று போல் பறந்து அவள் முன் வந்து நிற்கிறான். இருவரும் மூச்சு வாங்கியபடியே சிறுது நேரம் நிற்கிறார்கள். வண்டுமுருகன் அவளை பாய்ந்து அணைத்துக் கொள்கிறான் (வேறன்ன இன்னொரு எம்.ஜி.ஆர். டூயட்தான்)

இதனிடையில் வண்டு முருகனின் அக்காவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது. பார்வதியையும் அழைத்துக் கொண்டு உடனே வண்டு முருகன் அவரைப் பார்க்கச் செல்கிறான். அக்காவிடம் பார்வதியைக் காட்டி திருமணத்துக்கு சம்மதம் வாங்கலாம் என்பது அவனுடைய எண்ணம். ஆனால், அங்கு அவனுக்கு ஒரு பேரிடி காத்திருக்கிறது.

மரணப் படுக்கையில் படுத்திருக்கும் வண்டு முருகனின் அக்கா, பார்வதியைப் பார்த்து சாமி படத்துக்குக் கீழே இருக்கும் மஞ்சக் கயிறு ஒன்றை எடுத்து வரும்படிச் சொல்கிறாள். நம்முடைய காதல் அக்காவுக்குத் தெரிந்திருக்கிறதே என்று சந்தோஷப்படும் வண்டு முருகன் அதை விரைவாக எடுத்து வரும்படி பார்வதியைக் கேட்டுக்கொள்கிறான். அக்கா, அந்த மஞ்சக் கயிறை வண்டுமுருகனின் கையில் கொடுக்கச் சொல்கிறாள். வண்டுமுருகன் அதைக் கையில் வாங்கியதும், அவனுடைய அக்கா தலைமாட்டில் அமர்ந்திருக்கும் தன் மகளின் கழுத்தில் தாலியைக் கட்டும்படிக் கேட்டுக்கொள்கிறாள். வண்டு முருகனுக்குத் தூக்கி வாரிப்போடுகிறது. பார்வதியைத் திரும்பிப் பார்க்கிறான். அவளும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறாள். வண்டு முருகனின் அக்கா, தான் ரொம்ப காலம் வாழப் போவதில்லை. கண்ணை மூடுவதற்குள் மகளை ஒரு நல்ல இடத்தில் கொடுத்துவிட்டுப் போகவேண்டும் என்று காத்திருப்பதாகச் சொல்கிறாள்.

மரணப்படுக்கையில் படுத்தபடி அக்கா கெஞ்சிக் கேட்கும்போது அதை மறுக்கத் திராணி இல்லாமல் வண்டு முருகன் தாலியை தன் முறைப் பெண்ணின் கழுத்தில் கட்டுகிறான். பார்வதியிடம் குங்குமச் சிமிழை எடுத்துவரும்படி அக்கா கேட்டுக் கொள்கிறாள். பார்வதி தன் கண்ணீரைத் துடைத்தபடியே எடுத்து வந்து கொடுக்கிறாள். வண்டு முருகன் குங்குமத்தை எடுத்து முறைப் பெண்ணின் நெற்றியில் இடுகிறான். அவர்கள் இருவருடைய கையையும் சேர்த்து வைத்தபடியே அக்கா நிம்மதியாகக் கண் மூடுகிறாள்.

திருமணம் முடிந்த பிறகும் மாமா தன் மீது ப்ரியம் இல்லாமல் இருப்பதைப் பார்த்து முறைப் பெண் வருத்தமடைகிறாள். அவள் அவருடன் நெருங்கிப் பழக வரும்போதெல்லாம் கட்சிப் பணி, ஆட்சிப் பணி என்று எதையாவது சாக்குச் சொல்லி விலகி விலகி ஓடிவிடுகிறான். வெளியிடங்களுக்குப் போகும்போது அவளுடைய கட்டுப்பெட்டித்தனத்தினால் வண்டு முருகனுக்கு அவமானமே நேருகிறது. அதைச் சொல்லிக் காட்டியும் அவளை திட்டி விலக்குகிறான்.

வண்டுமுருகனின் நண்பர் ஒருவர் மூலமாக அவன் பார்வதியை உயிருக்கு உயிராக நேசிப்பது முறைப்பெண்ணுக்குத் தெரியவருகிறது. சோகத்தில் துவண்டுவிடுகிறாள். சில மாதங்கள் இப்படியே கழிகிறது. பிறகு ஒருநாள் தன்னுடைய பிறந்த நாள் என்று வண்டுமுருகனை ஒரு நாள் கோவிலுக்கு அழைத்துச் செல்கிறாள். வேண்டா வெறுப்புடன் வரும் வண்டு முருகன் அங்கு பார்வதியைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இருந்தும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சன்னதி முன் வந்து நிற்கிறான். பூசாரி தட்டில் ஒரு மாங்கல்யத்தைக் கொண்டு வந்து வண்டுமுருகனிடம் தருவார். வண்டு முருகன் தாலி பிரித்துக் கட்டும் சடங்கு என்று நினைத்து அதை எடுத்து முறைப்பெண் கழுத்தில் கட்டப் போகிறான். அவளோ சற்று தள்ளியிருக்கும் பார்வதியை அழைத்து, இவுக கழுத்துல கட்டுங்க மாமா... எங்க அம்மா ஒரு விவரம் இல்லாதவ. உங்களுக்கு இவுகதான் சரியான பொருத்தம். நான் பட்டிக்காடு. எனக்கு இந்த அரசியல், நாகரிகம் எல்லாம் தெரியாது. அதுவும் போக உங்க மனசுல இவுகளுக்குத்தான் இடம் இருக்கு. நீங்களே மகராசனும் மகராசியுமா வாழுங்க. ஆனா, நீங்க கட்டின இந்தத் தாலிய மட்டும் அவுக்கச் சொல்லிராதீங்க. நீங்க எனக்கு புருஷனா இருக்காவிட்டாலும் நான் உங்களுக்கு மனைவியா காலம் பூரா இருந்துட்டுப் போறேன் என்று சொல்லி இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்துவிட்டு அவர்களிடமிருந்து விடை பெற்றுச் செல்வாள்.

பார்வதி ஓடிச் சென்று அவளைக் கை பிடித்து அழைத்தபடியே முருகனுக்கு வள்ளியும் தெய்வானையும் இருந்தது மாதிரி நாம் இருப்போம் என்று சொல்வாள். வண்டு முருகன் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தபடி அவர்கள் பின்னால் செல்வான். அங்கே ஒரு சாரட் நின்று கொண்டிருக்கும். துள்ளி ஏறி பார்வதியையும் முறைப் பெண்ணையும் அள்ளி அணைத்து அருகில் அமர்த்திக் கொள்வான். ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்... கண் தேடுதே வெட்கம்... பொன் மாலை மயக்கம் என்று பாடியபடியே வானுலகங்களில் எல்லாம் சஞ்சரித்த பிறகு மறக்காமல், பூமிக்கு வந்து இரண்டு நாயகிகளுடன் இணைந்து வாழ்க்கையை ஆரம்பிப்பான்.
  
நம்பிராஜன் அடுத்த வெடி குண்டை வீசுவான். அது முன்பு வீசப்பட்டவற்றைவிட மூர்க்கத்தனமான ஒன்று.
  
(தொடரும்)