Friday, 24 April 2015

ஓ காதல் கண்மணி

ஓ காதல் கண்மணி - கதையை முன்வைத்துதாலி கட்டிக்கொண்டு வாழ்வது... தாலி கட்டாமல் வாழ்வது என்ற இரண்டு சிந்தனைகளும் இரண்டு வேறுபட்ட காலகட்டத்தின் வெளிப்பாடுகள். எளிமையாக அதை பாரம்பரியம்(பழமை), நவீனத்துவம் என்று அடையாளப்படுத்திக் கொள்ளலாம். இரண்டின் அடிப்படை வித்தியாசம் என்னவென்றால் பாரம்பரிய வாழ்க்கையில் தனி மனித ர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடையாது. அங்கு திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடக்கும் தனிப்பட்ட நிகழ்வு கிடையாது. திருமணம் செய்து கொள்பவர்களின் பெற்றோர் / உறவினர் ஆகியோரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்பவே அது தீர்மானிக்கப்படும். திருமணம் முடிந்த பிறகுதான் வாழ்க்கைத்துணையின் முகத்தையே நிமிர்ந்து பார்த்த தலைமுறை அது (பெண்கள் மட்டுமல்ல ஆண்களில் பெரும்பாலானவர்களும் அப்படித்தான்).

 பெற்றோரும் கூட தமது அனுபவம், அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் அந்த முடிவை எடுப்பது கிடையாது. அவர்கள் சார்ந்த ஜாதி, மதம், வர்க்கம் போன்றவை என்ன மதிப்பீடுகளை முன்வைத்திருக்கின்றனவோ அதற்கு ஏற்பத்தான் தங்கள் முடிவுகளை எடுக்கவும் செய்வார்கள். அப்படியாக அந்தத் திருமணம் என்பது சம்பந்தப்பட்ட ஆண், பெண்ணின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டே பெரும்பாலும் தீர்மானமாகும். ஆனால், அந்த வாழ்க்கையை காலகாலமாக நம் சமூகம் சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறது. அது எப்படி சாத்தியமானது என்றால், தேர்ந்தெடுக்கும் சுதந்தரம் மட்டும் இருந்திருக்கவில்லையே தவிர பெற்றோரும் அவர்ளை வழிநடத்திய ஜாதிய - சமூக விதிமுறைகளும் அந்த ஜோடிகள் துன்பப்படவேண்டும் என்ற நோக்கில் எதையும் சொல்லிவிடவில்லை. லட்டுவா ஜாங்கிரியா என்று தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்திருக்கவில்லையே தவிர பெற்றோர் தேர்ந்தெடுத்துக் கொடுத்தது ஒருவகை இனிப்பாகவே இருந்திருக்கிறது. வேம்பை யாரும் திணிக்கவில்லை.

பெண் வீட்டார் மாப்பிள்ளையாக வரப்போகிறவரைப் பல கோணங்களில் நன்கு அலசி ஆராய்ந்து பார்த்த பிறகே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆணின் வேலை என்ன... அந்தக் குடும்பத்தின் பொருளாதார வசதிகள் என்னென்ன... சமூக அந்தஸ்து என்ன... ஆணின் குண நலன் என்ன... நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்த பிறகே திருமணம் செய்துகொடுக்கிறர்கள். அதுபோல் ஆண் வீட்டினரும் பெண்ணைப் பற்றி பல விஷயங்களை அலசிப் பார்த்த பிறகே தேர்ந்தெடுக்கிறார்கள். இள வயது ஆணுக்கும் பெண்ணுக்கும் உலக அனுபவம் குறைவாக இருக்கும்; படிப்பறிவும் குறைவாகவே இருக்கும். எனவே வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் வந்திருக்காது. அந்த வயதில் எதிர்பாலினம் மீது ஒருவித மயக்கமும் கவர்ச்சியுமே மிகுதியாக இருக்கும். வாழ்க்கை என்பது அந்த மயக்கமும் கவர்ச்சியும் முடிந்த பிறகு தொடங்குவது. எனவே, வாழ்நாள் பூராவும் சந்தோஷமாக வாழ முடியுமா என்பதை யோசித்துப் பார்த்தே பெற்றோர் ஒரு முடிவெடுப்பார்கள்.

ஆணும் பெண்ணும் காதலிக்க விரும்பினால் சொந்த ஜாதியைச் சேர்ந்த, சம வர்க்க அந்தஸ்தில் இருக்கும் எத்தனையோ பேர் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களைப் பார்த்துக் காதலித்தால் யார்தான் தடுக்கப் போகிறார்கள். காதல் என்பது எதையும் பார்க்காமல் வரக்கூடியது என்பது உண்மைதான். ஆனால், எல்லாவற்றையும் பார்த்தபிறகும் காதல் வரமுடியும். விதி விலக்குகளுக்காக விதியை உருவாக்க முடியாது. பெரும்பான்மையின் சிந்தனைக்கு ஏற்பத்தான் விதிகள் உருவாக்கப்படும். அந்தவகையில் கடந்த கால திருமணங்கள் சமூகத்தால் தீர்மானிக்கப்பட்டதென்பது அந்தக் கால மதிப்பீடுகளின் அடிப்படையில் சரியே. தாலி அதன் குறியீடு.

இன்றைய நவீன தலைமுறை ஜாதி, வர்க்கம், உறவினர், பெற்றோர் என அனைத்தையும் அனைவரையும் தாண்டி தனி நபர் விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடியது. யாரைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதை நான் தான் தீர்மானிப்பேன் என்பதுதான் அந்தத் தலைமுறையின் குரல். தாலி கட்டிக் கொள்ளாமல் வாழ்வேன் என்பதும் ன் ஒருவகை வெளிப்பாடுதான். யாரைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதை நான் தீர்மானிப்பேன் என்பது முதல் கட்டம். நான் தேர்ந்தெடுக்கும் நபருடனும் எவ்வளவு காலம் சேர்து வாழவேண்டும் என்பதையும் நானே தீர்மானிப்பேன். திருமணம் செய்து கொண்டுவிட்டால் சாகும் வரை அவருடனேயேதான் வாழ்ந்தாகவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. இதுதான் தனிநபர் வாதத்தின் அடுத்த உரிமை கோரல். லிவிங் டுகதெர் என்று அதற்கு ஒரு பெயர் கொடுத்து திருமணத்துக்கு மாற்றாக நவீன சமுதாயம் அதை முன்னெடுக்கிறது.

உடலுறவை மையமாகக் கொண்ட அல்லது அதை உள்ளடக்கிய  மனித ஒப்பந்தங்களில் திருமணம் ஓர் எல்லையில் இருக்கிறது. விபச்சாரம் மறு எல்லையில் இருக்கிறது. இந்த இரண்டுமே சமூகத்தில் வெகு காலமாகவே இருந்துவருகின்றன. திருமணம் புனிதமானது என்று சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது, விபச்சாரம் இழிவானது முத்திரை குத்தியிருக்கிறது. இந்த இரண்டு எல்லைகளுக்கு நடுவே வேறு பலவகையான ஒப்பந்தங்களும் இருக்கின்றன. ஆசை நாயகி, தாசி என முந்தைய சமூகத்தில் இருந்தன. இன்று இரண்டாம் தாரம், சின்னவீடு என அவை இருந்துவருகின்றன. நவீன சமூகம் புதிதாக லிவிங் டுகதெர் என்ற ஓர் ஒப்பந்தத்தைக் கண்டடைந்திருக்கிறது. இந்த ஒப்பந்தங்களின் சமூக அந்தஸ்து என்பது அந்த ஒப்பந்தங்களில் ஈடுபடுபவர்கள் காமத்துக்குத் தரும் முக்கியத்துவத்தை அடிப்படையாக வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது. திருமண உறவில் காமத்துக்கு இடம் உண்டு. விபச்சாரத்தில், காமத்துக்கு மட்டுமே இடம் உண்டு.

திருமண பந்தம் பல்வேறு பொறுப்புகளையும் தன்னில் கொண்டது. இருவரும் சேர்ந்து உருவாக்கப் போகும் குடும்பத்தின் அனைத்து பொருளாதாரத் தேவைகளையும் அந்த ஆணே கவனித்துக்கொள்ளவேண்டும். பெண் வீட்டு வேலைகள் முழுவதையும் கவனித்துக் கொள்ளவேண்டும். ஆணும் பெண்ணும் வேலைக்குச் செல்வதானால் இருவருடைய உணவு, உடை, உறையுள் போன்றவற்றை இருவரும் சேர்ந்தே பார்த்துக் கொள்ளவேண்டும். இருவரும் பரஸ்பரம் மதித்து, அன்பும் அரவணைப்புடனும் வாழவேண்டும். வாழ்க்கைத்துணைவரின் குடும்பத்தினருடைய சில நியாயமான எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தாகவேண்டும். புதிய தலைமுறையை உருவாக்கி அவர்ளுடைய அனைத்து தேவைகளையும் இருவரும் பூர்த்தி செய்ய வேண்டும். விலங்குகள் பறவைகளில் குஞ்சுகளுக்கு இரை தேடக் கற்றுக் கொடுத்ததும் தனியாக அனுப்பிவிடலாம். மனித இனத்தில் அப்படி முடியாது. அதுபோலவே வாழ்க்கைத் துணைவருக்கு நல்ல வேலை வாங்கிக் கொடுத்து, திருமணம் செய்துவைத்த பெற்றோரை அவர்களுடைய முதுமையில் கவனித்துக்கொண்டாகவேண்டும். இப்படியான பொறுப்புகள் எல்லாம் திருமண பந்தத்தின் ஆதாரவிதிகள். ஆசை நாயகி, தாசி, லிவிங் டுகதெர், விபச்சாரம் ஆகியவற்றில் இந்த பொறுப்புகள் படிப்படியாகக் குறைந்துவிடும்.

மணிரத்னம் முன்வைத்திருக்கும் ஓகே கண்மணி ஒப்பந்தமானது லிவிங் டுகதர் அல்ல. விபச்சாரமும் அல்ல. விபச்சாரத்துக்கு மேலே லிவிங் டுகதெருக்குக் கீழே என்று அதை வகைப்படுத்தலாம். இளவயதினரின் கேளிக்கை மனதின் ஒருவகை வெளிப்பாடு. இன்று வெளி மாநிலங்களில் படிக்கப் போகும் மேல் தட்டு இளைஞர்கள் மத்தியில் இப்படியான ஒரு ஒப்பந்தமே நிலவுகிறது. யதார்த்தத்தில் அந்த இளைஞர்கள் தனித்தனியாகவே ஹாஸ்டலிலோ தனியாக வீடெடுத்தோ தங்கியிருப்பார்கள். டிஸ்கொதே, பார்ட்டி, டிரிங்ஸ், அவுட்டிங், டேட்டிங், ன்பச் சுற்றுலா என வார இறுதி நாட்களில் அல்லது செமஸ்டர் இறுதி நாட்களிலான அவர்களுடைய கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக உடலுறவும் நடக்கும். மணிரத்னம் அதை அப்படியே காட்டினால் சீப்பாக நினைத்துவிடுவார்களோ என்று அந்த ஜோடியை லிவிங் டுகதெர் போல் வாழ முடிவெடுப்பதாகக் காட்டியிருக்கிறார்.

உண்மையில் லிவிங் டுகதெர் என்பது முற்றிலும் மாறானது. அது மிகப் பெரிய கன்விக்ஷனோடு எடுக்கப்படும் முடிவு. அப்படி முடிவெடுப்பவர்கள் வயதான தம்பதியைப் பார்த்தெல்லாம் திருமண பந்தத்துக்குள் தஞ்சம் புகுந்துவிடமாட்டார்கள். மணிரத்னத்தின் நோக்கம் லிவிங் டுகதரில் இருந்து திருமணத்தை நோக்கி நகர்வது அல்ல என்பதால் நாம் அதைப் பற்றிப் பேச எதுவும் இல்லை. தீவிரமான விஷயங்களை மேலோட்டமாகவே எடுப்பது குறித்த விமர்சனம் வரும்போதெல்லாம் சமூகத்தில் எதிர்கொள்ள நேரும் பல நெருக்கடிகளைச் சொல்லிக் காட்டித் தன்னை நியாயப்படுத்திக் கொள்பவர், எளிய கருக்களைக் கையிலெடுக்கும்போதும் அதே நுனிப்புல் மேய்ச்சலையே மேற்கொள்வதை எப்படி நியாயப்படுத்துவார் என்று தெரியவில்லை. ஆனால், ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து அப்படியே படம் எடுத்துவருவதால் அவருடைய எல்லை அதுதான் என்று புரிந்துகொண்டு நாம் அதுபற்றி அதிகம் பேசாமல் இருப்பதுதான் நமக்கு நல்லது.
*********

உண்மையில் இந்தப் படத்தை எப்படி எடுத்திருக்கவேண்டும்..?

நவீன தலைமுறைக்குப் பாரம்பரியத் திருமண உறவின்மீது பல விமர்சனங்கள் இருக்கக்கூடும். அது வாழ்க்கையின் கொண்டாட்டங்களுக்கு எதிரானது; ஒருவனுக்கு ஒருத்தி என்று இன்பத்தைக் குறுக்கக்கூடியது; தாலி என்ற அடையாளச் சின்னத்தின் மூலம் அதை நிலை நிறுத்த விரும்புகிறது; அன்பும் மரியாதையும் இல்லாமல் போன பிறகும் சமூக நிர்பந்தங்களுக்காக உறவை நீடித்தாகவேண்டியிருக்கிறது; ஆணாதிக்கம் மிகுந்தது. அதில் போலித்தனமும் பொய்யும் கலந்திருக்கிறது. அது சுதந்தரத்தையும் சுய விருப்பு வெறுப்புகளையும் ஒடுக்கக்கூடியது. குழந்தை வளர்ப்பு என்ற இயல்பான உயிரியல் பொறுப்பை சுமை என்று தோன்றும் அளவுக்கு திணிக்கக்கூடியது என்றெல்லாம் நவீன தலைமுறை சொல்லக்கூடும். மேற்கத்திய உலகில் இந்தக் கட்டுப்பாடுகள் எதுவுமே கிடையாது. பரஸ்பரம் அன்பும் காதலும் கொண்ட இருவர் சேர்ந்து வாழ்வார்கள். காதலும் மரியாதையும் வற்றிவிட்டால் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வேறு துணையைத் தேடிச் செல்வார்கள். அதுவே கண்ணியமானது. நேர்மையானது என்று நம்மில் சிலரும் சொல்லக்கூடும்.

இப்போது ஒரு திரைப்படத்தில் தாலி கட்டிக் கொள்ளாமல் வாழ முடிவெடுக்கும் நவீன ஜோடி இந்தச் சிந்தனைகளின் அடிப்படையில்தானே அந்த முடிவை எடுக்கவேண்டும். இந்திய/இந்து தம்பதிகளின் வாழ்க்கையைப் பார்த்துத்தானே அந்த வாழ்க்கைமுறையை வெறுத்திருக்கக்கூடும். அதே இந்திய திருமண வாழ்க்கை பந்தத்தில் இருக்கும் வேறொரு தம்பதியைப் பார்த்து மனம் திருந்துகிறார்கள் என்றால் அப்படியான ஒருவரை வாழ்க்கையில் அதுவரை அவர்கள் சந்தித்திருக்கவேமாட்டார்களா என்ன..? அதிலும் இளமைத் துடிப்பு நிறைந்த காலகட்டத்தில் அவர்களுடைய சிந்தனைப்போக்கில் துணிச்சலும் விட்டேத்தித்தனமும்தான் மிகுந்திருக்கும். வயதான /உடல் நலம் குன்றிய தம்பதியைப் பார்த்தால், நமக்கு அப்படி ஒரு நிலைவந்தால் ஒரு நர்ஸை நியமித்துக்கொள்வேன். அல்லது அதி நவீன வசதிகள் கொண்ட முதியோர் காப்பகத்துக்குச் சென்று வாழ்வேன் என்றுதான் முடிவெடுக்கும்.

தாலி கட்டாமல் வாழ விரும்புவதன் அடிப்படையான காரணங்களில் ஒன்று ஒருவனுக்கு ஒருத்தி என்பதை ஏற்க மறுப்பதுதான். எனக்காக நீ உன் ஆழ்மன ஆசைகள் எதையும் விட்டுக் கொடுக்கவேண்டாம். நானும் அதுபோலவே எதையும் விட்டுக் கொடுக்கமாட்டேனென்பதுதான் முக்கிய காரணம். மணிரத்னம் காட்டும் நவீன ஜோடி பாலியல் சுதந்தரத்தை விரும்புவதாகத் தெரியவில்லை. தாலி என்ற அடையாளச் சின்னத்தை (மட்டும்) அணியாமல் அதே நேரம் அது முன்வைக்கும் அனைத்து ஒழுக்க விதிகளையும் ஏற்று வாழ்பவர்களாகவே தெரிகிறார்கள்.

குழந்தை வளர்ப்பு தொடர்பான ஒவ்வாமையும் இந்த ஜோடிகளுக்கு அவ்வளவாக இருப்பதாகத் தெரியவில்லை. தாலி கட்டாமல் வாழ முடிவெடுத்ததில் எந்தப் பெரிய வலுவான காரணமும் கிடையாது. எனவே, அதை மாற்றிக்கொண்டு தாலி கட்டிக் கொள்ள முடிவெடுத்ததற்கும் பெரிய காரணம் தேவைப்படவில்லை. மலையடிவாரத்தில் குடிசை கட்டிக் கொண்டு வாழ்பவர்களைப் பார்த்து பரிகசிக்கும் ஒருவர் அந்த மலையில் துணிந்து ஏறி, அதன் சிகரத்தில் கொடியை ப் பறக்கவிட்டுக் காட்டினால்தான் அவருடைய பரிகசிப்புக்கு அர்த்தம் இருக்கும். அதைவிட்டுவிட்டு அவரும் நாலடி தள்ளி அடிவாரத்திலேயே இன்னொரு குடிசையைக் கட்டிக் கொண்டு குடியேறினால் அதற்கு நீ முந்தைய வரிசையிலேயே இருந்து தொலைத்திருக்கலாமே என்றுதான் கேள்வி எழும்.

உண்மையில் லிவிங் டுகதரைத் தேர்ந்தெடுக்கும் ஜோடிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்னவாக இருக்கும். அந்த ஜோடியில் நிச்சயம் பெண் தான் அதிக விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். தேவடியாள் என்றுதான் ஒட்டு மொத்த சமூகமும் அந்தப் பெண்ணை முத்திரை குத்தும்.துணையாக வரும் ஆணின் ஒட்டாமல் நிற்கும் நிலை மெள்ள அவளுக்குள் அடி ஆழத்தில் ஒருவித ஏக்கத்தைக் கொண்டுவரும். காய்ச்சலாகப் படுத்திருக்கும் நிலையில் அவன் லிவிங் டுகதர் நண்பனாக அல்லாமல் கணவனாக இருந்து கவனித்துக் கொள்ளவேண்டும் என்று மனம் ஏங்கும். ஆணுக்குமே இந்த உணர்வு சற்று தாமதமாக ஏற்படும். ஆனால், நாம் நவீன மனிதர்கள் என்ற பாவனையை வலிந்து போர்த்திக்கொண்டு வாழ முற்படுவார்கள். இந்த ஏக்கமும் எதிர்பார்ப்பும் அணையில் சேகரமாகும் நீர் போல் மெள்ள மெள்ள சேகரமாகும். போலி கவுரவம், நவீன மோகம் போன்ற ஷட்டர்கள் எந்த அளவுக்கு உயரமாகவும் வலுவாகவும் உருவாகிவருகின்றனவோ அதே வேகத்தில் அதை உடைக்க விரும்பும் ஏக்கமும் எதிர்பார்ப்பும் உயர்ந்து வரும். ஒரு கட்டத்தில் அணை உடைந்து நொறுங்கும். இதுதான் லிவிங் டுகதரை மையமாக வைத்து உருவாகும் (உருவாகவேண்டிய) படத்தின் திரைக்கதைப் பாதையாக இருக்கும்.

பாலியல் சுதந்தரத்தை முன்னெடுக்கும் நாயகி அலுவலக நண்பன் ஒருவனுடன் கோவா செல்வாள். அவனோ அவளுடைய உடலை மட்டுமே நேசித்திருக்கிறான். அவளைப் பற்றிய இழிவான பார்வையை மறைத்தபடித்தான் நாடகமாடியிருக்கிறானென்பது தெரியவரலாம். இது அவளுக்கு எரிச்சலையும் வேதனையையும் தரும். சுதந்தரமாக வாழ பெண்ணுக்கு இந்த சமூகத்தில் அது எவ்வளவு எலைட் சூழலாக இருந்தாலும் இடமில்லை என்பதை அவள் உணர நேரலாம். திருமண பந்தத்துக்குள் நுழையவும் முடியாது. வெளியிலும் சந்தோஷமாக வாழ முடியாது என இருதலைக் கொள்ளி எறும்பாக அவள் தவிக்க நேரலாம்.

குழந்தை மீதான ஏக்கம் இயல்பாக அவளுக்குள் எழும். விழாக்கள், விருந்துகளில் சந்திக்கும் குழந்தைகளைவிட்டுப் பிரிய மனமில்லாமல் கால்கள் பின்னத் தொடங்கும். தனது துணைவருடன் வேறு பெண்கள் பழகுவது அடி ஆழத்தில் ஒருவித பொறாமையை உருவாக்கும். ஆணுக்கும் இதே அனுபவங்கள் நேரிடலாம்.

என்னதான் தாலி கட்டாமல் வாழ்ந்தாலும் ஒரு பெண் ஆணுடன் தானே வழப் போகிறாள். ஆணுமே ஒரு பெண்னுடன் தானே வாழப் போகிறான். இரு எதிர் துருவங்கள் ஒரே கூரையின் கீழ் சேர்ந்து வாழும்போது இயல்பான உரசல்கள் ஏற்படத்தானே செய்யும். அதுதான் ஒரு இயக்குநரின் சவால். எந்த சினிமாவுக்குப் போவது என்பதில் ஆரம்பித்து இரு நபர்களின் ஈகோவும் நலன்களும் அருவாளும் உரைகல்லுமாக தீப்பொறி பறக்க உராய்ந்துகொண்டேதான் இருக்கும்.

நமது பாரம்பரிய சமூகத்தில் 13 வயதில் திருமணம் செய்துகொண்டு 95 வயதில் தீர்க்க சுமங்கலியாக உயிர் துறந்த பாட்டி அந்த வாழ்க்கையை மன நிறைவோடு வாழ்ந்த தகவலைக் கேட்க நேரிடலாம். அல்லது அந்தப் பாட்டியுடன் பேச நேரிடலாம். மேற்கத்திய உலகில் சுதந்தரம், சுய மரியாதை, பெண்ணுரிமை என வாழ்ந்த பெண் ஒருத்தி கடைசியில் தன் வாழ்க்கையில் உணரும் வெறுமையை இவளுடன் பகிர்ந்து கொள்ளநேரிடலாம்.

 அதுமட்டுமல்லாமல், நட்பு, உறவினர் உறவு, எஜமான் - தொழிலாளி, குரு - சிஷ்யன், தலைவன் - தொண்டன், கொள்கை - கொள்கையைப் பின்பற்றுபவர் என எல்லா இடங்களிலும் பல சமரசங்களும் அதிருப்திகளும் பொய்யும், போலித்தனமும் கலந்தேதான் இருக்கின்றன. இவை அனைத்தையும் மீறித்தான் அந்த உறவுகளும் நீடிக்கின்றன. எனவே, திருமண பந்தத்தில் மட்டும் அப்படியான பலவீனம் இருப்பதாக நினைத்து அதை நிராகரிப்பதில் எந்த நேர்மையும் புத்திசாலித்தனமும் இல்லை என்று புரிந்துகொள்ள நேரிடலாம். இந்த விஷயங்களுக்கான சுவாரசியமான சம்பவங்களைக் கோர்த்து அதை காட்சி மொழியுடன் சித்திரிப்பது மணிரத்னத்துக்கு கொஞ்சம் கஷ்டமான காரியம்தான். எனவே அதை அவரிடம் அதை எதிர்பார்ப்பது தவறு என்று வேண்டுமானால் சொல்லலாமே அந்த எதிர்பார்ப்பே தவறென்று சொல்லிவிடமுடியாது.
********
ஓ காதல் கண்மணி - படத்தை முன்வைத்து

படத்தின் அடிப்படைக் கருவை மேலோட்டமாகக் கையாள்வது அவருடைய எல்லா படங்களிலும் காணப்படும் பிரச்னையும்தான். ஆனால், முந்தைய படங்களில் படமாக்கியிருக்கும் விதம் கதையைவிட மெச்சூர்டாக இருக்கும். இந்தப் படத்தில் கதைக்கரு போலவே மேக்கிங்கும் சைல்டிஷாகவே இருக்கிறது. ஆரம்பித்த பத்து நிமிடத்துக்குள் பார்வையாளரின் கவனத்தை ஈர்த்துவிடவேண்டும் என்ற பொன் விதியை இவ்வளவு பலவீனமாக வேறு எந்தப் படத்திலும் அவர் சித்திரித்ததில்லை.

ரயில் நிலையத்தில் ஒரு பெண் தற்கொலைக்கு முயற்சி செய்வதாகப் படம் தொடங்குகிறது. வெறும் பரபரப்புக்காக மட்டுமே யோசிக்கப்பட்ட காட்சி இது. படத்தில் அந்த ”தற்கொலை முயற்சி’க்குச் சொல்லப்பட்ட காரணம் படு மோசமாக இருக்கிறது. பெற்றோர் டைவர்ஸ் செய்து கொண்டதால் திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்த நாயகி யாரோ ஒருவன் அவள் பின்னால் சுற்றியதும் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்துவிடுகிறாளாம் (கடவுளே!). அவன் நாயகியின் பணத்தைப் பார்த்துத்தான் திருமணம் செய்துகொள்ள முன்வந்திருக்கிறான் என்று தெரிந்ததும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாளாம் (அய்யோ..!). அது போதாதென்று ரயிலில் விழுந்து இறக்கப் போவதுபோல் அவனை பயமுறுத்தவும் செய்தாளாம் (அய்யய்யோ)... ஏன் மணி என்ன ஆயிற்று உங்களுக்கு... இதயத்தைத் திருடாதே கிரிஜா, மவுனராகம் கார்த்திக், ரோஜா அர்விந்த்சாமி போன்றோரின் குறும்புத்தனத்தை எவ்வளவு அழகான காட்சிகள் மூலம் சித்திரித்த நீங்கள் இப்படியாகிவிட்டீர்களே.

இதுதான் இப்படியென்றால், காதல் ஜோடிகளின் ரொமான்ஸ் காட்சிகளில் எந்தப் புதுமையோ கற்பனையோ எதுவுமே இல்லை. திருமண வீடியோ கிராஃபர் அந்த ஜோடிகளை வயல்வெளியில் கடற்கரையில் நிற்க வைத்து பல கோணங்களில் சிரிக்கவைத்தும் கத்தவைத்தும் ஓடவைத்தும் குதிக்கவைத்தும் எடுக்கும் படங்களைப்போல் கற்பனை வறட்சியுடன் விரிகின்றன. குதித்துத் குதித்து ஓடினால் இளமை ததும்பும் நாயகனாகிவிடலாம் என்று பிளான் பண்ணி எம்.ஜி.ஆர். நடித்ததுபோல் உங்கள் நாயக நாயகிகளை குதித்துக் குதித்து ஓடவிட்டு ஒப்பேற்றியிருக்கிறீர்கள்.  நீங்கள் சித்திரிக்கும் ”இளமைத் துடிப்பான’ காட்சிகளை பிரமாதமாக இருப்பதாகச் சொல்லாவிட்டால் யூத் இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்து பாராட்டுபவர்களின் பொய்யுரைகளைத் தாண்டி தனிமையில் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் படங்களிலேயே நீங்கள் வேறு உயரங்களைத் தொட்டிருக்கிறீர்கள்.

படத்தின் மிகப் பெரிய பலவீனம் கணபதி அங்கிள் - பவானி ஆண்ட்டி (பிரகாஷ்ராஜ் - லீலா சாம்சன்) தம்பதிதான். கணபதி அங்கிள் தன் மனைவி (அல்சைமர் நோயால் தாக்கப்பட்டவர்) மீது பேரன்புடன் இருக்கிறார் என்பதை, அதுவும் திருமணமே வேண்டாம் என்று நினைக்கும் ஜோடியின் மனத்தையே கரைக்கும் அளவிலான அன்புடன் இருக்கிறார் என்பதைச் சித்திரிக்கும் ஒற்றைக் காட்சிகூட படத்தில் இல்லை. கண்பதி அங்கிள் பல கோணங்களில் சமையல் செய்கிறார். மனைவியை வீல் சேரில் இருந்து படுக்கையில் படுக்கவைக்கிறார். அவ்வளவுதான்.

அல்சைமர் நோயாளியைத் தனியாக எங்கும் அனுப்பக்கூடாது. இதுதான் மருத்துவர் சொல்லும் முதல் ஆலோசனை. அது படத்திலும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், வீட்டில் தனியாக விட்டுச் செல்லக்கூடாது. அப்படிச் செல்வதானால், வீட்டை நன்கு பூட்டிவிட்டுச் செல்லவேண்டும். ஃபிளாட்டின் காவலாளியிடம் அல்லது அக்கம் பக்கத்து வீட்டாரிடம் தெருவில் இருப்பவர்களிடம் எல்லாம் வெளியில் செல்லாமல் கவனித்துக் கொள்ளூம்படிச் சொல்லவேண்டும் என்பதையும் மருத்துவர் சொல்லியிருப்பார். ஆனால், படத்தில் பேரன்பு கொண்ட கணவர் மனைவி திடீர் திடீர் என்று காணாமல் போகும்படி வீட்டைத் திறந்தே போட்டுச் செல்கிறார்.

இதாவது பரவாயில்லை. அப்படி அந்த வயதான மனைவி வெளியே சென்ற நேரங்களில் எல்லாம் தற்செயலாக இளம் ஜோடியே கண்டுபிடித்துவிடுகின்றன. கணபதி அங்கிள் காணாமல் போன தன் மனைவியைத் தேடி என்ன செய்தார்/ எப்படியெல்லாம் துடித்தார் என்பதெல்லாம் படத்தில் காட்டப்படுவதே இல்லை. இதைவிடக் கொடுமை க்ளைமாக்ஸில் மற்படியும் காணாமல் போன அல்சைமர் நோயாளியைத் தேடி காதலர்கள் வண்டியில் செல்கிறார்கள். போகும் வழி முழுவதும் அவர்களுக்கு இடையிலான எரிச்சலுட்டும் ஈகோ சண்டை மட்டுமே நடக்கிறதே தவிர காணாமல் போனவரைத் தேடும் முயற்சியோ கரிசனமோ எதுவுமே இல்லை. இப்படி நான் காணாமல் போனா நீ தேடுவியா என்று கடைசியாகக் கேட்கிறாள். தேடுவேன் என்கிறான். உடனே மனம் திருந்தி திருமணம் செய்துகொண்டுவிடுகிறார்கள். வயதான தம்பதியின் அன்பு இளைய ஜோடியை மாற்றியது என்று சொல்லவேண்டுமானால், பிரகாஷ் ராஜின் தவிப்பைத்தானே காட்டியிருக்கவேண்டும். குறைந்தபட்சம் அந்த வண்டியில் அவரும் கூடவே வந்து தேடுவதாகத்தானே காட்டவேண்டும். அதுபோன்ற காட்சிகள்தானே திருமண பந்தம் இருந்தால்தான் இப்படியான நேசம் சாத்தியம் என்று இளம் ஜோடிகளுக்குப் புரியவைத்திருக்கும். அப்படியாக காதல் ஜோடிகளின் போதைக்கு ஊறுகாயாக அல்ல ஊறுகாய் வைக்கப்பட்டிருக்கும் இலை அளவுக்குக் கூட பிரகாஷ்ராஜ் தன் மனைவி மீது வைத்திருக்கும் அன்பு படத்தில் காட்டப்பட்டிருக்கவில்லை. அப்படியானால் அந்த தம்பதியை படத்தில் எதற்காகக் கொண்டுவந்தீர்கள்?

மிகவும் நேர்மையான பாரம்பரியப் பழமை சிந்தனை கொண்டவரான கணபதி அங்கிள் தன் வீட்டில் ஆறு மாத காலத்துக்கு மட்டுமே கணவன் மனைவியாக வாழப் போவதாகச் சொல்லும் ஜோடியை சேர்ந்து வசிக்கவிடுவாரா..? உடனே பெற்றோரைக் கூப்பிட்டுச் சொல்லிவிடமாட்டாரா..? அப்படியே அதைக் கண்டுகொள்ளாமல் விடுபவராக இருந்தாலும் என் வீட்டுக்குள் வைத்து எந்தக் கூத்தும் அடிக்காதே என்றுதானே சொல்வார்? இனிமையாகப் பாடிக் காட்டினால் ஒப்புக்கொண்டுவிடுவாரா..? நாயகியைக் குறைந்தபட்சம் இரவுகளில் என் வீட்டில் வந்து தங்கிக் கொள் என்றாவது சொல்லமாட்டாரா? இத்தனைக்கும் நாயகனுடைய குடும்ப நண்பர் வேறு.

செல்வந்தரான நாயகியின் அம்மா தன் வருங்கால மருமகனைப் பற்றி விசாரிப்பதென்றால் கமிஷனர் நண்பர் மூலம் சிறையில் அடைத்துவைத்துதான் விசாரிப்பாரா..? என்ன பேத்தல் இது? பெற்றோரை மீறித் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள் என்பதால் நாயகியின் அம்மாவை அவ்வளவு வில்லனாகக் காட்டித்தான் ஆகவேண்டுமா?

அப்பறம் ஆணும் பெண்ணும் லிவிங் டுகதராகவே இருந்து அன்புடன் இருக்க முடியாதா? திருமணம் செய்துகொண்டுதான் ஆகவேண்டுமா? அப்போதுதான் அன்பு செலுத்த முடியுமா..? என்ன பிற்போக்கான சிந்தனை.

லிவிங் டுகதராகக் கூட வாழவேண்டாம்... சும்மா ஜல்சா குல்சாவாகவே டைம் பாஸுக்கு வாழ்ந்து கொள்ளலாம் என்று இளைய தலைமுறைக்கு நேரடியாக ஒரு ஆலோசனையை படம் முழுவதும் கொடுத்தாகிவிட்டது. கலாசாரக் காவலர்களின் எதிர்ப்பில் இருந்து தப்பிக்க நைஸாக திருமண பந்தத்துக்குள் நுழைவதாகவும் காட்டியாகிவிட்டது. இந்த கேவலமான கழைக்கூத்தாடி ஸ்டண்டில் தொலைந்துபோனது ஒரு நல்ல கதை மட்டுமல்ல... ஒரு நல்ல இயக்குநரும்தான்.

கஷ்டப்போட்டு க்ரியேட்டிவாக மியூஸிக் போட்டும் படத்தில் சரக்கு இல்லையென்றால் எந்தப் பலனும் இல்லை என்பதை உங்கள் முந்தைய படங்களில் இருந்து கற்றுக்கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் அவரை நீங்கள் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவே நீங்கள் கூப்பிடும் போதெல்லாம் இசை அமைத்துக் கொடுத்துவருகிறார் (அப்படியும் இந்தப் படத்துக்கு படத்தின் தரத்துக்கு ஏற்பவே இசையமைத்து ஒப்பேற்றியிருக்கிறார்). பாவம் அவரை அப்படியாகத் தொடர்ந்து எமோஷனல் பிளாக் மெயில் செய்யாதீர்கள்.