Thursday, 14 November 2013

வட்டச் செயலாளர் வண்டு முருகன் - பாகம் 4

ஒரு கிராமத்தில் தேவர் பெண்ணும் தலித் பையனும் திருமணம் செய்துகொண்டிருப்பார்கள். நம்பிராஜன் அந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்குவார். தன்னுடைய ஆட்களை விட்டு தலித் பையனின் கிராமத்துக்குப் போய் துவம்சம் செய்வார். இரு பிரிவினருக்கும் இடையில் கலவரம் வெடிக்கும். நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். தென்மாவட்டங்களில் 144 தடையுத்தரவு போடப்படும். நம்பிராஜன் வட மாவட்டங்களிலும் இதுபோல் இன்னொரு கலவரத்தைத் தூண்டுவார். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் போதிய காவல்துறைப் பணியாளர்கள் இல்லாமல் திண்டாடுவார்கள்.

வண்டு முருகன் எம்.ஜி.ஆரின் ஆலோசனையின் பேரில் அனைத்து சாதி சங்கத் தலைவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பான். மேல் சாதியினர் அனைவரும் சேர்ந்துகொண்டு தலித்கள் மீது சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள். பணம் உள்ள மேல்சாதிப் பெண்களாகப் பார்த்து நாடகக் காதலில் ஈடுபட்டு அவர்களுடைய வாழ்க்கையைச் சீரழிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவார்கள். அப்போ பணம், சொத்து எதுவும் வேண்டாம்னு அந்த ஜோடிகள் சொன்னா அவங்களை விட்ருவீங்களா என்று வண்டு முருகன் எம்.ஜி.ஆர். சொல்லிக் கொடுத்தபடிக் கேட்பான். அதெப்படி முடியும். பணம் கேக்கறதும் தப்புத்தான். எங்க பொண்ணுங்களை இழுத்துட்டு ஓடறதும் தப்புத்தான். நாங்க அவங்களைவிட உசந்தவங்க என்று தேவர் சாதித்தலைவர்கள் சொல்வார்கள்.

அப்போ, அந்தப் பையனை தேவரா சாதி மாறச் சொன்னா கல்யாணம் பண்ணி வைப்பீங்களா என்று வண்டுமுருகன் கேட்பான். அதெப்படி முடியும்? சாதிங்கறது பிறப்பால வர்றதுல்ல என்று சொல்வார்கள். மதம் மாறறது சரின்னா சாதி மாறறது மட்டும் எப்படி தப்பா இருக்க முடியும்? இனிமே சாதிவிட்டு சாதி மாறித் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் இரண்டுபேரில் எந்த சாதிக்குப் போக விரும்புகிறார்களோ அந்த சாதிக்கு மாறலாம்னு சட்டம் கொண்டுவரப்போகிறேன் என்பான். காலகாலமா இருக்கற சாதியை எப்படிங்க இப்படி மாத்திக்க முடியும் என்று சாதி சங்கத் தலைவர்கள் கேட்பார்கள்.

காலகாலமா இருந்த உணவுப் பொருட்களை இழந்துட்டோம். காலகாலமா இருந்த உடைகளை விட்டுட்டோம். காலகாலமா இருந்த மூலிகை மருந்துகளை இழந்துட்டோம். காலகாலமா இருந்த பண்டிகைகளை இழந்துட்டோம். காலகாலமா இருந்த நல்ல விஷயங்களையெல்லாம் இழந்துட்டு கெட்ட விஷயத்தை மட்டும் பிடிச்சித் தொங்கிட்டு இருக்கறதுல என்ன நியாயம் இருக்கு? பழைய காலத்துல இருந்த மாதிரியேதான் இருப்போம்னா, பனை ஓலை விசிறிலதான் வீசிக்கணும். ஃபேன் போடக்கூடாது. மாட்டு வண்டிலதான் வந்து போகணும். கார் பைக்குன்னு வாங்கக் கூடாது. அரிக்கேன் லைட்டு அகல் விளக்குலதான் இருக்கணும். கரண்டை எல்லாம் கட் பண்ணிடனும். காலத்துக்கு ஏற்ப இதையெல்லாம் ஏத்துக்கிட்ட நாம இந்த சாதியை மட்டும் ஏன் பிடிச்சி தொங்கிட்டு இருக்கணும் என்று கேட்பான்.

சாதிக் கட்சித் தலைவர்கள் அவன் சொல்வதைக் கேட்கமாட்டார்கள். சாதி மாறறதுன்னா எப்படிங்க? அதுக்கு சடங்கு சம்பிரதாயம் எதுனா இருக்கா என்ன என்பார்கள். தலித் பையன் தேவர் சன்னதியில் விழுந்து வணங்கி அவர் முன்னால் தாலி கட்டட்டும். அவன் தேவர் சாதிக்கு மாறியதாக அதுவே அர்த்தம் என்பான் வண்டு முருகன். அப்ப, அந்த தேவர் சாதிப் பொண்ணை இம்மானுவேல் சேகர் சமாதியில் விழுந்து வணங்கவும் சொல்லுங்கள் என்று தலித் தலைவர்கள் குரல் எழுப்புவார்கள். அதை ஏற்றுக்கொள்ளும் வண்டு முருகன் சந்தோஷமாக காவல்துறை சகிதமாக வந்து அந்த திருமணத்தை இருவர் சன்னதியிலும் வெகு விமரிசையாக நடத்தி வைப்பான்.

ஆனால், தேவர் சாதில பிறந்த ஒரு பொண்ணு இமானுவேல் சேகரன் சன்னதியில் விழுந்து வணங்குவதா என்று கொதித்தெழும் அந்தப் பெண்ணின் அண்ணன் அவளை நடுரோட்டில் எல்லாரும் பார்க்க கண்டந்துண்டமாக வெட்டி எறிவான். அவளுடைய தலையை அறுத்து அதை ஏந்தியபடியே காவல் நிலையத்துக்குச் சென்று, நான் தேவண்டா... உசிரு பெரிசில்லடா... மானம் தாண்டா பெரிசு இந்தத் தேவனுக்கு என்று கர்ஜித்தபடியே சரணடைவான். அவனுடைய அந்த செயலுக்கு கிராமத்தினர் மலர் தூவி வாழ்த்தி ஊர்வலமாக பின்னால் வந்து ஆதரவு தெரிவிப்பார்கள்.

நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என தேவர் சன்னதியில் விழுந்து வணங்கிய தலித் பையனை தலித்கள் பெட்ரோல் ஊத்திக் கொளுத்திக் கொல்வார்கள். அதையும் ஊரே கூடி நின்று கை தட்டி எங்களுக்கும் மான ரோசம் உண்டு என்று உற்சாகத்துடன் ஆர்ப்பரித்துக் கொண்டாடுவார்கள்.

எம்.ஜி.ஆருக்கு நடக்கும் விஷயங்கள் மிகுந்த வேதனையைத் தரும். இது சரியில்ல. இதை எப்படியாவது மாத்தியே ஆகணும் என்று தவிப்பார். அப்போது, பார்வதி அக்கம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு காக்காவும் பாம்பும் கதையைச் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்ப்பார். வலிமை குறைந்த ஒருவர் வலிமை மிகுந்த ஒருவரை எதிர்க்கவேண்டுமென்றால், அவரைவிட வலிமையான ஒருவருடன் அவரை மோதவிடவேண்டும் என்ற தந்திரம் புரியவரும். சாதியை எதிர்க்கும் வலு வேறு எந்த அடையாளத்துக்கு இருக்கிறது என்று பார்ப்பார். மதத்துக்கு சாதியைவிட வலிமை அதிகம் என்பது அவருக்கு நினைவுக்கு வரும். வண்டு முருகனை அழைத்து அவன் காதில் ஒரு விஷயம் சொல்வார். மறுநாள் செய்தித்தாள்களில், வேறு சாதியில்  திருமணம் செய்து கொள்பவர்கள் எந்த மதத்துக்குப் போக விரும்புவார்களோ அந்த மதத்துக்கு மாறிக் கொள்ளலாம். அவர்கள் எந்த மதத்துக்கு மாறுகிறார்களோ  அந்த மதத்தினர் அந்த காதல் ஜோடிக்கு அடைக்கலம் தரவேண்டும் என்று செய்தி வெளியாகும்.

கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தினர் வெகு உற்சாகமாக, காதல் ஜோடிகளுக்கு பகிரங்கமாக உற்சாக அழைப்பு விடுப்பார்கள். உங்களை ஆஹா ஓஹோன்னு வழ வைப்போம்னு எல்லாம் நாங்க சொல்லலை. ஆனால், உசிரோட மனுஷனா வாழ வைக்க எங்களால முடியும். எங்க மதத்தின் கதவுகள் உங்களுக்காகத் திறந்தே இருக்கும் என்று சொல்வார்கள். இதையெல்லாம் பார்த்ததும் இந்து மதத்தலைவர்கள் அதிர்ந்துபோய்விடுவார்கள். கூட்டமாக வந்து முதலமைச்சரைச் சந்தித்து தங்கள் வருத்தத்தைத் தெரிவிப்பார்கள். அரசாங்கமே இப்படி மத மாற்றத்தை ஊக்குவிக்கலாமா என்று கோபப்படுவார்கள். நான் இந்த மதத்துக்கு மாறுங்கன்னு ஒன்ணும் சொல்லலியே. அவங்க இந்து மத்த்தை விட்டுப் போக்க்கூடாதுன்னு நீங்க நினைச்சா, அவங்க இந்துக்கள்ன்னு நீங்க நினைச்சா பாதுகாப்பை நீங்களே கொடுங்க. யார் தடுக்கப்போறாங்க என்று வண்டு முருகன் சொல்வார்.

எங்க கிட்ட அதுக்கான பண வசதியோ பிற வசதியோ கிடையாது. கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் வெளிநாட்டுல இருந்து கோடிக்கணக்குல பணம் வருது. அவங்க இந்த காதல் ஜோடிக்கு திருமணம் செஞ்சு வெச்சு வேலையும் வாங்கித் தந்து பாத்துக்க முடியும். மத மாற்றத்துக்குன்னு அவங்களுக்கு வர்ற கோடிக்கணக்கான பணத்துல இதை அவங்க எளிதா செஞ்சிருவாங்க. சிறுபான்மையினருக்குன்னு அரசு வேலைகள்ல ஆரம்பிச்சு ஸ்கூல் நடத்தறது  கம்பெனி நடத்தறதுன்னு நிறைய சலுகைகள் இருக்கு. எங்களால அவங்களை எதிர்த்து போட்டிபோடமுடியாது. இது தவறான சட்டம் இதை வாபஸ் வாங்குங்கன்னு கேட்டுக்கொள்வார்கள்.

நீங்க சொல்றதுல எல்லாம் உண்மை இல்லை. உங்களுக்கு தலித்கள் மேல அக்கறை கிடையாது. மேல் சாதி பக்கம்தான் நீங்க நிப்பீங்க. தலித்களை நீங்க மனுஷனா மதிக்கறதே கிடையாது. அதனால், மனுஷனா நடத்தற மதத்துக்கு அவங்க போக விரும்பினா அதுல என்ன தப்பு என்று கேட்பான்.

இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்துக்காரங்களுக்கு மட்டும் தலித்கள் மேல அக்கறை இருக்கா என்ன? மனுஷங்களை சம்மா நடத்தணும்னு எண்ணம் இருக்கா என்ன? அவங்களும் அதை வெறும் ஆள் பிடிக்கறதுக்கான டெக்னிக்காத்தான் வெச்சிருக்காங்க. மனுஷங்களை சமமா நடத்தறவங்கன்னா, ஒரு விஷயம் செய்யட்டுமே. பத்து கிறிஸ்தவ இஸ்லாமிய ஜோடிகளுக்கு  ஊரறிய கல்யாணம் செஞ்சு வெக்கச் சொல்லுங்க பார்ப்போம். சாதி பார்க்க்கூடாதுன்னு சொல்றீங்கல்ல. மதம் பார்க்க வேண்டாம்னு அவங்க கிட்ட சொல்லுங்க பார்ப்போம். இவ்வளவு ஏன்... காதல் ஜோடிகள் நீங்க மதம் மாறலாம்னு சொன்னீங்களே, அதுல ஒருத்தர் கிறிஸ்தவராகவும் இன்னொருத்தர் முஸ்லீமாகவும் மாறறாங்கன்னு வெச்சிப்போம். அப்போ இந்த இரண்டு மதக்காரங்களும் அந்த கல்யாணத்தை நடத்தி வெப்பாங்களா என்று கேட்பார்கள். கிறிஸ்தவ இஸ்லாமிய மதத் தலைவர்கள், தங்களோட மதத்துக்கு வந்தாத்தான்  ஏத்துப்போம். ஏன்னா ஏசுதான் பெரியவர், அல்லாதான் பெரியவர் என்று இரு பிரிவினரும் சண்டையிட ஆரம்பிப்பார்கள்.

தான் நினைத்ததைவிட பிரச்னை சிக்கலாகிக் கொண்டுவருவதை எம்.ஜி.ஆர். புரிந்துகொள்வார். அப்போது, வெளியே பாலசந்திரனின் நினைவு அஞ்சலி போஸ்டர் ஒன்று அவர் கண்ணில் படும். மாணவர் சமுதாயம் ஒன்று திரண்டு போராடிய அந்த நிகழ்வு அவருக்கு ஒரு பொறியைத் தரும். காதல் திருமணம் என்பது இளைய தலைமுறை முதிய தலைமுறைக்கு விடும் சவால்தானே. அப்படியானால், அதற்கு இளைய சமுதாயமே ஒன்று திரண்டு போராடவேண்டியதுதானே என்று லயோலா கல்லூரி நிர்வாகத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார். அவர்களோ, தங்களால் அது முடியாது என்று பின்வாங்கிவிடுவார்கள். இந்திய அரசை எதிர்த்து கோஷம் போட வாய்ப்பு இருப்பதால்தான் ஈழப் பிரச்னை பற்றியே இவர்கள் பேசுகிறார்கள். மற்றபடி இவர்களுக்கு ஈழத் தமிழர் மீது பெரிய அக்கறை ஒன்றும் கிடையாது என்று ஈழத்தமிழ் தலைவர்கள் சிலர் சொல்வார்கள்.

மாணவர்களை ஒன்று திரட்ட வேறு யார் சரியானவர்கள் என்று யோசித்து ராம கிருஷ்ண விவேகானந்த நிறுவனங்களை வண்டுமுருகன் தொடர்புகொள்வான். அவர்கள் முழு மனதுடன் முன்வருவார்கள். அப்படியாக அவர்கள் தலைமையில் வண்டு முருகன் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர்களைச் சந்திப்பார். உங்கள் ஊரில் கலப்புத் திருமணம் செய்துகொள்ள யாராவது முன்வந்தால் அவர்களுக்கு நீங்கள்தான் பாதுகாப்பு தரவேண்டும். இது உங்கள் பிரச்னை. இதற்கான தீர்வும் உங்களால்தான் முடியும். ஈழத்து பாலசந்திரனுக்கு காட்டிய ஆதரவில் நூறில் ஒரு பங்குகூட நீங்கள் தர்மபுரி இளவரசனுக்குக் காட்டவில்லையே. இது தவறு அல்லவா என்று சொல்லி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பார்.

இளைய சமுதாயம் இந்த முறை தன்னிச்சையாக வெகுண்டெழும். இது எங்கள் போராட்டம். இதை நாங்கள், முன்னெடுப்போம் என்று சூளுரைத்து ஒவ்வொரு கிராமத்திலும் காதலர் நலச் சங்கம் ஒன்றை உருவாக்கி களம் இறங்குவார்கள். சாதி வெறி தலைக்கு ஏறாத அந்த இளைய தலைமுறை காதலுக்காக உயிர் போனாலும் பரவாயில்லை என்று துணிச்சலும் போராடத் தொடங்கும். ஆரம்பத்தில் இளைஞர்களை மிரட்டி அடித்து வழிக்குக் கொண்டுவர முயற்சி செய்யும் சாதிக் கட்சித் தலைவர்கள், தமது சாதி இளைஞர்களே தமக்கு எதிராக இருப்பதைப் பார்த்து மிரண்டுவிடுவார்கள். அந்த இளைஞர்களை அடித்தால், அவர்களுடைய குடும்பத்தினரின் வெறுப்பையும் சம்பாதிக்க நேரும் என்று பயந்து ஒதுங்கிக்கொள்வார்கள். வண்டு முருகன் தலைமையில் காதலர் தினத்தன்று சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு வெகு விமரிசையாக திருமணம் நடத்தி வைக்கப்படும்.

இதைப் பார்த்து மேலும் ஆத்திரமடையும் நம்பிராஜன், அடுத்ததாக கண்டதேவியில் நடக்கும் தேரோட்டதைவைத்து பிரச்னையைக் கிளப்புவான். தலித் தலைவர்களும் கம்யூனிஸ்ட் தலைவர்களையும் சந்தித்து பேசுவான். இந்தியாவில் தலித்கள் மனிதர்களாகவே மதிக்கப்படுவதில்லை. இந்து மதம் இருக்கும்வரை தலித்களுக்கு விடிவே பிறக்காது என்று கோஷங்கள் எழுப்புவார்கள். இந்திய ஊடகங்கள் அனைத்தும் இந்தப் பிரச்னையைப் பெரிய அளவில் கொண்டுசெல்வார்கள். 

வண்டு முருகன் அவர்கள் அனைவரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவான். இந்தியக் குடிமகன்கள் அனைவரும் சமம் என்ற வகையில்  எங்களுக்கும் அந்தத் தேரை இழுக்கும் உரிமை உண்டு. இந்திய அரசு எங்களுக்கு அந்த உரிமையை மீட்டுத் தரவில்லையென்றால் நாங்கள் இந்திய குடியுரிமையையே துறந்துவிடுவோம் என்று ரேஷன் கார்ட், வாக்காளர் அட்டை முதலானவற்றை எடுத்துவந்து அவர் முன்னால் வீசிஎறிவார்கள். வண்டு முருகன் நிதானமாக அவற்றை ஒவ்வொன்றாகச் சேகரிப்பான்.

கிறிஸ்தவ மதத்துக்குள்ளும் சாதிக் கொடுமைகள் உண்டு. தனிச் சுடுகாடு, தனி சர்ச், கல்யாணம் செய்துகொள்வதில்லை என பல கொடுமைகள் உண்டு. இஸ்லாமுக்குள்ளும் இந்தக் கொடுமைகள் உண்டு இல்லையா..? அந்த மதத்தை விட்டு வெளியேறப் போறதா என்னிக்காவது நீங்க சொல்லியிருக்கீங்களா? என்று வண்டு முருகன் கேட்பான்.

இந்து மதம்தான் எல்லாவற்றுக்கும் மூல காரணம். மதம் மாறிய பிறகும் சாதி உணர்வு மாறாமல் இருக்கும் அளவுக்கு இந்து மதத்தின் விஷம் ஆழமாக ஊடுருவி இருக்கிறது என்று தலித் தலைவர்கள் சொல்வார்கள்.

காசுக்கோ வேறு எதுக்குமோ மதம் மாறலை. இந்து மதத்துல இருக்கற சாதிக் கொடுமை தாங்காமத்தான் தானாகவே மதம் மாறினதாத்தான சொல்றீங்க. அப்படின்னா மாறின மதத்துல அது இருக்கவே கூடாதே. அந்த மதத்துக்குப் போன பிறகும் அந்தக் கொடுமை இருக்கும்னு அதுக்கு யார் காரணம்? எது காரணம்?

உண்மையில இந்தப் பிரச்னையை நீங்க வேற மாதிரி பாக்கணும். தலித்கள் மதம் மாறுறதை விடுதலைச் செயல்பாடாகத்தான் பாக்கறாங்க. ஆனா, அவங்க அப்படி தப்பிச்சுப் போறது இந்து மேல் சாதிக்குப் பொறுக்கலை. அதனால, அவங்களும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறி தங்களோட அடக்குமுறையை அங்கயும் அமல்படுத்தறாங்க. அதுக்கு இத்தனை வருஷங்களா அவங்க இந்துவா இருந்ததுதான் காரணம். இன்னும் ஐம்பது 100 வருஷத்துல நிலைமை மாறிரும். அதுக்காக கிறிஸ்தவ, இஸ்லாம்மதத்துக்கு மாறறது தப்புன்னு சொல்ல முடியாது. அந்த வகையில இந்து மதத்தை விட்டும் இந்தியாவை விட்டும் வெளியேறறதுதான் தலித்களுக்கு நல்லது.

ஒரு கண்டதேவிக்காக ஒட்டு மொத்த இந்து மதத்தையும் இந்தியாவையும் எதிர்க்கணுமா என்று சொல்லும் வண்டு முருகன் அதிகாரிகளைப் பார்த்து இந்தியாவில் மொத்தம் எத்தனை ஊர்களில் தேரோட்டங்கள் நடக்கிறது என்று கேட்பான்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் எழுந்து நின்று அதற்கான பதிலைச் சொல்வார்.

தமிழகத்தில் எத்தனை தேரோட்டங்கள் நடக்கின்றன?

சுமார் நூறுக்கு மேல் இருக்கும் சார்.

அதில் பெரிய ஊர்களில் நடக்கும் தேரோட்டங்கள் எத்தனை இருக்கும்?

திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர் என 35க்கு மேல் இருக்கும் சார்.

இதில் எதிலெல்லாம் தலித்களுக்கு தேர் இழுக்கத் தடை இருக்கிறது?

எதிலுமே கிடையாது சார். தங்கத்தேர் இழுக்கக்கூட அவர்களுக்கு அனுமதி உண்டு.

ஆக, இந்தியாவிலும் சரி, இந்து மதத்திலும் சரி நடக்கும் தேரோட்டங்களில் 99 சதவிகித விழாக்களில் தலித்களுக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. கண்டதேவி போல் ஒரு சில இடங்களில் மட்டும்தான் இப்படி நடக்கிறது இல்லையா? என்று தலித் தலைவர்களைப் பார்த்துக் கேட்பான்.

அவர்கள் வாய் மூடி மவுனமாக இருப்பார்கள்.

கண்ட தேவியில் தலித்களைத் தேர் இழுக்க அனுமதிக்க வேண்டியது நியாயமே... அரசு அதற்கான உதவியை நிச்சயம் செய்யும். அதே நேரம் நீங்களும் நீட்டப்படும் நட்புக் கரங்களைப் பற்றிக் கொள்வது அவசியம் என்று சொல்லிவிட்டு தேர் இழுக்கவிடாமல் தடுக்கும் அம்பலக்காரர்களை நோக்கிப் பேசுவான்.

நாட்டில் இருக்கும் அனைத்து கோவில் தேரோட்டங்களிலும் தலித்கள் பங்கு பெற அனுமதிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் மட்டும் ஏன் தடுக்கிறீர்கள்?

எங்களுடைய தேரை நாங்கள் மட்டுமே இழுப்போம். அது எங்களுடைய உரிமை. பாரம்பரியம். இதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

உங்கள் கிராமத்தில் தீண்டாமை உண்டா?

எங்கள் கிராமங்களில் நாங்கள் தீண்டாமை கடைப்பிடிப்பது கிடையாது.

உங்கள் தெருவுக்குள் நுழையக்கூடாது என்று தடுப்பதுண்டா?

கிடையாது.

செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். சைக்கிளில் ஏறிச் செல்லக்கூடாது என்று சொல்கிறீர்களா?

இல்லை.

இரட்டைக் குவளை உண்டா?

கிடையாது.

ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இவையெல்லாம் இருந்ததா?

ஆமாம்.

இப்போது அவற்றைக் கைவிட்டதுபோல் தேர் இழுக்கவும் அனுமதித்தால் என்ன?

அதுதான் அவ்வளவு விட்டுக் கொடுத்திருக்கிறோமே. அது பத்தாதா? தேவனும் பள்ளனும் சமம் என்று சொன்னால் உன் பொண்ணைக் கட்டிக் கொடு என்று கேட்பார்கள். எனவே, ஏதாவது ஒன்றில் அவர்களை விலக்கி வைத்தால்தான் நல்லது. இல்லையென்றால், தலைக்கு மேலே ஏறிவிடுவார்கள்.

இந்த விஷயங்களில் உங்களைவிட தீவிரமாக இருந்த பிராமணர்களே இன்று வெகுவாக மாறிவிட்டிருக்கிறார்கள். இன்றைக்கு பிராமணர் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்தவொரு கோவிலிலும் தலித்களை அனுமதிக்க மறுத்து யாரும் எதுவும் சொல்வதில்லை.

சிதம்பரத்தில் தேவாரம் பாடவிடுகிறார்களா என்ன?

பூஜை நேரம் தவிர மீதி நேரத்தில் தாராளமாகப் பாடலாமே. யாரும் எதுவும் சொல்வதில்லையே.

பூஜை நேரத்தில் ஏன் பாட அனுமதிப்பதில்லை.  அது சரி... கர்ப்ப கிரஹத்துக்குள்  எங்களை அனுமதிப்பார்களா?

கர்ப்ப கிரஹத்துக்குள் பூஜை செய்யும் அதிகாரம் உள்ள பிராமணரைத் தவிர வேறு பிராமணர்களுக்குக்கூட அனுமதி கிடையாதே... பிராமணர் அல்லாதவர் மீதான ஒடுக்குமுறை ஒன்றும் இல்லையே இது.

அதெல்லாம் தெரியாது. ஒவ்வொரு சாதியினருக்கும் ஒவ்வொரு உரிமை இருக்கிறது. ஒவ்வொரு பாரம்பரியம் இருக்கிறது. உடைத்துச் சொல்வதானால், ஒவ்வொரு பிரிவினருக்கும்  பிறரின் மீதான வெறுப்பு இருக்கிறது. நகமே இல்லாத மனிதர் கிடையாது. அடுத்தவரைக் கீறினால்தான் தவறு. மதத்தை எடுத்துக்கொண்டால் ஷியாவும் சன்னியும் வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டு சாகிறார்கள். ப்ராட்டஸ்டண்டும் ரோமன் கத்தோலிக்கரும் நேற்றுவரை எப்படி இருந்தார்கள்? நாங்கள் சில விஷயங்களை விட்டுக் கொடுக்கமாட்டோம். பல உயிர்களை இழக்க நேர்ந்தாலும் சரி... பல உயிர்களைக் கொல்ல நேர்ந்தாலும் சரி... எங்கள் தேரை நீ இழுக்கக்கூடாது என்று நாங்கள் சொல்வதால், பள்ளன் எதையும் இழப்பதில்லை. வேண்டுமானால், வேறு ஒரு தேரைச் செய்து இழுத்துக் கொள்ளட்டும். இந்தத் தேர் மீது கை வைக்கக்கூடாது.

சரி... வேறு ஒரு தேரை இழுக்கலாம் என்கிறீர்கள் அல்லவா... அதுபோதும். இந்த வருடத்தில் இருந்து தலித்கள் மட்டுமே இழுப்பதற்கு ஒரு தேர் அரசு சார்பில் உருவாக்கித் தரப்படும். உங்கள் தேரில் ஈஸ்வரன் எழுந்தருளட்டும். அரசின் தேரில் அம்மன் எழுந்தருளட்டும். ஈஸ்வரன் தேரை தேவர்கள் இழுக்கட்டும். அதே நாளில் அம்மன் தேரை பள்ளர்கள் இழுக்கட்டும்.

வண்டு முருகன் சொன்னதை அம்பலக்காரர்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். தலித் தலைவர்கள் முதலில் மறுப்பார்கள். ஈஸ்வரன் தேரை தேவர்களோடு சேர்ந்து இழுப்போம்; அதுவே எங்களுடைய கோரிக்கை என்று சொல்வார்கள். ஒரு பேச்சுவார்த்தையில் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நம்முடைய இலக்குகளை எட்ட முடியும். இப்போதைக்கு இதை ஒப்புக்கொள்ளுங்கள். ஐந்தாறு வருடங்களில் சுவாமி தேரையும் நீங்கள் இழுக்க நான் வழி செய்து தருகிறேன் என்னை நம்புங்கள் என்று வண்டு முருகன் சொல்கிறான். தலித் தலைவர்கள் தயக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறார்கள். போர்க்கால அடிப்படையில் ஆறே மாதத்தில் ஒட்டு மொத்த தமிழகத்தின் ஆதரவுடன் புதிய பிரமாண்ட தேர் தயாரிக்கப்படுகிறது.

தேரோட்ட நாளில் சுவாமி தேருக்கு பரிவட்டம் அம்பலத்தாருக்குக் கட்டப்படுகிறது. அம்மன் தேருக்கான பரிவட்டம் தலித் தலைவருக்குக் கட்டப்படுகிறது. தலித் பெண்கள் தமிழகம் முழுவதிலுமிருந்தும் சாரை சாரையாக பால்குடமும் முளைப்பாரியும் ஏந்தி வந்து கலந்து கொள்கிறார்கள். அம்மன் தேர் ஆடி அசைந்து பெரும் ஆரவாரத்துடன் புறப்படுகிறது. தேவர் இனப் பெண்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். அப்போது தலித் மூதாட்டி ஒருவர் தேவர் பெண்களைப் பார்த்து, வாங்க தாயி... இதுவும் உங்க தேருதான். எங்களைக் காப்பாத்தற ஆத்தா உங்களை வேண்டாம்னா சொல்லிடப் போறா... வாங்க தாயி... சாதி வேறயானாலும் நாமெல்லாம் பொம்பளைங்கதான. என்கிறார். இதைப் பார்க்கும் சில தேவரின ஆண்களும் தலித் ஆண்களும் பாய்ந்து தடுக்கிறார்கள். 

இந்த ஆம்பளைங்களோட வெட்டி வீராப்புக்கு அடங்கி இன்னும் எத்தனை நாள்தான் ஒடுங்கிக் கிடக்கணும். வாங்க தாயி. இதுவும் உங்க தேருதான். வந்து ஒரு வடத்தைப் பிடிங்க தாயி என்று அழைக்கிறாள். ஓரிரு தேவர் பெண்கள் தயங்கித் தயங்கி வருகிறார்கள். ஆத்தாவுக்கு முன்னால எல்லாரும் சமந்தேன்... வா தாயி என்று வேறு சில தலித் பெண்களும் தேவர் பெண்களை அழைத்து வருகிறார்கள். தேவர் பெண்கள் தேர் இழுக்க வந்ததைப் பார்த்ததும் பிற தலித் பெண்கள் உற்சாகத்தில் குலவையிட்டு தங்கள் சந்தோஷத்தைத் தெரிவிக்கிறார்கள். இரண்டு தரப்பு ஆண்களும் என்ன செய்வதென்று தெரியாமல் ஒதுங்கி நிற்கிறார்கள். அப்படியாக, இரண்டு தேர்களும் கம்பீரமாக வலம் வருகின்றன. உலகமே இந்த ஒற்றுமையைப் பாராட்டுகின்றன. சாதி வெறியின் சின்னமாக இருந்த கண்ட தேவி சாதி ஒற்றுமையின் சின்னமாக ஆகிறது.

(தொடரும்)