Sunday 17 November 2013

காதல் -2 பாகம் 2


யதேச்சையாக வெளியில் அழைத்துச் செல்வதுபோல் முருகனை அவன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அம்மாவைப் பார்க்க வைக்கிறார்கள். அம்மா மீதான பாசம் எப்படியும் அவனை நடிப்பதில் இருந்து வெளியில் கொண்டுவந்துவிடும். அம்மா சொல்வதைக் கேட்டு நடக்க ஆரம்பிப்பான் என்று நினைக்கிறாள். அவனுடைய அம்மாவும் முருகனின் நிலை குறித்து வருந்தி அழுகிறார். நினைவு திரும்பி அம்மான்னு ஒரு தடவை கூப்பிடமாட்டானா என்று ஏங்குகிறார். ஆனால்
முருகனோ அம்மா முன்னாலும் பைத்தியமாகவே நடிக்கிறான்.

தோழியும் ஐஸ்வர்யாவும் அவனுடைய முறைப் பெண் வீட்டுக்குச் செல்கிறார்கள். முருகனுக்குக் குணமானால் அவனைத் திருமணம் செய்து கொள்ளத் தயாரா என்று கேட்கிறார்கள். அவள் சம்மதம் என்று சொல்கிறாள். விரைவிலேயே அவனுக்குக் குணமாகிவிடும் என்று சொல்லிவிட்டு வருகிறார்கள்.

முருகனுக்கு பைக் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் கரட்டாண்டியையும் அழைத்துக்கொண்டு நால்வருமாக ஒரு ஷோரூமுக்குப் போகிறார்கள். புதிதாக வந்திருக்கும் பைக்கைப் பார்க்கும்போது முருகனுக்கு கைகள் பரபரக்கின்றன. கரட்டாண்டியை டெஸ்ட் டிரைவுக்கு வண்டியை எடுத்துச் செல்லும்படிச் சொல்கிறாள். முருகனும் பின்னால் உட்கார்ந்து கொள்கிறான். இவர்களுடைய கண் பார்வையில் இருந்து மறைந்ததும் முருகன் வண்டியை ஓட்டிப் பார்க்கிறான். பல வருடங்கள் கழித்து முதன் முதலாக வண்டியை ஓட்டுகிறன். புது வண்டி அவன் கை பட்டதும் ஜிவ்வென்று பறக்கிறது. ஆசை தீர ஓட்டிய பிறகு எதுவும் தெரியாததுபோல் பின்னால் உட்காந்து கொண்டு ஷோரூம் திரும்புகிறான்.

ஒரு நாள் இரவு நல்ல மழை பெய்கிறது. முருகனைப் பார்க்க வந்த கரட்டாண்டி மருத்துவமனையிலேயே தங்கிவிடுகிறான். மறுநாள் காலையில் காவல்துறையினர் மருத்துவமனையில் நுழைந்து கரட்டாண்டியைக் கைது செய்கிறார்கள். முந்தின நாள் இரவு நடந்த ஒரு திருட்டைச் சொல்லி அதன் பழியை கரட்டாண்டி மேல் போடுகிறார்கள். ஆனால்அவன் அந்தத் தவறைச் செய்யவில்லை. மருத்துவமனையில்தான் இருந்திருக்கிறான். அதற்கான ஒரே சாட்சி முருகன்தான். காவல்துறையினர் கரட்டாண்டியைப் போட்டு அடிக்கிறார்கள். ஆனால்முருகனோ வாயைத் திறந்து உண்மையைச் சொன்னால்தனக்கு குணமானது எல்லாருக்கும் தெரிந்துவிடும் என்று மவுனமாக இருக்கிறான். அண்ணே நான் உங்க கூடத் தானண்ணே இருந்தேன். சொல்லுங்கண்ணே என்று கரட்டாண்டி கதறுகிறன். முருகனோ பைத்தியம்போல் தனக்கு எதுவும் தெரியாது என்று நடித்தபடியே இருக்கிறான்.கரட்டாண்டியை காவலர்கள் இழுத்துச் சென்றதும் கட்டிலில் படுத்துக் கொண்டு அழுகிறான்.

முருகனுக்குக் குணமான விஷயம் தங்களுக்குத் தெரியும் என்பதை ஐஸ்வர்யாவும் அவளுடைய தோழியும் முருகனிடம் சொல்லிவிடுவது என்று முடிவெடுக்கிறார்கள். முருகன் கட்டிலில் ஏறியும் குதித்தும் பைத்தியம் போல் நடித்துக் கொண்டிருக்கிறான். மெதுவாகத் தோழி அவனுக்கு அருகில் போய் நின்று நேருக்கு நேராக உற்றுப் பார்க்கிறாள். முருகன் அவள் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்து கொள்கிறான். பைத்தியம் போல் சைகை செய்ய முயற்சி செய்கிறான். தோழிநிதானமாக உனக்கு குணமானது எங்களுக்குத் தெரியும் என்று சொல்கிறாள். முருகன் ஸ்தம்பித்துப் போகிறான். கரட்டாண்டி எல்லாத்தையும் சொல்லிட்டான்... என்கிறாள். முருகன் தலை குனிந்தபடியே இருக்கிறான். புதியதொரு வாழ்க்கையை ஆரம்பிக்கும்படி முருகனுக்கு இருவரும் ஆலோசனை சொல்கிறார்கள். வேண்டா வெறுப்பாக அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொள்வதுபோல் மவுனமாக இருக்கிறான்.

இதனிடையில் முருகனுடைய அறை முன்பு போல் அலங்கோலமாக இருக்காமல் ஒழுங்காக சுத்தமாக இருப்பதைப் பார்த்ததும் ஐஸ்வர்யாவின் கணவருக்கு சந்தேகம் வருகிறது. ஒருநாள் அவர் ஐஸ்வர்யாவுடன் அவனைப் பார்க்க மருத்துவமனைக்கு வருகிறார். முருகன் சிகிச்சைக்காக மருத்துவருடைய அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கவே இருவரும் அவனுடைய அறையில் காத்திருக்கிறார்கள். யதார்த்தமாக தன் சந்தேகத்தை ஐஸ்வர்யாவிடம் சொல்கிறார்.

முருகனுக்கு குணமாகிடிச்சுன்னு நினைக்கறேன் ஐஸ்வர்யா.

முதலில் திடுக்கிடும் ஐஸ்வர்யா எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்கிறாள். அவனுடைய அறை முன்பு போல் இல்லாமல் சுத்தமாக இருக்கிறது. அவனுடைய நடை உடை பாவனையிலும் ஒரு மாற்றம் தெரிகிறது என்று சொல்கிறார்.

அதெல்லாம் இல்லை. நான் தான் வரும்போதெல்லாம் இந்த ரூமை சரி செய்துட்டுப் போறேன் என்று சொல்லி சமாளிக்கிறாள்.

இதை வாசலில் இருந்து கேட்கும் முருகனுக்கு சந்தோஷமாக இருக்கிறது. உண்மையில் மனநல மருத்துவரான தோழி சொன்னதன்படித்தான் அவள் உடனே விஷயத்தைச் சொல்ல வேண்டாம் என்று நினைத்தாள். ஆனால்அது தெரியாத முருகன்ஒருவேளை அவள் இன்னமும் தன்னைக் காதலிக்கிறாள் போலிருக்கிறது. அதனால்தான் கணவருக்குச் சொல்லாமல் மறைக்கிறாள் என்று நினைத்துவிடுகிறான்.

ஐஸ்வர்யாவின் தோழிக்கு அவளுடைய கணவருடன் பிரச்னை ஏற்படுகிறது. டைவர்ஸ் செய்ய முடிவு செய்கிறாள். வேறொருவரைத் திருமணம் செய்து கொள்ளவும் விரும்புகிறாள். ஐஸ்வர்யாவே அவர்களுக்குத் தேவையான எல்லா உதவியையும் செய்து தருகிறாள். அதையெல்லாம் பார்க்கும் முருகன் மனதுக்குள் சிரித்துக் கொள்கிறான்.

ஐஸ்வர்யா இப்போதெல்லாம் தனியாக வராமல்முருகனின் முறைப்பெண்ணையும் அழைத்துக்கொண்டு வருகிறாள். அவளை விட்டே முருகனுக்கான எல்லா பணிகளையும் செய்ய வைக்கிறாள். முருகனுக்கு அவர்கள் செய்யும் செயல்கள் மெள்ளப் புரிய ஆரம்பிக்கிறது. இனியும் தாமதிக்ககூடாது என்று முடிவு செய்கிறான்.

ஒருநாள் முருகன் ஐஸ்வர்யாவின் வீட்டுக்குப் போகிறான். மாடியில் துணி காயப் போட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் முகத்தைப் பார்த்தபடி பேச முயற்சி செய்கிறான். அவளோ ஒவ்வொரு ஈரத்துணிக்குப் பின்னால் தன் முகத்தை மறைத்துக் கொண்டே பதில் சொல்கிறாள்.

உன் வீட்டுல கட்டாயப்படுத்தினதுனாலதான வேறொருத்தனை வேண்டா வெறுப்பா கல்யாணம் பண்ணியிருக்க. உன் அப்பாதானே என்னை இந்த நிலைக்கு ஆளாக்கினாரு. அவங்களைப் பழி வாங்க இதுதான் நல்ல சந்தர்ப்பம். வா மீண்டும் ஓடிப் போய்விடலாம் என்கிறான் முருகன்.

பழசையெல்லாம் மறந்துடு முருகா. இப்ப நான் யாருன்னு தெரியும்ல என்று சொல்லி தன் தாலியை எடுத்துக் காட்டுகிறாள்.

முருகன் தன் நெஞ்சில் பச்சை குத்தியிருக்கும் அவள் பெயரைக் காட்டுகிறான்.

இதை ஈஸியா அழிச்சிட முடியும் முருகா.

தாலியை அதை விட ஈஸியா அறுத்துட முடியும் ஐசு.

ஐஸ்வர்யா திடுக்கிட்டு பயந்து பின்வாங்குகிறாள்.

நான் கட்டிய தாலியை ஊருக்கு முன்னால அறுத்துப் போட்டாங்கள்ல. ஊருக்கு முன்னால கட்டின தாலியை என் முன்னால அறுத்துப் போட்ரு ஐசு.

அது என்னால முடியாது முருகா. இனிமே என் மனசுல உனக்கு இடம் கிடையாது.

என்ன ஐசு. இப்படிச் சொல்ற. உன் மனசுல இடம் இல்லாமலா இத்தனை நாள் பக்கத்துல இருந்து பார்த்து குணமாக்கியிருக்க. வா ஐசு... கண் காணாத இடத்துக்குப் போயிடலாம்.

நான் உன் மேல பாசமாத்தான் இருக்கேன். ஆனா அது காதல் இல்ல. ஒரு அம்மா தன் குழந்தை மேல வெச்சிருக்கறது மாதிரியான பாசம்... ரெண்டையும் போட்டுக் குழப்பிக்காத. அன்னிக்கு நீ ஒயின் ஷாப் ஓனரோட பொண்ணை காதலிச்ச. அவ செத்துட்டா. இப்ப இருக்கறது இன்னொருத்தரோட பொண்டாட்டி.

என்னிக்குமே நீ என் காதலிதான் ஐசு. ஒருவேளை உனக்கு இந்த மாதிரி புத்தி பேதலிச்சு எனக்கு ஒரு கல்யாணம் நடந்திருந்ததுன்னு வெச்சுக்கோயேன். நாலைந்து வருஷம் கழிச்சு உன்னைப் பார்த்து வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் பாத்துக்கறேன். உனக்கு கொஞ்ச நாள்ல குணமாகிடுது. அப்ப நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதா கேட்டிருந்தா நீ மாட்டேன்னு சொல்லுவியா?

அது வேற முருகா. ஆம்பளை நீ எத்தனை கல்யாணம் வேணும்னாலும் செய்யலாம். பொம்பளை அப்படிச் செய்ய முடியாது.

என்ன புள்ள... ஆம்பளைக்கு ஒரு நியாயம் பொம்பளைக்கு ஒரு நியாயம்னு பேசிக்கிட்டு இருக்க. காலம் மாறிடிச்சு ஐசு. இன்னிக்கு ஊர் உலகத்துல டைவர்ஸ் பண்ணிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு எத்தனை பேர் சந்தோஷமா இருக்காங்க. உன் ஃப்ரண்டு கூட மனசுக்குப் பிடிக்கலைன்னதும் வேறோருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கலையாநீதான அவங்களுக்குத் தேவையான எல்லா உதவியையும் செஞ்சு கொடுத்த. தைரியமா அறுத்துப் போட்டு வா புள்ள. யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. அதுவும் இல்லாம உன்னையை இந்த ஆளு கட்டிக்கும்போது கூட நீ எனக்கு பொண்டாட்டித்தான இருந்த. அறுத்துப் போட்டு கட்டி வெக்கலியா... இவன் கூட வாழ்ந்த வாழ்க்கையை ஒரு கெட்ட கனவா நெனைச்சு மறந்துடு ஐசு. நாம சென்னைக்குப் போனோம்ல. அங்க சந்தோஷமா வாழ்ந்திட்டு இருக்கோம்னு நினைச்சுக்கோ. உங்க சித்தப்பா நம்மளை ஊருக்கு கூப்பிட்டு வந்தது... என்னை அடிச்சுப் போட்டது... உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணினது... உனக்கு குழந்தைங்க பிறந்தது எல்லாமே கெட்ட கனவு புள்ள. எல்லாத்தையும் மறந்துடு.

என்ன நீ புரியாமப் பேசற... நாம ரெண்டு பேரும் காதலிச்சது எல்லாம் கனவு... மறந்துடுன்னு சொன்னா உன்னால மறக்க முடியுமா..?

என்ன ஐசு . நம்ம காதலையும் இந்த வாழ்க்கையையும் ஒண்ணா பேசற.

அது இல்லை முருகா... கனவு வேணும்னா நடக்காமப் போகலாம். ஆனா,  நடந்தது கனவாக முடியாது முருகா. நாம பிரிஞ்சதுல நீ மட்டுமா கஷ்டப்பட்ட. நானும்தான் கஷ்டப்பட்டேன். நம்ம தலைவிதி அது. யாரால மாத்த முடியும்?

அப்படி இல்லை ஐசு. விதிமண்ணாங்கட்டின்னு எல்லாம் எதுவும் கிடையாது. நம்ம வாழ்க்கை நம்ம கையிலதான். உங்க அப்பா அம்மா உன்னை எம்புட்டு நேசிச்சாங்க. நான் கூப்பிட்ட போது அவங்களையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு நீ வரலியா. அதைவிடவா உன் புருஷன் உன்னை நேசிச்சிடப் போறான். அவனைத் தூக்கிப் போட்டுட்டு வர முடியாதா என்னஎல்லாம் நம்ம கைலதான் இருக்கு ஐஸூ.

என்ன முருகா. மறுபடியும் மறுபடியும் அதையே பேசற. அப்பா அம்மாவை விட்டுட்டு வர்றதும் கட்டின புருஷனை விட்டுட்டு வர்றதும் ஒண்ணாஊர் நம்மளைக் காறித் துப்பாதா?

ஊரு என்ன ஊரு ஐசு. சீக்குப் பிடிச்ச ஊரு. அது எப்பவுமே துப்பிக்கிட்டுத்தான் இருக்கும். இதே ஊருதான் நேத்திக்கு நாம காதலிச்சு வாழப் போனபோதும் நம்மளைப் பார்த்து துப்பிச்சு. நாம வாழத்தான ஐசு போனோம். ஆனால்ஊரு அதை எப்படிச் சொல்லிச்சு... ஓடிப்போனோமாம்! ஊரு எப்பவுமே அப்படித்தான் ஐசு சொல்லும். அதை நாம் பொருட்படுத்தவே கூடாது. வந்திரு ஐசு. உன்னை பொன்னு போல பூ போல வெச்சுப் பாத்துப்பேன் ஐசு.

வேணாம் முருகா. அப்படி ஒரு எண்ணம் உன் மனசுல இருக்கவே கூடாது. இந்த எண்ணத்தோட இனிமே நீ இங்க இருக்க வேண்டாம். என் புருஷன் கிட்ட சொல்லி இப்பவே உன்னை அனுப்பி வெச்சிடறேன் என்று சொல்லிவிட்டு காலியான பக்கெட்டை எடுத்துக்கொண்டு கீழே போக முயற்சி செய்கிறாள். முருகன் உடனே அவள் காலில் விழுந்து கெஞ்சுகிறான். வேண்டாம் புள்ள. அப்படி மட்டும் செஞ்சிடாத. நான் வாழ் நாள் பூரா உன் பக்கத்துலயே இருக்கணும்னு ஆசைப்படறேன். பைத்தியமா இருந்தாத்தான் கூட இருக்க முடியும்னா அப்படியே நடிச்சிட்டுப் போறேன். என்னை வீட்டை விட்டுத் தொரத்திடாத என்று கெஞ்சுகிறான். அவனுடைய நிலையைப் பார்த்ததும் ஐஸ்வர்யாவுக்கு மனம் இளகுகிறது. இனிமே கல்யாணப் பேச்சை எடுக்கவே கூடாது என்று எச்சரிக்கிறாள். சரி என்று தலையை ஆட்டுகிறான். ஆனால்மனதுக்குள் வேறு திட்டம் தீட்டுகிறான்.

(தொடரும்) 


No comments:

Post a Comment