Thursday, 14 November 2013

வட்டச் செயலாளர் வண்டு முருகன் : பாகம் - 1


கதைச்சுருக்கத்தைத் தெரிந்துகொண்டு படிக்க விரும்புபவர்கள் இதைப்
படிக்கவும். மற்றவர்கள் நேராகக் கதைக்குள் செல்லவும்.

முதல்வன் படத்தில் அர்ஜுனுக்கு திடீர் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்ததுபோல் வட்டச் செயலாளர் வண்டு முருகனுக்கு  ஒரு வாய்ப்பு கிடைத்தால்...

இதுதான் படத்தின்  (கதையின்) ஒன் லைன். இதில் ஒருகட்டத்தில் வண்டு முருகன் உடம்பில் எம்.ஜி.ஆரின் ஆவியும் வந்து புகுந்துகொள்கிறது. அதன் பிறகு எம்.ஜி.ஆரின் ஆட்சியின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கிறது.

நகைச்சுவை, காதல், சண்டை, செண்டிமெண்ட் என நகரும் கதையில் சமூக நலன் சார்ந்த விஷயங்களையும் சேர்த்து இந்தக் கதையை எழுதியிருக்கிறேன். மது விலக்கு, காவிரி பிரச்னை, தமிழ் வழிக் கல்வி, கண்ட தேவி தேரோட்டம், கூடங்குளம், மீனவர் பிரச்னை, விவசாயப் பிரச்னை என பலவற்றுக்கான தீர்வுகளை இந்தக் கதையில் சொல்ல முயன்றிருக்கிறேன். படமாக எடுக்கப்படும்போது இவற்றில் இரண்டு மூன்றைமட்டுமே வைத்துக்கொள்ள முடியும். எவற்றை மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பதுபற்றிய வாசகர்களின் /மக்களின் முடிவைத் தெரிந்துகொள்ளவும் விரும்புகிறேன்.

மேலும்  இந்தக் கதையின் ஸ்கெலிட்டனை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு இதில் இடம்பெறும் நகைச்சுவை, சண்டை, காதல், சமூக சீர்திருத்தம் போன்ற காட்சிகளுக்கு வாசகர்கள் அவரவர் கதைகளை எழுதி அனுப்பலாம்.

இது நம்முடைய படம். நமக்கான படம். நம்மால் எடுக்கப்படும் படம். 

  
வட்டச் செயலாளர் வண்டு முருகன்

அல்லது

கறுப்பு எம்.ஜி.ஆர்.


அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டு, அந்தக் கொட்டை வளர்ந்து மரமாகி, அதில் இருந்து கிடைத்த பழத்தையும் தின்று கொட்டை போட்ட... எதற்கு நீட்டி முழக்குகிறேன். தமிழகத்தில் ஜனநாயகத்துக்கு எத்தனை வயது ஆகிறதோ அதைவிட அதிக வயதான அரசியல் தலைவரான எம்.என்.நம்பிராஜன்  (பிரகாஷ் ராஜ்) எதிர்பாராதவிதமாக ஓர் ஊழல் வழக்கில் மாட்டிக்கொண்டுவிடுகிறார். அவருடைய அரசியல் வாழ்க்கையில் இது ரொம்பவும் சகஜம்தான் என்றாலும் இந்தத் தடவை நிலைமை ரொம்பவே சிக்கலாகிவிட்டிருக்கிறது. இதனால் அவருடைய முதலமைச்சர் பதவியை இழக்க நேருகிறது.

சமீபத்தில்தான் தேர்தல் நடந்து ஆட்சியைக் கைப்பற்றியிருந்தார். கழகக் கண்மணிகள் இந்த முறை போட்ட காசை எடுக்க எப்படியும் ரெண்டு மூணு வருஷமாவது ஆகும். எனவே, உடனடியாக ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் வைக்கவும் முடியாது. அதே நேரத்தில் ஆட்சிக் கட்டிலில் வேறு யாரையும் நம்பி அமர்த்தவும் முடியாது. ஏனென்றால், அவரைச் சுற்றி இருப்பவர்களோ தோல் இருக்கப் பழத்தை முழுங்கிவிடுபவர்கள். எனவே, கைக்கு அடக்கமாக யாரையாவது ஒருவரைப் பதவியில் அமர்த்தத் தீர்மானிக்கிறார்.

சோபாவில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடி யோசித்துக்கொண்டிருப்பவர் எதிரில் இருக்கும் டீ பாயில் அனிச்சையாகக் காலைத் தூக்கிவைக்கிறார். மறுகணம், அவருக்குக் கால் அமுக்கிவிடவே பிறப்பெடுத்தவரின் இரண்டு கரங்கள் இரையைக் கொத்தப் பாயும் மீன்கொத்திபோல் கன கச்சிதமாக பாய்ந்து வருகின்றன. கால் அமுக்கிக் கால் அமுக்கிச் சிவந்த அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாருமில்லை, நம் வட்டச் செயலாளர் வண்டு முருகன்தான்.

பணிவு, விசுவாசம், நன்றியுணர்வு என்ற வார்த்தைகளுக்கு அகராதியில் அர்த்தம் என்று எதை எதையோ விளக்கி எழுதுவதற்குப் பதிலாக, வண்டு முருகனைப்போல் நடந்து கொள்ளுதல் என்று சொன்னால், அனைவருக்கும் எளிதில் புரிந்துவிடும். கையில் லட்டை வைத்துக்கொண்டு பூந்திக்காக எதற்கு அலையவேண்டும் என்று நம்பிராஜனுக்கு அந்த நிமிடத்தில் புரிகிறது. வண்டு முருகனைப் பக்கத்து நாற்காலியில் அமரும்படிச் சொல்கிறார்.

சொவத்துல மாட்டியிருக்கற சாட்டையை எடுத்து நூறு அடி வேணும்னாலும் அடிங்க... ஆனால், உங்களுக்கு சமமா உட்கார மட்டும் சொல்லாதீங்க தலைவா என்கிறார் வண்டு முருகன். தனது தேர்வு மிகவும் சரிதான் என்று உள்ளம் பூரிக்கும் நம்பிராஜன், வண்டு முருகனைத் தொட்டுத் தூக்கிக் கட்டி அணைத்துக்கொள்கிறார்.

நான் எது சொன்னாலும் நீ கேப்பியா?

என்ன தலைவா இது கேள்வி. நீங்க சொன்னீங்கன்னா, தீக்குளிக்கறதுகூட எனக்கு டீ குடிக்கறது மாதிரி தலைவா. என்ன செய்யணும்னு சொல்லுங்க. நீங்க சொல்லி முடிக்கறதுக்கு முன்னால நான் செஞ்சி முடிக்கறேன்.

இந்த நாற்காலில உட்காரு.

அவருடைய கட்டளையை மதித்து உட்கார்கிறான். தலைவர் நின்றுகொண்டிருக்க, தான் உட்கார்ந்திருக்கிறோமே என்பது திடீரென்று உரைக்கிறது. உடனே பதறியபடி எழுந்துகொள்கிறான். நம்பிராஜன் மெள்ளப் புன்முறுவல் பூக்கிறார்.

எனக்கு சமமா உட்கார மாட்டேன்னு சொன்ன. உட்கார்ந்துட்டியே.

தலைவா, இது என்ன விளையாட்டு.

எல்லாம் நல்ல விளையாட்டுத்தான். புறப்படு

என்று வண்டு முருகனைக் கையைப் பிடித்து அழைத்தபடி வாசலுக்கு விரைகிறார்.

வெளியில் நிற்கும் பாதுகாவலர்கள் சர சரவென அணிவகுக்கிறார்கள். அங்கு நிற்கும் எல்லா கார்களும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டு பூனைப் படையினர், மளமளவென காரில் ஏறிக் கொள்கிறார்கள். தன் காரில் ஏறிக்கொள்ளும் நம்பிராஜன் வண்டுமுருகனைத் அருகில் வந்து அமரச் சொல்கிறார். அவனோ, ஃபுட் போர்டில் தொங்குவதுபோல் அந்த காரில் தொங்கிக் கொண்டுவருகிறான். கார்கள் சரசரவென தலைமைச் செயலகத்துக்கு விரைகின்றன.

நம்பிராஜன் ராஜ நடை நடந்து முன்னே செல்ல வண்டு முருகன் ஓட்டமும் நடையுமாக பவ்யமாகப் பின்னால் விரைகிறான். முதலமைச்சர் என்ற பெயர் பொறித்திருக்கும் அறைக்கு முன்னால் இருவரும் வந்து நிற்கிறார்கள். நம்பிராஜன் வாயில் காப்போன்போல் ஓரமாக நின்று கொண்டு வண்டுமுருகனைத் கதவைத் திறந்து உள்ளே செல்லுமாறு சொல்கிறார். வண்டு முருகன் பயந்தபடியே கதவைத் திறந்து உள்ளே செல்கிறான். பிரமாண்ட அறையின் நடுவில் முதலமைச்சரின் சிம்மாசனம் பள பளவென ஜொலிக்கிறது. அதில் சென்று அமரும்படி நம்பிராஜன் கண்களால் கட்டளையிடுகிறார். வண்டு முருகன் ஒரு கணம் பயந்து பின்வாங்கவே, நம்பிராஜன் செல்லமாக அதட்டுகிறார். வண்டு முருகன் சிம்மாசனத்துக்கு அருகில் சென்று நிற்கிறான்.

உட்காரு என்று சிம்மக் குரலில் நம்பிராஜன் கட்டளையிடுகிறார்.

தெய்வமே... நான் எதுனா தப்பு செஞ்சிருந்தா என்னைக் கொன்னு போட்ரு. ஆனா நீ உட்கார வேண்டிய சிம்மாசனத்துல மட்டும் என்னை உட்காரச் சொல்லாதே என்று காலில் விழுகிறான்.

காலில் விழுபவனைத் தூக்கி நிறுத்தியபடியே, என்னை இந்த சிம்மாசனத்துல உட்கார விடாம பண்ணிட்டானுகளே... என்று கோபத்தில் கறுவியபடியே, நீ நான் சொல்றதைச் செய். இனிமே நீதான் முதல்வர். அதாவது இந்த உலகத்துக்கு. ஆனா, எனக்குப் பிடிக்காதமாதிரி ஏதாவது செஞ்ச அடுத்த நிமிஷமே நீ காலி. புரியுதா...

தலைவா... இது உன் உடம்பு. உன் உசிரு. இந்த உடம்புல உசிரு இருக்கற வரைக்கும் அது நீ சொன்னதைத்தான் கேட்கும். நீ சொல்றதைத்தான் செய்யும்.

நம்பிராஜன் பொதுக்குழுவைக் கூட்டி வண்டு முருகனை முதல்வர் பதவியில் அமர்த்தவிருப்பது பற்றிச் சொல்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகத் தங்கள் கருத்துகளைச் சொல்கிறார்கள்.

நமக்காவது எதையும் தாங்கும் இதயம்தான் உண்டு. வண்டு முருகனுக்கோ ஒட்டு மொத்த உடம்புமே எல்லாத்தையும் தாங்கும் வலிமை கொண்டது.

அவன், ரொம்ப நல்லவன்.

இவனுக்கு பேஸ்மெண்ட் வீக்குன்னாலும் பில்டிங் ரொம்பவே ஸ்ட்ராங்கு.

சில விஷயங்களுக்கு அவன் சரிப்பட்டு வரமாட்டான். ஆனா, இதுக்கு அவன் ரொம்பவே ஃபிட் ஆவான்.

ஆளு பார்க்கத்தான் டெரரா இருப்பானே தவிர பச்ச மண்ணு.

என ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சொல்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே உள்ளூர தாங்கள் முதலமைச்சராக ஆக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. எனினும் நம்பிராஜன் கூட்டும் பொதுக்குழுவில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதும் அவர்களுக்கு  நன்கு தெரியும். எனவே, ஏகமனதாக வண்டு முருகன் முதல்வர் பதவியில் அமர்த்தப்படுகிறான். அதன் பிறகு ஆரம்பமாகிறது வட்டச் செயலாளர் வண்டு முருகனின் பொற்கால ஆட்சி.

பதவிப் பிரமாணம் எடுத்த உடனேயே முதல் வேலையாக பிரபா ஒயின்ஸ் ஓனரை நடு ரோட்டில் அண்டர்வேரோட, சத்ரியன் படத்தில் திலகனை அரெஸ்ட் பண்ணியதுபோல், தரதரவென இழுத்து வந்து கொரில்லா செல்லில் அடைக்கிறான். பின்ன... எம்புட்டுக் குடிச்சாலும் சாணி மாதிரி சப்புன்னு இருந்தா? யாரை வேணும்னாலும் ஏமாத்தலாம். இந்த நாட்டோட முதுகெலும்பா இருக்கற குடிமகன்களை ஏமாத்தலாமா? அவங்க வயித்துல அடிச்சு சேக்கற காசு நிலைக்குமா? நிக்குமா? அதனால, பிரபா வைன்ஸ் ஓனருக்கு ஆயுள் தண்டனை. அவருக்கு மட்டுமல்ல அவரோட குடும்பத்துலயே யாரும் இனி வைன் ஷாப் வைக்கக்கூடாதுன்னு ஒரு அவசர சட்டமே பிறப்பிக்கிறான்.

போன் செய்தால் சரக்கு வீட்டுக்குக் கொண்டுவந்து தரப்படும். இதற்காக டயல் ஃபார் சரக்கு அப்படின்னு 100 தனி லைன்கள். 24 மணி நேர சாராயக் கடைகள் என அதிரடி அறிவிப்புகள் தொடர்கின்றன.

இவற்றையெல்லாம் எதிர்த்து காந்தியவாதிகள் சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் பந்தலுக்கு எதிரில் ஆளுங்கட்சி சார்பில் அனைவருக்கும் இலவச பிரியாணி கொடுக்கும் விழா நடத்துகிறான் (குவாட்டரும் உண்டு).

லாட்டரி விற்பனையை மீண்டும் ஆரம்பிக்கிறான். ஆளுங்கட்சி அறிவுஜீவிகளும் சமூக முற்போக்குப் போராளிகளும் உடல் ஊனமுற்றவர்களின் வாழ்க்கையில் அது ஏற்றிவைக்கும் ஒளி பற்றி பக்கம் பக்கமாகப் பரணி பாடுகிறார்கள்.

100 நாள் வேலை வா(ஏ)ய்ப்புத் திட்டத்தை ஆண்டு முழுவதுக்குமான திட்டமாக மாற்றுகிறான். நாளொன்றுக்கு 132 ரூபாய் சம்பளம் என்பதை 250 ஆக ஆக்குகிறான். யாரும் இனி வேலைக்கே போகவேண்டாம் என்று கிராமத்தில் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.

திரையுலகம் திரண்டுவந்து புதிய முதல்வருக்கு பாராட்டுவிழா நடத்துகிறது. ஆட்சியில் யார் இருந்தாலும் அவர்களுக்கு சலாம் போடுவது என்ற உயரிய கலைக் கொள்கையைக் கொண்டிருக்கும் அவர்கள், வண்டு முருகனின் பெர்சனாலிட்டிக்கு இணை இந்த உலகில் யாருமே இல்லை. அவர் நாலு ரஜினி, ஐந்து கமல், ஆறு சிவாஜி, ஏழு எம்.ஜி.ஆருக்குச் சமம் என்று உசுப்பேத்திவிடுகிறார்கள். அதை உண்மை என்று நம்பும் வண்டு முருகன் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போவதாக அதிரடியாக அறிவிக்கிறான்.

எந்தக் கதாநாயகியைப் போட என்று அல்லக்கைகளுடன் கூடிக் கலந்தாலோசிக்கிறான். யாரையும் விட்டு வைக்க மனமில்லை. உலகம் சுற்றும் வாலிபனில் எம்ஜியார் ஒவ்வொரு நாடாகச் செல்ல அங்கெல்லாம் ஒவ்வொரு காதலிகள் கிடைத்தது நினைவுக்கு வருகிறது. உடனே அந்தப் படத்தை ரீ மேக் செய்ய முடிவெடுக்கிறார்கள்.

மூலப்படத்தில் விஞ்ஞானியான எம்.ஜி.ஆர். மின்னலில் இருந்து சக்தியைச் சேமிக்கும் வழிமுறையைக் கண்டுபிடித்திருப்பார். வண்டு முருகன் அதை வேறுவிதமாக மாற்றி அமைத்திருப்பான். அதாவது, இந்த ரீமேக்கில் அவன் ஒரு உலகப் புகழ் பெற்ற மருத்துவராக இருப்பான். ஒரு அதிசய மாத்திரை ஒன்றைக் கண்டுபிடிப்பான். அதைச் சாப்பிட்டால் ஒரு மாதத்துக்குப் பசியே எடுக்காது. அந்த மாத்திரையை மிக குறைந்த விலையில் விற்க முடிவு செய்திருப்பான். ஆசிய, அமெரிக்க, ஐரோப்பிய, அராபிய கண்டங்கள் மட்டுமல்லாமல் அண்டார்டிக்காவின் அரசியல் தலைவர்கள், பெரு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் என உலகமே வண்டு முருகனை மொய்க்க ஆரம்பிக்கும்.

ஆனால், அவனோ ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும்படிச் சொன்ன அண்ணாவின் வழியில், அந்த மாத்திரையை உலக மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கச் செய்ய என்ன வழி என்று தேட ஆரம்பிப்பான். வில்லன்கள் அவனைக் கடத்திச் சென்றுவிடவே இண்டர்போல் அதிகாரியான அவருடைய தம்பி (டபுள் ஆக்ட், இவருக்கு பென்சில்ல வரைஞ்ச மீசை உண்டு. மருத்துவருக்கு அது கிடையாது) அவரைத் தேடிப் புறப்படுவார். போகிற கண்டங்களில் எல்லாம் ஒரு நாயகி, தூங்குகிற நாடுகளில் எல்லாம் ஒரு டூயட் என ஆழமான தேடலில் ஈடுபட்டு கடைசியில் தன் அண்ணனைக் கண்டுபிடித்து அந்த அரிய மருந்தை உலகுக்கு எப்படி சமர்ப்பிக்கிறார் என்பதுதான் மீதிக் கதை.

முன்னணி, பின்னணி நடிகைகளின் பல தூக்கம் வராத இரவுகளைத் தாண்டி படம் ஒருவழியாக வெளியாகிறது. படம் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியாகி தலைதெறிக்க ஓடுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் நின்றால் பிரதமரே ஆகிவிடுவான் என்று சொல்லும் அளவுக்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அமோக வரவேற்பு கிடைக்கிறது.

நம்பிராஜனுக்கு இதையெல்லாம் பார்த்ததும் மெள்ள பயம் ஏற்படுகிறது. முதல் வேலையாக, வண்டு முருகனுக்கு நிறைய சரக்கு ஊத்திக் கொடுத்து பல பெண்களுடன் சல்லாபத்தில் ஈடுபடுவதுபோல் வீடியோ எடுத்து வைத்துக்கொள்கிறார். பொதுவாக, அவர் எல்லா அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து மட்டுமே வாங்கி வைத்துக் கொள்வார். தனக்கு எதிராகத் திரும்பினால் வண்டு முருகனைச் சும்மா விடக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு வீடியோவை தயார்செய்து வைத்துக்கொள்வார். ஆனால், அதுபற்றி வண்டு முருகனிடம் எதுவும் சொல்லியிருக்கமாட்டார். அவன் ஏதாவது வில்லங்கம் செய்ய ஆரம்பித்தால் மட்டுமே விடியோவைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருப்பார்.

இதனிடையில் பன்னாட்டு கம்பெனியினர் நடத்தும் ஒரு விழாவுக்கு எல்லா மாநில முதலமைச்சர்களும் அழைக்கப்பட்டிருப்பார்கள். அந்தக் கூட்டத்தில் வண்டு முருகனுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த இருக்கையில் போய் எம்.என்.நம்பிராஜன் உட்கார்ந்துகொள்வார். உடனே விழா நிர்வாகிகள் அவரைப் பின்வரிசையில் போய் உட்காருமாறு சொல்வார்கள். அந்த இடத்தில் ஏதாவது சண்டையிட்டால் மேலும் அசிங்கமாகிவிடும் என்று அவரும் சிரித்தபடியே பின்வரிசையில் போய் அமர்ந்துகொள்வார்.

இந்த விஷயம் எதுவும் வண்டு முருகனுக்குத் தெரிந்திருக்காது. அவன் வந்து நேராக முதல் வரிசையில் அவனுக்கு ஒதுக்கிய இடத்தில் அமர்ந்துகொள்வான். மறுநாள் பத்திரிகைகளில் நம்பிராஜன் அவமானப்படுத்தப்பட்ட செய்தி வெளியாகியிருக்கும். பத்திரிகைகளுக்குப் போன் செய்து இந்த செய்தியை எப்படி வெளியிட்டீர்கள் என்று கோபப்படவே, வண்டு முருகன் சொல்லித்தான் வெளியிட்டோம் என்று பொய் சொல்லிவிடுவார்கள்.

அதை நம்பும் நம்பிராஜன், வண்டு முருகனை உடனே வரச்சொல்லி, சாட்டையை எடுத்து அடி அடியென பின்னி எடுத்துவிடுவார். முந்தியெல்லாம் சொல்லிட்டு அடிப்பீங்க... காரணம் என்னனு தெரிஞ்சு அடி வாங்கறது தெம்பா இருக்கும். இப்ப எதுவுமே சொல்லாம அடிக்கிறீங்களே என்று காலைப் பிடித்தபடி கதறுவான் வண்டு முருகன். எல்லாத்தையும் செஞ்சுட்டு தெரியாத மாதிரி நடிக்கறியா. நான் பின்வரிசைல உட்கார்ந்திருக்கும்போது நீ முன்வரிசைல உட்காரலாமா. அதுவும்போக என்னை அத்தனை பேருக்கு முன்னால எந்திரிச்சுப் பின்னால போன்னு சொன்னானே. நீ என்ன செஞ்சிருக்கணும். என்னை மேடையில ஏத்துங்கன்னுல்ல சொல்லியிருக்கணும். அதுகூட வேண்டாம். முன்னால வந்து உட்காருங்கன்னாவது சொல்லியிருக்கணுமா வேண்டாமா என்று அடிப்பார். இது எதுவுமே எனக்குத் தெரியாது. என்னிக்கு என்னால உங்களுக்கு இப்படி ஒரு அவமானம் நடந்துச்சோ இனி நான் உயிரோட இருக்கறதுல அர்த்தமே இல்லை. நான் செத்துப் போறேன் என்று அழுவான்.சொல்லாத. செய்... என்று நம்பிராஜன் கோபத்தில் கத்துவார். அதைக் கேட்டதும் மேலும் அதிர்ச்சியடையும் வண்டு முருகன் அழுதபடியே இறுதிவிடை பெற்றுப்போவான். மெரினா பீச்சை அடைபவன் இறப்பதற்கு முன்பாக எம்.ஜி.ஆர். சமாதிக்குச் சென்று தன் வேதனைகளையெல்லாம் கொட்டி அழுவான். சிறிது நேரம் கழித்து கண்களைத் துடைத்துக்கொண்டு எம்.ஜி.ஆரின் சமாதியில் விழுந்து வணங்குவான். எழுந்து நின்று ஓரிரு நிமிடங்கள் சமாதியையே வெறித்துப் பார்ப்பவன், இடுப்பில் இருந்து துப்பாக்கியை எடுப்பான். அதை நெற்றிப் பொட்டில் வைத்துக்கொண்டு சுடப்போவான். அப்போது திடீரென்று மின்னல் அடிக்கும். வண்டு முருகன் அதிர்ச்சியில் ஒரு கணம் தடுமாறுவான். அப்போது இருளில் இருந்து யாரோ, மு(ரு)துகா என்று கூப்பிடுவது கேட்கும். குரல் வந்த இடத்தைக் கூர்ந்து பார்ப்பான். யாரும் இருக்கமாட்டார்கள். ஏதோ பிரமை என்று நினைத்தபடி மீண்டும் துப்பாக்கியை நெற்றிப் பொட்டில் வைத்துக்கொள்வான். மீண்டும் அதே குரல் கேட்கும். திடுக்கிடுபவன், குரல் வந்த இடத்தை நோக்கி வேகமாக நடப்பான். அப்போது ஒரு அதிசயம் நடக்கும். கரு மேகக் கூட்டத்தைக் கிழித்தபடி சூரியன் உதிப்பதுபோல் இருளில் இருந்து எம்.ஜி.ஆர். வருவார்.


(தொடரும்)