Thursday 14 November 2013

வட்டச் செயலாளர் வண்டு முருகன் : பாகம் - 2

தலைவா என்று கூவியபடியே அவருடைய காலில் விழுவான் வண்டு முருகன். பதறியபடியே பின்வாங்கும் எம்.ஜி.ஆர். எனக்கு கால்ல விழறது பிடிக்காது என்று தொட்டுத் தூக்குவார். முதல்வர் பதவி எல்லாருக்கும் ஈஸியா கிடைச்சிடாது. உன் திறமைக்காக இந்தப் பதவி கிடச்சதா இல்லையாங்கறது முக்கியமில்லை. பதவி கிடைச்சதுக்கு அப்பறம் உன் திறமையை நீ வளத்துக்கிட்டயா இல்லையாங்கறதுதான் முக்கியம். அப்பாவியா இருக்கறதுல தப்பில்லை. அப்பாவியா மட்டுமே இருந்துடறதுதான் தப்பு. மக்களோட அனுமதியை வாங்கி ஆட்சிக்கு வந்துட்டு அவங்களுக்கு எந்த நல்லதும் செய்யாம இருக்கறவங்களைவிட மக்களோட அனுமதி வாங்காமலே ஆட்சிக்கு வந்து அவங்களுக்கு நல்லது செய்யறது எவ்வளவோ மேல். நீ அப்படியான ஒருத்தனா இரு என்று அறிவுரை சொல்வார்.

என்னால அது எப்படி முடியும். நம்பிராஜன் என்னை எதுவும் செய்யவிடமாட்டானே என்று வண்டு முருகன் பயப்படுவான். நான் உனக்குத் துணையாக இருக்கிறேன். நான் உயிரோட இருந்தபோது நிறைய விஷயங்களைச் செய்ய முடியாமப் போயிடிச்சு. இப்போ உன் மூலமா அதைச் செய்ய விரும்பறேன். எனக்கு நீ உதவி செய்வியா என்று கைகளைப் பிடித்துக்கொண்டு கேட்பார் எம்.ஜி.ஆர்.

தலைவா, நீ ஏன் என் கையைப் பிடிக்கற. நீ உத்தரவு போடு. நீ என்கூட இருந்தா தமிழ்நாடு என்ன இந்த உலகத்தையே நான் கட்டி ஆண்டுருவேன். இனிமே நீ சொல்லு வாத்யாரே... நான் செஞ்சு காட்றேன் என்று பரவசத்தில் கூத்தாடுவான் வண்டு முருகன். அதன் பிறகு வண்டு முருகனின் மூலமாக, எம்.ஜி.ஆருடைய ஆட்சியின் இரண்டாம் பாகம் ஆரம்பமாகும்.

வண்டு முருகன் நேராக நம்பி ராஜனின் வீட்டுக்குச் செல்வான். கட்சி பிரமுகர்களுடன் அவர் மது அருந்தியபடி ஏதோ பேசிக் கொண்டிருப்பார். வண்டு முருகனைப் பார்த்ததும், நான் அப்பவே சொல்லலை. இவன் சாகமாட்டான். செத்துட்டா எனக்கு யார் கால் அமுக்கிவிடுவாங்கங்கற கவலை அவனுக்கு வந்திருக்கும். அதான் திரும்பி வந்துட்டான் என்று சொல்லி சிரித்தபடியே காலைத் தூக்கி மோடாவில் வைப்பார். வண்டு முருகனுக்கு கோபம் வரும். ஏதோ சொல்ல வாயெடுப்பான். எம்.ஜி.ஆர். அவனை எதுவும் இப்போது பேசவேண்டாம். காலை அமுக்கிவிடு என்று கைகாட்டுவார். எம்.ஜி.ஆரின் ஆவி வண்டு முருகனின் உடலுக்குள் புகுந்துகொண்டு நம்பிராஜனின் காலை ஓங்கி அமுக்கும். கால் எலும்பு மடக் என்று உடைந்துபோய்விடும். நம்பிராஜன் வலியில் துடிப்பான். என்னடா பண்ணற என்று கத்துவான். காலைத்தான் அமுக்கறேன் எஜமான் என்று பவ்யமாகச் சொல்வான் வண்டு முருகன். நீ அமுக்கினது போதும். வீடு போய்ச் சேருடா சாமி என்று அனுப்பிவைப்பான். 

மறு நாள் தலைமைச் செயலகத்துக்கு வண்டு முருகன் போகும்போது நம்பி ராஜன் வேறு சில நபர்களுடன் உள்ளே அமர்ந்திருப்பார். அங்கு இருக்கும் இருக்கைகள் அனைத்தும் நிரம்பியிருக்கவே எம்.ஜி.ஆருக்கு உட்கார இருக்கை இருக்காது. எனவே, வண்டு முருகன் நின்றுகொண்டே பேச ஆரம்பிப்பான். நம்பிராஜன் அவனை எவ்வளவு வற்புறுத்தியும் உட்கார மறுத்துவிடுவான். அப்போது எம்.ஜி.ஆரும் அவனை உட்காரச் சொல்வார். உங்க முன்னால நான் உட்காரமாட்டேன் என்பான். நம்பிராஜன் தன்னைப் பார்த்துச் சொன்னதாக நினைத்து ரொம்பவும் பெருமைப்பட்டுக்கொள்வான். ஆனால், எம்.ஜி.ஆரோ என்னைப் பற்றிக் கவலைப்படாதே என்று சொல்லி தன் தோளில் இருக்கும் துண்டை மேலே வீசுவார். அந்தரத்தில் இருந்து ஒரு ஊஞ்சல் பெரும் சப்தத்துடன் கீழே இறங்கும். பின்னணியில் படையப்பா இசை ஒலிக்க எம்..ஜி.ஆர். அதில் துள்ளி ஏறி அமர்ந்து காலின் மேல் கால் போட்டு சல்யூட் அடிப்பார். அதைப் பார்த்ததும் பிரமிக்கும் வண்டு முருகன் சிரித்தபடியே தன் இருக்கையில் அமர்வான். பக்கத்தில் இருக்கும் நபரைப் பார்த்துத் திரும்பி, நான் சொன்னேன்ல என் மேல அவ்வளவு மரியாதை என்று சொல்லிச் சிரித்தபடியே நம்பிராஜன் திரும்பிப் பார்க்கையில் முதலமைச்சர் இருக்கையில் வண்டு முருகன் கம்பீரமாக அமர்ந்திருப்பான். அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல், நீ உட்காரு. அதான் மொதல்லயே சொன்னேனே என்று சமாளித்துக்கொள்வார் நம்பிராஜன்.

வண்டு முருகன் அவரைப் பார்த்து அலட்சியமாகப் புன்முறுவல் பூத்தபடியே தன் பாக்கெட்டில் இருந்து ஒரு கர்ச்சீபை எடுத்துக் கொடுப்பான். முதலில் அனிச்சையாக அதை வாங்கிக் கொள்ளும் நம்பிராஜன் அந்தச் செய்கையின் அர்த்தம் புரிந்ததும் திடுக்கிடுவார். ஆனால், மற்றவர்கள் முன் மேலும் அவமானப்படக்கூடாது என்று வாயை மூடிக்கொள்வார்.

குளிர்பான ஆலை தொடங்க அனுமதி கேட்டு வந்திருந்த அவர்கள் ஃபைலைக் கொடுப்பார்கள். படிச்சிப் பார்த்துவிட்டு, நல்ல பதில் சொல்லுங்க என்று அவர்கள் கேட்டுக்கொள்வார்கள். படிக்கல்லாம் தேவையில்லை. நான் சொன்னா சொன்ன இடத்துல கையெழுத்து போடுவான் என்று நம்பி ராஜன் பேனாவை எடுத்து, கையெழுத்திட வசதியாக திறந்து வண்டு முருகனிடம் கொடுப்பான். பேனாவை வாங்கிக் கொள்ளும் முருகன் நிதானமாக அதை மூடி பாக்கெட்டில் சொருகிக் கொள்வான். ஃபைலை வாங்கிக்கொண்டு படித்துவிட்டுச் சொல்கிறேன் என்பான். நம்பி ராஜன் ஏதோ சொல்ல வாயெடுப்பார். வண்டு முருகன் வந்திருப்பவர்களைப் பார்த்து கும்பிட்டபடியே, என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லி அனுப்புகிறேன் என்று எழுந்து நிற்பான். வேறு வழியின்றி வந்தவர்களும் எழுந்து நின்று கும்பிட்டுவிட்டுப் புறப்படுவார்கள்.

நம்பி ராஜன் அவர்கள் பின்னாலேயே விழுந்தடித்தபடி ஓடிச் சென்று சமாதானப்படுத்துவார். நீங்க கவலையேபடாதீங்க. பெர்மிஷன் கிடைச்சிடும். அதுக்கு நான் கேரண்டி. அவனை எப்படி வழிக்குக் கொண்டுவரணுங்கறது எனக்குத் தெரியும். நீங்க தைரியமா போங்க என்று சொல்லி காரில் ஏற்றி அனுப்பிவைத்துவிட்டு புயல் போய் திரும்புவார். ஆனால், அவர் முதலமைச்சர் அறைக்கு அருகில் வந்ததும் வாயில் காப்பாளர்கள் அவரைத் தடுத்து நிறுத்துவார்கள். யாரையும் உள்ளே விடக்கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார் என்று சொல்வார்கள். நம்பிராஜனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும். யார்கிட்ட பேசறீங்கன்னு தெரிஞ்சுதான் பேசறீங்களா என்று உறுமுவார். யார் கிட்ட பேசிட்டு வந்திருக்கோம் அப்படிங்கறதை நீங்க தெரிஞ்சுக்கிட்டா இந்தக் கேள்வியே கேட்கமாட்டீங்க என்று பதிலுக்குச் சொல்வார்கள். நம்பிராஜன் கைகளைப் பிசைத்தபடி, அவன் என் வீட்டுக்கு வரட்டும். அங்க பாத்துக்கறேன் என்று சொல்லிவிட்டு விடுவிடுவென படிகளில் இறங்கிப் போவார்.

அன்றைய அரசாங்க வேலைகள் முடிந்த பிறகு வண்டு முருகன், நம்பிராஜன் வீட்டுக்குப் புறப்படுவார். அங்கு நம்பிராஜன் குறுக்கும் நெடுக்குமாக கோபத்தில் நடந்துகொண்டிருப்பார். பணியாளர் ஒருவர் அங்கு காவலுக்கு இருக்கும் நாய்க்கு உணவு கொண்டுவந்து வைப்பார். நாயோ நம்பிராஜனின் அனுமதிக்காக அவருடைய முகத்தையே பார்த்தபடி நிற்கும். நம்பிராஜன் அதைக் கவனிக்காமல் கோபத்தில் உறுமிக்கொண்டிருப்பார். பணியாள் பயந்தபடியே நம்பிராஜனை நெருங்குவார். என்னடா என்பதுபோல் அவனை முறைப்பார் நம்பிராஜன். நாய் சாப்பிட மாட்டேங்குது எஜமான் என்று பணிவாகச் சொல்வான். நம்பிராஜன் நாயைத் திரும்பிப் பார்ப்பார். அது அவருடைய முகத்தை ஏக்கமாகப் பார்த்தபடியே அனுமதிக்காகக் காத்திருக்கும்.

அந்த நாய் மேல இருக்கற கோபத்தை இந்த நாய் மேல காட்டாதீங்க எஜமான் என்பார் பணியாள். நீ சொல்வது சரிதான் என்று தலையை அசைத்தபடியே, நாயைப் பார்த்து சாப்பிடும்படி சைகை செய்வார். நாய் பாய்ந்து உணவைச் சாப்பிட ஆரம்பிக்கும். அப்போது, வண்டு முருகன் உள்ளே நுழைவான்.

உன் மனசுல என்னதான் நினைச்சிட்டிருக்க. கையெழுத்துப் போடச் சொன்னா போடவேண்டியதுதான. என்னிக்கும் இல்லாத புது பழக்கமா இன்னிக்கு என் அப்படி நடந்துக்கிட்ட?

அந்த கம்பெனிக்காரங்க, தங்களோட குளிர்பானத் தயாரிப்புக்கு நிலத்தடி நீரைப்பூரா எடுத்துக்கிட்டா, அக்கம் பக்கத்துல இருக்க விவசாய நிலமெல்லாம் வறண்டு போயிடும். அந்த கிராமத்து மக்களெல்லாம் ரொம்ப கஷ்டப்படுவாங்க.

அவங்களைப்பத்தி உனக்கு என்ன அக்கறை?

என்னை... மன்னிக்கணும் உங்களை அவங்கதான ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்திருக்காங்க. இந்த கம்பெனிக்காரங்க இல்லையே...

ஆனா, ஐம்பது கோடிப் பணத்தை அந்த மக்களா கொடுத்தாங்க. இவங்கதான கொடுத்திருக்காங்க. ஆமா... நீ என்ன என்னை நிக்கவெச்சு கேள்வி கேக்கற. அந்த ஃபைல்ல கையெழுத்துப் போட முடியுமா முடியாதா?

நான் அவங்களுக்கு இ- மெயில் அனுப்பியிருக்கேன். அந்தப் பகுதியில் மழைக்காலத்துல வர்ற வெள்ளம் எல்லாம் கடல்ல போய் கலந்திட்டு இருக்கு. அந்த கம்பெனிக்காரங்ககிட்ட நாலைஞ்சு இடத்துல ஏரி வெட்டி அந்தத் தண்ணியை சேர்த்து வைக்கச் சொல்லியிருக்கேன். அதுல இருந்து அவங்களுக்கு பாதி தண்ணியை குளிர்பான தயாரிப்புக்கு எடுத்துக்கலாம்னு சொல்லியிருக்கேன்.

.....நீ யார்றா அதைச் சொல்றதுக்கு... நாளைக்கு தேர்தல்ல வோட்டுப்போட இந்த நாயிங்க ஆயிரம் ரெண்டாயிரம் கேட்பானுங்களே அந்தப் பணத்துக்கு நான் எங்க போக?

மக்களுக்கு நல்லது செஞ்சா அப்படி வோட்டுக்கு பணம் கொடுக்க வேண்டிய தேவையே இல்லை. அந்த கம்பெனிக்காரங்க உங்களுக்குக் கொடுத்த ஐம்பது கோடியை அவங்களுக்கு வட்டியோட திருப்பிக் கொடுங்க. அதை வெச்சுத்தான் ஏரி வெட்டறதா  வாக்குக் கொடுத்திருக்காங்க.

ஏண்டா டேய் யார்கிட்ட பேசறோம்னு தெரிஞ்சுதான் பேசறியா... என் காலை அமுக்கிவிட்டிருந்த உன்னைத் தூக்கி என் சீட்ல உட்கார வெச்சேன் பாரு. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்று கர்ஜித்தபடியே சுவரில் மாட்டியிருந்த சாட்டையை எடுத்துவந்து வண்டு முருகனை விளாச ஆரம்பிப்பார். இரண்டு அடிகளைப் பொறுத்துக்கொள்வான் வண்டு முருகன். மூன்றாவது அடி அவன் மீது விழபோகும்போது எம்.ஜி.ஆரின் ஆவி அவன் உடலுக்குள் புகுந்துகொண்டு, அந்த சாட்டையை நம்பிராஜனிடமிருந்து பறிக்கும். நம்பிராஜன் தடுமாறிக் கீழே விழுவார். வண்டு முருகனுக்குள் இருக்கும் எம்.ஜி.ஆர். இப்போது சாட்டையைச் சுழற்றி நம்பிராஜனை அடிக்க ஆரம்பிப்பார். அவர் எதிர்க்க முயன்று முடியாமல் துவளுவார். வண்டு முருகன் மாடிப்படிகளில் நாலைந்து படிகள் துள்ளி ஏறிச் சென்று திரும்பி நின்று பாடத் தொடங்குவான், நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இந்த ஏழைகள் வேதனைப்படமாட்டார்...

இந்தப் பாடல் முடிவடையும்போது, நம்பிராஜன் எந்த வழக்கில் சிக்கியதால் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்ததோ அதைக் காரணம் காட்டி சிறையில் அடைக்கப்படுவார். அவருடைய ஆதரவாளர்களான எம்.எல்.ஏக்கள் எல்லாம் வண்டு முருகனை ஆட்சியில் இருந்து இறக்கப் போவதாக மிரட்டுவார்கள். வண்டு முருகன் சிரித்தபடியே அவர்கள் எழுதிக் கொடுத்த ராஜினாமா கடிதத்தை அவர்கள் முன்னால் காட்டி, நம்பி ராஜன் அடைக்கப்பட்டிருக்கும் மத்திய சிறையில் இன்னும் நிறைய அறைகள் காலியாக இருக்கின்றன. யாருக்கு எந்த அறை வேண்டும் என்பதை இப்போதே சொன்னால் முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும் என்று நிதானமாகச் சொல்வான். எல்லா எம்.எல்.ஏ.க்களும் பயந்து பின்வாங்கிவிடுவார்கள்.

சிறையில் இருக்கும் நம்பிராஜனை ரகசியமாகச் சந்தித்து என்ன செய்ய என்று கேட்பார்கள். அவனை நாளைக்கே என் காலடில விழ வைக்க என்னால் முடியும். ஆனால், எந்த மக்களுக்கு நல்லது செய்யப் போறேன்னு சொல்லி என்னை ஜெயில்ல போட்டானோ அந்த மக்களே அவனை வௌக்கமாத்தால அடிச்சி இதே ஜெயில்ல போடுவாங்க. போட வைப்பேன். நான் பதுங்கியிருக்கறது பாயறதுக்குத்தான் என்று சொல்லி அனுப்புவார்.

அடுத்ததாக என்ன செய்ய என்று எம்.ஜி.ஆரிடம் வண்டு முருகன் கேட்பான். சாராயக் கடைகளை எல்லாம் மூடு என்பார். எம்.ஜி.ஆர். அதைக் கேட்டதும் வண்டு முருகனுக்குத் தூக்கிவாரிப்போடும். அன்னம், தண்ணி இல்லாமல் கூட உயிர் வாழ்ந்துவிட முடியும். ஆனால், சரக்கு இல்லாமல் ஒரு நாள்கூட வாழமுடியாது. குடி மக்களின் துல்லியமான பிரதிநிதியான வண்டு முருகனுக்கு இதைக் கேட்டதுமே உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும். இது மட்டும் வேண்டாம். வேற எதுவேணும்னாலும் செய்யலாமே என்று குழைவார். நீ இதை மட்டும் செஞ்சாப் போதும் வேற எதுவுமே செய்யத் தேவையில்லை. வேற எது செஞ்சாலும் இதை மட்டும் செய்யலைன்னா அதிலயும் எந்தப் பலனும் இருக்காது என்று சொல்லி அவனைச் சம்மதிக்க வைக்கிறார்.

மறு நாள் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரையும் அழைத்து சாராயக் கடைகளை மூடுவதால் ஏற்படும் வருமான இழப்பை எப்படி ஈடுகட்ட என்று ஆலோசனை கேட்பான். விற்பனை வரி, வருமான வரியை முறையாக வசூலித்தல், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தல் என பல வழிகளைக் கையாண்டு வருமானத்தைப் பெருக்க முடிவு செய்வார்கள். சரி... அடுத்த வருஷத்துல இருந்து... என்று வண்டு முருகன் பேச ஆரம்பிப்பான். மற்றவர் கண்ணுக்குத் தெரியாத எம்.ஜி.ஆர். அவனை முறைக்கவே, சரி... அடுத்த மாசத்துல இருந்து என்று சோகத்துடன் சொல்வான். எம்.ஜி.ஆர். முகத்தில் அப்போதும் கோபம் குறையாமல் இருக்கவே, சரி அடுத்த வாரத்துல இருந்து என்று திக்கு முக்காடிப் பேசுவான் வண்டு முருகன். எம்.ஜி.ஆர். பலமாக கோபத்தில் தலையை ஆட்டவே, வேறு வழியில்லாமல், அடுத்த நாளில் இருந்து மது விலக்கு சட்டம் அமலாகும் என்று அறிவிப்பான்.

சாராயக் கடை அதிபர்கள் எல்லாம் சிறையில் இருக்கும் நம்பி ராஜனுக்கு போன் போட்டு திட்டித் தீர்ப்பார்கள். அவர் நிதானமாக சிரித்தபடியே, எதுக்கும் கவலைப்படாதீங்க. எண்ணி ஒரு மாசத்துல எல்லாக் கடைகளையும் அவனே திறக்கறானா இல்லையாங்கறதை மட்டும் பாருங்க என்கிறான். நீங்களோ ஜெயிலுக்கு உள்ள இருக்கீங்க. எப்படி உங்களால முடியும் என்று கேட்பார்கள். பொறுத்து இருந்து பாருங்கள் என்று சொல்லிவிட்டு ராட்சஸன்போல் சிரிப்பார்.

ஓரிரு வாரத்தில் அவனுடைய திட்டம் என்ன என்பது புலனாகிவிடும். கள்ளச் சாராயம் குடித்து நூறு பேர் பலி என்று முதலில் ஒரு மாவட்டத்தில் செய்தி வரும். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் கொத்துக் கொத்தாக கள்ளச் சாராயம் குடித்து இறக்க ஆரம்பிப்பார்கள். சாராயக் கடையை மூடியபோது வாழ்த்திப் பேசிய தாய்மார்கள், இறந்தவர்களைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்த வண்டு முருகனைத் திட்டித் தீர்ப்பார்கள்.

சாராயம் இருந்தபோதாவது மனுஷன் குடிச்சிட்டு உசிரோட இருந்தான். அதை ஒழிச்சதுனால, இப்ப கள்ளச் சாராயத்தைக் குடிச்சிட்டு செத்தே போய்ட்டாரே... நீ நாசமாப் போக என்று ஒவ்வொரு தாய்மாரும் மனைவியும் வண்டு முருகனுக்கு சாபம் கொடுப்பார்கள்.

எம்.ஜி.ஆர். இதை எப்படி சமாளிக்க என்று தெரியாமல் தவிப்பார். ஒரு சில மாதங்கள்  இப்படி இருக்கும். அதன் பிறகு சரியாகிவிடும் என்று எம்.ஜி.ஆர். சொல்வார். ஆனால், நாளாக நாளாக கள்ளச் சாராய இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும். மத்திய அரசில் இருந்து நிர்பந்தம் அதிகரிக்கும். சமூகத்தின் பெரும்பாலான தரப்புகள், சாராயக் கடையைத் திறந்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்துவார்கள்.

எம்.ஜி.ஆர். இது தொடர்பாக சில நிபுணர்களை அழைத்து கருத்துக் கேட்கும்படிச் சொல்வார். அதன்படியே வண்டு முருகன் ஏற்பாடு செய்வார். மது விலக்கு நல்ல கொள்கைதான். ஆனால், அதை இப்படி உடனடியாக அமல்படுத்தக்கூடாது. மெதுவாக நாலைந்து வருடங்களில் படிப்படியாகக் குறைக்க வேண்டும். முதலில் வாரத்துக்கு ஐந்து நாட்கள் மட்டும் என்று வைக்கவேண்டும். அதன் பிறகு மாலை ஆறுமணிக்கே கடையை மூடிவிடவேண்டும். ஒவ்வொரு மதுபான விடுதியிலும் ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். அவர் குடிக்க வருபவர்களின் உடம்பைப் பரிசோதித்து அவர் சொல்லும் அளவுக்கு மட்டுமே அருந்தலாம் என்று சொல்லவேண்டும். அரசின் சமூக நலத் திட்டங்கள் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு ரத்து செய்யப்படவேண்டும். விஸ்கி, பிராந்திக்கு பதிலாக கள்ளுக் கடைகள் திறக்கப்படவேண்டும். இப்படியாக பல ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிபந்தனைகளை எல்லாம் ஏற்று மதுபானக் கடைகளைத் திறந்துவிடும்படி எம்.ஜி.ஆர். கேட்டுக்கொள்வார். அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதைப் பார்க்கும் வண்டு முருகன், உங்களை அழவெச்சு இந்த கடைகளை நான் திறக்கப் போறதில்லை. எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை என்று வண்டு முருகன் சொல்வான்.

என்னிக்கு ஒரு தாய்க்குலம், என் புள்ளையைக் கொன்னுட்டியேன்னு நம்மளைத் திட்டிட்டாங்களோ என்னிக்கு ஒரு பெண், தன் கணவனைக் கொன்னதா நம்மளைச் சபிச்சாங்களோ அதுக்குப் பிறகு நமக்கு செய்யறதுக்கு ஒண்ணுமே இல்லை. அவங்க புள்ளையையும் கணவனையும் இனி அவங்களே காப்பாத்திக்கட்டும். அதே நேரத்துல நாம அவங்களை அம்போன்னு விடவும் வேண்டாம். இங்க இந்த நிபுணர்கள் சொன்ன விஷயங்களை அமல்படுத்து. கொஞ்சம் கொஞ்சமா மாற்றம் வரட்டும் என்று சொல்கிறார். அதன்படியே புதிய நிபந்தனைகளுடன் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன.

தனது திட்டம் எதிர்பார்த்த வெற்றியைத் தராத கோபத்தில் இருக்கும் நம்பிராஜன் அடுத்ததாக, மாநிலங்களுக்கு இடையே சண்டையைத் தூண்டும் முயற்சியில் இறங்குவார். அதற்குத் தோதாத அந்த வருடம் போதிய மழை இல்லாமல் போகவே கர்நாடகா தண்ணீர் திறந்துவிட மறுத்துவிடும். நம்பிராஜனின் ஆட்கள், தமிழ் நாட்டில் வசிக்கும் கன்னடர்களை அடித்து விரட்டுவார்கள். இதைப் பார்த்ததும் கர்நாடகத்தில் இருக்கும் அடிப்படைவாதிகள் அங்கிருக்கும் தமிழர்களை அடித்து விரட்டுவார்கள். எம்.ஜி.ஆரும் வண்டுமுருகனும் என்ன செய்வதென்று புரியாமல் சோர்ந்து உட்காருவார்கள்.

(தொடரும்)





No comments:

Post a Comment