Tuesday 26 November 2013

பேரழகன் (அப்கிரேடட்)

சூரியா - ஜோதிகா நடித்து வெளியான ’பேரழகன்’ படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் சில அடிப்படையான மாற்றங்கள் செய்தால் போதும்,. நல்ல படம் கிடைத்துவிடும்.

அழகில்லாத ஆண்.  கண் தெரியாத பெண். அழகில்லாததால் அந்த ஆணை யாரும் விரும்பவில்லை. கண் தெரியாததால் அந்தப் பெண்ணையும் யாரும் விரும்பவில்லை. இருவருக்கு இடையிலும் காதல் மலர்கிறது. அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை செய்தால் கண் பார்வை கிடைக்கும் என்று தெரியவருகிறது. இப்போது ஒரு பிரச்னை முளைக்கிறது.  கண் பார்வை கிடைத்து அவள் தன் அழகற்ற உருவத்தைப் பார்த்து வெறுத்துவிட்டால்..

அறுவை சிகிச்சை செய்தால் கண் பார்வை கிடைத்துவிடும் என்பது தெரிந்ததும் முதலில் சந்தோஷப்படும் பேரழகன், இந்த பயம் வந்ததும் யோசிக்கிறான். அறுவை சிகிச்சையை நடக்கவிடாமல் தடுப்பது என்று முடிவு செய்கிறான். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுபோல் அடிக்கடி எங்கெங்கோ அழைத்துச் செல்கிறான். டாக்டர் இல்லை நர்ஸ் இல்லை மருந்து இல்லை என்று சாக்குப் போக்கு சொல்லி ஏமாற்றிவருகிறான். ஒரு கட்டத்தில் தான் செய்வது தவறு என்று தெரிகிறது. பார்வை கிடைத்ததும் தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறான். அவளும் அதில் என்ன சந்தேகம்... எனக்கு வாழ்க்கை கொடுக்கும் உங்களைவிட்டு ஒரு நாளும் பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து தருகிறாள். அதை ஏற்றுக்கொண்டு தைரியமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான். ஆப்பரேஷனும் வெற்றிகரமாக முடிகிறது. அந்தப் பெண்ணும், பார்வை கிடைத்ததும் முதன் முதலில், பேரழகனைத்தான் பார்ப்பேன் என்று சொல்லி அதன்படியே செய்கிறாள். ஆனால், பேரழகனைப் பார்த்ததும் சட்டென்று முகம் கோணிவிடுகிறது. இவரா நமக்கு உதவி செய்தவர். இவரையா திருமணம் செய்துகொள்வதாக சத்தியம் செய்தோம் என்று அதிர்ச்சி அடைகிறாள். ஆனால், வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளிக்கிறாள்.

சில நாட்கள் கழித்து, அவளுடைய அண்ணனிடம் மனத்தில் இருப்பதைச் சொல்கிறாள். பேரழகன் ஆப்பரேஷனுக்கு உதவி செய்ததுதான் அவருக்குத் தெரியும். தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டது தெரியாது. அது தெரிந்ததும் அவருக்கும் கஷ்டமாகிவிடுகிறது. தங்களுக்கு உதவிய ஒருவருக்கு துரோகம் செய்ய இருவருக்குமே மனம் இல்லை. அதே நேரத்தில் அவரைத் திருமணம் செய்து கொள்ளவும் விருப்பம் இல்லை. எனவே, ஜோதிடர் சொன்னார் என்று ஆறேழு மாதத்துக்குத் திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள்.

இதனிடையில் பேரழகனின் நண்பரான கல்யாண புரோக்கர் மூலமாக ஒரு வசதியான குடும்பத்தினருக்கு அந்தப் பெண் பற்றித் தற்செயலாகத் தெரியவருகிறது. அவளது அழகைப் பார்த்து மயங்கிப் பெண் கேட்டு வருகிறார்கள். அவளுடைய அண்ணனுக்கு அந்தக் குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக் கொள்ள முழு சம்மதம். சரி என்று சொல்லிவிடுகிறார். அந்த விஷயம் பேரழகனின் காதுகளை எட்டுகிறது. ஆனால், தான் வாழ்க்கை கொடுத்த பெண் தன் மீது உயிரையே வைத்திருக்கிறாள். தன்னை விட்டுப் போகமாட்டாள் என்று சொல்கிறான்.

திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. பேரழகனின் அம்மா, அந்தப் பெண்ணின் வீட்டுக்குப் போய் நியாயம் கேட்கிறாள். அழகா இல்லாத உங்க பையனே அழகான பொண்ணுதான் வேணும்னு ஒத்தக் காலில் நிக்கும்போது, அழகான என் தங்கை அழகானவரை கல்யாணம் பண்ண ஆசைப்படறது தப்பா என்று கேட்கிறார். பேரழகனிடம் அம்மாவுக்கு அவர் சொல்வதில் இருக்கும் நியாயம் புரிகிறது. பேரழகனிடம் அதைச் சொல்லி, மனதை மாத்திக்கோ என்று சொல்கிறாள். அவனோ, அந்தப் பெண் மீது தனக்கு நம்பிக்கை இருக்கிறது. யார் என்ன சொன்னாலும் அவள் தன்னைக் கைவிட மாட்டாள் என்று சொல்கிறான். ஒன்றிரண்டு தடவை அந்தப் பெண்ணின் வீட்டுக்குப் போய் அவளைச் சந்திக்க முயற்சி செய்கிறான். அண்ணனோ, அவள் இல்லை என்று சொல்லி வாசலில் வைத்தே பேசி அனுப்பிவிடுகிறார்.

திருமண நாள் நெருங்குகிறது. பத்திரிகை அச்சடிக்கப்பட்டு எல்லாருக்கும் தரப்படுகிறது. மணமகனின் பெயரும் பிரேம் குமார். அதைப் பார்க்கும் பேரழகன் தன்னுடைய ரகசியப் பெயர் அது என்று எல்லாரிடமும் சொல்லி சந்தோஷப்படுகிறான். விடிந்தால் திருமணம். பேரழகனோ சிறிதும் மனம் கலங்காமல், அவள் எப்படியும் ஓடி வந்துவிடுவாள் என்று சொல்கிறான். இரவெல்லாம் தூங்காமல், வெளியில் சத்தம் கேட்கும் போதெல்லாம் ஜன்னலைத் திறந்து திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். அதிகாலையில் உற்சாகமாகக் குளித்து முடித்து, பட்டு வேட்டி கட்டிக் கொண்டு, கையில் தாலியுடன் திருமணம் நடக்கவிருக்கும் மலைக்கோயிலுக்கு முதல் ஆளாகப் போய் நிற்கிறான். பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் என வரிசையாக ஒவ்வொருவராக வருகிறார்கள். சீர்வரிசைகள் கொண்டு செல்லப்படுகின்றன. மேள தாளத்துடன் பெண் அழைத்து வரப்படுகிறாள். கோயில் வாசலில் பேரழகன், கையில் தாலியுடன் நிற்கிறான். வரிசையாக ஒவ்வொருவராகக் கடந்து போகிறார்கள். மணப்பெண்ணும் குனிந்த தலையுடன் வருகிறாள். மெள்ள அவனை நெருங்குகிறாள். எதுவும் பேசாமல் கடந்துபோய்விடுகிறாள். பேரழகன் அதிர்ச்சியில் உறைந்துபோய் படியில் சோர்ந்து உட்கார்ந்துவிடுகிறான். வாய் மட்டும் மெதுவாக, அவ வந்திடுவா வந்திடுவா என்று முனகுகிறது.

உள்ளே திருமண மந்திரங்கள் முழங்க ஆரம்பிக்கின்றன. மணமகன் யாக குண்டத்தில் நெய் வார்க்கிறான். தீ கொழுந்துவிட்டு எரிகிறது. மணப்பெண் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். புரோகிதர் தாலியை எடுத்து மணமகனிடம் கொடுக்கிறார். மணமகளின் கழுத்துக்கு அருகில் கொண்டு செல்லும்போது, அவள் இனியும் தாங்க முடியாது என்று தாலியைத் தட்டிவிட்டு ஆவேசத்துடன் எழுந்திருந்து வாசலை நோக்கி ஓடுகிறாள். அங்கே பேரழகன் சோகமாக கண்களை மூடியபடி அழுது கொண்டிருக்கிறான். மந்திர ஒலியும், வாத்திய இசையும் நின்றுபோய்  பெரும் அமைதி நிலவுகிறது. யதேச்சையாகக் கண்ணைத் திறந்து பார்த்தால் தன் முன்னால் மணப்பெண் மாலையும் கழுத்துமாக நின்றுகொண்டிருக்கிறாள்.

பேரழகனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. வருவா வருவான்னு சொன்னேன்ல. வந்துட்டா அவ வந்துட்டா என்று துள்ளிக் குதிக்கிறான். அவளை இழுத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்று ஒவ்வொருவரிடமும் அவ மனசுல நான் இருக்கேன் பாருடா நான் மட்டும்தான் இருக்கேன் பாருடா என்று சொல்லிக் குதூகலிக்கிறான். இது போதும்டா எனக்கு இது போதும்டா என்று சொல்லியபடியே மணமேடைக்கு அவளை அழைத்துச் செல்கிறான். அவளை உட்காரச் சொல்கிறான். மணமகன் மாலையைக் கழட்டி பேரழகனின் கழுத்தில் போட முன்வருகிறான். அதைத் திருப்பி அவர் கழுத்தில் அணிவித்து அவரையும் மணமேடையில் உட்காரச் சொல்கிறான். மணப்பெண் திகைத்துப்போய் ஏதோ சொல்ல முற்படுகிறாள். பேரழகன் அவளையும் சமாதானப்படுத்துகிறான். நமக்கு உதவி செஞ்சவங்களை கல்யாணம் பண்ணிக்காம இருக்கறத் தப்பு இல்ல. நாம உதவி செஞ்சவங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறதுதான் தப்பு. அழகே இல்லாத நானே அழகான பெண்தான் வேண்டும்னு ஆசைப்படும்போது அழகே உருவான நீ ஆசைப்படறதுல என்ன தப்பு இருக்க முடியும் என்று சொல்லி தாலியை எடுத்து மணமகனிடம் கொடுக்கிறான். அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்கிறான். அவ மனசுல எனக்கு ஒரு இடம் இருக்கு. எனக்கு அது போதும் எனக்கு அதுபோதும் என்று சொல்லியபடியே கூட்டத்தில் இருந்து விலகிப் போகிறான்.

அரசமரத்தடியில் தனியாகப் போய் அமர்கிறான். எனக்கு அது போதும் என்று சொல்லிக் கொண்டிருந்தவன் மெள்ள அழத் தொடங்குகிறான். எனக்கு அது போதாதுதான். ஆனா, எனக்கு அதுக்கு மேல கிடைக்காது என்று சொல்லி கல் பிள்ளையாரின் முன்னால்  அழுகிறான். சிறிது நேரம் கழித்து கண்ணைத் துடைத்துக்கொண்டு பிள்ளையாரைப் பார்க்கிறான். ஆளைப் பாரு யானை மாதிரி வயிற்றைப் பாரு பானை மாதிரி. உனக்கு உங்கம்மா மாதிரி அழகான பொண்ணு வேணுமா அப்போ இப்படியே பிரம்மசாரியாவே கெடக்க வேண்டியதுதான் என்று திட்டுகிறான். திட்டியபடியே அழவும் செய்கிறான். மனசை மட்டும் மாத்திக்காத அப்பறம் எனக்கு ஒரு துணை இல்லாமப் போயிடும் என்று சொல்லி அழுகிறான்.  அரச மரத்தடியின் மறு பக்கத்தில் இன்னொரு அழுகைக்குரல் லேசாகக் கேட்கிறது. யார் என்று போய்ப் போகிறான். முன்பு ஒருமுறை பெண் பார்க்கப் போய், குட்டையாக இருப்பதால் வேண்டாம் என்று சொன்ன அந்தப் பெண்  தனியாக உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறாள். அவள் அருகில் மெள்ளச் சென்று உட்காருகிறான். அவளுடைய கண்ணீரைத் துடைக்கிறான். நிதானமாக, பையில் இருக்கும் தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்டுகிறான்.

No comments:

Post a Comment