Sunday, 17 November 2013

காதல் - 2 - பாகம் 1


காதல் திரைப்படம் முடியும் இடத்தில் இருந்து இந்தப் படம் ஆரம்பிக்கிறது.

பைத்தியமாக இருக்கும் முருகனை, முன்னாள் காதலி ஐஸ்வர்யாவும் அவளுடைய கணவனும் தங்கள் பராமரிப்பில் வைத்து பார்த்துக் கொள்கிறார்கள். தன் காதலனுக்கு தன்னால் ஏற்பட்ட துன்பத்துக்குப் பிராயச்சித்தமாக அவனை ஐஸ்வர்யா அன்பாக கவனித்துக் கொள்கிறாள். மன நல மருத்துவர்களில் ஆரம்பித்து மாந்த்ரீகங்கள் செய்பவர்கள்வரை ஊர் ஊராக அழைத்துச்சென்று குணப்படுத்த முயற்சி செய்கிறாள். கடுமையான முயற்சிகளுக்குப் பிறகுஅவளுடைய தூய அன்புக்குப் பலன் கிடைக்கிறது. முருகனுக்கு மெதுவாகச் சுய நினைவு திரும்புகிறது. இனி எல்லாம் சரியாகிவிடும். முருகனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்துவிட்டால் தன் பாவமெல்லாம் கரைந்துவிடும் என்று ஐஸ்வர்யா நினைக்கிறாள். ஆனால், பிரச்னையோ அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. பைத்தியம் தெளிந்த முருகன் பழைய முருகனாகவே இருக்கிறான். ஐஸ்வர்யாவையே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். இதைத் தொடர்ந்து நடக்கும் சிக்கல்களே காதல் - பார்ட் 2.
  

(டைட்டிலில் முருகனுக்குத் தரப்படும் சிகிச்சை காட்சிகள் டிஸ்ஸால்வ் ஷாட்களாக இடம்பெறுகின்றன. பின்னணியில் அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே பாடல் வெறும் வயலின் இசையில்)

பாடல் முடிந்ததும் மருத்துவமனையில் தன்னந்தனியனாகப் படுத்திருக்கும் முருகன் கண் விழித்துப் பார்க்கிறான். ஆஸ்பத்திரிக்கு எப்படி வந்தோம் என்று அவனுக்குக் குழப்பமாக இருக்கிறது. நர்ஸ்கள் வந்து மருந்து கொடுக்கிறார்கள். எனக்கு என்ன ஆச்சு..? நான் எப்படி இங்க வந்தேன் என்று அவர்கள் போனதும் குழம்பித் தவிக்கிறான். பாத்ரூமுக்குச் செல்கிறான். அங்கு இருக்கும் கண்ணாடியில் அவனுடைய முகத்தைப் பார்க்கிறான். நீண்ட காலத்துக்குப் பிறகு அதை அவனால் இனம் காண முடிகிறது. மெள்ள நீரை அள்ளி முகத்தைத் துடைத்துக்கொள்கிறான். சட்டென்று ஐஸ்வர்யாவின் நினைவு அவனுக்கு வருகிறது. பதறியபடியே வெளியே விரைகிறான்.

மருத்துவமனை வாசலில் பூட்டாமல் வைத்திருக்கும் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஐஸ்வர்யாவின் வீட்டுக்குப் பறக்கிறான். வீட்டில் பார்வை மங்கிய ஒரே ஒரு பாட்டி மட்டும் சோஃபாவில் உட்கார்ந்திருக்கிறார். முருகன் பரபரப்புடன் அல்ட்ராமோஷனில் வீட்டுக்குள் நுழைகிறான். ஒவ்வொரு அறையாக ஐஸ்வர்யாவைத் தேடியபடி போகிறான். எல்லா அறையும் பூட்டி இருக்கிறது.

வீசும் காற்றில் ஒரு அறையின் கதவு மட்டும் லேசாகத் திறந்து மூடிக்கொண்டிருக்கிறது. கதவின் மேல் மாட்டப்பட்டிருக்கும் திரைச்சீலை எதையோ சொல்லத் துடிப்பதுபோல் படபடக்கிறது. மெள்ள அந்த அறையை நெருங்கிச் செல்கிறான். அங்கு அவன் பார்க்கும் காட்சி அவனை அதிர்ச்சி அடைய வைக்கிறது. டேபிளில் இருக்கும் புகைப்படத்தில் ஐஸ்வர்யாவும் இன்னொருவரும் மாலையும் கழுத்துமாக நிற்கிறார்கள். அதற்குப் பக்கத்தில் இன்னொரு புகைப்படம். அதில் ஐஸ்வர்யா தன் கணவனுடனும் இரண்டு குழந்தைகளுடனும் சிரித்தபடியே நின்றுகொண்டிருக்கிறாள். முருகனுக்கு தலை சுற்றுகிறது. அலமாரியில் ஒரு ஆல்பம் வைக்கப்பட்டிருக்கிறது. அவசர அவசரமாகப் புரட்டிப் பார்க்கிறான். திருமணப் படங்கள், ஹனிமூன் படங்கள், குழந்தைகளுடன் சுற்றுலா போனபோது எடுத்த படங்கள் என முருகன் இல்லாத ஐஸ்வர்யாவின் உலகம் அங்கு தெரிகிறது.

நடந்தது எல்லாம் மெதுவாக அவனுக்குப் புரிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்குக் கோபம் தலைக்கு ஏறுகிறது. அப்போது மாடியில் ஏதோ சத்தம் கேட்கவே அங்கு போகிறான். மாடியில் இருந்து இறங்கி வரும் ஐஸ்வர்யாவும் அவனைப் பார்த்துவிடுகிறாள். அந்த இடத்தில் அவனைப் பார்ப்பவள் முதலில் அதிர்ச்சி அடைகிறாள். ஆனால், அவனுக்கு பைத்தியம் குணமாகிவிட்டது தெரிந்ததும் சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் ஆடுகிறாள். அவனைக் கட்டிப் பிடித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறாள். தான் கும்பிட்ட சாமியெல்லாம் தன்னைக் காப்பாற்றிவிட்டதாகச் சொல்கிறாள். அடுத்த முகூர்த்தத்திலேயே அவனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறாள். இதைக் கேட்டதும் முருகன் அதிர்ச்சி அடைகிறான்.

தனக்கு குணமான விஷயம் எல்லாருக்கும் தெரிந்துவிட்டால், திருமணம் செய்து எப்படியும் வெளியே அனுப்பிவிடுவார்கள் என்பது தெரிந்ததும், சட்டென்று பைத்தியம் போல் நடிக்க ஆரம்பித்துவிடுகிறான். அதுவரை சந்தோஷமாக இருந்த ஐஸ்வர்யா இந்த மாற்றம் கண்டு அதிர்ச்சி அடைகிறாள். சுய நினைவு திரும்ப என்னவெல்லாமோ செய்து பார்க்கிறாள். முடியாமல் போகிறது. சோர்வுடன் முருகனை மீண்டும் மருத்துவமனையில் கொண்டு சேர்க்கிறாள்.

தன் காதலி வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டியுடன் இருப்பதை நினைத்து மருத்துவமனைக்குத் திரும்பியதும் முருகன் அழுகிறான். அவனுக்கு குணமான விஷயம் கரட்டாண்டிக்குத் தெரிய வருகிறது. தன்னை அடித்துப் போட்ட பிறகு என்ன நடந்தது என்று அவனிடம் கேட்கிறான். ஐஸ்வர்யா திருமணமே வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாள். பெற்றோர் வலுக்கட்டாயப்படுத்தியபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறாள். கடைசி நேரத்தில் எப்படியோ காப்பாற்றி சில காலம் கழித்து திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், திருமணம் முடிந்த பிறகும் இரண்டு வருடங்கள் அப்பா வீட்டிலேயே ஐஸ்வர்யா இருந்திருக்கிறாள்.

முருகனுக்கு அதையெல்லாம் கேட்கும்போது ஆத்திரமாகவும் வருகிறது. இன்னொரு பக்கம் சந்தோஷமாகவும் இருக்கிறது. அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது  எப்படியும் அவள் மனத்தில் தனக்கு நிச்சயம் இடம் இருக்கத்தான் செய்யும். அவளை எப்படி அழைத்துச் செல்லலாம் எங்குபோய் புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று திட்டம் போடுகிறான். கரட்டாண்டியோ, அது தவறு. அவள் இப்போது இன்னொருவருக்கு மனைவி என்று சொல்கிறான். என் மனைவியா இருந்தவளைத்தான இன்னொருத்தருக்குக் கட்டி வெச்சிருக்காங்க. அது மட்டும் சரியா என்று கேட்டு அவன் வாயை அடைத்துவிடுகிறான். நைஸாக ஐஸ்வர்யாவிடம் இது தொடர்பாகப் பேச்சுக் கொடுத்துப் பார்க்கும்படிக் கேட்டுக் கொள்கிறான்.

ஒருநாள் ஐஸ்வர்யா முருகனைப் பார்க்க மருத்துவமனைக்கு வரும்போது, முருகன் குணமான பிறகும் உன் நினைப்பாவே இருந்தா என்ன பண்ணுவ என்று ஐஸ்வர்யாவிடம் கரட்டாண்டி கேட்கிறான். அவளோஅப்படியெல்லாம் இருக்கமாட்டான். நிலைமையைப் புரிஞ்சிக்கிட்டு வேறொரு கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருப்பான் என்று சொல்கிறாள். அதைக் கேட்கும் முருகனுக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது. அடக்கிக் கொள்கிறான். நாட்கள் கழிகின்றன.

ஐஸ்வர்யாவும் அவளுடைய கணவனும் அவனை அடிக்கடி வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். தன் காதலி தன் முன்னாலேயே வேறொருவருடன் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து முருகன் நிலைகொள்ளாமல் தவிக்கிறான்.

ஒரு நாள் முருகனும் கரட்டாண்டியும் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேசி முடித்துவிட்டு அவன் புறப்படும்போது, காபி வாங்கிக் கொடுத்துவிட்டுப் போகும்படிச் சொல்கிறான் முருகன். பிளாஸ்கை எடுத்துக்கொண்டு விசில் அடித்தபடியே கதவை மூடிவிட்டுப் போகும் கரட்டாண்டி வாசலில் ஐஸ்வர்யா நிற்பதைப் பார்த்து திடுக்கிடுகிறான். அவள் அவனைத் தனியாக அழைத்துச் சென்று நடந்த விஷயங்களைத் தெரிந்துகொள்கிறாள். ஐஸ்வர்யாவை இப்போதும் முருகன் காதலிப்பதாகவும் அவள் மட்டும் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துகொண்டுவிடுவேன் என்று சொன்னதாகவும் சொல்கிறான். சரி... நீ போ. ஆனால், இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாதே என்று அவனை காபி வாங்க அனுப்பிவிட்டு ஐஸ்வர்யா எதுவும் நடக்காததுபோல் முருகனின் அறைக்குள் நுழைகிறாள். முருகன் அவளைப் பார்த்ததும் பைத்தியம் போல் நடிக்கிறான். ஐஸ்வர்யாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முருகனுக்குக் குணமானது சந்தோஷத்தைத் தருகிறது. ஆனால், தன் மீது இன்னமும் காதலாக இருப்பது பயத்தைத் தருகிறது. மனதுக்குள் அழுதபடியே வீட்டுக்குத் திரும்பிவிடுகிறாள்.

மனநல மருத்துவராக இருக்கும் தன் தோழியிடம் போய் விஷயத்தைச் சொல்லி அழுகிறாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ள இப்போதும் விரும்புவதாகவும் மறுத்தால் தற்கொலை செய்து கொள்வதாகச் சொன்னதாகவும் சொல்கிறாள். அதற்கு தோழி, முருகன் தற்கொலை செய்து கொள்வானா மாட்டானா என்பது தெரியாது. ஆனால், வீட்டை விட்டு அனுப்பினாலோ வேறு திருமணம் செய்து கொள்ளக் கட்டாயப்படுத்தினாலோ மீண்டும் பைத்தியம் பிடித்துவிட வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆறேழு வருடங்கள் ஓடியது அவனுக்குத் தெரியாது. அவனைப் பொறுத்தவரையில் தூங்கி எழுந்ததுபோல்தான். எனவே, அவனை அவன் போக்கிலேயே போய் மெதுவாக வழிக்குக் கொண்டுவரவேண்டும் என்று அறிவுரை சொல்கிறாள். இருவரும் அவனைப் புதியதொரு வாழ்க்கைக்குத் தயார்படுத்துவது என்று முடிவெடுக்கிறார்கள்.

(தொடரும்)