Thursday, 14 November 2013

வட்டச் செயலாளர் வண்டு முருகன் - பாகம் 5

அடுத்ததாக, விவசாயத்துறையில் நிலவிவரும் பிரச்னைகள் குறித்து ஒரு கருத்தரங்கில் வண்டு முருகன் கலந்துகொள்வான். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிலங்கள் துண்டு துண்டாக பலருடைய கைகளில் இருப்பதால் நவீன விவசாய முறைகளை அதில் பயன்படுத்த முடியவில்லை. விவசாயம் வெற்றிகரமான தொழிலாக ஆக்கப்படவேண்டும். அதற்கு, அந்த நிலங்கள் எல்லாம் ஒன்றாக ஆக்கி எங்களிடம் ஒப்படையுங்கள் என்று சில கார்ப்பரேட் நிறுவனத்தினர் கேட்பார்கள்.

விவசாயம் லாபகரமான தொழிலாக ஆக்கப்படவேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், யாருக்கு லாபத்தை அது ஈட்டித் தரவேண்டும்? 100 ஏக்கர் நிலத்தை ஒரே ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு கொடுத்துவிடுவதன் மூலம் நிச்சயமாக அதி நவீன டிராக்டர்களைப் பயன்படுத்துதல், ஹெலிகாப்டரில் பறந்து பூச்சி மருந்து அடித்தல், உற்பத்திப் பொருட்களை பதப்படுத்துதல், சந்தையின் தேவைக்கு ஏற்ப பயிரிடுதல், நீர் பாசன வசதிகளை மேம்படுத்துதல் என அனைத்து வசதிகளையும் எளிதில் செய்ய முடியும். லாபத்தை அதிகரிக்க முடியும். ஆனால், இன்று 100 பேரிடம் ஒவ்வொரு ஏக்கராக இருப்பதை ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்தால் அதிக பட்சம் பத்தில் இருந்து இருபது பேருக்கு அந்த பண்ணையில் வேலை கிடைக்கலாம். எஞ்சிய 80 பேர் வேலையை இழந்து திண்டாட வேண்டியிருக்குமே என்று வண்டுமுருகன் கேட்பான். அவர்கள் கல்வி கற்றுக்கொண்டு, விவசாயத்துறையைவிட்டுவிட்டு வேறு பணிகளுக்குச் சென்றுவிடவேண்டும் என்று கார்ப்பரேட் நிறுவனத்தினர் சொல்வார்கள்.

யாரிடமிருந்து நிலத்தை கையகப்படுத்துகிறீர்களோ அவர்களுக்கு உங்கள் நிறுவனத்தின் பங்குகளைப் பிரித்துக்கொடுக்கத் தயாரா என்று வண்டு முருகன் கேட்பான். நிலத்துக்கு மட்டுமே முதலீடு தேவைப்பட்டால் அப்படிச்செய்யமுடியும். ஆனால், வேறு பல செலவுகள் உண்டு என்பதால் மிகக் குறைவான பங்குகளை மட்டுமே தரமுடியும் என்று சொல்வார்கள். அவர்கள் தருவதாகச் சொல்லும் பங்குகளின் மதிப்பு நிலத்தின் மதிப்பைவிட மிகவும் குறைவாகவே இருக்கும். அதைவிட இப்போது இருக்கும் நிலத்தில் வெற்றிகரமாக பயிர் செய்ய என்ன வழி என்று சொல்லுங்கள் வண்டுமுருகன் வேறு நிபுணர்களைக் கேட்பான்.

இயற்கை விவசாயம் செய்யும் ஒருவர் எழுந்து நின்று, விவசாயத்தை லாபகரமானதாக ஆக்கவேண்டுமென்றால் முதலில் சிறு விவசாயிகள் பெரு முதலாளிகளைப்போல் சந்தைக்காக உற்பத்தி செய்வதை நிறுத்தவேண்டும். ஒவ்வொருவரும் தத்தமது வீட்டினருக்குத் தேவையான உணவைச் சமைத்துக்கொள்வதுதான் நல்லது. அனைவருமே ஹோட்டல் நடத்துகிறேன். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வீட்டுத் தேவைகளைக் கவனித்துக்கொள்கிறேன் என்று சொன்னால் அது எப்படி முட்டாள்தனமாக இருக்குமோ அதுபோல்தான் இன்று இருக்கிறது. ஒவ்வொரு சிறு விவசாயியும் பொது விற்பனைக்காக எதையும் உற்பத்தி செய்யத் தேவையில்லை. தனது தேவைகளை முதலில் பூர்த்தி செய்துகொள்ளட்டும். அதன் பிறகு எஞ்சும் உற்பத்தியை சந்தைக்குக் கொண்டுவந்துகொள்ளலாம் என்று சொல்வார்.

அப்படிப் பார்த்தாலும் ஒரு சிறு விவசாயிக்கு நஷ்டம்தானே ஏற்படும் என்று சிலர் சொல்வார்கள். இன்று விவசாயிகளுக்கு பெரிய செலவை இழுத்துவிடுவது என்ன என்று பார்த்தால், வேதி உரங்கள்தான். எனவே, அதன் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும். நிலத்தின் கால் பகுதியில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றுக்கான பயிர்களை வளர்க்க வேண்டும். அவை தரும் உரத்தையே எஞ்சிய நிலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தழையுரம், மண் புழு உரம், பஞ்சகவ்யம் என இயற்கை முறையில் உரங்களை தயாரித்துக் கொள்ளவேண்டும். மா, பலா, வாழை என பலதரப்பட்ட மரங்களை கால் பகுதி நிலத்தில் பயிரிட வேண்டும்.

மழைக்காலத்தில் சேரும் வெள்ளத்தை தேக்கி வைக்க ஒரு ஏக்கர் நிலத்திலேயே சிறிய குட்டை அல்லது கிணறு ஒன்றை வெட்டிக்கொள்ளவேண்டும். வரப்போரங்களில் மிளகாய், தக்காளி, வெங்காயம், கீரை போன்றவற்றை விளைவித்துக் கொள்ளவேண்டும். ஷெல்ஃப், பாட்டில் ஃபார்மிங் என்ற முறையில் பல அடுக்குகளில் இந்த சிறிய பயிர்களைப் போதிய அளவு வளர்த்துக்கொள்ள முடியும். சொட்டு நீர் பாசனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் குறைந்த நீரை வைத்தே அதிக விளைச்சலைக் கொண்டுவந்துவிட முடியும். இப்படியாக ஒரு ஏக்கர் வைத்திருக்கும் சிறு விவசாயி முதலில் தன்னிறைவை அடைவதற்கு அதிக கவனம் செலுத்தவேண்டும். அதன் பிறகு கூடுதலாகக் கிடைப்பவற்றை சுற்றுவட்டார உழவர் சந்தையில் விற்றுக்கொள்ளவேண்டும். விவசாயிக்கு விவசாயமே மன நிறைவைத் தரும். ஒவ்வொரு ஏக்கர் நிலமும் பொன் முட்டையிடும் வாத்தைப் போன்றது. அதை பக்குவமாக வளர்த்தால் வளமான வாழ்க்கை எல்லாருக்கும் கிடைக்கும்.

நில உச்சவரம்பு சட்டத்தை முறையாக அமல்படுத்தியும் கோயில் நிலங்களை நிலமற்றவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தும் ஒவ்வொருவரும் தன்னிறைவு அடைய வழி செய்து தரவேண்டும். நாட்டுமக்களின் உணவுத் தேவைக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் மட்டும் பெரிய அளவிலான பண்ணைகளை அமைத்து விவசாயம் செய்தால் போதும் என்று ஒரு திட்டத்தை முன்வைக்கிறார். பரிசோதனை முயற்சியாக சில மாவட்டங்களில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அது பெரிய வெற்றியைத் தந்ததும் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.

அடுத்ததாக கூடங்குளத்தில் பிரச்னை பெரிதாகிறது. வண்டு முருகன் இடிந்தகரைக்குச் செல்கின்றான். போராட்டக்காரர்களை நேரில் சந்திக்கிறான். நம்பிராஜன் தன்னுடைய ஆட்களை அந்தக் கூட்டத்தில் அனுப்பி நாட்டு வெடிகுண்டுகளை எறியச் செய்து கலவரத்தை உருவாக்குகிறான். நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை தடியடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபடுகிறது. பிரச்னையைத் தீர்க்கப்போன இடத்தில் அது பெரிதானது குறித்து வண்டு முருகன் கலங்குகிறான். இருந்தும் காவல்துறையில் இருந்து அத்துமீறி நடந்துகொண்டவர்களை அழைத்து எச்சரிக்கிறான். உங்கள் உயிருக்கு ஆபத்து வந்ததைப் பொறுக்காமல்தான் அப்படி நடந்துகொண்டோம் என்று சொல்கிறார்கள். உண்மையில் அவர்கள் நம்பிராஜனின் விசுவாசிகளே. அவனுடைய ஆட்களை நாட்டு வெடிகுண்டுடன் கூட்டத்துக்குள் அனுமதித்ததே அவர்கள்தான். அதைச் சாக்காக வைத்து போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை அவிழ்த்துவிட்டதும் அவர்கள்தான். ஆனால், நம்பிராஜனின் திட்டம் ஒருவகையில் வண்டு முருகனுக்கு சாதகமாகவே அமைந்துவிட்டது. அவன் அணு மின் நிலையத்தை மூடிவிட்டு அந்த ஊரில் காற்றாலைகளையும் சூரிய மின் வயலையும் நிர்மாணிக்கத்தான் திட்டமிட்டிருந்தான். மத்திய அரசு அதற்கு அனுமதி கொடுக்காமல் இருந்தது. இப்போது போராட்டக்காரகளில் பலர் சுட்டுக்கொல்லப்பட்டதால் அந்தப் பகுதி மக்கள் அணு உலையை எக்காரணம் கொண்டு அந்தப் பகுதியில் இயங்க விடுவதில்லை என்று முடிவெடுக்கிறார்கள். அக்கம் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் அவர்களுக்கு ஆதரவு பெருகுகிறது.

வண்டு முருகன் அதைச் சாக்காக வைத்து தன் திட்டத்தை ஒத்துக்கொள்ளும்படி மத்திய அரசை நிர்பந்திக்கிறான். மத்திய அரசு கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தாகிவிட்டதால் திட்டத்தைக் கைவிட முடியாது. புதிய திட்டங்களுக்குக் கூடுதலாக நிதி ஒதுக்க முடியாது என்று சொல்கிறது. புதிய திட்டத்துக்கான நிதியை நாங்களே செலவிட்டுக் கொள்கிறோம். எங்களுக்கு மின்சாரமும் வேண்டும். மக்களுடைய உயிரும் பாதுகாக்கப்படவேண்டும். நாளை அணு விபத்து நடந்து மக்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கொடுக்க ஏராளமான பணத்தை ஒதுக்கிவைப்பதைவிட அந்தப்பணத்தை வைத்து ஆபத்து அதிகம் இல்லாத திட்டத்தை அமல்படுத்துவதே சிறந்தது என்று சொல்கிறான்.

இந்த விஷயத்தில் குறுகிய சிந்தை கூடாது. இந்தியனாக இருந்து சிந்தித்துப் பாருங்கள். ஒருவகையில் இந்த அணு உலை என்பது மின்சார உற்பத்திக்காக ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதில் இருந்து கிடைக்கும் அணுக் கழிவுகளைக் கொண்டு அணு ஆயுதங்கள் தயாரிப்பதுதான் உண்மையான நோக்கம். எனவே, நிலைமையைப் புரிந்துகொண்டு ஒதுங்கி நில்லுங்கள். மேலும் இலங்கை அரசுக்கு மின்சாரம் தருவதாக வேறு நாம் ஒப்புக் கொண்டிருக்கிறோம். அதைச் செய்யவில்லையென்றால் அயல் நாட்டு நல்லுறவு பாதிக்கப்படும். மேலும் இந்தியாவில் இதுபோல் அணு உலை அமைக்க தடை விதிக்கப்பட்டால், அயல் நாட்டினர் வேறு எந்த திட்டத்துக்கும் நம் நாட்டில் முதலீடு செய்ய மாட்டார்கள். எனவே, இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டு சிந்தியுங்கள் என்று மத்திய அரசு சொல்லும்.

அணு ஆயுதங்கள் நமக்குத் தேவையே இல்லை. அதோடு, நான் முதலில் தமிழனாக இருக்கிறேன். அதன் பிறகு இந்தியனாகிக் கொள்கிறேன். நல்ல தமிழனாக இருந்தால்தான் நல்ல இந்தியனாகவும் ஆக முடியும். இலங்கைக்கு மின்சாரம் கொடுக்க தமிழர்களின் வாழ்க்கையைப்பணயம் வைக்க விரும்பவில்லை. எனவே, இந்த அணு மின் நிலைய திட்டத்தை அப்படியே நிறுத்திவிட்டு மாற்று மின்சாரத்திட்டத்தை ஆரம்பிக்கிறேன். விருப்பமிருந்தால் நிதி ஒதுக்குங்கள் என்று சொல்லி சூரிய, காற்றாலை மின்சாரத் திட்டத்தை சட்ட சபையில் தைரியமாக அறிவிப்பான். தமிழக மக்களின் பூரண ஆதரவு வண்டு முருகனுக்குக் கிடைக்கிறது. அப்படியாக நம்பிராஜன் செய்த சிறிய கலவரம் மறைமுகமாகப் பெரிய நன்மையை உருவாக்கிவிடுகிறது.

இந்தப் பிரச்னை ஓய்ந்ததும் அடுத்த பிரச்னை முளைக்கிறது. இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற் பகுதியில் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வரும் நிலை தீவிரமடைகிறது. இரு நாட்டு மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறான் வண்டு முருகன். தமிழக கடலோரப்பகுதிகளில் தமிழக மீனவர்கள் மோட்டார் படகுகளைப் பயன்படுத்துவது நவீன மீன்பிடிக் கருவிகளைப் பயன்படுத்துவது என தீவிர வேட்டையில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் மீன் வளம் குறைந்துவிட்டிருக்கிறது. அதோடு பழங்காலத்தில் எல்லாம் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலகட்டத்தில் மீன் பிடிக்க கடலுக்குப் போகமாட்டார்கள். உள் நாட்டு மக்களும் அந்தக் காலகட்டத்தை விரதகாலமாக அனுசரித்து அசைவ உணவைத் தவிர்த்துவிடுவார்கள். இது மீன் வளம் குறையாமல் இருக்க உதவியிருந்தது. ஆனால், இப்போது மீன் பெருக்க காலகட்டத்திலும் கூட விட்டுவைக்காமல் மீன்களை வேட்டையாடியதால் மீன்கள் வெகுவாகக் குறைந்துவிட்டிருக்கின்றன. இதனால் இலங்கைக் கடல் பகுதிக்குள் போனால்தான் கொஞ்சமாவது மீன்கள்கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது. இலங்கை கடலோர மீனவர்களே இந்திய மீனவர்களை எதிரிகளாகப் பார்க்கும் நிலையே நிலவுகிறது. இந்த நிலையில் கடலோரப் பகுதியில் வேறு என்ன வகையில் வாழ்வாதாரத்தைப் பெருக்கலாம் என்று வண்டு முருகன் ஆலோசிக்கிறான். இறால் பண்ணைகள் அமைத்தல், கடல் பாசி வளர்த்தல் என பல வழிகள் முன்வைக்கப்படுகின்றன. மீனவர்களுக்கு குறைந்த வட்டியில் கடம் கொடுத்து இந்தத் தொழில்களில் ஈடுபட ஊக்கம் தருகிறான். அதோடு கடலோரப் பகுதியில் ஏராளமான பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கு வாய்ப்பு உண்டு. மேற்கத்திய நாடுகளில் இருப்பதுபோல் உல்லாசப் படகு சவாரியில் ஆரம்பித்து சர்ஃபிங், டைவிங், ஆழ் கடல் நீச்சல் என பல விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகிறான். இந்த விளையாட்டுகளை நிர்வகிக்கும் பொறுப்பை மீனவர்களிடமே ஒப்படைக்கிறான். புதிய வாழ்வாதாரம் கிடைத்ததைத் தொடர்ந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்பவர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறைகிறது. தமிழக கடலோரப் பகுதிகள் அருமையான சுற்றுலா மையமாகப் புகழ் பெறுகின்றன.

வண்டு முருகன் பெற்று வரும் தொடர் வெற்றிகளினால் ஆத்திரத்தின் உச்சிக்கே போகும் நம்பிராஜன் வண்டு முருகன் தேர்தலில் நின்று வெற்றி பெறவில்லை என்பதால் அது செல்லாது என்று வழக்குத் தொடுப்பார். நீதிமன்றம் அந்த வழக்கை ஏற்று ஆறு மாதகாலத்தில் வண்டுமுருகன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறவேண்டும் என்று தீர்ப்பு வழங்கும். தேர்தல் முறையாக நடந்தால் வண்டு முருகன்தான் ஜெயிப்பான் என்பதால், நம்பிராஜன் என்ன செய்வதென்று புரியாமல் தவிப்பான்.

தேர்தல் பிரசாரத்துக்கு வண்டு முருகன் போயிருக்கையில் அவனை ஒரு கிராமத்தில் கொன்றுவிடுவதென்று திட்டம் தீட்டுவான். வண்டு முருகன் மாலை நேரத்தில் ஒரு கிராமத்தில் தேர்தல் பிரசாரம் முடித்துவிட்டுத் திரும்பி வரும்வழியில் ஒரு சிலர் அவனுடைய காரை மறிப்பார்கள். பக்கத்தில் தமது கிராமத்துக்கும் வந்து பேசிவிட்டுச் செல்லவேண்டும் என்று சொல்வார்கள். நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஊருக்குச் செல்லவேண்டாம் என்று பூனைப்படையினர் சொல்வார்கள். ஆனால், வண்டு முருகனோ மக்கள்தான் முக்கியம். அவர்கள் கூப்பிட்டுப் போகாமல் இருந்தால் சரியாக இருக்காது என்று அந்த கிராமத்துக்கு வண்டியைவிடச் சொல்வார். வழியை மறித்தவர்கள் முள்ளுக்காட்டு வழியே அழைத்துச் செல்வார்கள். பூனைப்படையினரை ஒவ்வொரு திருப்பத்தில் தவறான வழியில் திசை திருப்பிவிட்டு வண்டு முருகன் இருக்கும் காரை மட்டும் ஒரு இடத்தில் சுற்றி வளைப்பார்கள். வண்டு முருகனைக் கார் கதவைத் திறக்கவிடாமல் வெளியில் இருந்தபடியே ஈட்டிகளால் சரமாரியாக காருக்குள் குத்துவார்கள். உள்ளேயிருந்து எந்த சப்தமும் வராது. இறந்துவிட்டான் போலிருக்கிறது என்று மெதுவாக கார் கதவைத் திறக்க நெருங்குவார்கள். அப்போது மடாரென்று காரின் நான்கு கதவுகளும் உள்ளிருந்து மின்னல் வேகத்தில் வீசி எறியப்படும். காரை நெருங்கியவர்கள் அந்தக் கதவுகளால் தூக்கி எறியப்படுவார்கள். எஞ்சியவர்கள் பாய்ந்து காரை நெருங்கும்போது காரின் மேல் கூரையை அப்படியே மஹாவிஷ்ணு சக்கரத்தை ஏந்தியதுபோல் பிடித்தபடி வண்டு முருகன் விஸ்வரூபம் எடுப்பான். மேல் கூரையை வேகமாகச் சுழட்டி வீசி எறிவான். அவனைக் கொல்லவந்தவர்கள் பயந்து பின்வாங்குவார்கள். எம்.ஜி.ஆரின் ஆவி உடலில் புகுந்த வண்டு முருகன் தன் காலால் காரில் இருந்து சிலம்புக் கம்பு ஒன்றை ஸ்டைலாக எடுத்தபடி வெளியே பாய்ந்து அவர்களைப் பந்தாடுவான். கடைசியில் பூனைப்படையினரும் வந்து சேர்ந்துவிடவே வண்டு முருகனைக் கொல்ல வந்தவர்கள் தப்பி ஓடிவிடுவார்கள். அவர்களில் ஒருவன் மட்டும் பிடிபட்டுவிடுவான். அவனை முறைப்படி விசாரித்ததில் நம்பிராஜன்தான் அவர்களை அனுப்பியதாகச் சொல்லிவிடுவான். இதனால், மக்கள் மத்தியில் வண்டு முருகனுக்கு அனுதாபமும் பெருகும். ஏற்கெனவே அவன் செய்த நல்ல செயல்களே அவனை வெற்றிபெற வைக்கப் போதுமானதாக இருக்க இப்போது இதுவும் சேர்ந்துவிடவே அவன் அசைக்க முடியாத வெற்றியைப் பெறுவான் என்பது உறுதியாகிறது.

நம்பிராஜன் இதை எப்படியாவது தடுக்கத் திட்டமிடுவான். முன்பென்றால், வாக்குச் சாவடியைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டு வென்றுவிடலாம். இப்போதோ மின்னணு வாக்கு எந்திரம் வந்துவிட்டது. ஒன்றும் செய்ய முடியாது என்று புலம்பித் தவிப்பான். நம்பிராஜன் வெற்றி பெற்றாக வேண்டும் என்று விரும்பும் முதலாளிகள் சிலர் வாக்கு எந்திரத்தில் எளிதில் மோசடி செய்ய முடியும் கவலைப்படாதீர்கள் என்று சொல்வார்கள். நம்பிராஜனுக்கு அவர்கள் சொல்வதில் நம்பிக்கை வராது. மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தைக் கொண்டுவந்து செய்துகாட்டினால்தான் நம்புவேன் என்பான். அதன்படியே அந்த வாக்குப் பதிவு எந்திரத்தின் மென் பொருளைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்தின் பிரதிநிதியை முதலாளிகள் அழைத்து வருவார்கள். அவர் எப்படி மோசடி செய்ய முடியும் என்பதை விளக்கிக் காட்டுவார். முதலில் வண்டு முருகனுடைய சின்னத்துக்கு பத்து வாக்குகள் பதிவு செய்வார்கள். நம்பிராஜனின் சின்னத்துக்கு ஆறு வாக்குகள் பதிவு செய்வார்கள். ஆனால், ரிசல்ட் அறிவிக்கும்போது நம்பிராஜனுக்கு பத்து வாக்குகள் பதிவானதாகவும் வண்டுமுருகனுக்கு ஆறு வாக்குகள் பதிவானதாகவும் காட்டும். நம்பிராஜன் அதைப் பார்த்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடுவான். எந்தக் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அந்த எண்ணிக்கைகள் உங்கள் சின்னத்துக்கு விழுந்ததாகவும் உங்களுக்குக் கிடைக்கும் வாக்குகள் அந்த கட்சிக்கு கிடைத்ததாகவும் மாற்றிக்காட்டும்படி ப்ரோக்ராம் எழுதியிருக்கிறோம். அவ்வளவுதான் என்று அவர்கள் சொல்வார்கள். இந்திய அரசு அமெரிக்காவில் தயாராகி வரும் மென் பொருளை ஒருபோதும் சோதிக்க முடியாதவகையில்தான் இந்த மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தையே வடிவமைத்திருக்கிறார்கள். எனவே கவலைப்படவேண்டாம் என்று அவர்கள் சொல்வார்கள்.

ஆனால், தேர்தல் நாளில் எல்லார் முன்னிலையிலும் ஒரு சிறிய நகல் வாக்கெடுப்பு நடத்துவார்களே அதில் இந்த சதி அம்பலமாகிவிடுமே என்று நம்பிராஜன் சந்தேகம் கேட்பார். சுமார்  200 வாக்குகளுக்கு உள்ளாக பதிவானால், உண்மையான ரிசல்ட்டைக் காட்டும்படி மென் பொருளில் பதிவு செய்திருப்போம். அதற்கு அதிகமாக வாக்குகள் பதிவானால்தான் நாம் விரும்படியான ரிசல்ட்டை தரும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் உங்களுடைய சின்னம் எத்தனையாவது இடத்தில் வரும் என்பதைத் தீர்மானம் செய்யவேண்டியதுமட்டுமே என்று அவர்கள் சொல்வார்கள். அதன்படியே நம்பிராஜனின் சின்னத்தை ஐந்தாவது இடத்தில் கொண்டுவருவது என்றும் அந்த சின்னமே வெற்றி பெறும்படிச் செய்வது என்று தீர்மானம் ஆகும். அப்படியாக மக்களின் ஆதரவு அமோகமாக இருந்த நிலையிலும் வண்டு முருகன் தேர்தலில் தோற்றுப் போய்விடுவான். வண்டு முருகனுக்கு என்ன செய்வதென்றே தெரியாது. எம்.ஜி.ஆரிடம் நிலைமையைச் சொல்லி வருந்துவான்.

நம்பிராஜன் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவான். முதல் வேலையாக வண்டு முருகனை ஒரு பொய் வழக்கில் சிக்கவைத்து சிறையில் அடைப்பான். சிறையில் வண்டு முருகனைச் சந்தித்து எகத்தாளம் செய்வான். வண்டு முருகன் பதிலுக்கு சவால் விடுவான். இந்தத் தேர்தலில் வேண்டுமானால் நான் தோற்றிருக்கலாம். ஆனால், அடுத்த தேர்தலில் எப்படியும் ஜெயிப்பேன். ஜெயித்து உன்னை அரசியலை விட்டே துரத்தியடிப்பேன் என்று சவால்விடுவான். நம்பிராஜனோ, இந்தத் தேர்தலில் மட்டுமல்ல இனி எந்தத் தேர்தலிலும் தன்னை யாராலும் அசைக்க முடியாது என்று கொக்கரிப்பான். நம்பிராஜன் போன பிறகு வண்டு முருகன் அவன் சொன்னதை யோசித்துப் பார்ப்பான். எந்தத் தேர்தலிலும் தோற்கடிக்க முடியாது என்று சொல்கிறானே. அவ்வளவு உறுதியாக அவன் சொல்ல என்ன காரணம் என்று எம்.ஜி.ஆரிடம் கேட்பான். அவருக்கும் அந்த சந்தேகம் வருகிறது. இதனிடையில் அமெரிக்க மின்னணு வாக்குப் பதிவு எந்திர நிறுவனத்தில் இருந்து ஒருவர் நம்பிராஜனை வந்து சந்தித்து விட்டுப் போன விஷயம் வண்டு முருகனுக்குத் தெரியவரும். அப்படியானால் மின்னணு எந்திரத்தில் ஏதோ திருட்டுத்தனம் செய்துதான் இந்த வெற்றியை அடைந்திருக்கிறான் என்ற சந்தேகம் வரும்.

வண்டு முருகன் ஜாமீனில் வெளியே வந்ததும் முதல் வேலையாக, மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தின் செயல்பாடு குறித்து முன்பே சந்தேகங்களைக் கிளப்பியிருந்த நிபுணர்களை அழைத்துப் பேசுவான். அவர்கள் எப்படியெல்லாம் மோசடி செய்ய முடியும் என்பதை விளக்குவார்கள். செல்போன் மூலமாக வாக்குகளை மாற்ற முடியும். அல்லது அந்த எந்திரங்கள், வாக்கெடுப்பு முடிந்து காவலில் இருக்கும் நேரத்தில் அதைக் கைப்பற்றி கள்ள வோட்டுகளைப் போடமுடியும். வாக்கு எந்திரத்தையே மாற்றிவிடமுடியும் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், இவையெதுவும் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அப்போது நான்தான் ஆட்சியில் இருந்தேன். முதலமைச்சரே தேர்தலில் போட்டியிட்டிருந்ததால் அதிகாரவர்க்கமும் எனக்கு விசுவாசமாகவே நடந்துகொண்டார்கள். வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருந்த அறையில் 24 மணி நேரமும் காமரா வேறு வைக்கப்பட்டிருந்தது. எனவே அந்தவகையில் எந்தத் தவறும் நடந்திருக்க வழியில்லை என்று வண்டு முருகன் உறுதியாகச் சொல்வான். அப்படியானால், மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்துக்குள் பொருத்தப்படும் மென் பொருளிலேயே ஏதேனும் திருட்டுத்தனம் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று சொல்வார்கள். நம்பிராஜன் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் தனக்கு ராசியான எண்ணான ஐந்தில் தன்னுடைய கட்சியின் சின்னம் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட விவரம் வண்டு முருகனுக்கு தெரியவந்திருக்கும். அதை இந்த நிபுணர்களிடம் சொல்வான். அப்படியானால், சந்தேகமே இல்லை. அந்த எண்ணில் வரும் சின்னம் வெற்றி பெறும் வகையில் ப்ரோக்ராம் எழுதியிருப்பார்கள் என்று அவர்கள் சொல்வார்கள்.

சரி என்று அவர்களைப் போகச் சொல்லிவிட்டு வண்டு முருகன் எம்.ஜி.ஆரிடம் தன் திட்டத்தைச் சொல்வான். அமெரிக்காவுக்குச் சென்று அந்த மோசடி நபர்களைச் சந்தித்து அடுத்த தேர்தலில் தனக்கு வெற்றி கிடைக்கும்படிச் செய்யப் போவதாகச் சொல்வான். எம்.ஜி.ஆர். அது கூடாது. மக்களை ஏமாத்தற மாதிரி ஆகிடும். ஒரு தவறை இன்னொரு தவறால் வெல்ல முயற்சி செய்யக்கூடாது. நம்பிராஜனுக்கும் நமக்கும் அப்பறம் என்ன வித்தியாசம் என்று சொல்வார். வண்டு முருகன் அதைக் கேட்கமாட்டான். இந்த மக்களுக்கு வெற்றி பெற்றவர்களைத்தான் பிடிக்கும். எப்படி வெற்றி பெறுகிறான் என்பது முக்கியமல்ல. சேர்ற இடம் கோவிலா இருந்தாப் போதும். போற வழி  எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்வான். எம்.ஜி.ஆரோ, இலக்கு மட்டுமல்ல... வழியுமே முக்கியம்தான். சாக்கடை வழியாபோனா கோவிலுக்குப் போய்ச்சேர முடியாது. சன்னதித்தெரு வழியாப் போனாத்தான் கோவிலுக்குப் போகமுடியும். நீ அமெரிக்கா போகாதே என்று சொல்வார். உங்களை நம்பியிருந்ததுக்கான பலனைத்தான் பாத்துட்டேனே. இனிமே உங்க தயவு எனக்குத் தேவையில்லை. என் வழி தனி வழி என்று சொடக்குப் போட்டுச் சொல்வான். ஒருத்தரோட வழி தனி வழியா இருக்கலாம். ஆனால், தப்பான வழியா இருக்கக்கூடாது என்று எம்.ஜி.ஆர். சொல்வார். அதை அவன் கேட்கமாட்டான்.

 எவ்வளவு தடுத்தும் நிற்காமல் மாறு வேடத்தில் வண்டு முருகன் அமெரிக்கா செல்வான். அது ஒரிஸ்ஸாவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நேரம். ஆளை அடையாளமே காண முடியாதபடி இடது கன்னத்தில் மச்சம் வைத்துக் கொண்டிருக்கும் வண்டு முருகன் ஒரிஸ்ஸா தேர்தலில் மோசடி செய்யவேண்டும் என்று சொல்லியபடி க்ரிமினல்களைச் சந்திப்பான். அவர்கள் மென்பொருள் நிறுவனத்தின் பிரதிநிதியைச் சந்திக்க அழைத்துச் செல்வார்கள். பேரமெல்லாம் பேசி முடித்த பிறகு, மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் எப்படி மோசடி செய்கிறீர்கள் என்று வண்டுமுருகன் கேட்பான். அவர்களோ அது ரகசியம். அதைச் சொல்ல முடியாது என்பார்கள். அப்படியானால், உங்களை எப்படி நம்ப என்று வண்டு முருகன் கேட்பான். சமீபத்தில் தமிழகத்தில் நம்பிராஜன் ஜெயித்த கதை தெரியுமா? மக்கள் செல்வாக்கு அப்போது முதல்வராக இருந்த வண்டு முருகனுக்குத்தான் இருந்தது. ஆனால், அதை அப்படியே நம்பிராஜனுக்கு மாற்றிவிட்டோம். அது எங்கள் வேலைதான் என்று சொல்வார்கள். அவர்கள் பேசியதைக் கேட்டதும்  வண்டு முருகனுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வரும். அவர்களுடைய கோட்டையில் இருக்கிறோம் என்பது தெரியாமல் பாய்ந்து அடிக்கப் போய்விடுவான். அதோடு இடது கன்னத்தில் ஒட்டியிருந்த மச்சமும் கீழே விழுந்து வண்டு முருகன் யார் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிடும். அவனைச் சிறைப்பிடித்துவிடுவார்கள். நம்பிராஜனுக்கு அந்தத் தகவல் சொல்லப்படும். ரகசியமாக அமெரிக்கா வந்து சேருவார்.

வண்டு முருகனை சங்கிலியால் கட்டிப்போட்டிருப்பார்கள். நம்பிராஜன் அவனைப் பார்த்து வெறிச்சிரிப்பு சிரித்தபடியே சாட்டையால் அடிப்பான். என்னமோ பேர் சொல்லுவியே... கறுப்பு எம்.ஜி.ஆரா... எங்க இரண்டு அடி மேலே பட்டதும் சிலிர்த்துக்கிட்டு சண்டை போடு பார்ப்போம் என்று எகத்தாளம் செய்தபடியே வண்டு முருகனை அடிப்பான். இரண்டு அடி வாங்கிய வண்டுமுருகன் துவண்டு விழும்போது ஒரு கை அவனைத் தாங்கிப் பிடிக்கும். உனக்கு வேணும்னா நான் தேவையில்லாம இருக்கலாம். ஆனா எனக்கு நீ தேவை. என் மக்களுக்கு நல்லது செய்ய எனக்கு நீ தேவை என்று சொல்லி அவனுடைய கன்னத்தில் வழியும் ரத்தத்தைத் துடைப்பார் எம்.ஜி.ஆர்.

என்னை மன்னிச்சிடுங்க. நீங்க சொன்னதைக் கேக்காம வந்தது தப்புத்தான் என்று வண்டு முருகன் அவர் காலில் விழுவான். மூன்றாவது அடிக்காக சாட்டை வீசப்படும். வண்டு முருகனுக்கு ஆறுதல் சொன்னபடியே எம்.ஜி.ஆர். அந்தச் சாட்டையை லாகவமாகப் பிடித்து இழுப்பார். நம்பிராஜன் தடுமாறி விழுவான். வண்டுமுருகன் தன்னைக் கட்டிப் போட்டிருக்கும் சங்கிலிகளை அறுத்து எறிவான். ஊரைச் சுத்தற வாலிபன்களைத்தான் இதுவரை பார்த்திருக்க. இனிமே உலகம் சுத்தற வாலிபனைப் பாருடா என்று கர்ஜித்தபடியே அமெரிக்க வில்லன்களையும் நம்பிராஜனையும் பந்தாடுவான். வில்லன் கூட்டத்தைச் சிறைப்பிடித்து நேராக அவர்கள் அனைவரையும் நார்க்கோ அனாலிசிஸ் டெஸ்டுக்கு உட்படுத்துவான். அவர்கள் அனைவரும் கிளிப்பிள்ளை போல் இந்திய தேர்தலில் நடத்திய மோசடிகள் அனைத்தையும் சொல்லிவிடுவார்கள். நம்பிராஜனோ ஒருபடி மேலே போய் தனது கட்சியில் தனக்குப் போட்டியாக இருந்தவர்களைக் கொன்று அதிகாரத்தைக் கைப்பற்றியதில் ஆரம்பித்து முதலமைச்சர் பதவிக்கு வந்த பிறகு செய்த ஊழல்கள், கொலைகள் என அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்வான்.

அவர்களுடைய வாக்கு மூலத்தை வீடியோவில் பதிவு செய்துகொள்ளும் வண்டுமுருகன் அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து கெட்டவர்களுக்கு கடுமையான தண்டனையை வாங்கிக் கொடுத்து தர்மத்தை நிலைநாட்டுவான். அடுத்து நடந்த தேர்தலில் வண்டு முருகனின் கட்சி அமோக வெற்றி பெற்று மக்கள் அதன் பிறகு சந்தோஷமாக வாழ்ந்துகொண்டேயிருப்பார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா என்ன? தனது பணிகளைத் தொடர்ந்து செய்ய வண்டு முருகன் கிடைத்த நிம்மதியில் எம்.ஜி.ஆர். புஷ்பக விமானத்தில் ஏறி வானுலகம் செல்வார். அப்படியாக, கறுப்பு எம்.ஜி.ஆர். வண்டு முருகனின் பொற்கால ஆட்சி சிறிது கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அமோகமாக நடக்க ஆரம்பிக்கிறது.

(இது முடிவல்ல... ஆரம்பமே)