Thursday, 21 November 2013

அந்தக் கோடை வாசஸ்தலத்தில் நீங்கள் செய்தது எனக்குத் தெரியும்...!

குழந்தை மட்டும் பொறந்துடக்கூடாதுஎங்களை என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோங்க என்கிறார்கள் இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள். ஊட்டி சுற்றுலாவுக்குப் புறப்படும் மாணவர்களுக்கு சந்தோஷம் ஜிவ்வென்று ஏறுகிறது. உண்மையில் அந்த சுற்றுலாவில் தாங்கள் விரும்பும் பெண்களுக்கு பாலில் மயக்க மருந்து கொடுத்து தங்கள் ஆசையைத் தணித்துக் கொள்ள அவர்கள் ரகசிய திட்டம் தீட்டியிருந்தார்கள்.  ஆனால், அதற்கு எந்த வசியமும் ஏற்படாமல் அவர்களாகவே சம்மதம் தெரிவித்ததும் மிகுந்த சந்தோஷத்துடன் புறப்படுகிறார்கள். 

அந்தப் பெண்களைப் பொறுத்தவரையில் நாளை திருமணம் ஆகிவிட்டதென்றால், தங்களால் சுதந்திரமாக எதையும் செய்ய முடியாமல் போய்விடும். எனவே, கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது என்று தீர்மானித்திருக்கிறார்கள்.

எல்லாரும் ஊட்டிக்குச் செல்கிறார்கள். பழங்குடி சமூகம் போல் அல்லது அதி நவீன சமுகம் போல் எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம்பாலியல் சுதந்திரத்தை முழுவதுமாகத் துய்க்கிறார்கள். பத்து நாள் சுற்றுலாவை முடித்துவிட்டு பழைய வீடுகளுக்குத் திரும்புகிறார்கள்.

ஆனால், அதன் பிறகு ஆரம்பமாகிறது சங்கிலித் தொடர் கொலைகள்.

சுற்றுலாவுக்குச் சென்றவர்களில் ஒரு பெண்ணை இருவர் காதலித்திருந்தனர். அந்தப் பெண் தனக்குப் பிடித்த ஒருவனை மட்டும் தேர்ந்தெடுத்து இன்னொருவனை நிராகரித்ததில் அவனுக்கு கடுமையான கோபம். ஊட்டியில் நடந்ததை எல்லாரிடமும் சொல்லிவிடுவேன் என்று அவளைப் பயமுறுத்துகிறான்.  இதனால் நண்பர்களுக்கிடையில் சண்டை மூளுகிறது. உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று ஒருவருக்கொருவர் கூச்சலிட்டுக் கொள்கிறார்கள். அடுத்த நாள் காலையில் கல்லூரி கழிப்பறையில் சண்டையிட்டவர்களில் ஒருவன் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடக்கிறான்.  உடலில் மூன்று இடங்களில் அருகருகே கத்தியால் குத்திய தடம் தெரிகிறது. இன்னொருவனோ, நான் மிரட்டியது உண்மைதான் ஆனால் நான் கொல்லவில்லை என்கிறான்.

சில நாட்கள் கழிந்து, இறந்தவனின் காதலியும் மர்மமான முறையில் நூலகத்தில் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். அவளுடைய உடம்பிலும் அதே மூன்று கத்தி குத்திய தடம்! தன்னுடைய விருப்பத்துக்கு இணங்காததால்தான் அவளையும் அந்த நண்பன் கொன்றுவிட்டதாக அவன் மேல் எல்லாருக்கும் சந்தேகம் வருகிறது.

இதனிடையில் ஒருநாள் அவனும் பட்டப்பகல் வேளையில் கல்லூரி மேல் மாடியில் இருந்து விழுந்து இறந்துவிடுகிறான். அவனுடைய உடம்பிலும் மூன்று இடங்களில் கத்தி ஆழமாகப் பாய்ந்த தடம் இருக்கிறது! அவர்களிடையையான காதல் விவகாரம் தெரியவரவே அதுதான் அந்தக் கொலைகளுக்குக் காரணமாக இருக்கும் என்று காவல்துறை கேஸை மூடுகிறது. ஆனால், கொலைகள் தொடர்கின்றன.

சுதந்தர தினத்தன்று கொடியேற்றத்துக்காக கல்லூரி மாணவர்கள் அனைவரும் வரிசையாக நிற்கிறார்கள். வழக்கத்துக்கு மாறாக, தேசியக் கொடித்துணி சற்று பெரிய பொதியாகக் காணப்படுகிறது. நிறைய பூக்களை  வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு பிரின்சிபால் கொடியை ஏற்றுகிறார். மேலே ஏறிய கொடியின் முடிச்சு அவிழாமல் சிக்கிக் கொள்ளவே பிரின்சிபால் வேகமாகக் கயிற்றிப் பிடித்து இழுக்கிறார்.  கொடி விரிகிறது. அப்போது பூக்களுக்கு பதிலாக ரத்தம் தோய்ந்த தலை ஒன்று மேலிருந்து கீழே விழும். மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து சிதறி ஓடுவார்கள்.

இன்னொரு நாள் உடற் பயிற்சி வகுப்பு நடக்கும் நேரத்தில் ஈட்டி எறிதல் பயிற்சிக்காக மாணவர்கள் ஸ்போர்ட்ஸ் ரூமுக்குச் செல்வார்கள். அந்த நேரம் பார்த்து மின்சாரம் போய்விடும். ஈட்டியை எடுப்பவர் ஏதோ கனமாக இருக்கிறதே என்று சொல்லியபடியே அதை எடுத்துவருவார். அந்த ஈட்டியை தோளில் கிடைமட்டமாகச் சாய்த்தபடி வராண்டாவில் நடந்துவருவார். அவரைப் பார்ப்பவர்கள் எல்லாம் அதிர்ச்சியில் தலை தெறிக்க ஓடுவார்கள். என்ன விஷயமென்றால், அந்த ஈட்டியின் முனையில் ஒரு மாணவனின் தலை செருகப்பட்டிருக்கும். திரும்பிப் பார்க்கும் அந்த மாணவன் அதிர்ச்சியில் மயங்கிவிழுவார். இப்படி இறப்பவர்கள் எல்லாரும் சுற்றுலாவுக்குச் சென்று வந்தவர்களாகவே இருப்பார்கள்.

சுற்றுலாவுக்குப் போயிருந்தபோது நடந்ததை ஒரு மாணவன் செல்போனில் படமாக எடுத்து மாணவிகளை மிரட்டிக் கொண்டிருந்தான். அவன்தான் இந்தக் கொலைகளைச் செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுகிறது. அவனை எல்லாரும் கூப்பிட்டு மிரட்டுகின்றனர். தான் செல்போனில் படம் எடுத்தது உண்மைதான். ஆனால், யாரையும் கொல்லவில்லை என்கிறான். அடுத்த நாள் கல்லூரிக்கு தன் வண்டியில் வரும் வழியில் விபத்தில் சிக்கிக் கொள்கிறான். மருத்துவமனையில் சேர்க்கப்படும் அவன் மருத்துவர்களால் காப்பாற்றப்படுகிறான். ஆனால், அன்றிரவு ஒரு உருவம் மருத்துவமனைக்கு தனியாகப் போகிறது. அடிபட்டுக் கிடப்பவனின் ஆக்ஸிஜன் மாஸ்கை கழட்டிப் போடுகிறது. பிளாஸ்கில் இருந்து தேநீரை கிளாஸில் ஊற்றிக் கொண்டு படுக்கைக்கு அருகில் உட்கார்கிறது. நிதானமாக தேநீரை ரசித்துக் குடிக்கிறது. விபத்தில் அடிபட்டவன் மூச்சு முட்டி இறப்பதை வேடிக்கை பார்க்கிறது. அவன் துடிதுடித்து இறந்ததும் கண்ணை மூடிவிட்டு ஆக்ஸிஜன் மாஸ்கை மறுபடியும் பொருத்திவிட்டு அந்த உருவம் போய்விடுகிறது.

சுற்றுலா போவதற்கு முன்பாகவே இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று ஒரு மாணவன் அவர்களை எச்சரித்திருந்தான். அவன்தான் இந்தக் கொலைகளைச் செய்திருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டு அவனை விசாரிக்கிறார்கள். கொல்லும் அளவுக்கு தனக்கு அவர்கள் மீது எந்தக் கோபமும் கிடையாது என்று அம்மா மீது சத்தியம் செய்து சொல்கிறான். அதை எல்லாரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

கல்லூரியில் ஆண்டு விழா நடக்கிறது. அதில் இடம்பெறும் நாடகத்தில், முன்பே எச்சரிக்கை செய்திருந்தவனை இன்னொருவன் துப்பாக்கியால் சுடும் காட்சி இடம்பெறுகிறது. ஆனால், பொம்மைத் துப்பாக்கிக்குப் பதிலாக யாரோ உண்மைத் துப்பாக்கியை வைத்துவிடுகிறார்கள். அது தெரியாத அவன் நெஞ்சைக் குறிவைத்து சுட்டுவிடவே ரத்த வெள்ளத்தில் மிதக்கிறான் சுடப்பட்டவன். பார்வையாளர்கள் காட்சி தத்ரூபமாக இருப்பதாக கை தட்டி ஆர்ப்பரிக்கிறார்கள். சுட்டவனும் கதையின் படி ஓடி ஒளிந்து கொள்கிறான். திரைச்சீலை இறக்கப்படுகிறது. தரையில் விழுந்தவன் எழுந்திரிக்காமல் இருப்பதைப் பார்த்ததும் எல்லாரும் போய்ப் பார்க்கிறார்கள். உண்மையில் நிஜ குண்டினால் சுடப்பட்டது தெரிந்ததும் மருத்துவமனைக்கு விரைந்து எடுத்துச் செல்கிறார்கள். ஆனால், பாதி வழியிலேயே அவன் உயிர் பிரிந்துவிடுகிறது.

சுட்டவன் தலைமறைவாகிவிடுகிறான். அவனை நண்பர்கள் ரகசியமாகப் போய் சந்திக்கிறார்கள். அவன் தான் அம்மா மேல சத்தியம் செஞ்சு கொல்லைலைன்னு சொன்னானே. அவனைப் போய் எதுக்காகக் கொன்றாய் என்று கேட்கிறார்கள். நாடகத்தை நிர்வகித்த தமிழ் ஆசிரியர் துப்பாக்கியைக் கொடுக்கும்போது உண்மைத் துப்பாக்கி போலவே இருக்கிறதே என்றூ கேட்டபோது அவர் அதை தன் நெஞ்சுக்கு நேராக வைத்து சுட்டுக் காட்டியதாகவும் அப்போது அதில் குண்டு எதுவும் இல்லை என்றும் சொல்கிறான்.

விபத்தில் சிக்கியவனையும் கடைசியாகப் பார்த்துவிட்டு வந்தது தமிழாசிரியர்தான் என்ற தகவல் அவர்களுக்குக் கிடைக்கிறது. மாடியில் இருந்து விழுந்து இறந்தவனும் தமிழாசிரியரைப் பார்க்கப் போவதாகச் சொல்லிவிட்டுத்தான் போயிருந்தான். மாணவர்களுக்கு ஏதோ சந்தேகம் ஏற்படுகிறது. அவரை ரகசியமாக கண்காணிக்கிறார்கள். கல்லூரி வளாகத்தில் இருக்கும் குடியிருப்பில் தனியாகத் தங்கி இருக்கும் அவருடைய வீட்டை அவர் வகுப்பறைக்குப் போயிருக்கும்போது ஒரு பெண் போய் சோதிக்கிறார். வீட்டில் ஒரு திரிசூலம் காணப்படுகிறது! மேலும் தேடிப்பார்க்கையில், சுற்றுலாவுக்குப் போய் வந்தவர்கள் எடுத்த குரூப் புகைப்படம் ஒன்று இருக்கிறது. அதில் இறந்தவர்களின் முகத்தில் சிவப்பு மையால் பெருக்கல் குறி போடப்பட்டிருக்கிறது. புகைப்படத்தைக் கூர்ந்து கவனிக்கிறாள். அடுத்ததாக குறிவைக்கப்பட்டிருப்பது தான் தான் என்பது தெரிகிறது. பயத்தில் அலறி அடித்தபடி வாசலை நோக்கி விரைகிறாள். உள்பக்கமாக பெரிய பூட்டு போடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அறையை நோக்கி ஓடுகிறாள். அவள் ஓட ஓட ஒவ்வொரு அறையின் விளக்குகளும் தானாக அணைகின்றன. வீட்டுக்குள் இருள் பரவுகிறது. செல்போனின் டார்ச்சை போட்டுப் பார்ப்பவர் அதிர்ச்சியில் உறைகிறாள். ஒரு நாற்காலியில் தமிழ் ஆசிரியர் கையில் திரிசூலத்துடன் உட்கார்ந்திருக்கிறார்! இருவருக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் வெடிக்கிறது. ஊட்டிக்குப் போனபோது கலாசார சீரழிவு வேலையில் அவர்கள் ஈடுபட்டதால் அவர்கள் ஒவ்வொருவரையாகக் கொன்றதாக கொக்கரிக்கிறார்.

தமிழாசிரியருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் வாக்குவாதம் நடக்கிறது. உண்மையிலேயே சமூகத்தில் எத்தனையோ சீரழிவுகள் நடக்கின்றன. சாதி வெறி பிடித்தவர்களுக்கு எதிராக இந்த கொலையை நடத்த வேண்டும். காவல்துறையின் அராஜகம், கல்வித்துறையில் நடக்கும் ஊழல், மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகள், அரசியல்வாதிகளின் அட்டூழியங்கள் இதற்கு எதிராக போராட வேண்டும். அந்த அட்டூழியங்களைச் செய்பவர்களைக் கொல்ல வேண்டும். ஒழுக்கம், பண்பாடு தொடர்பான விஷயங்கள் காலத்துக்கு ஏற்ப மாறக்கூடிய ஒன்று. தனி நபர் விருப்பம் சார்ந்தது. பண்பாட்டுக் காவலர்கள் சாதி வெறி பிடித்தவர்களாகவும், ஆணாதிக்கப் போக்கு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். புதிய தலைமுறை அவை எல்லாவற்றையும் தூக்கித் தூர எறிந்துவிட்டு முன்னே செல்ல முயற்சி செய்கிறது. ஒழுக்கம் சார்ந்த விதிகளும் அதுபோல் மாற்றத்துக்கு உள்ளாக வேண்டிய ஒன்றுதான். பாலியல் சுதந்திரம் முழுமையாக அனுமதிக்கப்படும் பழங்குடி சமூகத்திலோ, அதி நவீன சமூகத்திலோ அது தொடர்பான வக்கிர சம்பவங்கள் நடப்பதில்லை. பண்பாட்டைக் கட்டிக் காப்பதாகச் சொல்லும் சமூகங்களில்தான் சாமியாரில் இருந்து சம்சாரி வரை எல்லாரும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்கள் என்று அவள் சொல்கிறாள். தமிழ் இலக்கியங்களில், பழங்கால வாழ்க்கையில் இருந்து பாலியல் சுதந்திரம் பற்றி பேசுகிறாள். பாலியல் சுதந்திரத்துக்கும் சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் இடையிலான தொடர்பை விளக்கிச் சொல்கிறாள்.

தமிழாசிரியர் நாகரிக சமூதாயத்தின் அடையாளமாக பாலியல் ஒழுக்கம் இருப்பதை எடுத்துச் சொல்கிறார். மற்ற சமூகங்கள் எப்படி இருக்கின்றன என்பது நமக்குத் தேவையில்லை. ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒவ்வொரு அடையாளங்கள் உண்டு. அதை அவர்கள் பின்பற்ற வேண்டும். உலகில் யாருமே தாலி கட்டுவதில்லைஎன்றூ நாமும் தாலியை தூக்கி எறிய வேண்டியதில்லை. பாலியல் சுதந்திரத்தை வாய் கிழியப் பேசும் சமூகங்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்பதன் தேவையை உணர்ந்து அந்த வழிக்குத் திரும்ப ஆரம்பித்திருக்கும் நிலையில் நாம் அவர்களைப் போல் செய்ய முற்படுவது தவறு என்கிறார்.

இருவருக்கும் இடையில் பெரும் சண்டை நடக்கிறது. வீட்டுக்குப் பின் பக்கத்தில் இருக்கும் தோட்டத்துக்கு தப்பி ஓடுகிறாள். துரத்தி வரும் தமிழாசிரியர் கால் தவறி அங்கு இருக்கும் கிணற்றுக்குள் விழுந்துவிடுகிறார். அவர் தலை மேல் பெரிய கல்லைப் போட்டு கொன்றுவிடுகிறாள். மறு நாள் காவல் துறையோடு வந்து அந்த உடலை எடுத்து போஸ்ட்மார்டம் செய்து புதைக்கிறார்கள்.


தன்னுடைய அறைக்குத் திரும்பும் அந்தப் பெண் குளித்துமுடித்துவிட்டு புதிய உரை அணிந்துகொண்டு வருகிறாள். கதவிடுக்கு வழியாக ஒரு கடிதம் வீசப்படுகிறது. எடுத்துப் பிரித்துப் பார்க்கிறாள்... அந்தக் கோடை வாசஸ்தலத்தில் நீங்கள் செய்தது எனக்குத் தெரியும்!என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது.