Wednesday 1 March 2017

நரசிம்ம ராவ் - அரை சாணக்கியர்

அவர் மருத்துவமனையில் படுத்த படுக்கையாகக் கிடந்தபோதே ‘உடம்பை என்ன செய்யப் போறீங்க’ என்று கேட்டிருக்கிறா சோனியாவின் உதவியாளர்.

ஐம்பது வருடங்களுக்கு மேல் கட்சிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து கல்வித்துறை, உள்துறை, வெளியுறவுத்துறை, சமூக நலத்துறை எனப் பல்வேறுதுறைகளின் அமைச்சராகவும் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் ஒட்டு மொத்த தேசத்தின் தலைவராகவும் ஆனவருடைய உடலை காங்கிரஸ் தலைமையகத்தில் பார்வைக்குக்கூட வைக்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள். 

இது போதாதென்று சொந்த மாநிலத்தில் தகனம் செய்யப்பட்ட உடலை பாதி எரிந்த நிலையில் தெரு நாய்கள் இழுத்துப் போட்டு கடித்துக் குதறும்படியாக நிராதரவாக விட்டு விட்டும் போனார்கள். 

இந்தியாவின் ஜியாபிங் டெங்... இந்தியாவின் மார்கரெட் தாட்சர் என்றெல்லாம் புகழப்பட்டிருக்கவேண்டிய ஒருவருக்குக் கிடைத்த காங்கிரஸ் மரியாதை இதுதான். இதற்கான காரணம் மிக மிக எளிது : பம்முலப்பர்தி வெங்கட நரசிம்மராவ் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல (அவருடைய இந்துப் பின்னணியும்கூட ஒரு காரணமாக இருந்திருக்கும்)  அவர் நேரு வம்சத்துக்கு பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டிருக்கும் அரியணையில் ஆக்கிரமிப்பாளராக, அழையாத விருந்தாளியாக வந்து அமர்ந்துவிட்டார்.

ஆனால், இந்த உண்மைக் காரணத்தை வெளிப்படையாகச் சொல்லமுடியாதே... எனவே ராவ் குறித்து ”புதிய வரலாறு’ உருவாக்கப்பட்டது.

இந்திரா படுகொலைக்குப் பிந்தைய சீக்கியப் படுகொலைகளுக்கு அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ராவே காரணம்.

போபால் கெடுபுகழ் ஆண்டர்சன் தப்பித்துச் சென்றதற்கு உள்துறை அமைச்சராக இருந்த ராவே காரணம்.

பாபர் மசூதி இடிப்புக்கு அப்போது பிரதமராக இருந்த ராவே காரணம்...

இப்படியாக காங்கிரஸ் காலத்து அனைத்து தவறுகளுக்கும் ராவே காரணம்... ஆனால், தாராளமயமாக்கலை ஆரம்பித்துவைத்ததற்கு மட்டும் இறந்த ராஜீவும், இரண்டாம் தேர்வாக நியமிக்கப்பட்ட மன்மோகன்சிங்கும், பொருளாதார நெருக்கடியும், லைசன்ஸ்ராஜ் காலகட்டப் பின்னடைவுகளும்தான் காரணம்.

ஆக, அவர் செய்யாத கெடுதல்களுக்கு அவர் காரணம்... அவர் செய்த நன்மைகளுக்கு அவர் வெறும் கருவி மட்டுமே.

காங்கிரஸின் அடுத்த தலைமைக்கு இந்த வரலாறு மிகவும் பிடித்திருந்தது. காங்கிரஸ் கிளிகள் மேடைதோறும் இதையே முழங்கிவருகின்றன. ராவ் ஓரங்கட்டப்பட்டு ஒழிக்கவும்பட்டுவிட்டார். படுத்த படுக்கையாகக் கிடந்த நிலையில் தனது வாழ்நாள் விசுவாசமும், தியாகமும், சாதனைகளும் ஓரங்கட்டுப்பட்டுவிட்ட வலியில் பல நாட்கள் பட்டினி கிடந்து மருந்தும் உட்கொள்ள மறுத்து தன் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார். காங்கிரஸ் 1996-ல் தோற்றதும் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இறக்கப்பட்ட ராவ் ஒட்டு மொத்த கட்சியால் ஓரங்கட்டப்பட்டிருந்தார். காங்கிரஸ் அரசைத் தக்கவைக்க அனைவரும் சேர்ந்த செய்த ஒரு சதியில் அவர் மட்டுமே குற்றவாளியாக்கப்பட்டு நீதிமன்றம் ஏற வைக்கப்பட்டார். பிரதமராக இருந்து ஊழல் வழக்கில் சிக்கி நீதிமன்றப் படி ஏற நேர்ந்த முதல் அரசியல் தலைவர் அவரே... தனது வழக்குகளை நடத்தப் பணம் இல்லாமல் கிட்டத்தட்ட சொந்த வீட்டை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்... நான் என்ன தவறு செய்தேன் என்று மரணத் தருவாயில் அவர் கேட்ட கேள்விக்கு சோனியாவிடமிருந்து பெரும் மவுனமே பதிலாகக் கிடைத்திருக்கிறது.

இந்த அளவுக்கு ராவ் ஓரங்கட்டப்படவேண்டியவரா... மேலே சொல்லப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளில் எந்த அளவுக்கு உண்மைகள் இருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்கான பதிலை நரசிம்மராவ் : தாராளமயமாக்கலின் தந்தை என்ற புத்தகம் தெளிவாக, விரிவாக, அழுத்தமாக முன்வைக்கிறது. ராவை ஹீரோவாக்கிக்காட்டவேண்டும் என்ற திட்டமிடல் எல்லாம் ஆசிரியருக்கு இல்லை. சரித்திர நிகழ்வுகளை வரிசையாக முன்வைக்கிறார். அவற்றின் பின்னாலிருக்கும் பல்வேறு அம்சங்களையும் சேர்த்துப் பார்த்து நாமே ஒரு முடிவுக்கு வரும்படிச் செய்கிறார். சரித்திரத்தின் மலையுச்சி ஒன்றில் கைவிடப்பட்டு நாய்களால் கடித்துக் குதறப்பட்டு பாதி எரிந்த நிலையில் இருக்கும் உடல் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் சுடர் விளக்காக மாறுகிறது.

*

தாராளமயமாக்கலுக்கு மன்மோகன் சிங் முக்கிய காரணம்தான்... ஆனால், மன்மோகன் சிங் இல்லாவிட்டாலும் அது நடந்தேறியிருக்கும்... ஆனால் நரசிம்மராவ் இருந்திருக்கவில்லையென்றால் அது சாத்தியமாகியிருக்காது என்கிறார் ஆசிரியர். 1980களில் இந்திராவின் காலத்திலேயே உலக வங்கியிடம் கை ஏந்தும் நிலை வந்துவிட்டிருந்தது. பொருளாதார சீர்திருத்தங்களில் நம்பிக்கை கொண்டிருந்த ராஜீவ் ஊழல் வழக்குகளில் சிக்கி அந்த உத்வேகத்தை இழந்துவிட்டிருந்தார். காங்கிரஸில் வேறு யார் பிரதமராகியிருந்தாலும் இந்த அளவுக்கு தாராளமயமாக்கலை முன்னெடுத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அர்ஜுன்சிங், திவாரி போன்றவர்கள் கடைசி வரை தாராளமயமாக்கலை விமர்சித்தே வந்திருக்கிறார்கள். ப.சிதம்பரம் பிரதமர் போட்டியில் இருந்திருக்கவில்லை. மன்மோகன் சிங்கினுடைய பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை சோனியா விரும்பியிருக்கவே இல்லை. மன்மோகன் சிங் இல்லாதிருந்தாலும் தாராளமயமாக்கம் நடந்திருக்கும். ஆனால், ராவ் இல்லையென்றால் நடந்திருக்காது என்பதையே இவை சுட்டிக்காட்டுகின்றன என்கிறார் நூலாசிரியர்.

உலக வங்கி, யார் பிரதமராக இருந்திருந்தாலும் தான் நினைத்ததைச் சாதித்திருக்கும் என்று சொல்லமுடியும்தான். ஆனால், நரசிம்மராவ்தான் பிரதமராக இருந்தார். அவர்தான் தாராளமயமாக்கலை முன்னெடுத்திருக்கிறார் என்பது சரித்திரம். எனவே யூகங்களின் அடிப்படையில் நிராகரிப்பதற்கு முன் சரித்திரத்தின் அடிப்படையிலும் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

*

சீக்கியக் கலவரத்தில் ராவின் செயலின்மை பற்றிய குற்றச்சாட்டு... பெரிய மரங்கள் கீழே விழுந்தால் சிறிய அதிர்வு இருக்கத்தான் செய்யும் என்று ராவ் சொல்லவில்லை... இந்திரா கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அதன் பிந்தைய நிகழ்வுகளை ஒருங்கிணைக்க ஒற்றை அதிகார மையம் இருக்கவேண்டும் என்று ராவின் கைகள் கட்டிப்போடப்பட்டு பிரதமர் அலுவலகத்துக்கு அதிகாரம் போய்விட்டிருந்தது. ராஜீவ் கட்சித்தலைவராகப் பதவி ஏற்ற பின்னர்தான் சீக்கியப் படுகொலைக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன... ராவ் பரிதாபமான குரலில் ஒவ்வொரு காவல்துறை உயர் அதிகாரிக்கும் போன் போட்டு உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருந்திருக்கிறார்... மேலிடத்து உத்தரவு வேறுவிதமாக இருந்ததால் அவர்கள் ராவின் கெஞ்சல்களை மதிக்கவில்லை... ஆனால், அப்போது உள்துறை அமைச்சர் பம்முலப்பர்தி வெங்கட நரசிம்மராவ் தான் என்பதால் அவரே காரணம் என்று காங்கிரஸ் வரலாறு சொல்கிறது.

*

போபால் ஆண்டர்சன் இந்தியாவுக்கு வந்ததும் கைது செய்யப்பட்டார். ஆனால், உள்துறை அமைச்சகத்திடமிருந்து அதாவது ராவிடமிருந்து அவரை விடுதலை செய்யும்படி உத்தரவு வந்தது. அதனால் விடுதலை செய்தேன் என்று பிரதமர் போட்டியாளரான அர்ஜுன் சிங் குற்றம்சாட்டினார். இன்றும் காங் உள்வட்டத்தில் அதுவே நம்பவேண்டிய உண்மையாக முன்வைக்கவும்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக இந்தப் புத்தகத்தில் இடம்பெறாத வேறொரு உண்மை நினைவுக்கு வருகிறது. இதே அர்ஜுன்சிங்தான் அந்தத் தொழிற்சாலை மதிலை ஒட்டி ஏழைகளைக் குடியமர்த்தினார். சுமார் ஐந்து கி.மீக்குக் குடியிருப்பு இருக்கக்கூடாது என்று சொல்லத் தகுந்த அபாயகரமான எரிமலைக்கு அருகில் மக்களை அவர்களுடைய வாக்குகளுக்காக பட்டா போட்டுகொடுத்து வசிக்க வைத்துக் கொன்ற அர்ஜுன் சிங், நரசிம்மராவ்தான் ஆண்டர்சனைத் தப்பிக்கவிட்டுவிட்டார் என்று அறச்சீற்றம் கொண்டிருக்கிறார். பின்னே... நேரு குடும்பப் பரம்பரை எஜமானர்கள் ஏதேனும் தவறு செய்ய முடியுமா என்ன..?

*

ராவ் மீதான மிகப் பெரிய குற்றச்சாட்டு: அவர் இந்து அடிப்படைவாத இயக்கங்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு பாபர் மசூதியை இடித்துவிட்டார்... அதன் மூலம் மதச்சார்பற்ற இந்தியாவின் அடித்தளத்தையே நொறுக்கிவிட்டார்.

ராகுல் இதைத்தான், ‘எங்கள் குடும்பத்தினர் யாரேனும் ஆட்சியில் இருந்திருந்தால் நாங்கள் அதைக் கட்டி காத்திருப்போம்’ என்று முழங்கியிருக்கிறார்.

உண்மையில் ராவால் அன்று என்ன செய்திருக்கமுடியும்... அந்த விஷயத்தில் ராவ் என்னவெல்லாம் செய்தார் என்று நூலாசிரியர் மிக விரிவாக விவரித்திருக்கிறார்.

முதலவதாக உத்தரபிரதேசத்தில் அப்போது ஆட்சியில் இருந்தது பி.ஜே.பி. கல்யாண் சிங் அரசு. அவர்கள் கோவில் கட்டியே தீருவோம் என்று சொல்லித்தான் ஆட்சிக்கே வந்திருக்கிறார்கள். காவல்துறையில் ஆரம்பித்து மத்திய அதிரடிப்படை, ராணுவம் எல்லாமே மாநில முதல்வரின் அனுமதி இன்றி ஷூ லேஸைக்கூட அவிழ்த்துக்கட்டிவிட முடியாது. அதோடு பா.ஜ.க. முதல்வர் கல்யாண் சிங் பொது வெளியிலும்சரி... நீதி மன்றத்திலும் சரி.... அந்த சர்ச்சைக்குரிய கட்டுமானம் உடைக்கப்படமாட்டாது என்று உறுதிமொழி அளித்திருந்தார். அதனால்தான் ராவ் அந்தக் கட்டுமானத்தின் பாதுகாப்புப் பொறுப்பை மத்திய அரசிடம் கொடுத்துவிடும்படி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டபோது நீதிமன்றம் முடியாது என்று மறுத்துவிட்டிருந்தது.

ராவ், அடுத்ததாக காங்கிரஸ் தலைவர்களிடம் பல முறை ஆலோசனை கேட்டிருக்கிறார். நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்களோ அதையே செய்கிறேன் என்று சொல்லியிருகிறார். அந்தக் கட்ட்டுமானம் இடிக்கப்பட்டபிறகு நடந்த கூட்டத்தில்கூட பிரணாப் முகர்ஜி, காங் பொதுக்குழுவில் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட ஒரு முடிவுக்கு தனிப்பட்ட முறையில் யாரையும் குறை சொல்ல முடியாது என்றே சொல்லியிருக்கிறார். மேலும் பிரதமராக இருந்த ராவ் அது இடிக்கப்படுவதற்கு சில காலம் முன்பாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டபோது அங்கிருந்தபடியே நான் இல்லாமல் நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் சம்மதம் தருகிறேன் என்று வேறு கூறியிருக்கிறார். காங்கிரஸில் அப்போது யாருமே உ.பி. பா.ஜ.க.ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கவே இல்லை. ஆனால், அது இடிக்கப்பட்டதும் ராவ் ஏன் அந்த உத்தரபிரதேச அரசை முன்பே கலைக்கவில்லை... இந்துத்துவர்களுடன் சேர்ந்து இடித்துவிட்டார் என்று குற்றம்சாட்டிவருகிறார்கள்.

மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் கவர்னர்கூட மாநில அரசைக் கலைக்கத் தேவையில்லை என்றே பரிந்துரை அனுப்பியிருக்கிறார். ஒருவேளை ராவ் அந்தக் கட்டுமானம் இடிக்கப்படுவதற்கு முன்பே மாநில அரசைக் கவிழ்க்க முடிவு செய்திருந்தால் ஜனாதிபதி அதற்கு சம்மதம் தந்திருக்கமாட்டார் என்று நம்பவே இடம் இருக்கிறது. சங்கர் தயாள் சர்மாவுக்கும் ராவுக்கும் இடையிலான சிக்கலான நட்புறவும் அவர்களிடையேயான கடிதப் பரிமாற்ற ஆவணங்களும் அதையே சுட்டிக்காட்டுகின்றன என்கிறார் நூலாசிரியர்.

மேலும் ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டால்தான் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல் செய்ய முடியுமே தவிர, சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்ற யூகத்தின் பேரில் அதை அமல் செய்ய முடியாது. அப்படி அவர் செய்திருந்தால் பாஜக மட்டுமல்ல கம்யூனிஸ்ட்களும் மாநில கட்சிகளும் ஊடகங்களும் என ஒட்டு மொத்த தேசமும் அதை எதிர்த்திருக்கும். சிறுபான்மை செல்வாக்குடன் ஆட்சியில் இருந்த ராவுக்கு அதுவே கடைசிநாளாக இருந்திருக்கும். அவர் அப்போதுதான் பொருளாதார சீர்திருத்தங்களை ஆரம்பித்திருந்தார். உலகம் இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருந்தது. அந்த நேரத்தில் காங்கிரஸ் அரசு வீழ்ந்தால் பொருளாதார சீர்திருத்தம் அடியோடு முடங்கிப்போகும். இந்தியா அதன் பிறகு வேறு திசையில்தான் நகர்ந்திருக்கும். தனது பதவியைக் காப்பாற்றுவதற்காகவே உத்திரப் பிரதேச அரசைக் கலைக்கவில்லை என்று சொன்னாலும் தேச நலனும் அதில் இருக்கத்தான் செய்திருக்கிறது.

அந்தக் கட்டுமானம் இடிக்கப்படுவதற்கு முன்புவரையில் அவர் செய்தவை எல்லாமே அது இடிக்கப்பட்டாமல் இருந்திருந்தால் மிக மிகச் சரி என்றே மதிப்பிட்பபட்டிருக்கும். இடிக்கப்பட்டதற்கு அவர் காரணமல்ல என்பதால் அவருடைய செயல்களை வைத்து மட்டுமே அவரை மதிப்பிடவேண்டும். இதை ராவ் தனது சுய சரிதையில் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்: ‘தன் குழந்ந்தையைக் கடத்திச் சென்ற கடத்தல்காரனிடம் ஒரு தந்தை எப்படி நடந்துகொள்வாரோ அப்படித்தான் நான் நடந்துகொண்டேன்’.

அவன் குழந்தையை கொன்றால் தந்தைதான் கொன்றார் என்று சொல்ல முடியுமா..?

ராவ் அந்த விஷயத்தில் செய்த ஒரே பெரிய தவறு என்று நுலாசிரியர் சொல்வது என்னவென்றால் அவர் இந்துத்துவத் தலைவர்களிடம் ரகசியமாகப் பேசி இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணமுயன்றார். அல்லது அதன் மூலம் தீர்த்துவிட முடியும் என்று நம்பினார்.

நேருவைப்போல் இந்தியாவைக் ‘கண்டுபிடிக்க வேண்டிய’ அவசியம் இல்லாதவர் ராவ். நிஜாம் ஆட்சி செய்த ஹைதராபாத்தில் பிறந்த ராவுக்குத் தெரிந்த பல மொழிகளில் உருதும் ஒன்று. இந்திய மத நல்லிணக்க பாரம்பரியம் மீது பற்றுதல் கொண்ட ராவ் இந்துத் தலைவர்கள், சாமியார்களுடன் நட்புறவில் இருந்திருக்கிறார். மிகப் பெரிய சமஸ்கிருத பண்டிதரும்கூட. எனவே, அத்வானி, ஜோஷி ஆகியோருடன் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தி எந்த அசம்பாவிதமும் நடக்காமல் தடுத்துவிட முடியும் என்று நம்பினார். ஆனால், ஆயிரக்கணக்கான கரசேவகர்களைக் கட்டுப்படுத்தும் சக்தி அத்வானிக்கும் ஜோஷிக்கும் இருக்காது என்பதையோ அவர்கள் இருவருமே ராவை ஏமாற்றிவிடுவர்கள் என்பதையோ அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. நிச்சயம் அவர் இதை எதிர்பார்த்திருக்கவேண்டும் என்கிறார் நூலாசிரியர்.

சட்டரீதியாக எதுவும் செய்ய முடியாத நிலையில் அவர் வெறுமனே இருந்திருக்கவேண்டும். பொற்கோவில் ராணுவ அத்துமீறல், இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பியது போன்ற நிகழ்வுகளால் ஏற்பட்ட இழப்புகளைக் கண்கூடாகப் பார்த்திருந்த ராவ், அதிரடியாக எதுவும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். சட்டரீதியாக எதுவும் செய்யமுடியாத நிலை... காங் பொதுகூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதைமீற முடியாத நிலை... இப்படி எல்லாமே அந்தக் கட்டுமானத்தின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் தராத நிலையில் அவர் சாட்சிக்காரரை விட சண்டைக்கரரிடமே பேசிப் பர்ப்போம் என்றுதான் இந்து இயக்கத் தலைவர்களுடன் பேச முற்பட்டிருக்கிறார். காஷ்மீர் பிரிவினைவாதிகளில் ஆரம்பித்து எல்லா அரசாங்கங்களும் இப்படி திரைமறைவு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது உண்டு. எனவே, ராவ் இந்துத் தலைவர்களிடம் பேசி கட்டுமானத்தைக் காப்பறிவிடலாம் என்று நம்பினர். அதுதான் அவர் செய்த ஒரே ஒரு தவறு. அதுதான் அவர் இந்து இயக்கங்களின் சதியில் அங்கமாக இருந்தார் என்றும் சொல்லவைத்திருக்கிறது. உண்மையில் அவர் அந்தக் கட்டுமானத்தைக் காக்கவே முயற்சி செய்திருக்கிறார். ‘கோவிலும் கட்டப்படவேண்டும்... மசூதியும் இடிக்கப்படக்கூடாது’ என்பதுதான் ராவின் கொள்கை என்கிறார் நூலாசிரியர்.

இது சரியாக இருக்கவே வாய்ப்பு அதிகம். காவலர்களின் உதவியை நாடக்கூடாது. என்று கடத்தல்காரன் மிரட்டும்போது பாசமுள்ள தந்தை நிச்சயம் அவனுடன் தானே பேச்சுவார்த்தை நடத்துவார். அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து கடத்தல்காரன் குழந்தையைக் கொன்றால் ரகசியப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தந்தையும் சேர்ந்துதான் குழந்தையைக் கொன்றுவிட்டார் என்றா பழிக்க முடியும்?

*

இந்தப் புத்தகம் நரசிம்ம ராவின் இன்னொரு சாதனையைப் பற்றி மிக விரிவாகச் சொல்கிறது. உண்மையில் அந்த சாதனை இதுவரையிலும் யாராலும் எங்கும் சொல்லவும்பட்டிருக்கவில்லை. பா.ஜ.க. ஆட்சி காலத்தில் பொக்ரான் அணு குண்டு வெடிப்பு சாதனை நிகழ்த்தப்பட்டது என்பதுதான் பொதுவாகப் பதிவாகியிருக்கும் உண்மை. ஆனால், நரசிம்ம ராவின் ஆட்சி காலத்திலேயே அதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்துமுடிக்கப்பட்டிருந்தன என்ற உண்மையை இந்த நூலில் விரிவாக விவரிக்கிறார்.

*

ராவ் முழுக்க முழுக்க நல்லவர் என்றும் இந்தப் புத்தகம் சொல்லவில்லை. நல்லதைச் செய்ய ஒரு மன்னர் சில நேரங்களில் சில தவறுகளும் செய்யவேண்டியிருக்கும் என்ற சாணக்கிய நீதிக்கு ஏற்ப நடந்துகொண்டவர்தான் என்று உண்மைகளை உள்ளபடியே சொல்கிறார் நூலாசிரியர். ராவ் தனிப்பட்ட முறையில் லஞ்ச ஊழலில் ஈடுபட்டவர் அல்ல. பின்னாளில் தனது வீட்டை விற்று வழக்கு நடத்த வேண்டிய நிலைக்குக் கூட வந்துவிட்டிருக்கிறார். ஆட்சி கவிழாமல் இருக்க சில எம்.பி.க்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை இருந்திருக்கிறது. அதை அவர் எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றிச் செய்திருக்கிறார். எல்லா அரசியல் கட்சிகளும் செய்யும் செயல்தான் இது. ஆனால், காங்கிரஸ் கட்சி ராவை அதற்குப் பலிகடாவாக்கியது.

ராவ் அடிப்படையில் ஒர் சோஷலிஸவாதி. தெலங்கானா வாரங்கலில் பெரும் பண்ணையாரான அவர் நில சீர்திருத்த மசோதாவைக் கொண்டுவந்தபோது தன்னிடம் இருந்த 1200 ஏக்கர் நிலத்தை அந்த கிராமத்தில் இருந்த அனைவருக்கும் ஆளுக்கு 1-2 ஏக்கர் எனப் பிரித்துக் கொடுத்துவிட்டார். ராவ் இறந்தபோது எந்த காங்கிரஸ் தலைவரும் இறுதிச் சடங்குக்கு வரவில்லை. அவரால் நிலம் பெற்ற வாராங்கல் கிராம மக்களே வண்டி பிடித்து வந்து சேர்ந்திருந்தனர்.

தேர்தல் பணிகளுக்காக சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு வரவழைக்கப்படும் கார்களில் பெரும்பாலானவை கட்சிப் பிரமுகர்களால் அப்படியே எடுத்துக்கொள்ளப்படும். சென்னை நிறுவனமும் அதைக் கண்டுகொள்ளாது. ஆனால், தான் முதல்வராக இருந்தபோது அத்தனை வண்டிகளையும் அப்படியே திருப்பி அனுப்பினார் ராவ்.

ஹவாலா வழக்கில் தனது கட்சி, எதிர்க் கட்சி என்ற பேதமெல்லாம் பார்க்காமல் எதிரிகள் அனைவரையும் அதில் சிக்கவைத்தார். பொருளாதார சீர்திருத்தத்தை அதிரடியாக தீவிரமாக முன்னெடுத்தவர் அரசுத்துறைகளில் எந்தவொரு சிறு மாற்றத்தைக் கூடக் கொண்டுவர விரும்பாதவராகவே இருந்தார். அவருடைய அரசு பெரும்பான்மை பலம் இல்லாத அரசு என்றாலும் இதைவிட நிச்சயம் அவர் செய்திருக்க முடியும் செய்திருக்க வேண்டும் என்று நூலாசிரியர் சொல்கிறார்.

ஃப்ராங்கிளின் ரூஸ்வெல்ட், ரொனால்ட் ரீகன், டெங் ஜியாபிங், மார்கரெட் தாட்சர், சார்லஸ் தெ கால், நேரு போன்ற உலகத் தலைவர்களின் வரிசையில் வைத்துப் போற்றப்படவேண்டியவர்; அந்தத் தலைவர்கள்போல் மக்கள் மத்தியில் செல்வாக்கோ, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலமோ கட்சியில் அதிகாரமோ இல்லாத ராவ் இருந்த சொற்ப அதிகாரத்தை வைத்துக்கொண்டு செய்திருப்பவை உண்மையிலேயே பிரமிக்கச் செய்பவையே என்கிறார் நூலாசிரியர். முதல் வாக்கியத்தைவிட இரண்டாம் வாக்கியத்தில் உண்மை மிக மிக அதிகம்.

அரைச் சாணக்கியராக முடங்க நேர்ந்த ராவ் முழுச் சாணக்கியராக இருந்திருந்தால்..? என்ற ஏக்கம் புத்தகத்தை முடித்ததும் மனதில் எழுகிறது. அப்படி நடக்காமல் போக தமிழகமும் ஒரு காரணம் என்பதை நினைக்கும்போது ஏக்கத்தோடு கோபமும் எழுகிறது. 1996 தேர்தல் நேரத்தில் அதிமுக மீதான வெறுப்பலையை நன்கு புரிந்துகொண்டிருந்த ராவ், ராஜீவ் கொலைப் பழியில் சிக்கியிருந்த திமுகவுடன் கூட்டணி வைக்கமுடியாமல் ரஜினிகாந்தும் தனிக்கட்சி ஆரம்பிக்க முன்வர மறுத்த நிலையில் அதிமுக என்ற பாறாங்கல்லைக் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். அதன் பிறகு அவர் மேலெழவே முடியவில்லை. அந்தத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து ராவுக்கு 30 எம்.பி.க்கள் கிடைத்திருந்தால் ராவின் தலையெழுத்து மட்டுமல்ல தமிழகத்தின் தலையெழுத்தும் இந்தியாவின் தலையெழுத்துமே மாறியிருக்கும்.



நரசிம்ம ராவ்

கிழக்கு வெளியீடு

Half Lion - Vinay Sithapathi

தமிழில் - ஜெ.ராம்கி.

No comments:

Post a Comment