Tuesday, 14 March 2017

சொல் புதிது -1


ஒரு மொழி உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கான பல்வேறு அறிகுறிகளில் ஒன்று புதிய சொற்களை அது உருவாக்கும் / உள்வாங்கும் அதன் திறமை. தாய்மொழியில் வேற்று மொழிச் சொற்களுக்கு இணையான சொற்களை உருவாக்குவது, வேற்றுமொழிச் சொற்களை அப்படியே ஏற்பது என இருவகைகளில் மக்கள் சமூகம் இயங்கிவந்திருக்கிறது. கலப்பு இல்லாத மனித சமூகம் இல்லை என்பதால் கலப்பு இல்லாத மொழியும் சாத்தியமில்லை. எனினும் ஒவ்வொரு மொழியிலும் உலகில் உள்ள அனைத்தையும் சொல்ல முடியும்படியான வார்த்தைகள் இருக்கவேண்டும். அதுவே ஒரு மொழி மட்டுமே பேசுபவர்களுக்கு அந்த மொழி அறிஞர்கள் ஆற்றவேண்டிய முதல் முக்கிய பணி. தாய் மொழியின் செல்வங்களைப் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்வதும் பிற மொழியின் வளங்களை தாய் மொழிக்குக் கொண்டுவருவதும் கற்றறிந்தோர் செய்யவேண்டிய முக்கியமான பணி. புதிய சொற்களை உருவாக்குவது அதில் ஓர் அங்கம்.

சொல் உருவாக்கத்தில் பல வகைகள் இருக்கின்றன. பிற மொழிச் சொற்கள் அறவே கூடாது என்பது ஒரு வகை. சைக்கிள் என்று சொல்லக்கூடாது... ஈருருளி என்றுதான் சொல்லவேண்டும் என்பது அவர்களின் வாதம். இது மொழித் தூய்மைவாதம், அடிப்படைவாதம், பண்டிதத்தனம் மிகுந்த முயற்சி எனப் பல அடுக்குகளைக் கொண்டது. இவர்களில் அடிப்படைவாத மொழித் தூய்மைவாதிகள் அவர்களுடைய பிற இலக்குகளின் காரணமாக முற்றாக ஓரங்கட்டப்படவேண்டியவர்கள். எனவே, அவர்கள் சொல்பவையும் அவ்விதமே அணுகவும் படவேண்டும். இவர்களில் மொழி மீதான பற்று, பெருமிதம் இவற்றின் காரணமாகச் செயல்படும் பண்டித அப்பாவிகள் சொல்பவற்றை ஓரளவுக்குப் பொருட்படுத்தலாம். ஏனெனில் ஆஸ்மாசிஸ் என்பதை சவ்வூடு பரவல் என்று சொல்லும் இடத்தில் இவர்கள் கம்பீரமாக வெளிப்படுகிறார்கள். காஃபியை கொட்டை வடிநீர் என்றோ செல்போனை முந்தக்கூவி என்றோ அடம்பிடிக்கும்போது இவர்கள் மீது பரிதாபமேபடமுடியும்.

பிற மொழிச் சொற்கள் கூடாதுதான். ஆனால், சமகால எளிய தமிழ் பதங்கள் உருவாக்கப்படவேண்டும் என்றொரு வகை. சைக்கிள் என்பதை இரு சக்கர வாகனம் என்றோ மிதி வண்டி என்றோ சொல்லலாம் என்று நெகிழ்ச்சியுடன் புதிய சொற்களை உருவாக்கும் வழிமுறை.

ஏற்கெனவே புழக்கத்தில் வந்துவிட்டிருந்தால் அதை அப்படியே பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது மூன்றாவது வகை. அவர்கள் சைக்கிளை சைக்கிள் என்றே சொல்லலாம் என்பார்கள். ஆங்கிலத்தில் கட்டுமரம் என்ற தமிழ்ச் சொல் அப்படியே எடுத்தாளப்பட்டிருப்பதுபோல் செய்யலாம் என்று சொல்வார்கள்.

இந்த மூன்றில் எது சரி என்று பொதுவாகத் தீர்ப்பு எதையும் சொல்லிவிடமுடியாது. ஒரு சொல்லை மக்கள் ஏற்றுக்கொள்ளும்போது அது அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படும். இல்லையென்றால் அந்தப் புதிய சொல் வழக்குக்கு வராமல் அல்லது சொற்ப நபர்களின் எழுத்துகளில் மட்டுமே இருந்துகொண்டிருக்கும். எனவே, அறிஞர்கள் தமக்குள் ஒன்று கலந்து பேசி ஒரு சொல்லை ஏற்றுக்கொள்ளலாம். அல்லது தனித்தனியாக தமது முயற்சிகளை முன்னெடுக்கலாம். காலமும் மக்கள் திரளும் இடமும் வேண்டியதை வைத்துக்கொள்ளும். அல்லாததை ஓரங்கட்டும். பிழையாக இருந்தலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அவருமே கூட தவறுதலாக நெற்றிக் கண்ணைத் திறக்கும் குணம் கொண்டவர்தானே.

*

புதிய சொல்லை உருவாக்கும்போது முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சம் அது தூய தமிழ்ச் சொல்லாக மட்டுமே இருந்தால் போதாது. அந்தச் சொல் உருவாக்கப்படும் காலகட்டத்து மக்களுக்கு எளிதில் புரியும்படியாக பேச்சு வழக்கில் இருக்கும் சொற்களைக் கொண்டதாக இருக்கவேண்டும். பெயர் வைக்கப்படும் பொருள், விஷயம் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களை அல்லது பெரும்பாலான அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். அந்தவகையில் அந்தப் பெயர் அந்தப் பொருளுக்கான தனித்தன்மையைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கவேண்டும்.

தூய தமிழ் சொல்லாக இருந்தால் போதும். புரியாததாகவோ புதியதாகவோ இருந்தால் தொடர்ந்து பயன்படுத்தப் பயன்படுத்த அந்தச் சொல் சார்ந்த நிரடல்கள் நீங்கும் என்று சிலர் சொல்வதுண்டு. கூடுமானவரை பேச்சு வழக்கிலான தூய தமிழ் சொல்லே நமது முதல் தேர்வாக இருக்கவேண்டும். அதாவது செய்யுள் தன்மை மிகுந்த வார்த்தைகளைவிட உரைநடைத்தனமான வார்த்தைகளையே தேர்ந்தெடுக்கவேண்டும். பிரஷர் குக்கருக்கு அழுத்தக் கொப்பரை என்ற பதத்தைவிட அழுத்தக்கலன் என்பதையே தேர்ந்தெடுக்கவேண்டும். கொப்பரை என்பது அழகிய தமிழ்ச் சொல் என்ற போதிலும். இன்னும் எளிமைப்படுத்த நீராவி சமையற்கலன் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும். பெயர் சூட்டும்போது ஒற்றைப் பெயராக இருக்கவேண்டும் என்பது சரிதான். ஆனால், நாம் இப்போது இடுகுறிப் பெயர்களை அல்ல காரணப் பெயர்களையே சூட்டுகிறோம். எனவே காரணங்களை சற்று விரிவாகச் சொல்லவேண்டிய தேவையிருந்தால் அதையே தயங்காமல் செய்யலாம். ஏனெனில் அந்த சொல்லைக் கேட்ட மாத்திரத்திலேயே யாருடைய பொழிப்புரையும் உதவியும் இன்றி அனைவருக்கும் புரியவேண்டும்.

ரயில் என்பதற்கு புகைவண்டி, தொடர்வண்டி, தொடரி எனப் பல பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆரம்பகால ரயில் வண்டிகள் புகையை உமிழ்ந்தபடி (கரியால் இயங்கியவை) பயணித்தவை என்பதால் புகை வண்டி என்று பெயரிட்டார்கள். கரி அல்லது பிறவகை எரிபொருளைப் பயன்படுத்தும் எல்லா வாகனங்களுமே புகையை உமிழ்பவைதான். எனவே, புகை வண்டி என்ற பெயர் பொருந்தாது. அதோடு நவீன கால மின்சார ரயில்கள் புகையை உமிழ்வதில்லை. எனவே அந்தப் பெயர் பொருத்தமற்றுப் போய்விட்டது. தொடர்ச்சியான பெட்டிகளைக் கொண்ட வண்டி என்ற பொருளில் தொடர் வண்டி என்று பெயரிட்டார்கள். அதைச் சிலர் சமீபகாலமாக தொடரி என்று சுருக்கி அழைக்கிறார்கள். இதுகூட அவ்வளவு பொருத்தமான பெயர் அல்ல. ரயில் என்ற வாகனத்தின் ஆதாரமான அம்சம் அது ரயில் என்ற தண்டவாளத்தில் ஓடும் வண்டி என்பதுதான். எனவே, தண்டவாள வண்டி என்பதுதான் மிகவும் பொருத்தமான பெயர். தண்டவாளம் என்பது இடுகுறிப் பெயர். இரும்புப் பாதை என்பது இருப்புப் பாதை என்று மருவி பயன்படுத்தப்படுவதுண்டு. எனவே இரும்புப்பாதை வண்டி என்பதுதான் மிகவும் பொருத்தமான பெயர். தொடரி போன்ற புதிய சொற்களெல்லாம் தொடர்ந்து சில வருடங்கள் பயன்படுத்திய பிறகே மக்களுக்குப் புரிய ஆரம்பிக்கும். ஆனால், இரும்புப் பாதை வண்டி என்பது சொன்ன மறு நிமிடமே அனைவருக்கும் புரிந்துவிடும். எனவே இதுபோன்ற வார்த்தைகள் இருக்கும்போது அவற்றுக்கே முன்னுரிமை தரவேண்டும்.

செவ்வ்வியல், செய்யுள் பதங்களைப் பயன்படுத்துவதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், பழங்காலத்தில் ஒரு பொருளைத் தந்த வார்த்தை இன்றைய காலகட்டத்தில் வேறொரு பொருளைத் தரக்கூடும். உதாரணமாக, நாற்றம், வாடை என்ற வார்த்தைகள் பழங்காலத்தில் வாசனை, வட திசைக் காற்று என்ற நல்ல அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டன. ஆனால், இன்று அவை மோசமான வாசனை என்ற அர்த்தத்தைத் தருகின்றன. எனவே செண்ட் என்ற வார்த்தையை நாற்றத் திரவம் என்று சொல்லக்கூடாது. வாசனைத் திரவியம் என்றோ நறுமணத் திரவியம் என்றோதான் சொல்லவேண்டும்.

சொம்னாம்புலிஸம் - இதை துயில் நடை என்று சொல்கிறார்கள். அழகான கவித்துவமான தமிழ்ப் பெயர். ஆனால் சொம்னாம்புலிஸம் என்பது  தூக்கத்தில் நடக்கும் வியாதி. அதற்கு கவித்துவமான பெயர் வைத்தால் அந்த நோயை நாம் ரசிக்க ஆரம்பித்துவிடுவோம். எல்லாருக்கும் அது வராதா என்று ஏங்கவைத்துவிடும். நோய் என்ற அச்சமும் பயமும் எச்சரிக்கையும் அந்தப் பெயரில் இருக்கவேண்டும். தூக்க நடை வியாதி என்று சொல்லவேண்டும். துயில் என்ற அழகிய வார்த்தையை ஒரு நோய்க்கு நிச்சயம் வைக்கவே கூடாது.

எனவே, நாம் உருவாக்கும் சொல் தூய தமிழ் பெயராக இருந்தால்மட்டும் போதாது, உரை நடைத் தன்மை கொண்டதாக, இன்றைய பொருளைக் குறிப்பதாக இருக்கவேண்டும். எந்தப் பொருளுக்கு அந்தப் பெயரை வைக்கிறோமா அதன் ஆன்மாவை வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும்.

எல்லா சமூகங்களிலும் சொந்தப் பெருமிதங்கள், பாரம்பரியம் ஆகியவற்றை அளவுக்கு அதிகம் திணிக்கும் அல்லது பாதுகாக்க விரும்பும் அடிப்படைவாத இயக்கங்களும் இருக்கும். பிற அடையாளங்களுடன் நட்புறவு பாராட்டி வளர விரும்பும் சக்திகளும் இருக்கும். தாலிபானிசத்தில் ஆரம்பித்து இன்னபிற பிரிவினைவாதிகள் வரை அனைவரும் தமது அடிப்படைவாத இலக்குகளை வென்றெடுக்கும் நோக்கில் புறக் கலப்பை அறவே வெறுப்பவர்களாக இருப்பார்கள். புதிய சொல் உருவாக்கத்தில் அவர்கள் மொழித் தூய்மைவாதம் பேசுபவர்களாக இருப்பார்கள். இப்படியான சொல் உருவாக்கம் அதன் மென்மையான வடிவத்தில்கூட தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு அபாயங்களை உள்ளடக்கியவையே. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னவரும் வந்தாரை வாழவைக்கும் குணம் கொண்டவருமான தமிழரே நமது வழிகாட்டியாக இருக்கவேண்டும். அவர் பிற மொழிகளை தன்னை அழிக்க வந்த சக்தியாக நினைத்து வெருள மாட்டார். பிற அடையாளங்களை தமது எதிரியாக முத்திரை குத்தி வெறுக்கமாட்டார். அவருக்கு மொழி என்பது சக மனிதர்களுடனும் உலக மனிதர்களுடனும் நட்புறவை உருவாக்கும் பாலம் போன்றது. தன் இனம் என்று தன்னைச் சுற்றி எழுப்பும் பாசி படிந்த மதில் சுவர் அல்ல. புதிய சொற்களை உருவாக்கும்போது இந்த விஷயத்தை மனதில் கொண்டு செயல்படுவோம். நம் தாய் மொழியை மட்டுமல்லாமல் பிறரின் தாய் மொழிகளையும் நேசிப்போம்.