Monday 13 March 2017

சுவாமி அம்பேத்கர் - 4



(4)

இளைய மடாதிபதி மடங்களில் நடக்கும் நிர்வாக முறைகேடுகளைத் தட்டிக் கேட்கிறார். ஒரு முறை மடத்துக்கு சொந்தமான சமையல் பாத்திரங்கள் மிகவும் பழதாகிவிட்டதால் ஏலம் போட முடிவெடுக்கப்படுகிறது. மகா சன்னிதானத்திடம் நிர்வாக தலைவர் அனுமதி கேட்கிறார். சன்னிதானமும் சரி என்று சொல்லிவிடுகிறார். ஆனால், பழையது என்று சொல்லி ஒரு சில மாதங்களுக்கு முன்பாக வாங்கிய புதிய பாத்திரங்களை நிர்வாகி ஏலம் விட்டு தன் ஆட்களை வைத்துக் குறைந்த விலைக்கு எடுத்துச் சென்றுவிடத் திட்டமிட்டிருக்கிறார் என்பது இளைய மடாதிபதிக்குத் தெரியவருகிறது. பொதுவாக இப்படியான ஏலம் நடக்கும் இடத்துக்கு மடாதிபதிகள் வருவது கிடையாது. ஆனால், இளையவரோ முறைகேடுகள் நடந்தால் அதைத் தடுக்க சம்பிரதாயத்தை மீற வேண்டியிருந்தால் தவறில்லை என்று ஏலம் போடப்படும் இடத்துக்குச் செல்கிறார். புதிய பாத்திரங்கள் ஏலத்துக்கு எடுத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து ஏலத்தைத் தடுக்கிறார்.

இதனால், நிர்வாகிக்கு இளையவர் மேல் கோபம் வருகிறது.

அதுபோல் மடத்துக்கு சொந்தமான நிலங்களை அறங்காவலர்கள் தம்முடைய பினாமிகளுக்குக் கொடுத்து அந்த நிலத்தின் வருவாயை அவர்களே அனுபவிப்பது தெரியவருகிறது. உடனடியாக நிலங்களை அவர்களிடமிருந்து மீட்டு ஏழை விவசாயிகளுக்கு குறைந்த குத்தகையில் தானே முன்னின்று வழங்குகிறார் இளைய தம்புரான்.

இதனால் ஆத்திரமடையும் மடத்து நிர்வாகிகள் இளையவரை அங்கிருந்து துரத்தத் திட்டமிடுகிறார்கள். பொதுவாக மகா சன்னிதானங்கள் ஏதேனும் கோவில் அல்லது விழாக்களுக்கு வரும்போது கட்டளைத் தம்புரான்கள்தான் அவர்களுக்கு பூர்ண கும்ப மரியாதை செய்து கால் அலம்பி பாத பூஜை செய்யவேண்டும். ஆனால், இளையவரை ஓரங்கட்டிவிட்டு மடாலய நிர்வாகிகள் அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தனர். ஒரு முறை வைதீஸ்வரன் கோவிலுக்கு மகா சான்னிதானம் வந்தபோது இளையவர் பாத பூஜைசெய்ய முன்னால் வருகிறார். அத்தனை மக்கள் முன்னிலையில் அவரை அவமானப்படுத்திவிட்டு அறங்காவலர் நிர்வாகி தானே அந்த பாத பூஜையைச் செய்கிறார்.

குரு சிஷ்ய உறவில் ஊதியம் வாங்கும் ஊழியர் இடையில் புகுவது தவறு என்று இளையவர் மகா சன்னிதானத்திடம் சென்று முறையிடுகிறார். ஆனால், சன்னிதானம் இளையவரைக் கடிந்து கொள்கிறார். விஷயம் என்னவென்றால், மகா சன்னிதானத்தின் காலை நான் கழுவுவதா... நானும் ஒரு மடாதிபதிதானே என்று இளையவர் திமிராகப் பேசியதாக அறங்காவலர்கள் கோள்மூட்டி விட்டிருக்கிறார்கள்.

*

ஒருமுறை மகா சன்னிதானம் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். வேறொரு ஊருக்குப் போய்விட்டு நள்ளிரவில் திரும்பிய இளையவருக்கு அப்போதுதான் தகவல் தெரியவருகிறது. என்ன செய்ய என்றே தெரியவில்லை. நள்ளிரவில் தொலைவில் இருக்கும் மருத்துவ மனைக்குச் செல்ல வேறு வாகனங்களும் கிடைக்காது. மடத்து கடை நிலைப் பணியாளரிடம் இருக்கும் சைக்கிளை வாங்கிக்கொண்டு பத்து மைல் தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு விரைகிறார். அன்று பார்த்து நல்ல மழை வேறு. இருட்டும் மழையும் சேர்ந்து சதி செய்தபோதும் இளையவர் கிட்டத்தட்ட உயிரைப் பணையம் வைத்து விரைந்து நள்ளிரவில் மருத்துவமனைக்குச் செல்கிறார்.

மகா சன்னிதானம் நல்ல தூக்கத்தில் இருக்கிறார். இளையவர் வந்தது அவருக்குத் தெரியாது. சிறிது நேரம் அருகில் இருந்து பார்க்கிறவர், மருத்துவர்களிடம் நிலைமையைக் கேட்டறிந்துவிட்டு மறு நாள் மடத்து பூஜைகள் முடங்கக் கூடாதென்று இரவே மடம் திரும்புகிறார்.

ஆனால், அவர் வந்து போனதை மடத்து நிர்வாகிகள் பெரிய சன்னிதானத்திடம் சொல்லாமல் மறைத்துவிடுகிறார்கள். வேறொரு ஊரில் இருந்தவருக்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு உடனே திரும்பும்படி இரண்டு நாட்களுக்கு முன்னமே செய்தி அனுப்பி விட்டதாகவும் இளையவர் திரும்பிவராமல் இருந்ததோடு குன்றக்குடி திரும்பிய பிறகும் மருத்துவமனைக்கு வந்து பார்க்காமல் மடத்திலேயே இருப்பதாகவும் கோள் மூட்டுகிறார்கள். உண்மையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக இளையவரிடம் சொல்லவும் இல்லை.

சிகிச்சை முடிந்து மடம் திரும்பும் மகா சன்னிதானம் இளையவர் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார். இப்படியான மனஸ்தாபங்கள் போததென்று ஒருமுறை இளையவர் மடத்தைத் தானே கைப்பற்றத் திட்டமிட்டிருப்பதாகவும் மகா சன்னிதானத்தைக் கொல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் மடத்து நிர்வாகிகள் அவதூறு பரப்புகிறார்கள். இப்படியான நிலையில் இனியும் இங்கு தொடர்ந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்று புரிந்துகொண்ட இளையவர் நேராக மகா சன்னிதானத்திடம் சென்று நடந்தவற்றை முறையிடுகிறார். மகா சன்னிதானத்தின் காலில் விழுந்து விழுந்த நிலையிலேயே தன் தரப்பு நியாயங்களை சொல்லிப்புரியவைக்கிறார்.

*

மயிலாடுதுறையில் சைவ வேளாளர் சார்பில் மகேசுவர பூஜை விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் தலைமையேற்க இளையவர் அழைக்கப்படுகிறார். விழா சிறப்பாக நடக்கிறது. விழா முடிவில் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அது சமபந்தி விருந்து அல்ல. சைவ வேளாளர்களுக்குத் தனி பந்தியும் பிறருக்கு தனி பந்தியுமாக இருக்கிறது. அதைப் பார்த்ததும் இளையவருக்கு வருத்தமும் கோபமும் வருகிறது.

அனைவரையும் ஒரே இடத்தில் அமரவைக்கும்படி விழா அமைப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறார். அவர்கள் மறுத்துவிடவே, இளையவர் அந்த நிமிடமே அந்த இடத்தில் இருந்து வெளியேறிவிடுகிறார். விழா பந்தலில் தனித்தனி இடத்தில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கியவர்கள் இளையவர் தன்னந்தனியாக சுட்டெரிக்கும் வெய்யிலில் நடந்து செல்வதைப் பார்த்ததும் விழுந்தடித்து ஓடி அவரைத் திரும்பி வரச் சொல்கிறார்கள். அனைவருக்கும் ஒரே பந்தி பரிமாறப்பட்டால் வருகிறேன். இல்லையென்றால் இனி இந்த ஊருக்கே வரமாட்டேன் என்கிறார். விழா அமைப்பாளர்கள் தமது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறார்கள். இளையவர் விளம்ப அனைவரும் ஒரே பந்தியில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.

பெரிய புராணத்தில் சாதிகள் இல்லை. சுந்தர மூர்த்தி நாயனாருக்கு கலப்புத் திருமணம் செய்து வைக்கிறார் சிவபெருமான். வேடர் கண்னப்பருக்கும் சிவ ஆச்சாரியாருக்கும் இடையிலான சண்டையில் இறைவன் வேடருக்கே ஆதரவாகச் செயல்படுகிறார் என்பதையெல்லாம் பகிர்ந்துகொண்ட இளையவர் தனது பக்தர்களிடம் ஒரு தலித் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். அதோடு கோவிலைத் தழுவிய குடிகள்... குடிகளைத் தழுவிய கோவில் என்ற தன் திட்டத்தை முன்னெடுக்கிறார்.

*

ஆன்மிகம், இறை நம்பிக்கை, சமத்துவம் போன்றவற்றை வெறும் சொற்பொழிவுக்கான கருப்பொருட்களாக மட்டுமே பார்க்காமல் நடைமுறையிலும் அவற்றைக் கடைப்பிடிக்கிறார். பொதுவாக அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர், செல்வந்தர்கள் எனச் செல்வாக்கு மிகுந்தவர்கள் மடங்களுக்கு வரும்போது அவர்களுக்கு தடபுடலாக வரவேற்பு விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுவதுண்டு. அதே நேரம் தினமும் நடக்கும் அன்னதானத்துக்கு வரும் எளிய மனிதர்களை மடத்து பணியாளர்கள் சற்று அலட்சியமாகவே நடத்துவார்கள். இது தவறு என்று அவர்களுக்குப் புரியவைக்க இளையவர் விரும்பினார்.

ஒரு நாள் மன்னர் பரம்பரையில் சிலர் மடத்துக்கு வரப்போகிறர்கள் என்று பணியாளர்களிடம் சொல்கிறார். அவர்களும் தடபுடலாக விருந்து தயாரித்து விழாபோல் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். அன்று அன்னதானத்துக்கு வந்த எளிய மக்கள் யாரோ பெரிய மனிதர்கள் வரப்போகிறார்கள் போலிருக்கிறது என்று ஓரமாக நிற்கிறார்கள். உள்ளே அறைக்குள் இருந்து அவர்கள் வந்ததைப் பார்த்ததும் இளையவர் வேகமாக ஓடிவருகிறார். பணியாளர்கள் மன்னர் வந்துவிட்டார் போலிருக்கிறது என்று பூர்ண கும்பத்தை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். வாசலில் வந்து பார்த்தால் யாரையும் காணும். இளையவரோ மங்கல வாத்தியங்களை முழங்கச் சொல்கிறார். அவர்களுக்கும் ஒரே ஆச்சரியம். யாரும் வராமல் எதற்காக வாசிக்கச் சொல்கிறார் என்று குழம்புகிறார்கள்.

இளையவரோ ஓரமாக நிற்கும் எளிய மக்களை நோக்கிச் செல்கிறார். பணியாளர்களை அழைத்து பூர்ண கும்பத்தை கையில் வாங்கி எளிய மக்களை வரவேற்கிறார். இவர்கள் தான் மன்னர்கள்.... என்று கம்பீரமாக அவர்களை அழைத்துச் செல்கிறார். எல்லாரையும் சமமாக நடத்தவேண்டும் என்று வாய் வார்த்தையாகச் சொன்னால் பணியாளர்களுக்குப் புரியாதென்பதால் அதை அப்படி நாடகீயமாக நடத்திக் காட்டியிருக்கிறார். அன்றிலிருந்து மடத்துக்கு அன்னதானத்துக்கு வரும் எளிய மக்களைப் பணியாளர்கள் கண்ணியமாக நடத்த ஆரம்பிக்கின்றனர்.

*

ஒருமுறை ஒரு குக்கிராமத்தில் ஒரு புதிய ஆரம்ப சுகாதார மையம் கட்டப்படுகிறது. அங்கு மருத்துவமனை வர அனைத்து முயற்சிகளையும் செய்தது இளையவர்தான். ஆனால், அந்த ஊர் எம்.எல்.ஏ. அந்தப் பெருமையைத் தானே தட்டிக்கொண்டு செல்ல விரும்புகிறார்.

அந்த ஆரம்ப சுகாதார மையத்தின் திறப்பு விழாவுக்கு இளையவரை அழைக்காமல் எம்.எல்.ஏ.வே வந்து திறந்துவைக்க முடிவெடுக்கிறார். ஆனால், திறப்பு விழா அன்று ஒட்டு மொத்த கிராமமும் எம்.எல்.ஏ.வை எதிர்த்து நிற்கிறது. இளையவர்தான் வந்து திறக்கவேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். எம்.எல்.ஏ. அதற்கு மறுப்பு தெரிவித்ததும் ஒட்டு மொத்த கிராமத்தினரும் அந்த விழாவைப் புறக்கணிக்கின்றனர். எம்.எல்.ஏ.வுக்கு பெருத்த அவமானமாகப் போகிறது. கடைசியில் இளையவருக்குச் சொல்லி அனுப்ப வேண்டிவருகிறது. மக்கள் ஆதரவுடன் வந்து சேரும் இளையவர் தனக்குத் தரப்பட்ட பூர்ண கும்ப மரியாதையை எம்.எல்.ஏ.வுக்கும் தரச் செய்து அவரை வைத்தே சுகாதார மையத்தை திறக்கவும் செய்கிறார்.

*

இன்னொரு குக்கிராமம். அங்கு இரவில் குடிசைகள் திடீர் திடீரென்று தீப்பிடிக்கின்றன. என்ன காரணம்... யார் காரணம் என்பதைக் கண்டே பிடிக்க முடியவில்லை. மந்திர பூஜைகள் செய்தும் குடிசைகள் தீப்பிடித்து எரிவது நிற்கவில்லை. காரைக்குடியில் இருக்கும் விஞ்ஞான மையத்துக்கு எரிந்த சாம்பலைக் கொண்டு சென்று தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இரவுக் காவல் போட்டும் குடிசைகள் எரிவது நிற்கவில்லை. இளையவர் யோசிக்கிறார்.

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தேங்காயை மந்திரித்து தந்தார். தீ வைப்பவன் வீட்டில் தேங்காய் வெடிக்கும். மரணம் நிகழும் என்று சொல்லி அனைத்து வீட்டுக்கும் கொடுத்தார். என்ன ஆச்சரியம். அன்றிலிருந்து தீப்பிடித்து எரிவது நிற்கிறது!

*

(தொடரும்)

No comments:

Post a Comment