Monday 13 March 2017

சுவாமி அம்பேத்கர் - 2


(2)

துறவு மேற்கொள்ள வரும் நம் நாயகர் மடாலய விதிமுறைப்படி ஓராண்டு பரதேசியாக அலைந்து திரிகிறார். அதிலிருந்து நம் கதை தொடங்குகிறது.

அவருடைய ஆன்மிகப் பயணத்தின் முதல் கட்டத்தில் மதுரை, நெல்லை, கன்யாகுமரி எனச் சுற்றி வருகிறார். உண்மையில் அந்தந்த ஊர்களில் மடாலயத்தின் கிளைகள் இருக்கின்றன. ஒரு மடாலயத்தில் இருந்து இன்னொரு மடாலயத்துக்கு நடந்து செல்வதுதான் எல்லா துறவிகளும் செய்வது. சில நேரங்களில் மடாலய நிர்வாகிகள் உடன் வருவார்கள். அல்லது வழியில் தமக்குத் தெரிந்த நபர்களிடம் சொல்லிவைத்திருப்பார்கள். நடை பயணமாக வரும் பரதேசியை அவர்கள் ஏதேனும் கோவிலுக்கு அழைத்துச் சென்று தங்கவைப்பார்கள். இப்படியான பரதேசிப் பயணம் என்பது உண்மையான துறவு அனுபவங்களற்றது. பாதுகாப்பான வெறும் சுற்றுலா போன்றதே. நம் நாயகர் இதை விரும்பவில்லை. எனவே துணைக்கு யாரும் வரவேண்டாம். எந்த வசதிகளும் யாரும் செய்து தரவேண்டாம் என்று சொல்லிவிட்டு நிஜமான துறவுப் பயணம் மேற்கொள்கிறார்.

கோவில் குளங்களில் குளித்து துண்டைப் படிக் கல்லில் விரித்துக் காயப்போட்டபடி அருகில் அமர்ந்து தியானிப்பவரை வழக்கமான பிச்சைக்கார சன்னியாசி என்று நினைத்து மக்கள் காசு போட்டுச் செல்கிறார்கள். பரதேசி நாயகர் உள்ளுக்குள் புன்னகைத்தபடியே துண்டை உதறி காசுகளைத் தெறித்து விழச் செய்கிறார். அதைப் பார்க்கும் மூதாட்டி, காசு வேண்டாம்னா இப்படியா தூக்கி எறியறது... கை கால் இல்லாதவங்களுக்கோ வாயில்லா ஜீவன்களுக்கோ சோறு வாங்கிப் போடு சாமி என்று சொல்கிறார்.

பரதேசிக்கு அந்த அறிவுரை மனதில் ஆழமாகப் பதிகிறது. தன் தவறை உணர்ந்து அந்த மூதாட்டியின் காலில் விழுந்து எழுந்திரிக்கிறார். நிமிர்ந்து பார்த்தால் பாட்டியைக் காணவில்லை. ஔவை மூதாட்டியே வந்து ஈவது விலக்கேல் என்று சொல்லிச் சென்றதாக உள்ளம் குளிர்கிறார். துறவுக்காகக் கிடைக்கும் செல்வத்தை எளிய மக்களுக்குக் கொடுக்கும் உணர்வை அந்த சம்பவத்தில் இருந்து பெறுகிறார்.

*

பரதேசியாகத் திரிபவரைப் பார்த்து நாத்திகர் ஒருவர் உழைச்சு சாப்பிடவேண்டியதுதானே... இப்படி சோம்பேறியா உட்கார்ந்து தின்ன வெட்கமில்லையா என்று கேட்கிறார். உடல் வருந்திச் செய்தால்தான் உழைப்பா...மனதையும் மூளையையும் பயன்படுத்திச் செய்யும் உழைப்பு உழைப்பு இல்லையா..? ஞானிகளுக்கும் துறவிகளுக்கும் விஞ்ஞானிகளுக்கும் உடல் உழைப்பில் இருந்து விலக்கு கொடுத்ததன் காரணம் என்ன தெரியுமா... அப்படிக் கிடைக்கும் விடுதலையைப் பயன்படுத்தி மக்களுக்கு நலனுக்கு மூளையை உபயோகிப்பதற்குத்தான் என்கிறார்.

ஒரு விஞ்ஞானி உடல் உழைப்பில் இருந்து விடுதலை பெற்றால் மக்களுக்கு புதியவற்றைக் கண்டுபிடித்து அவர்களுடைய வேலையை எளிதாக்குகிறார். நோய் நொடிகளைத் தீர்க்க மருந்து கண்டுபிடித்துத் தருகிறார். துறவிகள் என்ன செய்கிறார்கள்.. வெறுமனே சாப்பிட்டு சாப்பிட்டுத் தூங்குவதைத்தவிர.. என்று மடக்குகிறார் அவர்.

புறத்தேவைகள் மற்றும் உடல் சார்ந்த கண்டுபிடிப்புகள் மட்டுமே முக்கியம் என்ற எண்ணத்தினால் வரும் குழப்பம் இது. மனிதனுக்கு மனம் சார்ந்த தேவைகள் எத்தனையோ இருக்கின்றன. அதோடு மனிதன் அவனுடைய விலங்கு குணங்களில் இருந்து மேலெழுந்து சமூகமாக வாழ வேண்டிய அவசியம் இருக்கிறது. மதமும் ஆன்மிகமும் இந்த விஷயங்களை கவனித்துக்கொள்கின்றன. அந்த வகையில் மதத்தின் பங்களிப்பை எடைபோடுவதென்றால் மதம் சார்ந்து சண்டைகள் நடக்கும் நாட்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு பேசக்கூடாது. எஞ்சிய நாட்களில் எந்த மோதலும் இல்லாமல் இருக்க அந்த மதமே காரணமாக இருந்திருக்கிறது என்பதையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். மதங்கள் உருவாகியிருக்க வில்லையென்றால் மனித இனம் இப்போதைவிட படு மோசமாக சண்டையிட்டு மடிந்திருக்கும் என்கிறார்.

*

ஒரு நாள் கிராமமொன்றின் அரச மரத்தடியில் ஆற்று நீரைக் குடித்துவிட்டுப் படுத்துக் கிடக்கும் பரதேசியை ஒரு விவசாயி தனது வீட்டுக்கு வந்து உணவருந்தும்படி அழைக்கிறார். பரதேசியும் செல்கிறார். வீட்டு வாசலுக்குச் சென்றவர் சற்று தயங்கியபடியே நிற்கவே... தைரியமா உள்ள வாங்க... கவுண்டன் வீடுதானென்கிறார் அந்த விவசாயி. பரதேசிக்கு அந்த ஒரு வாக்கியம் பல உண்மைகளைப் புரியவைக்கிறது. பரதேசிகள் கூட தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பிரித்துப் பார்ப்பது உண்டு போலிருக்கிறது. அதோடு பசியால் வாடுபவரைப் பார்த்ததும் மனமிளகும் இந்த விவசாயிக்கு தனது சாதி குறித்த பெருமிதமும் தாழ்த்தப்பட்ட ஜாதி குறித்து தாழ்வான பார்வையும் இருக்கிறது என்ற விஷயங்கள் புரிகின்றன.

கவுண்டன் என்ன பறையன் என்ன... கடவுள் முன்னால எல்லாரும் ஒண்ணுதான் என்கிறார் பரதேசி.

அதெப்படி ஒண்ணாக முடியும். வெள்ளாடு செம்மறியாட்டோட சேர்றதில்லை... செம்மறியாடு மலை ஆட்டோட சேர்றதில்லை... ஆடு மாடுகளுக்கே வித்தியாசம் இருக்கும்போது மனுஷனுக்குள்ள இருக்காதா என்ன..? கடவுளே ஒண்ணா இல்லை... அப்பறம் தான அவர் படைச்ச உயிர்கள் ஒண்ணா இருக்க என்றபடியே வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார் விவசாயி.

நீங்க சொல்றது தப்பு... வித்தியாசமா இருக்கறதுனாலயே வெறுக்கறது சரியில்லை... ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு பலம்... ஒவ்வொரு பலவீனம்... பறவைக்கு இறக்கைன்னா மீனுக்கு செதில்... சிங்கத்துக்குப் பிடரி... மயிலுக்குத் தோகை... இதெல்லாமே ஒண்ணுக்கொண்ணு வித்தியாசமானது அவ்வளவுதான்... இது உசந்தது அது தாழ்ந்ததுன்னு எதுவும் கிடையாது... பசி, தூக்கம், நோய் நொடி, இனப்பெருக்கம்னு எல்லா உயிர்களின் அடிப்படைகளும் ஒண்ணுதான்... ஒரு உடம்புல கை ஒரு வேலை செய்யுது... கால் ஒரு வேலை செய்யுது... வயிறு ஒரு வேலை செய்யுது வாய் ஒரு வேலை செய்யுது... கை உசந்ததா கால் உசந்ததா... வாய் உசந்ததா வயிறு உசந்ததா..? ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு வேலை... எல்லாம் சேர்ந்ததுதான் ஒரு மனுஷன். அதுமாதிரி ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு வேலை செய்யுது... எல்லாம் சேர்ந்ததுதான் ஒரு சமூகம்.

பலகைபோட்டு பரதேசியை அமரவைத்து இலையில் உணவு பரிமாறியபடியே, அது என்னமோ உண்மைதான். ஆனால், எல்லா உறுப்பையுமே எப்படி ஒண்ணா நடத்தமுடியும். முகத்துக்கு தர்ற மரியாதையை காலுக்குத் தரமுடியுமா. வாய்க்குத் தர்ற மரியாதையை வயித்துக்குத் தரமுடியுமா..? பால் தர்ற பசுவுக்கு தொழுவம்... தேர் இழுக்கற குதிரைக்கு லாயம்... வண்டி இழுக்கற மாட்டுக்கு களத்து மேடு... ஊர் மேயற கழுதைக்கு தெரு... மாட்டைக் கும்படுற சாதியும் மாட்டை வெட்டித் திங்கற சாதியும் எப்படி ஒண்ணா இருக்க முடியும்?

அது சரிதான். ஆனா ஒரு மனுஷனை நேசிக்க எதுவுமே தடையா இருக்கக்கூடாது... இப்போ நான் ஒரு பறையனா இருந்தா என்ன செய்வீங்க...

பரிமாறுபவர் சட்டென்று நிறுத்திவிட்டு, “எழுந்திரிச்சு வெளிய போடான்னு சொல்லுவேன்...’ என்கிறார்.

பரதேசிக்குத் தூக்கிவாரிப்போடுகிறது. “என்னங்க ஐயா... பசியா படுத்துக் கிடந்தவனைப் பார்த்ததுமே வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து சாப்பாடு போடணுங்கற நல்ல மனசு உள்ள உங்களுக்குள்ள இப்படி ஒரு வெறுப்பு இருக்கறதை நினைச்சே பார்க்க முடியலை... என்னை மன்னிச்சிருங்க. ஒரு பறையருக்கு உணவு தரமாட்டேன்னு சொல்றவங்க வீட்டுல சாப்பிட எனக்கு விருப்பமில்லை என்று சொன்னபடியே இலையை மூடிவிட்டு எழுந்திரிக்கிறார்.

அந்த இலையை அப்படியே எடுத்துட்டுப் போய் நாய்க்குப் போடுங்க என்று சொல்கிறார் விவசாயி.

பரதேசி புன்முறுவல் பூத்தபடியே அதை எடுத்துச் சென்று தெருவில் போடுகிறார். நேராக ஆற்றுக்குச் சென்று கை கழுவிவிட்டு மரத்தடியில் படுத்துக்கொள்கிறார். இரவின் கொடூர இருள் அக்ரஹாரத்தை மட்டுமல்லாமல் நடுத்தெருவையும் மூழ்கடித்திருப்பதைப் பெருமூச்சுவிட்டபடியே பார்க்கிறார். உயரமான கோபுரத்தில் எரியும் விளக்கொளி இருளை விரட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதைப் பார்த்தபடியே மெள்ளக் கண்களை மூடுகிறார். நள்ளிரவில் பசியின் வலி தாங்க முடியாமல் எழுந்து சென்று நீர் அருந்திவிட்டுப் படுத்துக்கொள்கிறார். அப்போது தொலைவில் ஒரு ஒளிப் புள்ளி அவரை நோக்கி வருவது தெரிகிறது. பாதி உணவில் எழுந்து போக சொன்ன விவசாயியின் மனைவி அரிகேன் விளக்கை எடுத்தபடி வருவது தெரிந்தது.

பரதேசி தூங்காமல் இருப்பதைப் பார்த்ததும் சாமி என்னை மன்னிச்சிடுங்க... என்று காலில் விழுகிறார்.

உடன் எடுத்து வந்த இலையையும் உணவுப் பாத்திரத்தையும் மேடையில் வைக்கிறார்.

சாப்பிடுங்க சாமி... நீங்க இங்க பட்டினியா இருக்கும்போது அங்க எங்களால சாப்பிட முடியலை...

பசிச்ச வயிறுக்கு சாப்பாடு போடற உங்க கணவரோட நல்ல மனசை மட்டுமே பத்திரமா பாதுகாத்து வெச்சுக்கோங்க... என்ன பண்ண... அம்மன் வசிக்கற புத்துலதான் பாம்பும் வசிக்குது என்று சொல்லியபடியே சாப்பிடுகிறார்.

*

இன்னொரு நாள் உடல் நலமின்றிப் போகிறது. ஊர் நுழைவாயிலில் இருக்கும் கலுங்கில் படுத்துக்கொள்கிறார். அப்போது அந்த வழியாகச் செல்லும் ஒரு பெண் இவருக்கு அருகில் வந்து பார்க்கிறார். உடல் அனலாகக் கொதிக்கிறது. அவரை எழுந்திரிக்கச் சொல்லி கையைப் பிடித்தபடியே தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். கஞ்சி வைத்துக் கொடுத்து மருந்து மாத்திரை கொடுத்து வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொள்ளச் சொல்கிறார். தூங்குவதற்கு முன் அவருடைய தலைமாட்டில் அமர்ந்து ஜெபிக்கிறார்கள். பரதேசி மெல்லிய புன்முறுவலுடன் அதை ஏற்றுக்கொள்கிறார். ஜெபம் முடிந்ததும் அவர் நெற்றியில் சிலுவைக் குறியிடுகிறார்கள். இரவு முழுவதும் கண் விழித்து அவரைப் பார்த்துக்கொள்கிறார்கள். மறு நாள் பொழுது விடிகிறது. பரதேசிக்கு உடல் நிலை மெள்ள தேறுகிறது. இரண்டு நாட்கள் அவர்கள் வீட்டிலேயே தங்குகிறார். உடல் நன்கு குணமானதும் ஒரு பாதிரியார் அந்த வீட்டுக்கு வருகிறார். மெள்ள பேச்சுக்கொடுப்பவர் இயேசுவில் ஐக்கியமாகிவிடுங்களேன் என்கிறார். பரதேசி புன்முறுவல் பூத்தபடியே, இயேசுவும் தெய்வங்கறதை ஏத்துக்கறேன். ஆனா இயேசுமட்டுமே தெய்வங்கறதைத்தான் ஏத்துக்க முடியலை...

சக மனுஷன் மேல வெறுப்பை உமிழச் சொல்ற உங்க தெய்வத்தைவிட அன்பை போதிக்கற எங்க தெய்வம் உசந்ததுதான..

நம்ம தெய்வம் சக மனுஷனை எங்க வெறுக்கச் சொல்லியிருக்கு... நாம செய்யற தப்புக்கு நம்ம தெய்வத்தைப் பழிக்கலாமா... நீங்க காட்டின அன்புக்கு இயேசு மேல உங்களுக்கு இருக்கற விசுவாசம்தான் காரணம்னா அந்த யேசுவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ஆனா, என் சிவனை கைவிட்டுட்டு வரணும்னு சொல்ற இயேசுவை எனக்குப் பிடிக்காது என்கிறார். அடுத்தவங்க மேல காட்டற அன்பு ஆத்மார்த்தமானதா இருக்கணும். மதம் மாத்தறதுக்காக அன்பு காட்டறதுங்கறது மதத்தை மட்டுமல்ல அன்பையுமே கொச்சைப்படுத்திடுது. அன்புங்கற மலை உச்சிக்குப் போக அல்லா, இயேசு, சிவன் அப்படின்னு எத்தனையோ பாதைகள். பாதையிலேயே படுத்துக்கொண்டுவிடக்கூடாது. பயணம் என்பது சிகரம் நோக்கி இருக்கவேண்டும் என்கிறார்.

பாதிரியார் யோசித்தபடியே விடைபெற்றுச் செல்கிறார். பரதேசி அந்தக் குடும்பத்துக்கு நன்றி தெரிவித்துவிட்டுப் புறப்படுகிறார்.

*

தமிழகத்தில் யாத்திரை முடித்த பிறகு இந்தியப் பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் காவி உடைக்கு மதிப்பும் மரியாதையும் இருப்பதை அனுபவபூர்வமாக உணர்கிறார். இந்த தேசத்தை காவி இணைக்கிறது என்று மனதுக்குள் நினைத்துக்கொள்கிறார். கயாவில் போதி மரத்தினடியில் தியானத்தில் இருக்கும்போது அம்பேத்கரின் ஆன்மா இவருக்குள் வந்து இறங்குகிறது.

(தொடரும்)

*

No comments:

Post a Comment