Monday 13 March 2017

சுவாமி அம்பேத்கர் - 7

(7)

அடுத்ததாக, கோவில் என்பது அதைச் சுற்றியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக இருக்கவேண்டும். முந்தைய காலகட்டக் கோவில்கள் சுற்றுப் பகுதியில் இருந்த நிலபுலன்களை குறைந்த குத்தகைக்குக் கொடுப்பதாக இருந்திருக்கிறது.

இன்று விவசாயம் மட்டுமல்லாமல் பல தொழில்கள் வந்துவிட்டன. தொழில்புரட்சி, அச்சுத் தொழில் கண்டுபிடிப்பு, போக்குவரத்து வசதிகள் போன்றவை பெருகிவிட்டன. எனவே பாரம்பரியக் கோவில்களில் மதம் சார்ந்த கல்வி மட்டுமே தரப்பட்டுவந்த நிலை மாறி ஒவ்வொரு கோவில் முலமாகவும் இன்றைய தொழில்களுக்கான கல்வி மையம் நடத்தப்படவேண்டும். இன்றைய கல்வி மையங்கள் எல்லாமே அதிக பணம் கிடைக்கும் ஒரு வேலையைப் பெற்றுத் தருவதையே இலக்காகக்கொண்டு செயல்படுகின்றன. கோவில் சார் கல்வி மையங்கள் அந்த வேலையை தர்மத்தின் வழி நின்று செய்யக் கற்றுத் தரவேண்டும். மத நீக்கம் செய்யப்பட்ட பொதுவான பள்ளிகள் ஒருவரை அதிக பணம் சம்பாதிக்கும் மருத்துவராக ஆக்கும்போது கோவில்கள் நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் பார்க்க முன்வரும் மருத்துவர்களை உருவாக்கவேண்டும். அல்லது வாரத்துக்கு ஒரு நாள் கோவில் வளாகத்தில் இலவச வைத்தியம் பார்க்க அந்த செல்வந்த மருத்துவர்கள் முன்வரும்படிச் செய்யவேண்டும். அறிவினான் ஆவதுண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக்கடை. பிறருடைய துயரத்தைத் தனது துயரமாகப் பார்த்துத் தீர்வு சொல்ல முன்வராவிட்டால் கல்வி கற்று என்னதான் பயன் என்று இளையவர் கோவில் சார்பில் இலவச மருத்துவ மையம், இலவச அன்ன தான மையம், சிறு தொழில் பயிற்சி மையம் தொடங்குகிறார்.

கோவிலைச் சுற்றி வசிப்பவர்கள் வீட்டில் யாருக்கேனும் உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் கோவில் சார்பில் பூஜாரியும் வேறு சில பக்தர்களும் சேர்ந்து நோய்வாய்ப்பட்டவர் வீட்டுக்குச் சென்று விரைவில் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்கிறார்கள். கோவிலுக்கு அருகில் மருத்துவமனைகள் இருந்தால் அங்கும் சென்று பிரார்த்தனை செய்கிறார்கள். விபூதி, குங்குமம், சந்தனம் போன்றவை சில நோயாளிகளுக்கு அலர்ஜியைத் தந்துவிடக்கூடும் என்பதால் மருத்துவ அனுமதி பெற்ற பிறகே அவற்றை இட்டுவிடுகிறார்கள்.

கோவிலைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் நடக்கும் அநாதை விடுதிகள், முதியோர் இல்லங்கள், மறு வாழ்வு மையங்கள், மன நல விடுதிகள் ஆகியவற்றுக்குச் சென்று இளைய மடாதிபதி தலைமையில் உதவிகள் செய்கிறார்கள்.

பக்தர்கள் தாம் கொடுக்கும் பணத்தை எந்தெந்த சேவைக்கு எத்தனை சதவிகிதம் என்று ஒரு படிவத்தில் எழுதி பணத்துடன் சேர்த்து ஒரு கவரில் போட்டு உண்டியலில் போடவேண்டும். மாதம் ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை உண்டியலைத் திறந்து பணத்தை எண்ணும்போது ஆயிர ரூபாய் காணிக்கையாகக் கொடுத்த நபர் கல்விக்கு ஐம்பது சதவிகிதம், மருத்துவத்துக்கு 25 சதவிகிதம், கோவில் நிர்வாகப் பணிகளுக்கு 25 சதவிகிதம் என்று எழுதியிருந்தால் அந்த ஆயிரம் ரூபாயை அந்தவிதமாகவே பிரித்துச் செலவிடவேண்டும். இதற்கான படிவத்தையும் கவரையும் ஒவ்வொரு கோவிலிலும் கோவில் நிர்வாகம் அச்சிட்டுத் தரவேண்டும் என்று இளையவர் ஒரு விதிமுறை கொண்டுவருகிறார். கோவிலில் கல்விக்கு, மருத்துவத்துக்கு, கோவில் நிர்வாகப் பணிகளுக்கு, பிற சேவைகளுக்கு என்று நான்கு உண்டியல் வைக்கலாம் என்று பக்தர்கள் ஆலோசனை சொல்கிறார்கள். அப்படி நான்கு உண்டியல் வைத்தால் மிகப் பெரிய இடத்தை அதுவே எடுத்துக்கொள்ளும் என்பதால் ஒரே உண்டியலை நான்காகப் பிரித்து நான்கு திறப்புகளை வைத்து ஒவ்வொன்றின் மேலும் ஒவ்வொரு சேவையை எழுதி வைக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

பக்தர்கள் தமது நேர்ச்சையின் ஓர் அங்கமாக கோவில்களில் சர்க்கரைப் பொங்கல், கலந்த சாதம், பொங்கல் போன்றவற்றைத் தருவதுபோல் அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு அவரவர் வகுப்புக்கான பாட புத்தகங்கள், சிடிக்களை வாங்கித் தரலாம் என்று இளைய மடாதிபதி சொல்கிறார். ஒவ்வொரு கோவிலிலும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருக்கவேண்டும். அதில் வாரந்தோறும் உலகின் மிகச் சிறந்த அறிவியல் பாடங்கள், உலகின் மிகச் சிறந்த ஆவணப்படங்கள், சார்லி சாப்ளின் படங்கள், தாய்மொழி வழியில் உலக விஷயங்கள், மாற்றுக் கல்வி வகைகள், இந்து சமூக சேவை மையங்கள் பற்றிய ஆவணப்படங்கள், காளி பேன் ஆறு சீரமைப்பு போன்ற முன்னெடுப்புகள், புகழ் வெளிச்சம் படாத சமூக சேவகர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றைக் பார்க்கச் செய்யலாம். பூஜாரி என்பவர் இந்தக் குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தரும் ஆசிரியராகவும் இருக்கவேண்டும். அர்ச்சகர் தேர்வோடு, டிகிரி படிப்பும் முடித்தவர்களுக்கு இதில் முன்னுரிமை தரலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.

கோவிலையொட்டிய ஒரு பகுதியில் பக்தர்கள் தாம் தானமாகக் கொடுக்க விரும்பும் பொருட்களைக் கொண்டுவந்துவைக்கலாம். தேவைப்பட்டவர்கள் அதை எடுத்துக்கொள்ளலாம்.

கோவிலுக்குக் காணிக்கையாக மரக் கன்றுகளைத் தரலாம். தேவைப்பட்டவர்கள் அதை தமது வீட்டுக்குக் கொண்டு சென்று நட்டு வளர்க்கலாம். அல்லது கோவில் நிர்வாகமே கோவிலைச் சுற்றிய பகுதிகளில் அந்தக் கன்றுகளை நட்டுப் பராமரிக்கலாம்.

கோவில் ஸ்தல விருட்சத்தில் ஒவ்வொரு பக்தரும் தமது பிரார்த்தனைகளை காகிதத்தில் எழுதிக் கட்டவேண்டும். அதை கோவில் நிர்வாகிகள் படித்துப் பார்த்து அந்தத் தேவைகளை கோவில் வாசலில் ஒரு கரும் பலகையில் எழுதிவைக்கவேண்டும். உதாரணமாக ஒருவர் சிறு தொழில் தொடங்க விரும்புகிறார். அதற்கான பணம் கிடைக்கும்படி இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறாரென்றால் இன்னொரு பக்தர் அந்த தொழில் தொடங்க தன்னால் முடிந்த தொகையை கொடுக்கலாம். இப்படியான லெளகீகத் தேவைகளுக்கு என்று தனியாக ஒரு மரமும் குழந்தைவரம், நோய் தீர வேண்டிக்கொள்ளுதல் போன்ற இறைவனின் கருணையை எதிர்பார்த்துச் செய்யும் வேண்டுதல்களுக்குத் தனி மரம் என்றும் வைத்துக்கொள்ளலாம் என்று தீர்மானிக்கிறார்கள்.

கோவில் வழிபாடு என்பதோடு யோகா, தியானம் ஆகியவற்றுக்கான வசதி வாய்ப்புகளையும் கோவில் வளாகத்தில் பிரார்த்தனை அல்லாத நேரங்களில் கிடைக்கச் செய்யலாம் என்று முடிவு செய்யப்படுகிறது.

*

திருப்பதி, பழனி, சபரிமலை போன்ற பெரும் கூட்டக் கோவில்களில் பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தில் நசிவில் இருக்கும் பாரம்பரியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை அங்கு நடத்த ஏற்பாடு செய்யலாம். இப்போது திருப்பதி போன்ற இடங்களில் தொலைகாட்சிப் பெட்டிகளில் கோவில் நிகழ்வுகள் அல்லது புராண திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன. அதற்கு பதிலாக புராண நாடகங்களை, கலை நிகழ்வுகளை நேரடியாக நடத்தலாம் என்று ஆலோசனை வழங்குகிறார் இளைய மடாதிபதி.

*

கோவில்கள் என்பவை கலப்புத் திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு அடைக்கலம் தரும் பாதுகாப்பு மையமாகத் திகழவேண்டும். அப்படி ஏதேனும் காதலர்கள் அங்கு வரும்போது அக்கம்பக்கத்தில் வசிக்கும் பக்தர்கள் தமது வீடுகளில் அவர்களுக்கு அடைக்கலம் தரவேண்டும். அல்லது கோவிலில் வந்து இருந்து தங்கி அந்தக் காதலர்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டும் என்று சொல்கிறார்.

இது பெரிய பிரச்னையைக் கிளப்புகிறது. பக்தர்கள் குழுவில் இதனால் பெரும் விரிசல் விழுகிறது. என்னதான் இறை நம்பிக்கை, சமூக சேவை போன்றவற்றுக்கு ஆதரவு கிடைத்தாலும் சாதி உணர்வில் இருந்து யாரும் வெளிவரத் தயாராக இல்லை. சொந்த மதத்துள்ளான திருமணத்திலேயே இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இருப்பதுபோல் சொந்த சாதிக்குள்ளான திருமணமே இந்து மதத்தில் அனைவருடைய லட்சியமாகவும் இருக்கிறது. பிற மதங்களைப் பொறுத்தவரையில் வேற்று மதத்து மணமகனையும் மண மகளையும் தமது மதத்துக்குள் இழுத்துக்கொள்வதன் மூலம் இந்த பிரச்னையைத் தந்திரமாக, ஒருவகையில் அராஜகமாகத் தீர்த்துக்கொள்கிறார்கள். சாதி மாறுவது சாத்தியமில்லையென்பதால் இந்து சமயத்தில் இது பிரச்னையாக இருக்கிறது.

இளைய மடாதிபதி இதற்கு ஒரு யோசனை சொல்கிறார். சாதி மீறித் திருமணம் செய்துகொள்ள முன்வருபவர்கள் இருவரும் புத்த மதத்துக்கு மாறித் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று சொல்கிறார். இந்து மதத்தின் அடிப்படைவாத குழுக்கள் இந்த மத மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். இடைநிலை சாதியினரும் கடைநிலை சாதியினரும் இந்த வழிமுறையை ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படியாக, சாதி மாறித் திருமணம் செய்துகொள்பவர்களுக்கென்றே ஒரு புத்தர் சன்னதி ஒவ்வொரு கோவிலிலும் கட்டப்பட்டு அங்கு சாதி கடந்த திருமணங்கள் விமரிசையாக நடக்கின்றன.

*

(தொடரும்)

No comments:

Post a Comment