Monday 13 March 2017

சுவாமி அம்பேத்கர் - 6


(6)

அடுத்ததாக, இப்போது கர்ப்ப கிரஹத்தில் சிலைகள் மிகவும் சிறியதாக இருக்கின்றன. கர்ப்ப கிரஹ வாசலும் மிகவும் சிறியதாக இருக்கிறது. விக்கிரகத்துக்கு நேர் எதிரில் இரு மருங்கும் நிற்கும் 30-40 பேர் மட்டுமே நல்ல முறையில் அபிஷேகம், தீபாராதனை போன்றவற்றைப் பார்க்க முடிகிறது. திருப்பதி, சபரிமலை, பழனி போன்ற பெரும் கூட்டக் கோவில்களில் இதனால் இறைவனைப் பார்க்க பத்து விநாடிகள் மட்டுமே ஒதுக்கமுடிகிறது. இப்படியான அரிதான, கிராக்கி மிகுந்த, எளிதில் கிடைக்க முடியாததாக அந்த தரிசனத்தை வைத்திருப்பது ஒருவகையில் பக்தருக்கு கூடுதல் தெய்வ அனுபவத்தைத் தரத்தான் செய்கிறது. ஒருவேளை திருப்பதி அல்லது சபரி மலை கோவிலில் அரை மணி நேரம் உட்கார்ந்து கும்பிடலாம் என்று ஏற்பாடு செய்தால் அந்த தெய்வ அனுபவத்தின் வீரியம் பக்தர் மனதில் குறைந்துவிட வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்தக் கோவில்களில் தரிசனம் சார்ந்து எந்த மாற்றமும் இப்போதைக்கு எடுக்கவேண்டாம். ஆனால், பிற அன்றாட, அருகமை வழிபாட்டு மையங்களில் இப்படி இருப்பது சரியல்ல.

பொதுவாகவே கோவில்களில் வழிபாடு ஆரம்பித்த காலகட்டத்தில் பக்தர்கள் கூட்டம் இவ்வளவு கிடையாதென்பதால் சிறிய கர்ப்பகிரஹமும் சிறிய சிலையும் போதுமானதாக இருந்தது. ஆனால், இன்று மக்கள் தொகை பெருகிவிட்டது. எனவே, ஒரே நேரத்தில் குறைந்தது 100-200 பேர் தரிசிக்க முடியும்வகையில் கர்ப்பகிரஹத்தையும் சிலையையும் மாற்றி அமைக்கவேண்டும். அதற்கு பக்தர்கள் தமது யோசனைகளைச் சொல்லலாம் என்கிறார் இளையவர்.

இன்றைய கர்ப்ப கிரஹமானது பக்தர்கள் நின்று வணங்கும் இடத்தில் இருந்து சுமார் இரண்டு மூன்றடி உயரத்தில் இருக்கிறது. பத்திருபது படி உயரத்தில் இருந்தால் ஒரே நேரத்தில் அதிகம் பேர் பார்க்க முடியும். அதுபோல் கர்ப்ப கிரஹ வாசல் கதவை அகலமாக்கி அல்லது மூல விக்கிரகத்தைப் பெரிதாக்கினால் அதிகம் பேர் பார்க்க வழி பிறக்கும் என்று ஒருவர் சொல்கிறார்.

இப்போதும் நங்க நல்லூர், சுசீந்திரம் போன்ற ஊர்களில் ஆஞ்சநேயர் உருவச் சிலை பிரமாண்டமாக இருக்கிறது. கருவறையும் கிடையாது. ஒரே நேரத்தில் 100-200 பேர் நல்ல முறையில் அனைத்து அபிஷேக ஆராதனைகளைப் பார்க்க முடியும் என்கிறார் இன்னொருவர்.

இப்போது எல்லா கோவில் தெய்வங்களும் கிழக்கு பார்த்த நிலையிலேயே இருக்கின்றன. எனவே ஒரு பக்கத்து வாசல் வழியாக மட்டுமே இறைவனைக் கும்பிட முடிகிறது. இதற்கு பதிலாக கருவறையில் நான்கு பக்கமும் பார்க்கும்படியாக நான்கு வாசல்களை வைத்து நான்கு சிலைகளையும் அதற்கேற்ப வைத்து இறைவனைக் கும்பிட வழி செய்யலாம் என்கிறார் ஒருவர்.

ஆனால், கிழக்குதான் புனிதமான திசை. வேறு திசைகளைப் பார்ப்பதுபோல் சிலைகளை அமைப்பது சரியல்ல என்கிறார் இன்னொருவர்.

கிழக்கு புனிதமான திசைதான். ஆனால், பிற திசைகள் புனிதமற்றவை என்று அர்த்தமல்ல. ஒரு துறவி கோவிலுக்கு எதிரில் இருந்த மண்டபத்தில் படுத்துக்கொண்டிருந்தார். தலையை மேற்குப் பக்கமாக வைத்து காலை கிழக்குப் பக்கமாக அதாவது கோவிலுக்கும் சாமிக்கும் நேராக வைத்துக்கொண்டு படுத்திருந்தார். பக்கத்தில் இருந்தவர் இப்படி சாமிக்கு நேராக காலை நீட்டிக் கொண்டு படுப்பது தவறு அல்லவா என்று கேட்டபோது, இறைவன் இல்லாத இடத்தைச் சொல். அந்த திசை நோக்கிக் காலை நீட்டிக் கொள்கிறேன் என்றாராம். எனவே இறைவன் எங்கும் நிறைந்திருக்கும் நிலையில் எல்லா திசைகளுமே புனிதமானவைதானே என்கிறார் இளையவர்.

பக்தர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். நான்கு திசைகளில் சிலையை வைக்கபால் அல்லது ஒரே தெய்வச் சிலையை சுழல் மேடையில் அமைத்து 360 டிகிரி சுற்றுவதுபோல் செய்தால் அனைத்து பக்கத்தில் அமரும் பக்தர்களும் ஒரே நேரத்தில் வழிபட வழி பிறக்கும் (கிரிக்கெட் மைதானத்தை சுற்றி அமர்ந்து ரசிகர்கள் பார்ப்பதுபோல்) என்று முடிவு செய்கிறார்கள்.

இது போன்ற ஆலோசனைகளை அனைத்து கோவில்களுக்கும் அனுப்பி அந்தந்த ஊரில் எப்படி விரும்புகிறார்களோ அதற்கு ஏற்ப அமைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார்.

*

பூ, பழம், அர்ச்சனை, மாலை, அபிஷேகங்கள், தீப ஆராதனை, பிரசாதம், விபூதி, குங்குமம், சடாரி, துளசி, புற்று மண் என பாரம்பரியக் கோவிலில் இருப்பவை அனைத்தும் அப்படியே தொடரலாம் என்று பக்தர்கள் சொல்கிறார்கள்.

*

அடுத்ததாக அர்ச்சனை மொழி பற்றிய கேள்வி வருகிறது.

கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்கிறார். ஆனால், சமஸ்கிருதம் கூடாது என்று சொல்லவில்லை. மடாலயக் கோவிலில் தமிழில் அர்ச்சனை முடிந்த பிறகு சமஸ்கிருதத்திலும் வேத மந்திரங்கள் முழங்கச் செய்கிறார். மொழிப்பற்றை அவர் மொழிப் பெருமிதமாகவும் மொழி உரிமையாகவும் மட்டுமே முன்னெடுக்கிறார். மொழி வெறியாக அல்ல.

அக்கம் பக்கத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடக்க வழி செய்கிறார். அதைத் தொடர்ந்து நாடுமுழுவதும் அந்த விஷயம் கவனம் பெறுகிறது. அகோபில மடம் ஜீயர் ஸ்வாமிகள் தமிழில் அர்ச்சனை கூடாது என்கிறார். முதலமைச்சரும் தமிழில் அர்ச்சனை வேண்டும் என்று கேட்பவர்கள் பண்பாடு அற்றவர்கள் என்று பொதுவெளியில் விமர்சிக்கிறார். இதைக் கண்டு மனம் வேதனையுறும் இளைய தம்புரான் 63 தமிழறிஞர்களை அழைத்துகொண்டு முதலமைச்சரைச் சென்று சந்திக்கிறார்.

அப்பர் அடிகளே வடமொழியும் தென் தமிழும் மறை நான்கும் ஆனவன் காண் என்று பாடியிருப்பதை எடுத்துச் சொல்கிறார். வைணவக் கோவில்களில் ஆழ்வார்கள் அருளிய பிரபந்தங்கள் காலகாலமாக முழங்கிவருகின்றன. தமிழ் அர்ச்சனையை ஆரம்பித்துவைத்ததே சிவனும் திருமாலும்தான். அவர்களைப் பற்றிப் பாடப்பட்டிருக்கும் பாடல்கள் எல்லாமே அர்ச்சனை மந்திரங்களே என்றெல்லாம் எடுத்துச் சொல்கிறார். அதைத் தொடர்ந்து முதல்வர் தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதலமைச்சர் உடனிருக்க இளைய தம்புரான் தலைமையில் தமிழ் மந்திரங்கள் ஓதப்படுகின்றன.

தாய்மொழி, சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளிலும் அர்ச்சனை, பிற மந்திரங்கள் சொல்லப்படவேண்டும். ஒரு நாள் தாய்மொழி, மறு நாள் சம்ஸ்கிருதம் என்றோ காலையில் தாய் மொழி, மாலையில் சமஸ்கிருதம் என்றோ ஒவ்வொரு கோவிலும் இதை தமது பக்தர்களின் விருப்பத்துக்கு ஏற்ப நடத்திக்கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.

*

இளையவர் இப்படி பக்தர்களின் விருப்பத்தைக் கேட்டு சீர்திருத்தத்தை முன்னெடுப்பதைப் பார்க்கும் பெண்ணியவாதிகள், நாத்திகர்கள் ஆகியோர் பக்தர்கள் போல் கோவில்களுக்குள் நுழைந்து தமது அரசியலை முன்னெடுக்கிறார்கள்.

பெண்கள் அர்ச்சகராக்கப்படவேண்டும், மாத தளர்ச்சி நாட்களில் கோவிலுக்கு வர அனுமதிக்கவேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைக்கிறார்கள். இளையவர் புன்முறுவலுடன் அதைப் பட்டிமன்றத் தலைப்பாக முன்வைக்கிறார். பெண்ணியவாதிகள் சொல்லும் வாதங்களுக்கு எளிய பக்தர்கள் பதில் சொல்கிறார்கள். கோவிலில் அமலாகும் ஒழுக்க விதிகள் எல்லாம் ஆதிக்க சக்திகளின் திணிப்பு அல்ல... எளிய மக்களின் விருப்பமே என்பது பெண்ணியவாதிகளுக்குப் புரிகிறது. எனினும் இளையவர் பக்தர்களிடம் சில மாற்றங்கள் கொண்டுவர முயற்சி செய்கிறார். அதன்படி பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகளும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களும் அர்ச்சகராக நியமனம் பெறலாம். மாத தளர்ச்சி நாட்களில் பக்தி உணர்வு பெருகும் பெண்களுக்கென்று தனி தரிசன நேரம் ஒதுக்கப்படலாம். கோவிலுக்குள் நுழையும் முன் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரை எடுத்து முழு உடம்பும் நனையும் வகையில் தலைவழியாக ஊற்றிக்கொண்டு ஈர உடையுடனே தெய்வத்தை அவர்கள் தொழ அனுமதிக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.

*

சில நாத்திகர்கள் கோவில்களில் ஆடு வெட்டிப் பொங்கல் வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். இடை, கடை நிலை சாதிகளின் தெய்வ சன்னதிகள் அமைக்கப்பட்டு அசைவ படையல்கள் நடத்தப்படலாம். ஆனால், அத்தகைய கோவில்களில் திருவிழா நாட்களில் நூற்றுக்கணக்கான ஆடுகள், பன்றிகள், கோழிகள் பலி கொடுக்கப்படுகின்றன. அதற்கு பதிலாக ஒரே ஒரு ஆடு கொண்டுவரப்பட்டு அதன் ஆன்மாவை ஒரு பூசணிக் காயினுள் கூடு விட்டுக் கூடு பாயச் செய்து அந்த பூசணியை சமைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் அப்பமும், மதுவும் தரப்படுவதுபோல் சிறிய அளவில் பிரசாதமாக அனைவருக்கும் தரலாம். அப்படியான ’பலி’ தரப்படும் நாட்களில் திருவள்ளுவரின் கொல்லாமை அதிகாரக் குறள்களே அந்த சன்னதிகளில் மந்திரமாக ஓங்கி ஒலிக்கப்படும். மாமிசம் சாப்பிடுவதைத் தவிர்க்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் அதை தெய்வச் சடங்காகச் சொல்லிச் சாப்பிடுவதையாவது நிறுத்தவேண்டும் என்று பக்தர்கள் முடிவெடுக்கிறார்கள்.

*

சுதந்தர தினம், குடியரசு தினம், உள்ளூர் ராணுவ வீரர்கள், சமூக சேவகர்கள், சுதந்தரப் போராட்ட வீரர்கள் நினைவு தினமன்று அவர்களுடைய நினைவாக பக்தர்கள் அனைவரும் அர்ச்சனை செய்து அவர்களின் குடும்பத்தினருக்கு முதல் மரியாதை செய்து ஆசி பெறலாம். தேச நலனுக்கான பிரார்த்தனைகள், திருவிளக்கு வழிபாடுகள் ஏற்பாடு செய்யலாம் என்று முடிவுசெய்யப்படுகிறது.

*

(தொடரும்)

No comments:

Post a Comment