Monday 13 March 2017

சுவாமி அம்பேத்கர் - 3



(3)

பரதேசி வாழ்க்கை முடிந்த பிறகு மடாலயம் திரும்புகிறார். அங்கு இளைய மடாதிபதியாக நியமிக்கப்படுகிறார். மடாதிபதியானதும் முதல் வேலையாக அந்த மடாலயத்தால் நிர்வகிக்கப்படும் கோவிலுக்குப் புறப்படுகிறார். சன்னதித் தெருவின் வாசலில் பல்லக்கு ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. இளைய மடாதிபதியை அதில் அமரவைத்து சுமந்து செல்வது வழக்கம். அதன்படியே நம் இளைய மடாதிபதியை அதில் ஏறச் சொல்கிறார்கள். அவரும் ஏறி அமர்ந்துகொள்கிறார்.

பல்லக்கைச் சுமந்து செல்பவர்களில் ஒரு முதியவரும் இருக்கிறார். அவரது குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாகப் பல்லக்கு தூக்கிவந்தவர்கள். மடாதிபதி மீதான பக்தியினால் அவர் அதை விருப்பத்துடன் செய்கிறார். ஆனால், உடல் ஒத்துழைக்கவில்லை. சுமையைத் தூக்கியபடி மற்றவர்களுக்கு ஈடுகொடுத்து நடக்க முடியவில்லை. சற்று கூன் விழுந்துவிட்டதால் பல்லக்கு அவர் தூக்கும் பகுதியில் சரிந்தும் இருக்கிறது. கோவில் தர்ம கர்த்தா அந்த முதியவரை சுடு சொல்லால் திட்டுகிறார். வேகமா போ... வேகமா போ என்கிறார்... அது இளைய மடாதிபதியின் காதில் சர்ப்ப சர்ப்ப என்று கேட்கிறது. இளைய மடாதிபதிக்குத் தூக்கிவாரிப்போடுகிறது. சட்டென்று பல்லக்கை நிறுத்தச் சொல்கிறார்.

என்ன விஷயம் என்று கேட்கிறார்.

ஒரு பெருசு படுத்துது என்று தர்மகர்த்தா சொல்கிறார்.

இளையவர் அவரை எச்சரித்துவிட்டு பல்லக்கில் இருந்து கீழே இறங்குகிறார். அந்த முதியவர் நடுங்கும் உடலுடன் நின்றுகொண்டிருக்கிறார். அவரைப் பார்த்ததும் இளைய மடாதிபதியின் கண்களில் நீர் கோர்த்துக்கொள்கிறது. ஐயா என்று அழைக்கிறார். கண் பார்வை மங்கி காது மந்தமாகியிருக்கும் பெரியவர் தடுமாறியபடியே தாங்கு கோலைப் பிடித்தபடி நின்றுகொண்டிருக்கிறார். இளைய மடாதிபதி மெள்ள அவரைத் தொடுகிறார். திரும்பிப் பார்க்கும் பெரியவர் பதறிப்போய் தாங்குகோலை நழுவ விடுகிறார். அது இளையவர் மேல் விழுகிறது. சுற்றியிருப்பவர்கள் திட்ட ஆரம்பிக்கவே பெரியவர் பயந்து நடுங்கியபடியே இளையவரின் காலில் விழப்போகிறார். சட்டென்று அவரைத் தூக்கிப் பிடித்து இளையவர் அவரைக் கைத் தாங்கலாக அரவணைத்துக் கொள்கிறார். தர்மகர்த்தாவும் பிற நிர்வாகிகளும் அந்த முதியவரை ஓரமாக அழைத்துச்செல்ல விரும்புகிறார்கள். இளைய மடாதிபதி அவர்களை விலகி நிற்கச் சொல்லிவிட்டு பெரியவரை பல்லக்கின் நடுப்பகுதிக்கு அழைத்துவருகிறார். பல்லக்கினுள் உள்ளே ஏறி அமரச் சொல்கிறார். பெரியவரோ பதறியபடியே மறுக்கிறார்.

இத்தனை காலம் எங்களைத் தூக்கியிருக்கீங்களே.. கொஞ்சம் நேரம் நான் தூக்கறேன் என்கிறார் இளையவர்.

பெரியவர் முடியவே முடியாதென்று மறுக்கிறார்.

இளையவர் அவரைக் கட்டாயப்படுத்தி பல்லக்கில் ஏற்றிவிடுகிறார். முன்னால் சென்று பல்லக்கின் தாங்குகோலைத் தூக்குகிறார். தர்மகர்த்தாவும் பிற பணியாளர்களும் பல்லக்கைத் தாங்களே தூக்குவதாகச் சொல்கிறார்கள். இளையவர் அவர்களை தள்ளி நிற்கச் சொல்கிறார். பிறகு மடாலயத்தின் பிற துறவிகளைப் பார்க்கிறார். ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் அவர்கள் மெள்ள நடந்துவந்து பல்லக்கின் ஒவ்வொரு கால்களையும் தூக்கிக் கொள்கிறார்கள். தர்மகர்த்தாவும் பணியாளர்களும் வேண்டாம் என்று வழியை மறிக்கவே, நாங்கள் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் இது என்று சொல்லி அவர்களை ஒதுங்கி நிற்கச் சொல்கிறார்கள்.

பல்லக்கு புறப்படுகிறது. உள்ளே இருக்கும் முதியவர் ஓம் நமச்சிவாய... ஓம் நமச்சிவாய என்று ஜெபித்தபடியே வருகிறார். வந்தியின் கூலியாளாய் பிட்டுக்கு மண் சுமந்த பெருமானின் புகழை இளையவர் பாடுகிறார். அனைவரும் அதைப் பாடியபடியே பின்னால் வருகிறார்கள். பல்லக்கு கோவிலை அடைகிறது. இதற்குள் சன்னிதானத்தில் இருக்கும் மூத்த மடாதிபதிக்கு இங்கு நடந்தவை சென்று சேர்ந்துவிட்டிருக்கிறது. அவர் கோபத்துடன் கோவில் வாசலுக்கு விரைகிறார். பல்லக்கு கோவிலுக்குள் நுழைகையில் நிறுத்து என்று உத்தரவிடுகிறார்.

இளைய மடாதிபதி பல்லக்கைச் சுமந்தபடியே அவருக்கு வணக்கம் தெரிவிக்கிறார்.

என்ன செய்கிறீர் இளைய தம்புரானே... யாரை யார் தூக்குவது..?

உங்களுக்குப் புரியும்வகையில் சொல்வதென்றால், நீங்கள் உடலைப் பார்க்கிறீர்கள். நான் ஆன்மாவைப் பார்க்கிறேன். ஆன்மாவில் உயர்வேது தாழ்வேது? என்னிலும் உங்களிலும் உறைபவனே எங்கும் உறைகிறானெனில் யாரால் யார் தூக்கப்படுகிறார் என்ற கேள்விக்கு இடமேது மூத்தவரே...

மூத்த மடாதிபதி பதில் சொல்லவியலாமல் வழிவிட்டு நிற்கிறார். பல்லக்கு கொடிமரம் அருகில் இறக்கப்படுகிறது. பெரியவர் வேக வேகமாக கீழே இறங்குகிறார். இளையவர் அவரைக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் செல்கிறார். அன்றைய தீப ஆராதனையில் கற்பூர வில்லைகள் சூரியன் போல் பிரகாசிக்கின்றன. பின்புற ஒளிவட்ட அகல் விளக்கு மூன்று முறை பிரகாசமாக எரிந்து ஒளிர்கிறது. பக்தர் கூட்டம் அதைக் கண்டு மெய்சிலிர்க்கிறது.

*

இளைய மடாதிபதி மெள்ள மெள்ள ஒவ்வொரு சீர்திருத்தமாக முன்னெடுக்கிறார். மடாலயத்தின் கீழ் வரும் கோவில்களில் பாரம்பரிய ஓவியங்கள், சிலைகள் எல்லாம் சுண்ணம் பூசப்பட்டும், மணல் வீச்சு முறையிலும் புதுப்பிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒரு கோவிலில் நடக்கும் மணல் வீச்சு சுத்திகரிப்புப் பணிகளைப் பார்க்கும் இளையவர் பதறி அடித்து உடனே நிறுத்தச் சொல்கிறார். எண்ணெய்ப் பிசுக்குகளை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் அந்தப் பணியினால் சிலைகள் மூளியாகிப் போவதைப் பார்த்து அதிர்கிறார். உடனே அனைத்து கோவில்களிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்த புனரமைப்புப் பணிகளை நிறுத்துகிறார். அந்த காண்டிராக்ட் எடுத்து கணிசமான பணம் சேர்க்க விரும்பிய அரசியல்வாதி கோபம் கொள்கிறார். இளைய மடாதிபதி எதிர்கொள்ளவிருக்கும் விஷ அம்பு மழையின் முதல் அம்பு அவன். இளையவர் சீயக்காய் மூலம் கைகளால் அந்தச் சிலைகளில் இருந்து மெதுவாக என்ணெய் பிசுக்கை நீக்க தானே முன்னின்று உழவாரப் பணிகளை ஆரம்பிக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் பக்தர் கூட்டம் அலை அலையாக வந்து அந்தப் பணியில் ஈடுபடுகின்றன.

*

மடாலயத்தின் சார்பில் பட்டிமன்றங்கள் நடப்பது வழக்கம். பொதுவாக எல்லா பட்டிமன்றங்களிலும் சிவபெருமானின் பெருமையையே பேசுவார்கள். அதிலும் இதுபோன்ற மடாதிபதிகள் சிவனுடைய பெருமைகளைப் பேசும் பக்கத்தில்தான் நின்று வாதாடுவார்கள். இளைய மடாதிபதியோ அதில் மாறுபட்டுச் செயல்படுகிறார். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று நக்கீரன் சொன்னது சரியே. வாதப் பிரதிவாதத்தில் நெற்றிக்கண்ணுக்கு என்ன வேலை. தன் தரப்பை நியாயப்படுத்த முடியாமல் சிவபெருமான் வன்முறையைக் கைக்கொண்டது மிகப் பெரிய தவறு என்று துணிந்து வாதாடுகிறார்.

அதுபோன்ற பட்டிமன்றங்களுக்கு வந்தவர்கள் எல்லாம் அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்கள். காவி உடை, நெற்றியில் திருநீற்றுப் பட்டை, கழுத்தில் உத்திராட்சமாலை எனச் சிவப்பழமாக இருக்கும் இளைய மடாதிபதி சிவனையே எதிர்த்துப் பேசுவதைப் பார்த்து அந்த நக்கீரரே உயிர் பற்று வந்துவிட்டாரோ என்று கலங்கினர். ஆனால், அதை மட்டுமே பேசி நிறுத்தியிருந்தாரென்றால், வறட்டு நாத்திகமாகிப் போயிருக்கும். எம் பெருமான் ஒருபோதும் அப்படிச் செய்திருக்கமாட்டார். அந்தக் கதையை எழுதியவர்தான், சாதாரண மனிதர் ஒருவர் சிவ பெருமானையே எதிர்த்துப் பேசுவதா என்று சினந்து பக்தி மிகுதியால் நெற்றிக் கண்ணைத் திறக்கவைத்துவிட்டார் என்று அந்த வாதத்தை நிறைவு செய்கிறார்.

*

சரஸ்வதி பூஜையன்று புத்தகங்களைப் படிக்கக்கூடாதென்று இருக்கும் நடைமுறையை மாற்றுகிறார். 364 நாட்களும் படிக்கும் பழக்கம் கொண்ட பிராமணர்கள் சரஸ்வதி பூஜையன்று தமது புத்தகங்களை இறைவனாக வைத்து வழிபடுவது சரியே... ஏட்டுக் கல்வியில் இருந்து சற்று விலகியிருந்த பிற சாதியினர் சரஸ்வதி பூஜையன்று புனித நூல்களைப் படிப்பதை தமது விழாவாக முன்னெடுக்கவேண்டும் என்று சொல்லி மடாலயத்தில் சரஸ்வதி பூஜையன்று தேவாரம் திருவாசகம் படிக்க வைக்கிறார்.

*

பொதுவாக மடாலயங்களில் கோ பூஜை செய்யப்படுவது வழக்கம். பசு புனிதமானதுதான். அதே நேரம் காளையும் எருமையும் கூடப் புனிதமானவையே... காளை உழவுக்குப் பெரும் பங்காற்றி வந்திருக்கிறது. அதோடு அது சிவனின் வாகனமும் கூட. எருமைப் பால் பசுவின் பாலைவிட மனிதர்களுக்கு பெரிதும் பயன்படுகிறது. எனவே அவையும் உயர்வானவையே என்று சொல்லி கோ பூஜையை அனைத்து ஆவினங்களுக்கும் விமர்சையாகக் கொண்டாடுகிறார்.

*

ஆன்மிக குருக்களுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாத பூஜை செய்வது வழக்கம். இளைய மடாதிபதி எல்லா தொழில்களும் உயர்வானவையே என்பதை உணர்த்தும் வகையில் சாக்கடை சுத்தம் செய்பவர்கள், துணி துவைப்பவர்கள், முடி திருத்துபவர்கள், பிணம் எரிப்பவர்கள், மலம் அள்ளுபவர்கள் என கடைநிலைப் பணிகள் செய்யும் அனைவரையும் ஒவ்வொரு நாளும் காலையில் மடத்துக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து பாத பூஜை செய்து கெளரவிக்கிறார். அதுபோல் பிறழ் பால் மனிதர்களையும் அழைத்து மரியாதை செய்கிறார். இந்தக் குறியீட்டு மரியாதையோடு நிறுத்தாமல் அந்தத் தொழில்களை விஞ்ஞானரீதியில் மேம்படுத்த ஆய்வு மையம் ஒன்றை அமைக்கிறார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்து தலைமை விஞ்ஞானியை அழைத்துவந்து அந்த மையத்தை ஆரம்பித்துவைக்கும் இளைய மடாதிபதி புதிய கிரகங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளோடு இருக்கும் கிரகத்தை மேம்படுத்தும் பணிகளும் நடக்கவேண்டும் என்று வேண்டுகோள்விடுக்கிறார்.


(தொடரும்)

No comments:

Post a Comment