Tuesday 14 March 2017

சொல் புதிது - 2

புதிய சொற்களை உருவாக்குவோம்.

Ice Cream : ஐஸ்க்ரீம்.

இந்தப் பொருளின் குணங்கள் என்னென்ன..? 1.அது குளிர்ச்சியானது. 2.திடப்பொருளும் அல்ல திரவப் பொருளும் அல்ல. 3. இனிப்பானது. 4. பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

தமிழகத்தில் / இந்தியாவில் ஐஸ்க்ரீம் ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகே அறிமுகமாகியிருக்கிறது. பனிக்கட்டிகள் மட்டுமே நம்மிடம் உண்டு. பாலில் இருந்து தயிர், மோர், வெண்ணெய், நெய், திரட்டிப் பால் (பால்கோவா), பாலாடை எனத் தயாரித்திருக்கிறோமே தவிர க்ரீம் என்பதை நாம் உருவாக்கியிருக்கவில்லை. எனவே, தமிழில் அதற்கான சொல் கிடையாது. க்ரீம் என்பதன் குணம் என்று பார்த்தால் அது திடமும் இல்லை திரவமும் இல்லை... அதாவது கூழ்ம நிலையில் இருக்கிறது. ஐஸ்க்ரீம் குளிர்ச்சியானது. எனவே, இந்தப் பொருளுக்கு பனிக் கூழ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால், கூழ் என்பது வேறொரு உணவுப் பொருளைக் குறிக்கும் சொல். பனி என்று முன்னொட்டு அதை வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது என்றாலும் கூழ் என்பது இந்துக் கோவில் வழிபாட்டுடனும் இந்துகளின் பாரம்பரிய அன்றாட உணவுடனும் வலுவாகப் பிணைக்கப்பட்ட பெயர். கூழ் என்றதும் கம்பு, கேழ்வரகு இவற்றால் தயாரிக்கப்படும் உணவே நினைவுக்கு வரும். பாரம்பரியக் கூழுடன் ஐஸ்க்ரீம் எந்தவகையிலும் தொடர்பில்லாதது, எனவே, பனிக் கூழ் என்பதற்கு பதிலாக பனிக் கூழ்மம் என்ற பெயரே பொருத்தமாக இருக்கும்.

இதுவும்கூட ஐஸ்க்ரீமின் முதல் இரண்டு குணங்களை மட்டுமே சுட்டுகிறது. இனிப்பானது என்ற அம்சமும் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதும் இல்லை. இந்த நான்கையும் உள்ளடக்கியதாக ஒரு பெயர் வைப்பதென்றால் இனிப்புப் பால் பனிக் கூழ்மம் என்று சொல்ல வேண்டியிருக்கும். இது மிகவும் நீளமான பெயராக இருப்பதால் மிக முக்கியமான அம்சங்களை மட்டும் உள்ளடக்கியதாக இனிப்புப் பனிக் கூழ்மம் என்றோ பால் பனிக் கூழ்மம் என்றோ பெயர் வைக்கலாம். பனி என்பதுகூட ஒருவகையில் பொருத்தமான சொல் அல்ல. ஏனென்றால் பனி என்பது நம் ஊரில் குளிர்ந்த தட்ப வெப்பநிலைக் குறிக்கும் சொல் மட்டுமே. பனிக்கட்டியை அது குறிக்காது. அதோடு ஐஸ்க்ரீம் என்பது பனிக்கட்டியும் அல்ல. எனவே, அதை குளிர்ந்த என்ற வார்த்தையால்தான் குறிப்பிடவேண்டும். குளிர் இனிப்புக் கூழ்மம், குளிர் பால் கூழ்மம் என்று சொல்லலாம். குச்சி ஐஸ் போன்றவற்றை இனிப்பு பனிக்கட்டி என்று அதிக சிரமம் இல்லாமல் சொல்லிவிடலாம்.

வாக்கியம் : நான் இன்று மாலையில் என் நண்பர்களுடன் சென்று குளிர் இனிப்புக்கூழ்மம் சாப்பிட்டேன். அது அருமையாக இருந்தது

*

வெய்ட்டர் - சர்வர் டிப்ஸ் என்ற ஒரு வார்த்தை.

இதில் வெய்ட்டர் என்பது காத்திருப்பவர் அதாவது நாம் சாப்பிட்டு முடிப்பதுவரை நம் அருகில் நமக்கு என்ன தேவை என்று காத்திருப்பவர் என்ற அர்த்தத்தில் அப்படிப் பெயரிட்டிருக்கிறார்கள். இதைவிட சர்வர் என்ற வார்த்தை மேலும் பொருத்தமானது : உணவு பரிமாறுபவர். இப்போது டிப்ஸ் என்பதன் அடிப்படை அம்சங்கள் என்னவென்று பார்த்தால் 1.உணவு பரிமாறுபவருக்குத் தரப்படும் தொகை. 2.பரிமாறுபவரின் சேவையைப் பாராட்டி அன்பினால் தரப்படும் தொகை. 3. அது மிகவும் சிறிய தொகையாகவே (சில்லறையாகவே) நாம் உணவுக்குக் கொடுக்கும் தொகையில் பத்தில் ஒரு பங்குதான் இருக்கும். இப்போது இந்த மூன்றையும் இணைத்துப் பெயர் வைத்தால் உணவு பரிமாறுபவருக்கு அன்பினால் தரும் சிறு தொகை அதாவது பரிசாரக சிறு அன்பளிப்பு. அதையே இன்னும் சுருக்கி பரிசாரக அன்பளிப்பு. இந்த பரிசாரகர் என்ற வார்த்தை பலருக்குப் புரிய வாய்ப்பு இல்லை. நம் ஏவலுக்கு ஏற்ப நடந்துகொள்பவர் என்ற வகையில் அவரை ஏவலர் என்றும் அவருக்குத் தரும் அன்புத் தொகையை அன்பளிப்பு என்று சொல்லலாம். ஏவலர் அன்பளிப்பு அல்லது பணியாளர் அன்பளிப்பு என்று சொல்லலாம். இந்த அன்பளிப்பை உணவு விடுதியில் மட்டுமல்லாமல் வேறு இடங்களிலும் சேவையைப் பாராட்டித் தருவது உண்டு என்பதால் அதை சேவை அன்பளிப்பு என்றும் சொல்லலாம். ஒருவேளை அன்பளிப்பு என்பது சற்று கனமான வார்த்தையாகத் தோன்றினால் அன்புத் தொகை என்பதே சரியாக இருக்கும்.

வாக்கியம் : அந்த உணவு விடுதியில் நாங்கள் ரூ 200க்குச் சாப்பிட்டோம். ஏவலர் அன்புத்தொகையாக (பரிசாரக அன்புத்தொகையாக) பத்து ரூபாய் கொடுத்தோம்.

*

ஷவர்

ஷவர் என்பது குளியலறையில் இருக்கும் குழாய். மழைத் தூறல் போல் நீரைச் சொரியக்கூடியது. குளியலறை தூறல் குழாய் என்பது அதன் அனைத்து அம்சங்களையும் கொண்ட பெயர். இதை எளிமைப்படுத்தி தூறல் குழாய் என்று சொல்லலாம்.

வாக்கியம் : குழந்தைகளுக்குக் குளியலறைத் தூறல் குழாயில் குளிப்பது மிகவும் பிடிக்கும்.

இண்டிகேட்டர் :

வாகனங்களில் செல்லும்போது பின்னால் வரும் வாகனங்களுக்கு நாம் வண்டியின் வேகத்தைக் குறைக்கப்போகிறோமா... வலதுபக்கம் திரும்பப் போகிறோமா இடதுபக்கம் திரும்பப் போகிறோமா என்பது போன்ற விஷயங்களைத் தெரிவிக்க வாகனங்களின் பின் பக்கம் ஒரு இண்டிகேட்டர் விளக்கு பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் பின்னால் வரும் வாகனங்களுக்கு நாம் செல்லவிருக்கும் திசையைச் ”சொல்லிக் காட்ட’ முடியும். எனவே அதை செல்திசைகாட்டி விளக்கு என்று சொல்லலாம்.

வாக்கியம் : நான் வாகனத்தில் போய்க்கொண்டிருந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை ஓட்டியவர் செல்திசைக் காட்டி விளக்கைப் பயன்படுத்தாமலேயே சட்டென்று வலது பக்கம் திரும்பிவிட்டார். நான் மெதுவாகச் சென்றதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஸ்டியரிங் :

கார், லாரி போன்ற வாகனங்களை ஓட்ட அந்த வாகனங்களின் சக்கரங்களை கட்டுப்படுத்தப் பயன்படும் வளைய வடிவிலான கருவி இது. வாகன ஓட்டி பயன்படுத்தும் வளையம் என்றவகையிலும் வாகனம் ஓட வழிசெய்யும் வளையம் என்ற வகையிலும் அதை வாகன ஓட்டி வளையம் என்று சொல்லலாம்.

வாக்கியம் : வாகன ஓட்டி வளையத்தில் புதிய தொழில் நுட்பமாக சக்கரங்களைக் கட்டுப்படுத்தும் மின் இயக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் வாகனத்தை ஓட்டுவது மிகவும் எளிதாகிவிட்டிருக்கிறது.

பிரேக் :

வாகனங்களின் வேகத்தை மட்டுப்படுத்தப் பயன்படுத்தும் பொருள். இப்போது அதை தடுப்பான் என்று சிலர் சொல்கிறார்கள். வேகத்தைத் தடுக்கும் கருவி என்ற பொருளில் அதை தடுப்பான் என்கிறார்கள். உண்மையில் அது வேகத்தைக் குறைக்கப் பயன்படுத்தும் கருவிதான். எனவே வேகக் குறைப்பான் என்பதே பொருத்தமானது.

வாக்கியம் : எங்கள் பள்ளி வாகனத்தின் குறுக்கே திடீரென்று ஒரு நாய்க்குட்டி பாய்ந்துவிட்டது. வாகன ஓட்டுநர் சட்டென்று வேகக் குறைப்பானை அழுத்தியதன் மூலம் நாய்க்குட்டி மீது மோதாமல் காப்பாற்றிவிட்டார்.

ஷாக் அப்சார்பர்

வாகனங்கள் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது அந்த அதிர்வானது பயணிப்பவர் மேல் செலுத்தும் எதிர்விசையை மட்டுப்படுத்தப் பயன்படுத்தும் கருவி. இது சுருள் வளையமாக இருக்கலாம். ரப்பர் வளையமாக இருக்கலாம். அதிர்வை உள்வாங்கிக் கொண்டு பயணியைக் காக்கும் கருவி என்பதால் இதை அதிர்வு உள் வாங்கி என்று சொல்லலாம்.

மென்சஸ் : இதை மாத விலக்கு என்று பொது வழக்கில் சொல்கிறார்கள். அந்த நாட்களில் வீட்டில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்ததால் அப்படிச் சொல்கிறார்கள். ஆனால், பழங்காலத்தில் அப்படி இருக்கச் சொன்னதன் நியாய அநியாயங்கள் , காரண காரியங்கள் இன்றைய வாழ்க்கை முறையில் தவறென்று படுகிறது. கற்பழிப்பு என்ற வார்த்தை தவறென்று சொல்வதுபோல் மாத விலக்கு என்பதையும் மாற்றியாகவேண்டும். மாத உதிரப் போக்கு நாட்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அது கண்ணியக் குறைவான சொல்லாக்கம். உண்மையில் அந்த நாட்களில் விந்தணுவை எதிர்பார்த்து உருவாக்கப்படும் கருமுட்டை கருத்தரிப்பு நிகழாமல் கரைந்து அழியும். எனவே கரு முட்டை கரையும் நாட்கள் என்று சொல்வது ஓரளவுக்கு கண்ணியமாக இருக்கும். மாத தளார்ச்சி நாட்கள் என்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

வாக்கியம் : மாத தளர்ச்சி நாட்களில் பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் கடினமான பணிகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.


ஃபுட் பாத்

நடந்து செல்லப் பயன்படுத்தப்படும் பாதை என்றவகையில் இதை இப்போது நடைபாதை என்று சொல்கிறோம். உண்மையில் இது சாலையோரத்தில் அமைந்திருக்கும் பாதை. காட்டுக்குள் இருக்கும் ஒற்றையடிப் பாதைகூட நடக்க உதவும் பாதைதான். ஃபுட் பாத் சாலை ஓரத்தில் இருக்கும் பாதையைக் குறிக்கும் என்பதால் சாலையோர நடைபாதை என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

வாக்கியம் : நான் சாலையோர நடைபாதையில் வந்து கொண்டிருந்தபோது மழை பெய்ய ஆரம்பித்தது.

பிளாட்ஃபார்ம் :

இதை நடை மேடை என்று இப்போது சொல்கிறோம். உண்மையில் இது இருப்புப்பாதை நிலையம், பேருந்து நிலையம் போன்றவற்றில் வாகனங்களில் ஏறி இறங்க பயணிகள் பயன்படுத்தும் இடம் எனவே இதை ஏறு இறங்கு தளம் என்று சொல்லலாம்.

வாக்கியம் : இருப்புப்பாதைநிலையத்தின் ஐந்தாம் ஏறு இறங்கு தளத்தில் எங்கள் வாகனம் வந்து நின்றது. (நடைமேடை என்பது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட பெயர் என்பதால் அதையே பயன்படுத்தலாம். எனினும் அவ்வப்போது இந்தப் புதிய சொல்லையும் பயன்படுத்தி பழக்கத்துக்குக் கொண்டுவரலாம்).

தட்கல் :

நீங்கள் எந்த ஊருக்குப் போவதாக இருந்தாலும் அந்த ரயில் எதுவரை செல்லுமோ அதற்கான கட்டணத்தை நீங்கள் கட்டியாகவேண்டியிருக்கும். அந்தவகையில் உங்கள் பயண தூரத்தைவிட அதிக கட்டணத்தைத் தரவேண்டியிருக்கும். எனவே அதை மிகை பயணக் கட்டணம் என்று சொல்லலாம். அதோடு இதன் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. கடைசி நேரத்தில்கூட டிக்கெட் பெற முடியும். இந்த இரண்டு அம்சங்களுமே மிக முக்கியமான அடையாளங்களே. எனவே மிகை பயணக் கட்டணம் அல்லது கடைசி நேர பயணச் சீட்டு என்ற இரண்டில் ஏதேனும் ஒன்று பொருத்தமாக இருக்கும்.

இதன் இன்னொரு அம்சம் என்னவென்றால் இது வரிசையை தவிர்த்து அல்லது வரிசையை மீறிப் பெறப்படும் பயணச் சீட்டு. பயணத்துக்கு 20 நாட்கள் முன்னதாக முன் பதிவு செய்தவர்களுக்குக் கிடைக்காத இருக்கைவசதி கடைசி நிமிடத்தில் அதிகக் கட்டணம் கட்டுபவருக்குக் கிடைத்துவிடும். எனவே இது வரிசையை மீறிப் பெறப்படும் பயணச் சீட்டு. அவசரமாகச் செல்லவேண்டிய அவசியம் இருப்பவர்களுக்காக இந்த சிறப்பு வசதியை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. எனவே இதை வரிசை மீறல் பயணச் சீட்டு என்று சொல்லாமல் அவசர பயணச் சீட்டு என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

வாக்கியம் : எனது ஊர் அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவுக்கு முன்கூட்டியே பயணச் சீட்டு பதிவு செய்ய மறந்துவிட்டேன். எனவே, அவசரப் பயணச் சீட்டு (தட்கல்) வாங்கிக்கொண்டு சென்றுவந்தேன்.


No comments:

Post a Comment