Thursday 13 July 2017

சைவ மாமிசம்



(மாமிசம் போன்ற மாமிசம்)


மனிதர் சைவரா... அசைவரா?

மனிதரின் மூதாதை இனமான குரங்குகள் சைவ உணவை உண்பவையே. அவற்றிலிருந்து கிளைத்த ஆதி மனிதரும் சைவ உணவைத்தான் பல ஆயிரம் ஆண்டுகள் உண்டும் வந்திருப்பான். எப்போது காட்டுத் தீயில் வெந்த விலங்குகளின் உணவை மனித இனம் ருசித்துப் பார்த்ததோ அதன் பிறகுதான் தீயைக் கண்டுபிடிக்கவும் (உருவாக்கவும்) அதில் இறைச்சியை வாட்டவும் கற்றுகொண்டு அதன் பிறகே அசைவ உணவுக்கு மனித இனம் பழகியிருக்கும். மனிதருடைய உடம்புக்கு பச்சை மாமிசத்தை ஜீரணம் செய்யும் வலிமையோ கூர்மையான நகங்களோ கோரைப் பற்களோ கிடையாது என்பதால் மனித இனம் இயற்கையால் சைவ பட்சிணியாகவே படைக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவு. ஆனால், தீயில் வாட்டி உண்ணக் கற்றுக்கொண்டதும் மனித இனம் வேட்டையாடத் தொடங்கிவிட்டது. ஒருவேளை குரங்கில் இருந்து வந்த மனிதர் அப்படியே நேராக விவசாயம் செய்யக் கற்றுக்கொண்டிருந்தால் மனித இனம் சைவ பட்சிணியாகவே பரிணாமம் அடைந்திருக்கும். தீயால் மனித இனம் தீய திசை திரும்பிவிட்டது.

ஒருவர் எதைச் சாப்பிடவேண்டும் என்பதை அவரும் அவருடைய உடம்பும்தான் தீர்மானிக்கவேண்டும் என்பது உண்மைதான். ஆனால், இந்த உலகில் எந்த உயிர்கள் வாழவேண்டும் எவையெல்லாம் கொல்லப்படலாம் என்பதைச் சொல்லும் ஹிட்லரிய சுதந்தரத்தை யாருக்கும் தரமுடியாது. ஓர் உயிர் வாழ இன்னோர் உயிரைக் கொல்வது தவறு என்ற அடிப்படை நாகரிக மனோபாவம் வேட்டை சமூகத்திலேயே தோன்றியிருக்கும் என்றே தோன்றுகிறது. பழங்கள், காய்கள், கிழங்குகள் போன்றவற்றைத் தொடர்ந்து உண்டுவந்ததன் மூலம் வெறுமனே புலியைப் போலவோ சிங்கத்தைப் போலவோ முழு அசைவராக மனித இனம் பரிணமித்திருக்கவில்லையே. இதனால் வேட்டை மனிதர்க்கு(ம்) உயிர்க் கொலைமேல் ஒருவித ஒவ்வாமை இருந்திருக்கிறது என்று யூகிக்கலாம்.

புத்தர், மகாவீரர், திருவள்ளுவர், இயேசு போன்ற வழிகாட்டிகள் அனைவருமே உயிர்க்கொலையைக் கடுமையாகக் கண்டிப்பவர்களே. இவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் நபர்களும் இவர்கள் ”காட்டிய’ வழியைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்களும் அசைவ உணவு விஷயத்தில் தமது வழிகாட்டிகளையும் அவர்களுடைய போதனைகளையும் குப்பைக்கூடையில் எறியத் தயங்குவதில்லை. சமணம் நீங்கலாகப் பிற எந்த மதமும் இந்த விஷயத்தில் பெரிதாக எந்த நல்லுணர்வையும் தொடர்ந்து வலியுறுத்தவில்லை. மத்திய கால ஐரோப்பாவில் லென்ட் போன்ற விழாக்களின்போது அசைவ உணவைத் தவிர்ப்பது பழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால், இன்றோ கிறிஸ்தவ விழா என்றால் நல் மேய்ப்பன் கையில் இருக்கும் இளம் வெள்ளாட்டுக் குட்டியை (அவர் இதைச் சாப்பிடு என்றுதான் கையில் எடுத்துக் காட்டுகிறார் என்றுகூடச் சொல்வார்கள்... Thou shall not KILL என்பதைக்கூட Thou shall not MURDER என்று விளக்குபவர்கள்தானே) வெட்டிக்கொன்று தின்றுதான் கொண்டாடவேண்டும் என்ற அளவுக்கு ஆகிவிட்டிருக்கிறது. இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்... பிரியாணியைத் தின்பதற்காகத்தான் அமைதி மார்க்கத்தில் இணைந்திருக்கிறார்களோ என்று அஞ்சும் அளவுக்கு அது மட்டன் பிரியாணியில் ஆரம்பித்து மட்டன் பிரியாணியில் முடியும் மதமாகவே இருக்கிறது. உயிர்கள் மீதான அவர்களுடைய பெருங் கருணை என்பது விழா நாளில் வெட்டிக் கொல்வதற்காக வளர்க்கப்படும் ஆடுகளின் கொழுத்த சதை மீது காட்டும் பேரன்பே. இந்து மதத்தைப் பொறுத்தவரையில் நாட்டார் வழிபாட்டு முறையில் அசைவப் படையல் உண்டு என்றாலும் செவ்வாய், வெள்ளி, சனி போன்ற நாட்களில் அவற்றை அறவே தவிர்ப்பது, வீடுகளில் செய்யப்படும் பூஜைகளில் சைவப் படையல் மட்டுமே தருவது என ஓரளவுக்கு மிதமாக இருக்கிறது. ஆனால், இந்துக்களில் பெரும்பான்மையினர் அசைவர்கள் என்பதால் அவர்களையும் அப்படியொன்றும் விலங்குகளின் மீது அன்பு கொண்டவர்கள் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. உயிர்க்கொலைக்குப் பூரண மத அங்கீகாரம் இல்லை என்று மட்டுமே சொல்லமுடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் குறிப்பாக தமிழகத்தில் சைவ உணவுக்கு ஒருவர் ஆதரவாகப் பேசுகிறார் என்றால் அவர் நிச்சயம் சாதி வெறி பிடித்த பிராமணராகத்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அரசியல் மூடத்தனமும் வெறுப்பும் ஊறிக்கிடக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் சைவ உணவு ஆதரவாளர்களாக பிராமணர்களைப் பழிப்பவர்களில் பலர் புத்தரைத் தமது ஆதர்ச சீர்திருத்தவாதியாக வேறு சொல்லிக்கொள்வார்கள். சேகுவேரா படம் பொறித்த டீ சர்ட் அணிவதன் மூலமே புரட்சியாளராகிவிடும் போராளிகள் நிறைந்த உலகில் பல்லிடுக்கில் சிக்கிய சிக்கன் துண்டை எடுத்தபடியே அல்லது நல்லி எலும்பைக் கடித்தபடியே புத்தரைப் புகழ்வதும் சகஜம்தானே.

ஆனால், இந்த உலகில் தனது தொண்டர்களிடம் உண்மையான தாக்கத்தை செலுத்திய சீர்திருத்தவாதி என்று புத்தரையும் மகாவீரரையும் மட்டுமே சொல்ல முடியும். சீனாவுக்கு புத்த மதம் சென்றபோது அது ஒரு சிறிய சமரசத்தை முன்னெடுத்தது. இந்தியாவில் இருந்தவரை பவுத்தமும் சமணமும் அசைவத்தைக் கடுமையாக ஒடுக்கவே செய்தன. இன்றும் சமணர்கள் மட்டுமே அசைவ உணவை அறவே தவிர்ப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், பவுத்தம் சீனாவில் ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் பரவியபோது உள்ளூர் மக்களின் வாழ்க்கை மதிப்பீடுகளுக்கு மதிப்பு கொடுக்கத் தீர்மானித்தது. உண்மையில் புத்தர் மூலமாகவே பவுத்தம் உலகம் முழுவதும் பரவியிருந்தால் அவர் அசைவ விலக்கத்தை துணிந்து நிலை நிறுத்தியிருப்பார் பவுத்த துறவிகளுக்கு அவர் அளவுக்கு வசீகரமும் அர்ப்பண உணர்வும் கிடையாததால் அந்தப் பகுதி மக்களுக்காக அசைவத்தை அனுமதிக்க முடிவு செய்தார்கள். அதே நேரம் புத்தர் செலுத்திய தாக்கம் அதிகம் என்பதால் ஒரு மூன்றாம் வழியைக் கண்டுபிடிக்க முயன்றார்கள். அதுதான் சைவ மாமிசம்! மாமிசம் போலவே இருக்கும்; ஆனால், சைவப் பொருட்களால் செய்யப்பட்டிருக்கும்.

சமணர்களும் இந்திய பவுத்தர்களும் இந்த விஷயத்தில் மிகவும் கறாராக உன்னத நிலையிலேயே இருந்துவிட்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் அசைவ விரும்பிகள் உண்டு. என்றாலும் நீ பவுத்தராக வேண்டுமென்றால் அசைவத்தைத் தவிர்த்துத்தான் ஆகவேண்டும். நீ சமணர் என்றால் அசைவத்தைத் தொடவே கூடாது என்றே சொல்லியிருக்கிறார்கள். அசைவம் போல் இருக்கும் சைவம் என்ற சிந்தனைகூட அவர்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தோற்றுவித்திருக்கிறது.. எனவே, பவுத்தமும் சமணமும் உருவாகிய இந்தியாவில் சைவ மாமிசம் என்ற கருத்தாக்கம் உருவாகியிருக்கவே இல்லை. சீனாவில் அது தேவையாக இருந்ததாக பவுத்த துறவிகள் நினைத்தார்கள். எனவே, டோஃபு என்ற மாமிசம் போன்ற மாமிசம் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து அவ்வகையிலான ஏராளமான மாமிச மாற்று உணவுகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டுவருகின்றன.ஒருவகையில் டோபு தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட உணவுதான்; தயிர் பயன்படுத்திய கீழைத்தேயர்களின் வருகையைத் தொடர்ந்து சோயா பாலில் உப்பு சேர்க்கப்பட்டு தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், பவுத்தம் பரவிய நாடுகளில் எல்லாம் பவுத்தத்தின் வருகைக்குப் பின்னரே டோஃபு அறிமுகமாகியிருப்பதிலிருந்து அசைவ மாற்றாக அது முன்னெடுக்கப்பட்டிருக்கும் என்று எண்ண இடமிருக்கிறது. அதிலும் பாம்பு, பல்லி, நாய், பூனை, கழுதை, குரங்கு என சதை உள்ள எல்லாவற்றையும் தின்னும் பழக்கம் கொண்ட சீனாவில் டோஃபு கண்டுபிடிக்கப்பட நிச்சயம் பவுத்தமே காரணமாக இருந்திருக்கும் என்று துணிந்து சொல்லலாம்.

சூரிய ஒளியைப் பயன்படுத்தி தாவரங்கள் கார்ப்போஹைட்ரேட், புரதங்கள், ஃப்ரக்டோஸ் போன்றவற்றை உருவாக்குகின்றன. சில விலங்குகள் தாவரங்களைச் சாப்பிட்டு அவற்றைக் கொழுப்பாக உடம்பில் சேர்த்துவைக்கின்றன. கார்போஹைட்ரேட், ஃப்ரக்டோஸ் போன்றவற்றில் இருந்து க்ளுகோஸ் தயாரித்துக்கொள்ளும் உயிரினங்கள் தாவரங்களையும் கொழுப்பில் இருந்து உடலுக்கான சக்தியைத் தயாரித்துக்கொள்ளும் உயிரினங்கள் விலங்குகளையும் உண்டு வாழ்கின்றன. மனிதர்கள் தாவரங்களையும் விலங்குகளையும் ஒரு சேர உண்ண முடிந்தவர்களாகப் பிழையான பரிணாம வளர்ச்சி பெற்றவர்களாக இருப்பதால் விலங்குகளை அவர்களிடமிருந்து காப்பது மிகவும் அவசியமான செயலாகவே இருக்கிறது. ஆனால், மதம் சார்ந்த காரணங்கள், நாகரிக வளர்ச்சி போன்றவற்றால் விலங்குகளுக்கு அப்படியொன்றும் நன்மை எதையும் உருவாக்கிடமுடியவில்லை. நவீன காலகட்டத்தில் உயிர்க்கொலைத் தொழிலானது பிரமாண்ட அளவில் விஞ்ஞானத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பூதாகரமாக நடந்துவருகிறது. கேவலம் அற்ப மனிதனின் சுவை நரம்புகளைத் திருப்திப்படுத்த நாளொன்றுக்கு கோடிக்கணக்கில் கோழிகளும் குஞ்சுகளும் ஆடுகளும் மாடுகளும் பன்றிகளும் கன்றுகளும் மீன்களும் கொன்று குவிக்கப்படுகின்றன. எந்தத் தொழில்நுட்பம் இதைச் சாதித்துவிட்டிருக்கிறதோ அதே அறிவியல் தொழில்நுட்பமே இன்று அதற்கான பரிகாரத்தையும் முன்னெடுக்கத் தொடங்கியிருக்கிறது.



மார்க் போஸ்ட் போன்ற நவீன விஞ்ஞானிகள்/பேராசிரியர்கள் கல்ச்சர்ட் மீட், க்ளீன் மீட் என செயற்கை மாமிசத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். விலங்குகளிடமிருந்து முதிர் நிலை ஸ்டெம் செல்கள் வலிக்காமல் எடுக்கப்பட்டு விலங்குகளின் உடம்புக்கு வெளியே மாமிசம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பம். யூத மதத்திலும் அசைவ உணவு மீதான விலகல் உண்டு என்பதால் அந்நாட்டு நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இன்று இது செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் பயணம் போல் அதிகச் செலவு பிடிக்கும் விஷயமாகவே இருக்கிறது. ஆனால், இந்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்று வர்த்தகப் பயன்பாட்டுக்குத் தயாராகிவிட்டால் சைவ மாமிசத்தின் விலை கணிசமாகக் குறைந்துவிடும். இந்திய பவுத்த சமண இந்து மதங்கள் இதில் கூடுதல் அக்கறை செலுத்தவேண்டும். மாமிசம் போன்ற மாமிசம் என்ற எண்ணம் கொஞ்சம் கீழானதுதான். என்றாலும் உயிர்க்கொலையைத் தடுக்க அது பெரிதும் உதவும் என்றநிலையில் சமண வணிக ஜாம்பவான்கள் இந்த ஆராய்சியில் நிச்சயம் இறங்கவேண்டும். அதிலும் மேற்குலகில் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனங்கள் அந்தத் தயாரிப்பு முறைக்கும் தொழில்நுட்பத்துக்கும் காப்புரிமை பெறுவதில் குறியாக இருக்கிறார்கள். அந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு அப்படியான வணிக எண்ணம் கிடையாது என்றாலும் அவர்களால் அவர்களுடைய எஜமானர்களை மீறி எதுவும் செய்துவிட முடியாது. எனவே இந்திய சமண வணிக சக்கரவர்த்திகள் இந்த விஷயத்தில் எளிய உயிர்களின் மீதான கருணையுடன் ஈடுபட்டாகவேண்டும்.

சைவ மாமிசம் மூலம் கிடைக்கவிருக்கும் பயன்கள் ஏராளம்:

முதலாவதாக விலங்குகள் எதுவுமே கொல்லப்படத் தேவையில்லை.

இரண்டாவதாக இன்று விலங்குகளை வளர்க்கப் பயன்படுத்தும் நிலம், நீராதாரம், எரிசக்திகளில் பத்து சதவிகிதம் இருந்தாலே போதுமானது.

அடுத்ததாக இந்தச் செயற்கை மாமிசமானது சோதனைச்சாலையில் தயாரிக்கப்படும் என்பதால் சுத்தத்தை முழுவதுமாக பராமரிக்க முடியும். பாக்டீரியா போன்ற பிரச்னைகளில் இருந்து பாதுகாப்பு பெற முடியும்.

தேவையான சத்துகளை அதில் எளிதில் சேர்க்கவும் முடியும். உதாரணமாக மீன் மாமிசத்தில் இருக்கும் ஒமேகா ஃபேட்டி அமிலத்தை இதில் எளிதாக அனைத்து மாமிசங்களிலும் சேர்த்து உற்பத்தி செய்யமுடியும்.

இது லாபம் கொழிக்கும் தொழிலும் கூட.

இவையெல்லாம் இன்னும் பத்து இருபது ஆண்டுகளில் நடந்துவிடும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். எம் உலகில் விலங்குகள் தாமாகவே உயிர் துறக்கும் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கவிருக்கிறது.

உலகம் சைவத்துக்குத் திரும்பத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் தயாரா..?

கடைசியாக..

ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடை செய்து தமிழர்களின் கலாசாரத்தை அழிக்க முற்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்ட பீட்டாவைப் பார்த்து பலரும் அரட்டை அரங்க உற்சாகத்துடன் கேட்ட கேள்வி... ஆடு மாடுகள் தினம் தினம் கொல்லப்படுகிறதே... அதற்கு என்ன வழி..? அதைத் தடுக்க நீ ஏதேனும் செய்திருக்கிறாயா..?

இந்தக் கேள்விக்கு பீட்டாவிடம் பதில் இருக்கத்தான் செய்தது. அதைக் கேட்க அன்று யாரும் தயாராக இருந்திருக்கவில்லை. அனைத்துவகை மாமிசங்களுக்கும் மாற்று உணவை (அதே நிறம், சுவை, மணம் கொண்டது) பரிந்துரைத்து வருகிறது. பழங்கால இந்து சமயத்தில் தெய்வங்களுக்கு விலங்குகள் பலி கொடுக்கப்பட்டுவந்த மரபு பூசணிக்காயில் அல்லது எலுமிச்சம் பழத்தில் குங்குமம் கலந்து வெட்டி பலிகொடுக்கும் கலாசாரமாக பவுத்த/சமணத் தாக்கத்தினால் மாற்றம் பெற்றதுபோல் ஒரு எளிய வழிமுறையாக அசைவ மாற்று உணவுகளை அதே ருசியுடன் தயாரித்துத் தருகிறது. பீட்டா சைவ மாமிசம் தயாரிக்கும் விஞ்ஞானிக்கு (விஞ்ஞானியர் குழுவுக்கு) கோடிக்கணக்கில் ரூபாய் பரிசு என்று அறிவித்திருக்கிறது. சைவ மாமிசம் தயாரிக்கும் ஆராய்ச்சிக்கு ஏராளமான நிதியை அது தந்தும் வருகிறது. இதற்காகவே சைவ மாமிசத்தை எதிர்க்கவேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் இருக்கக்கூடும். அவர்கள் சக மனிதரின் சதையும் சுவையானது என்று கொன்று தின்று கொழுத்து வந்த கானிபல் கூட்டத்தின் வாரிசாகவே இருப்பார்கள்.

இயற்கையே...

பல்கிப் பெருகப் போகும் விலங்குகளை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்.



விலங்கினும் கீழானவற்றை நீ கவனித்துக்கொள்(ல்).

No comments:

Post a Comment