Thursday 4 August 2016

கதம் கதம்!




ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதலாவதாக பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு வில்லன், குணச்சித்திர நடிகன், நகைச்சுவை கதாநாயகன் என்ற நடித்த காலகட்டம்.

இரண்டாவதாக, எஸ்.பி.முத்துராமனால் ஆக்ஷன் ஹீராவாக வளர்த்தெடுக்கப்பட்ட காலகட்டம். உண்மையான ரஜினியை அடையாளம் கண்டுகொண்டது முத்துராமனே என்று சொல்லும் அளவுக்கு அந்த இரண்டாம் கட்டம் களைகட்டியது.

அடுத்ததாக, ஜெயலலிதாவுடன் மோதலில் ஈடுபட்டு எம்.ஜி.ஆர்.போல் அரசியல் பிரவேசம் செய்யப்போவதாக உலகை நம்பவைத்த காலகட்டம். அண்ணாமலையில் ஆரம்பித்து படையப்பா வரை இது தொடர்ந்தது.

நான்காவதாக, அரசியல் ஏய்ப்பு வசனங்களை மூட்டை கட்டிவைத்துவிட்டு பாபாவில் ஆரம்பித்து கபாலிவரை வெறும் சாகச நடிகராக வலம் வரும் காலகட்டம். அதீத ஹைப்களை உருவாக்கும் காலகட்டத்தில் வெளியான படங்கள் என்றும் இவற்றைச் சொல்லலாம். இந்தப் புத்தகத்தில் ரஜினியின் அந்த நான்காவது காலகட்டத்தில் வெளியான படங்களின் விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன.

ரஜினிகாந்தின் முதல் மூன்று கட்டப் படங்களில் அவரது பாணியிலான அவரது தரத்திலான உள்ளடக்கம் வலுவாக இருந்தது. அவை வணிக வெற்றிப் படங்களாகவும் இருந்தன. ஆனால், நான்காம் காலகட்டத்தில் வணிக வெற்றியும் மிகை எதிர்பார்ப்பும் தூண்டப் பட்டதற்கு இணையாக அவருடைய படங்களின் தரம் உயரவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவை குறைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் காலகட்டத்தில் எந்திரன், சிவாஜி என இரண்டு படங்கள் ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகியிருக்கின்றன. ‘பாபா’ சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்திலும் ‘லிங்கா’ கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்திலும் வெளிவந்திருக்கின்றன. ‘கபாலி’ பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது.

இவை நீங்கலாக இந்தக் காலகட்டத்தில் வந்த இன்னொரு படம் பி.வாசு இயக்கிய ‘சந்திரமுகி’. அந்தப் படத்தின் வெற்றிக்கு இரண்டு காரணங்கள். முதலாவதாக அது வெற்றிபெற்ற மலையாளப் படத்தின் ரீ மேக். இரண்டாவதாக, அதீத ஹைப்கள் இல்லாமல் ரஜினி மிகவும் அடக்கி வாசித்த படமும்கூட.
நான்காம் காலகட்டத்தில் வெளியான பாபா, லிங்கா, கபாலி ஆகியவற்றில் வாரி வாரி வழங்கும் வள்ளலாகவும் மக்கள் மீது அக்கறைகொண்டவராகவும் நடித்திருக்கிறார். ரஜினியின் நிஜ வாழ்க்கை அதில் இருந்து முற்றிலும் மாறானது.

எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் மக்கள் மீது அக்கறை கொண்டவராக நடித்ததோடு நிறுத்தவில்லை. மக்களுக்கு உண்மையா கவே பல நன்மைகள் செய்தும் வந்தார். அவருடை வீட்டுக்கு அவரைப் பார்க்க தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் ரசிகர்கள் வந்துபோன வண்ணம் இருப்பார்கள். அவர் வீட்டில் எப்போதும் ரசிகர்களுக்கு விருந்து நடந்துகொண்டே இருக்கும் என்பார்கள். நற்பெயர் உருவாக்க முயற்சிகள் (பிராண்ட் பில்டிங் எக்சர்சைஸஸ்) ஒருபக்கம் உண்டென்றாலும் ஆத்மார்த்தமான அக்கறையும் அவருக்கு மக்கள் மீது உண்டு.

சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இள வயதில் மிகவும் சிரமப் பட்டவர்களே. ‘நான் கஷ்டப்பட்டபோது இந்த சமூகம் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை; நான் எதற்கு இந்த சமூகத்துக்கு உதவ வேண்டும்’ என்பது சிவாஜியின் வாழ்க்கைப் பார்வை. ‘நான் வாழ்கையில் கஷ்டம் என்றால் என்ன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். நான் பட்ட கஷ்டத்தை இந்த சமூகம் படக்கூடாது என்று விரும்புகிறேன். அதற்கு என்னாலான உதவிகளைச் செய்கிறேன்’ என்பது எம்.ஜி.ஆரின் வாழ்க்கைப் பார்வை. இந்த வாழ்க்கைப் பார்வைகளே எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கும் சிவாஜியின் அரசியல் தோல்விக்குமான காரணம்.

எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வரவேண்டும் என்ற தெளிவான திட்டமிடலுடன் திரைப்படத்தை அதற்கான பயிற்சிக்களமாகப் பயன்படுத்திக்கொண்டார். அல்லது திரைப்படத்தின் மூலம்கிடைத்த செல்வாக்கைவைத்து அரசியல் கனவுகளை அழகாக நிறைவேற்றிக் கொண்டார். ரஜினிக்கு அந்த எண்ணம் இல்லை. ஆனால், மக்களுக்கு இன்னொரு எம்.ஜி.ஆர். தேவையாக இருந்தார். ரஜினிக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இருந்திராதநிலையில் அவர் தெளிவாக அதைத் தனது படங்களிலும் பொதுவெளியிலும் சொல்லிவிட்டு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால், அவரோ ஆற்றில் ஒரு கால்... சேற்றில் ஒரு கால் என இருந்துவிட்டார். எனவே, மக்களுக்கு உதவுபவராக அவர் நடித்த நான்காம் காலகட்டத்துப் படங்கள் பெரும் ஏமாற்றத்தைத் தந்துவிட்டன.

மாறிவந்த காலகட்டத்துக்கு ஏற்பத் தன் படங்களில் சாகச அம்சங்களை எந்திரன், சிவாஜி, சந்திரமுகி ஆகிய மூன்று படங்களில் மாற்றிக்கொண்டிருந்தார். இவைதான் இந்தக் காலகட்டத்தில் ஓரளவுக்குப் பொருட்படுத்தத் தகுந்தவையாக வந்திருக்கின்றன. பாபா, லிங்கா, கபாலி ஆகிய மூன்றும் அவருடைய அரசியல் ஏய்ப்புகளின் சாயலையே கொண்டிருந்ததால் மக்கள் அவற்றுடன் ஒன்றமுடிய வில்லை.

இதில் ‘கபாலி’ ஒருவகையில் தலித் ஆதரவு என்ற போர்வை யில் சமூகத்தில் இதுவரை பேசப்படாத குரலைப் பேசியதாகவும் தலித் மக்களின் எழுச்சியை முரசறைந்து அறிவிப்பதாகவும் ஒருசாராரின் வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஊடகங்களில் அவர்களுடைய இருப்பு கணிசமாக இருப்பதால் அதுவே சமூகத்தின் குரலாக மாயத் தோற்றத்தைத் தந்தும் வருகிறது. ஒற்றை ஆளாக இருந்தாலும் மைக்குக்கு அருகில் பேசினால் ஊர் முழுக்கக் கேட்கும் அல்லவா?

இளையராஜா, தேவாவில் ஆரம்பித்து திரைப்படங்களில் குத்தாட்டப் பாடல்களின் ஆதிக்கம்வரை தலித் மதிப்பீடுகள் பொது சமூகத்தால் இயல்பாக உள்வாங்கப்பட்டுள்ளன. இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் தலித் படைப்புகள் கணிசமான வரவேற்பைப் பெற்றுள்ளன. பூமணி சாகித்ய அகாதமி விருதே பெற்றிருக்கிறார். அரசியல் களத்தில் தலித் தலைவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப அவர்களுடைய இடம் வலுவாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. அரசின் நலத்திட்டங்களை எடுத்துக்கொண்டால் தலித்களுக்குத்தான் பெரும்பாலானவற்றில் முன்னுரிமை தரப்பட்டுள்ளது.  ஏதோ தலித் களின் குரல் முதல் முறையாகப் பொதுவெளியில் பேச அனுமதி கிடைத்திருப்பதாக மாய பிம்பம் உருவாக்கப்படுகிறது. தலித் குரல் என்பது திருப்பி அடிப்போம் என்பது மட்டும்தானா? அதை எப்போது சொல்லமுடிகிறதோ அப்போதுதான் உண்மையான குரலில் பேச ஆரம்பித்ததாகச் சொல்வார்களா?

தலித் என்ற அடையாளத்துடன் எந்த திரைப்பட நாயகக் கதாபாத்திரமும் சித்திரிக்கப்பட்டதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக வேறு இரண்டு உண்மைகளும் பேசப்பட வேண்டும். தலித் விரோதமும் திரைப்படங்களில் சித்திரிக்கப்பட்ட தில்லை. லட்சியவாத சாதி நல்லிணக்க விஷயங்களே  சித்திரிக்கப் பட்டிருக்கின்றன. எம்.ஜி.ஆர். பண்ணையார்களை எதிர்த்துப் போராடியதெல்லாம் தலித் நலன் சார்ந்தும்தானே. அடுத்ததாக, முதல் ‘தலித்’ கதாநாயகன் பேசும் முதல் வசனம் என்ன: எங்களுடைய வளர்ச்சி பிடிக்கலைன்னா சாவுங்கடா..! இது தலித் அடிப்படை வாதியின் குரல்; தலித் மக்களின் குரல் அல்ல. அல்லாவுக்கு இணை வைக்கக்கூடாது என்று சொல்லும் வஹாபியிஸ்டின் குரல் எப்படி இஸ்லாமியர்களின் குரல் இல்லையோ அதுபோலவே இதுவும் தலித்களின் குரல் அல்ல.

ரஜினியைப் பொறுத்தவரையில் சாதி சார்ந்த அரசியல் முழக்கங்களை அவர் ஊக்குவித்ததே கிடையாது. தனது கதாபாத்திரம் எந்த சாதி அடையாளத்துடனும் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆரைப் போலவே மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்தவர். வணிக நோக்கில் அதுதான் சாமர்த்தியமாகவும் கருதப்படும். ஆனால், ரஞ்சித்தின் நிலை வேறு. அவர் சாதி அடையாளத்தை முன்வைத்ததால்தான் வெற்றியே பெற முடிந்திருக்கிறது. அப்படியாக இரு எதிரெதிர் துருவங்கள் இணைந்து கபாலி உருவாகியிருக்கிறது.

‘மெட்ராஸ்’ திரைப்படத்திலேயே ஈ.வெ.ரா.வின் புகைப்படம் ஏன் காட்டப்படவில்லை என்ற மிரட்டல் திராவிட ஆண்டைகளால் எழுப்பப்பட்டது. உண்மையான தலித் அரசியல்வாதி பிராமணர்களை விட தங்களை அதிக அளவில் ஒடுக்கிவருவது இடைநிலைச் சாதிகளே என்பதையும் ஈ.வே.ரா. அந்த இடைநிலை சாதிகளின் தலைவர் மட்டுமே என்பதையும் உணர்ந்தவராகவும் அதையே தனது அரசியலாகக் கொண்டவராகவும் இருப்பார். ஆனால், தமிழகத்தில் தலித் அரசியல் என்பது ஆரம்பத்தில் இருந்தே அப்படியாக இடைநிலை சாதியினரால் ஓரங்கட்டப்பட்டுவந்ததுதான். அயோத்திதாச பண்டிதர், எம்.சி.ராஜா என ஆரம்பித்த தலித் அரசியல் போராட்டமானது தெலுங்கு, மலையாள, கன்னட அரசியல் தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கட்சியால் ஓரங்கட்டப்பட்டது. தமிழ் அடையாளம் பின்னுக்குத் தள்ளப்பட்டு போலியான திராவிட அடையாளம் முன்னெடுக்கப்பட்டதுபோலவே, தலித் எழுச்சி ஓரங்கட்டப்பட்டு உங்களுக்கும் நாங்களே பேசுகிறோமே என்று சொல்லி இடைநிலை சாதியினரே அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

பின்னி ஆலைப் போராட்டம், முதுகுளத்தூர் கலவரம் என ஆரம்பித்து நேற்றைய உடுமலைப் பேட்டை சங்கர் படுகொலைவரை தலித்கள் மீதான அனைத்து வன்முறைகளும் இதே இடைநிலை சாதிகளாலேயே முன்னெடுக்கப்பட்டன. இரட்டைக்குவளையில் ஆரம்பித்து தலித் பிணத்தை இடைநிலைச் சாதியினரின் தெருவழியாக எடுத்துச் செல்லக்கூடாது என்பதுவரை அனைத்து ஒடுக்குமுறைகளும் இடைநிலை சாதிகளாலேயே செய்யப்பட்டன. எனவே, தலித்களின் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒரு நபர் இடைநிலை சாதிகளை எதிர்ப்பதையே தன் முதல் இலக்காகக் கொண்டிருப்பார். ஈ.வெ.ராவை மறுதலிப்பவராகவே இருப்பார். பா.இரஞ்சித்தும் அப்படியான புரிதல்கொண்டவராகவே தன் திரையுலகப் பயணத்தை ஆரம்பித்தார்.

ஆனால், ‘மெட்ராஸ்’ திரைப்படத்தையொட்டி திராவிட ஆண்டைகள் தெரிவித்த எதிர்ப்பைக்கண்டு பயந்து அந்தப் படத்தில் ஈ.வெ.ரா. இடம்பெற்ற காட்சிகள் இருந்தன என்றும் எப்படியோ அது வெட்டப்பட்டுவிட்டது என்று சொன்னார். தன் அடுத்த திரைப் படத்தில் ஈ.வெ.ராவின் திரு உருவத்தைக் கட்டாயம் சுவரில் தொங்க விடுவதாக உத்தரவாதமும் கொடுத்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவருடைய அடுத்த படம் ரஜினியுடன் செய்யவேண்டிவந்துவிட்டது. ரஜினி தன் படத்தில் ஈ.வெ.ராவின் நிழல்கூடத் தென்படக்கூடாது என்ற தெளிவு கொண்டவர். தாணுவின் அரசியல் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. ஆனால், ரஜினியினாலே இந்தப் படத்தில் ஈ.வெ.ராவின் புகைப்படம் இடம்பெறவில்லை.

ரஜினி அதோடு நிறுத்தவில்லை. கபாலி கதாபாத்திரம் தலித் என்று நம்ப விரும்புபவர்களுக்கு தலித்தாகவும் இல்லையென்று நம்ப விரும்புபவர்களுக்கு வேறு சாதியாகவும் தோற்ற மயக்கம் தரும் வகையில் உருவாக்கும்படியே கட்டளையிட்டிருக்கிறார். அதனால் தான் கோழிக்கறி, ஆட்டுக்கறி என்ற வசனங்கள் இடம்பெற்றிருக் கின்றன. கோட் சூட் போட்டா என்ன தப்பு என்பதை மலேசியத் தமிழன் ஒருவன் சீனன் ஒருவனைப் பார்த்துக் கேட்பதாகவே முன்வைத்திருக்கிறார். மலேசியத் தமிழர்களை கஞ்சா, கடத்தல், கந்துவட்டி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலாகவே சித்திரித்திருக்கிறார். செக்கச்செவேலென மனதால் தொட்டாலே சிவந்துபோகும் ‘ஆரிய’ நிறத்து நாயகிகளையே தேர்ந்தெடுத்திருக்கிறார்.

தமிழ்நேசன்கூட மலேசிய இந்தியர்களுக்காகப் போராடுபவரா கவும் அதுவும் கூலி உயர்வு கேட்டுப் போராடும் கம்யூனிஸ்டாகவே இடம் பெற்றிருக்கிறார். இவையெல்லாம் தலித் போராளிகள் முன்வைக்க விரும்பும் முழக்கங்களே அல்ல. அவை முழுக்க முழுக்க ரஜினிக்காகச் செய்யப்பட்டவையே. ரஜினிக்கும் அந்த அடையாளங் களில் அப்படியொன்றும் ஆர்வமோ புரிதலோ கிடையாது என்றாலும்   கபாலி பாத்திரம் மீது தலித் முத்திரை விழுந்துவிடக்கூடாது என்ற நோக்கில் அவர் சொன்னவையே.
ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் ரஜினியின் ஒரு படத்தின் மூலம் இத்தனை சாதி அரசியல் உரையாடல்கள் உருவானது இதுவே முதல் தடவை. தமிழகத்தை அவர் காப்பாற்றவேண்டுமென்ற அரசியல் முழக்கங்கள் இதற்கு முன் உருவாகி அவை சாயம் வெளுத்துப்போன நிலையில் இப்போது அவர் மூலம் இரஞ்சித் தலித் மீட்சியை முன்னெடுத்திருப்பதாகப் பெருங்கதையாடல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதற்கான ‘பாராட்டு’ முழுவதும் இரஞ்சித்துக்கே போகவேண்டும்.

அப்படியாக ரஜினியின் இந்த நான்காம் காலகட்டம் அவருடைய திரையுலகப் பயணத்தில் முக்கியமான கட்டமாக ஆகிவிட்டிருக்கிறது. ரஜினி ரசிகர்களுக்கு அவருடைய முந்தைய படங்கள் தந்த மகிழ்ச்சி இதில் கிடைக்கவில்லையென்றாலும் ரஜினி என்ற பிம்பம் மேலும் மேலும் செல்வாக்கு பெற்ற காலகட்டமாகவே  உருவாகியிருக்கிறது. இந்த வணிக சாமர்த்தியமும் வெற்றிகளும் அவருடைய அரசியல் பார்வையிலும் திரைப்பட தரத்திலும் வெளிப்பட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்ற ஏக்கத்தை மட்டும் தவிர்க்க முடியவில்லை. முடிஞ்சது முடிஞ்சே போச்சு...
கதம் கதம்!


- B.R..மகாதேவன்

இதேப்டி இருக்கு - முன்னுரையில் இருந்து...

No comments:

Post a Comment